Jul 31, 2010

காதல் அணுக்கள்....


முடியலை சாமி முடியலை....

இந்தப்பாடல் என்னைப் பாடாய்ப்படுத்துகிறது.

ஏ.ஆர். ரஹ்மான், வைரமுத்து, விஜய் பிரகாஷ், ஸ்ரேயா கோஷல் எல்லோரையும் தேடிப்பிடித்து வாரியணைக்கும் ஆவல் மேலிடுகிறது. இந்த நால்வரில் யார் பெஸ்டாகச் செய்துள்ளார்கள் என என்னால் சொல்ல ஏலவில்லை.

மிக இளைமையாக ரஜினிக்கு இந்தப்பாட்டை வடித்துத் தந்துள்ளார் ரஹ்மான். வி.தா.வ.'வில் சிம்புவிற்குப் போட்டு வைத்த டியூனை ரஜினி திருடிவிட்டாரோ எனத் தோன்றுகிறது. அத்தனை இனிமை, இளமை, குதூகலம் கொப்புளிக்கிறது பாடலில்.

இளமைத்துள்ளலில் ரஹ்மானுடன் போட்டி போடும் வைரமுத்து...

பட்டாம்பூச்சி  பட்டாம்பூச்சி 
கால்களை கொண்டு  தான்  ருசி  அறியும் ..
காதல்  கொள்ளும்  மனிதப்  பூச்சி 
கண்களை  கொண்டு  தான்  ருசி  அறியும் ...

...என்று அவர் சொல்கையில் அறிவியலில் குழைந்து காதலில் கரைகிறது பாடல்.

ரஹ்மானின் சமீப காலத்து செல்லப் பாடகர் விஜய் பிரகாஷ்...அவருடன்  ஷ்ரேயா கோஷல். சொல்லவேண்டுமா இருவர்க்கும். இவர்கள் இருவர் குரலிலும் மகுடியிசைக்கு மயங்கும் சர்ப்பம் ஆகிறோம் நாம். மூளையின் ஒரு ஓரத்தில் செரோட்டனினும், என்டோர்பினும் சுரப்பதை என்னால் நன்கு உணர முடிகிறது.




மீண்டும் சொல்கிறேன், முடியலை சாமி....முடியலை.

அது சரி, என்னப்பா எந்திரன் படப் பாடல்களுக்கு விமரிசனம் எழுதுன்னா ஒரே பாட்டைப் பத்தி பேசிட்டு இருக்கன்னு சொல்றீங்களா? அட, இந்தப் பாட்டிலிருந்து நான் வெளியே வர இன்னும் நாலு நாள் ஆகுமுங்க. அதுக்கு பெறகு மத்த பாடல்களை பாக்கலாம்.

சரி சரி படிச்சது போதும், பாட்டைக் கேளுங்க....

.
.
.
image courtesy: onlysuperstar.com

வலைப்பின்னல் கனவுகள்....



நான் இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்த அர்த்த ஜாம இரண்டு மணியில் இப்போது நான் யார் கனவிலாவது நடமாடிக் கொண்டிருக்கிறேனா தெரியவில்லை. நான் தூங்கச் சென்றதும் என் கனவில் நடமாடுபவர்களுக்கு அது பற்றி நான் சொன்னாலேயன்றித் தெரியுமா எனவும் தெரியவில்லை.

இப்போது நான் இந்த விமரிசனத்தைத் தட்டச்சிக் கொண்டிருப்பது கனவா, நிஜமா, கனவினுள் கனவா எனும் மாயக் குழப்பங்கள் என்னுள். இத்தனைக்கும் காரணம் நான் பார்த்துவிட்டு வந்த இன்செப்ஷன் திரைப்படம்.

அலுவலகத்தில் மோகனின் நச்சரிப்பின் பயனாக நாங்கள் பத்து பேர் இரவுக்காட்சி போய் வந்தோம். படம் பார்த்துவிட்டு வெளியே வந்தால்  மனதில் ஒரு நிறைவு என்பார்களே அது நிச்சயமாக இல்லை. படத்தின் முடிவில் ஏதேனும் கேள்விக்கு பதில் என்பார்களே அப்படியொன்றும் கிடைக்கவுமில்லை. குழப்பம் நிறையவே இருக்கிறது, கேள்விகள் எக்கச்சக்கமாகப் பிறக்கிறது. இருந்தும் இவையிரண்டும் சுவாரசியமாகத்தான் இருக்கிறது.



மற்றவர்கள் கனவுக்குள் புகுந்து அதனுள்ளே மற்றோர் கனவை உருவாக்கி அதில் பயணித்து தகவல் திருட்டு நடத்தும் ஒருவன், அதே பாணியில் பயணம் செய்து ஒரு தொழிலதிபன் கனவினுள் புகுந்து எண்ணம் ஒன்றை விதைத்து அவன் தொழில் சாம்ராஜ்யத்தை சிதறடிக்கச் செய்யும் முயற்சியே இன்செப்ஷன்.

டைட்டானிக் படத்திற்குப் பிறகு (முன்னரும் கூடத்தான்) லியனார்டோ டி'காப்ரியோ படம் எதையும் நான் பார்க்கவில்லை. அந்த ரொமாண்டிக் மனுஷனா இந்த மனுஷன் என இருக்கிறது.


சிக்கலான கதைக்கு இடையே சில்லென்று எல்லன் பேஜ் படம் நெடுக வருகிறார். 


வழக்கமான படமாக இருந்தால் கதையைச் சொல்லிவிடலாம், இந்தக் கனவுப் பயணத்தை எப்படியும் எழுத்தில் கொண்டு வருவது கடினம். ரூம் போட்டு யோசித்து கதை அமைத்து தயாரித்து இயக்கி இருக்கும் க்றிஸ்  நோலனுக்கு ஒரு பெரிய வணக்கம் வைக்கலாம். மனுஷனாய்யா நீ?

படத்தின் இன்னொரு ஹீரோ "டோடெம்" என்ற பெயர் கொண்ட ஒரு  பம்பரம். இந்த பம்பரத்தை லியனார்டோ அவ்வப்போது சுற்றிவிட்டு  தான் இருப்பது கனவா நனவா என உறுதிப் படுத்திக் கொள்கிறார். பம்பரம் நில்லாமல் சுற்றினால் அது கனவு, சுற்றி நின்றால் அது நனவு. சரியாப் போச்சு போங்க என்கிறீர்களா?

கண்டிப்பாகப் படம் பாருங்கள். நீங்கள் சும்மாரான ஆங்கிலவாசி என்றால் "கனவு வேட்டை" என படத்தைத் தமிழில் பார்ப்பது உசிதம். ஆனால், கண்டிப்பாகப் பாருங்கள்.

நன்றி: படத்தின் இடையிடையே தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தை வைத்து எனக்குப் புரியும் தமிழில் மொழி பெயர்த்த மோகனுக்கு.
.
.
.

Jul 30, 2010

எந்திரன் - எளிமையின் திருவுருவம்

இன்னமும் ஒரேயொரு நாள்தான் இருக்கிறது. தமிழகமே தயாராகு எந்திரன் இசையைக் கேட்க என பதிவர் உலகத்தில் ஒரு கூட்டமே கூக்குரலிட்டுக் கொண்டிருப்பதால்..... அந்த சப்ஜெக்டை அவர்களுக்குத் தாரை வார்த்துவிட்டு.......
(அதுக்குன்னு அப்படியே விட்டுடறதா இல்லை, நாளைக்கு சுடச்சுட இசை விமரிசனம் உண்டுங்கோவ்)



.......சில மாதங்களுக்கு முன், எந்திரன் படத்தின் கடைசிக் கட்ட பேட்ச் (patch) வேலைகள் சிலவற்றை முடிக்க சூப்பர் ஸ்டார் அவர்கள் சென்னையில் உள்ள அனிமேஷன் / கிராபிக்ஸ் ஸ்டுடியோ ஒன்றுக்கு திக்விஜயம் புரிந்திருந்தார்.

அந்த அனிமேஷன் நிறுவனத்தின் திருவனந்தபுர அலுவலகத்தில் பணிபுரியும் என் தம்பி அருண் அந்த ப்ராஜெக்ட் தொடர்பான வேலையாக வந்திருக்க, அதிஷ்டவசமாக சூப்பர்ஸ்டார் அவர்களை தரிசிக்கும் வாய்ப்பு அவனுக்குக் கிட்டியுள்ளது.

வழக்கமான பெரிய மனிதர்களின் எளிமை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். எளிமையாக வாழ்வதை ஒரு விளம்பர உத்தியாகக் கையாள்பவர்களை நாம் பார்க்கிறோம். அவர்களுக்கு எளிமையாக வாழ்வதே ஒரு பந்தா நிறைந்த செயல். ஆனால் அப்படியல்ல ரஜினியின் எளிமை. அது நிஜமான மற்றும் மெய்மறக்கச் செய்யும் ஒன்று என்கிறான் என் சகோதரன். அவனால் இன்னமும் கூட நம்ப முடியவில்லை, தான் சந்தித்தது ரஜினியைத்தானா என்று.

தான் அங்கு வந்த வேலையை தனக்கே உரிய நேர்த்தியுடன் முடித்துவிட்டு மிகவும் hi-fi விஷயங்களாக அல்லாமல், அங்கிருந்த இளைஞர்களுடன் மிக எளிமையாக உரையாடிவிட்டு மீண்டும் தனக்கே உரிய விடுவிடு வேகத்துடன் அங்கிருந்து புறப்பட்டாராம் ரஜினிகாந்த்.

ரஜினி அங்கு இருந்த அனிமேஷன் செய்யும் இளைஞர்களிடம் கேட்ட சில கேள்விகள்,

"நீங்க சாப்பாடு தூக்கம் இல்லாம வேலை செய்வீங்களாமே , நிஜமா?"

"இப்போ நீங்க எல்லாரும் சாப்டுட்டீங்களா?"

"ஒழுங்கா நேரத்துக்குத் தூங்கறீங்களா?"

போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என இவர்கள் கேட்டுக் கொண்டவுடன், "வொய்  நாட்!" என்ற பதிலுடன் தன்னருகில் தயங்கித் தயங்கி வந்தவர்களை குதூகலமாக அணைத்தவாறே போஸ் கொடுத்தாராம் பாருங்கள்.... மல்லு இளைஞர்கள் அனைவரும் மயங்கி விட்டார்களாம்.

அவர்கிட்ட கத்துக்க நமக்கு நெறைய இருக்கு சாமி....



.

தொடர்புடைய இடுகை: எந்திரன் தகவல்கள்
.
.
.

.

Jul 29, 2010

தொலைந்து போனேன் நான்!

"True life is stranger than fiction" என்பார்கள். நிஜக் கதைகள் strange ஆனவைகள் மட்டுமல்ல. சில நேரங்களில் புனைவுகளைக் காட்டிலும் மிக சுவாரசியம் தருபவையும் கூட. அப்படி தன் வாழ்வின் நிஜ நிகழ்வு ஒன்றை மும்பையிலிருந்து ராம் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.





இந்த வருடம் கோடை விடுமுறையில் என் சொந்த ஊர்ப்பக்கம் போக நேர்ந்தது. சின்னசேலம் ஸ்டேஷனை அடைந்ததும் முப்பத்தி மூன்று வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம் ஒன்று என் நினைவில் நிழற்படமாக ஓடத் தொடங்கியது.

அந்தநாள் இப்போதும் என் நினைவில் பசுமையாக உள்ளதுநான் தொலைந்து போன நாள் அது...! தொலைந்து மீண்டும் என் குடும்பத்தாருக்கு கிடைத்த நாள் அது...!!

முப்பத்தி மூன்று வருடங்களா என்று பெருமூச்செய்தினேன்  

எனக்கு நான்கரை வயது அப்போதுஎன் தந்தையின் அத்தை காலமாகிவிட்டதால் என் அம்மா, இரு அக்காக்கள், தம்பி (கைக்குழந்தை) மற்றும் மாமா  என நாங்கள் எங்கள்  சொந்த  கிராமத்திற்கு  ரயில் வண்டியில் செல்கிறோம்..

சின்ன சேலம் ஸ்டேஷனில் இறங்கி வேறு ரயிலில் ஐந்து கிலோ மீட்டர் திரும்ப பிரயாணம் செய்ய வேண்டும்இரண்டு ரயில்களும் அங்கே கிராசிங்இரவு ஒன்பதரை மணிஎன் மாமா சின்ன சேலம் ஸ்டேஷனில் டிக்கெட் வாங்க கவுன்டருக்கு ஓடுகிறார். சிறு பிள்ளைகளுக்கே உரிய அசட்டுத் தைரியத்துடன் என் அம்மா கையை உதறி விட்டு மாமா பின்னால் ஓடுகிறேன் நான்

கூட்டம் அதிகமாதலால் யாரும் என்னை கவனிக்கவில்லை, மாமா உட்பட. மாமா மிக விரைவாக வண்டிக்குத் திரும்பி வந்து அனைவரையும் ஏற்றிவிட பேசஞ்சர் புறப்படுகிறது...வண்டி புறப்பட்ட இரண்டு நிமிடங்கள் கழித்துதான் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது நான் அவர்களுடன் இல்லை என்றுஅனைவரும் ஓவென்று அழ தொடங்குகிறார்கள்.

இதனிடையே நான் பிளாட்பாரத்தில் அழுது கொண்டே ஒன்றும் புரியாமல் நாங்கள் வந்த பெங்களூர் செல்லும் ரயிலை வெறித்தவாறு நிற்கிறேன். ஒரு வாட்ட சாட்டமான ஆள் என்னை தூக்கி விசாரிக்க ஆரம்பிக்கிறார்..அந்த சிறு வயதில் நான் என்னை பற்றியும் என் குடும்பத்தார் பற்றியும் நான் அறிந்ததை ஒப்பிக்கிறேன்அந்த நபர் (அவரை நான் இன்றும் கடவுளாகத்தான் நினைக்கிறேன்) என்னை பெங்களூர் ரயிலுக்குள் ஒவ்வொரு கோச்சாக கொண்டு சென்று அனைவரிடமும் "இது உங்கள் குழந்தையா?" என விசாரிக்கிறார். எல்லோரிடமிருந்தும் "இல்லை" என்றே பதில் வருகிறது.

ரயில் முழுவதும் தேடிவிட்டு அவர் கீழே இறங்கியதும் ரயிலுக்குள் இருந்து ஒரு குரல், "அண்ணே அந்த குழந்தையை என்னிடம் கொடுத்துங்கநான் பெங்களூர் கொண்டு போய் நல்லா வளர்க்கிறேன்உங்களுக்கு  பத்தாயிரம் ரூபாய் தர்றேன்" என்றது. (அந்தக் காலத்து பத்தாயிரம் என்பது ஒரு சராசரி இந்தியன் ஒருவனின் ஒருவருட சம்பளம்)


"நீங்க ஒரு லட்சம் கொடுத்தாலும் இந்த குழந்தையை தர மாட்டேன், குழந்தைக்கு உரியவங்ககிட்ட மட்டுமே சேர்ப்பேன்" என்கிறார் இவர். இந்த வசனங்கள் இன்றும் என் காதில் ஒலிக்கிறதுகாட்சி என் கண் முன்னால் நிற்கிறது.



அந்த ரயிலும் புறப்பட்டு விட, அந்த நபர் என்னை பிளாட்பார்மில் இருக்கும் அறைக்கு கொண்டு சென்று மேலும் விசாரிக்க, என் பெரியப்பா பக்கத்துக்கு ஊரில் போஸ்ட் மாஸ்டர் என்றும் அவர் அக்கம் பக்க கிராமங்களில் ஒரு மரியாதைக்கு உரிய பிரபலமான மனிதர் என்றும் தெரிந்து கொள்கிறார்அந்த காலத்தில் தொலைபேசி  வசதி இல்லை. எனவே தகவல் உடனடியாகத் தெரிவிக்க இயலாத நிலை.

ஊர் சென்றடைந்த என் மாமா உடனே என் பெரியப்பா மற்றும் ஊர்க்காரர்கள் சிலருடன் சைக்கிளில் ஐந்து கிலோ மீட்டர், இறந்த அந்தப் பாட்டியை எரித்த அதே மயானம் வழியாக, சின்னசேலம் நோக்கி வந்தார்.

என்ன தோன்றியதோ, வழியில் என் பெரியப்பா அவர் அத்தையை  எரித்த இடத்தில் நின்று கூவுகிறார்.."நம் குழந்தை கிடைக்காவிட்டால் உனக்கு மேற்கொண்டு காரியங்கள் எதுவும் செய்ய மாட்டேன்" என்று.

என்னை காப்பாற்றிய புண்ணியவான் என்னை அவரது என்பீல்ட் புல்லட் மீது அமர்த்தி..பிஸ்கட், பால் போன்றவைகளை தருகிறார்நான் எதுவும் வாங்க மறுக்கிறேன்.

இரவு பதினொரு மணிக்கு அனைவரும் ஸ்டேஷன் வந்தடைகிறார்கள்என் பெரியப்பாவை பார்த்ததும் நான் ஓடிச்சென்று அணைத்துக் கொள்கிறேன்.

அனைவர் முகத்திலும் ஒரு புன்னகையுடன் கூடிய நிம்மதி. அந்தப்  புண்ணியவானுக்கு பெருமிதம், ஒரு குழந்தையை அதன் குடும்பத்தாருடன் சேர்த்ததில்.



நான் என் பெற்றோருக்கு இரண்டு பெண் குழந்தைகளுக்குப் பின் பிறந்த தவப்புதல்வன். என் தந்தையாரின் உடல் நிலை காரணமாக, டாக்டர்கள் அவருக்கு அதிர்ச்சி தரும் செய்தி ஏதும் தெரிவிக்க வேண்டாம் என சொல்லியிருந்ததால், இந்த நிகழ்வுகள் குறித்து யாரும் அவரிடம் மூன்று நாட்களுக்குச் சொல்லவில்லை. சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை. மூன்று நாட்களுக்குப் பிறகே நிதானமாக இந்த சம்பவங்கள் அவருக்கு விவரிக்கப்பட்டன.

அதன் பிறகு அந்த புண்ணியவானை நான் விவரம் தெரிந்து சந்திக்க இயலவில்லைஒரு நிமிடம் பணத்திற்கு ஆசைப்பட்டு, மனிதாபிமானம் இல்லாமல் அவர் என்னை அந்த ரயிலில் இருந்து ஒலித்த குரலுக்கு விற்றிருந்தால்?  நினைத்துக்கூட பார்க்க இயலவில்லை. 

இன்று சின்ன சேலம் ஸ்டேஷனில் இந்தக் கதை கேட்டதும், என் ஏழு வயது மகள் அந்த புண்ணியவானை வாயார வாழ்த்துகிறாள்.

- ராமநாராயணன், மும்பை
.
.
.

Related Posts Plugin for WordPress, Blogger...