Sep 2, 2016

மாயா"அப்போ நான் பொறப்படவா?", எழுந்தவனைத் தோளைப் பிடித்து அமுக்கினான் ஸ்ரீவத்சன்.

"ஏண்டா! எத்தனை மாமாங்கமாச்சு உன்னை பாத்து. பேசன்னு நெனைச்சது எதையும் பேசலை. இப்போதானே சாப்ட்டு எந்திருச்ச. கொஞ்சம் இருந்துட்டுதான் போறது?"

ஆமாம்! அவன் சொல்வதுபோல் கிட்டத்தட்ட மாமாங்கம் இருக்கும்.

மல்லேஸ்வரத்தில் படித்து முடித்துத் திரும்பிய பின் நானும் அவனும் வெவ்வேறு ஊர்களில் செட்டிலாகி தொடர்புகளை இழந்து, இப்போதுதான் ஃபேஸ்புக் உதவியில் அவனைக் கண்டுபிடித்தேன்.

"இல்லைடா! இன்னொருக்க வர்றேன். ஃபேமிலிய அழைச்சிட்டு வர்றேன்டா?"

"அதென்ன இன்னொருக்க? இந்த பத்தூரு பாஷைய கலந்தடிக்கறத இன்னும் நிப்பாட்டலியா நீ?", 

சிரித்தேன்.

சாப்பிட்ட இடத்தை மாப் வைத்து துடைத்தபடியே அவன் மனைவி, "போஜனம் ஆன கையோட பொறப்பட வேணாம்ணா! கொஞ்சம் ரெஸ்ட் எடுங்கோ. நாளைக்கு ஸன்டேதானே."

"ஆமாண்டா. அப்பா மணலி வரை போயிருக்கார். அஞ்சு மணிக்கு வந்துடுவார். உன்னையும் பாத்து எத்தனை நாளாச்சு. சந்தோஷப்படுவார்"

ஆமாம் என்பதாய் தலையசைத்தாள் அவன் மனைவி.

"ஏய்! அந்த புக்கு கொண்டாயேன்டி. அதான் உன் கஸின் எழுதினான்னு சொன்னியே, எதோ ஓயெம்மார் ரோடுன்னு புக்கு"

"ண்ணா! அவன் என் கஸினா?"

"ரைட்டு! கஸினுக்கு ஃப்ரெண்டா, இல்லை ஃப்ரெண்டுக்கு கஸினா? ஐடி பயலுங்க பூரா சல்லின்னு எழுதியிருக்கானே"

"ஏண்டா! நீ பாபநாசம் படம் பாத்தியா?", கேட்டேன்.

"ஏண்டா?"

"இல்லை! இந்த சல்லின்னெல்லாம் வார்த்தை எங்கயிருந்து கத்துக்கிட்ட?"

"அதை விட்றா. ஏய் கொண்டாயேன்டி புக்கை"

"வேணான்டா. அந்த புக்கு வேணாம்", வார்த்தை முடிவதற்குள் புத்தகம் என் கையில் திணிபட்டது.

"அங்கே பால்கனியில பெஞ்ச் இருக்குண்ணா. நல்ல வேப்பங்காத்து. ஜில்லுனு இருக்கும். படிச்சிட்டே படுங்கோ. தூக்கம் வந்தா தூங்குங்கோ. அப்பா வந்தா எழுப்பறேன். காபி சாப்ட்டுட்டு பொறப்படலாம்"

"ஏன்டா வர்றவங்க கையில புஸ்தகத்தைத் திணிக்கற வாடிக்கையை வந்தவளுக்கும் கத்துத் தந்தாச்சா?", என்றேன் ஸ்ரீவத்சனிடம்.

"ஹ்ஹஹ்ஹா! அதெல்லாமில்லைடா. டேய் அந்த ஸ்வாமின்னு ஒரு போஸ்ட் எழுதுனியே உன் ப்ளாக்ல அதுல இந்த புஸ்தகத் திணிப்பு பத்தி சொல்லியிருக்கியே"

"அதுக்குள்ள ப்ளாக்கை மேஞ்சுட்டியா?"

"ஃபுல்லாவெல்லாம் மேயலை. உன் ப்ளாக்ல என் பேரை சர்ச் அடிச்சிப் பாத்தேன், இது வந்து வுழுந்துது. டேய்! அந்த திவ்யா கதையை எல்லாம் எடுத்து வுட்டுருக்கியாடா எங்கயாவது?", இல்லாள் அருகில் இருக்கிறாளா என்று பார்த்துக் கொண்டே கேட்டான்.

"திவ்யாவா வித்யாவா? நீயே பேரை மறந்தாச்சா? ம்ம்ம்ம்! அது ஒண்ணு இருக்குல்ல. இல்லைடா, இனிதான் எழுதணும்",

"ஆ! நானாத்தான் உளறிட்டனாடா"

"லுங்கி வேஷ்டி எதும் வேணுமாடா?", என்றவனுக்குக் கைகளிலேயே வேண்டாம் என்றுவிட்டு வெளியே வந்தேன்.
-------
வத்சனின் இல்லாள் சொன்னதுபோல நல்ல வேப்பங்க்காற்று. என்ன படித்தேன் எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை.  

"ம்மா பால்", காதுக்குப் பக்கமாய் யாரோ கூவ பதறிக்கொண்டு எழுந்தேன்.

"ஐயோ! சாரி சார்! பயமுறுத்திட்டனா? சாரி சாரி!", பால் வந்து விட்டது. வத்சனின் அப்பாவும்  வந்து விட்டார் என்றால் புறப்பட்டுவிடலாம்.

ஏதோ குறைவதாய்த் தோன்றியது. கொஞ்ச நேர யோசனைக்குப் பிறகு, அது உள்ளே இருந்து கொண்டு வந்த புத்தகம் எனப் பிடிபட்டது. பதறி எழுந்த வேகத்தில் புத்தகம் பால்கனித் தடுப்பைத் தாண்டி மெயின் கேட்டுக்கு வெளியே விழுந்து கிடந்தது.

பால்கனித் தடுப்புக்கும் மெயின் கேட்டுக்கும் இடைவெளி குறைந்தது பதினைந்து அடி தூரம் இருக்கும். இங்கே புறப்பட்ட புத்தகம் அத்தனை தூரம் எப்படி பிரயாணப்பட்டிருக்கும் என யோசனையுடன் பிரமை பிடித்தவன் போல யோசித்துக் கொண்டிருன்தேன்.

"நல்லா தூங்கினீங்களா அண்ணா .... கால் லிட்டர் சேத்து ஊத்துப்பா.... அப்பா வந்துட்டார் அண்ணா....", என் பிரமையிலிருந்து நான் விடுபட்டு அந்த ஒன்பது சொற்களும் என் மூளையை எட்டுமுன் உள்ளே போய் விட்டாள்.

புத்தகம் எடுக்க மெதுவாய்க் கீழே இறங்கினேன். செம்மண் கலவையாய்க் கிடந்த சிறு குளத்தை ஜஸ்ட் மிஸ் செய்திருந்தது புத்தகம். அதைக் கையில் கவ்விக் கொண்டு நிமிர்ந்தால் கூட்டம் கூடின எதிர் வீடு. எல்லோருக்கும் மத்தியில் அவர் உட்கார்ந்திருந்தார். அக்கறையில்லாத ஒரு முண்டா பனியன் அணிந்து எல்லோருக்கும் நடுநாயகமாய். சங்கு மார்க் லுங்கி விளம்பரத்திற்கு அமர்ந்தாற்போல் பளிச் என்று ஒரு வெள்ளையில் நீலக்கட்டம் போட்ட லுங்கி அணிந்திருந்தார். மற்ற ஐம்பத்து சொச்ச மக்களும் எனக்கு ஏனோ அவுட் ஆப் போகஸில் தெரிய..... இவர் எப்படி இங்கே வந்தார், இவர் எதற்கு இங்கே வந்தார் என்று யோசனை செய்து கொண்டிருந்தேன்.

அந்த வீட்டில்  ஏதோ நல்லதோ அல்லது கெட்டதோ நடந்திருக்கிறது அல்லது நடக்கப் போகிறது என்பதைப் உள்மனம் புரிந்து கொண்டாலும் அது என்ன எது என்னும் யோசனைகள் மனதுக்குத் தேவைப்படவில்லை. இவர் எங்கே இங்கே வந்தார் என்று மட்டும் யோசனை ஓடிக் கொண்டிருந்தது. அதிலும் சம்பந்தமில்லாமல் முண்டாபனியன் லுங்கியில்?

இவர் இப்போ அமெரிக்காவில் இல்லையா  இருக்கிறார். நேற்று கூட இவருடைய ப்ளாக் படித்தேனே? லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் இருப்பதாக எழுதியிருந்தாரே. இன்னும் பத்து நாட்கள் அங்கேதானே டேரா என்று எழுதியிருந்தார்.

இவர் அவராக இருக்கமாட்டார் என்று எனக்கு நானே முடிவெடுத்துக் கொண்டு விட்டேன் என்றாலும் அவரை ஏனோ உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் என் பக்கம் பார்வையைத் திருப்பினாற்போலவும் என் பார்வையை கவனித்தவராக என்னைப் பார்த்து ஒரு ஸ்நேகப் புன்னகை பூத்தாற்போலவும்  எனக்குத் தோன்றியது.

அந்த வீட்டின் வாசலில் இருந்த பெயர்ப்பலகையை கவனித்தேன். 

J.மோகன் என்று இருந்தது.

சினிமாத்தனமான கையில் இருந்த புத்தகம் நழுவிக் கீழே விழுந்தது. தலையைச் சிலுப்பிக் கொண்டு வீடு நோக்கித் திரும்பினேன்.

"காஃபி சாப்பிடலாம் வாங்கண்ணா. ஓ, அங்க இருக்கீங்களா", என்று மாடியில் இருந்து குரல் ஒலித்தது.

என்னவென்று புரியாத ஒரு யோசனையுடன் படியேறத் துவங்கினேன்.

நான் தூங்கிக் கொண்டிருக்கிறேனா அல்லது விழித்துவிட்டேனா என்று எப்படித் தெரிந்து கொள்வது?Aug 1, 2016

உன்னுதும் என்னுது - 2முன்குறிப்பு: இந்தப் பதிவை என் முந்தைய அச்சுப்பிச்சுக் கவிதையுடன் ஒப்பிட்டும் கொள்ளலாம்

ங்கள் ஊர் கணேஷ் திரையரங்கில் கபாலி திரைப்படம் வெளியான மூன்றாம் நாளான சென்ற ஞாயிறன்று படம் பார்க்க சீட்டு கிடைக்கிறதா எனப் பார்க்கலாம் என்று ஐந்து  பேர் நின்று கொண்டிருந்த அந்த வரிசையில் போய் நின்றேன். முதலாம்  நபர் சீட்டு வாங்கியவுடன் வெளியே நகரத் துவங்க அவரைத் தொடர்ந்து அவர் பின்னால் நின்ற மற்ற நால்வரும் வெளியே அவருடனேயே நகர்ந்தனர். ஒரே குடும்பம் போல. ரொம்பவும் கட்டுக்கோப்பாய் ராணுவ கதியில் வளர்ந்த குடும்பம் போல. எங்கும் கலைந்து நில்லாது வரிசை என்றால் வரிசையில் நின்றிருந்தார்கள்.

சௌராஷ்ட்ராவோ, கொங்கணியோ ஏதோவொரு மேற்கத்திய மொழியைப் பேசிக் கொண்டே அதே வரிசையில் வடம் பிடித்து வெளியே போனார்கள்.

”மதியம் ரெண்டரை மணிக்காட்சிக்கு மூணு சீட்டு கெடைக்குமாங்க?”

“ஜி1, ஜி2 எந்த ஸ்க்ரீன்ல வேணும்?”, டிக்கெட் கவுண்டர் அம்மணி கேட்டார்.

“என்னங்க வித்தியாசம்?”

“அது 250 ரூபா, இது 200 ரூபா”

“மூணும் சேர்த்தே அவ்வளோதான் விலையா?”, வேண்டுமென்றேதான் கேட்டேன் என்று நினைக்கிறேன்.

ஒரு கனத்த மௌனம்..... ஒரு வெறித்த பார்வை பார்த்தவாறே அம்மணி ஏனோ தன்  உதட்டை முப்பத்து மூன்று திசைகளிலும் சுழற்றினார்.

என் முதுகுக்குப் பின்னால் யாரேனும் நிற்கிறார்களா என எட்டிப் பார்த்தார் அம்மணி.

யாரும் இல்லை.

“நீங்க யார்னா வீட்ல கேக்கணும்னா கேட்டுட்டு வந்துடுங்க. ஒரு டிக்கெட் வெலதான் நான் சொன்னது”, என்று சிரிக்காமல் சொன்னார். உதட்டிற்குள்ளே வெடித்துச் சிரித்துக் கொண்டிருந்தார்.

”சரிங்க”, என்று அங்கிருந்து நகர்ந்தேன்.

கையில் எடுத்து வைத்திருந்த ஐநூறு ரூபாய் நோட்டை பர்ஸுக்குள் செருகிவிட்டு வண்டியை உதைத்தேன்.

“அண்ணா....”, பதினைந்து வருடம் முன் என்னைப் பார்த்தாற்போல் தோற்றம் கொண்ட ஒரு அம்மாஞ்சி அழைத்தான்.

“இது உங்க துட்டா பாருங்கண்ணா....”, நூறு ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டினான். “இங்கதான் கீழ இருந்துது”.

என் பர்ஸில் ஒரு ஐநூறும் இரண்டு நூறுகளும் இருந்த நினைவு. திறந்து பார்த்தால் ஐநூறும், ஒரேவொரு நூறும் இருந்தன. காசை வெளியே எடுத்தபோதோ அல்லது உள்ளே செருகின போதோ வெளியே விழுந்திருக்குமோ? ஆனால் அது என் பணம்தான் என்றும் உறுதியாகச் சொல்லிவிட முடியாது. வீட்டம்மணி ஏதும் செலவுக்கு நூறு ரூபாயை எடுத்திருக்கவும் கூடும். 

ஒன்றரை செகண்ட் யோசித்தவன், “தெரியலைம்மா. சரியாத் தெரியலைம்மா”, என்றேன்.

என்னையும் விட அப்பாவி போல அவன், “இப்போ இதை என்னண்னா பண்ணட்டும்?, என்றான்.

சுற்றிமுற்றிப் பார்த்தால் யாரும் காணோம். “நீயே வெச்சுக்கம்மா. வேறென்ன செய்ய?”, என்றேன். தயக்கமாகவே நின்றான்.

“அதோ அந்த அண்ணன் கிட்ட கேக்கறேன்” - பத்தடித் தொலைவில் ஒரு சுவரோரமாக நின்று யாருடனோ தொலைபேசிக் கொண்டிருந்த ஒரு நீலச்சட்டையனை நோக்கிப் போனான்.

மொபைலில் பேசிக்கொண்டே பையனை நிமிர்ந்து பார்த்த நீலச்சட்டை, விழிகள் விரித்து தலையை மேல்நோக்கி அசைத்து என்ன என்று கேட்டு, “இது உங்குள்தாண்ணா”, என்ற கேள்விக்கு எதிர்முனையுடன் பேசுவதை நிறுத்தாமல் ஆமாம் ஆமாம் என்ற வகையில் தலையாட்டி,  கையை நீட்டி “குடு குடு” என்னும் பாவனையில் விரல்களை உள்நோக்கிப் படபடத்து சைகை செய்து பணத்தை வாங்கிக் கொண்டு சட்டைப் பையில் செருகிக் கொண்டான்.

எதிர்முனையுடன் பேசுவதை இன்னமும் நிறுத்தாமல் பையனுக்கு ஒரு சலாம் போட்டு, “நீ போயிட்டு வா”, என்று சொல்லாமல் சொல்லி பையனை அனுப்பி வைத்தான்.

பையன் ஏதோ சாதித்துவிட்ட சந்தோஷத்தில் என்னை நோக்கி சிரித்துக் கொண்டே வந்தான். “குடுத்துட்டண்ணா.... அவர்துதானாம்”.

”சூப்பர் தம்பி. குட் பாய்”, என்று நான் சொல்லி முடிக்க அந்த சௌராஷ்ட்ரக் கொங்கணிக் குடும்பத்திலிருந்து இரண்டு பெண்மணிகள் வெளியே வந்து தலை குனிந்து தரையில் எதையோ தேடத் துவங்கினார்கள்.

“^&&^%$$%^& ஆட்டோ %$$^^^^$$ பர்ஸ் ஓபன்”, என்று அவர்கள் பேசியதில் இருந்து. இங்கேதான் ஆட்டோவிலிருந்து இறங்கியதும் பர்ஸைத் திறந்தேன்  என்று முதல் பெண்மணி சொல்லியது விளங்கியது.

பையனுக்கும் ஏதோ விளங்கியது. மௌனமாக என்னைப் பார்த்தான்.

“இப்போ என்னண்ணா பண்ணட்டும்?”, மறுபடி என்னையே கேட்டான்.

நான் முகம் திருப்பி நீலச்சட்டையைப் பார்த்தேன். அவன் இன்னமும் தொலைபேசிக் கொண்டே இருந்தான்.

“வீட்டுக்குப் போயிடு தம்பி”, என்றேன்.

Jul 31, 2016

கபாலி


#மகிழ்ச்சி

நேற்று #கபாலி பார்த்தேன்.

பா.ரஞ்சித்தின் அட்டக்கத்தி ரிலீஸ் ஆனபோது நண்பர் நாகராஜ் over a dinner table கொடுத்த விமர்சனத்தை வைத்து படம் குறித்து என் கருத்தை நிறுவிக் கொண்டேன். டிவியில் அந்தப் படத்தைப் போட்டபோதும் ரெகார்டு செய்து வைத்து ஓரிரண்டு முறைகள் பார்க்க முயற்சித்தேன். எனக்கு ரொம்பவும் போரிங் என்று தோன்றியதால் எழுந்து போய் விட்டேன்.

ரஞ்சித்தின் மெட்றாஸ் - இந்த உலகோர் கொடுத்த ஓவர் ஹைப் ஒன்றே போதுமானதாய் இருந்தது, அந்தப் படத்தை நான் பார்க்காமல் இருந்திட. (இந்த வகையான வெறுப்புகளை மனதில் விதைத்துக் கொள்வதிலிருந்து வெளிவர என்ன வழி?) மெட்றாஸும் டாடா ஸ்கை ரெகார்டில் உறங்குகிறது. அதைப் பார்க்கும் பொறுமை இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும்.

சரி, கபாலிக்கு வருவோம்.

//ஒரு ரெண்டு வாரங்கழிச்சு, அடுத்தடுத்து மூணு காட்சி. பெரம்பூர் எஸ்2ல போயி ஒக்காந்து பாத்துத் தொலையப்போறேன். யாரேனும் கூட சாவுறதுக்கு வர்றீங்கன்னா, தெரியப்படுத்துங்க. டிக்கட் வாங்குறேன்//

என்று கோகுல் எழுதியிருந்தான். போகலாம் என்றிருக்கிறேன்.

இந்தப் படத்தைக் கடந்த பத்து நாட்களில் பார்த்தவர்கள் இருநூற்று நாற்பத்தெட்டு விதங்களில் விமர்சனம் படத்தார்கள்.

அதில் டாப் 5 வகைகள் இவை...

1) படம் அட்டர்ஃப்ளாப். கேவலாமா இருக்கு.
2) மரணமாஸ் மூவி. கபாலிடா...
3) நல்லாதான் இருக்கு.
4) இது ரஞ்சித் படம் இல்லை
5) இது ரஜினி படமும் இல்லை

என் தாழ்மையான கருத்தினில் எல்லாமுமே துரிதஸ்கலிதங்கள். In fact, நான் எழுதும் இதுவும் கூட அவற்றுள் ஒன்றாயிருக்கலாம். You need a ton times viewing to review Kabali. If you don't have patience to watch it even once, thats fine.... it is not your cup of movie.

ரஜினியையும் ரஞ்சித்தையும் விடுங்கள்....

படத்தின் பாத்திரப் படைப்புகள், ராதிகா ஆப்தே, தன்சிகா, தினேஷ், சந்தோஷ் நாராயண் + அவரின் அபரிமிதத் துணிச்சல் (ங்கொய்யால ரகம்), The making என்று ஒரு பத்து - இருபது விஷயங்களைப் பட்டியலிட்டால் குறைந்தது ஒவ்வொன்று பற்றியும் இருநூறு வார்த்தைகளாவது பேசலாம். ஆனால், அதுவெல்லாம் அவசரம் இல்லாமல் நிதானமாக இன்னும் சிலமுறைகள் படம் பார்த்துவிட்டுச் செய்ய வேண்டியவைகள்.

ஒன்றேவொன்றைச் சொல்லவேண்டுமென்றால், it is not another movie.... not just another movie of Rajini. அவ்வளவுதான். இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை. Go, watch.... if you haven't watched it already.

அப்படியும் மேலும் என் கருத்தைச் சொல்ல வேண்டுமென்றால், எனக்குத் தோன்றியதைச் சொல்லுவேன். நான் பார்த்த ரஜினி படங்களில், “எங்கேயோ கேட்ட குரல்” படத்திற்குப் பிறகு நான் ரொம்பவும் ரசித்த ரஜினி படம் இது. (இடையில் வந்த பல நல்ல படங்களை நான் பாராது இருந்திருக்கலாம்).

ரைட்....

இப்போது துரிதஸ்கலிதர்கள் பற்றி....

நீங்கள் so called ரஜினி ரசிகர் என்றால் ரஜினியை ஒரு புட்டியில் அடக்கினீர்கள். அல்லது, ரஜினி நின்னா ஸ்டைல், நடந்தா ஸ்டைல் என்ற நூற்றாண்டு டயலாகை மறவாது பேசி, thats ok man, its a good movie.... after all our thalaivar comes in to the screen, what else you need என்று என்ன பார்க்கிறோம், என்ன பேசுகிறோம் என்பதறியாது உளறினீர்கள். ரஞ்சித்துக்கு என்று ஒரு வரையறை வைத்துக் கொண்டு அதைத் தாண்டி அவர் வந்துவிடக்கூடாது என்று ஏங்கினீர்கள். அந்த ஏக்கம் ஏமாற்றத்தில் முடிந்தபோது பக்கத்து சீட்காரனைக் குத்த ஓங்கிய கையை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாது என்னத்தையோ ட்வீட்டினீர்கள், ஃபேஸ்புக்கினீர்கள். ரஜினியை sofa’வில் ரிலாக்ஸ்டாக உட்கார்ந்து கொண்டு பஞ்ச் எல்லாம் இல்லாத டயலாகுகள்அடிக்க வேண்டாம் என்கிறீர்கள். ரஞ்சித்தை வேகமாகப் படம் எடுக்கச் சொல்கிறீர்கள். எஸ்பிபி ஓபெனிங் ஸாங் கொடுக்காத ரஜினி படமா என்கிறீர்கள். ரஞ்சித்துக்கு க்ளைமாக்ஸ் எப்படி எடுக்க வேண்டும் என்று பாடம் எடுக்கும் அறிவு உங்களுக்கு இருப்பதாக நம்புகிறீர்கள்.

தயவு செய்து நீங்கள் படம் பார்ப்பதை நிறுத்தி விடுங்கள்.

நிற்க....

...படம் பிடிக்கவில்லை, நன்றாக இல்லை என்று சொன்னவர்களை விட..... படம் நல்லா”தான்” இருக்கு என்று சொன்னவர்கள் இந்த உலகுக்கு எதையோ சொல்ல விழைகிறார்கள் என்று எனக்குப்படுகிறது. In fact, நம்மை ஆகப்பெரும் டரியல் டெலிகேட் பொஸிஷனில் தள்ள வல்லவர்கள் இவர்கள்தான்.

படம் பிடிக்கவில்லை என்றால் - thats fine. உங்க டேஸ்ட்டுக்குப் படம் ஒத்து வரவில்லை.

படம் நல்லாயில்லை என்றாலும் ஓகே. உங்களுக்குத் தெரிந்தது, புரிந்து கொள்ளும் சக்தி அவ்வளவுதான்.... அல்லது உங்களுக்குக் கமல், மணிரத்னம் என்று ப்ரிஃபரன்ஸஸ் இருக்கலாம். அல்லது ரஜினி படம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கட்டத்தைவிட்டு நீங்கள் வெளிவர விரும்பாத ஆளாக இருக்கலாம் - thats also fine.

நல்லா”தான்” இருக்கு என்பது என்ன வகையான விமர்சனம் என்று புரியவில்லை. அப்படி என்னத்துக்கு காம்ப்ரமைஸ் செய்து கொண்டு படம் பார்க்கணும்?

இன்னொரு வகையினர் உண்டு. இப்படிப்பட்ட படம் எடிசன் காலத்திலிருந்தே வந்ததில்லை என்பவர்கள். அது இன்னும் டேஞ்சர். அப்படிப்பட்ட விமர்சனங்கள் தான் மெட்றாஸை விட்டு என்னை விலக்கி வைத்தவை.

எனிவேஸ்ஸ்ஸ்.... கபாலி படத்தின் flaws, லாஜிக் ஓட்டைகள் பற்றி நிறைய பேர் நிறைய கேட்டு விட்டார்கள். என் கண்ணுக்கு அப்படி ஒன்றும் நெருடவில்லை.

அப்படியே கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு என் பங்கிற்கு நானும் கேட்க வேண்டுமென்றால்....

1991’ல் ஜெயிலிக்கு உள்ளே சென்ற கபாலி எப்படித் தன் பேச்சினூடே வடிவேலு டயலாக் ஒன்றை quote செய்கிறார் என்ற ஒன்றே ஒன்றுதான்.

#நெகிழ்ச்சி

Mar 6, 2016

கன்னையா

அதாகப்பட்டது.... இந்த உலகம் பலநேரங்களில் சில பேரின் பேரில் தவறான நம்பிக்கையை வைத்து விடுகிறது.

அட இருங்க சார்..... நான் கன்னையா பத்தி சொல்லலை. இன்னும் அந்த ஸ்டோரிக்கே நாம போகலை. ஏதும் முன்முடிவோட இந்தப் பதிவைப் படிக்கத் தொடங்காதீய.

”இப்பல்லாம் நீங்க முன்ன போல எழுதறது இல்லை சார்”, என்றார் அலுவலக நண்பர்.

“ஏன்? இப்போ நல்லா எழுத ஆரம்பிச்சிட்டனா?”, என்றேன்.

“அட.... அது இல்லைங்க. முன்னப் போல இப்போ எழுதறது இல்லை நீங்கன்னு சொன்னேன்”.

“அதையேதான திருப்பி சொல்றீங்க..... ஓ... ஒரு வேளை இப்போ இன்னும் கேவலமா எழுதறனோ?”.

“அட ராமா..... இப்போல்லாம் முன்னப்போல எழுதறது இல்லை. அதாவது நீங்க எழுதறதே இல்லைன்னு சொல்ல வந்தேன்”, என்றார்.

“அது நல்ல விஷயம்தானே”

நண்பருக்கு நம் மீது பாசம் மிகவும் ஜாஸ்தி. தமிழில் எழுதுபவன் அத்தனை பேரும் கவிஞன் என்றும், எழுதத் தெரிந்தவன் எல்லாம் என்ஸைக்ளோபீடியா என்றும் நம்புபவர். தி.நகரில் இருந்து மேற்கு மாம்பலத்திற்குப் போக வேண்டும் எனும் நேரத்தில் ஏதும் ரூட் சந்தேகம் வந்தாலும் எனக்குத்தான் ஃபோன் அடிப்பார்.

“கிரி, உங்களைக் கேட்டாத்தான் தெரியும். இந்த ரங்கநாதன் தெருவுல இருந்து வெஸ்ட் மாம்பலத்துக்கு எப்படிப் போகணும்? நான் சரவணா வாசல்ல இருக்கேன். லேக் வ்யூ ரோடு போகணும்”. 

”ஒரு நிமிஷம் சார். ட்ரைவிங்ல இருக்கேன். கட் பண்ணுங்க, நானே கூப்பிடறேன்”. 

நமக்குத் தெரிந்த உண்மையான என்ஸைக்ளோபீடியா ஒருத்தர் இருக்கிறார். மேடவாக்கம் டேங்க் ரோடு மேடவாக்கத்தில் இல்லை என்பதான தகவல்களையெல்லாம் இவரிடம்தான் நான் தெரிந்து கொண்டவன். அவருக்கு ஃபோனைச் சுற்றினேன்.

“சார், இந்த ரங்கநாதன் தெருவுல இருந்து மாம்பலத்துக்கு எப்படிப் போகணும். இது.... வெஸ்ட்டு மாம்பலம்”.

“தம்பி, ரங்கநாதன் தெருவே மாம்பலத்துலதான் இருக்கப்பா”, என்றார்.

”ஆ! அப்போ அது டி.நகர்’ல இல்லியா?”, அலறினேன். இந்த மனுஷன் வேற நடுரோட்ல நம்மை நம்பி நிக்கறானே? சட்டென்று நினைவுக்கு வந்தது. “அங்கருந்து லேக்வியூ ரோடு போவணும் சார்”.

“ஓ! அப்படி சொல்லுய்யா. அந்த ரயில்வே ப்ரிட்ஜ் ஏறு. லெஃப்ட்டு ரைட்டு ரைட்டு லெஃப்ட்டு”, என்று அவர் சொன்ன வழியை நண்பருக்கு மறுசுழற்றல் செய்து சொல்லி நான் நம்பத்தகுந்த என்ஸைக்ளோதான் என்று மறுநிறுவிக்கொண்டேன்.


”அமெரிக்காவுல வெள்ளைக்காரன் எச்சிவுட்டான்னா அது அமிஞ்சிகரக்காரன் மூஞ்சில பட்டுத் தெறிக்குது”, என்றவகையில் கவுண்டர் ஒரு படத்தில் வசனம் ஒன்றைச் சொல்வார். ஒலக மார்க்கெட்டில் குரூடாயிலின் விலை ஏகத்துக்கும் விலை குறைந்ததன் பயனால் நொந்து நூடூல்சான தொரைசாமி ஒருத்தருக்குச் சேவை செய்யத் தலைப்பட்டதன் பயனால் அலுவலக வாழ்க்கை சமீப காலமாய் எந்தத் திசையில் எப்படிப் போகிறது என்பதே புரியாமல் மேகி நூடூல்ஸ் சிக்கலாய்ச் சிக்கிக் கொண்டு படுத்தியெடுக்கிறது. 

”அடுத்த நொடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யங்கள் என்றும் வாழ்க்கை நிலையற்றதுதான் என்றாலும்.....” என்றெல்லாம் தொடங்கி நாம் எல்லோரும் தத்துவம் பேசத்தான் செய்கிறோம். என்றாலும் இந்த அதுவான வாழ்க்கையானது நொடிக்கு நொடியெல்லாம் ஏதும் ஆச்சர்யங்களை ஆக்சுவலாக ஒளித்து வைத்திருப்பதில்லை. எப்படியும் அந்த ஆச்சர்யத்தை அளிக்க ஒரு வருடம், ஒரு மாதம் அல்லது ஒரு வார இடைவெளியாவது விடுகிறது.

ஆனால் பாருங்கள், நம் இன்றைய நிலைமையில் when, what, why, how என்ற வாழ்க்கையின் தலையாயக் கேள்விகளுக்கான விடைகள் எந்த கணத்திலும் மாறிப்போகும் என்பதுவும் அப்படி இருப்பது நமக்குத் தெளிவாகத் தெரிந்திருப்பதுவுமான ஒரு நிலையில் வாழ்வது அத்தனை எளிதில்லை பாருங்கள்.

ஒண்ணும் புரியலையா?

சொந்த வாழ்க்கையில் நெலமை ஒண்ணும் சரியில்லீங்க என்பதுவே நான் சொல்ல வந்தது.

இதுவும் இதற்கு மேலுமான இன்னபிற பிரச்னைகளையும் சமாளிக்க நமக்கு இருபத்து நான்கு மணி நேரமே போதாமல் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸாப் முதலான சோஷியல் மீடியாக்களில் எல்லாம் “நன்றி! மீண்டும் வருவேன்” என்ற போர்டைத் தொங்கவிட்டு விட்டு ஒதுங்கி வாழும் இந்தச் சூழலில்தான் நம் நண்பர் என்னை எழுதுவதில்லை என்று சொல்ல வந்திருக்கிறார்.

”இந்த கன்னையா ப்ராப்ளம் என்ன ப்ராப்ளம் சார்?”, ஆரம்பித்தார்.

ஆஹ்ஹா.... நண்பருக்கு பொது அறிவு விஷயத்தில் டாக்டரேட் வாங்கும் ஆர்வம் சட்டாரென வந்துவிட்டது போல. நம்மை நெருங்கி வந்து ஏதோ கேட்கிறார்.

மனிதர் ஒருவேளை என்னத்த கன்னையா குறித்து ஏதோ கேட்கிறாரோ? சீச்சீ இருக்காது.

“யாருங்க? நம்ம சென்ட்ரல் ஸ்டேஷன் தொடங்கி குப்பம் ஸ்டேஷன் வாசல் வரைக்கும் ரயில்வே செவுத்துல எல்லாம் சிரிச்சிக்கினே இருப்பாரே அவரா?, என்று நான் கேட்டிருக்கக் கூடாதுதான்.

“ரொம்பத்தான் கிண்டல் சார் உங்களுக்கு. அவரு ஆண்ட்டி-நேஷனலா இல்லையா? அதை மட்டும் சொல்லுங்க. அவருக்கு பெயில் தந்தது சரியா இல்லையா?”

சத்தியமாக எனக்கு கிர்ர்ர்ர்ர்ர்ரென்றது. இத்தனை விஷயங்களை இவரே தெரிந்து வைத்துக் கொண்டு அந்த ப்ராப்ளம் என்ன ப்ராப்ளம் சார் என்று ஏன் தொடங்க வேண்டும்?

ஒருவேளை இந்த ஜேயென்யூ ஜேயென்யூ என்று ஏதோவொரு நியூஸ் சமீப காலமாக அடிபடுகிறதே. அது சம்பந்தமான ஆளாய்த்தான் இருப்பார் இவர் என்று நினைத்துக் கொண்டேன். ”அஞ்சே நிமிஷத்துல குடுக்கணும்னு மேனேஜர் கேட்ட ஒரு ரிப்போர்ட்டோட கடந்த நாலு மணிநேரமா மல்லுக்கு நின்னுட்டு இருக்கேன். இதை நாளைக்கு கதைக்கலாம் சார்.”, என்று அவரை அனுப்பி வைத்தேன்.

இன்றைய மூணரை மணிநேரத் தூக்கத்தை இன்னுமொரு அரைமணி நேரம் குறைத்துக் கொண்டாலும் பரவாயில்லை என யூட்யூபிடம், “கன்னையா, சிறுகுறிப்பு வரைக”, என்று கேட்டேன்.

இந்தக் கன்னையா என்பவர் கே.ஜி.ஜாவர்லால்...... சீச்சீ இல்லையில்லை.... அவர் பெயர் அது இல்லை. இந்த தில்லி மாநிலத்தின் முதல்வர் ஏ.கே.குஜ்ராலும் இல்லை அவர் பெயர்...... ஆ.... ரைட்டு.... அரவிந்த கேஜ்ரிவால்..... அந்த அரவிந்த கேஜ்ரிவாலைப் போலவே அத்தனை விடியோக்களிலும் ஹிந்தியிலேயே பேசிக் கொண்டிருந்தார்.

அடுத்ததாக நான் பார்த்த விடியோவில் ஒரு பெரிய கூட்டத்திற்கு இடையே கயிற்றைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு நடனம் ஆடுவது போல் சுழன்று சுழன்று ஆடிக் கொண்டிருந்தார். நம்ம ஊர் பச்சையப்பா பயலுகள் 29ஈ பஸ்சில் பாடுவதற்கு மாற்று எனக் கருதத்தக்க ஹிந்துஸ்தானி கானா வகையில் பாடி முடித்தபின் ஏதோ பேசத் துவங்கினார். ஜெயிலிலிருந்து வெளியே வந்ததும் அவர் அளித்த வரலாற்று சிறப்பு மிக்க பேச்சு அது என பலர் புளகாங்கிதப் பட்டவண்ணம் இருந்தது அந்தப் பேச்சுதான் எனப் புரிந்தது. 

ஏக் காவோ மேன் ஏக் கிஸான் வகையிலான நம்ம காம்ரேடுகள் என்னத்தைப் புரிய வைத்துக் கொண்டு புளகாங்கிததுக்குள் புகுகிறார்கள் என்ற கேள்வியையெல்லாம் எனக்கு நானே கேட்டுக் கொள்ளாமல் விடியோ பார்த்தலைத் தொடர்ந்தேன்.

மனிதர் பனியனும் ஓவர் கோட்டும் அணிந்து ஸ்டைலாகவே இருந்தார். May be, நம்மூர் சினிமாவுக்கு வந்தால் பிரபுதேவா விட்ட இடத்தைப் பிடிக்க ஏலுமோ என்னவோ. காம்ரேடுகள் கையில் சிக்கி விட்டார். பாவம் மனிதர். அந்த விடியோ 59 நிமிடங்கள் ஓடுவது என்பதால் நாம் ஒதுக்கிய 30 நிமிடத்தில் ஏற்கெனவே செலவான 14 நிமிடங்களையும் கழித்துப் பார்த்துவிட்டு 5 நிமிடங்கள் எனச்சொன்ன அடுத்த விடியோவிற்குத் தாவினேன்.

“நான் மாத்திரமல்ல இந்த ஜேயென்யூவின் எந்தப் பயலும் தேஷ்த்ரோஹி நஹீ”, என்று அவர் ஆரம்பித்தது மட்டும் புரிந்தது. அதன் பின்னர், காலா ஹை, லால் ஹை, நீல் வான் ஹை என்று அவர் கலர் கலராக ஏதோ உணர்ச்சிமய ரீல் விட்டுக் கொண்டிருந்தார்”, வந்த கொட்டாவியை அடக்கிக் கொண்டு மொபைலை அணைத்து விட்டேன்.

நண்பருக்கு ஃபோன் செய்தேன், “கன்னையா தேஷ்த்ரோஹி நஹீ”, என்றேன்.

”எப்படி சார் சொல்றீங்க”, கேட்டார் நண்பர்.

“அவரே சொன்னார் சார்”, ஃபோனைக் கட் செய்தேன்.Related Posts Plugin for WordPress, Blogger...