Jul 29, 2011

நீ ஹிந்தியனா?


நண்பர்: ஏர்டெல் ரீசார்ஜ்?

கடைக்காரர்: கித்னா ருபே

நண்பர்: வாட்?

கடைக்காரர்: கித்னா ருப்யா போல்

நண்பர்: க்யா ஜி?

கடைக்காரர்:
क्या आप recharge करना चाहते हैं या top-up? अपना नंबर इस रजिस्टर में यहाँ ध्यान दें.

நண்பர்: ஹிந்தி நஹி மாலும்.

கடைக்காரர்: ஹிந்தி நஹி ஆத்தா ஹை? க்யா ஆப் ஹிந்துஸ்தானி ஹை?

நண்பர்: தும்ஸே கி தமிழ் மாலும்... போல் போல் தமிழ் போல்

கடைக்காரர்: டமில் கிமில் தில்லி மே க்யூ சாயியே?

நண்பர்: கி மே ஹிந்தி நை ஆத்தா ஹை...

கடைக்காரர்: டீக் ஹை. பைஸா தே.

நண்பர்: ஹா.. ஐஸா போல். Take hundred rupees. Recharge கரோ.

கடைக்காரர்: நம்பர் ரெஜிஸ்டர் ரைட்.

நண்பர்: ரீசார்ஜ் when கரோ?

கடைக்காரர்: அபி

நண்பர்: டீக்கே. தேங்க்ஸ்.

கடைக்காரர்: अगर आप तीन महीने के लिए यहाँ रहते हैं. आप आसानी से हिन्दी सीखना होगा

நண்பர்: க்யா?

கடைக்காரர்: இதர் த்ரீ மந்த் ஸ்டே.. ஹிந்தி ஆத்தாஹை.

நண்பர்: ஆப் தீன் மந்த் தமிழ் learn?

கடைக்காரர்: आप यहाँ आया था. तो आप हिंदी सीखने की जरूरत है. मुझे तमिल आवश्यकता क्यों है

நண்பர்: ஹிந்தி நஹி... தமிழ் நஹி. இங்க்லீஷ் மே பாதோ.

கடைக்காரர்: ஓ பாதோ நஹி, பாத் கரோ.

நண்பர்: ஓகே. இங்க்லீஸ் மே பாத் கரோ.

கடைக்காரர்: ஓகே. கம் ஹியர் ரெகுலர் ரீசார்ஜ். ஹம் இங்க்லீஸ் மே டாக், ஓக்கே சார்.

நண்பர்: சுக்ரியா.... தன்யவாத். பை.

மாரல் ஆஃப் தி ஸ்டோரி: வாழ்க்கை எப்போதும் சுவாரசியம் நிறைந்ததாகவே இருக்கிறது.


Jul 19, 2011

எழுத மறந்த கதை

அசோக மரத்தின் அத்தனை இலைகளிலும் ஈரம். வெளிர்பச்சை க்ரோட்டன் செடி ஒவ்வொன்றும் தலையை சிலுப்பிப் பெய்த மழைஈரத்தைத் தெரிவித்துக் கொண்டிருந்தது. வேப்பமரக் கிளைக் காகம் ஈரத்தைச் சடசடவென உதறிக் கொண்டிருக்க, சேற்றுக் கோட்டுடன் மோட்டார் சைக்கிள்கள் கடந்த பதிவுகளை முதுகில் சுமந்து கொண்டிருந்தது சாலை. தண்ணீர்ப் பாம்பு ஒன்றும், தத்தித் தாவிய தவளையும் ஒன்றினை ஒன்று கண்டு கொள்ளாமல் எதிரெதிரே கடந்து சென்றன.

இப்படி மேலே சொன்னபடிக்கு வர்ணிக்கும்படி ஏதுமற்ற ஒரு மட்டமத்தியானத்தைக் கடந்ததொரு வெக்கை வெயில் மாலை அது.

அவன் எங்களூர்க்காரன். ஏதோ மருத்துவ சந்தேகம் பெறவேண்டி நான் இத்யாதி இத்யாதி அலுவலகத்தில் பணிபுரியும் சேதியறிந்து எங்கள் அலுவலக வாசலுக்கு வந்திருந்தான். டாக்டர்கள் அறையை நான் காட்ட, அலுவலக டாக்டர்கள் இருவரை சந்தித்து வேண்டுமட்டும் குத்திக் குடைந்து தேவையான பதில்களை வாங்கிக் கொண்டு வெளியில் வந்தான்.

"ரொம்ப தேங்க்ஸ் கிரி. எங்க மாமாவுக்குத்தான் ஏதோ தோல் பிரச்னை மாதிரி இருக்கு. சரி அது என்ன மாதிரி எப்படின்னு தெரிஞ்சி தெளிவு பண்ணிக்கிடலாமேன்னு வந்தேன்", என்றவன் "சரி வாங்க, ஒரு காப்பி சாப்பிடலாம்", அழைத்தான்.

"பாலிமார்'ல போண்டா கூட சாயந்திரம் நல்லா சூடாப் போடுவான்" உபதகவலும் தர, நான் சப்புக் கொட்டத் தொடங்கிவிட்டேன்.

நடைதூரம்தான் பாலிமார். வெளிவாசலில் மரத்தடி நாற்காலிகளில் அமர்ந்து, 'ரெண்டு செட் மைசூர் போண்டா குடுங்க. ஒரு பத்து நிமிஷம் கழிச்சி ரெண்டு காபி, ஒண்ணு கொஞ்சம் ஸ்ட்ராங்கா ஹாஃப் ஷுகர்", ஆர்டர் செய்தான்.

"ஆங், சொல்ல மறந்துட்டேன் பில் நீங்கதான் பே பண்ணனும். நான் இன்னைக்கி பர்ஸை  வீட்ல மறந்து தொலைச்சிட்டேன்"

"அடங்கொய்யால! இதை காபி சாப்பிடக் கூப்பிடறதுக்கு முன்னாலையே சொல்லணும்டே " என மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்...



இப்படியெல்லாம் ஒரு பதிவு எழுதி அந்தப் பதிவும் மிகவும் சுவாரசியம் மிகுந்ததாக அமையும் என நீண்ட நெடுங்காலமாக நான் நினைத்துக் கொண்டேயிருந்த வேளையில்...

இப்படி ஒரு பதிவை எழுதிட்டாரய்யா நம்ம பரிசல்.

அதனால மேற்படி பதிவை நான் எழுதாமலேயே தவிர்க்கிறேன்.
.
.
.


Jul 18, 2011

உதகை காவிய முகாம் – 2 (இறுதிப் பகுதி)

சிறப்புப் பதிவர்: சு. வீரராகவன் < சிந்தா குலத்தின் வலைப்பூ >


இரவு ஜடாயு அவர்களின் உரை முடிந்து இரவு உணவு அருந்தியபின் நான் மிகவும் களைத்திருந்தேன். ஓய்வு தேவை என்று மூளை கதறினாலும், அடுத்த நாள் தொடரப் போகும் இரகு வம்சத்தையும் இலியட் காவியத்தைப் பற்றி இணையத்தில் படிக்கும் ஆவலும், அன்று நடந்தபோது எழுதியக் குறிப்புகளை சரிபார்க்கவும் பரபரத்துக் கொண்டிருந்தது மனசு. சிலர் நூலகத்திலேயே படுத்துக் கொள்ளலாம் என்றும் சிலர் குருகுலத்தின் அறைகளில் தங்கிக் கொள்ளலாம் என்றும் 18 பேருக்கு மூன்று காட்டேஜ்கள் ஏற்பாடு செய்திருப்பதாகவும் சொன்னார்கள். நூலகத்தில் இருப்பவர்கள் மேலும் சில மணி நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள் என்றும் நிகழ்ச்சிகள் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

குருகுல அறைகளில் இருப்பவர்கள் அறைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றார்கள். கட்டிலோ ஒருவர் சவுகரியமாக படுக்க மட்டுமே போதுமானதாக இருந்தது என்பதைக் காலையிலேயே கவனித்திருந்தேன். அதில் 3,4 பேர் தங்குவது என்றால்?

காட்டேஜ் ஒவ்வொன்றிலும் 6 பேர் தாராளமாக தங்கலாம் என்றிருந்தார்கள்.

உடனே ஓடிப் போய் வேனில் ஏறிக்கொண்டேன். என்ன ஒரு முட்டாள்தனம்? ஜெயமோகனோடும் நாஞ்சிலோடும் தேவ தேவனோடும் இரவுகளிலும், காலை நடையிலும் உரையாடும் பாக்கியத்தை இழந்து விட்டேன் என்பது பிறகே புரிந்தது.

காளிதாசரின் ரகு வம்சத்தைப் பற்றி இணையத்தில் இங்கே சுருக்கமாக ஆங்கிலத்தில் படித்து இன்புறலாம். தமிழில் இவ்வளவு சுருக்கமாக இணையத்தில் எனக்கு கிடைக்கவில்லை.

பைபிளில் புதிய ஏற்பாடு இவ்வாறு தொடங்குகிறது.

ஆதியிலே வார்த்தை இருந்தது.
அவ்வார்த்தை கடவுளோடு இருந்தது.
அவ்வார்த்தை கடவுளாயும் இருந்தது.
ஆதியிலே கடவுளோடு இருந்தது.
அவர் வழியாகவே அனைத்தும் உண்டாயின.

இதனுடன் காளிதாசரின் ரகுவம்சத்தில் ஆரம்ப வரிகளைப் பார்க்கலாம்.


வாக2ர்தா1விவ ஸம்ப்ரிக்தெள வாக2ர்தப்ரதி பத்தயே:
ஜக2த: பிதரெளவந்தே2 பார்வதீ பரமேஸ்வரெள

பதவுரை:
வாக2ர்தா1விவ = சொல்லின் பொருளைப் போல்
ஸம்ப்ரிக்தெள = ஒன்றோடொன்று இழைந்திருப்பது போன்று
ஜக2த: = உலகிற்கு
பிதரெள = தாயும் தந்தையுமாகிய
பார்வதீ பரமேஸ்வரெள = பார்வதி அம்மையையும், பரமசிவனையும் வாக2ர்தப்ரதி பத்தயே: = வாக்கில் வெளிப்படும் பொருள்களின் அறிவுக்காக
வந்தே2 = வணங்குகிறேன்.


கருத்துரை:
சொல்லும் பொருளும் என இணைந்த 
தொல்லுலகின் தாய் தந்தையரை, பார்வதி பரமேசுவரனை,
சொல்லையும் பொருளையும் அறிந்திட வேண்டிப் பணிகின்றேன்.

’சொல்லும் பொருளும் என இணைந்த’என்பதற்கு உதகை காவிய முகாமில் இரகுவம்சத்தின் இந்தப் பகுதியைப் படிக்கும்போது ” சொல்லையும் பொருளையும் பிரிக்க முடியாது. அது போல் இணைந்துள்ள சக்தியும் சிவமும்” என்று பொருள் கொண்டனர். ஜெயமோகன் சொல்லை பிரித்தால் பொருள் தராது. எனவே சொல்லாக சக்தியும் பொருளாக சிவமும் இணைந்திருப்பதாக விளக்கினார்.

என்னால் இதனை ஏற்க முடியவில்லை. குழப்பமாகவே இருந்தது. ஏனெனில் தமிழில் சொல் என்றால் பதம் எனப்படும். பதம் பகுபதம், பகாப் பதம் என இருவகைப்படும். பிரித்தாலும் பொருள் தராதது பகாப்பதம். பிரித்தாலும் பொருள் தரக் கூடியது பகுபதம். அது போல் சமஸ்கிருதத்தில் இருக்கிறதா என என் சிற்றறிவுக்குத் தெரியவில்லை.

பைபிள் வாசகத்தை மீண்டும் பார்ப்போம்.

ஆதியிலே வார்த்தை இருந்தது. வார்த்தை என்றால் என்ன?

1 In the beginning was the Word, and the Word was with God, and the Word was God.
2 He was with God in the beginning.
3 Through him all things were made; without him nothing was made that has been made.

என ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் படுகிறது.

வார்த்தை வேறு இறைவன் வேறு என்றும் சொல்ல முடியாது.

வார்த்தையாக இறைவன் இருந்தான் என்றும் கூற முடியாது.

ஆதியில் வார்த்தை இறைவனோடுதான் இருந்தது என்றும் கூற முடியாது.

ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். அவனன்றி ஓரணுவும் அசையாது. அவனே அனைத்தையும் படைத்தான். 

இங்குதான் திருவள்ளுவரின் முதல் குறள் எனக்கு ஒரு புதிய பொருளைத் தந்தது.

இறைவன் முதலில் வார்த்தையை உருவாக்கி பின்னர் அதற்கானப் பொருளைப் படைத்திருக்கக் கூடும் எனில் வார்த்தைகளுக்கு முதலான அகர முதலான எழுத்துக்களுக்கும் இறைவனே முதலானவன் அல்லவா?

பழைய ஏற்பாட்டில் ஆதியாகமத்தில் குறிப்பிட்டது போல் பொருளைப் படைத்து விட்டு பிறகு அதற்குப் பெயரிட்டிருந்தால் அகர முதலான எழுத்துக்களுக்கு வடிவம் தரவே உலகைப் படைத்தான் இறைவன் என்கிறார் திருவள்ளுவர் என்று புரிந்து கொள்கிறேன்.

இனி காவிய முகாமிற்கு மீண்டும் செல்வோம். 

ஒரு மகா காப்பியம் என்பது பண்டைய இதிகாசம் அல்லது புராணங்களை ஆதாரமாகக் கொண்டதாக இருத்தல் வேண்டும். இது சில அதிகாரங்களாகவோ, பகுதிகளாகவோ பிரிக்கப்பட்டிருக்க வேண்டும். இதில் அரசரை அல்லது வீர்ரைப் பற்றிய பிறப்பு, வீரம், உன்னத குணங்கள் முதலியன அடங்கி இருத்தல் அவசியம். கூடுமானவரை கீழ்க்கண்ட குறிப்புகள் அடங்கியும் இருக்க வேண்டும்; அதாவது:-

ஒரு நகரத்தைப் பற்றிய விளக்கம் (சருக்கம் 16)
கடலைப் பற்றி (சருக்கம் 13)
மலை, காலங்கள் பற்றி (சருக்கம் 4 மற்றும் 16)
தோட்டம் அல்லது நீரில் விளையாடல் (சருக்கம் 8 மற்றும் 16)
பானமருந்தல், காதல், விழாக்கள்; பிரிதல், இணைதல், காதலர் திருமணம் (சருக்கம் 8,12,7)
மகவு பிறத்தல் (சருக்கம் 3)
அவை விளக்கம் (சருக்கம் 8, 15)
தூது (சருக்கம் 5)
அரசன் (சருக்கம் 16,12,4)
போர்ச் செயலும் வெற்றியும் (சருக்கம் 2,7, 12) குறிக்கப்பட்டிருக்க வேண்டும்.

காளிதாசர் இயற்றிய இந்த ரகுவம்சம் 19 சருக்கங்களோடு நிறுத்தப்பட்டதா அல்லது தொடர்ந்து இயற்றப்பட்டதா என்பது சந்தேகமே. ரகுவுடன் துவங்கி 28 வீர்ர்களை மட்டும் குறிப்பதாக இருக்கிறது. இதில், சிருங்காரம், வீரம், கருணை முதலிய குணங்கள் தகுந்த இடங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்நூலின் சுருக்கம் கீழ்க்கண்டவாறு:

திலீப மன்னன் வசிட்டரிடம் சென்று தனக்கு குழந்தை இல்லாமைக்கு காரணம் அறிதல்.
திலீபன் நந்தினீ என்னும் பசுவுக்கு சேவை செய்து குழந்தை உண்டாக வரம் பெறுதல்.
ரகுவின் பிறப்பும், குழந்தைப் பருவமும், இளமைப் பருவமும்.
ரகுவின் பட்டாபிஷேகம் மற்றும் திக்விஜயம்.
ரகுவின் மகன் அஜனின் பிறப்பு, விதர்ப்ப நாட்டு இளவரசி இந்துமதி சுயம்வரத்திற்கு போதல்
இளவரசி இந்துமதி அஜனை மணத்தல்.
அஜனுடைய திருமணம்; அவனை எதிர்த்த அரசர்களை வெல்லுதல்
தசரதனுடைய பிறப்பு மற்றும் இந்துமதி மரணம்.
தசரதன் வேட்டைக்குப் போய் ரிஷி சாபம் பெறுதல்.
மஹாவிஷ்ணு தசரதனுக்கு மகன்களாய் பிறத்தல்.
இராமர் சிவன் வில்லை ஒடித்து சீதையை மணத்தல், பரசுராமன் சந்திப்பு.
இராமரின் வனவாசம், சீதையை இராவணன் எடுத்துப் போதல், இராவண வதம்.
இராமர் புஷ்பக விமானத்தில் இலங்கையை விட்டு அயோத்தி அடைதல்.
சீதையை காட்டில் விட்டுவிடுகிறான் இலக்குவன். வான்மீகி முனிவர் ஆசிரமத்தில் சீதை அடைக்கலம்.
குச லவர்களின் பிறப்பு, இராமருடன் போர் புரிய எதிர்த்து நிற்றல், சீதை பூமியில் மறைதல்.
குசன் அயோத்தி அடைதல். அவன் குமுதவதியை மணத்தல்.
குசனின் மகன் அதிதிக்குப் பட்டமளித்தல், அதிதி அயோத்தியை ஆளுதல்.
அதிதியின் மகன் நிஷதன் முதலாக இருபத்தொரு அரசர்களைப் பற்றிய சுருக்கமான விளக்கம்.
அக்னி வர்ணனுடைய சிற்றின்ப வாழ்க்கை விளக்கம். அக்னி வர்ணன் நோய்வாய்ப்படுத்தல், அவனுடைய ராணி அரசை ஏற்றல்.

ரகுவம்சத்தைப் பற்றியும் இலியட் காவியத்தைப் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம். இந்த கட்டுரையின் நோக்கம் அதுவல்ல. ஜெயமோகனின் வார்த்தைகளில் சொல்வதென்றால்ம் இலியட் காவியத்தை வீரகதைப் பாடல்களில் இருந்து காவியத்தை நோக்கி நகர்ந்த ஒரு வடிவம் என்று சொல்லலாம்.

உக்கிரமான போர்ச்சித்தரிப்பே அதன் சிறப்பு. அதன் முதல் வரியே சொல்வது போல் அது அக்கிலிஸ் என்ற மாவீரனின் ஆண்மை, ஆணவம், கட்டுக் கடங்காத சினம் ஆகியவற்றின் விரிவான சித்தரிப்பு மட்டுமே.

காவிய காலகட்டத்தின் ஆரம்பத்தில் காவிய கர்த்தன் ஒரு பெரும் தொகுப்பாளனாகவே இருக்கிறான். அசாதாரணமான நினைவாற்றலே அவனுடைய முதன்மைத் தகுதியாக இருக்கிறது. ஹோமர் பார்வையிழந்தவர் என்பது இங்கு குறிப்பிட தக்கது. இரண்டாம் கட்டத்தில் காவிய கர்த்தன் பேர்றிஞனாக ஆகிறான். அறிஞர்களுக்காக எழுத ஆரம்பிக்கிறான். கம்பராமாயணமும், ரகுவம்சமும் கவிதையை சுவைக்கும் தகுதி கொண்டவர்களுக்கானவை. அவற்றின் அடிப்படை இயல்பென்பது செறிவே. இக்கட்டுரையின் முதல் பகுதியில் நான் குறிப்பிட்டதைப்போல் மூச்சுக்காற்றுபட்ட கண்ணாடி மங்கி தெளிவதைப் போல மனம் மயங்கி தெளிந்தாள் என்பது ஒரு நாட்டார் பாடலில் வர முடியாது. இது அருவமான ஒரு மன உணர்வை வர்ணிக்கும் முயற்சி. அதற்காக இங்கே கற்பனை ஒரு கருவியாக ஆகியிருக்கிறது. செவ்வியலாக்கத்தின் முதல் படி இதுவே.

இலியட்டில் செவ்வியல்தன்மை எங்கே உள்ளது? அதிலுள்ள புராணத் தன்மையே செவ்வியல் அம்சத்தை உருவாக்குகிறது. 

உதாரணமாக, இதன் கதாநாயகனாகிய அக்கிலிஸின் பிறப்பு. 
ஜுயூஸ் என்ற தலைமைத் தெய்வம் (இந்திரன்) பொஸைடன் என்ற கடல்தெய்வம் (வருணன்) ஆகியோர் தீட்டிஸ் என்ற கடல்தெய்வத்தினை காதலிக்கிறார்கள். ஆனால் அவளுக்கு பிறக்கும் குழந்தை தந்தையை விட வல்லமை கொண்டதாக இருக்கும் என்று இருப்பதால் பிலியூஸ் என்கிற மன்னனுக்கு மணம் செய்விக்கிறார்கள். அவளுக்கு பிறக்கும் மகனே அக்கிலிஸ். அவன் மாவீரன். ஆனால் மனிதனுக்கு பிறந்தவனாதலால் மரணம் உண்டு. எனவே அவன் அன்னை அவனை ஹயடிஸ் என்ற பாதாளத்துக்கு கொண்டு சென்று அங்கே ஓடு ஸ்டிக்ஸ் என்ற நதியின் நீரில் அக்கிலிஸின் குதிகாலை பிடித்து நீரில் முக்கி எடுக்கிறாள். ஆகவே அவன் குதிகால் மட்டும் மரணமுள்ளதாக ஆயிற்று. அதன் வழியாகவே அவன் கொல்லப்பட்டான்.
இந்த கதை இந்தியப் புராணங்களோடு பலவகைகளில் ஒத்து போவது ஆச்சரியமே.

மகாபாரதத்தில் பீமனை துரியோதனன் கை கால்களைக் கட்டி கங்கையில் போடுகிறான். கங்கையில் இருந்த ஒரு பிலம் வழியாக பாதாளம் சென்று நாகங்களின் தலைவன் வாசுகி கொடுக்கும்  நாகவிஷத்தை அருந்தி ஆயிரம் யானை பலம் பெறுகிறான்.
அக்கிலிஸின் குதிகால் துரியோதனைனின் தொடையை நினைவூட்டுகிறது.  

நாடகத் தன்மையின் உச்சமே சிறந்த கவிதை. கம்ப ராமாயணத்தில் நாம் உயர்தர நாடகத் தருணங்களை காண்கிறோம். இலியட்டிலும் பல உச்சகட்ட நாடகத் தருணங்கள் உள்ளன.

அக்கிலிஸுக்கும் அகமெம்னானுக்கும் உருவாகும் மோதல், அக்கிலிஸை அவன் தாய் உட்பட உள்ள தேவதைகள் சமதானப்படுத்துவது, நண்பன் கொலை செய்யப்படும்பொழுது அக்கிலிஸ் கொள்ளும் கோபாவேச வெறி எல்லாமே நாடகத்தன்மை மிக்க இடங்கள் என்று ஜெயமோகன் குறிப்பிடுகிறார். குறிப்பாக பழிவாங்கும் போது ஹெக்டரை கொன்று அந்த சடலத்தை அக்கிலிஸ் அவமதிப்பதே நாடகத்தன்மையின் உச்சம். பிற்கால காவியங்களில் கதை நாயகன் அறத்தைக் காக்கவே வீரத்தை கைகொண்டிருப்பான். அர்ஜூனனும் ராமனும் அற நாயகர்கள். அக்கிலீஸ் வீரன் மட்டுமே. ஹெக்டரைக் கொன்ற பின் பதினொரு நாட்கள் சடலத்தை தன்னுடன் வைத்து இழிவு படுத்துகிறான். அதன் பின்னர் ஹெக்டரின் தந்தை அவனைக் காண வந்ததும், பிணத்தை தருமாறு மன்றாடியதும் சிறப்பான காட்சிகள். அக்கிலிஸ் ஒப்புக் கொண்டு சடலத்தை வண்டியில் வைத்துவிட்டு சாப்பிட அழைக்க ப்ரியம் அதை மறுக்கவில்லை. பதினொரு நாட்களாக சரியாக சாப்பிடாமல் உறங்காமல் இருந்த அந்த தந்தை பசியாறியபின் அக்கிலிஸை முழுமையாக பார்த்து அவன் அழகை வியக்க, அக்கிலிஸும் ப்ரியத்தின் உயரத்தையும் கம்பீரத்தையும் பார்த்து வியக்கிறான். இங்கேதான் ஒன்றை கவனிக்க வேண்டும்.

கொன்றவன் செத்தவனின் தந்தைக்கு ஆறுதல் சொல்வதும் இருவரும் சேர்ந்தே அருந்தும் விருந்துதான் இலியட்டின் உச்சம் எனக் கருதுகிறார் ஜெயமோகன். ஒரு எளிய வீர கதையை பெருங்காப்பியமாக்கும் இந்த இடத்தை ரசிக்க வேண்டுமென்றால் நீங்களும் இந்த மூன்று காப்பியங்களோடு காலப் பயணியில் பின்னோக்கி (முன்னோக்கி அல்ல) பயணிக்க வேண்டும்.

பிறகு ஞாயிறு காலை நாஞ்சில் நாடனோடு கலந்துரையாடல் இருந்தது. சனிக்கிழமை இரவு ஏற்பாடாகியிருந்த நிகழ்ச்சி சனிக்கிழமை நடந்த கதக்களி நிகழ்ச்சியால் ஒத்தி வைக்கப்பட்டது. அதன் காணொலிகளை ஜெயமோகனின் இணையத்தில் காணலாம். 

அதில் கதக்களி பற்றிய பல விசயங்கள் என்னை வியக்க வைத்தது. ஒவ்வொரு முறையும் ஆடுபவர் தன் திறனை வெளிப்படுத்த ஆடும் முறையை மாற்றிக் கொள்வார் என்பது பாராட்டக் கூடிய ஒரு புதிய செய்தி / அனுபவம். அதே போல் முத்திரை என்றால் விரல்களில் காட்டப்படும் ஒரு அசைவு என்று மட்டுமே எண்ணிக் கொண்டிருந்த எனக்கு, முத்திரைக்கு ஆரம்பம், நடு, இறுதி என செயல் வடிவில் காட்டிய கதக்களி ராஜீவ் அவர்களுக்கு எனது பாராட்டுகள். நமஸ்காரங்கள்.

இப்போது நாஞ்சிலாரின் விசயத்திற்கு வருகிறேன். நாஞ்சிலாரிடம் நான் முன்வைத்த கேள்வி  உங்களை எழுதத் தூண்டிய(வர்) சூழ்நிலை / யார்?

பதிலை சுருக்கமாக சொல்கிறேன்:  சாதாரணமாக பிழைப்புக்காக பம்பாய் சென்று நாள் முழுவதும் உழைத்து விட்டு மாலையில் இருப்பிடம் திரும்பும் ஒருவர் என்ன செய்வார்?

நண்பர்களோடு பொழுது போக்கலாம்.  வெட்டியாக தூங்கி ஓய்வெடுக்கலாம். வானொலி கேட்கலாம். உலாவி வரலாம். இறுதியாக புத்தகங்கள் படிக்கலாம். ஆர்வம் மிகுந்து எழுதிப் பார்க்கலாம். நாஞ்சிலாரும் அதனையே செய்தார். 

மேலும் ஜெயமோகனின் இணையத்தில் கேட்கவும் முடியும். இது நம்மைப் போன்ற ஆரம்ப எழுத்தாளர்களுக்கு / எழுத துடிப்பவர்களுக்கு மட்டுமல்ல. இளையத் தலைமுறைக்கும் செய்தி விடுப்பதாக உணர்கிறேன்.

பல விசயங்களை சொல்லாமல் விட்டிருக்கிறேன். அதில் சுவராசியம் இல்லையென்றோ எனது மறதி என்றோ கூறப் போவதில்லை. கட்டுரை நீளம் கருதியே வெட்டி விட்டு விட்டேன். இந்த இரு பகுதிகளில் உள்ள விசயங்கள் அடுத்த ஆண்டு மீண்டும் உதகைக்கு செல்லும் வரை எழுதக் கூடிய விசயங்களாக இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

நன்றி.

Jul 15, 2011

ஆளே மாறிட்டியே?


"அப்போ நான் புறப்படறேன் அண்ணா"

"சரிம்மா ஜானகி. மகி பட்சணம் குடுத்தாளா?"

"வாங்கிக்கிட்டேன் அண்ணா"

"உமா  இருப்பா பாரு, தாம்பூலம் வாங்கிக்கிடு"

"வாங்கிட்டேன் அண்ணா"

"பார்வதி, ஒரு நிமிஷம் இங்கே வா"

"சொல்டா பலராமா"

 "இது யாருன்னு தெரியுதா?"

"யாரு?"

"நம்ம சின்னசேலம் ஜானகி"

"யாரு?"

"பூந்தோட்டம்...."

"அட.... அந்த ஜானகியா? அப்டியே ஆளே மாறிப் போயிட்ட"

"நீங்க?"

"நான் உங்க பூந்தோட்டம் வீட்டு பக்கத்துல இருந்தனே"

"ம்ம்ம்ம் எனக்கு சரியாத் தெரியலை. ஒரு வேளை எங்க அம்மாவுக்கு உங்களையெல்லாம் தெரிஞ்சிருக்கும்'னு நினைக்கறேன்"

"இல்லை, உங்க வீட்டுல எனக்கு உன்னைவிட்டா யாரையும் தெரியாது"

"அப்படியா...."

"ஆமா, ஆனா ரொம்பவும் மாறிட்ட நீ. ஆளு அடையாளமே தெரியலையே?"

"என்ன அப்படி பார்க்கறீங்க?"

" என்ன ஒரு மாற்றம். அடியோட மாறிட்டியே, அதைத்தான் பாக்கறேன். இப்போ என்ன வயசாச்சு உனக்கு?"

"அறுபத்தி மூணு முடிஞ்சுது"

"இது யாரு?"

"என் கடைசி பையன். இவ பேத்தி, பெரியவனோட பொண்ணு."

"ஆனாலும் ஆளே மாறிட்ட நீ. என்னால நம்பவே முடியலை"

"சரி வர்றேங்க! வர்றேன் அண்ணா"

"யாரும்மா அவங்க"

"தெரியலைடா, எனக்கு நியாபகம் இல்லை. எங்க சின்னசேலம் வீட்டு பக்கத்துல இருந்ததா சொல்றாங்க"

"அவங்க இத்தனை வருஷம் கோமா ஸ்டேஜ்'ல இருந்தாங்களா?"

"எதுக்கு கேக்கற?

"இல்லை, நீங்க சின்ன சேலத்துல இருந்தது அம்பத்தி அஞ்சு வருஷம் முன்னால. பத்து வயசு பொண்ணா பாத்த உங்களை இப்போ பாத்துட்டு அடியோட மாறிப் போயிட்டன்னு மறுபடி மறுபடி சொல்லிக்கிட்டு இருந்தாங்களே அதான் கேட்டேன்"

"ஹி ஹி ஹி..."

"தோ இருக்காளே என் அண்ணன் பொண்ணு, உங்க பேத்தி; இவளைக் காட்டி இதுதான் சின்ன சேலம் ஜானகி அப்படின்னு சொல்லியிருந்தா அவங்களுக்கு இத்தனை அதிர்ச்சி இருந்திருக்காதுன்னு நினைக்கறேன்"
.
.
.

Jul 14, 2011

ஒரு சின்ன ட்வீட்-அப்


காலை எட்டு மணிக்கு கீழ்கட்டளை AAB'யில் தமிழ் இணைய சீனியர்கள் பெனாத்தல் சுரேஷ் ( http://twitter.com/penathal) மற்றும் சித்ரன் (http://twitter.com/raghuji) இருவரையும் சந்தித்தேன். அந்த ஒன்றரை மணிநேர மீட்டிங்கில் பல விஷயங்கள் குறித்து அளவளாவினோம் (!!!). 

சுருக்கமான மினிட்ஸ் ஆஃப் தி மீட்டிங் இங்கே:

௦0௦. அவரவர் அலுவல் சார்ந்த விசாரிப்புகள்.
௧. ரைட்டர் பேயோன் யார்?
கa. ரைட்டர் பேயோன் பெருமை
௨. சொக்கரின் பெருமை 
௨b. (சபைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது )
௩. சென்னை போக்குவரத்து.
௪. சந்தித்த பதிவர்கள் பற்றி
௫. இந்தியாவில் ரேஷன் கார்டு வாங்குவது எப்படி?
௬. துபாயில் டிரைவிங் லைசன்ஸ் வாங்குவது எப்படி?
௭. ஸஸரிரி பெயர்க்காரணம் 
௮. சித்ரன் பெயர்க் காரணம் (அடடா, பெனாத்தல் பெயர்க்காரணம் மறந்திட்டோம்)
௯. ஆனந்த விகடன், வலைபாயுதே, நடிகை பேட்டிகள், சினிமா அறிமுகங்கள்.
௧௦. மாயவரத்தான் யார்? (சித்ரன் கேள்வி - பெனாத்தல் பதில்)
௧௧. கேணி கூட்ட அனுபவங்கள் (பெனாத்தல்)
௧௨. சாரு நிவேதிதா (ஹி ஹி ஹி...)
௧௩. பின்னே கொஞ்சம் விஷயங்கள் (நான் மறந்தவை என்று அர்த்தம்)

ஆளுக்கொரு மினி டிபனும் காபியும் சாப்பிட்டு முடித்து சுரேஷ் அண்ணன் பேமன்ட் செய்து முடிக்க கூட்டம் இனிதே நிறைந்தது.

Jul 13, 2011

உதகை காவிய முகாம் – முதல் பகுதி.

சிறப்புப் பதிவர்: சு. வீரராகவன் < சிந்தா குலத்தின் வலைப்பூ >


ஜெயமோகன் உதகையில் நிகழ்த்தவிருக்கும் காவிய முகாமுக்குச் செல்லப் போகிறேன் என்ற செய்தியை என் நண்பரொருவரிடம் நான் சொன்னபோது அவர், "இலியட், ரகுவம்சம், கம்ப ராமாயணம் போன்றவை மாபெரும் காவியங்கள். அவை நமக்கு அறிமுகமில்லாத, அலட்சியபடுத்தப்பட்டுள்ள படைப்புகளல்ல. அவற்றுக்கு நூற்றுக்கணக்கான உரைகள் இருக்கின்றன. இந்த காவியங்களைப் படித்து ரசிக்கக்கூடிய நுண்ணறிவுள்ள வாசகன் எளிதில் இந்த உரைகளைத் தேடி எடுத்து காவியங்களை அறிந்து கொண்டுவிட முடியும். தலை சிறந்த நூல்கள் பல இருக்கும்போது, நீ ஜெயமோகனும் நாஞ்சில்நாடனும்  பேசுவதைத் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறாய்?" என்று அலட்சியமாகக் கேட்டான். எனது இந்தக் கட்டுரையை நான் அவனுக்கு எழுதும் திறந்த மடலாகவே எழுதுகிறேன், அடுத்த முறை நான் உதகை செல்லும்போது அவனும் என்னுடன் வருவான் என்ற நம்பிக்கையில்.



கம்ப ராமாயணம் படிக்கப் படிக்க புதுப் புது பொருள் தரக்கூடியதே. கம்ப ராமாயணத்தை ஒரு சிலரைத் தவிர ஏனைய அனைவரும் பக்தி இலக்கியமாகவே பார்த்து இரசித்துள்ளனர். ஆனால் முழுக்க முழுக்க அழகியல் நோக்கில் கடவுள் மறுப்புக் கொள்கைகள் இல்லாமல் இது வரை நான் படித்ததில்லை. அது நிகழக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது. அது தவிர ஒரே சமயத்தில் பலருடைய கண்ணோட்டத்தை ஒருங்கே காணும் அனுபவம் முகாமைத் தவிர வேறு எங்கும் கிட்டாது என்பது என் எண்ணம். இந்த என் நம்பிக்கை பொய்க்கவில்லை- உலகின் முதலாய மூன்று காவியங்களை எடுத்துக் கொண்டு காலப்பயணியில் பயணிக்கும் வாய்ப்பு இந்த முகாமில் எனக்குக் கிட்டியது.



இந்த மூன்று நாட்களும் நாங்கள் எடுத்துக் கொண்ட காவியங்களை மட்டுமே படித்து, சிந்தித்து, உரையாடி, தெளிந்து மகிழ்ந்தோம். உணவு இடைவெளியில் சாப்பிடும் போதும் நாங்கள் வீண் வெட்டி அரட்டையில் ஈடுபடாமல் விவாதித்துக் கொண்டே உணவு அருந்திய அனுபவம் அலாதியானது. அத்தகைய சூழலே எனக்கு இப்போதும் பிடித்தமானதாக இருக்கிறது. எந்த ஒரு தனி நபர் விமர்சனமோ, அரசியலோ, சச்சரவோ இல்லாமல் இந்த மூன்று நாட்களில் விவாதங்கள் செய்ய நேர்ந்தது எனக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமே.

நான் ஏராளமான செமினார்களிலும், கான்பிரன்ஸ்களிலும் கலந்து கொண்டிருக்கிறேன். அவை அனைத்தையும்விட நூறு மடங்கு வித்தியாசமானது இந்த முகாம் என உறுதியாகச் சொல்வேன். ஏனெனில் அத்தகைய செமினார்களின் இடைவெளிகள் அபத்தமான வெட்டி அரட்டைகளில் கழியும். அவையே முக்கியமான விஷயங்கள் என்பது போல் சில்லறையான விசயங்களையும் மிகை உணர்ச்சியுடன் குறைபட்டுக்கொண்டு கடமையே என்று அரங்க விவாதங்களில் கலந்து கொள்வோம். இங்கு அப்படியில்லை. இலியட், ரகு வம்சம், கம்ப ராமாயணம் ஆகிய மூன்று காவியங்களும் நிறைந்த பேச்சுக்காற்று உதகையின் மூன்று நாட்களும் எங்களைச் சூழ்ந்திருந்தது.

இப்போது திரும்பிப் பார்த்தால், இலக்கிய வளர்ச்சியின் அழகியலில் ஏற்படும் மாற்றங்களை ஜெயமோகன் சுட்டிக் காட்டியபோதுதான் முகாமின் முக்கியமான பயன் எனக்குப் புரிந்தது. அதை ஒருவர் நேரடியாக எடுத்துச்சொன்னாலன்றி அதன் முக்கியத்துவத்தை நான் அறிந்திருக்க முடியாது.. முகாமில்கூட இந்த நோக்கத்தை முழுமையாக உணராமல் சிலர் கேள்விகள் எழுப்பியபோது ஜெயமோகன் மிக அழகாக, பொறுமையாக காவியங்களின் மொழியிலும் வடிவிலும் உணர்வு வெளிப்பாட்டிலும் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மாற்றங்களை எடுத்துக் காட்டினார். இதை விளக்கும் வகையில் அவரது உரையாடலின் ஒரே ஒரு திரியை இங்கே முன்வைக்கிறேன்.

காவியங்கள் முதலில் எழுதப்படும்பொழுது ஒரு பெரும் தொகுப்பாகவே இருந்திருக்கின்றன. நினைவாற்றலுக்குத் துணையாய் இருக்க வேண்டிய தேவையே காவியங்களின் மொழியையும் வடிவமைப்பையும் தீர்மானித்திருக்கிறது. இதனை இலியட் காவியத்தில் காணலாம். 

காவிய காலத்தின் இரண்டாம் கட்டத்தில் அவை படித்த அறிஞர்களுக்காக எழுதப்படுகின்றன. இரகுவம்சமும், கம்ப ராமாயணமும் கவிதையை ரசிக்கும் நுண்ணுணர்வை வளர்த்துக் கொண்டவர்களுக்கானவை. அவற்றின் இயல்பென்பது மொழிச் செறிவே.

எதிரிகளை எண்ணி வருந்திய 
அவள் முகம் சட்டென்று மீண்டு
மூச்சுக் காற்று பட்டு தெளிந்த
கண்ணாடி போலானது"

இங்கே வர்ணனை ஓரளவு யதார்த்தமானதாகவே இருக்கிறது- உணர்வுகளை ஒரு காட்சியாக முன்னிலைப்படுத்தத் துணை செய்வது மட்டுமே கற்பனையின் நோக்கமாக இருக்கிறது.

அடுத்த ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பின் வந்த கம்பனின் காவியம் இவ்வாறு வர்ணிக்கிறது.

திடர் உடை குங்குமச் சேறும் சாந்தமும்
இடையிடை வண்டல் இட்டு ஆரம் ஈர்த்தன
மிடை முலை குவடு ஒரீ மேகலை தடங்
கடலிடை புகுந்த கண் கழுழி ஆறு அரோ.

கருத்து: பெண்களின் கண்களில் நிறைந்து வழிந்த ஆறு அவர்கள் மார்பிலணிந்த குங்குமத்தையும் சந்தனத்தையும் சேறாக ஆக்கி அவர்கள் கழுத்தில் அணிந்த ஆரத்தை சுழற்றி அடித்துக் கொண்டு மார்பகங்களாகிய மலைகளைச் சுற்றிக் கொண்டு மேகலையாகிய கடலில் சென்று கலந்தது.

இந்த அழகியல் முற்றிலும் வேறானது. இங்கே கற்பனை கற்பனையின் அழகுக்காகவே ரசிக்கப்படுகிறது.

ஜெயமோகன் தன் உரையில் இவ்வாறு காவியங்களை அவற்றின் காலத்தோடு, அவற்றின் சமகாலத்திய நுண்ணுணர்வோடு பொருத்திப் படிக்க வேண்டும் என்று விரிவாக விளக்கமளித்தது எனக்கு ஒரு விலைமதிப்பில்லாத பாடம்.

இங்கு குறையாக நான் கருதியது ஒரே ஒரு விஷயம் மட்டுமே. அதை நான் ஜெயமோகனிடம் நேரடியாகவே சுட்டி காட்டினேன். உணவு சாப்பிட்ட தட்டுகளை கழுவுமிடத்தில் ஒரு கூடையில் போடாமல் வீசிச் சென்றனர். இது ஒரு அற்பமான குறைதான், ஆனால் பார்க்க நன்றாக இல்லாததால் இது என் மனதுக்கு உறுத்தலாக இருந்தது. இன்னொன்று. அமர்வுகளின் இடையே தாகமெடுத்தால் அரங்கை விட்டு வெளியே சென்றாக வேண்டிய நிலை. அமர்வுகள் நீண்டதாக இருந்ததால் தாகம் எடுத்தாலும் வெளியே செல்ல விருப்பமில்லாமல் கஷ்டப்பட்டேன். அடுத்த முறை கலந்து கொள்ளும்போது நீருக்காக சில முன்னேற்பாடுகளை நாம் சுயமாக செய்து கொள்ள வேண்டும் என்கிற முடிவோடு இருக்கிறேன்.

-----------------------------------------



வெள்ளி காலை 11.30 மணியளவில் முகாமின் முதல் நாள் முதல் அமர்வு தொடங்கியது. முகாமின் நோக்கம் தெளிவானது.



தமிழ் காவியங்களில் முதல் காவியமாக (தழுவலாக இருந்தாலும்) கம்ப ராமாயணத்தை மட்டுமே கூற இயலும். அதன் காலகட்டத்தில் ஒரு 700 வருடங்கள் பின்னோக்கிச் சென்றால் நமக்கு கிட்டுவது காளிதாசனின் ரகுவம்சம். அதிலிருந்து மேலும் 1000 வருடங்கள் பின்னோக்கிச் சென்றால் ஹோமரின் இலியட் பற்றி அறியலாம். 



எனவே மூன்று காவியங்களுக்கும் கால இடைவெளி சுமார் 1000 வருடங்கள் இருப்பதால் அழகியல் நோக்கில் பெரிய அளவில்  வேறுபாடுகள் இருக்கும் என்பதைப் புரிந்து கொண்டுதான் நாம் இந்த காவியங்களை படிக்க வேண்டும். வால்மீகிக்கும் கம்பருக்கும் இடையே கூட கால இடைவெளி உண்டு. கம்பன் அயோத்தியை கண்டதில்லை. இருந்தும் பாடல்களில் புவியியல் அமைப்பிற்கு முரண்படாது வர்ணிக்கும்போது நம் முன் அயோத்தியை சரியாகவே சித்தரிக்கிறான்.

முகாமின் முதல் நாள் முழுவதும் கம்ப ராமாயணமே எடுத்துக்கொள்ளப்பட்டது. முதல் அமர்வில் நாஞ்சில் நாடன் பால காண்டத்தில் 52 பாடல்களை எடுத்துக் கூறினார். ஒவ்வொரு பாடலையும் அவர் பாடியதும் ஜெயமோகன் ஒரு முறையும் அமர்வில் அமர்ந்துள்ள ஏனையோரில் ஒரிருவர் ஒரு முறை வாசித்ததும் அப்பாடலிலுள்ள அழகியல் கோட்பாடுகளை நாஞ்சில் விளக்கினார். பங்கேற்றோரில் சிலர் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். பின்னர் அடுத்தப் பாடல் எடுத்துக் கொள்ளப்பட்டது.

அமர்வில் எடுத்துக் கொள்ளப்பட்ட பாடல்களையும் அதன் தொடர்பான எனது பார்வையையும் மட்டுமே இங்கு பதிகிறேன். விரிவான உரைகளின் ஒலிப் பதிவுகளை திரு.ஜெயமோகனின் இணையத்தில் கேட்கலாம். அதனை அந்தந்த பாடல் முடியும் வரை கேட்டு விட்டு பிறகு எனது பதிவுகளைப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

52 பாடல்களிலும் எனது கருத்தைப் பதிவிடுவதானால் அது ஒரு தனி புத்தகமாகவே மாறிவிடும். எனவே ஒரு பாடலுக்கு மட்டும், எனது கருத்தை மட்டும், சொல்கிறேன்:

(பாடல் எண் வரிசை கம்பன் கழகப் பதிப்பில் உள்ளபடி.)

வரிசை எண் 1 பாடல் 1
பால காண்டம் : பாயிரம் கடவுள் வாழ்த்து.
குறிப்பு: 
பாலகாண்டம் 23 படலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. பாயிரத்தை நூலாசிரியரே பாடவேண்டியதில்லை. பின்னர் சேர்க்கப்படலாம். இங்கு கம்பரே பாடியிருக்கிறார்.

ஓம் என்பது பிரணவ மந்திரம். அ, , ம என மூன்றும் சேர்ந்தது. 
படைத்தலைக் குறிக்கும்.
காத்தலைக் குறிக்கும்
அழித்தலைக் குறிக்கும்.
எனவே உ காத்தலைக் குறிப்பதால் பல கவிஞர்கள் தங்கள் படைப்புகளை உ கரத்தில் ஆரம்பித்துள்ளனர்.. நக்கீரர் உலகம் உவப்ப தலை கூடிஎன்றும், பெரிய புராணத்தில் சேக்கிழார் உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்என்று தொடங்கியுள்ளனர். இங்கு கம்பரும் அவ்வாறே தொடங்குகிறார்

உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்
நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்  - அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.
(நீங்கலா = அழியாத ,அலகு = அளவு)

கருத்து: உலகமாகிய இயற்கையின் படைத்தல், அவ்வாறு படைத்தபின் நிலையாக நிறுத்தல் (காத்தல்), அழித்தல் ஆகிய செயல்களைச் செய்யும் அழியாத, அளவில்லாத விளையாட்டை உடைய இறைவனே தலைவன். அவனைச் சரணடைவோம்.

இப்பாடலில்  நான் கண்ட நயம்விளையாட்டு உடையார்என்கிற சொற்றொடர்.

ஆக்கல், நிலை பெறுதல், நீக்கல் முதலியவை செயல்கள். நம் குழந்தைகள் ஒரு வேலையைச் செய்து கொண்டிருக்கும்போது அவர்களுக்கு விளையாட வேண்டும் என்ற எண்ணம் வந்தால் நாம் அவர்களைக் கோபிப்போம். உன் வேலையை முடித்துவிட்டு விளையாடு என்று சொல்வோம். அதே போல் நாம் ஒரு செயலை கவனமாக செய்து கொண்டிருக்கும்போது யாராவது நம்மிடம் விளையாடினால் இது என்ன இடையூறு என்ற சினம் ஏற்படுகிறது. இங்கோ, இறைவன் தன் செயலுக்கு இடையே  விளையாடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அவர் செயலாற்றுவதையே விளையாட்டாக பாவிப்பவராக இருக்கிறார். 

ஏனெனில் செயல்களைச் செய்வதானால் அவற்றை இடம், பொருள் மட்டுமன்றி காலம் கருதியும் செய்ய வேண்டும். விளையாட்டானால் கால அளவு கருதாமல் நாம் விளையாடிக் கொண்டே இருப்போம். இங்கு இறைவனும் கால அளவு கருதாமல் செயல்களைச் செய்பவனாக இருக்கிறான். எனவே அவனுக்குத் தன் செயல்களே விளையாட்டாக ஆகிறது.

விளையாட்டில் துவக்கம், இடை, இறுதி என்ற மூன்று நிலைகள் உள்ளன. இறைவனின் படைத்தல், காத்தல், அழித்தலை இதனோடு ஒப்பிடலாம். விளையாட்டில் விதிகள் உண்டு. விதிகள் முறையாக கடைபிடிக்கப்படும்போதும், அவை மீறப்படும்போதும் விளையாட்டின் போக்கு மாறுகிறது. விளையாட்டுக்கு ஆற்றலும் தேவை. திறனும் தேவை. விளையாட்டின் நடுவரே விளையாட்டைக் கட்டுபடுத்துகிறார். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

கம்ப ராமாயணத்தின் பாயிரம் துவங்கி ஏனைய பாடல்கள் அனைத்தும் இவ்விதமான பல்வகை சிந்தனைகள் கிளைக்கக் காரணமான பொருட்செறிவு உடையதாக உள்ளன. நாஞ்சில் நாடனின் உரை கம்ப ராமாயணத்தின் காவியச் சுவையை அதன் சாரம் குறையாமல் எளிய மொழியில் எடுத்துத் தருவதாக இருந்தது.

மதியம் இரண்டாவது அமர்வில் ஜடாயு அயோத்தி காண்டத்தில் இருந்து 99 பாடல்களை எடுத்துக் கொண்டார்.

இச்சமயத்தில் ஒரு சந்தேகம் எழுப்பப்பட்டது. அதற்கான இரு பாடல்கள். இதுதான். அதை மட்டும் இங்கு விளக்குகிறேன்.

குழைக்கின்ற கவரி இன்றிக் கொற்றவெண் குடையும் இன்றி
இழைக்கின்ற விதிமுன் செல்லத் தருமம் பின் இரங்கி ஏக
மழைக்குன்றம் அனையாள் மெளலி கவித்தனன் வருமென்று என்று
தழைக்கின்ற உள்ளத் தன்னாள் முன் ஒரு தமியன் சென்றான். 1

புனைந்திலன் மெளலி; குஞ்சி மஞ்சனப் புனித நீரால்
நனைந்திலன்; என்கொல்?’ என்னும் ஐயத்தால் நளினம் பாதம்
வனைந்த பொற் கழற்கால் வீரன் வணங்கலும், குழைந்து வாழ்த்தி ‘ 
நினைந்தது என்? இடையூறு உண்டோ நெடுமுடி புனைதற்கு?’ என்றாள். 2

மகனுக்கு பட்டாபிஷேகம் நடக்கப் போகிறது என்றால் தாய் அருகில் இல்லாமலா முடி சூடுவார்கள்?

அப்போது கவரி வீசி வர, வெண் கொற்றக் குடையும் சூழ இராமன் வருவான் என்று எப்படி கோசலை எதிர்பார்த்தாள்?

இதைப் பற்றி அங்குள்ள அனைவரும் ஆலோசனை செய்தோம். உடனே பதில் கூற இயலவில்லை. நானும் பலவாறு யோசித்து பல நூல்களைப் புரட்டிப் படித்தேன். ஞானசுந்தரம் அவர்களுடைய ஆய்வுக் கட்டுரையிலிருந்தும், வி.வி.எஸ் அய்யர் அவர்களின் ஆராய்ச்சி கட்டுரைகளிலிருந்தும் ஒரு உண்மை புலனாகிறது.

வால்மீகி இராமன் காட்டிற்கு சென்ற ஆறாம் நாள் இரவுதான் தசரதன் உயிர் துறந்தான் என்கிறார். கம்பனோ சுமந்திரன் இரண்டாம் நாள் அயோத்தி திரும்பி செய்தி சொன்னதும் உயிர் துறந்தான் என்னும்போது நமக்கு அவன் மேல் இரக்க உணர்ச்சி மேலிடுகிறது. இவ்வாறு வால்மீகியிலிருந்து கம்பன் கால வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும் இருவரும் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட காலண்டரையே கடைப் பிடித்தார்கள் என்பது தெளிவாகிறது.

சூரியனை அடிப்படையாக கொண்ட காலண்டரில் மாதத்தில் இரண்டு அமாவாசைகளோ அல்லது இரண்டு பெளர்ணமிகளோ வரக்கூடும். ஆனால் சந்திர காலண்டரில் மாதத்தில் ஒரு அமாவாசையும் ஒரு பெளர்ணமியும் மட்டுமே இருக்கும். ஒரு அமாவாசைக்கும் அடுத்த அமாவாசைக்கும் உள்ள இடைவெளி 29.5305 நாட்கள். மேலும், வால்மீகி, கம்பன் இருவரும் திதிகளைக் குறிப்பிடும்போது ஒற்றுமை தெரிகிறது.

அதேபோல கோசலையும் முன்னாளிலிருந்து ராமனின் வருகை எதிர் நோக்கியிருக்கும்போது நேரக் குழப்பம் (இரவா / பகலா) அவளுக்கு ஏற்பட்டிருக்கலாம். எனவே முடிசூடி விட்டதான கனவில் அவள் ஆழ்ந்திருக்கும்போது இராமன் வரும்போது முடிசூடி விட்டு ஆசிர்வாதம் பெற வருவதான எதிர்பார்ப்பில் இருந்திருக்கக் கூடும். இவ்வாறு பல சிந்தனைகள். தசரதன் இறப்பைப் பொறுத்த வரை, காவியத்தின் அழகியல் கோட்பாட்டிற்கேற்ப கம்பன் காலத்தை குறுக்கியிருக்கக்] கூடும்.

Close reading என்று சொல்லப்படும் இத்தகைய நுணுக்கமான வாசிப்பு அனுபவம் எனக்குப் புதியதாக இருந்தது. ஜடாயுவின் உரை முடிவதற்குள் இரவு பத்து மணியை நெருங்கி விட்டதால் அடுத்த நாள் காலை தொடரலாம் என்று அன்றைய அமர்வு முடிந்தது. 

50க்கும் மேற்பட்டோர் வர விருப்பம் தெரிவித்திருந்ததால் குருகுலத்திலிருந்து சற்றுத் தொலைவில் நான்கு காட்டேஜ்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு காட்டேஜும் ஆறு பேர் தாராளமாகத் தங்கும் அளவு விசாலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஏற்பாடுகளை கோவை அரங்கசாமி செய்திருந்தார். மூன்று வேளை உணவும் சிறப்பாக இருந்தது. (இதுவரை 50 முறைக்கு மேல் ஊட்டி போயிருக்கிறேன். ஓரிரு முறை சாம்பார் சாப்பிட்டு உடல் நலம் குன்றியதால் ஊட்டி சென்றாலே சாம்பாரை தவிர்த்த நான் குருகுலத்தில் வயிறார சாப்பிட்ட தவறால் மதிய அமர்வுகளில் தூக்கத்தைத் தவிர்க்க சிறிது போராட வேண்டியிருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!).

அடுத்த நாள் காலை ராமாயணம் முடிவுற்றது. பிறகு காளிதாசரின் ரகுவம்சம் பற்றிய அமர்வு தொடங்கியது. அதைப் பற்றியும் மூன்றாம் நாள் இலியட் காவியத்தைப் பற்றியும், இரண்டாம் நாள் இரவு கண்டு களித்த கதகளி நடனத்தில் நான் அறிந்து கொண்ட பல செய்திகளையும், மூன்றாம் நாள் நாஞ்சிலோடு கலந்துரையாடலில் நான் எழுப்பிய கேள்விகளைப் பற்றியும் இனி வரும் பகுதிகளில் பார்க்கலாம்.

ஒரே ஒரு விஷயம்.

நாஞ்சிலாரை சந்திக்கும்போது அவரிடம் அபத்தமாக ஏதும் கேட்டு அவரது நேரத்தை வீணாக்கக் கூடாது என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் அவரிடம் நான் அந்த அபத்தமான கேள்வியைக் கேட்கவும் செய்தேன்-

"இத்தனை காலமாக சிறுகதைகள் எழுதி வரும் தங்களுக்கு முதன்முதலில் படைக்க வேண்டும் என்று எண்ணத் தூண்டுகோலாக இருந்தவர்/ சூழ்நிலை எது என்று கூற முடியுமா?"

அதற்கு அவர் பொறுமையாக அழகாக கூறிய காரணம்... ப்ளீஸ் கொஞ்சம் காத்திருங்கள்.
.
.
Related Posts Plugin for WordPress, Blogger...