May 8, 2013

தமிழிணைய ஸினிமா விமர்ஸகன்

அதாகப்பட்டது....

சென்ற மாதத்தில் பொழுதுபோகாதவோர் வெள்ளிக்கிழமை மதியம் அலுவலக நண்பர் தரணி ”கேடி பில்லா கில்லாடி ரங்கா” சினிமாவுக்குப் போகலாம் என்றழைத்தார்.

“அய்யீய... வேணாம் நண்பரே! மொக்கப் படமாம் அது. கலீஜாக் கீதாமில்ல”, என்றவனை.... “அட சர்தான் சும்மா வாய்யா!”

”என்னய்யா நீர். படம் மொத்தமும் டல்லாமய்யா. ஒன்னியுமே இல்லியாமே. போட்ட சோத்தையே போட்டு மொக்கப் போடறாங்களாமய்யா?”

”யாரு சொன்னா?”

“அட! எனக்கு தமிழ் இணையத்துல, ஃபேஸ்புக்குல, ட்விட்டர்ல அம்பதாயிரம் பேரைத் தெரியுமய்யா. அவங்கள்ல நாப்பத்தெட்டாயிரம் பேரு இத்தத்தான சொன்னாங்க”

“அவிங்க கெடக்காங்க. நான் உன் நண்பேன் கூப்பிடறேன் வா...”

“இல்ல சாமி.... என் இணைய நண்பர்கள் என் இதயம் மாதிரி...”

டேய், நான் உன் கிட்னி மாதிரின்னு வெச்சிக்கோ வாடா....

‘இருந்தாலும்....

”ய்ய்யோவ்வ்வ் சுறா, மாற்றான், இந்திரலோக அழகப்பன், தாண்டவம் மெர்ஸான படத்தயெல்லாம் தேட்டர்ல பாக்கலியா நீ? இத்தயும் எனக்காகப் பாரு வா” ”என தரதரவென என்னைக் காரோட்டச் சொல்லி இழுத்துச் சென்றார்.

அட! படம் பரவால்லீங்க. பாக்கறாப்லதான் இருந்துச்சி. தொண்ணூறுகளில் வி.சேகர் எடுப்பாரே, அதுபோல இன்றைய ட்ரெண்டிற்கு இருந்துச்சி. இணைய அன்பர்கள் போட்டுப் புரட்டிய அளவிற்கெல்லாம் மோசமில்லை.

ஓகே!

அதற்கு அடுத்த வாரம். அதே போல வெள்ளிக்கெளமை.

“சாமி, சென்னையில் ஒருநாள்ன்னு ஒரு படம் வந்திருக்காம். ஷோக்கான படமாம் போங்க. டமில் இணைய மகாசனங்களெல்லா  அந்த படத்தத் தூக்கி கொண்டாடோ கொண்டாடோன்னு கொண்டாடுது. ஸிப்ட்டு முடிஞ்சதும் மொதோ வேலையா அந்தப் படம் ஆடற தேட்டர்ல போயி குந்திக்கறோம். ஓகேவா?  இந்த தபா நான் தரணியைத் தரதரவென காரில் தூக்கிப் போட்டுக்கொண்டு இஸ்த்துக்கினு போனேன்.

நம்ம தரணி ஒரு ஸினிமா ஸ்னேஹர். கூப்ட்ட கொரலுக்கு ஓடி வந்திடுவார்.

தமிழ் இணையத்தில் இந்தப் படத்தை ஹாலிவுட் படம், அப்படி இப்படி, டோண்ட் மிஸ், தமிழ் சினிமாவின் மைல்கல் என்றெல்லாம் சொல்லியிருந்தார்கள். இத்தை மிஸ் பண்ணினால் உம்மாச்சி கண்ணைக் குத்திரும், கும்மாச்சி கன்னைத் தூக்கிரும் என்றெல்லாம் மிரட்டல்கள் வேறு.

அப்படிப்பட்டவொரு படத்தை மிஸ் பண்ணலாமா? அந்தப் படத்தையும் பார்த்தோம். 

படத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால்....

அதாவது....  அதுவந்து....  ம்ம்ம்ம்ம்....  எப்படி சொல்ல..... ஆஆஆஆஆங்ங்ங்ங்ங்......  அதாகப்பட்டது..... எனக்கு அந்தப் படம் புடிக்கலீங்க.

“என்னாது? அந்தப் படம் புடிக்கலியா? டேய்! என்னா சூப்பர் படம் அது. எவ்ளோ சூப்பரா எட்த்துருக்காங்க”, என்று டால்பி எஃபெக்டில் பக்கவாட்டில் யாரோ குரல் தருகிறார்களோ?

”யோவ்.... படம் நல்லா இல்லைன்னா சொன்னேன். எனக்குப் புடிக்கலைன்னுதானேய்யா சொன்னேன்.”

”&**&^%&&&! உனக்கெல்லாம் எவண்டா ரசனையப் படைச்சான்”

“எக்ஸ்க்யூஸ்மீ.... நீங்க யாருன்னு தெரிஞ்சிக்கலாமா?”

“டேய்.... அந்த நாப்பத்தியெட்டாயிரத்துல நானும் ஒருத்தண்டா... மூஞ்சி மறந்து போச்சா?”

“ஓ! அவரா நீங்க. கொஞ்சம் கிட்ட வாங்க...”

“என்னாது..... அங்கயே இருந்து சொல்லு.....”

“இல்ல பயப்படாம வாங்க. ஒண்ணும் பண்ணிடமாட்டேன்”

“ம்ம்ம்ம்... வந்தாச்சு. இப்ப சொல்லு”

“உன்னத்தாண்டா ரொம்ப நாளா தேடினுருந்தேன்”

பளார்.... டமார்..... படால்.... பொளேர்.....கும்ஹ்ஹைக்.... கும்ஹ்ஹைக்.... டிஷ்யூம்....டிஷ்யூம்..... ஓடிப்போயிரு படவா!

May 7, 2013

வேறென்ன வேணும்; நீ போதுமே!

அறுபத்து நான்கு வார்த்தை அற்புதம்

தமிழ்த் திரைப்பாடல்களில், துக்கடாப் பாடலாக இல்லாமல் ஒரு பல்லவி, இரண்டு சரணங்கள் கொண்டு வரும் முழுப்பாடல்களில், மிகவும் குறைந்தபட்ச வார்த்தைகளைக் கொண்டு படைக்கப்பட்ட பாடல் எதுவாயிருக்கும்? 

பழைய திரைப்படப் பாடல்களில் இப்படி நிறைய இருக்கக்கூடும். என்னைவிடப் பழையவர்கள் யாரேனும் அந்த உதாரணங்களை பின்னூட்டத்தில் கூறலாம், ப்ளீஸ்!

நான் அறிந்தவரையில் ஹிந்தியில் சல்மான் நடித்த தேரே நாம் திரைப்படத்தில் (தமிழ் “சேது”வின் ஹிந்திப் பதிப்பு) வரும் “தும் ஸே மில்னா” பாடல் மிகக்குறைவான வார்த்தைகளில் உருவான ஒன்று. ஐம்பது வார்த்தைகளுக்கு சற்றே குறைவாக, அல்லது சற்றே அதிகமான வார்த்தைகள் கொண்ட பாடல். ஹிந்தியில் எனக்கு பந்த்ரா (பதினைந்து) வரைதான் எண்ணத் தெரியும் என்பதால் சரியான எண்ணிக்கையைக் கூறமுடியவில்லை. முஜே மாஃப் கீ ஜியே!

கடல் படத்தின் “மூங்கில் தோட்டம்” நானறிந்த மிகச் சிறிய தமிழ்த் திரைப்ப்பாடல். அறுபத்து நான்கே வார்த்தைகள்,  மிகவும் எளிமையான கற்பனை. சிக்கலில்லாத நேரடிக் கவிதை... ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் “அற்புதம்”.






"வேறென்ன வேணும்; நீ போதுமே!” என்பதுதான் பாட்டின் “தீம்”. இதைச் சுற்றித்தான் பாட்டு பின்னப்பட்டிருக்கிறது.

எனக்கு ரொம்பவும் பிடித்தது அசத்தலான அந்த இரண்டாம் சரணம்...
மரங்கள் நடுங்கும் மார்கழி இருக்க,
ரத்தம் உறையும் குளிரும் இருக்க,
உஷ்ணம் யாசிக்கும் உடலும் இருக்க,
ஒத்த போர்வையில இருவரும் இருக்க..
இது போதும் எனக்கு.. இது போதுமே...
வேறென்ன வேணும்?.. நீ போதுமே..
பாடலின் ஒட்டுமொத்த மென்மையை பாடலின் பியானோ ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறார் ரஹ்மான். அவர் நெய்த பொருளின் வண்ணத்தை வைரமுத்து பார்த்துக் கொள்கிறார் என்றால், வடிவமைப்பை அபய் & ஹரிணி கவனிக்கிறார்கள்.

அபய் ஜோத்பூர்கர், ஹரிணி’யின் பொருத்தமான அழகான குரல்கள், வைரமுத்துவின் மயக்கும் வரிகள், ரஹ்மானின் சொக்க வைக்கும் ட்யூன்....

“இதுபோதும் எனக்கு இதுபோதுமே! வேறென்ன வேணும்?”

May 6, 2013

#antiCSK


ஐபிஎல்’ல் எந்த அணி தோற்றாலும் ஜெயித்தாலும் கவலைப்படாத இந்திய சமூகம், சென்னை ஆடவந்தால் ஆட்டமாய் ஆடும். அழுகுணி, ஃபிக்சிங், லாயக்கற்ற தோனி, எக்சட்ரா, எஸ்கட்ரா என்று இணையத்தில் பாடிய வண்ணம் ஒரு கூட்டம். 
தமிழனுக்கு எப்போதும் தனிச்சிறப்பு உண்டு. இதே விஷயத்தை தமிழனின் தனி பாணியில் நாகரிகமாக ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் திட்டுவார்கள். ஒரு உன்னத உதாரணம் கீழே உண்டு.
நேற்றைக்கு, இன்றைக்கு நம் கண்ணில் பட்ட சில அர்ச்சனைகளை வரலாறு முக்கியம் என்பதால் இங்கே பதிந்து வைக்கிறேன்!
இது சாம்பிள்தான். ட்விட்டரில் #antiCSK என்று தேடுங்கள். ஈனோ வாங்கித் தின்னக் காசில்லாத அவர்களது வயிற்றெரிச்சல் வார்த்தைகள் கொட்டோ கொட்டோவெனக் கொட்டும். அவற்றைக் கண்டு களித்து இன்புறலாம். 
அது ஒரு தனி சுகம் பாருங்க!

ஆண்டியார்கள் செய்யும் அலப்பறை ஒருபக்கம் என்றால் அ’ஆண்டியார்களின் காமெடி இன்னொருபுறம். அதானுங்க, சென்னை லவ்வர்ஸ் செய்யும் அலப்பறை. அவற்றுக்கான இரண்டு சாம்பிள்கள் கடைசியாக இணைக்கப்பட்டுள்ள இரு புகைப்படங்களாக...

என்ஸாய்!
  1. 79! hahahaha ! in yo face CSK bitches! #antiCSK
  2. Chennai Super Kings is the Congress of IPL. Loathed by everyone. Rightly so. #AntiCsk #MIvsCSK
  3. 79 all out. This is embarrassing :p I mean the gully teams of Mumbai can perform better than this :) #antiCSK
  4. #Copy ஹீரோவ அடிவாங்க வெக்கறது ஸ்கிரிப்ட்டுக்கு நல்லாதான் இருக்கும்! அதுக்காக பிஞ்ச செருப்புல பீயத்தொட்டு அடிவாங்கவெச்சுட்டார் சீனுமாமா!
  5. இன்றைய சென்னையின் தோல்வி நாளை சில மனச்சங்கடங்களை தரலாம். #ஆபிஸ் அக்கப்போறுகள்
  6. @anticsk Let the party begin...my roomie a csk supporter is missing since 7 o clock
  7. Without Gayle RCB is nothing, without Warner DD is nothing, same way without fixing #CSK is nothing. @anticsk #AntiCsk #IPL

May 5, 2013

திருவக்கரை

மனைவியாரின் வீட்டில் நிரம்ப நாள்களாகவே, ”திண்டிவனம் பக்கத்துல ஒரு கோயில் இருக்கு; ஒரு நேர்த்தி உங்களுக்காக இருக்கு, போகணும்” என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நம்ம ஆல்ட்டோ கார் வாங்கினதிலிருந்து ஏதும் நீண்ட பயணம் எதையும் நாமும் மேற்கொள்ளவில்லை. “எதாவது லாங் ரைட் போனாதான் ஓய் எஞ்சின் கொஞ்சம் செட் ஆகி, அது மைலேஜை ஒரு லெவலுக்கு செட் ஆக்கும்”, என்று எண்திசைகளினின்றும் வந்த அறிவுரைகள் நினைவுக்கு வர, தை மாத  மதியப் பொழுதொன்றில் தடாலடியாக திண்டிவனம் கோயிலுக்குப் புறப்பட்டோம்.

மாமனாருக்கு ஃபோன் அடித்து, “அது எந்தூரு மாமா?”

“திண்டிவனம் பக்கத்துல திருவக்கரை”

“திண்டிவனத்துலருந்து எவ்ளோ தூரம்”

“தெரியலை மாப்பிள்ளை. அங்கபோயி கேட்டுட்டுதான் போகணும்”

கூகுளிருக்கக் கவலையேன் என கணினியை ஆன் மாடினேன். “என்னங்க, அந்த மவுஸ் நேத்து கீழ விழுந்து லைட்டே எரிய மாட்டெனுதுங்க”, பின்னணிக் குரலினார் மனைவியார். எலி செத்த கணினியில் அந்தூரு எந்தூரு என்று சரிவர கூகுள முடியாமல், ஆனது ஆகட்டும், “வழியிருக்கு வாயிலே”, என்று இறங்கினோம். 

இந்தமுறையும் அச்சரப்பாக்கம் கணேஷ்பவனை சரியாக லொகேட் மாட முடியவில்லை. கோகுலுக்கு ஃபோன் செய்தால் ”எத்தினி தபாடா சொல்றது உனுக்கு”, என்று கெட்ட வார்த்தையில் வைவான் மனிதன். வேண்டாமென ஃபேஸ்பாமிவிட்டு அச்சரப்பக்கத்தைத் தாண்டினோம். 

அதிஷா சமீபத்தில் எழுதியிருந்த பதிவில் நம் ஜிஎஸ்டி தேசிய நெடுஞ்சாலை எங்கும் பத்து கிலோமீட்டருக்கு ஒன்று என்று பரப்பப்பட்டிருக்கும் “கும்பகோணம் டிகிரி காபிக் கடைகள்” பற்றிக் குறிப்பிட்டிருந்தார். காபியும் சுமார்தான் என்பது அவர் விமர்சனம். ஆனது ஆகட்டும் எம்ப்ளது கிலோமீட்டர் ஓட்டினதில் காபி காபி என்று அரற்றிய நாக்கிற்காக கிடைப்பதைக் குடிப்போம் என்று அச்சரப்பாக்கம் தாண்டினதும் வந்த ”நைண்டிநைன் டிகிரி காபி”  என்ற கும்பகோணம் அக்மார்க் பலகை பொறித்த கடையில் நிறுத்தினோம்.

பாரம்பரிய வாடையில் பித்தளை டம்ளர், டபராவில் வைத்து காபி தந்தார்கள். டிகாஷனும் பெரீஈஈஈஈஸாக நிறுத்தி வைத்த பித்தளை காபி ஃபில்டரில் வைத்து இறக்குகிறார்கள். “என்னாங்கடே படம் வேண்டிக் கெடக்கு. டேஸ்டுதான் முக்கியம்டே”, என யோசித்தவாரே குடித்தோம். அடடே! நன்றாகவே அக்மார்க் டிகிரி காபியாக இருந்தது. 

அதிஷா குறிப்பிட்டபடி வழிநெடூக கலர்கலர் கொடிகட்டின ரியல் எஸ்டேட் யாவாரிகளும் தென்பட்டார்கள். “இங்கல்லாம் யாரு வந்து லேண்ட் வாங்குவா” என்றும் .... “இன்னும் கொஞ்ச வருஷத்துல என்னாமா அப்ரீஷியேட் ஆகப் போவுது பாரு”, என்றும் வண்டியில் கொஞ்ச நேரம் சுவாரசிய விவாதம் நடந்தது.

காபி குடித்த தெம்பில்தான் நம்ம பாக்கெட்டில் சாம்சங் கேலக்ஸி அண்ட்ராய்டரார் ஒருத்தர் இருக்கிறார் என்று நினைவுக்கு வந்தது. அவர் ஏதும் உதவுகிறாரா என்று நோண்டினதில், சரியாக இங்கிருந்து ஐம்பத்தி மூணு கிலோமீட்டரில் திருவக்கரை இருக்கு என்று வழிகாட்டி மேப் எல்லாம் போட்டுக் காட்டி அருள்பாலினார்.  

திண்டிவனம் பைபாஸ் நுழையுமுன் எதற்கும் சந்தேகம் வேண்டாம் என்று வண்டியை நிறுத்தி ஒரு ஷேர் ஆட்டோ ட்ரைவரிடம் வழிகேட்டதில், ஸ்ட்ரைட்டா ஊருள்ள நொழையாம பைபாஸ்லயே போங்க, பத்து கிலோமீட்டர் தாண்டினா கூட்டேரிப்பட்டு ஜங்ஸன் வரும், அங்க லெஃப்டு எடுக்கணும். அங்கருந்து மயிலம் வழியா பத்து கிலோமீட்டர் போனா ரைட் ஸைட்ல திருவக்கரை கோயிலுக்கு பெரிய வளைவு வெச்சு வழி போவும் அங்க ரைட் திரும்புங்க. அங்கருந்து அஞ்சு கிலோமீட்டர்ல கோயில். அடடே! இவரல்லவோ கூகுளாண்டவர் என்று நினைத்துக் கொண்டேன்.


ஆட்டோ அன்பர் சொன்னபடி வடம்பிடித்ததில் மேலும் முப்பது நிமிடங்களில் கோயிலை அடைந்தோம்.


இரண்டாயிரம் வருடங்கள் பழமையான கோயில் இது என்கிறார்கள். இந்தக் கோயிலுக்கு நிறைய சிறப்புகளையும் சொல்கிறார்கள்.

தொண்டை மண்டலத்தில் (காஞ்சியைத் தலைநகராகக் கொண்ட தமிழகத்தின் வடபகுதி) முப்பத்தியிரண்டு சிவத்தலங்கள் குறித்து தேவாரத்தில் குறிப்புகள் உள்ளன. அந்த முப்பத்தியிரண்டில் இந்தத் தலம் முப்பதாவது தலம்.

தேவர்களைத் துன்புறுத்திய வக்ராசுரனை பெருமாள் வதம் செய்ய அவன் தங்கையை காளி வதம் செய்கிறாள். வதம் செய்யும் நேரத்தில் வக்ராசுரனின் தங்கை கர்ப்பவதியாக இருக்க, அந்தக் குழந்தையைக் கொல்லாமல் தன் காதுகளுக்குக் குண்டலமாக அணிந்து இங்கேயே அமர்கிறாள் காளி.



இங்கே சந்திர மௌலீஸ்வரர் முக வடிவு கொண்டு காட்சி தருகிறார். அதாவது, பொதுவாக சிவன் சன்னதியில் லிங்க வடிவையே நாம் காண்போம். இங்கே கிழக்கு, வடக்கு, தெற்கு என்று மூன்று திசைகளிலும் மூன்று முகங்கள் கொண்டு காட்சி தருகிறார் பெருமான். நேபாளத்திற்குப் பிறகு இத்தகைய தோற்றம் இங்கேதான் உண்டு என்று குருக்கள் சொன்னார்.

இது நம்ம க்ளிக்

திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் போன்றவர்களால் பாடல் பெற்ற தலம் இது.

சனீஸ்வரர் தெற்கு நோக்கி காக வாகனத்துடன் காட்சி தருகிறார்.

சிவன் கோயிலுக்குள்ளே வரதராஜ பெருமாளுக்கும் தனியே பெரிய சன்னதி உண்டு.

மூல்வர், நந்தி, கொடிக்கம்பம் - இவை மூன்றும் நேர்க்கோட்டில் அமைந்தவை அல்ல. இது ஒரு வக்ரம் என்கிறார்கள், ஆனால் அதன் தாத்பர்யம் புரியவில்லை.



கோயிலின் பின்னணியில் இந்த மலை தென்பட்டது. உடைந்த கற்குவியல்களாலான ஒரு மலை. அதென்ன என்று விசாரித்தபோதுதான் தெரிந்தது அது பக்கத்தில் கல்குவாரிகளில் உடைபடும் பெரிய கற்களிலிருந்து சிதறும் சிறிய (தேவையற்ற) கற்களின் குவியல் என்று. கர்மசிரத்தையாக அது ஒரு மலையாக உருவாகி நிற்கிறது.

பாலகுமாரனின் “கவிழ்ந்த காணிக்கை” கதையில் வரும் கவிழ்ந்த நந்தி இந்த ஊரின் எல்லையில்தான் எங்கோ இருக்கிறதாம். அந்தத் தகவல் முன்னமே நினைவில் இருந்திருந்தால் அங்கேயும் ஒரு விசிட் அடித்திருக்கலாம்.

எனிவே, அடுத்தமுறை சந்திரமௌலீஸ்வரர் கூப்பிடாமலா போவார்!


Related Posts Plugin for WordPress, Blogger...