Apr 22, 2013

அறம் - டயல் ஃபார் புக்ஸ்


இன்று மெயிலில் வந்தது!

இத்தனை விவரங்களுடன் ஒரு புத்தக விளம்பரத்தை ”டயல் ஃபார் புக்ஸ்” இதற்கு முன் அனுப்பிய நினைவில்லை. 

ஜெமோவுக்கு இன்று பிறந்தநாளாமே! 

அடடே! ஹேப்பி பர்த்டே ஜெமோ!


ஜெயமோகன் எழுதிய அறம் சிறுகதைத் தொகுப்பு

அறம், ஜெயமோகன், ரூ 250
"இந்தவருடம் ஜனவரியில் திடீரென்று எழுந்த ஒரு மன எழுச்சியைத் தொடர்ந்து பன்னிரண்டு கதைகள் எழுதினேன். முதல் கதை ‘அறம்’. அதுவே அத்தனை கதைகளுக்கும் சாராம்சமான கரு. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு இலக்கியத்தின் சாராம்சம் என்றால் என்ன என்று நான் கேரளப் பெரும்படைப்பாளியான வைக்கம் முகமது பஷீரிடம் கேட்டேன்.  ‘நீதியுணர்ச்சி’ என்று அவர் சற்றும் தயங்காமல் பதில் சொன்னார். இருபத்தைந்தாண்டுகள் பல்லாயிரம் பக்கங்கள் எழுதி நானும் அவர் அருகே வந்து சேர்ந்துவிட்டேன் என்று தோன்றியது.

அறம், அதுவே நம்மை எல்லாவகை இழிவுகளில் இருந்தும் வீழ்ச்சிகளில் இருந்தும் மீட்டு இங்கே கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. மானுடநாகரீகமாக நாமறிந்தவை எல்லாமே அந்த மானுட அறத்தின் சிருஷ்டிகளே. மனித உடலின் பரிணாமத்தில் கைகளும் கண்களும் எப்படி உருவாகி வந்தனவோ அதைப்போல மானுடஅகத்தில் அறம் உருவாகி வந்துள்ளது என நான் நினைக்கிறேன். அது மனிதனை வழிநடத்திச்செல்கிறதென நம்புகிறேன். இத்தனை வாழ்க்கைப்போட்டியின் குரூரத்தின் நடுவிலும் அறம் நன்னீர் ஊற்றாகப் பொங்கும் மனத்துடன் ஊருணியாக அமைந்த மனிதர்களை நாம் கண்டுகொண்டுதான் இருக்கிறோம். அறம் வரிசையின் எல்லாக் கதைகளும் அத்தகைய உண்மை மனிதர்களைப்பற்றியவை."
- ஜெயமோகன் (2011)
 
கல்பற்றா நாராயணன் - அறம் கதை பற்றி...
 
 

”பாஷாபோஷினியில் வெளியான அறம் கதை சமீபத்தில் மலையாள இலக்கிய வாசகர்களை அதிரச்செய்த, மிகவிரிவான விவாதத்தை உருவாக்கிய கதை. மலையாளிக்கு அக்கதையில் இருந்து கிடைப்பது மொழிக்கு அப்பாற்பட்ட மானுட அம்சம். ஒட்டுமொத்தக் கதையை முதலில் வாசிக்கிறோம். ஒவ்வொரு வரியிலும் வெளியாகும் கவித்துவத்தை மீண்டும் வாசிக்கவேண்டும். ‘இருளின் பிரார்த்தனை அல்லவா ஒளி’ என்ற வரியைப்போல ‘புலி காலெடுத்து வைப்பது போன்ற பேச்சு’ போன்ற வரியைப்போல கவிதையால் நிறைந்த கதை அது.” 
- கல்பற்றா நாராயணன்

அறம் பற்றி கமல் ஹாசன் - நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில்...
Kamal

"படிக்கும்போது வரி தெரியாமல் கண்கலங்கிய புத்தகம். உண்மை மனிதர்களின் கதை. அறம் என்னும் இச்சிறுகதைத் தொகுப்பை அனைவரும் படிக்கவேண்டும். ஜெயமோகன் போன்றவர்கள் சினிமாவுக்கு வந்ததில் எனக்கு மகிழ்ச்சி."
- கமல் ஹாசன்.
கமல் ஹாசன் பேசியதன் காணொளியைப் பார்க்க:http://www.youtube.com/watch?v=TLqVMxlFxck

வாசகர் கருத்து...

நூறு நாற்காலிகள் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து இன்னும் விலகமுடியாத வலியோடு எழுதுகிறேன். ஒரு எழுத்தின் மூலமாக இத்தனை வலிமிகுந்த தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை இன்றுதான் உணர்கிறேன். கிராமத்தில் இருந்து முதல் தலைமுறையாக படித்து சமூகத்தில் ஒரு சக்தி மிகுந்த ஆளாக நகரத்தில் வாழ்ந்து வரும் ஆதிக்க சாதி மனிதர்களும், கிராமத்தில் வாழும் பெற்றோர்களால் நீங்கள் குறிப்பிட்ட சில சங்கடங்களை சந்தித்தே வருகின்றனர். ஆனால் “நூறு நாற்காலிகள்” வரும் “காப்பன்” நிலை மனிதனாக பிறந்த எவருக்குமே வரவேகூடாத அனுபவங்கள். தாழ்த்தப்பட்டவர்கள் சமூகத்தின் அதிகாரவர்க்கத்தில் உயர்ந்தாலும் அவர்கள் அதிகாரம் செல்லாது என்பதை ஒவ்வொரு வரியிலும் தெளிவாக்கி இருக்கிறீர்கள். நீங்கள் குறிப்பிட்டதை போல ஒரு நாற்காலி என்பது நூறு நாற்காலிகள் என்று ஆகும்போது நிச்சயம் நல்ல மாற்றம்வரும்.

- கிருஷ்ணகுமார், சவுதி அரேபியா
 
வாசகர் கருத்து
”வணங்கான் படித்தேன்.ஒரு சமூக அவலத்தை எப்படி எதிர்கொண்டு வெளி வருவது என்ற காந்தியக் கோட்பாட்டின் உதாரணமாக் விளங்குகிறது. ”அநீதிக்கு அடிமைப்படும் மக்கள் உண்மையில் அநீதியுடன் சமரசம் செய்து கொண்டவர்கள். உங்கள் குலத்தில் மிகப் பெரும்பாலானவர்கள் அந்த வாழ்வுக்குப் பதிலாக மரணத்தைத் தேர்வு செய்திருந்தால் ஒன்று உங்கள் குலம் அழிந்திருக்கும்,இல்லை வென்றிருக்கும்”- பின் தொடரும் நிழலின் குரலில் பாபு (காந்தி)வின் குரலாக ஒலித்த உங்கள் மகத்தான வரிகள் நினைவில் எதிரொலிக்கின்றன.”
- ராமானுஜம்
 
நாஞ்சில் நாடன் - அறம் பற்றி...
 

”தாயார் பாதம், மத்துறு தயிர் இரண்டுமே நுண்மையான மரபிலக்கிய சுட்டிகள் கொண்ட கதைகள், மரபிலிருந்து வாசித்தெடுக்கவேண்டிய பல உள்ளடுக்குக்ள் கொண்டவை.  தமிழ் மொழியின் இலக்கியச் சாதனைகளில் ஒன்று இந்த தொகுதி.” 

-- நாஞ்சில் நாடன்.


வாசகர் கருத்து...

”யானை டாக்டர் , மத்துறு தயிர் , மற்றும் சோற்று கணக்கு மூன்று கதைகளும் இரண்டு வாரங்களாக எனது சிந்தனையிலும் உணர்விலேயும் மத்துக் கொண்டு கடைவது போலவே இருக்கிறது. டாக்டர் கே , கேத்தேள் சாஹிப், பேராசிரியர், போன்ற மனிதர்கள் எங்காவது தென் படுகிறார்களா அல்லது இந்த முப்பது வருஷ வாழ்க்கையில எங்கேயாவது சந்தித்திருக்கின்றோமா என்று மனம் தேடிக் கொண்டே இருக்கின்றது ”

- கேசவன்

யானை பற்றி அடுத்தடுத்து இரண்டு கதைகள்… வணங்கான் & யானை டாக்டர். அதென்னவோ யானை மேல் ஏறுவதென்பது அலாதிதான்.  யானை டாக்டரில் பீர்பாட்டில்கள் எப்படி அவற்றைக் கொல்கின்றன என்பதைப் படிக்கப்படிக்க என்னவோ செய்கிறது. உடலெங்கும் புழுக்கள் நெளிவதைப் போல. பீரும் புளித்தால் புழு நெளியும். புழு நெளியும் மூளைகள்தான், பீர்ப்புட்டிகளைக் காடுகளில் வீசிச் செல்கின்றன.

- க.சுதாகர்

 
அறம் புத்தகத்தை ஃபோன் மூலம் வாங்க - டயல் ஃபார் புக்ஸ் - 94459 01234

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-230-5.html
 


”அறம் கதை முழுக்க அந்த எழுத்தாளர் கெஞ்சியபடி பணத்துக்காக காத்து நிற்கிறார். சட்டென்று கதைநேர்மாறாக மாறி அந்த ஆச்சி பணத்தை கொடுப்பதற்காக காத்து அமர்கிறாள். அந்த திருப்பத்தின் ஆச்சரியமே அந்தக்கதையின் உச்சம்.”
- மிஷ்கின், இயக்குநர்.

Dial For Books | 94459 01234 | 9445 97977.

Apr 7, 2013

வெள்ளாட்டு வாழ்க்கைமுன்னோக்கிச்
சுற்றியது
முன்சக்கரம்.
இலக்கணமறியால்
தானும் முன் நோக்கியே
சுழன்றது

பின் சக்கரம்

முன்னவரையும்
பின்னவரையுமன்றி
வேறாரையுமறியா
வண்டியும்
முன் நோக்கியே
நகர்ந்தது


Apr 6, 2013

சமுத்ராமானுஜம்


ஸ்ரீ ரங்கத்தில் இருக்கும் ராமானுஜரின் 'தானான திருமேனி' அவரது mummify செய்யப்பட அசல் திருமேனி என்று சொல்கிறார்கள். இது எந்த அளவு உண்மை?  < கலைடாஸ்கோப்-87 >


இணையத்தில் யார் எழுதுவதை வாசித்தாலும், வாசிக்க மறந்தாலும் சமுத்ரா எழுதுவதை வாசிக்க நான் மறப்பதில்லை, தவிர்ப்பதில்லை. சமுத்ராவின் புதிய பதிவு ஒன்று கூகுள் ரீடரில் மினுக்குவதைக் கண்டால் துள்ளிக்குதியாட்டத்துடன் படிக்கத் தொடங்கிவிடுகிறேன். காரணம்? சமுத்ராவைத் தொடர்ந்து வாசிப்பவர்க்கே இது புரியும்.

சமீபத்திய கலைடாஸ்கோப்’பில் ராமானுஜ காவியம் படித்த சங்கதியை எழுதியிருக்கிறார் சமுத்ரா. ஆம்னிபஸ்சுக்கு சத்யா எழுதிய ராமானுஜ காவிய அறிமுகம் வாசித்துவிட்டு ஆன்லைனில் ஆர்டர் பண்ணி வாங்கிப் போட்ட ராமானுஜ காவியம் அலமாரியில் தூங்கிக் கொண்டிருக்கிறது. சமுத்ராவை வாசித்த பிறகு அதை எடுத்துப் புரட்ட வேண்டும் என உடனடி உந்துதல் தோன்றுகிறது. வாசித்தால் என் அனுபவத்தையும் பகிர்கிறேன்.

சென்றவருடம் குடும்ப சகிதம் ஸ்ரீரங்கம் சென்றிருந்தபோது ஸ்ரீரங்கர் கோயிலில் ராமானுஜர் சன்னதிக்குப் போனோம்.

”“ராமானுஜரை நல்லாப் பாரு. ஒரு ஸ்பெஷாலிட்டி உண்டு”, உள்ளே நுழையும்போதே அம்மா சொன்னார்.

“என்னது அது?”

“தீபம் காட்டுவாங்க. நல்லா கவனி. நீயே கண்டுபிடி”

குருக்கள்… அயாம் சாரி…. பட்டர் தீபம் காட்டினார். எவ்வளவு பார்த்தும் ஒன்றும் பிடிபடவில்லை.

“தெரியலையே”

“நல்லாப் பாரு”

“ப்ச்”, ஆயாசம்தான் மிஞ்சியது. சரியாகப் பார்த்து முடிக்குமுன் தீபாராதனை முடித்து தீபம் எங்களை நோக்கி வந்துவிட்டது.

“என்னம்மா அது, சொல்லலாமில்ல?”

“ராமானுஜர் கண்ணுல பாருடா ஒரு ஜீவன் இருக்கும்”

”இதை மொதல்லயே சொல்லக்கூடாதா. சரியா பாத்திருப்பேனே. சரி, வெயிட் மாடி. அடுத்த செட் மக்கள் வரும்போது தீபாராதனை பார்ப்போம்”

அடுத்த கூட்டம் வந்து சேர, அடுத்த தீபாராதனைக்குத் தயாரானார் ராமானுஜர். இப்போது கண்களைக் கவனித்தேன். ஓ! என்ன உயிரோட்டமான கண்கள்! ஒளிரும் உயிருள்ள கண்கள் அவை. சிலைவடிவிலான தெய்வத்தின் கண்களில் ஏது ஒளியும் பிரகாசமும்?

பட்டரையே கேட்டேன், “ஸ்வாமி, ராமானுஜர் கண்கள் ஜ்வலிக்கறதே உயிரோட்டமா?”, ஏதும் வியாக்கியானம் தரப்போகிறார் என பிடித்துப் பருக ஏதுவாய் சற்றே பவ்யமாய் நின்று கொண்டேன்.

“அப்படியா? அது அவாவா பார்வையையும், மனசையும் பொருத்த விஷயம். உயிரோட்டம் தெரிஞ்சா தெரியறதுன்னு அர்த்தம். தெரியலைன்னா தெரியலை. அவ்வளவுதான்”, என சுருக்கமாக முடித்துக் கொண்டார். நீங்க நகரலாம் என்ற சொல்லாத சொல்லும் அவர் பேசி முடித்த தோரணையில் இருந்தது.

< மீண்டும் இந்தப் பதிவின் முதலிரண்டு வரிகளைப் படித்துக் கொள்ளுங்கள் >

ரி ஜீவன் விஷயத்தை விடுங்கள். சமுத்ராவின் ராமானுஜ சாப்டரில் அடுத்த விஷயத்தைப் பார்ப்போம்.

ராமானுஜ வரலாறில் சமுத்ரா சுட்டும் (கீழ்வரும்) இந்தக் கதையில் வரதாழ்வான் கொண்ட நேர்மை இந்தக் கலியுகத்தில் சாத்தியம்தானா என்று நீங்கள் யோசியுங்களேன்.

வரதாழ்வான் என்னும் பக்தன் ஒருவன். அவன் இல்லாத நேரம் பார்த்து அவன் அகத்துக்கு வந்துவிடுகிறார் ராமானுஜர். வீட்டிலோ பரம தரித்திரம். வரதாழ்வான் மனைவி உடையவரை உபதரிசித்து ஸ்நானம் செய்து வந்ததும் திருவமுது தயாராய் இருக்கும் என்று சொல்லிவிடுகிறாள் . வீட்டில் அரிசி, பருப்பு, புளி மிளகாய், மேகி நூடுல்ஸ்  ஒன்று கிடையாது. ஓடுகிறாள் வணிகன் கடைக்கு...வணிகனுக்கு அவள் மீது ஒரு கண்...'நீ என் வீட்டுக்கு மளிகை சாமான் அனுப்பினால் யதிராஜர் குடற்பசி தீர்ப்பேன்; அப்படியே இன்று இரவு உன்னிடம் வந்து உன் உடற்பசி தீர்ப்பேன்' என்கிறாள். அவனும் வாயெல்லாம் பல்லாய் இளித்து, வேண்டுமட்டும் சாமான் அனுப்புகிறான். அவளும் எதிராஜருக்கு இன்சுவை விருந்து படைக்கிறாள் .வரதாழ்வானும் வீடு திரும்பி ஸ்வாமிகளை சேவிக்கிறான். பிறகு நடந்ததை அறிந்த ராமானுஜர், தன் பிரசாதத்தை வணிகனிடம் கொடுத்து விடும்படி சொல்லி விடைபெறுகிறார்.
அன்று இரவு, வரதாழ்வான் மனைவியை வணிகனின் வீட்டில் விடச் செல்கிறான். பிரசாத்தை உண்டதும் வணிகனுக்கு தன்  கண் முன் சாட்சாத் நாராயணனும் திருமகளும் நிற்பதாகத் தோன்றுகிறது. மனம் மாறும் வணிகன் இனி பரஸ்த்ரீகளை ஏறெடுத்தும் பாரேன் என்று சத்தியம் செய்கிறான்.

இத்தகைய நேர்மைக்கு நிகழ்காலத்தில் நேரடி உதாரணங்கள் தேடவியலாத காலகட்டத்தில் நான் வாழ்வதால் இந்த குறிப்பிட்ட விஷயத்தில் வரதாழ்வான்கள் இருக்கிறார்களா என்பதை நானறியேன். அப்படியே நியாயவான்கள் தப்பித்தவறி இருந்தாலும் கலியுகத்தில் அவர்களுக்கான பட்டம் வேறாக இருக்கும் < சரோஜாதேவி புத்தகக் கதைகள் உங்களுக்கு நினைவுக்கு வந்தால், நீங்கள் சாக்‌ஷாத் கலியுகவாசி என்று அர்த்தம். என் நண்பர் அதைத்தான் எனக்குச் சுட்டினார் >. 

அந்த விஷயத்தில் இல்லை என்றாலும் வரதாழ்வானுக்கு நிகரான நியாயவான்களை நான் நேரில் பார்த்ததுண்டு. ஒரு உதாரணம் நம் பதிவுகளில் அடிக்கடித் தென்படும் ‘குமரகுரு’. ஒரு தர்மத்தைக் கடைபிடிக்க ‘புரைதீர்ந்த’ இன்னொரு அதர்மம் தப்பில்லை என்பார் குமரகுரு. என்ன, அவர் போன்றவர்களை கிறுக்கர்களாக அல்லது முட்டாள்களாக உலகம் வருணிக்கும். They don’t bother about this stupid world, anyway!

வரதாழ்வான் கதையையும் இங்கே மேலே நான் எழுதியிருக்கும் என் கருத்தையும் குமரகுருவிடம் சொன்னதற்கு அவர் கேட்ட கேள்வி: ”Why VARADHAZHVAN’s wife is not appreciated here?”

என்னுது ஆண்புத்தி! வேறென்ன சொல்ல?
Related Posts Plugin for WordPress, Blogger...