Jan 30, 2011

தியாகிகள் தினம்


மகாத்மாவின் நினைவு தினம் என்ற கூகுள் தேடலில் எனக்குக் கிடைத்த அவர் குறித்த எதிர்மறைத் தகவல்கள் அதிர்ச்சியைத் தந்தது. அவை சாதாரண எதிர்வாதங்கள், தர்க்கரீதியான கருத்துகள் எனின் தவறில்லை. ஆனால் அவற்றில் பல உணர்ச்சியின் வேகத்தில் அரைகுறை விவரங்களோடு எழுதப் பட்டவை எனப் படிக்கையிலேயே புரிகிறது. இப்படியும் கூட நம் தேசபிதா குறித்து இணையத்தில் எழுத இவர்களுக்கு எப்படி சுதந்திரம் இருக்கிறது என ஆச்சர்யம் மேலிட்டது. அது சரி, அவர் முன்னின்று பெற்றுத் தந்த சுதந்திரமல்லவா இவர்களை இப்படிப் பேச அனுமதிக்கிறது?

காதலர் தினத்தை அவமதிப்பவர்களை இந்நாடு பழமைவாத பத்தாம் பசலிகளாகவும் காட்டுமிராண்டிகளாகவும் காண்கிறது. ஊடகங்கள் ஒரு படி மேலே போய் அவர்களைத் தீவிரவாதிகள் நிலைக்குக் காட்டுகிறது. ஆனால் தேசபிதாவை அவமதிக்கும் கருத்துக்களுக்கு, அதிலும் அவர் நினைவு நாளிலேயே அவரை அர்ச்சிக்கும் எழுத்துக்களுக்கு இங்கு எதிர்க்கருத்துக்கள் இல்லை. எப்போதாவது யாராவது காங்கிரஸ்காரர் இதை கவனித்துவிட்டு குரல் கொடுத்தால் உண்டு. அதிலும் அவருக்கு அது டெம்ப்ளேட் உத்தியோகம் ஆகிப் போனதால்.


சரி, காந்திக்குத்தான் இந்த நிலை தந்தோம். தியாகிகள் நினைவு தினமாக அனுஷ்டிக்கப்படும் அவர் நினைவு நாளில் தியாகிகள் நினைவாக என்ன செய்தோம்? சத்தியமாக நான் ஒன்றும் செய்யவில்லை முத்தமிழ் தமிழ் இணையக்குழுவில் மதிப்பிற்கு உரிய விசாலம் அம்மா அவர்கள்  எழுதியிருந்த இந்த மடலைப் படிக்கும் வரையில்.

இன்றைய நிலையில் எனக்கு மிகவும் அர்த்தம் பொதிந்ததாகத் தெரிந்த அந்த மடலை  அவர் அனுமதியுடன் அப்படியே வெளியிடுகிறேன்.



நம் நாட்டில் "காதலர் தினம்" வரும் ஒரு மாதம் முன்பாகவே  கொண்டாட்டம் ஆரம்பமாகிவிடுகிறது   கடைகள் எல்லாம் பல பரிசுகளால் நிரம்ப  டிவியில் பல சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்ய எங்கும்"ரொமான்ஸ் "தான் ஆனால்  இந்தத்தியாகிகள் தினம் பலருக்கு ஞாபகம் வராதது ஏனோ ? 

அவர்களை ஞாபகம் வைத்துக்கொண்டு என்ன ஆகப்போகிறது! தியாகிகள்   நாட்டிற்காக உழைத்தார்கள் .நாட்டின் நன்மைக்காகவே வாழ்ந்தார்கள் . அவர்கள் உடலில் தேசபக்தி என்ற இரத்தமே ஓடியது .எத்தனைத்தியாகிகள் ! மனதில் அவர்கள் பெயரைக்கொண்டு வர வால் போல் பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது ,வாழவேண்டிய இளைஞர்கள் கூட தங்கள் மூச்சு எல்லாம் பாரதமாதாவிற்கே என்று தங்களையே அர்ப்பணித்தார்கள்.

கொடிக்காத்த திருப்பூர் குமரனைத்தான் மறக்க முடியுமா? தூக்குத்தண்டனைக்கு கூட பயப்படாமல் வீர மரணம் எய்திய சர்தார் பகத்சிங் ஜி  ராஜகுரு ஜி சுக்தேவ் ஜி நம் சரித்திரத்தில்  அழியா இடம் பெற்றவர்கள் அல்லவா ? தன் குழந்தையும் தன் முதுகில் கட்டிக்கொண்டு குதிரையில் ஏறி வாள் வீசி பல சத்ருக்களை அழித்த ஜான்சிராணி   சரித்திரத்தில் இன்றும்  வைரம் போல் மின்னுகிறாள்.

இன்றைய நிலைமையைப்பார்த்தால் தியாகி என்ற சொல்லே  மறைந்துப்போய் விட்டதோ எனத்தோன்றுகிறது  மஹாத்மாஜியின் நினைவு  நாள் கொஞசம் ஞாபகம் வந்தாலும் தியாகிகள் தினம்  ஞாபகத்திற்கு வருவதில்லை ஒரிரெண்டு டிவி சேனல்களில் காலையில் "சாந்த அஹிம்ஸா   மூர்த்தே " வைஷணவ ஜனதோ " என்ற பாடல்கள் வரும் .

முன்பெல்லாம் பதினோறு  மணிக்கு ஒரு சைரன் ஊத பாரத நாட்டில் மக்கள் ஒரு நிமிடம்  அப்படியே சிலைப்போல் நிற்கும் இடத்தில் நின்று அஞ்சலி செலுத்துவவர்கள் ,சாலையில் ஓடும் வாகனங்களும் அந்த நேரம் நின்றுவிடும்  பள்ளியில் சிறுவர்களும் ஆசிரியர்களுடன் நின்று மௌனம் சாதிப்பார்கள் இன்றைய காலத்தில் இதெல்லாம் காற்றில் பறந்து போய்விட்டது என  நினைக்க மனம் வருத்தமடைகிறது
சுய நலம் அதிகமாக  தியாகச்சிந்தனை எங்கிருந்து வரும் ? தன்னலமில்லாத ஒரு எதிர்ப்பார்ப்புமில்லாத அன்பே தியாகத்திற்கும் வழி காட்டுகிறது, பொருளும் பணமும் மேலும் மேலும் பெருக்க வைத்து தானும் பெருத்து குடும்பத்தையும் வளமாக்கி "வாழ்க வளமுடன்" என்ற ஆசிகள் அங்குப்பலித்து ரௌடிகள் போல் அரசியல் தலைவர்கள் இருக்க மேலே சென்ற தியாகிகள் நிச்சியம்  கண்ணீர் வடிப்பார்கள் அல்லது "நல்ல வேளை நாம் இந்தச்சமயத்தில் அங்கு இல்லை "என்று பெருமூச்சும் விடலாம்.

நாட்டிற்காக உயிரைக்கொடுத்த எல்லா தியாகிகளையும் என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்


 image courtesy: bbc.co.uk



Jan 29, 2011

காவலன் - என்னவோ போங்க!

சில்லி சிக்கன், கொத்து பரோட்டா, கோழிக் கொழம்பு என சரமாரியாக மசாலாப் படங்களில் கொத்திக் கொண்டிருந்த விஜய் அடுத்தடுத்த படங்களின் தொடர் தோல்வியில் "எத்தைத் தின்றால் பித்தம் தீரும்" என இப்படி பம்மியிருக்க வேண்டாம். குறைந்தபட்சம் சூடாக ஒரு ரசம் சாதம் தந்திருக்கலாம் விஜய். ஆனால் இப்படி உப்பு சப்பு இல்லாமல் ரொம்ப பழைய சோறை அதுவும் நசநசவென்று தந்திருக்க வேண்டாம்.



"கெட்டது செய்யற எதிரிய கூட மன்னிப்பேன், ஆனா துரோகம் செய்யற நண்பனை குத்துவேன்" என ஒரு கத்திக் குத்துக் கொலையில் அறிமுகமாகும் ஊர்ப்பெரிய தாதா ராஜ்கிரண். 

அவர் வாயால் பூமிநாதன் எனப் பெயர் சூட்டப்படும் குழந்தையாக முதலிலும் பின்னர் வழக்கமான ஆர்ப்பாட்டம் இல்லாமலும் ஆனால் கொஞ்சம் இடைவெளி விட்டு வழக்கமான ஒரு குத்து + தத்து(வ)ப் பாடலுடன் அறிமுகம் ஆகும் விஜய்.

பழக்கமான தமிழ் க.நாயகியாக "ரோலிங்....ஸ்டார்ட்" எனும் வரை முதுகு காட்டி நின்றுவிட்டு "ஆக்சன்" என டைரக்டர் குரல் தந்ததும் ஆறடி ஒட்டுக் கூந்தலை விசிறியடித்தபடி முப்பத்தி சொச்ச பற்களையும் காட்டிக் கொண்டு அறிமுகமாகும் அசின்.

தாதாவைக் காக்க தாதா வீடு வந்து பின் தாதா இட்ட கட்டளையின் பேரில் தாதாவின் மகளாம் அசினைக் காக்க "காவலன்" வேடமேற்கும் விஜய். தன் காட்பாதர் மற்றும் கடவுளான ராஜ்கிரண் மகள் என்பதால் படத்தின் கடைசி ஃபிரேமுக்கு முந்தின ஃபிரேம் வரை அசின் பேரில் விஜய்க்குக் காதல் இல்லை. 

ஆனால் பார்த்த முதல் பிரேமிலேயே அசினுக்கு விஜய் மேல் காதல் என்றால் காதல் அப்படியொரு காதல். தனக்கு வேறொரு பட்டர் கட்டருடன் கல்யாணம் நிச்சயமாகிவிட்டது எனத் தெரிந்தும் வழக்கமாக நம் தமிழ்க் கதாநாயகிகளுக்கு கதாநாயகர்களின் பேரில் வருமே அப்படிப் பட்ட ஒரு உன்னதக் காதல். (அது யாருங்க சாமி குஷ்பூ பேசினதைத் தப்புன்னும் தமிழ்க் கலாச்சாரம் இல்லைன்னு சொன்னவங்க?)



பின்னர் அலைபேசி வாயிலாக விஜய் - அசின் காதல் வளர்கிறது வளர்கிறது அப்படி ஒரு நிதானத்தில் வளர்கிறது. அசினுக்கு விஜய் விஜய்தான் எனத் தெரியும். ஆனால் விஜய்க்கு அசின் அசின்தான் எனத் தெரியாது தெரிஞ்சா காதலிக்க மாட்டாரில்ல. தமிழ்க் கதாநாயகனுக்கு குரு மரியாதை தெரியுமில்ல.

காவலன் பணியைத் துறந்துவிட்டு முன்பின் தெரியாத யாரோவென நினைத்துக் கொண்டிருக்கும் அந்தத் அலைபேசிக் காதலி அசினுடன் சென்றுவிட கிளைமாக்சில் முடிவெடுக்கிறார் விஜய். அதன் பின் ட்விஸ்ட் என்னும் பேரில் நடக்கும் அச்சுப்பிச்சுத்தன பதினைந்து நிமிட சீரியஸ்  காமெடிக்குப் பின் படம் சுபமோ சுபம் என்று முடிகிறது. ஸ்ஷ்ஷ்ஷ்ஷ் ஹப்பா....முடியல என்று எழுந்து வருகிறோம்.

அசின் முன்னைக்கு இப்போது கொஞ்சம் முதிர்ந்த முகம் என்றாலும் இன்னமும் அழகாகத்தான் இருக்கிறார். வடிவேலு காமெடி அப்படி ஒன்றும் எடுபட்டதாய்த் தெரியவில்லை.

மீண்டும் வித்யாசாகர் ஏமாற்றியிருக்கிறார்.  "நச் நச்" என மெலடிகளாகட்டும் குத்துகளாகட்டும், விதவிதமாய் இசைக்கோலங்கள் அமைத்த அந்த வித்யாசாகரை யாரேனும் கண்டுபிடியுங்களேன். பாடல் காட்சிப் படமாக்கல்களில் ஒளிப்பதிவு மற்றும் லொகேஷன் தேர்வு தொடர்பான பிரயத்தனங்கள் நன்றாகவே தெரிகிறது. 

விஜய் காதல் காட்சிகளில் அசத்தலாக நடித்திருக்கிறார் என சொல்ல வேண்டும் போலத்தான் இருக்கிறது. இருந்தாலும் நடிக்க வந்து பதினைந்து வருடங்கள் ஆன ஒரு சீனியர் நடிகருக்கு இப்படியா ஒரு அடிப்படைப் பாராட்டைத் தெரிவிக்க வேண்டும் நாம்?

விஜய் படம் மாதிரியே இல்லை சார் என்னும் மக்களின் விமர்சனம் ஒன்றுதான் படத்தை வித்யாசப்படுத்தியிருக்கிறது. மற்றபடி நான் தலைப்பில் சொன்னது போல "என்னவோ போங்க".

பி.கு: இந்தப் படத்திற்கு பட்ஜெட் முப்பத்து ஐந்து கோடி என்கிறது விக்கி.
.
.
image courtesy : 88db.com

Jan 28, 2011

வெள்ளிக் கதம்பம்


கொஞ்சம் பர்சனல்

சரியாக ஒரு வருடம் முன்பு நிகழ்ந்த நிகழ்வு. எழுதிய பதிவு. பதிவிற்கான இணைப்பு கீழே. அதற்கு முன்னதாக யதேச்சையாக இப்பதிவை வாசித்துவிட்டு ஜெமோ அவர்கள் சிந்திய புன்முறுவல் இங்கே:


சாதாரணமாக எங்கும் நிகழ்வதுதான். ஆனால் இதை வாசித்தபோது மீண்டும் புன்னகை வந்தது. ’நாம் விரும்பும் ஒருவருக்கு நாம் அளிக்கும் ஆகச்சிறந்த பரிசே அவர் விரும்பும் பாவனைதான்’ [அனல்காற்று] - நன்றி: ஜெமோ -  


இரண்டு நாட்களாகவே சோகமும் அது தந்த சோம்பலுமாகவே இருக்கிறது. இன்னும் நான்கு நாட்கள்தான் இருக்கின்றன; ஷைலஜா பிறந்தகம் செல்லப்போகிறாள் பிரசவத்திற்கு. போகப்போறியா, என கண்களில் சோகம் தேக்கி மௌனமாய் நான் கேட்கவும், அதேமௌனத்துடன் தலையசைத்து ஆமாம் என்றுவிட்டு, போகட்டுமா என மேலும் சோகம் தேக்கி அவள் கேட்பதுமாய் பொழுதுகள் நகர்கின்றன.


பட்டீஸ்வரர், பேரூர்

கோவை பயணத்தின் முக்கிய அம்சம் பட்டீஸ்வரர் கோவில் விஜயம்.  நான்கு வருடங்களுக்கு முன் ஒருமுறை இங்கு வந்திருக்கிறேன். சென்ற நவம்பரில் கும்பாபிஷேகம் நடைபெற்று இப்போது வண்ணமயமாக இருக்கிறது கோயில். மிகவும் பிரபலமான மற்றும் பழமையான கோயில் என்றாலும் இங்கு ஒரேயொரு ஆறுதல் போலி ஜனசந்தடி ஏதுமின்றி நிஜ ஆர்வத்துடன் வரும் பக்தர்கள். எனவே பெரும்பாலும் நீங்கள் அமைதியாக ஆர்ப்பாட்டமில்லாமல் இறைவனை தரிசிக்கலாம்.



ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட கோயில் இது என்பது மிகவும் ஆச்சர்யம் தரும் தகவல். சேர நாட்டில் அமைந்த கோயில் என்றாலும் மூலஸ்தானத்தை நிர்மாணித்தது சோழ மன்னன் என்பது மற்றொரு ஆச்சர்யத் தகவல். சோழர்களின் ஆன்மீக சேவை பற்றி என் சொல்ல? 

"If you do dharshan here you will not have re-birth. Thats the speciality of this temple" (இங்கு தரிசனம் செய்தால் மறுபிறப்பு உங்களுக்கு இல்லை என்பது இக்கோவிலின் சிறப்பு) என ஒரு நம்மூர்க்காரர் தன் வெளிநாட்டு விருந்தினர் ஒருவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.  

அகில் வரவிற்குப் பின் கோயில் குளப் பயணங்கள் சற்றே குறைந்திருந்தன. இப்போது அவன் சற்றே வளர்ந்திருப்பதால் இவ்வாறு பயணப்பட ஏதுவாயிருக்கிறது. வீட்டின் நான்குக்கு நான்கு அறைகளில் அடைந்து கிடந்ததால் கோயில்களின் நெடுநீண்ட மண்டபங்கள் அவனுக்கு சில நேரங்களில் மிகவும் பிடித்தமான விளையாட்டு மைதானங்கள். சில நேரங்களில் வேற்று மனிதர்கள் என யாரையேனும் கண்டு கொண்டு அழத் துவங்குகிறான். நாம் தூக்கிக்கொள்ள நேரம் வந்துவிட்டது எனப் புரிந்து கொள்ளவேண்டும். ஆரத்தி நேரங்களில் கோயில்களில் ஆர்வமாக தரிசனம் செய்கிறான். மற்றபடி சுற்றிமுற்றிலும் உயர்ந்த மண்டபங்களையும், ஜனசந்தடிகளையும் ஆச்சர்யப் பார்வை பார்க்கிறான். பிரசாதம் வாங்கினால் சர்க்கரைப் பொங்கல் அவனுக்குப் பிடிப்பதில்லை. புளியோதரையா? "தா தா " என்கிறான். 

உபயோகம் கொள்(ளை)

மேக் யூஸ் ஆஃப் <http:makeuseof.com> தளம் பற்றி நான் முன்னமே எழுதியிருக்கிறேன். டெக்னோ ஆர்வலர்களுக்கு உகந்த சிறந்த தளம். இங்கே கிட்டத்தட்ட என்ன கணினித் தொழில்நுட்பத் தகவலை நீங்கள் தேடினாலும் கிடைத்துவிடுகிறது.

சமீபத்தில் இவர்கள் வெளியிட்டிருந்த விர்சுவல் மியூசியம் பற்றின தொகுப்பு அசர வைத்தது.

பிடித்த கவிதை:

தெருப்பாடகன்.
________________ 
ஒற்றி ஒற்றி எடுத்தும்
சிவப்பாய் கசிந்தது காயம்
சுற்றி நின்ற கூட்டத்தின்
நிழலால்
காயம் சரியாய்
தென்படவில்லை
சற்றே உற்று
தெளிவாய்ப் பார்த்ததில்
சின்னக் குழிவு
பிடரியின் நடுவில்
விட்டுவிட்டு வரும்
சிவப்புக்கு நடுவே
தட்டுத் தட்டாய் துருத்திய
எலும்பு.
ரத்தச் சகதியில் சுற்றி
நின்றவர்
கானணி செய்த ரங்கோலி. 
போக்குவரத்துக்
கிடைஞ்சலில்லாமல்
ரோட்டின் ஓரம்
நகர்த்தினோம்
அவனை.
பேண்டுப் பையில்
பர்சும் இல்லை
யார் எனக் கேட்டால்
பதிலும் இலை.
இரண்டு கட்டையில்
காந்தாரத்தில் ஸ்ருதி
பிசகாமல்
கேட்டவைக்கெல்லாம்
ஸ்வரமாய் பிடித்தான். 
'நிறைய ரத்தம்
பிழைப்பது கஷ்டம்' 
வேடிக்கை பார்க்கும்
பெரியவர்
சொன்னார்.
அது கேட்டதுபோல்
அவன் பாடிய ஸ்வரத்தை
மாற்றிப் பாடினான்.
கீழ் ஸஜ்ஜமத்தில்
'கா' வை நிறுத்தி
'சா' வென்றிசைத்தான். 
அடுத்து கேள்விகள்
அனைத்திற்கும் அவன்
'சா' 'கா' என்றான்.
ஸ்ருதிப் பிழையின்றி
'பாட்டுக் கலைஞன்'
கட்டத்தில்
ஒருவர் புதிர் விடுத்தார்.
அதுவும் கேட்டது போல் அவன்
இசைக்கும் ஸ்வரத்தை
உடனே இழந்தான்.
வெற்றுச் சொல்லாய் 'சா' எனச் 
சொன்னான்.
செத்தான் என்பதின் பகுதி
'சா' வேதான்.
இவன் தமிழன்.
என்றார் மனமகிழ்ந்த ஓர்
தமிழாசிரியர். 
பக்கத்தூரில் மருத்துவ
வசதி.
பாதி வழியிலே உயிர்
பிரிந்ததினால்
காய்கறி லாரியில்
ஊர்வலம் போனான். 
சுற்றி நின்றதால்
சுற்றமா என்ன?
அவரவர் வீட்டுக்கு
புறப்பட்டு போனோம். 
என்றோ வானொலி கீதம்
இசைக்கையில் அல்லது
பச்சைக் காய்கறி
விற்கும் சந்தையில் 'சா' 'கா'
என்றவன் நினைவு கிளம்பும். 
ஜுரம் விடும் வேளையில்
வெந்நீர் குளியலில்
படுக்கைவிட்டு
மீண்ட களிப்பில் 'சா' 'கா'
என்று
நானும் பாடி. அவன்
காந்தாரத்தைக்
கொப்பளித்துமிழ்வேன். 
இடித்தவன் தவிர
மற்றவர் யார்க்கும்
மனதளவிலே பாதிப்பில்லை
குற்ற உணர்வும்
மற்ற வியாதி போல்
அவ்வளவாகத் தொற்றுவதில்லை. 

- கமல்ஹாசன்

(நன்றி:  ஆனந்த விகடன்)


எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் தம்பி



இங்கே சீரியஸா ஏதும் சொல்றாங்களா? இல்லை இவங்களும் சேர்ந்து விஜய்'ய காமடி பண்றாங்களா?




Jan 27, 2011

சுட்டது மட்டும் மொக்கையாகவே இருக்கிறது

மன்னிக்கவும்....!!

ஏதோ விளையாட்டாய் எழுதியிருந்தாலும் இங்கே எழுதியிருந்த பதிவு இதில் சம்பந்தப்பட்டவர் ஒருவர் மனதைப் புண்படுத்தும் வண்ணம் அமைந்தபடியால் அப்படியே சைபர் கிழிப்பு செய்யப்பட்டது.

என் கோடானகோடி தமிழ் வாசக சிகாமணிகளிடம் மன்னிப்பு கோருகிறேன்.

Jan 26, 2011

சிறுத்தை - அவசியம் பாருங்க (!!)


கயிற்றுப் பாலம். இரண்டு வில்லன்களில் இரண்டாம் வில்லனாம் தம்பி வில்லன் பத்ரா அந்தக் கயிற்றுப் பாலத்தைத் தன் கையிலிருக்கும் நெடும் கத்தியைக் கொண்டு ஒவ்வொரு கயிறாக வெட்டி விடுகிறான். கீழே தொங்கிக் கொண்டிருக்கும் நான்கு வயது ஸ்வேதா என்னாவாளோ ஏதாவாளோ எந்த நொடியில் கீழே விழுவாளோ என நமக்குப் பதைக்கிறது. ராக்கெட் ராஜா ஸ்வேதாவைக் காப்பாற்ற எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் ஒரு தடை அல்லது பத்ராவிடமிருந்து மூக்கில் ஒரு குத்து ஏதேனும் ஒன்று கிடைக்கிறது.

மற்றொருபுறம் வில்லன்களில் அண்ணன் வில்லனும் முக்கிய வில்லனுமாகிய பாவாஜியோ அல்லது பாவ் பாஜியோ எவனோ ஒருவன், அவன் ஸ்வேதாவைக் காக்க மறுபுறமிருந்து போராடும் தமன்னாவை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் தூக்கியடிக்கிறான். தமன்னாவின் ஸ்வேதா காக்கும் முயற்சியும் வெற்றியில் முடியுமா தெரியவில்லை.

கயிற்றிலிருந்து கை நழுவவிடும் ஸ்வேதாவைக்  கடைசியில் ராக்கெட் ராஜா காப்பாற்றி வில்லன்களை வதம் செய்தானா என்பதில் முடிகிறது படம்.

"அம்மா சாமிகிட்ட போயிட்டாங்க" என்று படத்தில் பத்து தடவை  சொல்லிக்கொண்டே அம்மா பாடிய "ஆராரோ ஆரிரோ" பாடலை கேசட் ப்ளேயரில் படம் நெடுக இருபது தடவை கேட்கும் ஸ்வேதாவை  ராக்கெட் ராஜா என்கிற காமெடி கார்த்தி எதற்குக் காக்க வேண்டும்?



இதுபற்றி தெரிந்து கொள்ள நாம் கொஞ்சம் பின்னோக்கிப் போகவேண்டும். ஸ்வேதாவின் அப்பாவும் தன் உருவத்தையொத்த ரத்தினவேல் பாண்டியனுமான சீரியஸ் கார்த்தி சாகக்கிடக்கும் படுக்கையில் ராக்கெட் ராஜா செய்து தரும் "உங்க பொண்ணு இனிமே என் பொண்ணு சார்" என்பதான வாக்குறுதியே "காக்க காக்க" காரணம்.

ர.பாண்டி எப்படி செத்தார்?

கொஞ்சம் நீங்க செஞ்சுட்டு இருக்கற வேலையெல்லாம் விட்டுட்டு வாங்களேன், என்ன ஊருப்பா அது? ஆந்திராவுல தேவிப்பட்டினமா? வாங்க அங்க போயிட்டு வரலாம்.

ருக்குள் ரயில் விட்டு இறங்கி வெளியே நடந்தாலே நான்கு அச்சுபிச்சு ரவுடிகள் உங்களிடம் மாமூல் வாங்கிக் கொண்டு உங்கள் பேமிலியை டோட்டல் டேமேஜ் செய்யும் வண்ணம் பேசிவிட்டு ஊருக்கு உள்ளே அனுமதிக்கிறார்கள். அவர்களிடம் காலம் காலமாய் கப்பம் கட்டிவரும் கரும்பு வண்டி, இரும்பு வண்டி வியாபாரிகள் அவர்களைக் காக்க வந்த ஆபத்பாந்தவன் நீங்கள்தானா என ஏக்கத்துடன் பார்க்கிறார்கள்? அந்த அச்சுபிச்சுக்களை நீங்கள் அடித்துத் துவைத்தால் ஒரு சந்தோஷ நடனம் ஆடத் தொடங்கணுமே என்ற ஏக்கப் பரபரப்பில் இருக்கிறார்கள்.

ஊருக்குள் போனால் அங்கே சொல்லிவைத்தாற்போல் டெர்ரர் வில்லன் பாவாஜி ஊரின் பிச்சைக்காரன் முதல் போலீஸ்காரன் வரை அத்தனை பேரின் மனைவியையும் தன் மகனுக்கு விருந்து கொடுத்து நடுக்கூடத்தின் உயரிய ஆசனத்தில் அமர்ந்து கெக்கலித்துக் கொண்டிருக்கிறான். வழக்கம் மாறாமல் மனிதர்கள், மாடுகள், அமைச்சர்கள், அதிகாரிகள் என யாரும் அவனை எதுவும் கேட்பதில்லை. 

உள்ளூரில் பாவாஜி என்றால் ஊருக்கு வெளியே அவன் தம்பி பத்ராவின் ராஜ்ஜியம். தலையை விரித்துப் போட்டுக் கொண்டு, சாக்குமூட்டை வைத்து அந்தத் தலையையும் மூடிக் கொண்டு, கண்ணுகுக் கீழே பெரியதாய் ஒரு புண்ணோ மண்ணோ எத்தையோ ஒட்டிக் கொண்டு பத்ரா பார்வையிலேயே நம்மை பயமுறுத்த நினைத்து காமெடி செய்கிறான். 

சொல்லும் அவசியமின்றி மாமூல் ரவுடிகளையும், பாவாஜி - பத்ரா கோஷ்டியையும் அடக்க வந்திறங்கியவன் எவனோ அவன் "பாண்டியண்டா" என மீசை முறுக்கும் நம்ம டி.எஸ்.பி. ரத்தினவேல் பாண்டியன் ஆகிப் போகிறான்.


மேலும் சொல்ல அவசியமின்றி உள்ளூர் வெளியூர் ரவுடிகளை அதகளம் செய்து அடக்குகிறான் ர.பாண்டி. தாங்குமா உள்ளூர் பா'வுக்கும் வெளியூர் ப'வுக்கும்? ஊரே கூடி பாண்டிக்கு விழா எடுக்கும் வேளையில் முதுகில் உள்ளே விட்டு வயிற்றில் வெளியே வரும் நீண்ட கத்தியை ர.பாண்டி வயிற்றில் செருகுகிறான் மறைந்திருக்கும் பத்ரா.

சந்தேகம் வேண்டாம் என்று ர.பாண்டியின்  பக்கவாட்டுத் தலை தெறிக்க ஒரு துப்பாக்கிக் குண்டும் செலவு செய்தாயிற்று. ஊரே ஊளையிட சூளுரைக்கிறார்கள் சகோதரர்கள் "எங்களை யாராவது எதிர்த்தா.... தூஊஊஊ ......". டேய், சூளுரைத்தாயே அவன் செத்துவிட்டானா என உறுதி செய்தாயா? படம் அப்படியாவது முடியும் அல்லவா?" என நாம் கேட்க எத்தனிக்குமுன்னே அந்த இடத்தைக் காலி செய்கிறார்கள் வில்லன்கள்.

மீண்டும் நாம் சொல்லத் தேவையில்லாமல் ர.பாண்டி லேசாக முனகி உயிர்த்தெழுகிறான். அவன் சகாக்கள் அவனை மருத்துவமனையில் சேர்த்து அவனை தாற்காலிகமாக காப்பாற்றுகிறார்கள். இப்போது அவனுக்கு இருக்கும் பிரச்னை மூளைக்குச் செல்லும் நரம்பில் ஏதோ கோளாறு. அங்கே திடீரென அடைப்பு வந்தால் ஒரேயொரு சொட்டாவது தண்ணீர் அவன் தலையில் பட வேண்டும். அப்போதுதான் ர.பாண்டி தன்னுயிர் காத்துக் கொண்டு நம்முயிர் எடுக்க ஏலும்.

இப்போது அவனுடைய அடுத்த இலக்கு மீண்டும் வயிற்றில் கத்திக் குத்து வாங்கிக் கொண்டு "டாஆஆஆஆய்.... டாஆஆஆஆஆய்" எனக் கத்திக் கொண்டு  பறந்து விரிந்த மைதானத்தில் வைத்து ஐம்பத்தியெட்டு ரவுடிகளைக் கொன்றுவிட்டு பின் செத்துப் போக கீழே விழுவது.

"இந்த அம்பத்திஎட்டுப் பேருல ஒரேயோருத்தன் சாகறதுக்கு ஒரு நொடி முன்னால என் உயிர் போச்சுன்னா என் மீசைய மழிச்சிட்டு என்னைப் பொதைங்க" என்று தமிழர் பெருமக்களுக்கு காலம் காலமாக போதை தந்துவரும் மீசை மாதவ டயலாக் ஒன்றை வேறு உதிர்க்கிறார் ரவுசு பாண்டி...மன்னிக்கணும் ரத்னவேல் பாண்டி.



கீழே விழுமுன் தன சகா ஒருவரைப் பார்த்துக் கதறுகிறார் ர.பா. "இன்னும் எவனாவது உயிரோட இருக்கானாடா? "

"நோ ஸ்ஸார்", என்கிறது திரையில் ஒரு குரல்.

"ந்நோ ந்நோ ந்நோ ந்நோ .ந்நோ ஸ்ஸார்", என்கிறது திரையரங்கில் நூறு குரல்கள். அத்தன பயலும் செத்துப் போயிட்டனில்ல.

இதைத் தொடர்ந்துவரும் மற்றுமொரு மருத்துவமனைக் காட்சியில்தான் "உங்க பொண்ணு இனிமே என் பொண்ணு சார்" என்பதான "காக்க காக்க" வாக்குறுதிக் காட்சி நிகழ்ந்தேறுகிறது.

அப்படியே பின்னோக்கி நகர்ந்து நாம் கிட்டத்தட்ட இடைவேளைக்கு வந்துவிட்டோம். கொஞ்சம் இருங்கள் வெளியே போய் ஒரு பாட்டில் தண்ணி எடுத்துத் தலையில் ஊற்றிக் கொண்டு இடைவேளைக்கு முன்னோக்கிச் செல்லலாம். நம்ம மூளை நரம்பு அடைச்சிக்கிச்சி.

ஓகே.... இதுவரை படித்துவிட்டு இந்தப் படத்தையும் பார்க்க வேண்டுமா என நீங்கள் யோசித்தால்....? அதுக்குதானே வெச்சுருக்கோம் சந்தானத்தோட கலக்கல் காமெடியோட மொத பாதி! படத்தின் ஒரே ஆறுதல் சந்தானம். சந்தானம் இல்லாமல் இந்தப் படத்தை எண்ணிப் பார்க்கவே குலை நடுங்குகிறது. மனிதர் வழக்கம் போல் காட்சிக்குக் காட்சி வசனத்திற்கு வசனம் தன் ட்ரேட்மார்க் எகத்தாளம் செய்து நம்மை சிரிக்க வைக்கிறார்.


ஜேப்படி ஜோடி ராக்கெட் ராஜா (கார்த்தி) மற்றும் காட்டுப்பூச்சி (சந்தானம்). செய்யும் அலப்பறையும் வழக்கமான அச்சுப் பிச்சு தமன்னாவின் நான்கு இடைவெளிச்சக் காட்சிகளும்தான் முதல் பாதி.

ஃபார்முலா காமெடி காட்சிகளை வைத்து அங்கங்கே சிரிக்க வைத்திருக்கிறார்கள். முதல் பாதி காமெடிதான் என்றாலும் கோவை கே.ஜி.தியேட்டரில் நான் படம் பார்த்தபோது தியேட்டரே முதல் பாதிக்கு அளவுக்கு மீறி குலுங்கிக் கொண்டிருந்தது போல் இரைச்சல். அங்கே தியேட்டரில் செயற்கைச் சிரிப்பு எஃபெக்ட்டைப் பரவ விடுகிறார்கள் என்று  மெதுவாகத்தான் விளங்கியது . அடப் பாவிகளா? இங்க கூடவா?

தமன்னா படுத்தோ படுத்து என்று படுத்துகிறார். அழகால் அல்ல... பார்த்துப் பார்த்துப் புளித்துப் போன கொஞ்சல், கெஞ்சல் கோபக் காட்சிகளால். ஒரு முறை பொதுஜனத்தில் பார்த்து மறுமுறை தன் வீட்டுக் கல்யாணத்தில் பார்க்கும் கார்த்தியிடம் இடையாடையவிழ்த்து இடுப்பில் கைவைடா என்னும் பழக்கம் மாறா தமிழ்க் கதாநாயகி.


வித்யாசாகரை படத்தின் டைட்டிலில் மட்டும் பார்க்க முடிந்தது. மற்றபடி மலரே மௌனமாவும், அற்றைத் திங்கள் வானிலே'வும் தந்த அந்த ஜீனியஸ் இசைக் கலைஞனின் மெல்லிசையை படம் நெடுக வல்லிசைதான் விழுங்கிவிட்டது.

அண்ணனின் சிங்கத்தைத் தொடர்ந்து சிறுத்தை தர நினைத்ததும், தன் ஐந்தாவது படத்தில் இரட்டை வேடமணிய நினைத்ததும் கார்த்தியின் தவறல்ல.  தெலுங்கிலிருந்து சுட்டபோது எண்பதுகளில் வந்த கதையம்ச வாடையைப் பின் பாதியிலும், சமீபத்திய பிராண்டட் அச்சுப் பிச்சு காதல் அளப்பறைகளை முன்பாதியிலும் தவிர்த்திருந்தால் படம் பரவாயில்லை என்றிருக்கலாம்.

படம் பார்த்துவிட்டு மொதல் ரவுண்டு ரெவியூ "சூப்பர் படம்" எனச் சொன்ன என் அலுவலகத் தோழர் தோழிமார்களுக்கு என் மேல் என்ன கோபமோ?

"சிறுத்தை பார்க்கப் போகிறேன்" என்ற என் அப்டேட்டுக்கு "படம் மொக்கையோ மொக்கை"  எனவும், "உங்கள் சொந்த ரிஸ்கில் செல்லவும்" எனவும் கடைசி நேரத்தில் தகவல் தந்த என் ட்விட்டர் சகாக்களிடம் சொல்லாமல் கொள்ளாமல் தியேட்டரில் நுழைந்தது என் தவறு.

ஒரு பழைய டயலாக்: நான் படம் நல்லா இல்லை எனச் சொல்லவில்லை. நல்லாயிருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும் எனத்தான் சொல்கிறேன்.
.
.
.


Jan 16, 2011

இசைக் கோலங்கள் - ஊரெல்லாம் உன் பாட்டு

முன்குறிப்பு: இந்தப் பாடல் என் டாப் டென் பாடல் லிஸ்டில் ஒன்று.

இந்த வார்த்தைகளை இதுவரை ஆயிரத்தியெட்டு பேர் சொல்லக் கேட்டிருப்பீர்கள். இதோ நானும் சொல்கிறேன் கேட்டுக் கொள்ளுங்கள். "மோகனுக்கும் ராமராஜனுக்கும் அமைத்துத் தந்த பாடல்கள் போல் ரஜினிக்கும் கமலுக்கும் கூட இளையராஜா அமைத்துத் தந்ததில்லை"


இந்த வார்த்தைகள் அப்படியே நிஜமில்லை என்றாலும் சில நேரங்களில் சில பாடல்களைக் கேட்கையில் "அப்படித்தானப்பா" என எண்ணத் தோன்றுகிறது. ஊரெல்லாம் உன் பாட்டு படத்தின் இந்தப் பாடல் அப்படிப்பட்ட ஒரு பாடல்.

கிராமராஜனுக்கு என வந்த "மாங்குயிலே பூங்குயிலே", "கலைவாணியோ ராணியோ" போன்ற கிராமிய மனம் கவழ்ந்த பாடல்கள்; செண்பகமே, தானா வந்த சந்தனமே போன்ற மெல் மெல் மெலடிகள்; மதுர மரிக்கொழுந்து போன்ற துள்ளல் டூயட்கள் என இவைதான் ராமராஜனின் அடையாளம் என்று இருந்தது. 

ஆச்சர்யம் தரும் வகையில் வெளிவந்த ஒரு செமி கிளாசிகல் ரகப்பாடல் ராமராஜன் படத்தில் என்றால் அது இந்தப்பாடலாக மட்டுமே இருக்க முடியும்.  ராமராஜனுக்கு யேசுதாஸ் அவர்கள் குரல் ஒலிப்பதும் ரொம்பவே அபூர்வம். பெரும்பாலும் மெலடிகளுக்கு மனோ அல்லது எஸ்.பி.பி., எப்போதாவது அருண்மொழி, நையாண்டி / குத்துப் பாடல்களுக்கு மலேசியா வாசுதேவன் என இருக்கும் ராமராஜன் பாடல்கள். அப்படிப் பார்த்தாலும் யேசுதாஸ் குரலாக ஒலிக்கும் இந்தப் பாடல் ஒரு தனித்தன்மைப் பாடல்.

யேசுதாஸ் அவர்களின் தெள்ளத் தெளிவான ஆளுமையை இந்தப் பாடலில் நாம் உணரலாம். பாடலுக்குத் தேவையான கிளாசிக்கல் டச்'சுடன் நச்சென்று சங்கீதசாகரம் அவர்கள் பாடுவதை நாம் பாடல் முழுக்க உணரலாம். கல்யாணி ராக அடிப்படையில் அமைந்த பாடல் என்பது என் அனுமானம். மற்றபடி பாடலின் கமகங்கள், ஸ்தாயிகள், இதர நுணுக்கங்களை அலச நாம் இப்போதைக்கு லலிதராமைத்தான் அழைக்க வேண்டும்.

இவ்வளவு தூரம் பாடலைப் பேசிவிட்டு நம்ம தலைவர் ராமராஜன் பற்றி இரண்டொரு வார்த்தைகள் பேசாவிட்டால் நமக்கு நரகம் நிச்சயம். நம்ம தலைவர் அம்மனை நினைத்து உருகிப் பாடுவதும், படத்தின் ஹீரோயினி இவர் தன்னைப் பற்றித்தான் பாடுகிறார் என நினைத்துக் கொள்வதுவும் பாடலின் முக்கிய ஹைலைட். அப்படியொரு அர்த்தம் கொண்ட பாடலாக இப்பாடலைச் சமைத்த கவிஞர் வாலி அவர்களின் திறமையை என்னவென்று சொல்வது?

ரொம்பவும் பிரயத்தனப் படாமல் தன் முந்தைய எண்ணூற்று சொச்ச பாடல் வரிகளிலிருந்தே அர்த்தங்களை மையமாய்க் கொண்டாலும், வரிகளை அமைத்த விதத்தில் பாடலின் சந்தத்தை தூக்கி நிறுத்துகின்றன வாலிபக் கவிஞரின் வசீகர வரிகள்.

உன்னிடம் சொல்வதற்கு…
எண்ணம் ஒன்றல்ல நூறிருக்கு
அதை நீயும் கேட்க நானும் சொல்ல 

ஏது வாசகம்


ச்சே... கவிஞன் கலக்குறானையா....!!!

இங்கே நான் இணைத்திருக்கும் யு.டியூப் இணைப்பு ஆடியோ மட்டும் கொண்ட இணைப்பாக இருக்கிறது. முடிந்தால் ஹெட்போனில் பாடலை கேட்டு ரசியுங்கள்.

பாடல் வரிகளுக்கு இங்கே


படங்கள் -நன்றி: இசைத்தேன்
.
.
.

Jan 15, 2011

சங்கீத சண்டமாருதம் லலிதா ராமை சந்தித்தேன்!

சிறப்புப் பதிவர்: நட்பாஸ்

கர்நாடக சங்கீதத்தில் ஆர்வம் இருக்கிற வலைவாசிகள் எவரும் லலிதா ராமைத் தெரியாதவராக இருக்க முடியாது. சமகால இசை விமர்சகர்களில் ஆகச்சிறந்த ஒரு ஆளுமையாக அறியப்படுபவர் இவர். தமிழ் பேப்பரில், " நெருப்பென்று எழுதினாலே படிக்கும்போது விரல் சுட நானென்ன லா.ச.ரா-வா? நேற்றைய கச்சேரியில் கேட்ட சங்கீதத்தை விவரிக்க லா.ச.ரா எழுத்து எனக்குக் கூடி வந்தால்தான் உண்டு," என்று எழுதிய மகானுபவர் லலிதா ராம்.

லலிதா ராமின் எழுத்து என்னையும் உங்களையும் கவர்வதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை- அவர் இருபெரும் துருவங்கள் இணையும் ஒற்றைப் புள்ளி என்பதை நினைவில் வைத்துக் கொண்டால். ஆமாம், "பசித்தவன் பாலைக் கண்டது போல் உங்கள் எழுத்தை படித்துக் கொண்டே இருக்கிறேன்," என்று சாருவாலும், " ஒரு காலகட்டத்தை கண்ணுக்குக் கொண்டு வந்த எழுத்து"" என்று ஜெமோவாலும் பாராட்டப்பட்டவர் லலிதா ராம். மிஷ்கின் என்ற விபத்தைத் தவிர்த்தால் கலைஞர், புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி, சோனியா காந்தி, மன்மோகன் சிங் போன்ற மாபெரும் ஆளுமைகளுக்கும்கூட இந்த பாக்கியம் வாய்க்கவில்லை என்று நினைக்கிறேன்.

அப்பேற்பட்ட லலிதா ராமை சந்திக்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தால் எப்படி இருக்கும்? உங்களுக்கு எப்படி இருக்குமோ தெரியாது, நேற்று காலை அவர் புத்தகக் கண்காட்சியில் தன்னை சந்திக்கலாம் என்று என்னிடம் கைபேசியில் சொன்னதும் விதிர்விதிர்த்துப் போய் விட்டேன்- ஒன்றே முக்கால் மணிக்கே அங்கே போனவன், நாலு மணி வரை ஒரு ஆவேசமான மனநிலையில் புத்தகக் கண்காட்சியை பத்திருபது ரவுண்ட் சுற்றி வந்து விட்டு, ஒவ்வொரு ரவுண்டிலும் என் தைரியத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து சரியாக நான்கு மணிக்கு நாக் அவுட்டாகி அவரை சந்திக்காமலேயே வீடு திரும்பினேன்.

oo0oo

நான் அத்தனை பயந்திருக்க வேண்டாம். லலிதா ராம் அநியாயத்துக்கு இளைஞராக இருக்கிறார். கர்நாடக இசை விமரிசனம் என்றாலே சுப்புடுதானே நினைவுக்கு வருவார்? அவரளவுக்கு கிழவராக இல்லாவிட்டாலும் ராம் ஒரு நாற்பது வயதையாவது கடந்தவராக இருப்பார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், நேரில் பார்க்கும்போதுதான் தெரிந்தது, அவருக்கு என் வயதில் பாதிகூட இருக்காது என்று- கல்லூரி வகுப்பைக் கட் அடித்துவிட்டு சைட் அடிக்கிற பையன் மாதிரி புத்தகக் கண்காட்சி வளாகத்தைச் சுற்றி வருகிறார் இவர். நான் இவரோடு இருந்த அரை மணி நேரத்தில் ஒரு ஐந்து ரவுண்டாவது அடித்திருப்பேன்.

ஆனால் ஒன்று, புத்தகக் கண்காட்சிக்குப் போகிறதானால் நீங்கள் லலிதா ராமைத்தான் துணைக்குக் கூட்டிக் கொண்டு போக வேண்டும்- எல்லாருக்கும் இவரைத் தெரிகிறது, எல்லாரையும் இவரும் தெரிந்து வைத்திருக்கிறார். இது பெரிதில்லை, நம்மையும் எல்லாருக்கும் தெரிந்திருக்கும் என்று நம்புகிற உத்தம குணம் இவருக்கு இருக்கிறது.

இல்லையா பாருங்கள், கிழக்கில் அடர்த்தியாக மீசை வைத்துக் கொண்டு சூமோ வீரர் மாதிரியான உருவத்துடன் "இதை எடுத்து அங்க வையப்பா! அதை எடுத்து இங்கே வையப்பா!" என்று மிரட்டிக் கொண்டிருந்த ஹரன் பிரசன்னாவிடம் என்னை இழுத்துக் கொண்டு போகிறார், லலிதா ராம்- "இவர் யார் தெரிகிறதா?"

ஹரன் பிரசன்னா என்னை பனுவலில் வாய்மொழி காணா உணர்வுகளின் விளிம்பில் உறைந்த விழிவாசல் நிறுத்தி வைத்தார்- இந்த மாதிரி லலிதா ராம் எத்தனை பேரை பிடித்துக் கொண்டு வந்து காட்டியிருப்பாரோ என்னவோ, பாவம். நான் என் கலவரத்தைக் காட்டிக் கொள்ளாமல் ஒரு குறுஞ்சிரித்தேன்- உள்ளே ஒரே உதறல். தன்னைக் கிவிஞர் என்று சொல்லிய ஆள் இவன்தான் என்று ஹரன் பிரசன்னா என்னைக் கண்டு பிடித்து விடுவாரோ என்று நடுக்கம்.

நல்ல வேளை, "இவர்தான் களிமண்கலயம் என்ற பெயரில் ட்விட் பண்றார்," என்றுதான் அறிமுகப்படுத்தினார் லலிதா ராம். ஹரன் பிரசன்னா இறங்கப் பார்த்தவர், ஏறப் பார்க்க மேனக்கிடாமல், "நல்லா டிவிட்டு பண்றீங்க," என்று மையமாகப் பாராட்டிவிட்டு, "ஏ, அதை எடுத்து இங்கே வையப்பா!" என்று தன் வேலையைத் தொடர்ந்தார்.

அங்கே ஆரம்பித்தார் லலிதா ராம், அடுத்து "பா ராகவன் இங்கதான் எங்கேயாவது இருப்பார். உங்களைப் பார்த்தால் ரொம்ப சந்தோஷப்படுவார்," என்று பாராவிடம் அழைத்துப் போக முனைந்தார்- "என்னைப் பாத்தா அவர் எதுக்கு சார் சந்தோஷப்படணும்?" என்று கேட்டால், புதிராக என்னைப் பார்க்கிறார், "என்ன சொல்றே?" என்கிறமாதிரி. நல்ல வேலை பாரா இல்லை, தப்பித்தேன்.

புத்தகக் கண்காட்சியில் இருக்கிற ஒவ்வொரு பெரும்புள்ளியைப் பார்க்கும்போதும் இதே கதைதான்- "அதோ அங்கே முக்தா சீனிவாசன் இருக்கார். அவரோட நீங்க பேசியாகணும்," "நாஞ்சில் நாடன் கிட்ட உங்களை அறிமுகப்படுத்தட்டுமா?', "உயிர்மைல சாரு இல்லாம போயிட்டாரே, இருந்திருந்தா அவர்கிட்ட நாலு வார்த்தை பேசியிருக்கலாம் நீங்க," (சாரு இவருக்கு வேண்டுமானால் ஆயுட்கால ரசிகராக இருக்கலாம், அதற்காக நம்மைப் பார்த்து "யார் மேன் நீ?" என்று கேட்க மாட்டார் என்று என்ன நிச்சயம்?) இப்படியே வழி நெடுக சொல்லிச் சொல்லி முடிவில் என் மனதில் எனக்கே என்னைப் பற்றி ஒரு விஐபி மாதிரியான பிரமிப்பை ஏற்படுத்தி விட்டார் அவர் ("நீங்க ஒரு ரெண்டு நிமிஷமாவது ஞாநிகிட்ட பேசணும்!")

இவ்வளவு நல்லவராக இருக்கிறார், இவரா கர்நாடக சங்கீதம் என்று வந்தால் அந்த போடு போடுகிறார், இவரா லாண்டிங் நோட்ஸ் விஷயத்தில் ஜெயமோகனையே பதம் பார்த்தார் என்று உள்ளூர வியந்தபடி அவருடன் பேசிக் கொண்டு வந்தேன், என் சந்தேகத்தை வழியில் நடந்த இரண்டு நிகழ்வுகள் போக்கின.

முதல் நிகழ்வு: என் கையில் கம்ப ராமாயணம் இருப்பதைப் பார்த்ததும் (அதை ஏன் வாங்கினேன் என்பதைக் கடைசியில் சொல்கிறேன்), "கம்ப ராமாயண உரை என்றால் ஆகச் சிறந்த உரை வை மு..." என்று ஆரம்பித்தார் அவர்.

"கோதைநாயகியா?" என்று ஆர்வக் கோளாறில் உளறி விட்டேன்- உளறினது அவரது பதிலைக் கேட்டதும்தான் புரிந்தது.

"இல்லை இல்லை, வை மு ராமசாமியோ கந்தசாமியோ யாரோ ஒருத்தர் எழுதினது- யூ நோ வாட் ஐ மீன்!" என்று கூர்நகம் மெல்ல வெளிப்பட்டது.

"ஆகா, நாம கோயிஞ்சாமின்னு தெரிந்து போச்சுடா!" என்று பல்பை சத்தமில்லாமல் வாங்கி என் பாக்கெட்டில் பத்திரப்படுத்திக் கொண்டேன்.

இரண்டாவது நிகழ்வு: இது எனது மிக நுட்பமான அவதானிப்பு- ஒரு இடத்தில் லலிதா ராமைக் கண்டதும் ஒல்லியான உருவம் கொண்ட ஒருவர் முகம் வெளிறி, முட்டி மடங்கி அவசர அவசரமாக ஒரு ஸ்டாலுக்குள் பதுங்கினார்- "கர்நாடக இசையில் ஸ்ருதியுடன் பாடுபவர்கள் குறைச்சல் என்று சொன்னால் நிறைய பேருக்கு கோபம் வருகிறது. அப்படிச் சொல்ல, தீவிர கர்நாடக சங்கீத ரசிகனான எனக்கும்தான் வலிக்கிறது. ஆனாலும், எவ்வளவு நாள்தான் denial-ல் வாழ்வது?" என்று லலிதா ராமால் மணி கட்டப்பட்ட பூனைகளில் ஒருவராக அவர் இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

இந்த இளம் வயதில் இவ்வளவு தன்னம்பிக்கையும் தீவிரமான விமரிசனப்பார்வையும் ஒருவருக்கு இருப்பது ஒரு ஆச்சரியம் என்றால், இசை தவிர மற்ற விஷயங்களில், குறிப்பாக நமது புகழ் மற்றும் அறிவுக்கூர்மையில் இவர் வைத்திருக்கிற அபரிதமான நம்பிக்கையைப் பற்றி எழுத வேண்டுமானால் நானும் லா.சா.ராவைத்தான் கூட்டிக் கொண்டு வர வேண்டும்.

எதற்கும் இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்: முன்னே பின்னே நீங்கள் பேசியிராத ஒருவர் உங்களை அழைத்து, "நான் யார் பேசுகிறேன் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!" என்று நாலு சான்ஸ்- சரியாக நோட் பண்ணிக் கொள்ளுங்கள்- நாலு சான்ஸ் கொடுத்தால் உடனே கண்ணை மூடிக் கொண்டு லலிதா ராம் என்று சொல்லி விடுங்கள்.

oo0oo

நான் இந்தப் புத்தகக் கண்காட்சியில் கம்ப ராமாயணத்தை ஏன் வாங்கினேன் என்று கடைசியில் சொல்கிறேன் என்று எழுதினேன் இல்லையா? அதுகூட லலிதா ராமுக்காகத்தான்.

அவர் கர்நாடக இசை குறித்து மட்டுமின்றி விளையாட்டு குறித்தும் எழுத "கிரிக்கெட் தவிர" என்ற ப்ளாக் வைத்திருக்கிறார். வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பந்தயங்கள் குறித்து அதில் எழுதும் வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். நமது நண்பர் கிரி இங்கு எழுதவிருக்கிறார் என்பது உங்களுக்கு இனிப்பான செய்தி.

லலிதா ராம், ஸஸரிரி கிரி- ரெண்டு பேருமே வெயிட்டான கைகள். இவர்கள் முன் தாக்குப் பிடிக்க நம்மால் ஆகுமா? பார்த்தேன், இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் கம்ப ராமாயணத்தைக் கரைத்துக் குடித்திருப்பதாகத் தெரிந்தது. நாமும் அதிலிருந்து கொஞ்சம் போல உருவி விட வசதியாக அவசரப் போலீஸ் கம்பரைக் கையில் வைத்துக் கொள்ள உத்தேசம்.

"உள்ள நீர் எல்லாம் மாறி, உதிர நீர் ஒழுக, நின்றான்" என்று நடாலின் தோல்வி குறித்த வர்ணனைகளுடன் செவ்வியல் இலக்கியத்தின் கூறுகள் கொண்ட உயர்தர பதிவுகள் வெகு விரைவில் கிரிக்கெட் தவிர என்ற தளத்தில் வரவிருக்கின்றன. நீங்கள் அனைவரும் அதை அங்கு வந்து வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்- சாருவும் ஜெமோவும் என்னை இந்த ஜன்மத்தில் பாராட்டப் போவதில்லை: நீங்களாவது வந்து பாராட்டினால் கொஞ்சம் கெத்தாக இருக்குமில்லையா?



Jan 13, 2011

சென்னை புத்தக விழாவில் நானும்...

எழுத்தாளர் சுஜாதா அவர்கள் என்னிடம் பர்சனலாக அவர் புத்தகம் ஒன்றின் வாயிலாக சொல்லியபடி 'வாங்கிய புத்தகங்கள் அனைத்தையும் படித்து முடிக்குமுன் மேலும் புத்தகங்கள் வாங்குதல் இல்லை' என்ற மகோன்னத சபதம் ஏற்றிருந்தேன்.

ஒவ்வொரு வருடமும் இப்படி சபதம் ஏற்பதுண்டு. சாந்தி தியேட்டர் வளாகத்தில் சரவணபவன் சென்று தயிர்வடை சாப்பிட்டுவிட்டு அப்படியே வாசலில் இருக்கும் சாந்தி புக்பேலஸ் வாசல் மிதிக்கும் வரை அல்லது ஒவ்வொரு வருடத் தொடக்கத்திலும் ஏதேனும் ஒரு காரணம் சொல்லி புத்தக விழா அரங்கினுள் நுழையும் வரை அந்த சபதம் உயிருடன் இருக்கும்.

இந்த வருடம் எனக்கு புத்தக விழா செல்ல அமைந்த முக்கியக் காரணங்கள் இரண்டு. என்.சொக்கன் அவர்களின் சென்னை புத்தக விழா விஜயம் முதற்காரணம். அவரை சந்திக்க வேண்டும் என்பது என் இந்த வருட விழா அஜெண்டாவில் இருந்தது. பதிப்பாளர் அழைத்திருந்தார்.  கார்பரேட் கனவுகள் இறுதி ப்ரூஃப் தயாராக இருப்பதாகவும், முடிந்தால் புத்தக விழா அரங்கில்  வந்து சேகரித்துக் கொள்ளுமாறும் சொல்லியிருந்தார். இது முக்கியக் காரணம்.


பூந்தமல்லி நெடுஞ்சாலையில் யு.டர்ன் எடுக்கையிலே தன் முத்திரை வரிகளுடன் வரவேற்றார் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் "புத்தகங்களால் இந்த உலகைப் படியுங்கள், உலகையே புத்தகமாகப் படியுங்கள்" என ஏதோ படித்தேன். ஆஹா படி தேன்.



உள்ளே நுழைந்து பைக்கின் கழுத்தைத் திருகிவிட்டு உள்ளே நுழைய முற்படுகையில் வழியில் நின்று வழி மறித்து நடிகர் பார்த்திபன் தொடங்கி, சாரு, மனுஷ்யபுத்திரன், தமிழச்சி தங்கபாண்டியன், எழுத்துச் சித்தர், ஜெமோ, எஸ்.ரா, மாமல்லன், வாலி, வைரமுத்து என அனைவரும் வரிசைகட்டி வரவேற்றனர்.  

தமிழ் எழுத்துச் சூழலின் ஆசான் சுஜாதாவின் வரவேற்பிற்கு இணை ஏதுமில்லை என்பேன். மூன்று அல்லது நான்கு பெரிய சைஸ் பேனர்கள் அவருக்கு. வெவ்வேறு பதிப்பக உபயத்தில். அத்தனை பெரிய பேனர்கள் "லைவ்" எழுத்தாளர்கள் யாருக்கும் கூட இல்லை என்பது சுஜாதா இன்னமும் எத்தனை "லைவ்லி"யான எழுத்தாளர் என நிரூபித்துக் கொண்டிருந்தது.


வார நாளாக இருந்ததனால் வாசலில் வழியெங்கும் பதிப்பகத் தகவல் காகிதங்களைத் தருபவர்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. எனவே,  படிக்காமல் கிழித்தவைகள் குறைவாகவே இருந்தது சற்றே ஆறுதல்.

கூட்டம் சுமாராக நன்றாகவே இருந்தது. வார நாளாக இருந்தாலும் அந்த மதிய வேளையிலும் எல்லா சைஸ்'களிலும்.... ச்சே ச்சே... சீ சீ... மன்னிக்கவும்... எல்லா வயஸ்'களிலும் பெண்கள் வந்திருந்தார்கள். அஃப் கோர்ஸ், ஆண்களும் கூட சிலப்பலர் வந்திருந்ததாக நினைவு.

அடுத்த வருடங்களில் டிக்கெட் வாங்காமல் உள்ளே செல்ல வகை அமைகிறதா எனத் தெரியவில்லை. இந்த முறை நம் ஜம்பத்தை பரிசோதிக்கலாம் என்று டிக்கெட் கவுண்டரில் "ஹல்லோ சார், நான் இந்த மாதிரி அந்த மாதிரி...கிட்டத்தட்ட எழுத்தாளன் மாதிரி... டிக்கெட் எடுக்கணுமா?" எனக் கேட்டதற்கு, "தம்பி, சாருக்கு வி.ஐ.பி. டிக்கெட் அம்பது ரூபாவுல குடுத்து விழா அமைப்பு நன்கொடை ஐநூறு ரூவா வாங்கு", எனக் கேட்ட குரலுக்கு, "வேண்டாங்க, நான் வளவனூர் வண்டுமுருகன், சாதா டிக்கெட்டே குடுங்க" என உள்ளே நுழைந்தேன்.

அருணோதயத்தில் பதிப்பாளர் அரு.சோலையப்பன் காத்திருந்தார். கார்ப்பரேட் கனவுகளின் ப்ரூஃப் காகிதங்களை பெற்றுக் கொண்டு கொஞ்ச நேரம் அங்கே அவருடன் அளவளாவல். சிலம்பொலி செல்லப்பன் அவர்களின் அணிந்துரை மகிமைகளை பதிப்பாளர் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு சில நிமிடங்கள் முன்புதான் அங்கே சிலம்பொலி வந்து சென்றார் எனத் தெரிந்தது.

அருணோதயத்தில் மங்கையர் கூட்டம் சற்று அதிகமாகவே மொய்த்திருந்தது. இன்டர்நெட், மெகாத் தொடர்கள் ஆகியவற்றைத் தாண்டியும் பெண்கள் இன்னமும் மாதர் நாவல்களைப் படிப்பது அங்கே தெரிந்தது. முக்கியமாக ரமணி சந்திரன் நாவல்கள். சிலர் "தொடுகோடுகள், சாந்தினி, மதுமதி" என நாவல் பெயர் சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். மும்பையில் இருந்து வந்திருந்த ஒரு பெண்மணி கட்டுக் கட்டாய் ரமணி சந்திரன் நாவல்கள் வாங்கியது வாய் பிளக்க வைத்தது. யாருக்கோ போன் போட்டு "பூங்காற்று இருக்கா, தீப ஓளி வாங்கிட்டோமில்ல" என உறுதி செய்துகொண்டு புத்தகங்கள் அள்ளிக் கொண்டிருந்தார்.

அங்கேயே "தென்னை மரம் வளர்ப்பது எப்படி" (என் மாமாவுக்கு), "பிழையின்றி தமிழில் எழுதுவது எப்படி" (இது எனக்கு) வாங்கிவிட்டு மெதுவாய் நகர்ந்தேன்.

சொக்கன் அவர்களை கைபேசியில் அழைக்க கிழக்கில் சந்திக்க முடிவாயிற்று. கிழக்குக் காத்திருப்பில் உலோகம் (ஜெமோ), கம்ப்யூட்டர் கிராமம் (சுஜாதா) கையில் எடுத்து பில் போடுமுன் சொக்கன் வந்தார். பில்லிங் கவுண்டர் மேஜை மீது புத்தகத்தை வைத்துவிட்டு வெளியே வந்தேன். ஒரு பத்து நிமிட நலம் விசாரிப்புகள், என் பக்கமிருந்து அணிந்துரைக்கான நன்றி நவிலல்கள், அவரிடமிருந்து என் எழுத்திற்கு பாராட்டுக்களும் எனக்கான டெவலப்மென்ட் குறிப்புகளும் வாங்கி மற்றும் தந்து கொண்டபின், அவர் பொன்னான நேரத்தைக் கொல்லும் மனமின்றி அங்கிருந்து நகர்ந்தேன்.

அந்த பத்து நிமிடத்தில் "கிளியோபாட்ரா" முகில் அவர்களை முதலில் அறிமுகம் செய்தார் சொக்கன். முகில் போல லேசாகவே இருந்தார்.

பா.ரா. ஏதோ தீர்க்க சிந்தையோடு ஹரன் பிரசன்னாவின் பக்கவாட்டில் அமர்ந்திருக்க அங்கும் ஒரு அறிமுகம். சம்பிரதாய வார்த்தைகளை இதயத்திலிருந்து எடுத்து "உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி சார்" எனச் சொல்லித் திரும்பினேன்.

நானாக சென்று ஹரன் பிரசன்னாவிடம் கை நீட்டினேன். "பிரசன்னா" என்று வெளியே குரல் கேட்டது. "யாவாரம் நடக்கற எடத்துல என்ன வந்து டிஸ்டர்பன்ஸ் வேண்டி கெடக்கு ராஸ்கல்" என்று ஒரு முரட்டுக் குரல் உள்ளேயிருந்து யாருக்கும் கேட்காமல் எனக்கு மட்டும் கேட்க. "ரொம்ப நன்றி சார்" என அங்கிருந்தும் நகர்ந்தேன்.

வாங்கிய புத்தகங்களை கையிலெடுத்துக் கொண்டு மீண்டும் ஒரு சுற்று கிழக்கைச் சுற்றினேன். நம்பக்கூடாத கடவுளை (அரவிந்தன் நீலகண்டன்) கையில் எடுத்துக் கொண்டிருந்தபோது அலுவலக அழைப்பு.

"ஹலோ, சொல்லுங்க!"

"கிரி?"

"சரியா கேக்கலை. இருங்க வெளியே வர்றேன்", கையில் புத்தகங்கள். பில் போடவில்லை. வெளியே நடக்கத் துவங்கிவிட்டேன்.

"சார்! பில்லு", குரல் கேட்டு.

"ஓ! சாரி சார்! இந்தாங்க", என போனில் பேசிக்கொண்டே பில்லிட்டு, பணம் தந்து, புத்தகங்கள் வாங்கி, பேசி முடித்து மீண்டும் "அயம் எக்ஸ்ட்ரீம்லி சாரி சார்" எனச் சொல்லி, "தட்ஸ் ஓகே சார்" என்ற வார்த்தைகளும் "தெரியுண்டா உங்களைப் பத்தி", என்ற பார்வைகளும் வாங்கிக் கொண்டு வெளியே வந்தேன்.


கால் வலி துவங்குமுன் முடித்துவிட வேண்டும் என நடக்கத் துவங்கினேன். நடக்க ஆரம்பித்த இரண்டு நிமிடத்திலேயே எதிர்ப்பட்ட ஒரு ஜீன்ஸ், டி.ஷர்ட் இளம்பெண் கையில் தேகத்தைப் புரட்டிக்கொண்டு இன்னொரு கையில் லாப்-டாப்'புடனும் வந்து "தடார்" என்று என் மீது முட்டிக்கொண்டு நின்றார்.

"ஓ! சாரி! நம்ம சாரு சார் நாவல் படிக்கற சுவாரசியத்துல எனக்கு எதுவும் தெரியலை", என்று கடைசி பக்கத்தை படித்த வேகத்தில் மூடி வைத்துவிட்டு அப்படியே தரையில் அமர்ந்து லாப்-டாப் திறந்து சாருவுக்கு கடிதம் எழுதத் துவங்கலானார்!

நிறைய பேர் நிறைமாத கர்ப்பிணி மனைவிகளை தரதரவென இழுத்துக்கொண்டு "உயிர்மை ஸ்டால்" எங்கே எனக் கேட்டவாறு விரைந்து கொண்டிருந்தது தெரிந்தது.

இந்த முறையும் வழக்கம் போலவே வேத கோஷ முழக்கங்களுடன் சில பார்ட்டிகள் கடை விரித்து நடைபாதை வாசகர்களை கைபிடித்து இழுத்துக் கொண்டிருந்தார்கள். குழந்தைகள் சி.டி.களுக்கு "ஜிங்கிள் ஜங்கிள்" என சத்தங்களுடன்  தனி ஸ்டால் அமைக்க முடியும் என்று இந்த முறையும் சிலர் நிரூபித்துக் கொண்டிருந்தார்கள்.

அதன் பின் எங்கும் உள்ளே நுழையாமல் ஒரு தீவிர ஜன்னல் வணிக நடைபயிற்சி கொஞ்ச நேரம். விகடனிலும் குமுதத்திலும் கூட்டம் அதிகமாகவே இருந்தது. என் இந்த வருடப் பட்டியலில் அங்கே வாங்க ஏதுமில்லாததால் அங்கும் நுழையாது இறுதியில் தமிழினியில் நேரே "சூடிய பூ சூடற்க"வை மட்டும் பறித்துக் கொண்டு வெளியே நடந்தேன்.

மாலை நேரம் நெருங்க உள்ளே நுழையும் கூட்டம் மெதுவாக அதிகமாகிக் கொண்டிருந்தது. ஊட்டி ட்ரை ப்ரூட், பழரசம், ஐஸ் கிரீம், ப்பீ நட்ஸ் என வெளியேவும் விற்பனை கன ஜோர்.

பார்க்கிங்கில் வண்டியை எடுக்கும்போது இரு தோழிகளின் சம்பாஷனை...

"என்னடி வாங்கினே?"

"ஊட்டி ட்ரை ப்ரூட்'ல பிரியாணி தாளிக்கற சாமான்"

Jan 12, 2011

முன்னூறாவது பதிவும் என் முதல் புத்தகமும்!

யெஸ்! இது என் முன்னூறாவது பதிவு. 

image courtesy: http://www.law.ed.ac.uk

இங்கே கோ-இன்சைட் ஆகி வந்திருக்கும் மற்றொரு நற்செய்தி, நான் எழுதி விரைவில் வெளிவரவிருக்கும் "கார்பரேட் கனவுகள்" புத்தகம் கடைசி ப்ரூஃப் கட்டத்தை இன்று எட்டியுள்ளது.

நூறாவது பதிவு வரைகையில் ஏதோ தலைக்குமேல் கொம்பு வளர்ந்த நினைப்பில் எழுதின ஞாபகம் வருகிறது. இருநூறு மொக்கையிலும் மொக்கை. இதோ இப்போது முன்னூறாவது பதிவு எழுதுகையில் இந்த நம்பர் கேமில் எல்லாம் ஒன்றும் இல்லை என்ற தெளிவு வந்திருக்கிறது போல் சற்றே தெரிகிறது.


சேர்த்துக் கொண்ட சொத்து விபரம்:

இங்குமங்குமாக சுமார் நானூற்று சொச்ச ஃபாலோவர்கள் சேர்த்துக் கொண்டது, அலேக்சாவில் ஏதோ கொஞ்சம் சொல்லிக்கொள்ளும்படி ஒரு ரேங்கிங்  (உபயம்: எந்திரன், ஜெமோ, அறிவியல் பற்றின என் ஒரு பதிவு மற்றும் அதற்கு கூகிள் தரும் ஓஹோ ஆதரவு, தமிழர்களின் குஷ்பூ தேடல்கள், கிரிக்கெட்), சிலப்பல நல்ல நண்பர்கள், கொஞ்சமே கொஞ்சம் கெட்ட வார்த்தை வசவுகள் (உபயம்: சாரு குஞ்சுமோன்கள்) ஆகியவற்றை முதல் ஐந்து சொத்துப் பட்டியலில் சொல்லலாம்.

நான் சற்றே டுவிட்டரின் வம்புமடத்திற்குத் தாவிய சமீபத்தில் பதிவுகள் நசநசத்துப் போனதென்னவோ நிஜம். #டென்ட் தட்ட வேண்டும்.

வலைப்பூவில் எழுதிய பயனில் முக்கியமாகக் கிடைத்தது புத்தகம் எழுதும் வாய்ப்பு.

கார்பரேட் கனவுகள் - புத்தக வெளியீடு குறித்து....



அலுவலக நண்பர் பழனியின் மூலமாக செங்கை பதிப்பகம் அரு.சோலையப்பன் (அருணோதயம் அருணன் அவர்களின் புதல்வர்) அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அவர் ஊக்குவித்ததன் பயனாக விரைவில் "கார்பரேட் கனவுகள்" வெளிவரவிருக்கிறது.

பி.பீ.ஓ. நாட்குறிப்புகளாக நம் தளத்தில் வெளி வந்த தொடர் இடையில் நிறுத்தப்பட்டதன் ரகசியம் இந்தப் புத்தகம் வெளிவருவதே. ஆறேழு அத்தியாயங்கள் மட்டுமே இங்கே வெளிவந்த அத்தொடர் இருபது அத்தியாயங்களுடன் புத்தக வடிவில் வெளிவர உள்ளது.

நம் தளத்தில் வெளிவந்த முன்னுரை இங்கே

வெறுமனே கதை சொல்லும் அனுபவக் குறிப்புகளாக மட்டுமில்லாமல் அல்லது வெறுமனே பி.பீ.ஓ. என்றால் என்ன என்னும் வகையில் விளக்கக் குறிப்புப் புத்தகமாக இல்லாமல் இரண்டையும் கலந்து கொடுக்கும் முயற்சியே இந்தப் புத்தகம்.

பி.பீ.ஓ’க்கள் பற்றித் தெரியாதவர்களுக்கு அறிந்து கொள்ளவேண்டிய அடிப்படைத் தகவல்கள் தொடங்கி இங்கே இருக்கும் வேலை முறைகள், வேலைச் சிக்கல்கள், இத்துறை சார்ந்த மனிதர்கள் சந்திக்கும் நடைமுறைச் சவால்கள், ஒபாமா மசோதாக்களால் இந்தத்துறை காணும்  பாதிப்புகள், சக ஊழியர்கள் கொண்டாடும் கொண்டாட்டங்கள், குதூகலங்கள், துயரங்கள், வெற்றி ரகசியங்கள், நான் சந்தித்த சில சுவாரசிய மனிதர்கள், சில சுவாரசியமான சம்பவங்கள் ஆகியவை பற்றிப் பேசுகிறது இந்தப் புத்தகம். 

புத்தகத்திற்கு பிரபல நட்சத்திர எழுத்தாளர் என்.சொக்கன் அவர்கள் அணிந்துரை எழுதியிருப்பது புத்தகத்தின் முக்கிய பலம் என நான் கருதுகிறேன். வல்லினம், மெல்லினம் இடையினம் என ஐ.டி.துறை குறித்து எழுதிய கைகளால் இந்த பி.பீ.ஓ. புத்தகத்திற்கு அணிந்துரை கிடைத்தது சாலப் பொருத்தம் எனவும் நான் நம்புகிறேன். 

விரைவில் புத்தக வெளியீட்டுத் தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்!
.
.
.

Jan 11, 2011

பேயோன்- எஸ் ரா, எஸ்சு!


சந்தேகம் ஒரு தொற்று நோய் போலும். எந்த இலக்கிய கூட்டத்தில் யாரை பார்த்தாலு்ம நான் இவனாக இருப்பேனோ என்கிற சந்தேகம் எழுகிறது.





திரு எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள்தான் திரு பேயோன் என்ற பெயரில் நகைச்சுவை இலக்கியம் படைக்கிறார் என்பது நாமனைவரும் நன்கறிந்த உண்மையே.

இந்த உண்மையை மெய்ப்பிக்கும் அண்மைய நிகழ்வு:
திரு மாமல்லன் அவர்கள் எழுதியுள்ள பேயோன் நீங்கள் எம்டிஎம் ஆக இல்லாவிட்டால்..... என்ற பதிவை சற்றே படிக்கவும்.

திரு மாமல்லன் அவர்கள் தன் புத்தகத்துக்கு ஒரு மதிப்பீடு எழுதித் தரும்படி திரு பேயோன் சார் அவர்களிடம் கேட்கிறார். அதற்கு பதில் அஞ்சலில் திரு பேயோன் சார் தான் யார் என்பதைக் குறித்து தேவைப்பட்ட பல முக்கிய தகவல்களைத் தந்தாலும், மாமல்லன் அவர்களின் கதைகள் குறித்து தன் மதிப்பீடாக ஒரே ஒரு வாக்கியம்தான் எழுதுகிறார்:
இப்போதுதான் 'வலி' படித்து முடித்தேன். மனதைப் பிசைந்தது. என் குழந்தைப் பருவம் நினைவுக்கு வந்தது. இரண்டாம் வாசிப்பில் இன்னும் பல விஷயங்கள் புரிபடலாம்.
நீங்களே சொல்லுங்கள் சார், எதைப் பார்த்தாலும் படித்தாலும் யாருக்கு சார் தன்னுடைய குழந்தைப் பருவம் நினைவுக்கு வரும்?

திரு பேயோன் அவர்களுக்கு வலி என்ற சிறுகதையைப் படித்ததும் அவருடைய குழந்தைப் பருவம் நினைவுக்கு வந்ததில் ஏதேனும் ஆச்சரியம் இருக்கிறதா என்ன?

இல்லை, எனக்கு இதை விட முக்கியமான வேலை இருக்கிறது, என்று சொல்லி அவர் மதிப்புரை எழுதும் பொறுப்பைத் தவிர்த்ததில்தான் ஏதேனும் ஆச்சரியம் இருக்கிறதா?

உண்மையில் பேயோன் அவர்கள் மிகவும் நுட்பமான மனிதர்தான், ஐயமே இல்லை!

சிறப்புப் பதிவர்: நட்பாஸ் 
.
.
.

Jan 8, 2011

இசைக் கோலங்கள் - தேங்க் யு ஃபார் தி ம்யுசிக்!


நான் சின்னஞ்சிறு வயதில் பேசத் துவங்கு முன்னமே பாடத் தொடங்கினேனாம், என் அம்மா சொல்லுவார்!

இசையின் துணையின்றி யாரேனும் வாழ இயலுமா? பாடலின்றி நடனமன்றி வாழும் வாழ்க்கை என்னவாய் இருக்கும்?

எழுபதுகளில் கொடிகட்டிப் பறந்த மேற்கத்திய இசைக் குழுவான ABBA அவர்களின் பாடலில் ஒன்றான "தேங்க் யு ஃபார் தி ம்யுசிக்" பாடல் வரிகள்தான் இவை.



சரி! பாடலுக்கும் உங்களுக்கும் இடையில் குறுக்கே நிற்காமல் வழி விடுகிறேன்!



I'm nothing special, in fact I'm a bit of a bore 
If I tell a joke, you've probably heard it before 
But I have a talent, a wonderful thing 
'Cause everyone listens when I start to sing 
I'm so grateful and proud 
All I want is to sing it out loud 

So I say 
Thank you for the music, the songs I'm singing 
Thanks for all the joy they're bringing 
Who can live without it, I ask in all honesty 
What would life be? 
Without a song or a dance what are we?
So I say thank you for the music 
For giving it to me 

Mother says I was a dancer before I could walk 
(M'M)She says I began to sing long before I could talk 
And I've often wondered, how did it all start 
Who found out that nothing can capture a heart 
Like a melody can 
Well, whoever it was, I'm a fan 

So I say 
Thank you for the music, the songs I'm singing 
Thanks for all the joy they're bringing 
Who can live without it, I ask in all honesty 
What would life be?
Without a song or a dance what are we?
So I say thank you for the music 
For giving it to me 

I've been so lucky, I am the girl with golden hair 
I wanna sing it out to everybody 
What a joy, what a life, what a chance! 

Thank you for the music, the songs I'm singing 
Thanks for all the joy they're bringing 
Who can live without it, I ask in all honesty 
What would life be? 
Without a song or a dance what are we?
So I say thank you for the music 
For giving it to me 

Thank you for the music 
For giving it to me...


Related Posts Plugin for WordPress, Blogger...