Jan 13, 2011

சென்னை புத்தக விழாவில் நானும்...

எழுத்தாளர் சுஜாதா அவர்கள் என்னிடம் பர்சனலாக அவர் புத்தகம் ஒன்றின் வாயிலாக சொல்லியபடி 'வாங்கிய புத்தகங்கள் அனைத்தையும் படித்து முடிக்குமுன் மேலும் புத்தகங்கள் வாங்குதல் இல்லை' என்ற மகோன்னத சபதம் ஏற்றிருந்தேன்.

ஒவ்வொரு வருடமும் இப்படி சபதம் ஏற்பதுண்டு. சாந்தி தியேட்டர் வளாகத்தில் சரவணபவன் சென்று தயிர்வடை சாப்பிட்டுவிட்டு அப்படியே வாசலில் இருக்கும் சாந்தி புக்பேலஸ் வாசல் மிதிக்கும் வரை அல்லது ஒவ்வொரு வருடத் தொடக்கத்திலும் ஏதேனும் ஒரு காரணம் சொல்லி புத்தக விழா அரங்கினுள் நுழையும் வரை அந்த சபதம் உயிருடன் இருக்கும்.

இந்த வருடம் எனக்கு புத்தக விழா செல்ல அமைந்த முக்கியக் காரணங்கள் இரண்டு. என்.சொக்கன் அவர்களின் சென்னை புத்தக விழா விஜயம் முதற்காரணம். அவரை சந்திக்க வேண்டும் என்பது என் இந்த வருட விழா அஜெண்டாவில் இருந்தது. பதிப்பாளர் அழைத்திருந்தார்.  கார்பரேட் கனவுகள் இறுதி ப்ரூஃப் தயாராக இருப்பதாகவும், முடிந்தால் புத்தக விழா அரங்கில்  வந்து சேகரித்துக் கொள்ளுமாறும் சொல்லியிருந்தார். இது முக்கியக் காரணம்.


பூந்தமல்லி நெடுஞ்சாலையில் யு.டர்ன் எடுக்கையிலே தன் முத்திரை வரிகளுடன் வரவேற்றார் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் "புத்தகங்களால் இந்த உலகைப் படியுங்கள், உலகையே புத்தகமாகப் படியுங்கள்" என ஏதோ படித்தேன். ஆஹா படி தேன்.



உள்ளே நுழைந்து பைக்கின் கழுத்தைத் திருகிவிட்டு உள்ளே நுழைய முற்படுகையில் வழியில் நின்று வழி மறித்து நடிகர் பார்த்திபன் தொடங்கி, சாரு, மனுஷ்யபுத்திரன், தமிழச்சி தங்கபாண்டியன், எழுத்துச் சித்தர், ஜெமோ, எஸ்.ரா, மாமல்லன், வாலி, வைரமுத்து என அனைவரும் வரிசைகட்டி வரவேற்றனர்.  

தமிழ் எழுத்துச் சூழலின் ஆசான் சுஜாதாவின் வரவேற்பிற்கு இணை ஏதுமில்லை என்பேன். மூன்று அல்லது நான்கு பெரிய சைஸ் பேனர்கள் அவருக்கு. வெவ்வேறு பதிப்பக உபயத்தில். அத்தனை பெரிய பேனர்கள் "லைவ்" எழுத்தாளர்கள் யாருக்கும் கூட இல்லை என்பது சுஜாதா இன்னமும் எத்தனை "லைவ்லி"யான எழுத்தாளர் என நிரூபித்துக் கொண்டிருந்தது.


வார நாளாக இருந்ததனால் வாசலில் வழியெங்கும் பதிப்பகத் தகவல் காகிதங்களைத் தருபவர்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. எனவே,  படிக்காமல் கிழித்தவைகள் குறைவாகவே இருந்தது சற்றே ஆறுதல்.

கூட்டம் சுமாராக நன்றாகவே இருந்தது. வார நாளாக இருந்தாலும் அந்த மதிய வேளையிலும் எல்லா சைஸ்'களிலும்.... ச்சே ச்சே... சீ சீ... மன்னிக்கவும்... எல்லா வயஸ்'களிலும் பெண்கள் வந்திருந்தார்கள். அஃப் கோர்ஸ், ஆண்களும் கூட சிலப்பலர் வந்திருந்ததாக நினைவு.

அடுத்த வருடங்களில் டிக்கெட் வாங்காமல் உள்ளே செல்ல வகை அமைகிறதா எனத் தெரியவில்லை. இந்த முறை நம் ஜம்பத்தை பரிசோதிக்கலாம் என்று டிக்கெட் கவுண்டரில் "ஹல்லோ சார், நான் இந்த மாதிரி அந்த மாதிரி...கிட்டத்தட்ட எழுத்தாளன் மாதிரி... டிக்கெட் எடுக்கணுமா?" எனக் கேட்டதற்கு, "தம்பி, சாருக்கு வி.ஐ.பி. டிக்கெட் அம்பது ரூபாவுல குடுத்து விழா அமைப்பு நன்கொடை ஐநூறு ரூவா வாங்கு", எனக் கேட்ட குரலுக்கு, "வேண்டாங்க, நான் வளவனூர் வண்டுமுருகன், சாதா டிக்கெட்டே குடுங்க" என உள்ளே நுழைந்தேன்.

அருணோதயத்தில் பதிப்பாளர் அரு.சோலையப்பன் காத்திருந்தார். கார்ப்பரேட் கனவுகளின் ப்ரூஃப் காகிதங்களை பெற்றுக் கொண்டு கொஞ்ச நேரம் அங்கே அவருடன் அளவளாவல். சிலம்பொலி செல்லப்பன் அவர்களின் அணிந்துரை மகிமைகளை பதிப்பாளர் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு சில நிமிடங்கள் முன்புதான் அங்கே சிலம்பொலி வந்து சென்றார் எனத் தெரிந்தது.

அருணோதயத்தில் மங்கையர் கூட்டம் சற்று அதிகமாகவே மொய்த்திருந்தது. இன்டர்நெட், மெகாத் தொடர்கள் ஆகியவற்றைத் தாண்டியும் பெண்கள் இன்னமும் மாதர் நாவல்களைப் படிப்பது அங்கே தெரிந்தது. முக்கியமாக ரமணி சந்திரன் நாவல்கள். சிலர் "தொடுகோடுகள், சாந்தினி, மதுமதி" என நாவல் பெயர் சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். மும்பையில் இருந்து வந்திருந்த ஒரு பெண்மணி கட்டுக் கட்டாய் ரமணி சந்திரன் நாவல்கள் வாங்கியது வாய் பிளக்க வைத்தது. யாருக்கோ போன் போட்டு "பூங்காற்று இருக்கா, தீப ஓளி வாங்கிட்டோமில்ல" என உறுதி செய்துகொண்டு புத்தகங்கள் அள்ளிக் கொண்டிருந்தார்.

அங்கேயே "தென்னை மரம் வளர்ப்பது எப்படி" (என் மாமாவுக்கு), "பிழையின்றி தமிழில் எழுதுவது எப்படி" (இது எனக்கு) வாங்கிவிட்டு மெதுவாய் நகர்ந்தேன்.

சொக்கன் அவர்களை கைபேசியில் அழைக்க கிழக்கில் சந்திக்க முடிவாயிற்று. கிழக்குக் காத்திருப்பில் உலோகம் (ஜெமோ), கம்ப்யூட்டர் கிராமம் (சுஜாதா) கையில் எடுத்து பில் போடுமுன் சொக்கன் வந்தார். பில்லிங் கவுண்டர் மேஜை மீது புத்தகத்தை வைத்துவிட்டு வெளியே வந்தேன். ஒரு பத்து நிமிட நலம் விசாரிப்புகள், என் பக்கமிருந்து அணிந்துரைக்கான நன்றி நவிலல்கள், அவரிடமிருந்து என் எழுத்திற்கு பாராட்டுக்களும் எனக்கான டெவலப்மென்ட் குறிப்புகளும் வாங்கி மற்றும் தந்து கொண்டபின், அவர் பொன்னான நேரத்தைக் கொல்லும் மனமின்றி அங்கிருந்து நகர்ந்தேன்.

அந்த பத்து நிமிடத்தில் "கிளியோபாட்ரா" முகில் அவர்களை முதலில் அறிமுகம் செய்தார் சொக்கன். முகில் போல லேசாகவே இருந்தார்.

பா.ரா. ஏதோ தீர்க்க சிந்தையோடு ஹரன் பிரசன்னாவின் பக்கவாட்டில் அமர்ந்திருக்க அங்கும் ஒரு அறிமுகம். சம்பிரதாய வார்த்தைகளை இதயத்திலிருந்து எடுத்து "உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி சார்" எனச் சொல்லித் திரும்பினேன்.

நானாக சென்று ஹரன் பிரசன்னாவிடம் கை நீட்டினேன். "பிரசன்னா" என்று வெளியே குரல் கேட்டது. "யாவாரம் நடக்கற எடத்துல என்ன வந்து டிஸ்டர்பன்ஸ் வேண்டி கெடக்கு ராஸ்கல்" என்று ஒரு முரட்டுக் குரல் உள்ளேயிருந்து யாருக்கும் கேட்காமல் எனக்கு மட்டும் கேட்க. "ரொம்ப நன்றி சார்" என அங்கிருந்தும் நகர்ந்தேன்.

வாங்கிய புத்தகங்களை கையிலெடுத்துக் கொண்டு மீண்டும் ஒரு சுற்று கிழக்கைச் சுற்றினேன். நம்பக்கூடாத கடவுளை (அரவிந்தன் நீலகண்டன்) கையில் எடுத்துக் கொண்டிருந்தபோது அலுவலக அழைப்பு.

"ஹலோ, சொல்லுங்க!"

"கிரி?"

"சரியா கேக்கலை. இருங்க வெளியே வர்றேன்", கையில் புத்தகங்கள். பில் போடவில்லை. வெளியே நடக்கத் துவங்கிவிட்டேன்.

"சார்! பில்லு", குரல் கேட்டு.

"ஓ! சாரி சார்! இந்தாங்க", என போனில் பேசிக்கொண்டே பில்லிட்டு, பணம் தந்து, புத்தகங்கள் வாங்கி, பேசி முடித்து மீண்டும் "அயம் எக்ஸ்ட்ரீம்லி சாரி சார்" எனச் சொல்லி, "தட்ஸ் ஓகே சார்" என்ற வார்த்தைகளும் "தெரியுண்டா உங்களைப் பத்தி", என்ற பார்வைகளும் வாங்கிக் கொண்டு வெளியே வந்தேன்.


கால் வலி துவங்குமுன் முடித்துவிட வேண்டும் என நடக்கத் துவங்கினேன். நடக்க ஆரம்பித்த இரண்டு நிமிடத்திலேயே எதிர்ப்பட்ட ஒரு ஜீன்ஸ், டி.ஷர்ட் இளம்பெண் கையில் தேகத்தைப் புரட்டிக்கொண்டு இன்னொரு கையில் லாப்-டாப்'புடனும் வந்து "தடார்" என்று என் மீது முட்டிக்கொண்டு நின்றார்.

"ஓ! சாரி! நம்ம சாரு சார் நாவல் படிக்கற சுவாரசியத்துல எனக்கு எதுவும் தெரியலை", என்று கடைசி பக்கத்தை படித்த வேகத்தில் மூடி வைத்துவிட்டு அப்படியே தரையில் அமர்ந்து லாப்-டாப் திறந்து சாருவுக்கு கடிதம் எழுதத் துவங்கலானார்!

நிறைய பேர் நிறைமாத கர்ப்பிணி மனைவிகளை தரதரவென இழுத்துக்கொண்டு "உயிர்மை ஸ்டால்" எங்கே எனக் கேட்டவாறு விரைந்து கொண்டிருந்தது தெரிந்தது.

இந்த முறையும் வழக்கம் போலவே வேத கோஷ முழக்கங்களுடன் சில பார்ட்டிகள் கடை விரித்து நடைபாதை வாசகர்களை கைபிடித்து இழுத்துக் கொண்டிருந்தார்கள். குழந்தைகள் சி.டி.களுக்கு "ஜிங்கிள் ஜங்கிள்" என சத்தங்களுடன்  தனி ஸ்டால் அமைக்க முடியும் என்று இந்த முறையும் சிலர் நிரூபித்துக் கொண்டிருந்தார்கள்.

அதன் பின் எங்கும் உள்ளே நுழையாமல் ஒரு தீவிர ஜன்னல் வணிக நடைபயிற்சி கொஞ்ச நேரம். விகடனிலும் குமுதத்திலும் கூட்டம் அதிகமாகவே இருந்தது. என் இந்த வருடப் பட்டியலில் அங்கே வாங்க ஏதுமில்லாததால் அங்கும் நுழையாது இறுதியில் தமிழினியில் நேரே "சூடிய பூ சூடற்க"வை மட்டும் பறித்துக் கொண்டு வெளியே நடந்தேன்.

மாலை நேரம் நெருங்க உள்ளே நுழையும் கூட்டம் மெதுவாக அதிகமாகிக் கொண்டிருந்தது. ஊட்டி ட்ரை ப்ரூட், பழரசம், ஐஸ் கிரீம், ப்பீ நட்ஸ் என வெளியேவும் விற்பனை கன ஜோர்.

பார்க்கிங்கில் வண்டியை எடுக்கும்போது இரு தோழிகளின் சம்பாஷனை...

"என்னடி வாங்கினே?"

"ஊட்டி ட்ரை ப்ரூட்'ல பிரியாணி தாளிக்கற சாமான்"

5 comments:

natbas said...

நிறைய இடங்களில் சிரித்தேன். நல்ல பதிவு, எப்படியோ புத்தகக் கண்காட்சிக்குப் போனா சூப்பரா எழுத ஆரம்பிச்ச்சடறீங்க, எப்படிண்ணே தெர்ல!

(மதி சுதா ஜஸ்ட் மிஸ்ட்!)

தர்ஷன் said...

//"லைவ்லி"யான எழுத்தாளர் என நிரூபித்துக் கொண்டிருந்தது.//

லவ்லியான எழுத்தாளரும் கூட
உங்கள் நடையும் அருமை

THOPPITHOPPI said...

//கால் வலி துவங்குமுன் முடித்துவிட வேண்டும் என நடக்கத் துவங்கினேன்.//

ஹஹா

நானும் இப்படித்தான் செய்வேன்

Jaleela Kamal said...

நகச்சுவையுடன் உங்கள் புத்தக கண்காட்சி பதிவு மிக அருமை.

உங்கள் செல்ல குட்டிபெண் அழகு,
அந்த பிளாக்க் அண்ட் வொயிட் புகைப்படம் அதை விட அழகு.

Unknown said...

ippadiye ezhunga.nalla uyaththirku poka vaayppundu.

Related Posts Plugin for WordPress, Blogger...