Aug 29, 2011

கடமை உணர்ச்சிக்கு அளவில்லையா?ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்

"ஹலோ"

"சார் மிஸ்டர் கிரி ராமசுப்ரமணியன் பேசறீங்களா?"

"ஆமா, சொல்லுங்க சார்"

"நான் எக்ஸ்வொய்இசட் இன்சூரன்ஸ் கம்பெனிலருந்து சோமசுந்தரம் பேசறேன்"

"பேசுங்க சார்"

"நான் உங்ககிட்ட முன்னவே பேசியிருக்கேன்"

"ஓ"

"சரியா சொல்லணும்னா போன ஆகஸ்ட்'ல உங்களை கூப்பிட்டேன்"

"அப்பிடியா?"

"ஆமா சார்! ஸேம் ட்வென்டி நைன்த் கூப்பிட்டிருந்தேன்"

"என்னங்க சொல்றீங்க?"

"இல்லை போன வருஷம் ஆகஸ்ட் இருபத்தி ஒன்பது உங்களை கூப்டேன். ஒரு இன்வெஸ்ட்மென்ட் பிளான் பத்தி உங்களுக்கு விளக்கினேன்"

"ஓஹோ! சாரி சார் எனக்கு நினைவில்லை"

"பரவால்லை சார்! நீங்க கூட, கமிட்மெண்ட்ஸ் இருக்கறதால ஒரு வருஷத்துக்கு எதுவும் இன்வெஸ்ட் பண்ண முடியாதுன்னு சொன்னீங்க"

"அதனால?"

"அதனால, சரியா ஒரு வருஷம் முடிஞ்சிடுச்சி. இப்போ இன்வெஸ்ட் பண்ற ஐடியா இருக்கான்னு கேக்க போன் பண்ணினேன் சார்"

"ட்வென்டி நைன்த்?"

"ஆமா சார்"

"அதாவது, இருவத்து ஒம்பது?"

"எஸ் சார்!"

"போன வருஷம்?"

'எஸ் எஸ் சார்..."

"யோவ்! வெய்யா போனை"
.
.
.

Aug 22, 2011

நாலும் போச்சு!

England win by an innings and 8 runs and win series 4-0 ..... that doesn't come easily. England are officially the best team in Test cricket and India, after this loss, slip down to third. There was some fight this morning as Amit Mishra and Sachin Tendulkar flourished but when Mishra fell to offer a crack in the line up, England burst through violently. Seven wickets fell for 21 runs to seal the clean-sweep. Incredibly India have not made more than 300 in all eight innings.


Courtesy : cricinfo.com

Aug 20, 2011

இது பயணக்கட்டுரை அல்ல - 3

செஞ்சோற்றுக் கடன்


“இது பயணக்கட்டுரை அல்ல” என்று இத்தொடர் அழைக்கப்படக் காரணம் ரொம்பவும் மெனக்கெடாமல் கேஷுவலாக நேரம் கிடைக்கையில் நான் எழுத வசதியாகத்தான்.

சரி, விமானப் பயணத்தை வைத்து இரண்டு அத்தியாயங்கள் ஜல்லியடித்தவன், மேலும் மொங்கான்போடுமுன் இந்தப் பயணத்தின் அவசியத்தைக் கூறுகிறேன். யாருக்குத் தெரியும், இந்த அத்தியாயம் ‘கார்பரேட் கனவுகள் - 2” படைக்க ஒரு உந்துகோலாக அமைந்தாலும் அமையலாம் (ஈஸ்வரன் உங்களை ரட்சிக்கட்டும்).

நான் பணிபுரிவது ஒரு தர்ட் பார்ட்டி பி.பீ.ஓ. நிறுவனத்தில். பி.பீ.ஓ’க்களில் சிலப்பல வகையறாக்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை ”தர்ட் பார்ட்டி மற்றும் கேப்டிவ்” பி.பீ.ஓ.க்கள் (Third party BPO and Captive BPO). 

தர்ட் பார்ட்டி பி.பீ.. (Third party BPO)

நம் நாட்டில் பெரும்பாலும் இயங்கி வருபவை தர்ட் பார்டி பி.பீ.. வகையறாக்கள்தான். எளிமையான பாஷையில் சொன்னால் இவ்வகையினர் ஜாப் வொர்க் எடுத்து செய்பவர்கள். அதாவது விப்ரோ போன்ற ஒரு கம்பெனி கோகோ கோலா போன்ற ஒரு அமெரிக்க கம்பெனியின் வேலைகளைச் செய்ய காண்ட்ராக்ட்  எடுத்தால் அந்த வகையறா தர்ட் பார்ட்டி பி.பீ..வில் சேரும். விப்ரோ, டி.சி.எஸ், அக்சென்சர், காக்னிஸன்ட் போன்ற நிறுவனங்கள் இத்தகையவை.

இந்தத் துறைகளில் இங்கே காண்ட்ராக்ட் என்னும் சொற்பதம் உபயோகப்படுத்தப் படுவதில்லை. அதற்குப் பதிலாக "டீல்" என அழைத்துக் கொள்கிறார்கள்.
 
"தெரியுமா, விப்ரோ முப்பது மில்லியன் நிப்பான் டீல் வின் பண்ணியிருக்காமே?", என்று யாரேனும் சம்பாஷித்துக் கொண்டால் அதற்கு அர்த்தம் இதுதான்; மூன்று கோடி வருமானம் தரக்கூடிய காண்ட்ராக்ட் ஒன்றை விப்ரோ எடுத்துள்ளது.  நிப்பான் காண்ட்ராக்டில் கொடுத்த வேலைகளை விப்ரோ நிறுவனம் இந்தியத் தொழிலாளர்களை வைத்து முடித்துத் தரும்
 
காப்டிவ் அல்லது ஷேர்ட் சர்விஸ் பி.பீ.ஓ (Captive BPO / Shared Services)
ஒரு மேலைநாட்டு நிறுவனம் தன் நிர்வாகச் செலவுகளைக் குறைத்துக் கொள்ள இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் தானே அலுவலகங்களைத் தொடங்கி தன் மேலைநாட்டு வணிகத்தின் வேலைகளை இங்கு தொழிலாளர்களை வைத்து செய்து கொண்டால் அந்த வகை நிறுவனங்கள் காப்டிவ் பி.பீ.'க்கள் எனப்படுகின்றன. ஃபோர்ட், ஸ்டாண்டர்ட் சார்டர்ட், ஷெல் போன்ற நிறுவனங்கள் இந்த வகையில் இந்தியாவில் இயங்குகின்றன

காப்டிவ் ஆக இருந்துவிட்டு அதை தர்ட் பார்ட்டியிடம் விற்கும் பி.பீ.'க்கள் உள்ளன. தர்ட் பார்ட்டிகளிடம் தனித் தனியே தன் வேலைகளை பிரித்துக் கொடுத்துவிட்டு, இந்த வகை பிசினெஸ் சரிவருகிறதா என ஆழம் பார்த்துவிட்டு தன் காப்டிவ் பி.பீ.'க்களை ஆசிய நாடுகளில் கொண்டு வந்து நிறுவும் நிறுவனங்களும் உண்டு ஒவ்வொரு விதமாக வேலை கொடுத்தாலும் ஒவ்வொரு விதத்தில் லாப நஷ்டங்கள் உண்டு. தர்ட் பார்ட்டி’யிடம் வேலையைத் தந்தால் நிர்வாக சிக்கல்கள் இல்லை எனினும் நிர்வாகத் தலையீடுகளும் சாத்தியம் இல்லை. உதாரணத்திற்கு, காப்டிவ் என்றால் ஊழியர்களை நேரிடையாகக் கேள்வி கேட்க இயலும். ஆனால் தர்ட் பார்ட்டி என்றால் வணிகத்தை கவனிக்கும் நிர்வாகிகளைத்தான் அயல்நாட்டுக் கம்பெனிகள் கேள்வி கேட்க இயலும். 
(கார்பரேட் கனவுகள் புத்தகத்திலிருந்து) 

மேலே நான் அடிக்கோடிட்டிருக்கும் பகுதியைக் கவனியுங்கள். அதுதான் என் இந்தப் பயணத்திற்கான காரணம். நான் பணிபுரியும் டீல் எங்கள் கம்பெனியுடனான ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டு தங்கள் சொந்த யூனிட் ஒன்றை தில்லியில் சமீபத்தில் துவங்கியுள்ளது. பிரிட்டனில் உள்ள அந்த நிறுவனம், தங்கள் நிர்வாகப் பணிகளில் சிலவற்றை எங்கள் நிறுவனத்திடம் ஒப்படைத்திருந்தது. எங்கள் நிறுவனம் இந்தியப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி இதுவரை செய்து தந்து கொண்டிருந்த அந்த வேலைகளை, பிரிட்டன் நிறுவனம் தற்போது தில்லியில் தானே ஒரு சொந்த யூனிட்டை நிறுவி, அதேபோல் இந்தியப் பணியாளர்களைக் கொண்டு முடித்துக் கொள்கிறது. 

எங்கள் நிறுவனத்தின் மூலமாக கடந்த மூன்று வருடங்களாக அந்த பிரிட்டன் நிறுவனத்தின் கணக்கு-வழக்குகளை கவனித்து வந்த நான், தில்லியில் என் வேலையை கவனிக்கப் புதிதாக நியமிக்கப்பட்ட அன்பர் ஒருவரிடம் என் பணிகளை ஒப்படைக்க (Role Hand-over) மேற்கொண்டதே இந்தப் பயணம்.

ஆக, கிட்டத்தட்ட ஒரு அசுப விசிட்தான் இது. மூன்றுவருடம் மேற்கொண்ட வேலையை கண்ணீர்சிந்திக் கையைக் கழுவி, “இந்தாப்பா, வெச்சுக்கோ”, என தந்தவனிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு வரும் ‘ஹேண்ட்-ஓவர் விசிட்”. 

எனினும், இது என் முதல் தலைநகர் பயணம் என்பதால் பலவகைகளில் எனக்கு முக்கியம் வாய்ந்ததாக அமைந்தது இந்த பயணம். அவை பற்றி...

(நன்றி: டாக்டர். வரசித்தன்) 

Aug 18, 2011

பேயோனும் டிஸ்கோ தேசிகனும்


எழுத்தாளர் பேயோன் எழுதியுள்ள பைசைக்கிள் தீவ்ஸ் படம் குறித்த கட்டுரை வாசித்தேன். ஐந்து வருடங்கள் முன் அந்தப் படம் பார்த்து விதிர்விதிர்த்து நின்றவன் பேயோனின் கட்டுரையை வாசித்துப் படம் பற்றின பிற தரிசனங்களையும் பெற்றேன். 

குறிப்பாகக் கீழே நான் காப்பி பேஸ்ட்டியுள்ள பத்தி....! 

பயிற்சி இல்லாமல் திருடுவதன் அசௌகரியத்தைச் சுட்டிக்காட்டும் இந்தக் காட்சியானது மகன் வளர்ந்து பெரியவனாவதற்கு முன்பாகவே தந்தை அவன் பார்வையில் சரிந்துவிடுவதையும் சேர்த்தே சுட்டிக்காட்டுகிறது. சைக்கிள் காணாமல் போகும் காட்சிக்குப் பிறகு முக்கியமான காட்சி இது. அண்டானியாவின் முற்றிய முகமுள்ள மகன் படம் நெடுகத் தந்தையுடன் அலைகிறான். நாயகனின் குடும்பச் சுமை அவனை விடாமல் துரத்துவதை மகன் மூலம் காட்டுகிறார் தேவிகா. திருட்டுப் பட்டம் கட்டப்பட்டு தந்தை அவமானப்படுவதைப் பார்த்து மனமுடைந்து அழுகிறான் மகன். வாழ்வாதாரத்தை இழந்தாலும் ஆதர்சமான தந்தையாகும் வாய்ப்பை இழந்தாலும் மகனின் பாசத்தை இழக்கவில்லை என்று நெகிழ்ச்சியோடு முடிகிறது சைக்கிள் தீஃப்.

படத்தின் முடிவு முகத்தில் அறைந்த ஒன்றாக அமைந்தாலும், பேயோன் சுட்டிக்காட்டும் இந்தப் பார்வை (angle) நான் தரிசனம் கொள்ளத் தவறினது.

ஆனால், பேயோனின் கட்டுரையில் எனக்கு விளங்காத ஒரு விஷயம், அவர் எதற்காக பை சைக்கிள் தீவ்ஸ் பட இயக்குனரின் பெயரைப் பத்து விதமாகக் குறிப்பிடுகிறார் என்பதுதான். கீழ்காணும் விதவிதமான பெயர்களில் இந்தக் கட்டுரை நெடூக அவர் இயக்குனரை அழைக்கிறார்.


விக்டோரியா தேசிகா
விக்டோரியோ டிசிகா
தெஸிகா
டிசிகா
டிஸிகோ
டிஸ்கோ
தேசிகா
தேவிகா
தேசிகன்.
டிசிகா
டேசிகா

படத்தின் பெயர் இப்படியெல்லாம் பேயோனால் அழைக்கப்படுகிறது.

தி பைசைக்கிள் தீஃப்
த பைசைக்கிள் ராபர்ஸ்
பைசைக்கிள் ராபரி

கட்டுரையில் மேலும் ஒரு பிழை: கதாநாயகனின் மனைவி நகைகளை அடகு வைத்து சைக்கிள் வாங்குவதாக பேயோனின் கட்டுரை சொல்கிறது. நான் நினைவறிந்த வகையில் குளிர்காலத்திற்கான கனத்த போர்வைகளை அவன் மனைவி எடுத்துத் தந்து அவற்றை கதாநாயகன் விற்பதே படத்தில் காட்டப்படும். 

உண்மையிலேயே அது சீரியஸ் கட்டுரைதானா அல்லது பேயோனின் வழக்கமான காமெடிக் கட்டுரை ஏதாவதா? நான் இங்கேயும் நிஜ தரிசனம் கொள்ளத் தவறிவிட்டேனா?

அண்ணா ஹசாரே / ஜன் லோக்பால்உடன் பணிபுரிந்த தோழி ஒருவர் அனுப்பியிருந்த மின்னஞ்சலை அப்படியே பகிர்கிறேன். எளிய ஆங்கிலத்திலேயே இப்பதிவு இருப்பதால் தமிழ்ப்'படுத்தும் ' சிரமத்தை நான் எடுத்துக் கொள்ளவில்லை. கேள்விகள் ஏதும் இருந்தால் பின்னூட்டத்தில் கேட்கவும்.10 things to know about Anna Hazare & Jan Lok Pal

1. Who is Anna Hazar...e?
An ex-army man. Fought 1965 Indo-Pak War

2. What's so special about him?
He built a village Ralegaon Siddhi in Ahamad Nagar district, Maharashtra

3. So what?
This village is a self-sustained model village. Energy is produced in the village itself from solar power, biofuel and wind mills. In 1975, it used to be a poverty clad village. Now it is one of the richest village in India. It has become a model for self-sustained, eco-friendly & harmonic village.

4. Ok,...?
This guy, Anna Hazare was awarded Padma Bhushan and is a known figure for his social activities.

5. Really, what is he fighting for?
He is supporting a cause, the amendment of a law to curb corruption in India.

6. How that can be possible?
He is advocating for a Bil, The Jan Lokpal Bill (The Citizen Ombudsman Bill), that will form an autonomous authority who will make politicians (ministers), beurocrats (IAS/IPS) accountable for their deeds.

7. It's an entirely new thing right..?
In 1972, the bill was proposed by then Law minister Mr. Shanti Bhushan. Since then it has been neglected by the politicians and some are trying to change the bill to suit thier theft (corruption).

8. Oh.. He is going on a hunger strike for that whole thing of passing a Bill ! How can that be possible in such a short span of time?
The first thing he is asking for is: the government should come forward and announce that the bill is going to be passed.
Next, they make a joint committee to DRAFT the JAN LOKPAL BILL. 50% goverment participation and 50% public participation. Because you cant trust the government entirely for making such a bill which does not suit them.

9. Fine, What will happen when this bill is passed?
A LokPal will be appointed at the centre. He will have an autonomous charge, say like the Election Commission of India. In each and every state, Lokayukta will be appointed. The job is to bring all alleged party to trial in case of corruptions within 1 year. Within 2 years, the guilty will be punished. Not like, Bofors scam or Bhopal Gas Tragedy case, that has been going for last 25 years without any result.

10. Is he alone? Who else is there in the fight with Anna Hazare?
Baba Ramdev, Ex. IPS Kiran Bedi, Social Activist Swami Agnivesh, RTI activist Arvind Kejriwal and many more. Prominent personalities like Aamir Khan is supporting his cause.

Ok, got it. What can I do?
At least we can spread the message.

How?
At least we can support Anna Hazare and the cause for uprooting corruption from India.
At least we can hope that his Hunger Strike does not go in vain.
At least we can pray for his good health.
Thanks for reading.
Please Spread This msg As Much As You Can 'n Tell Others To Do The Same..!
.
.
.

Aug 16, 2011

ஸ்ருதி யு.கே.ஜி.


கிருஷ்ணாவின் டெஸ்க் அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. அரை டஜன் பேர் அவனைச் சூழ்ந்திருந்தனர். மற்றவர்களும் அங்கே வந்து போய்க் கொண்டும், எட்டிப் பார்த்து "என்ன கெடைச்சிட்டாளா?", என்று கேட்டுவிட்டு, "இன்னும் இல்லை", என்ற பதிலுக்கு, "நோ வொரீஸ், நீங்க வேணா வீட்டுக்குப் போங்க", என்றும் சொல்லிய வண்ணம் இருந்தனர்.

கான்-காலில் இருந்ததால் எனக்கு என்ன ஏதென்று புரியவில்லை. இந்தப்புற அல்லோலகல்லோலம் லண்டன் வரை கேட்கச் செய்ய, "வாட்ஸ் தி ப்ராப்ளம், ஸோ மச் நாய்ஸ் தேர்?" என மறுமுனையில் "லண்டன் துரை" மார்ட்டின் வினவ, "டோன்ட் நோ, நீட் டு செக்", என்றேன்.

இப்போது காதில் செல்போனைப் பொருத்திக் கொண்டு ஏதோ பதட்டமாகப் பேசினபடி ஃப்ளோரில் இங்குமங்கும் உலாத்திக் கொண்டிருந்தான் கிருஷ்ணா. ஏ.சி. குளிரை மீறி அவனுக்கு வியர்த்து ஒழுகிய வண்ணம் இருந்தது. மிகத் தீவிரமாக ஏதோ பிரச்னை எனப் புரிந்தது.

மார்ட்டினிடம் "பிறகு பேசுவோமே" என மன்னிப்பு கோரிக்கொண்டு கான்-காலை கட் செய்தேன். கிருஷ்ணா நடை பயின்று கொண்டிருந்த இடத்தை அடைந்தேன்.

என்னைவிட இரண்டு வயது பெரியவன் கிருஷ்ணா. வேலையில் இரண்டு லெவல்கள் சீனியரும் கூட. எனினும் நான் அவனைப் பெயர் சொல்லி அழைப்பதும் அவன் என்னை சார் என்று அழைப்பதும் விசித்திரம்.

நான் வந்ததைக் கவனித்து, பேசிக்கொண்டே ஒற்றைக் கண்மூடி கெஞ்சும் தோரணையில் ஒரு விரல் காட்டி "கொஞ்சம் வெயிட் பண்ணேன்" என்றான். "சரி, இரு நான் போன் பண்ணிப் பாத்துட்டு உனக்கு திரும்ப கூப்பிடறேன்", என்று போனை வைத்தான். மீண்டும் எனக்கு ஒரு நிமிஷம் என சைகை செய்துவிட்டு போனில் யாரையோ அழைத்தான்.

"ராஜி, கிருஷ்ணா பேசறேன். ஸ்ருதி அங்க வந்திருக்காளா? இல்லை, ஒரு மணிநேரமா அவளைக் காணலை. வீட்ல பத்மா பயப்பட்டுட்டு  இருக்கா. இல்லை, பக்கத்துலதான் எங்கயாவது வெளையாடிட்டு இருப்பா. எல்லா எடத்துலயும் தேடிட்டாளாம். காணலை. சரி அங்க வந்தா எனக்கு கூப்பிடு"

செல்போனைப் பையில் எறிந்துவிட்டு என் பக்கம் திரும்பினான்.

"சின்னவளை ஒரு மணிநேரமாக் காணலியாம் சார்"

"யாரு, ஸ்ருதி'யா? ஸ்கூல்லருந்து வந்த அப்புறமா?"

"ஆமாம், வந்து ட்ரெஸ் மாத்தி ஸ்நாக்ஸ் சாப்பிட்ட வரை இருந்திருக்கா. அப்புறம் காணலையாம்"

கிருஷ்ணாவுக்கு இரண்டு குழந்தைகள். பெரியவன் ஷ்ரவன் மூன்றாம் வகுப்பிலும், சின்னவள் ஸ்ருதி யு.கே.ஜி.யும் படிக்கிறார்கள். 

"வீட்டுக்குப் போலாமே. ?"

"ஆறு மணிக்கு கால் இருக்கு"

"நாசமாப் போச்சு வேலை, அதுவா முக்கியம்?   ஃபேமிலி கம்ஸ் ஃபர்ஸ்ட், நீ பொறப்படு"

"அது ஆவாது. முப்பது நிமிஷம் முடிச்சிட்டுப் போயிடறேன். காம்பவுண்ட் உள்ளேதான் எங்கயாவது இருப்பா. வாட்ச்மேன் இருக்கான், அவனைத் தாண்டி போகலை. வெளிய போக வாய்ப்பில்லை. நோ வொர்ரீஸ் தேங்க்ஸ்!"

"எமர்ஜன்சி'க்கு வீட்டுக்குப் போக முடியலைன்னா என்ன வேலை இது"

"சரி, இரு வீட்டுக்குப் பேசிடறேன். ஒரு நிமிஷம் உட்காரேன்"

அவன் அருகில் இருக்கையில்  அமர்ந்தேன். கைப்பேசியில் எண்ணை அழுத்தி, எதிர்முனையின் பதிலின்மையில் எரிச்சலாகி கைப்பேசியை சட்டைப்பையில்  கடாசி எறிந்தான். மீண்டும் பொறுமையிழந்தவனாக அருகிலிருந்த லேண்ட்லைன் தொலைபேசியைக் கையிலெடுத்து எண்கள் சுழற்றினான். இந்தமுறை எதிர்முனை பதில்தந்தது.

"என்னாச்சு, கெடைச்சாளா? "

"_______"

"எங்க இருந்தா?", குதித்து எழுந்து நின்றுவிட்டான்.

சுற்றியிருந்த அத்தனை இருக்கைகளும் பரபரப்பாக கிருஷ்ணா முகம் கவனித்தன.

"_______"

"குடு அவகிட்ட"

"_______"

"ஷ்ருதீ .......", விட்டால் அழுதுவிடுவான் போல குரல்.

ரவி எழுந்து கிருஷ்ணாவின் இருக்கையருகே வந்து சுட்டுவிரலை தொலைபேசியின் ஸ்பீக்கர் பட்டன் அருகே கொண்டு சென்று, "கிருஷ்ண, மே ஐ?", என்றான். கிருஷ்ணா தலையசைக்க...

"அப்பா.... சொல்லுப்பா"

"எங்க போன இவ்ளோ நேரம்? அம்மா உன்ன ரொம்ப தேடிண்டு இருந்தாளாமே"

"அப்பா, பக்கத்தாத்துல என் கிளாஸ்மேட்  அஸ்வத் இருக்கான் இல்லப்பா..."

"ஆமா இருக்கான். அவனோட எங்க போன"

"எங்கயும் போலப்பா, இங்கதான் நம்ம அபார்ட்மன்ட் ஸ்டோர்ரூம்ல லவ் பண்ற வெளையாட்டு வெளையாடிட்டு இருந்தோம்ப்பா"

கிருஷ்ணாவின் விரல்கள் அனிச்சையாய் ஸ்பீக்கரை ஆஃப் செய்தன.


Aug 15, 2011

இது பயணக்கட்டுரை அல்ல - 2


போர்டிங் பாஸ் பரிசோதனை கவுன்டர் தொடங்கி விமானத்திற்கு நம்மை வழிநடத்தி, வரவேற்று, இருக்கையில் அமரவைக்கும் வரை வழிநெடூக மனித எந்திரன்களும் எந்திரிகளும் வணக்கம், வந்தனம், நமஸ்கார், நமோஷ்மார், ஸ்ஸ்வாகதங்களைச் சொல்லின. 

நாங்கள் ஆறுபேர் ஒன்றாய் வந்திருந்தாலும், விதியின் வசத்தில் எனக்கு மட்டும் தனித்தீவு ஒன்றில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. யாரோ ஒன்றாய் வந்த மூன்று நண்பர்கள் ஏ, சி மற்றும் டி இருக்கையில் அமர்ந்து கொண்டு ‘பி’ இருக்கையில் என்னை வைத்துப் பிழிய ஆயத்தமாயினர். மிஸ்டர் ஏ ஜன்னலோரம் உட்கார்ந்திருக்க, அவரை விடுத்து மற்ற இருவரிடமும் “ஸ்வாமி, ஏதாவது ஒரு ஓர சீட்டுல என்னை விட்டுடுங்க. நீங்க ஒட்டுக்கா கதைச்சிட்டு வரலாம்”, என்ற ஐடியாவை லெஃப்ட் ஹாண்டில் புறந்தள்ளின சி’யும் டி’யும். எக்கேடோ கெட்டுப் போங்க என “வாழ்விலே ஒரு முறை” “கண்ணீரில்லாமல்” இரண்டையும் கையிலெடுத்து இன்க்கி பின்க்கி பான்க்கி போட்டு, “கண்ணீரில்லாமல்” புத்தகத்தை கைப்பைக்குள் சொருகினேன்.

மிஸ்டர் ஏ என்னையே கொஞ்ச நேரம் பார்த்து “வாட் புக் இஸ் திஸ்”, 

“தமிழ்”

“தட் ஐ குட் ஸீ. ஹூ இஸ் தி ஆத்தர்”

“ஜெயமோகன்”

“ஓ, ஐ நோ பாரடியார் அண்ட் டிருவல்லுவர்”

“ஓ, குட் டு நோ. போத் ஆர் நோ மோர் நவ்”

“யா! ஐ நோ, யு கண்டின்யூ”, என கையிலிருந்த ஏதோ பிஸினஸ் புத்தகத்தில் மூழ்க....

மேலும் கொஞ்ச தாமதம், ரன்வேயில் காத்திருப்பு அப்படி இப்படியென ஒரு மணிநேரத் தாமதத்தில் விமானம் புறப்பட்டது.

விசிறி சாமியார் ஜெயமோகனுக்கு ஒரு ஆப்பிளைப் பரிசளிக்க, எனக்கு வயிற்றின் அமிலக் கரைசல் மறுபடி நினைவுக்கு வர... சரியாய் வந்து சேர்ந்தான் விமான சிப்பந்தி. தூரத்தில் நீள் செவ்வக வண்டியொன்றை அவன் மெதுவாய்த் தள்ளி வருவது தெரிய, “ஆஹா”, எனத் துள்ளியமர்ந்தேன். ஒவ்வொரு இருக்கையாய் நின்று, என்ன வேண்டும் என ஒவ்வொருவராய் விசாரித்து நீ.செ.வ. உள்ளிருந்து எடுத்துத் தந்து கொண்டிருந்தான். “அப்பாடா”, என நிம்மதிப் பெருமூச்சுவிட்டு சாய்ந்து அமர்ந்தேன்.

திடீரென “காச் மூச்” என ஏதோ சத்தம். ஒரு ’கன’வான் ஒருத்தர் அந்த சிப்பந்தியிடம் எழுந்து நின்று சண்டையிட்டுக் கொண்டிருந்தார். “எதிர்பாராததை எதிர்கொள்ளடா”, என உள்ளே குரல் அலறியது.

விஷயம் இதுதான்.... அந்த நேரத்து ஜெட் விமான சேவையில் உண்ணும் பொருள் யாவும் விலை கொடுத்தே வாங்கப்ப்ட வேண்டும். இதைத் தெளிவாக ஈ.டிக்கெட்டில் குறிப்பிடவில்லை என கனவானின் குற்றச்சாட்டு. ஏதும் தருகிறோம் என்றும் குறிப்பிடவில்லையே என்பது சிப்பந்தியின் வாதம். 

“ஐ டொண்ட் வாண்ட் எனிதிங்”, எனக் கடைசிக் கத்தலை இறைத்துவிட்டு அமர்ந்தார் கனவான்.

"ஐ டூ டோண்ட் வாண்ட் எனிதிங், இஃப் யு வாண்ட் மனி”, என்னுள்ளே எவனோ ஒருத்தன் திடீர்க் குரல் தந்தான். “டேய், யாரப்பா நீ? துட்டு இருக்குல்ல, வாங்கித் துன்னா என்னாவாம்”, என எதிர்க்குரல் தந்த அந்த இன்னொரு மடையனின் வாதம் தலையில் தட்டி அடக்கப்பட்டது.

அவ்வப்போது ஏதேதோ அறிவிப்புகள் ஹிந்தி கலந்த ஆங்கிலம், ஆங்கிலம் கலந்த ஹிந்தி என மாற்றி மாற்றி வந்து கொண்டிருந்தன. விமானி ஒருமுறை குரல் கொடுத்தார். முப்பத்து ஆறாயிரம் அடியில் பறப்பதாகவும், வெளியே மைனஸ் 43 டிகிரி குளிர் எனவும் குறிப்பிட்டார்.


இப்போது வண்டி அருகில் வர...

உள்ளேயிருந்த இரண்டாவது ஆசாமியின் குரல், “வெஜ் சாண்ட்விட்ச்?”

”டூ ஹண்ட்ரட் சார்”

முதல் ஆசாமி, “ஓ, நோ தேங்க்ஸ்”

இரண்டாம் ஆசாமி மீண்டும், “சாஃப்ட் ட்ரின்க்ஸ்”

“நைன்ட்டி சார்”

முதல் ஆசாமி, “ஓ, நோ தேங்க்ஸ்”

இருவரும் சேர்ந்து, “வாட்டர்”

“தட்ஸ் ஃப்ரீ சார்”

“குட், கிவ் மி அ கப்”

கையிலெடுத்த காகிதக் கோப்பை நிறைந்துவிடா வண்ணம் முக்காலுக்கு அரைக்கும் இடையே அளந்து கொடுக்கப்பட்டது.

ஏ’வும் சி’யும் கேஷ்யுக்களையும், சாஃப் ட்ரிங்க் டின்களையும், சாண்ட்விட்ச்’களையும் இடவலப் புறங்களில் அதகளம் செய்து என்னைக் கடுப்பேற்றின. 

வெளியே தட்பவெப்பநிலை சரியில்லாததால்,  சீட் பெல்ட் அணிந்தவாறே பயணிப்பது நலம் என ஒரு அறிவிப்பு வந்தது. அவ்வப்போது மேகங்களுக்குள்ளே புகுந்து தடதடத்து ரயிலாட்டம் ஆடியாடிச் சென்றது விமானம். வயிற்றை ஏதோ பயம் கவ்வியிழுத்தது. 

பெல்ட் அணிந்து தலை சாய்த்து டி’யைப் பார்க்க அங்கே கைகளில் ஏதுமில்லை. இந்த சிகாமணி பரவாயில்லை தின்னி பார்ட்டியில்லை என நினைத்த வேளையில்,

கடந்து சென்ற ஹோஸ்டஸிடம் , “கேன் யு கெட் மீ மை பேக்?”, தலைக்கு மேலே காட்டினார்.

“ஏன் உன்னால எந்திரிச்சி எடுக்க முடியாதா?” என்ற கடுப்பை ஒரு புன்னகை மூலம் அந்தப்பெண் முகத்தில் மறைத்து, அந்தப் பையை மேலிருந்து எடுத்துத் தந்தாள். 

தன் பையைத் திறந்து ஒரு காகிதத் தட்டு, அதன் மேல் ஐந்து வகை வடக்கத்தி பட்சணங்களை வைத்து மொசுக்கத் தொடங்கினார் மிஸ்டர்.டி. “டேய், உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா?”, எவனோ உள்ளே புலம்பினான்.

மீண்டும் சிப்பந்தி வண்டியோடு வந்து தின்றும் தின்னாத குப்பைகளை அள்ளிக்கொண்டு போக, வெறும் வயிற்றில் குலுங்கின அரைக்கோப்பைத் தண்ணீர் விமானப்பயண ஸீ-ஸாக்களோடு சேர்த்து பிரட்டத் தொடங்கியது.

இப்போது ஜெயமோகன் வீட்டிற்குள் குட்டிப்பையன் மனோஜ் வந்து ஃப்ரிட்ஜ் உள்ளே இருந்த சிப்ஸ் வாங்கித் தின்றான். அடுத்த அத்தியாயத்தில் யாரேனும் ஏதேனும் தின்றால், நான் ஜன்னல் வழியே குதித்துவிடும் அபாயம் கருதி புத்தகத்தை மூடி உள்ளே வைத்தேன். 


ஜன்னல் வழியே பார்த்தேன். ஏதோ பனிப்பிரதேசத்திற்கு சற்றே மேலே பறப்பது போல் பனிப்படுக்கையாய் கீழே மேகம். அதிலும் சில மேகங்கள் கோன் ஐஸ் ரூபத்தில் தெரிந்து வெறுப்பேற்றின. போதும்டா என இருக்கையில் சாய்ந்து கண்கள்மூடித் தூங்கக் தொடங்கினேன். 

விமானம் புறப்பட்டு இரண்டு மணிநேரங்கள் ஆகியிருக்க, இறங்குமுன் முகலட்சணத்தை சோதித்துக் கொள்ள வாஷ்ரூம் நோக்கி நடந்தேன். வயிற்றில் மீண்டும் உருட்டல் பிரட்டல். ஒன்றுமில்லா வயிற்றிலிருந்து ஏதோ எடுத்துக் கொண்டு வந்தது. வயிற்றில் ஒரு அழுத்தம் தந்து அதை எடுத்துத் தொலைத்தேன்... “அரை கப் தண்ணீர்”

”விமானம் தரையிறங்க இருப்பதால் பயணிகள் இருக்கையில் அமரவும், சீட் பெல்ட் அணிந்து கொள்ளவும்”

ஜெட் பந்தம் நிறைந்தது. தில்லி விமான நிலையம் வரவேற்கக் காத்திருந்தது.

Aug 12, 2011

இது பயணக்கட்டுரை அல்ல - 1

மதியம் பன்னிரண்டு முப்பது. சுடச்சுட பருப்பு ரசம், பீட்ரூட் பொரியல் சகிதம் தட்டில் உட்கார்ந்திருந்தது. இருந்த கொலைப் பசிக்கு அந்த காம்பினேஷன் அமிர்தமாய் இருந்தது. அவதி அவதியாக அள்ளிக் கொட்டிக் கொண்டேன். கால் வயிறு நிறைந்ததா எனத் தெரியவில்லை. "இன்னும் கொஞ்சம் சாதம் வைக்கவா", என்றவளிடம், "இல்லை, ஃப்ளைட்'ல எப்படியும் ஏதும் தருவான், அங்க பாத்துக்கறேன்", என எழுந்தேன். 

"தயிர் சாதம் கொஞ்சம் சாப்பிடலாமே? உங்களுக்குப் புடிச்சாப்ல இன்னைக்கு நல்லா உறைஞ்சிருக்கு"

"வேண்டாம்னு சொன்னனே", கால் டாக்சி வாசலில் காத்துக் கொண்டிருக்கிறது. இரண்டு இருபதுக்கு டெல்லி விமானம் ஏற வேண்டும்.

"காபி ஒரு அரை கப் தரவா?", கேட்ட அம்மாவிடமும் வேண்டாம் என்றாயிற்று.

வழக்கமாக பையைத் தோளில் மாட்டினால் அழுது ஆர்ப்பரிக்கும் அகில் என் அம்மா இடுப்பில் அமர்ந்து கொண்டு என்னை வெறித்த பார்வை பார்த்து டாட்டா சொல்லியும் சொல்லாமலும் வழியனுப்பினான். அவன் அழுதிருந்தால் தேவலாம் என்றிருந்தது. வீடு திரும்ப இரண்டு வாரங்கள் பிடிக்கும்.

டாக்சி புறப்பட்டதும் ஏதோ தொண்டையை இடைஞ்சல் செய்தது. அந்த அரை கப் காபியை குடித்திருக்கலாம் எனத் தோன்றியது.

சொல்லி வைத்தாற்போல் நூற்றியறுபதை வாங்கிக்கொள்ள கால்டாக்சி டிரைவரிடம் இருநூறுக்கு சில்லறை இல்லை. 

"சரி, இருநூறுக்கு பில்லைக் கொடப்பா. ஆபீஸ்'ல க்ளைம் பண்ணிக்கறேன்", அறுபத்திநாலு பற்களும் சிரித்துத் தெறித்தது. என் அலுவலக செலவில் அவர் வீட்டம்மா சூடப்போகும் மல்லிகையின் அந்த எக்ஸ்ட்ரா முழத்தையும் அதை விற்றவள் சேமித்த முன்னிரவின் மூன்று நிமிடங்களையும் ஓரிரு நிமிடங்கள் நினைத்துக் கொண்டேன். 

சென்னை விமான நிலையத்திற்கு இது என் இரண்டாவது நுழைவு. இதற்கு முன் நுழைந்து கடந்த இடங்கள் எல்லாம் மாறிவிட்டாற்போல் தோன்ற, பட்டிக்காட்டு மிட்டாய்க்கடையை பட்டணத்தான் பார்ப்பதுபோல் சுற்றியொரு நோட்டம் விட்டேன்.

"என்ன புதுசா உள்ள நுழையறாப் போல லுக்கு வுடறீங்க", உடன் பயணித்த அலுவலகத் தோழன் ஒருத்தன் என்னிடம் எதையோ சோதித்துப் பார்த்தான். சுஜாதா பாஷையில் சொல்லவேண்டும் என்றால், "மையமாக சிரித்தேன்".

"அப்புறம் சொல்லிடறேன், ஜெட் ஏர்வேஸ்'ல இந்த மத்தியான ப்ளைட்'ல குடிக்கத் தண்ணி கூட யோசிச்சுத்தான் தருவான். லஞ்ச்  வீட்லயே முடிச்சிட்டீங்க இல்ல? அப்டி இல்லேன்னா பாத்து இங்கயே ஏதான சாப்டுக்கோங்க", இரண்டு வாரங்கள் முன் இதே நேரம் இதே விமானத்தில் பயணப்பட்ட அதே தோழன் எச்சரிக்கை விடுத்தான். அடக் கொடுமையே! "இத்த நம்பியா வீட்ல சுடுசோறு வேணாம்னேன்?", என கேட்டுக்கொண்டேன். இருந்தும் உள்ளேயொரு குரல், "இவன் பொய் சொல்கிறான். விமானத்தில் ஒரு வெல்கம் ட்ரிங்'காவது தராமலா இருப்பான், ஐந்தாயிரத்து சொச்சம் வாங்கியிருக்கிறானே?", என ஒலித்தது.

பசியின் முதல் அமிலத்துளி இரைப்பையின் மேல்வட்டத்தை மெதுவாய்த் தொட்ட உணர்வு. அப்படியேதும் இவன் சொன்னாற்போல் அவன் தராவிடில்? ஐந்தரை வரை தாங்குமா?

"காபி எவ்ளோ?"

"சிக்ஸ்டி",

ஓ! நாம் விமான நிலையத்தினுள் இருக்கிறோம்.

"ஓகே"

"நீயெல்லாம் வாங்கமாட்ட தெரியும்டா", குரல் ஒலிக்காமல் ஒலித்தது.

"புது தில்லி செல்லும் விமானம் இரண்டு இருபதுக்குப் பதிலாக இரண்டு ஐம்பதுக்குப் புறப்படும். தில்லியில் இருந்து வந்து சேரும் விமானத்தின் தாமதமே இதற்குக் காரணம். சிரமத்திற்கு வருந்துகிறோம்", இயந்திரம் அரற்றியது.

வேறு வழியேயில்லை. "காபி ஒரு கப் குடுங்க", வாங்கிக்கொண்டு காத்திருப்பு நாற்காலிக்கு வந்தேன்.

அறுபதை அழுததற்கு அது ஒரு கேப்புச்சினோ’வாக இருந்து தொலைத்திருக்கலாம். உள்ளூர் சினிமாக் கொட்டகைகள் தரும் ப்ரூ காபியைத் தோற்கடிக்கும் சுவை. பாதிக்குமேல் குப்பைத்தொட்டியின் பசிக்கு இரையாயிற்று.

எதிர் நாற்காலிகள் வெள்ளை, கருப்புத் தோல்கள், பஞ்சாபி டர்பன், ராஜஸ்தானி உருமால், என விதவிதமாய் உலகின் எல்லா சாதி மத சனங்களையும் அடக்கியிருந்தது. எல்லாம் வழக்கம்போல் தனித்தனித் தீவாய் அமர்ந்து வெறித்த பார்வையுடன் ஓங்கியுயர்த்தி சுணக்கம் காட்டிய உதடுகளுடன் படித்துக் கொண்டு, இயர் ஃபோனை மாட்டிக் கொண்டு என ஏதேதோ செய்து கொண்டிருந்தன.

”விமானம் வந்தாச்சு, ஏறிக்கொள்ள வாங்கப்பு”, என்ற அழைப்புக் குரலுக்கு எல்லோரும் விமானத்தைத் தவற விட்டிடும் பதட்டத்தில் ஓடிச் சென்று க்யூவில் நின்றோம்


தொடர்ச்சி : 
Aug 10, 2011

ஹரிஹரனின் ஹாஸிர்

மச்சி சார் எழுதிய ஜன்மபந்தம் பதிவில் இதை நினைவுப்படுத்திவிட்டார். இரண்டு நாள்களாக இப்பாடல்களே படுத்தியெடுக்கின்றன.

தொண்ணூறுகளின் மத்தியில் மாதவரம் எம்.ஆர்.எல். ஏஜன்சியில் கணக்கு எழுதிக்கொண்டிருந்தபோது வாங்கின கேஸட் அது. கேட்டுத் தேய்த்த அந்த கேஸட் இப்போது யாரிடம் இருக்கிறதோ தெரியவில்லை. கஸல்கள் கேட்க எனக்கு அறிமுகம் கிடைத்தது ஹரிஹரன் வாயிலாகத்தான்.

ஹாஸிரின் ஸ்பெஷாலிட்டி ஹரியுடன் உஸ்தாத் ஜாகிர்ஹூசைன் தபேலா வாசித்திருப்பார். முக்கால்வாசிப்பாடல்கள் எனக்குப் புரியவே புரியாது. கஸல்களின் இலக்கணத்திற்கேற்றார்போல் இடையிடையே உருது வார்த்தைகள் வந்து சேர்ந்து கொள்ளும். எனவே ஹிந்தி தெரிந்தவர்கள் பலரும்கூட அருஞ்சொற்பொருள் சொல்ல யோசிப்பார்கள்.

இருந்தும், மொழிதாண்டி கஸல்களில் உங்களால் லயிக்க இயலும் வகையில் இருக்கும் ஹரியின் குரல், குழைவு, பாவங்கள் எல்லாம்.

ஹாஸிரிலிருந்து ஒரு பாடல் இங்கே சாம்பிளுக்கு.... மற்றவற்றை தேடிக் கொள்ளுங்கள்:ஹாஸிர் தாண்டி ஹரியின் கஸல்களில் டாப் க்ளாஸ் என்றால் நான் இதைச் சொல்வேன்... இங்கே பாடியிருப்பவர் ஹரிஜியின் விசிறியொருவர்.


Aug 9, 2011

பாடல் பெற்ற தளம்

பக்கத்து டைலர் கடையில் "மீராவின் கண்ணன் மீராவிடமே" என்று ராஜா பாடிக்கொண்டிருந்தார்.

"சாப்பாட்டு அரிசி ஒரு கிலோ கட்டுங்க"

"அது எப்பிடி சார் கட்டும்"

"நீங்கதான் கட்டிக் கொடுங்க"

"இல்லை சார், ஒரு கிலோ உங்க குடும்பத்துக்கு எப்பிடி கட்டும்னு கேட்டேன்"

"இல்ல, இருவது கிலோ ஆடர் போட்டிருக்கு. வர சாயந்திரம் ஆகும், இது இன்னைய மதியத்துக்கு"

"எவ்ளோ?"

"முப்பத்தி ரெண்டு"

"என்ன அரிசி இது?"

"அடுத்து வருவது ............ படத்தில் யுவன் சங்கர் ராஜா படிய பாடல்"

.....ம்ம்ம் இது காதலா  இது காதலா இது காதலா இது காதலா ஒரு பெண்ணிடம் உருவானதா (!!!!)....."

"பொன்னிதான் சார்"

"சரி, சீக்கிரம் குடுங்க"

"இது காதலா இது காதலா இது காதலா இது காதலா இது காதலா "

பின்னங்கால் பிடரியில் விழ தலைதெறிக்க ஓ.........டினேன். அடடா.... இன்றைய பா'வை மறந்திட்டேனே. வீடு போய் என் ரிகார்டிங் தியேட்டரில் உட்கார வேண்டும்.


அதாகப்பட்டது மக்களே... இத்தனை நாள் "பேசுகிறேன்" மூலமாகத் தொடர்ந்து வந்த படுத்தல்கள், அவற்றுக்கு நீங்கள் தந்த பெரும் ஆதரவைக் கண்டு மனமுவந்து "பாடுகிறேன்" என்று மேலும் ஒரு தளத்தைத் துவங்கியுள்ளேன். "ஸ்கேன்மேன்" விஜய், என்.சொக்கன் இவர்களைத் தொடர்ந்து ஒரு 365 தின ப்ராஜக்டாக இத்தளத்தைத் திறந்துள்ளேன். 

தினம் ஒரு பாடல், இதுதான் கான்செப்ட். இதுவரை இருபது நாட்கள் ஓடியுள்ளன. அந்தப் படுத்தல்களுக்கும் உங்கள் ஆதரவு தொடரும் என்று நம்புகிறேன்.

பாடுகிறேன் தள முகவரி: http://365paa.blogspot.com
.
.
.
Related Posts Plugin for WordPress, Blogger...