Nov 29, 2012

வர்றாரு பாரதி


நண்பர் நடராஜன் (டிவிட்டரில் @vNattu) ஒரு பாரதிப் பித்தர். எந்த அளவிற்கு என்றால், சிரத்தையாக தினமும் http://bhaarathi.blogspot.com/ என்ற தளத்தில் பாரதியின் எழுத்துகள், பாரதி பற்றிய தகவல்கள் ஆகியவற்றை தொகுப்பவர். பாரதி எழுதியவை மட்டுமல்லாமல் பாரதி பற்றிய புத்தகங்களை யாரேனும் எழுதியிருந்தாலும் அவற்றையும் சேகரிப்பவர். ஆம்னிபஸ்ஸில் இதுவரை பாரதி பற்றி வந்த புத்தக அறிமுகங்கள் எல்லாம் இவர் எழுதியவையே.

வரும் டிசம்பர் பதினொன்றாம் தேதி பாரதியார் பிறந்த தினம். அதனையொட்டி அந்த வாரம் முழுவதும் (டிசம்பர் 9 தொடங்கி - டிசம்பர் 16 முடிய) பாரதி தொடர்பான புத்தகங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஆம்னிபஸ் அன்பர்களுக்கு அன்புக் கட்டளை விடுத்திருக்கிறார். நாங்களும் அந்தக் ஏற்றுள்ளோம்.

காத்திருந்து வாசியுங்கள் நண்பர்களே!

உங்களிடம் பாரதி குறித்த புத்தகங்கள் இருந்தாலும் அதுபற்றிய அறிமுகத்தை / விமர்சனத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். சிறப்புப் பதிவாக வெளியிட சித்தமாக இருக்கிறோம். கட்டுரைகளை rsgiri @ gmail . com என்ற முகவரிக்கு அனுப்பவும். அனுப்புபவர்களுக்கு அட்வான்ஸ் நன்றிகள்.


Nov 28, 2012

நிறைய பேசுபவர்கள்....


ஏதேனும் ஐநூறு வார்த்தைகள் கிறுக்க வேண்டும் என்று முடிவெடுத்து எழுதிய பதிவு இது. படிக்கலாம், அல்லது வேறேதும் உருப்படியான விஷயமும் பண்ணலாம். உங்கள் சாய்ஸ்!

பொதுவாகச் சொல்லுவார்கள், நூலகத்தில் மூடிக்கிடக்கும் புத்தகத்தைப் போல நாம் இருக்கவேண்டுமாம். அப்போதுதான் நமக்கு மதிப்பு உண்டாம். தேவையானவர்கள் தேவையான தருணத்தில் நம்மிடம் என்ன இருக்கிறது என்பதை அறிய தானாகவே வருவார்களாம். 

இந்த அறிவுரைக்கு சற்றும் தொடர்பில்லாத நான் ஒரு வளவளா கேஸ். 

பார்த்திபன் வடிவேலு காமெடி ஒன்று உண்டு. பார்த்திபன் மௌனவிரதம் இருந்த நேரமாகப் பார்த்து அவரை  வாய்பேச முடியாதவர் என்று நினைத்துக் கொண்டு அவரிடம் வந்து சிக்குவார் வடிவேலு.  விரதம் கலைந்தபின், "எனக்கு சின்னவயசுல பேச்சு சரியா வராதாம். நல்லா பேச்சு வந்தா வாரம் ஒருக்கா மௌனவிரதம் இருக்க வைக்கறதா எங்க அம்மா வேண்டிக்கிச்சி", என்பார் பார்த்திபன். "உனக்கு? பேசவராது?", இது வடிவேலு. "சின்னவயசுல", என்பார் பார்த்திபன்.

என் கேஸும் அதேதான். ஏழாம் வகுப்புவரை பேச்சு என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்தவன் நான் என்றால் என் வட்டத்தில் யாரும் நம்பமாட்டார்கள். வீட்டுக்கு வரும் விருந்தினர்கள், "அம்மா எங்கடா?", என்று கேட்கும் கேள்விக்குப் பதிலளிக்க எனக்குக் குறைந்தது ஐந்து நிமிடங்கள் பிடிக்குமாம். 

இப்போது எனக்குப் பேச்சு வராது என்றால் அதை நம்பும் ஒரே ஜீவன் என் மனைவியார் மட்டுமே. "என்கிட்ட எங்கனா பேசறீங்களா நீங்க? ஒண்ணா மொபைலு இல்லைன்னா கம்ப்யூட்டரு. என்னைக் கட்டிக்கிட்டதுக்குப் பதிலா இது ரெண்டுல ஒன்னுத்த நீங்க கட்டியிருக்கலாம்", என்பார். நான் யாரிடமேனும் போனில் பேசிக்கொண்டிருக்கையில் பின்னணியில், "டேய், வீட்ல பொண்டாட்டி புள்ளைங்க கூட ஒரு மனுஷனை நேரம் செலவு பண்ணவிடாம என்னடா போன் வேண்டிக்கெடக்கு. வைடா போனை", என்று என்றேனும் நீங்கள் போன் செய்கையில் பின்னணியில் ஏதும் குரல் கேட்டால் மிரண்டுவிடாதீர்கள். இப்போதே எச்சரித்து வைக்கிறேன்.

சரி, வளவளா பேச்சுக்கு வருவோம். வளவளாவெனப் பேசுபவர்களை சிலருக்குப் பிடிக்கிறது. சரியாகச் சொல்லவேண்டுமென்றால் சிலருக்குத்தான் பிடிக்கிறது. பல பேருக்குப் பிடிப்பதில்லை. அதற்கான காரணத்தைப் பார்த்தீர்களேயானால் அப்படிப் பேசுபவர்களில் பெரும்பாலானவர்கள் ஒன்றா திறந்த புத்தகமாக இருப்பார்கள் அல்லது எதையும் அல்லது எல்லாவற்றையும் நேருக்கு நேராய் விமர்சிப்பவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு இன்றைய அவசர உலகில் சத்ருக்கள் அதிகம் இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.

இன்னொரு பக்கம்,  "நேராப்பேசு, விமர்சனம் பண்ணு; வேணாங்கலை. வெளிப்படையாப் பேசு; கேட்டுக்கறேன். ஆனா, சுருக்கமாப் பேசு எனக்கு நெறைய வேலையிருக்கு", இப்படித் திரியும் கூட்டம் ஒன்றும் உண்டு. 

சமீபத்தில் ஒரு இணையக்குழும விவாதத்தில் சோஷல் மீடியாவின் தாக்கம்தான் நம்மை எல்லாவற்றையும் சுருக்கமாகச் சொல்ல / செய்ய வைக்கிறது என்றார் நண்பர் ஒருத்தர். வம்புமடம் போல எத்தையோ மென்று தின்று துப்பிவிட்டு டைம்லைன் கடந்தவுடன் மறந்துவிட்டுப் போய்விடவேணும். அவ்வளவுதான். 

இணைய வாழ்க்கையின் தாக்கம் அல்லது அவசரயுகத்தில் அடுத்த பஸ்ஸை/வேலையை/பிசினசை/ஏதோவொரு வாய்ப்பை/ஸ்கூல் அட்மிஷனை என்று ஒன்றைப்  பிடித்தாக வேண்டிய  பரபரப்பில் இருப்பவர்களிடம் போய் ஆயிரத்து இருநூறு வார்த்தைக் கட்டுரை ஒன்றைக் கொடுத்து, "கொஞ்சம் வாசியுங்களேன், நல்லா இருக்கு", என்றால் சப்பென்று உங்கள் கன்னத்தில் அறை விழுவது திண்ணம்.

இன்னும் ஒரு கூட்டமும் உண்டு, "என்ன வேணாப் பேசு; ஆனா எல்லாத்தைப் பத்தியும் பேசாத". அதாவது இவர்களுக்கு ஒரு மனிதர் எல்லா சப்ஜக்டுகளையும் தொட்டுப் பேசினால் பிடிக்காது.  இப்படிப்பட்ட ஒவ்வாமை கொண்ட மனிதர்களின் மனோநிலை, நிலைப்பாடு பற்றி ஏதேனும் மனவியல் ஆராய்ச்சி உண்டா எனத் தெரியவில்லை. கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன், ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங், ஹீரோ என்று எல்லாத் துறைகளிலும் கால்பதித்த ஒரு மனிதரை நம்மில் எத்தனை பேருக்குப் பிடித்திருக்கிறது சொல்லுங்கள். நமக்கு கண்ணுக்குத் தெரிவதெல்லாம் அவர் சொல்லும் "டண்டணக்கா யே டனக்குனக்கா மட்டுந்தானே!"

ஆயிரத்து இருநூறு பக்கம் என்று சொன்னேனல்லவா? அப்படிச் சொன்னதும் நிறைய பேசுபவர்கள் இருவர் நினைவுக்கு வருகிறார்கள். என் மனம் கவர்ந்த இரண்டு எழுத்தாளர்கள் அவர்கள். இரண்டு பேருமே அவரவர் தளத்தில் நிறைய கதைப்பவர்கள். நிறைய என்றால் சும்மா நி...றை...ய.... என்று வாசிக்காதீர்கள். நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய கதைப்பவர்கள். என்னவும் பேசுவார்கள். எல்லாமும் பேசுவார்கள். ஆனால் தெரிந்ததை மட்டும் பேசுவார்கள்.

ஒருவர் இலக்கிய எழுத்தாளர் + இணையத்தில் சூறாவளித்தனமாய்க் கதைப்பவர். இவரைப் பொறுத்தமட்டில் நாம் மாங்கு மாங்கென்று எழுதும் ஐநூறு வார்த்தைக் கட்டுரைகள் எல்லாம் "மிகச் சுருக்கமானவை". ஏனென்றால் இவர் கருத்தில் ஒரு நல்ல கட்டுரை என்பது ஆயிரத்து இருநூறு வார்த்தைகள் இருக்கவேணும்.

மற்றொருவர் பிரபல எழுத்தாளர் + டிவிட்டரில் ஒரு சூப்பர்ஸ்டார். இந்த இருவரில் ஒருவருக்கு சில ஆயிரம் அபிமானிகளும் பலநூறு அ'அபிமானிகளும் உண்டு. இன்னொருவருக்கு எண்ணிக்கையில் இங்கேயங்கே மாற்றமிருக்கலாம். இவர்களைப் பலருக்குப் பிடிக்கக் காரணம் இவர்கள் பேசும் பேச்சின் அடர்த்தி. சிலருக்குப் பிடிக்காமல் போகும் காரணம் இவர்கள் எல்லாவற்றையும் பேசுவதும் , நேரிடையான விமர்சனங்களை வைப்பதுவும்.

நிறையப் பேசாதவர்கள் உம்மணாமூஞ்சி என்றோ சிடுமூஞ்சி என்றோ பட்டப் பெயர்கள் மட்டும்தான் வாங்குகிறார்கள். ஆனால் நிறையப் பேசுபவர்கள் கொஞ்சம் பட்டப்பெயர்களோடு சேர்த்து நிறையவே கெட்டப்பெயர்களும் வாங்குகிறார்கள்.

அதிகமாகப் பேசாமல் இருப்பது சரிதான். அளவாகப் பேசி நல்ல பெயர் எடுத்தாலும் சரிதான்.  ஆனால் ஒன்றுமே பேசாமல், "அவரு ரொம்ப சைலன்ட்டுங்க" என்று நல்ல பெயர் எடுப்பவர்களைப் பார்த்தால்தான் நமக்கு..... நறநற!

Nov 18, 2012

எளிய தமிழில் சுஜாதாவின் ஆழ்வார்கள் அறிமுகம்


ஆழ்வார்கள் மீதும், பிரபந்தத் தமிழின் மீதும் தீராக் காதல் கொண்ட சுஜாதா ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்.தொடரை குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் எழுதினார். வைணவத்தைப் பற்றியும், ஆழ்வார்கள் குறித்தும் தெரிந்து கொள்ள விரும்பும் எளியவர்களுக்கு மாத்திரம் அல்லாமல் வைணவத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்களும் ரசிக்கக்-கூடிய புத்தகம் இது. சுஜாதாவுக்கே உரித்தான பாணியில் மிக எளிமையாக, மிக மிக சுவாரஸ்யமாக.ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்என்ற இந்நூலில் பிரபல எழுத்தாளரும், வைணவருமான சுஜாதா எல்லா ஆழ்வார்களையும், ஆண்டாளையும் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். 

கிபி 650 முதல் 950 வரையிலான காலத்தைத் தமிழில் பக்தி இலக்கிய காலம் என்பர். இதில் வைணவத்தைச் சார்ந்த பாடல்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தம்என்று நாதமுனிகளால் தொகுக்கப்பட்டன. 

இவைகளை இயற்றிய ஆழ்வார்கள் பக்தி நெறிகளையே குறிக்கோளாகக் கொண்டவர்கள். திருமாலை எப்போதும் மறக்காதவர்கள். திருமால் ஒருவனே பரம்பொருள் என்று நிரூபித்தவர்கள். மனித நேயத்தை வளர்த்தவர்கள். தமிழுக்கு மேன்மையளித்தவர்கள். இவர்கள் அனைவரும் பகவானின் அம்சங்கள் என்று கருதப்படுகிறார்கள். 

ஆழ்வார்களை எளிய தமிழில் அவர்கள் காலம் ,வாழ்க்கை பற்றிய சரித்திரக் குறிப்புகளுடன் அறிமுகப்படுத்தி பல பாடல்களின் நேரடியான பொருளைச் சொல்லும் இந்நூலின் முதல் நோக்கம் ஆழ்வார்களைப் பற்றியே பற்றியே அறியாதவர்களுக்கு அதன் மேல் ஈடுபாடு ஏற்படுத்துவதே. மேற்கொண்டு அவர்கள் மேல் ஈடுபாடு ஏற்படுத்துவதே. 

மேற்கொண்டு அவர்கள் பாடல்களின் உள்ளர்த்தங்களையும் ஸ்வாபதேசங்களையும் அறிய விரும்பினால் அவைகளை விரிவாக பல வைணவ நூல்களில் காணலாம். வைணவம் என்னும் மகா சாகரத்தின் கரையில் இருந்து கொண்டு அதை வியப்பாகப் பார்த்து ஆழ்வார்கள் மேல் ஒரு பிரமிப்யையும் மரியாதையையும் வாசகர்களிடம் ஏற்படுத்துகிறார் சுஜாதா.

- சத்யா ஆம்னிபஸ்சில் எழுதிய ”ஆழ்வார்கள் ஒரு எளிய அறிமுகம்”  புத்தக விமர்சனத்திற்கு அன்பர் பால்ஹனுமான் எழுதிய பின்னூட்டம்.

மிக்க நன்றி பால்ஹனுமான்.
.
.
.

தேவனின் கோயில் ஆலயமணியின் ஓசை

இந்தக் கல்யாணங்களில் ரிசப்ஷனுக்குக் இசைக் கச்சேரி நடத்தும் பார்ட்டிகளின் ஸ்ட்ராட்டெஜி எல்லாம் விசித்திரமானவை.  கல்யாண நிகழ்ச்சிக்கும் தாங்கள் பாடுவதற்கும் ஏதும் தொடர்பு இருக்க வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை என்று முழுமையாக நம்பிக் களமிறங்குபவர்கள் அவர்கள்.

கல்யாண வீட்டில் வந்து “கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா இல்ல ஓடிப்போயி கல்யாணந்தான் கட்டிக்கலாமா” பாடுவார்கள். தங்களுக்குப் பாடவரும் ஒரு சிக்கலான பாடல் என்பதால் கல்யாண வீட்டிலேயே “சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை” என்பார்கள். 

தங்கள் ஆர்கெஸ்ட்ராவின் ட்ரம்மர் கற்ற சகல வித்தைகளையும் காட்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதற்காக,  ”சுடரோடு எரியாது திரி போன தீபம்; உயிர் போன பின்னாலும் உடல் இங்கு வாழும்.... பாடவா உன் பாடலை...................”, பாடுவார்கள். 

“சின்னவீடா வரட்டுமா பெரிய வீடா வரட்டுமா” என்று அந்தந்த சீசனில் களைகட்டும் வெவஸ்தை கெட்ட அசிங்கங்களும் ஆர்கெஸ்ட்ராகளின் லிஸ்டில் கண்டிப்பாக உண்டு.

இந்த லிஸ்டைப் போட்டால் போட்டுக் கொண்டே போகலாம். அதை விட்டுவிட்டு நாம் இவர்களின் துவக்கப் பாடலுக்கு வரலாம்.

துவக்கப்பாடல் எப்போதும் பக்திப் பாடலாக இருந்தாக வேண்டும் என்பது நியதி. அந்த நியதியை எப்படிக் கடைபிடிக்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது விஷயம்.

பொதுவாக நிறையபேர் பாடும் பாடல்கள் இரண்டு - பக்திப் பாடல் ஆல்பத்தில் வந்த எண்பதுகளின் பாடலான ஆயர்பாடி மாளிகையில் அல்லது அதே எண்பதுகளில் இளையராஜா இசையில் ”தாய் மூகாம்பிகை” படத்தில் வந்த பக்திப் பாடலான ஜனனி ஜனனி.

ஆயர்பாடி மாளிகையில் அப்படியே சாஃப்டாக முடிந்துவிடும். பெரிய படுத்தல்கள் எல்லாம் இல்லாத பாடுபவர் ரிஸ்க் எடுக்கத் தேவையில்லாத சௌகர்யமான பாடல். ஜனனி ஜனனி பாட தேர்ந்த ஆரம்பகர்த்தா தேவை. “சிவசக்த்யா யுக்தோ யதிபவதி” என்று தொடங்கும் அந்த ஆரம்ப ஸ்லோகத்தை (!!)  ராஜாவுக்குப் பிறகு யாரும் இதுவரை சரியாகப் பாடிக் கேட்டதில்லை நான். 

அந்த ஸ்லோகம் யாருக்குச் சுமாரே சுமாராக வருகிறதோ அவர் தொடக்கத்தில் முன்னிருத்தப்படுவார். அதைத் தொடர்ந்து பல்லவி தொடங்கும் வேளையில் மூக்கால் குரலை வெளி அனுப்பினால் அது இளையராஜா என்று நம்பும் மற்றொருத்தர் பாடலைத் தொடங்க கச்சேரி இனிதே துவங்கும். இந்த மூக்கும் திறன் கொண்ட எவருக்கும் “அடடா, அச்சு அசல் இளையராஜா கொரல் இல்ல”, என்று எதிரில் அமர்ந்திருக்கும் ஒன்றிரண்டு ரசிகமகாஜனங்கள் புளகாங்கிதமடைந்து ஓப்பன் டு தி ஃபேஸ் பாஸிடிவ் கமெண்ட் கொடுக்கும். அதைக் கண்டு, கேட்டு அந்த மூக்கரும் புளகாங்கிதம் அடைந்து கொள்ளலாம்.

கொஞ்சம் பிரபலமான ப்ரொஃபஷனல் ட்ரூப்புகள் தேர்ந்த பாடகர்கள் கைவசம் இருந்தால் “தேவன் கோவில் மணியோசை” பாடுவார்கள். சீர்காழி பாடிய ரொம்பவும் ரிஸ்கான பாடல். கல்யாணங்களில் ரொம்பவே அரிதாகக் கேட்கக் கிடைக்கும்.

பலராலும் பாடப்படும் இன்னொரு பாடல் உண்டு. அது “பாலும் பழமும்” படத்தில் வரும் “ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்”. பக்திப் பாடல் என்ற தகுதியைப் பெறுவதற்கு “ஆலயம், மணி”  இந்த இரண்டு வார்த்தைகள் நம்ம ட்ரூப்புகளுக்குப் போதுமானதாக இருப்பது வினோதம்தான்.

எல்லாப் பாட்டும் போரடித்துப் போனால் என்று எடுத்துக் கொள்ள ஒரு பாடல் உண்டு. அது, “தேவனின் கோயில் மூடிய நேரம்”, என்ற பாடல். உங்களில் பெரும்பாலானவர்கள் நிச்சயம் கேட்டிருப்பீர்கள். அறுவடைநாள் படத்தில் ராஜா இசையில் சித்ரா பாடிய பாடல். இந்தப் பாடலை பள்ளிப் பருவத்தில் எப்போதோ கேட்டிருந்தாலும் 2003’ஆம் வருடத்திற்குப் பின்னர் ட்ரூப்புகளில் நானும் பாடுகிறேன் என்று களமிறங்கிய பின்னரே நிறைய கேட்டேன்.

ட்ரூப்பில் பாடும் பெண்டிர் எப்போதும் தனியாவர்த்தனகர்த்தாக்கள். ஆண் பாடகர்கள் நான்கு பேர் இருந்தால் பெண் பாடகிகளின் அவைலபிலிடி ஒன்றுக்கு மேல் இருக்காது. கச்சேரி வழக்கமாக முடிய இரவு பத்துமணி ஆவதும், அதன் பின் அவர்கள் வீடு புறப்படுவதும் ”ஓகே” என்று ஒப்புக்கொண்டு நம்பி அனுப்பும் பக்குவம் கொண்ட அரிதான வீடுகளிலிருந்து வருபவர்கள் அவர்கள்.

இவர்களில் பெரும்பாலானவர்களின் திறமை இரண்டே விஷயங்கள்தான். ஒன்று தாளத்தோடு பாடுவது; இரண்டு பாடலின் ஆரம்பம், இடையே, முடிவில் என்று எந்த இடத்தில் எடுக்க/நிறுத்த வேண்டுமோ அதை சரியாக அறிந்து வைத்திருப்பது. மேல் ஸ்தாயி, கீழ் ஸ்தாயி, உச்சஸ்தாயி, ஸ்ருதி பிசகல்கள், சங்கதிகள் என்ற விஷயங்களுக்குள் எல்லாம் இவர்களில் பெரும்பாலானோர் நுழைய மாட்டார்கள். எனவே இவர்கள் பாடும்போது இந்த தேவனின் கோயில் போன்ற பாடல்களின் முதல் இரண்டு வார்த்தை உங்களுக்குப் புரிந்துவிட்டால் நீங்கள் பெரிய ஜீனியஸ். (சக ஆர்கெஸ்ட்ரா பாடகியர் இந்தப் பதிவை தப்பித் தவறியும் படிக்காமல் இருக்கக் கடவது)

ரொம்ப நாட்களுக்கு இது ஏதோ பக்திப் பாடல்தான் போல என்று நினைத்திருந்தேன். ஒருமுறை டிவியில் அறுவடைநாள் படம் தொடங்கும்போது இந்தப் பாடலுடன் தொடங்க, கொஞ்சம் சித்ரா குரலில் அந்தப் பாட்டை  முதல்முறை முழுசாய்க் கேட்டேன். இதென்ன கோயில் மூடினாற்போலெல்லாம் பாட்டில் வருகிறது. கோயில் திறந்தால்தானே பக்தி என்று வரிகளை உன்னிப்பாய்க் கவனித்தேன். கொடுமையே கொடுமையே என்னும் அளவிற்கு இந்தப் பாடலிலும் தேவனையும் கோயிலையும் விட்டால் பக்தியுடன் எந்த ஸ்னானப்ராப்தியும் இல்லாத பாடல் இது. சுமைதாங்கி, இடிதாங்கி என்றெல்லாம் பாடல் நடுவில் வருகிறது.

என் ட்ரூப் ஓனர் சரவணகுமாரிடம் கேட்டேவிட்டேன், “என்ன மச்சி, தேவன், கோயில், ஆலயம், மணி இப்படி எல்லாம் வார்த்தை வந்தா அது பக்திப் பாட்டு ஆகிடுமா? என்னடா உங்க லாஜிக்கு?”

“சிம்பிள் லாஜிக் மச்சி. மங்களகரமான வார்த்தைகளை வெச்சு கச்சேரி தொடங்கறோம். அவ்வளவுதான். அதுக்கு மேலே என்ன லைன் வருதுன்னு ரெண்டு வருஷம் கச்சேரில பாடின பிறகுதானே உனக்கே விளங்கிச்சு. இங்க ஒருநாள் கேக்கறவனுக்கு என்ன விளங்கப் போவுது?”

என்னத்த சொல்ல? என்னமோ பண்ணுங்கடா என்று அதன்பின் இந்த விஷயத்தில் நான் கேள்வியே கேட்பதில்லை.

லேட்டஸ்ட் சொல்வனம் இதழில் சுகா எழுதிய தேவனின் கோயில் பதிவைப் படித்த பின்னர்தான் இந்தப் பாடலுக்கு கச்சேரியைத் துவங்குவதற்கு எத்தனை பெரிய தகுதி இருக்கிறது எனப் புரிகிறது. சில விஷயங்களில் உங்களுக்குள் ரசனையை விதைக்கவும் யாரேனும் தேவைப்படுகிறார்கள்.  இரண்டு நாட்களாக இந்தப் பாடலுடனேயே உழன்று கொண்டிருக்கிறேன்.

என்ன எழுதினாலும் எத்தனை எழுதினாலும் சுகா கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக தேக்கி வைத்த ரசனையைக் கொண்டு எழுதியதைப் போல் என்னால் எழுதிவிட முடியாது. எனவே அவர் வரிகளிலேயே இந்தப் பாடலைப் பற்றி படித்து விடுங்கள்.

அடுத்ததாக “ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்” பாடலானது பக்திப் பாடலுக்கான அந்தஸ்து உடையது என்று என் மனசு ஒப்புக்கொள்ள யார் பதிவு எழுதுவார்களோ தெரியவில்லை

Nov 11, 2012

சிறுவர் இலக்கிய வாரம்

சென்ற வாரம் ஆம்னிபஸ் தளத்தில் ஒரு அறிவிக்கப்படாத “வனவிலங்கு” வாரமாக அமைந்தது. வனவிலங்கு என்பதைவிட, நாங்கள் அதனை “கானுயிர் வாரம்” என்று அழைத்தோம்,

இந்த சப்ஜக்டில் நான்கு நல்ல பதிவுகள் தேறின. அவற்றை நீங்கள் இந்த இணைப்பில் வாசிக்கலாம்: கானுயிர் வாரம்

வரும் பதினான்காம் தேதி குழந்தைகள் தினம். அதனை முன்னிட்டு இந்த வாரம் ஆம்னிபஸ்ஸில் சிறுவர் இலக்கிய வாரம் என்ற தலைப்பில் புத்தக விமர்சனங்கள் வெளிவரும். மினிமம் ஐந்து பதிவுகள் இதுவரை தயாராயுள்ளன.நீங்கள் யாரேனும் சிறுவர் இலக்கியப் புத்தகங்கள் ஏதேனும் வாசித்திருந்தால் அவற்றை மற்றவருடன் பகிரும் நல்ல மனமிருந்தால் நமக்கு (rsgiri @ gmail <dot> com) எழுதி அனுப்புங்கள். சிறப்புப் பதிவாக அவை வெளிவரும். அனுப்புபவர்களுக்கு அட்வான்ஸ் நன்றிகள்.

Nov 10, 2012

சகலகலா ஆசார்யர் எஸ் ராஜம்


நண்பர்கள் எவரேனும் வரும் நாளை (நவம்பர் 11, 2012 ஞாயிற்றுக்கிழமை)  சென்னையின் சுற்றுவட்டாரங்களில் இருந்தால் தவறாமல் மதியம் இரண்டு மணி அளவில் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில் உள்ள தத்வலோகா ஹால் என்ற இடத்தில் ஒன்று கூடவும். அங்கே மறைந்த மாமேதை எஸ் ராஜம் அவர்கள் வாழ்வையும் வாக்கையும் சித்தரிக்கும் ஒரு ஆவணப்படத்தை இலவசமாகத் திரையிடவிருக்கிறார்கள்.

நண்பர் லலிதா ராம் தன் ஆர்வத்தாலும் உழைப்பாலும், “உருப்படியாய் ஏதாவது செய்யணும் பாஸ்!” என்று மலைத்து நிற்பவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்காக உயர்ந்து நிற்கிறார் – வீணாய்ப் போனவர்களாலும் ஒன்றுக்கும் உதவாதவர்களாலும் நொந்து நூடுல்ஸ் ஆன தமிழர்களாகிய நாமனைவரும் சமய சாதி சினிமா சீரியல் சாக்காடுகளைத் துறந்து, நாளது தேதியன்று நாளது சமயத்தில் நாளது ஸ்தலத்தில் ஒன்றுகூடி லலிதா ராமின் சிறப்பான முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...