Nov 24, 2010

கவிதை எழுதுவது எப்படி


சிறப்புப் பதிவர்: நட்பாஸ்
சென்ற பதிவில் சொன்னதை சுருக்கமாக சொல்லி விடுகிறேன்- நண்பர் ஒருவர் இப்போது எழுதப்படுகிற கவிதைகளில் சில வகை கவிதைகளை எப்படி புரிந்து கொள்வது என்ற கவலையைத் தெரிவித்திருந்தார். அதற்காக சொல்வனத்தில் வந்த ஒரு கவிதையை விவாதித்து, நீங்கள் இந்த மாதிரியான கவிதைகளை எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளுங்கள், அந்த வசதி உங்களுக்கு இருக்கிறது என்று ஒருவாறு முடிக்க நேர்ந்தது. அப்போது போகிற போக்கில் புலவர்கள் இப்போது கவியரசர்கள் ஆகி விட்டார்கள், நீங்கள் புரிந்து கொள்வது கொள்ளாதது குறித்து அவர்களுக்குக் கவலை இல்லை என்று சொல்லி விட்டு அவர்கள் ஏன் அரசர்கள் ஆனார்கள், எந்த ராஜ்யத்தை ஆள்கிறார்கள் என்பதை அப்புறம் பார்க்கலாம் என்று சொல்லி இருந்தேன், இன்று அப்படி பார்க்க முடிகிறதா என்பதைப் பார்க்கலாம்.


இந்தத் திருக்குறளைப் படித்துப் பாருங்கள்-
"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்."
இதில் ஒரு தகவல் இருக்கிறது.

இது கம்ப ராமாயணம்-
"பூ ஒடுங்கின; விரவு புள் ஒடுங்கின, பொழில்கள்;
மா ஒடுங்கின; மரனும் இலை ஒடுங்கின; கிளிகள்
நா ஒடுங்கின; மயில்கள் நடம் ஒடுங்கின; குயில்கள்
கூ ஒடுங்கின; பிளிறு குரல் ஒடுங்கின, களிறு. "
இதிலும் தகவல் இருக்கிறது.

எல்லாம் எங்களுக்குத் தெரியுமப்பா என்கிறீர்களா? ஒரு பில்டப்புதான். இங்கே நீங்கள் ஒரு ஸ்மைலியைப் படிக்க வேண்டும்.

இப்போது பற்பல நூற்றாண்டுகளை ஒரே பத்தியில் பாய்ந்து கடந்து தற்கால கவிதைகளில் ஒன்றைப் பார்ப்போம்-

பூக்களைப் பிரித்துப் பிரித்து
தேடிக்கொண்டிருந்தேன் புதையலை
விடியலின் பின்பொழுதில்
பூக்களின் உதிர்ந்த மலைக்குள்
கண்டுபிடித்தேன்
என்னைக் காணவில்லை
என்று அழுதுகொண்டிருக்கும்
என்னை.
- "புதையல் தேடி"- இலா, சொல்வனம், இதழ் 26

கவிஞர் தன்னைக் கண்டு பிடித்துக் கொண்டு விட்டார் என்பதைத் தவிர வேறு ஏதாவது தகவல் கிடைக்கிறது? அந்தத் தகவலும் நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து வருவதாகத் தெரியவில்லை- தன்னால் கண்டு பிடிக்கப்பட்டபோது தேடப்பட்டவர் தன்னைக் காணவில்லை என்று அழுதுக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. கவிதை என்று ஒன்று இருக்கிறது என்பதைத் தவிர என்ன நடக்கிறது இங்கே? பூக்களைப் பிரித்துப் பார்த்ததற்கு பதிலாக வெங்காயத்தைப் பிரித்துப் பார்த்திருந்தாலாவது இந்தக் கவிதைக்கு ஒரு பொருள் காண்பது நமக்கு எளிதாக இருந்திருக்கும்.

கவிதையில் ஒன்றும் நடக்கவில்லை. அது இருக்கிறது. நம் மனதில்தான் எதுவும் நிகழ்கிறது. அங்கே என்ன நிகழ்கிறது என்பதை நம் வாசிப்பு அனுபவமே தீர்மானிக்கிறது.

மறுபடியும் சென்ற பதிவில் நான் குறிப்பிட்ட வா மணிகண்டனின் "நின்று பெய்யும் மழை - பிரான்சிஸ் கிருபா" என்ற கட்டுரைக்கே வருகிறேன். கொஞ்சம் அளவுக்கதிகமாகவே அங்கிருந்து ஒரு மேற்கோளை உருவி இருக்கிறேன், படித்துப் பாருங்கள்-

"ரசனையுடன் கவிதையை அவதானிக்கும் போது ‘பக்குவப்பட்ட, உண்மைத்தன்மையுடையன’ அல்லது ‘அலங்காரம் செய்யப்பட்ட சொற்க் கூட்டங்கள்’ என்று இரண்டு வகைகளுக்குள்ளாகவே கிட்டத்தட்ட அனைத்துக் கவிதைகளையும் மற்றும் கவிதை என்ற பெயரில் உற்பத்தி செய்யப்பட்டவைகளையும் உள்ளடக்கிவிடலாம். பக்குவப்பட்ட உண்மைத் தன்மையுடன் உள்ளனவற்றை கவிதை என்று தயக்கமில்லாமல் சொல்லிவிடலாம். மற்றவற்றை ‘கழிசடை’ என்று நிராகரித்துவிடலாம்.

இந்தத் தரம்பிரித்தல் பரிந்துரைகளின் மூலமாகவோ அல்லது மேதாவித்தனத்தாலோ செய்யக் கூடியதில்லை. தொடர்ந்து கவிதைகளை அணுகுவதாலேயே நிகழ முடியும். கவிதைகளை அணுகுதல் தொடர்ச்சியான வாசிப்பின் மூலமாக நிகழ வேண்டும். வாசிப்பின் மூலமாகவே வாசகன் உண்மையான கவிதைகளை நெருங்க முடியும். ஒரு கவிதை வாசகனுக்கு உண்மையான கவிதைகளை நெருங்குதல் எத்தனை முக்கியமானதோ அதே அளவுக்கு முக்கியமானது, போலிகளை விட்டு விலகுதலும்."

இது சற்றே தீவிரமான நிலைப்பாடு என்றுத் தோன்றுகிறது- வா மணிகண்டன் எழுதியுள்ளதில் என்ன பிரச்சினை என்றால் இவர் சொல்கிற மாதிரியான நல்ல கவிதைகளை முதன் முதலாக படிக்கிற நம்மைப் போன்ற பெரும்பாலோர், அவற்றை "அலங்காரம் செய்யப்பட்ட சொற் கூட்டங்கள்" என்றுதான் எதிர்ப்பார்கள், இல்லையா? "பக்குவப்பட்ட, உண்மைத்தன்மையுடைய" கவிதைகளை நம்மால் கண்டு பிடிக்க முடியும் என்ற நம்பிக்கையில் நிறைய கவிதைகளைப் படித்தால்தான் உண்டு. அப்போது கூட எதை வைத்து ஒரு கவிதையின் உண்மைத்தன்மையை அந்தக் கவிதையைக் கொண்டே உறுதி செய்துகொள்ள முடியும்? இதற்கெல்லாம் எனக்குத் தெளிவான பதில் தெரியவில்லை. அதே போல் போலிகளை விட்டு விலக வேண்டும் என்பதில்கூட ஒரு ஸ்டாலினியக் கண்டிப்பு தெரிகிறது. இது கவிதையைக் கொலைகாரச் சித்தாந்தத்துக்கு இட்டுச் செல்லும் பாதை என்பதை வா மணிகண்டன் உணர்ந்திருக்கிறாரா இல்லையா என்றுத் தெரியவில்லை.

சரி விடுவோம். நாம் புரிந்து கொண்ட அளவில், இங்கு, நீ நிறைய படித்தால்தான் எங்களைப் புரிந்து கொள்ள முடியும் என்ற வாதத்தில், கவிஞர்கள் எதை ஆள்கிறார்கள் என்ற கேள்விக்கு பதில் போலொன்று கிடைக்கிறது-

இந்த மாதிரி கவிதைகளைப் படிக்கும்போது கவிதை, கவிஞனின் பக்குவப்பட்ட உண்மைத்தன்மையுடைய குரலாய் வெளிவந்து ஒரு பக்கம் கிடக்கிறது, வாசகன் மறு பக்கம் கிடக்கிறான். இருவருக்குமிடையே முழுமையான பாலமாய்த் தகவலேதும் பரிமாறிக் கொள்ளப்படுவதில்லை.....

....என்றுதானே நினைக்கிறோம்? அதுதான் இல்லை. எனக்கும் உங்களுக்கும்தான் தகவல்கள் தெரிய வருகிறதில்லை. நிறைய கவிதைகளைப் படிக்கிறார்கள் இல்லையா, அவர்களுக்குத் தேவையான தகவல்கள் கிடைத்து விடுகின்றன. எவ்வகையான தகவல்கள்?

இங்கே ஒரு நொடி நிற்போம். இலா எழுதியிருக்கிற மாதிரியான கவிதைகளை உங்களாலும் என்னாலும் எழுதி விட முடியாதா என்ன? அது ஒன்றும் அப்படி ஆகாத காரியமாகத் தெரியவில்லை. இல்லையா?

ஆனால் இந்தக் கவிதையில் உள்ள ஒரு வகையான நேர்த்தியைப் பாருங்கள். இதை நாம் எழுதும் எல்லா கவிதைகளிலும் தொடர வேண்டும், முடியுமா? நாமானால் என்ன செய்வோம், இன்று இந்த மாதிரி ஒரு கவிதையை எழுதுவோம், நாளை நன்றாக இருக்கிறது என்பதற்காக

ஒரு வெண்பந்தாய்
இட்லி மாவில் விழுந்த எலி
தத்தித் தத்திப் போகிறது

கிருஷ்ண ஜெயந்திஎன்று எழுதிவிட்டு, ஆஹா என்று நாம் அதிசயிப்பதை உணர்த்துவதற்காக ஆச்சரியக் குறியைப் போட்டு அதை அழகும் செய்வோம், இல்லையா?- கிருஷ்ண ஜெயந்தி!

இதைப் படித்தபின் நீங்கள் எழுதும் எதையாவது கவிதை என்று புலவர் பெருமக்கள் ஒப்புக் கொள்வார்கள் என்கிறீர்கள்?

இந்த காலத்தில் கவிதை எழுதுகிறவர்கள் ஆள்வது மொழியை. அதன் எல்லைகளை எவ்வளவுக்கு விரிக்க முடியும் என்று சோதித்துப் பார்க்கிறார்கள். உங்கள் மொழி ஆளுமை எந்த அளவுக்கு நன்றாக இருக்கிறதோ அந்த அளவுக்கு நீங்களும் நல்ல கவிஞராக அங்கீகரிக்கப்படுவீர்கள். உங்கள் கவிதையும் நல்ல கவிதையாய் அறியப்படும். அதுதான் உண்மை.

நாம் தகவல் பெட்டகமாய் கவிதைகளை அணுகுவது அவர்களுடைய நோக்கத்துக்கு இடைஞ்சலாக இருக்கிறது. ஏன்? வாசகனின் கவனம் மொழியை விட்டு தகவலுக்குத் தாவி விடுகிறது. அது நல்ல கவிதைக்கு அழகில்லை, சரிதானே? கவிதை என்றால் அதை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறபடி இருக்க வேண்டும், அதுதானே அழகு?

அபத்தமாக ஒன்று சொல்கிறேன், சரி வருகிறதா பாருங்கள்- இது பொருத்தமாக இருந்தாலும் இருக்கக் கூடும்: நீங்கள் ஒருவரைத் தேடிப் போகிறீர்கள். வழி தேடிக் கொண்டிருக்கையில் ஒரு அழகான பெண் எதிர்ப்படுகிறாள். அவர், "லெப்ட்ல போய் செகண்ட் ரைட் திரும்பி கொஞ்ச தூரம் போனா பச்சை பெயிண்ட் அடித்த வீடு வரும். அதற்கு எதிர் வீட்டில்தான் இவர் இருக்கிறார்," என்று சொல்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். "சரி," என்று தலையாட்டி விட்டு நீங்கள் அவளைக் கடந்து போக முடிகிறதென்றால் அது அழகுக்கு மரியாதையா? அவள் நினைவாகவே இருந்து திரும்பத் திரும்ப அவளைத் தேடி வந்து எதிர்ப்பட்டால் அவளைப் பின்தொடர்ந்து அவள் வீட்டைக் கண்டு பிடிக்க வைக்க வேண்டும், அதுதானே அழகுக்கு அழகு? என்ன சொல்கிறீர்கள்?

அழகென்றால் அதன் தாக்கம் நம்மைக் கடத்திக் கொண்டு போய் தன்னில் இருத்தி வைத்துக் கொள்ள வேண்டும். இதைதான் இப்போது எழுதும் கவிஞர்கள் முயற்சி செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். நம் கவனம் கவிதையில் இருக்க வேண்டும், அதன் தகவல்களில் அல்ல. இதன் காரணமாகவே தகவல்களின் ஒழுங்கை, முழுமையை கலைத்து மொழியில், கவிதையின் கவித்துவத்தில் உள்ள ஒழுங்கை முன்னிறுத்துகிறார்கள் இவர்கள் என்று நினைக்கிறேன்.எது எப்படி இருந்தாலும், கவிதைகள் தனித்து நிற்பதில்லை. நான் முன் சொன்ன மாதிரி இந்த வகையான கவிதைகளை யாரும் அவ்வப்போது வாய்க்கிற தருணங்களில் எப்போதாவது ஓரிரு முறை எழுதி விடலாம். ஆனால் அதைத் தொடர்ந்து செய்கிற ஜட்ஜ்மன்ட் இருக்கிறதில்லையா, அதுதான் நீங்கள் எழுதுகிற கவிதையை கவனிக்கப்பட தக்கதாய் நிலை நிறுத்துகிறது.

இது அநியாயம் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் அது அப்படிதான் சார். இது மொழியின் எல்லைகளை விரிக்கிற வித்தை, இங்கு கத்துக்குட்டிகளுக்கு இடமில்லை. மொழி ஆளுமை உள்ளவர்கள் என்று அறியப்பட்டவர்களே இங்கு ஆட்சி செய்ய முடியும். நீங்கள் நவீன கவிதை எழுத நினைப்பவராக இருந்தால் இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்- கவிஞர்கள் தங்கள் கவிதைகள் மூலம் ஒருவரோடொருவர் உரையாடிக் கொள்கிறார்கள். அவர்களது உரையாடல் கவிதையின் பொருள் குறித்தல்ல- அதன் மொழி குறித்து, வடிவம் குறித்து, இயல்பு குறித்து. இதைப் பற்றி எழுதுகிறேன் அதைப் பற்றி எழுதுகிறேன் என்பதெல்லாம் ஒரு சாக்குதான்- கவிதைதான் அவர்களது பாடுபொருள். நாம் நிறைய கவிதைகளைப் படித்து, இவர்கள் பேசிக் கொள்வதைத் தொடர்ந்து ஒட்டுக் கேட்டால்தான் இவர்கள் பேசிக் கொள்வதை பாலோ பண்ண முடியுமென்று நினைக்கிறேன். இந்த மாதிரி கவிதைகளைப் படிப்பதற்காக நாம் இவ்வளவு மெனக்கெட வேண்டுமா என்பது வேறு விஷயம்.

நிறைய எழுதி விட்டேன்- இதில் தெளிவை விட கேள்விகள்தான் அதிகம் எழுந்திருக்கும். அதனால் இன்னொன்றையும் சொல்லி விடுகிறேன். கவிஞர்களை அரசர்கள் என்று சொன்னேனில்லையா, நம் கையேந்தி நிலையை மனதில் வைத்து, அது தவறு.

கவிஞர்கள் கடவுள் மாதிரி. படைப்பாளிகள் என்ற அளவில் மட்டுமல்ல, அவர்களின் இருப்பு உபாசகர்களின் கவனிப்பை நம்பி இருக்கிறது என்பதாலும்தான். என்னதான் நாங்கள் படைக்கிறோம், நீ எங்களை உபாசித்து அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் எட்டி நின்றாலும், பக்தன் கண்டு கொள்ளாமல் இவர்களைக் கைவிட்டால் கதி என்னாகும்? யோசித்துப் பாருங்கள், சிதிலமடைந்த கோயில்கள் நினைவுக்கு வருகிறதா இல்லையா?

கவிதைக்கு கவிஞன் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் வாசகனும், சரிதானே? தகவல்களைத் தவிர்த்து மொழியின் எல்லைகளை நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் விரித்து செல்லுங்கள், ஆனால் ஓரளவுக்கு மேல் ஓவராகப் போனால் வாசகர்கள் அந்நியப்பட்டுப் போய் விடுவார்கள், இல்லையா? அந்த ஆபத்தும் இருக்கிறது. ஆங்கிலக் கவிதைகளில் ஒரு தேக்க நிலை இருப்பதாக கேள்விப்படுகிறேன், ஒரு சமயம் இப்பாலும் அப்பாலும் இருக்க வேண்டிய கவிஞர்கள், ஒரேயடியாக அப்பால் போய் விட்டதால் இது நேர்ந்திருக்கிறதோ என்பது என் ஐயம்.

ஹரன் பிரசன்னாவின் மூன்று கவிதைகளை முன்வைத்து என்று சொல்லி விட்டு அதைப் பற்றி ஒரு வார்த்தைகூட பேசாமல் இன்னும் என்னடா இவன் கதை விட்டுக் கொண்டிருக்கிறான் என்று நீங்கள் கடுப்பாவது தெரிகிறது. ஒரு நாள் பொறுத்திருங்கள், அதையும் சொல்லி முடித்து விடுகிறேன்.

நாளைக்குமா, என்று பதறாதீர்கள் நண்பர்களே, இவ்வளவையும் தெரிந்து கொண்டால்தான் அவர் கவிதைகளை சரியான முறையில் அணுக முடியும்.

இதோ ஹரன் பிரசன்னாவின் மூன்று கவிதைகளில் இன்னொன்று- அவர் அப்பாலிருக்கிறாரா இப்பாலிருக்கிறாரா எப்பாலிருகிறார் என்று சொல்லுங்கள்-

பாற்கடல்

வெண்ணிறக் குதிரைகள்
மிடறு நிமிர்த்தி பாய்ந்தோடுகின்றன
புரண்டு படுக்கிறான் மகன்
விஷ்ணுவின் புன்னகையை ஏந்தி
தொப்புள்கொடியில் லக்ஷ்மியைத் தாங்கி
வாயிடுக்கில் ஒழுகும் நீரில்
மிதக்கிறது என் கட்டில்
கட்டிப் பிடித்துக்கொள்கிறாள்
கனவின் நிறத்தில்
மலர்ந்த மனைவி
என்ன நீர்ச்சத்தம் என்கிறாள் அம்மா
அலைகளுக்கு இடையே
ஆயிரம் ஆயிரமாய்
மிதந்து வருகின்றன
அந்த இரவில்
அப்போது மலர்ந்த
தாமரை மலர்கள்
ஒரு மலரை எடுத்து
விஷ்ணுவுக்கு வைத்தேன்
எங்கேயோ ஒலிக்கிறது மணிச்சத்தம்

.
.
.

14 comments:

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஎன்னைக் காணவில்லை
என்று அழுதுகொண்டிருக்கும்
என்னை.ஃஃஃஃ
மிகவும் அருமையான பதிவுகள்...

ம.தி.சுதா said...

அட எனக்குத் தன் சுடு சோறு ....

natbas said...

ஜி, பார்க்கவே அழகாக இருக்கிறது உங்கள் பதிவு. மிக்க நன்றி.

"ஸஸரிரி" கிரி said...

@ மதிசுதா
ரொம்ப நன்றி நண்பா!

@ நட்பாஸ்
ஜி,
கரெக்டா சொல்லுங்க. பதிவு உங்களது, வடிவமைப்பு மட்டும் எனது.

ஜீ... said...

//உங்கள் மொழி ஆளுமை எந்த அளவுக்கு நன்றாக இருக்கிறதோ அந்த அளவுக்கு நீங்களும் நல்ல கவிஞராக அங்கீகரிக்கப்படுவீர்கள்.//
True!!
U watch City of God?
come to my blog..
:)

cheena (சீனா) said...

அகில் அட் சிசிரிரி டாட் காம் - என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினேன் - டெலிவரி ஃபெயிலியர் என திரும்ப வந்துவிட்டது. தொடர்பு கொள்ள என்ற கட்டத்தில் அனுப்பினேன் - வேர்டு வெரிஃபிகேஷனில் ராங் கோடு எனத் துப்பி விட்டது. என்ன செய்வது .....

"ஸஸரிரி" கிரி said...

@ சீனா

தங்கள் வருகை கருத்து...அகிலுக்கு தந்த அன்பு...அத்தனைக்கும் ஆயிரம் நன்றிகள்.

அகிலின் மெயில் ஐ.டி. என் தவறாக இருக்கும். பார்த்துத் திருத்திடறேன்.

"தொடர்பு கொள்ள" பகுதியில் வோர்ட் வெரிபிகேஷன் தவறுக்கு நான் என்ன செய்ய? நீங்க சரியா தட்டச்சணும்.

என்ன அர்ச்சனை என்னைப் பண்ணணும்னாலும் இங்குட்டே பண்ணுங்க. எவ்ளோ பாத்துட்டோம். அதையும் பாத்துடறேன்.

A doctor said...

நட்பாஸ்

அழகாயிருக்கிறது என்று நினைக்க முன்னரே உணரவேண்டுமாக்கும்.

சிறப்பான எழுத்து எல்லாத்துறைகளிலும் எழுதுகிறீர்கள் விளையாட்டு இலக்கியம் அரசியல் சமூகம் உடல் நலம் விஞ்ஞானம் தத்துவம் ... இப்படி... எப்படி?

படங்கள் நன்றாக இருக்கின்றன.

natbas said...

:) நன்றி டாக்டர், பாற்கடல் பற்றி ஒரு சில வார்த்தைகள்?

Anonymous said...

பாற்கடல் கவிதையைக்கடைகிறீர்கள் அமுதம் கிடைக்கிறதா?

anandh said...

ஒரு கவிதையைப் படிக்கும்போது, ‘என்ன வகையான அக நிலையில் இருந்தால் நான் இப்படி எழுதியிருப்பேன்,’ என்று தன்னையே கேட்டுக்கொண்டால் அந்தக் கவிதை புரியக் கூடும் என்று படுகிறது.

natbas said...

@anandh சுருக்கமாக ஒற்றை வரியில் சொன்னாலும் துல்லியமாக சொன்னீர்கள்: கவிதை வாசிப்புக்கு அறிவைவிட, தர்க்கத்தைவிட, empathyதான் அவசியம்.

தங்கள் வருகைக்கும் இருக்கைக்கும் மிக்க நன்றி.

வா. மணிகண்டன் said...

பிரான்சிஸ் கிருபாவின் கவிதைகளைப் பற்றி எழுதிய கட்டுரைக்கான சுட்டியைத் தேடிக் கொண்டிருந்தபோது கூகிளார் இங்கு அழைத்து வந்திருக்கிறார். மிக விரிவாக எழுதியிருக்கிறீர்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி.

bhaskar Lakshman said...

நட்பாஸ் அவர்களே,கவிதைக்கு மொழியழகு தேவை தான். ஆனால் எனக்கு கவிதை மொழி குறியீடாக பல வாசல்களைத் திறந்தால் தான் பிடிக்கிறது. உதாரணமாக போர்ஹே கவிதைகளைச் சொல்லலாம்.ஒன்று சொல்லி தான் ஆக வேண்டும். கவிதையை வாசிப்பது எப்படி என ஒரு கட்டுரை எழுதவே தைரியம் வேண்டும்.பாஸ்கர் லக்ஷ்மன்

Related Posts Plugin for WordPress, Blogger...