Nov 23, 2010

"கவிதையை எப்படிப் படிக்க வேண்டும்?"

ஹரன் பிரசன்னாவின் "மூன்று கவிதை"களை முன்வைத்து
சிறப்புப் பதிவர்: நட்பாஸ்
ஒரு கவிதையை எப்படி வாசிப்பது? இந்த நாட்களில் எழுதப்படுகிற கவிதைகளைப் படிக்கிறவர்களில் நிறைய பேருக்கு இந்த சந்தேகம் வருகிறது. எனக்கும்கூடத்தான், ஆகப் பாருங்கள், நேற்று மாலை என் நண்பரொருவரிடமிருந்து அஞ்சல் ஒன்று வந்தது- சொல்வனம் இதழில் ஹரன் பிரசன்னாவின் மூன்று கவிதைகளைச் சுட்டி, "பாஸ், இதெல்லாம் என்ன? மூணுல ஒண்ணு கூட விளங்கல :(" என்று. அஞ்சலில் அவர் வெளிப்படுத்தியிருந்த முகம் திரும்பிய ஸ்மைலி அதிர்ச்சியில் உறைந்த ரத்தத்தை நினைவுபடுத்தியது எனக்கு. இந்த மாதிரி ஒருத்தர் நம்மை நம்பி கேட்கும்போது, "தெரியலையேப்பா!" என்று கையை விரிக்க என்னால் முடிவதில்லை. இருக்கிற குழப்பம் போதாதென்று ஏதோ என்னாலான கைங்கர்யம்- இதோ.


எது கவிதை, ஏன் கவிதை என்பதை விளங்கிக் கொள்ள அதே இதழில், வா மணிகண்டன் நவீன கவிதைகள் குறித்து எழுதியுள்ள, "நின்று பெய்யும் மழை - பிரான்சிஸ் கிருபா" என்ற கட்டுரையையும் பதிப்பித்திருக்கிறார்கள், அதை முதலில் படிப்பது பயனுள்ளதாக இருக்கும். அதை வாசித்துப் பார்த்தால் வா மணிகண்டன், கவிதை வாசகனுடன் கண்ணாமூச்சி ஆடுவதாக சொல்கிறார் என்பது புரிகிறது. 


இது எல்லா கவிதைகளுக்கும் பொருந்துமா இல்லை நவீன கவிதைகளுக்கு மட்டும்தான் பொருந்துமா என்று தெரியவில்லை. ஒரே கவிதையை வெவ்வேறு வாசகர்கள் வெவ்வேறு விதமாகப் புரிந்து கொள்வதை அவர் அங்கீகரிப்பது போலவும் தெரிகிறது. ஏனென்றால் பிரான்சிஸ் கிருபாவின் ஒரே ஒரு கவிதையைப் பற்றி அவ்வளவு பெரிய கட்டுரையை எழுதி விட்டு, "அல்லது முற்றும் வேறுமாதிரியாக இன்னொரு வாசகன் யோசிக்கலாம்," என்று பேனாவைத் தூக்கிக் கொண்டு கிளம்பி விடுகிறார்.எனக்கு இந்த பிரான்சிஸ் கிருபாவின் கவிதையை வேறு மாதிரியாக வாசிக்கத் தோன்றுகிறது. அதை கவனித்துவிட்டு ஹரன் பிரசன்னாவின் மூன்று கவிதைகளுக்கு வந்தால் நம் வேலை சுலபமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.


இது கவிதை:

விரித்த என் பாயில்
மீதமிருந்த இடத்தில்
படுத்து ஒடுங்குகிறது குளிர்காலம்.
பூக்கள்
ஒரு புன்னகையின்
தொடக்கமா முடிவா
என்றுதான் நான் கேட்டேன்.
அது என்னைக் கட்டியிறுக்கி
காலோடு கால் பின்னிக் கொண்டது.
அடுப்பில் விறகு அணைந்திருக்கிறது
எழுப்பிவிடட்டுமா என்று கேட்டேன்.
கைகளையும் பின்னிக்கொண்டது.
இரவு தீர என்னோடு
உறங்கிக் கிடந்தது.
சூரியசாட்டையிலிருந்து
மஞ்சள் ரத்தம் பரவியபோது
ஒரு முத்தத்தை உடைக்கமுடியாமல்
இரண்டு உதடுகள் திணறின
காட்டுக்கு வெளியே

(உரிமை- ஆசிரியருக்கே!)


கவிதையை அவரவர் திறமைக்கேற்றார்போல வாசித்துக் கொள்ளலாம் என்று வா மணிகண்டன் சொல்லி விட்டார். இதை நாம் எப்படி வாசிப்பது என்று பார்ப்போம்.


குளிர்காலம் என்பது பெண்ணாக இருக்கலாம், ஆணாக இருக்கலாம், இல்லை ஆளுயரத்துக்கு வளர்ந்த ஒரு பூனைக்குட்டியாகக் கூட இருக்கலாம். அது பாயில் மிச்சமிருக்கிற இடத்தில் ஒடுங்கிப் படுத்துக் கொண்டிருக்கிறது, பாவம்.நம் கவிஞர் சும்மா இருக்காமல் அதனிடம், "பூக்கள் ஒரு புன்னகையின் துவக்கமா முடிவா?" என்று வாயைக் கொடுக்கிறார். நியாயமான கேள்விதானே? காலையில் கொஞ்சம் அப்படி இப்படி வெளியே போனீர்களானால் உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் நம் நகரத்து சாலையோரங்களில் அங்கங்கே செடிகளில் பூக்களைப் பார்க்கலாம். "ஆஹா, பொழுது நன்றாக விடிந்தது. பூக்கள் மலர்ந்த முகத்தோடு அதை வரவேற்கின்றன, இது நல்ல நாள்தான்" என்று நீங்களும் பூக்களுக்கு குட் மார்னிங் சொல்லக் கூடும், உங்களுக்குக் காதலியோ மணம் மாறாத மனைவியோ இருந்தால் அந்தப் பூவை யாருக்கும் தெரியாமல் நீங்கள் உஷார் பண்ணவும் கூடும். ஆனால் அதே அந்தப் பூக்களின் மலர்ச்சி வெகு விரைவிலேயே வாடிப் போய் விடுமென்பதும் சிலபேருக்கு மட்டும் அந்த அதிகாலை வேளையிலும் நினைவுக்கு வரும்- "அச்சச்சோ!" என்று அதைப் பார்வையாலேயே வருடிக் கொடுத்து விட்டு தங்கள் வழியில் செல்கிற இவர்களில் பெரும்பாலானோர் முதியவர்களாக இருப்பார்கள் என்று தோன்றுகிறது.கவிதைக்கு வருவோம்- " "பூக்கள் ஒரு புன்னகையின் துவக்கமா முடிவா?"" என்று நம்மிடம் கேட்கப்பட்டிருந்தால், "நல்ல கேள்வி நன்றி கிருபா!," என்று சொல்லி விட்டு திரும்பிப் படுத்துக் கொண்டிருப்போம், அதைப் பேசி என்ன ஆகப் போகிறது?-. குளிர்காலம் அந்த மாதிரியான ஆள் இல்லை.என்ன செய்கிறது அது? பாய்ந்து வந்துக் கட்டியிறுக்கி கவிஞனின் காலோடு கால் பின்னிக் கொள்கிறது. ஏன் இப்படி செய்தது என்று கவிஞர் சொல்லவில்லை. பாவம், அவருக்கு மட்டும் குளிர்காலத்தின் மனசுக்குள் நுழைந்து அது என்ன நினைக்கிறது ஏது என்று அறிந்து கொள்ளக் கூடிய சக்தி இருக்கிறதா என்ன?சும்மாக் கிடந்த குளிர் காலத்திடம் வாய் கொடுத்து மாட்டிக் கொண்டாரா, அதுவும் கிட்டே வந்து கட்டிப் பிடித்துக் கொண்டதா, கவிஞருக்கு இப்போதுதான் குளிர் தெரிகிறது போலிருக்கிறது, "அடுப்பில் விறகு அணைந்திருக்கிறது, எழுப்பி விடட்டுமா?" என்று கேட்கிறார்."என்னடா இவன், உயிருக்கே உலை வைத்து விடுவான் போலிருக்கிறதே!" என்று குளிர்காலம் பயந்து விட்டதோ என்னவோ, கவிஞரின் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறது.அப்புறம் என்ன, கவிஞரை இறுக அணைத்துக் கொண்டு அவரது உடலின் கணப்பில் குளிர்காலம் நன்றாகத் தூங்கிப் போய் விடுகிறது. கவிஞர் இரவெல்லாம் குளிர் தாங்காமல் விறைத்துப் போய் கிடந்த கோலம் கவிதையின் வாயிலாகக் காணக் கிடைக்கிறது- "இரவு தீர என்னோடு உறங்கிக் கிடந்தது" என்கிறார். இதைத் தொடர்ந்து, இரவு தீர யார் விழித்துக் கிடந்தது என்ற கேள்வி எழுவது நியாயம்தானே?அப்புறம் பார்த்தால் ஒரு வழியாக சூரியன் சாட்டையாலடித்து இரவைத் தீர்த்துக் கட்டி விடுகிறான்- மஞ்சள் ரத்தம் வானெங்கும் பரவுகிறது. பார்க்கிறார் கவிஞர், எதையும் வாய் திறந்து பேச இயலாத ஊமையாக- "ஒரு முத்தத்தை உடைக்க முடியாமல் இரண்டு உதடுகள் திணறின" என்ற வரிகள், குளிர்காலம் இவரை வாயடைத்துப் போக வைத்து விட்டதை உணர்த்துகின்றன. முத்தமிடுவதைப் போல குவிந்து உறைந்து விட்ட உதடுகளில், குளிர்காலம் தன் முத்தத்தை இட்டு வைத்திருக்கிறது- சரிதானே சார் நான் இந்தக் கவிதையைப் படித்திருப்பது?இந்த மாதிரி அர்த்தம் செய்துகொள்ளும் வாசகர்களாகிய நம்மையெல்லாம் பிரான்சிஸ் கிருபா அத்தனை கவிஞர்களின் சார்பாகவும், "போடாங்க!" என்று வழியனுப்பி வைக்கிறார்- "காட்டுக்கு வெளியே!" என்ற கடைசி வரியில்.இதை எப்படி ஐயா அர்த்தம் பண்ணிக் கொள்வது?இதற்கான ஒரு க்ளூ வா மணிகண்டனின் வேறொரு கவிதையில் கிடைக்கிறது-


பந்த‌ல் சலித்த‌‌
வெய்யிலில் பேசிக் கொண்டிருந்தோம்.
தீராத இரவுகள் பற்றி பேசினீர்க‌ள்
நெருங்க முடியாத வனம் குறித்துச் சொன்னீர்கள்
விடையில்லாத‌ புதிர்க‌ளை சிலாகித்தீர்க‌ள்.

பேச‌ எத்த‌னித்தேன்.

நொறுக்கினீர்கள்.

மீன்க‌ளால் நிறைந்த‌
க‌ண்ணாடி தொட்டியொன்றை

- அந்திமழை, வா.மணிகண்டன் - கவிதைத் திருவிழா 58, மீன்களோடு நொறுங்கும் தொட்டி
(உரிமை- ஆசிரியருக்கே!)


இரவு, பகல். குளிர், வெயில். உறக்கம், விழிப்பு- உண்டோ இல்லையோ, வா மணிகண்டனின் இந்தக் கவிதையை பிரான்சிஸ் கிருபாவின் கவிதைக்கு எதிர்வினையாக வாசிக்கலாம், யார் கேட்க முடியும்? வாசகனுக்குதான் அந்த உரிமை இருக்கிறதே!


கவிஞன், என் கவிதை பூக்களைப் போல தன் பாட்டுக்குக் கிடக்கும், அதன் புன்னகையின் அடி முடி காண நினைக்கிற உன்னைப் பற்றி எனக்குக் கவலை இல்லை என்று வாசகனிடம் சொல்லி தன் சுதந்திரத்தை நிலை நிறுத்திக் கொள்கிறான். வாசகனுக்கு வேறு வழி இல்லை- தனக்குப் பிடித்திருக்கிறதோ இல்லையோ, ஏன் கவிஞனுக்கே பிடித்திருக்கிறதோ இல்லையோ, வாசகனும் தன் விருப்பப்படி கவிதையைப் பொருட்படுத்தும் சுதந்திரத்தைக் கை கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறான். கவிஞனுக்கு எது முழு சுதந்திரத்தைத் தருகிறதோ அதுவே கவிதை மீதான உரிமைகள் அனைத்தையும் பறித்து விடுகிறது என்பது வியப்பாக இருக்கிறது. அதே போல் வாசகனுக்கு தன் இஷ்டத்துக்கு கவிதையைப் படித்துக் கொள்ளும் முழு உரிமை இருந்தாலும் அந்த சுதந்திரம் அவனுக்கு அவ்வளவு திருப்தியானதாக இல்லை என்று நினைக்கிறேன்- கூடுமானவரை அவன் கவிஞன் என்ன சொல்ல வருகிறான் என்று தெரிந்து கொள்ளவே ஆசைப்படுகிறான்: இந்த சுதந்திரம் அவன் மேல் வலியத் திணிக்கப்பட்ட ஒன்று- நாடு கடத்தப்பட்டவனின் சுதந்திரத்தைப் போன்றது இது.இந்த நவீன கவிதையில் என்ன ஒரு சங்கடம் என்றால், கவிதைகளிடமிருந்து பெற்ற தகவல்களைக் கொண்டு வாசகன் தான் என்ன அர்த்தம் செய்து கொண்டானோ, அதை அவன் தன்னோடே வைத்துக் கொள்ள வேண்டும். கவிஞனிடம் போய் அதை சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. அப்படி செய்தால் வா மணிகண்டன் சொல்கிற மாதிரிதான் நாமும் சொல்லிக் கொண்டு திரும்பி வர வேண்டும், "பேச‌ எத்த‌னித்தேன். நொறுக்கினீர்கள். மீன்க‌ளால் நிறைந்த‌ க‌ண்ணாடி தொட்டியொன்றை" என்று. நவீன கவிஞர்கள் தங்கள் கவிதைகள் நன்றாக இருக்கின்றன என்று பாராட்டப்படுவதை விரும்புகிற அளவுக்கு அதன் பொருள் சட்டகப்படுத்தப்படுவதை வரவேற்கிற மாதிரி தெரியவில்லை.மொத்தத்தில் கவிதை தன் பாட்டுக்குக் கிடக்கிறது. அதன் பொருள் நம் உள்ளத்தில், "மீன்க‌ளால் நிறைந்த‌ க‌ண்ணாடி தொட்டி" போல் இருக்கிறது. இதை கொண்டு போய் அங்கே குத்திக் குடைந்து பொருத்திப் பார்க்க முனையாதீர்கள்- கவிதை உங்கள் நினைப்பை நொறுக்கி விடும். இந்த மாதிரியான கவிதைகள் எந்த அளவுக்கு கவிஞனாய் இல்லாத வாசகர்களுடன் நட்பு பாராட்டுகிறது என்பது கேள்விக்குரிய ஒன்றே. எது எப்படியிருந்தாலும் வாசகர்களுக்கு வேறு வழியில்லை, அவர்களாகவே முனைந்து அதை தங்களுக்கேற்ற வகையில் புரிந்து கொண்டு நிறைவடைய வேண்டியதுதான்.அந்த காலத்தில் புலவர்கள் அரசவைக்குப் போய் பாடுவார்கள் என்று கேள்வி. அரசன் அதற்குத் தக்க சன்மானம் தருவானாம். பொற்கிழி கிடைத்தால் புண்ணியம், புண்ணாக்கு கிடைத்தால்? "ஏன் ராஜா எனக்கு புண்ணாக்கைப் பரிசாகத் தந்தீர்கள்?" என்று அரசனைப் பார்த்து புலவன் கேட்க முடியுமா? "இதை வறுத்து சாப்பிட்டால் நன்றாக இருக்குமா இல்லை அவித்து சாப்பிட்டால் நன்றாக இருக்குமா?" என்ற கேள்விகளுடன் வீடு திரும்ப வேண்டியதுதான், இல்லையா?இந்த காலத்தில் கவிஞர்கள்தான் அரசர்கள். நாம் அவர்களுடைய குடிகள்- கிடைத்ததை வைத்துக் கொண்டு வயிற்றுப்பாட்டைத் தேற்ற வேண்டிய நிலையில் சமகாலப் புலவர்களின் புரவலர்களாகிய வாசகர்கள் நாம் இருக்கிறோம்.ஒருவாராக கவிதையில் எதை எதிர்பார்க்க வேண்டும், அதை எப்படி வாசிக்க வேண்டும் என்பதைத் தொட்டாகி விட்டது. கவிஞர்களை எப்படி அரசர்கள் என்று சொல்ல முடியும்? அவர்கள் எதை அரசாள்கிறார்கள்? நாம் அடுத்து இதைப் பார்க்க வேண்டும். அப்புறம், என் நண்பர் கேட்டாரே, சொல்வனத்தில் வெளியாகி இருக்கிற ஹரன் பிரசன்னாவின் "மூன்று கவிதைகள்" என்ற கவிதை குறித்து, அதையும் மறக்காமல் பார்க்க வேண்டும்.இது ஹரன் பிரசன்னாவின் மூன்று கவிதைகளில் ஒன்று- நான் மேலே சொன்ன விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு படித்துப் பாருங்கள், அப்படியொன்றும் சிக்கலான கவிதையாகத் தெரியவில்லை எனக்கு-


ஒளி

நீண்ட நேரம்
சூரியனை நோக்கி இருந்துவிட்டு
கொஞ்சம் ஒளியை
பைக்குள் போட்டுக்கொண்டு
உடல் அதிர நடந்தேன்
அந்தியில்
பச்சை இலைகள்
சூழ்ந்திருந்த தோட்டத்துள்
எனக்கு முன் சென்று
என்னை வரவேற்றது ஒளி
நீரில் மூழ்கினால்
என்னைச் சுற்றி
தங்க வெளிச்சம் பரப்பியது
என் பையிலிருந்த சூரியன்
இரவில் உறங்கும்போது
என் உடல் ஒளிர்ந்ததைக் கண்டேன்
மனமெங்கும் சூழ்ந்திருந்த
திசையறியா வேதனை
எங்கோ ஓட
உலகெங்கும்
வெளியெங்கும்
மனமெங்கும்
மின்னின
மறுநாள் காலை
ஒளியைத் திருப்பிக் கேட்க
வீட்டுக்குள் நுழைந்தது சூரியன்
நான் குளிரத் தொடங்கினேன்
என் வெளிச்சத்தில்
இன்னும் பிரகாசமாக சூரியன்

(உரிமை- ஆசிரியருக்கே!)

இதன் தொடர்ச்சியை வாசிக்க - இங்கே
.
.
.

7 comments:

Anonymous said...

நட்பாஸ்

அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.ஆழ்ந்து அனுபவித்து.. கவிதையின் ஒளி ஊடுருவிப்பிரிந்து வண்ணநிழல்களை மனமெங்கும் விழுத்தும்படிக்கு...

நன்றி

natbas said...

மிக்க நன்றி. உங்கள் கருத்துகளை நான் மிக்க ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்... இப்போது மகிழ்ச்சியும் கூட!

Anonymous said...

நன்றி நட்பாஸ்.

எனக்குத்தோன்றியதையும் பகிர்ந்து கொள்ளுகிறேன்.ஒரு மன உலக அனுபவம். சரி பிழையென்றில்லையல்லவா

சூரியனின் வெப்பம் தகிக்க தன் கதிர்ச்சாட்டையைச்சுழற்றி துரத்தியபடியே வர முத்தமிட்டு உறைந்த பனியும் இலையும் வெளிச்சத்தில் தம்மை சட்டென்று விலக்கிக்கொள்வதில்லை;மெல்ல உருகித்திணறிப்பிரியும்.குளிரும் சட்டென்று ஓடி விலகுவதில்லை.மெல்ல சோம்பல் முறித்துக்கொண்டபடி மறையும் காட்டுக்குக்கு வெளியே
காட்டுக்குள்ளே சூரியனின் சாட்டைகள் நுழைவதில்லை ..இருட்காட்டில் குளிர்காலம் தொடர்ந்து உறங்கும் பூட்டிய அறையில் விடிவதும் தெரியாமல் உறங்குவது போல.;

நொருங்கிப்போகிற மீன்கள் நிறைந்த கண்ணாடித்தொட்டி . மனத்தில் சில வண்ண எண்ணங்களை வளர்த்துவந்தார்கள்.சுற்றி சுற்றிவந்து அதுவே உலகம் என்று எண்ணங்கள் சொல்லிக்கொண்டிருந்தன.
அவர்கள் கண்ணாடியைத்தான் உடைத்தார்கள். எண்ணங்கள் விழுந்து துடித்து இறந்தன நீரற்று.கண்ணடிப்பெட்டியிலிருந்து மனம் அறையாய் விரிந்தது தரையெங்கும் பரவிய நீர்.

இப்படி ஏதோ தோன்றியது

நன்றி

natbas said...

காட்டுக்கு வெளியே என்பதற்கான பொருள் மிக்க அருமையாக இருக்கிறது. நான் எவ்வளவு யோசித்தும் என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை- காட்டுக்குள் இருந்த அனுபவம் இல்லாத காரணத்தால் வெயிலடித்தும் குளிர் விலகாது என்பதை நினைக்கவில்லை.

நீங்கள் தருவது வேறு வகை வாசிப்பு. ஆனால் அதுவும் அழகாக, என் வாசிப்பை விட பொருத்தமாக, இன்னும் ஆழகாக இருக்கிறது. மிக்க நன்றி.

நீர் நிறைந்த கண்ணாடித் தொட்டி குறித்து நீங்கள் எழுதியது அந்தக் கவிதையை இன்னும் ஆழமான ஒரு தளத்துக்குக் கொண்டு செல்கிறது- ஏறத்தாழ ஒரு ஆன்மீக விடியலை நோக்கி என்று கூட சொல்லலாம்.

நீங்கள் இங்கே எழுதுகிற குறிப்புகள் புது வெளிச்சத்தைப் பாய்ச்சுவனவாக இருக்கின்றன. எங்கள் வாசிப்பு அனுபவத்தை இன்னும் இனியதாகவும் ஆழமானதாகவும் பொருள் செறிந்ததாகவும் செய்கின்றன.

மிக்க நன்றி.

Anonymous said...

நன்றி நட்பாஸ்

கவிதைகளை நேரடியாக வாசிக்கவில்லை.உங்கள் எழுத்தினூடேதான் பார்த்தேன்.எனக்கு எழுந்த பொருள் நீங்கள் வாசித்தவைகளின் தொடர்ச்சியே.உங்கள் வாசிப்பின் அடிப்படையில் எழுந்தவை.
நீங்கள் ஆழமாக்கிவிட்டதிலிருந்து ஊறியது.

இந்தக்கட்டுரையினூடாக அல்லாமல் கவிதையை நேரடியாகப்படித்திருந்தால் அவை எதனை தோற்றுவித்திருக்குமென்று தெரியவில்லை

natbas said...

:)

இங்கு ஹரன் பிரசன்னாவின் ஒளி என்ற கவிதை இருக்கிறதே, அதன் வாசிப்பு அனுபவத்தை சுருக்கமாகவேனும் பகிர்ந்து கொள்ளலாமே...

:)

Anonymous said...

முதலில் மனத்தில் தோன்றியது காயத்திரி மந்திரம்

Related Posts Plugin for WordPress, Blogger...