May 31, 2012

மூன்று கவிதைகள்நீட்சி:

வடித்து வைத்த சோறில்
மீதமிருந்த பருக்கைகளில்
நுழைந்து சுருங்குகிறது முதுவேனில்.

வெந்நீரின் சேரல் ஒரு 
ஆரம்பமா முடிவா
என்ற என் கேள்விக்கு
என் கைகளையும்
இறுகச் சேர்த்துப் 
பற்றிக் கொண்டன
பருக்கைகள்.

அடுப்பில் தணல் தணிந்திருந்தது,
நீரூற்றவா என்ற என் கேள்விக்கு
எதிர்வினையாய் இன்னமும்
கைகள் இறுகிக் கொண்டன.

பகல் முடிய மாலை
என் பருக்கைசேர்
கைகளில் தன் செங்கதிரைப் 
பாய்ச்சியது,
நீரற்ற ஈரத்தின் பரவலில்
மிச்சமிருந்த ஒற்றைப் 
பருக்கையை உன்
உதட்டில் வைக்கிறேன்,
காணாமல் போனதென்னவோ
என் கைகள்தான்

வீழ்ச்சி இனிது:

இல்குவாய்த்தான் இருக்கிறது
சிறுதுண்டெனப் பெருக்கெடுத்த
அந்த ஜீவநதியின் பால்
சுழித்தோடிய நுரையினூடே
ஓடியொளிந்து பழகிக் களித்து
சேரிடஞ்சேரும் கலை பழகுதல்.

இலைக்கு என்ன ஆயிற்று
தவமிருந்தா பெற்றாள் 
அன்னை அவளை?
இலையுதிர்க் காற்றின்
ஒற்றைச் சீண்டலில்
உதிர்த்தே விட்டாள்

இவளும் உதிர்ந்தே வீழ்ந்தாள்விடையற்ற கேள்வி!

கந்தகம் கலந்த
மழையில் சிக்கிக் கொண்டோம்
ஆறாத ரணங்கள் குறித்து
அரற்றினீர்கள்.
அகற்ற முடியாத அடர்பனி
குறித்தும் அளவளாவினீர்கள்.
பதிலற்ற புன்னகைகள் பலவும்
பரிசாய்க் கிடைத்தன.

பகர முனைந்தபோது,
வலக்கையின் சத்ரு கொண்டு
பக்கம் வராவண்ணம் செய்தீர்கள்

கருவண்டு நடனமாடும்
ஒற்றைப் பூவா நான்?

May 29, 2012

பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்


ஒரு கவிதைக்கு பதினெட்டு வினாடி வீதம், மொத்தம் பன்னிரண்டு கவிதைகளை மூன்றே முக்கால் நிமிடங்களில் எழுதிவிட்டேன்.

இது ஒரு புதிய உலக சாதனையாம்! எதற்கும் படித்து வையுங்கள். படித்தவர்கள் கணக்கில் உங்களுக்கும் கின்னஸ்காரர்கள் கினியா நாட்டிற்கு அழைப்பு தரக்கூடும்.


நன்றி: யாரோ ஒரு இணையப் புண்ணியவான்


சுப்பம்மா சுருக்குப்பையில்
மிளகாய்ப் பொடி
வைத்திருக்கிறாள்


பக்கத்து வீட்டிற்கு
நகிஷிமோ
வந்திருக்கிறான்


டிஷ் ஆண்டனா
மொட்டை மாடியில்
இருக்கிறது


வெண்ணிலா
வேறுவழியின்றி
காய்கிறது


நள்ளிரவில் யாரோ
காகிதம் கிழிக்கும்
சத்தம் கேட்கிறது


நீட்சேவை அறிந்தவன்
நித்திரையில்
இருக்கிறான்


வேகமெடுத்து வந்த
வாகனம் வழியிலே
நின்றது


ரோட்டோரக் கடையில்
நாயர் ஒருத்தர்
இளநீர் விற்கிறார்


என்னையே பார்க்கிறது
நான் வெட்டிச் சாய்த்த
மரம்


சில்லரையை எண்ணித்
தந்து சிரித்தும் வைக்கிறான்
சேட்டு


ரோஜா என்பது
நிறமல்ல, மலர்
என்கிறான் ரோஜர்


அமர்ந்தும் அமராமல்
அமர்ந்திருக்கிறது
அன்னாசிப் பழமொன்று

கலியுகமடா....!


நன்றி: http://www.123rf.com

மேஜை மீது இருக்கும் குளிர்பான பாட்டிலை எடுத்து அதிலிருக்கும் பானத்தைக் கொஞ்சம் அருந்திவிட்டு மீண்டும் மேஜை மீது வைக்கிறாள் அவள். அருகில் அமர்ந்திருக்கிறான் ஒருவன், அவர்களைச் சுற்றி ஒரு நண்பர்கள் கூட்டம். ஏதோ டீக்கடையோ அல்லது பேக்கரியோ எனத் தோற்றம் தரும் ஓர் பொது இடம்நண்பர்கள் அவனிடம் அவளை முத்தமிடச் சொல்கிறார்கள். அவன் முனைந்து அவள் பக்கம் திரும்ப, முதலில் அவள் மறுக்கிறாள். பின்னர் சம்மதிக்கிறாள்.

இப்போது இருவரும் முரட்டுத்தனமாக முத்தம் பகிர்ந்து கொள்கிறார்கள். அவன் கைகொண்டு அவள் உடலின் சகலபாகங்களையும் சோதனையிடுகிறான். சுற்றி நிற்கும் நண்பர்கள் தத்தம் கைகொண்ட கேமரா மொபைல் போன் கொண்டு அந்த அற்புதக் காட்சியைச் சுற்றி வளைத்துச் சுட்டுத் தள்ளுகிறார்கள்.

"இப்படியெல்லாம் நடப்பது நம்மூரில்தான்" என்று நண்பர் ஒருவர் அனுப்பியிருந்த மின்னஞ்சல் இணைப்பின் நூல் பிடித்துப் போனபோது இணையத்தில் கிடந்த ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ காட்சிதான் நாம் மேற்சொன்னது.

"புரொபஷனல் ஆர்ட்டிஸ்ட் பர்ஃபார்ம் பண்ணுறதெல்லாம் பழைய ஸ்டைல் சார். இப்படிப்பட்ட பர்சனல் விடியோதான் இப்போ பிச்சிக்கிட்டுப் போவுதுஎன்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்எல்லாவற்றிலும் வெரைட்டி தேடும் நம் மக்கள் "அந்த" விஷயத்திலும் வெரைட்டி தேடத் துவங்கியதன் பாதிப்பில்தான் இத்தகைய விடியோகள் இப்போது இணையமெல்லாம் இரைந்து கிடக்கின்றன.

முதலில் கணவன்-மனைவி அல்லது காதலர்கள் தங்கும் ஹோட்டல்களில் மறைவிடத்தில் கேமரா வைத்து அவர்கள் அந்தரங்கங்களைப் படமாக்கி அதை இணையத்தில் விற்று காசு பார்த்தார்கள்.  

அடுத்த கட்டம் மொபைல் சர்வீஸ் சென்டர்கள் மற்றும் ஃபோட்டோ ஸ்டுடியோ நடத்தும் சிலர் மூலம் பரவிய பர்சனல் வீடியோகள். சர்வீசுக்குக் கொண்டு வரப்படும் மொபைல்கள் அல்லது ஃபோட்டோ பிரிண்டுக்குக் கொண்டுவரப்படும் கேமராக்களை நோண்டிப் பார்ப்பது இவர்கள் வேலைஇந்தக் கலியுகத்தின் கோரமுகம் அறியாத சிலர் தங்கள் பர்சனல் பொழுதுகளை விளையாட்டாய் விடியோ பிடித்து தங்கள் சந்தோஷத்திற்கு அவற்றைப் பார்த்துவிட்டு பின்னர் அழித்து விடுகிறார்கள். "நான் ப்ளூ-டூத் ஆன் பண்ணலை, வேற யார் கைக்கும் என் மொபைலோ, கேமராவோ போகறதுக்கு முன்னாடி எடுத்ததை நான் அழிச்சிட்டேன்" என்பதுதான் இவர்களின் நினைப்பு.

ஆனால் ரெகவரி சாஃப்ட்வேர்கள் கொண்டு அழித்த படங்களை திரும்பக் கொண்டு வர முடியும் என்பது இவர்கள் அறியாதது; சில மொபைல் சர்வீஸ் சென்டர் மற்றும் போட்டோ ஸ்டுடியோ கில்லாடிகள் அறிந்ததுஅப்படி அந்த மொபைல் மற்றும் கேமராக்களில் அழிந்த பர்சனல் விடியோக்களை எடுத்து மார்க்கெட்டில் நல்ல விலைக்கு விற்பதற்கே தனிக்கூட்டம் இங்கே அலைகிறது.

இங்கே நாம் சொன்ன இரண்டு வகை இணைய விடியோ பகிர்வுகளும் சமூக விரோதச் செயல் என்றால் நாம் முதலில் சொன்ன தாமே முன் வந்து பொதுவில் அசிங்கங்களைப் பதிவு செய்து கொள்ளும் மனப்போக்கை என்ன சொல்வது?

"அட எல்லாமே ஃபேக் சார். இவங்க எல்லாருமே புரொபஷனல் ஆர்ட்டிஸ்டுங்கதான். சும்மா இந்த மாதிரி பர்சனல் விடியோவுக்கேல்லாம் இப்போ கிராக்கின்னு ஆகிட்டதால அவங்களே பர்சனல் விடியோ மாதிரி ஷூட் பண்ணி இணையத்துல உலாத்த விடறானுங்க", என்று ஒரு வியாக்கியானம் தந்து நம்மை கிறுகிறுக்க வைக்கிறார் நண்பர் ஒருவர்.

கலியுகம் பாஸ்! வேறென்ன சொல்ல?

May 28, 2012

ஐபிஎல் ஃபைனல்ஸ்

கண்ணன், பூவேந்தன், சித்தார்த், நான்

நேற்று சென்னை - கொல்கத்தா மோதிய ஐபிஎல்-5 இறுதிப்போட்டியைக் காண சேப்பாக்கம் சென்றிருந்தேன்.

மைதானத்திலிருந்து சில துளிகள்:

போட்டி துவங்குமுன் முன்னாள் இந்திய டெஸ்ட் / ஒருநாள் கிரிக்கெட் வீரர்கள் / வீரர்களை இழந்த குடும்பங்களுக்கு சுமார் எழுபது கோடி மதிப்பிற்கு பணமுடிப்புகள்  பிசிசிஐ’யால் வழங்கப்பட்டது. கபில்தேவ், கீர்த்தி ஆசாத் மற்றும் அஸாருதீன் ஆகியோர் லிஸ்டில் இல்லை; அரசியல் ;)

“டேய்! டாஸ்’லயே ஃபிக்ஸிங்’காம்டா. ரெண்டு பக்கமும் ஹெட்ஸ் இருக்கற காய்ன் குடுத்து தோனி டாஸ் ஜெயிக்கறாப்போல பண்ணிட்டாங்களாம்”, என்று குரல் கேட்டது.

மேட்ச் தொடங்குகையில் புதிதாகத் திறக்கப்பட்ட மூன்று கேலரிகள் தவிர்த்து மற்றனைத்து காலரிகளும் பிதுங்கி வழிந்தன. அந்த மூன்று கேலரிகளிலும் கூட மிகமிகச் சில நாற்காலிகள் மட்டுமே காலியாக இருந்தன.

ஆட்டம் தொடங்குமுன் இசைக்கப்பட்ட தேசியகீதத்திற்கு “தயவு செய்து எழுந்து நிற்கவும்”, என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. #இந்தியாடா

சென்னை ரசிகர்களுக்குச் சவால் விடும் வண்ணம் பரவலாக கல்கத்தா குரல்களைக் கேட்க முடிந்தது, குறிப்பாக ஆட்டத்தின் இரண்டாம் பாதியில்.

முதல் இன்னிங்க்ஸில் சென்னை 191 ஸ்கோர் செய்தவுடன் மீண்டும் சென்னை’க்கே கோப்பை என்ற குரல்கள் பரவலாக ஒலித்தன. வந்த வேகத்தில் கொல்கத்தா அணியின் நம்பிக்கை நட்சத்திரம் காம்பிர் அவுட் ஆக கிட்டத்தட்ட சென்னையின் வெற்றி உறுதி என நம்பப்பட்டது. ஆனால் எங்கிருந்தோ வந்த பிஸ்லா கெய்ல்’தனமாக அடித்த 48 பந்துகளின் 89 ரன்கள் ஆட்டத்தை கொல்கத்தா வசம் கொண்டு ஒப்படைத்தது.

மைதானத்தில் ஒரு கப் தண்ணீர் பத்து ரூபாய்க்கு விற்கப்பட்டது. 14 ரூபாய் மதிப்புள்ள Aquafina பாட்டில் நீர் மூன்று கோப்பைகளில் பகிரப்பட்டு 30 ரூபாய்  ஆனது. இத்தனைக்கும் மைதான நிர்வாகம் நிறைய நிறைய இடங்களில் குழாய்களை அமைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தாலும் மக்களுக்கு Aquafina’தான் ஆறுதல் அளித்தது.

‘காஃபிடே” கவுண்டரில் “கேப்புசினோ” சிறிய கப் ரூ.30/- என்று பட்டியலில் இருந்தது. ”முப்பதா?” என்று வாயிலடித்துக் கொண்டு, சரி என்ன செய்ய வந்தது வந்துட்டோம் குடித்துத் தொலைப்போம் என்று கடையிலிருந்த அன்பரிடம் ”ஒரு காப்பி அண்ணே”, என்றதற்கு ”அம்பது ரூபா” என்றார். பட்டியலைச் சுட்டிக் காட்டியவுடன், தலையிலடித்துக் கொண்டு, ”குடுங்க குடுங்க” என்று முப்பதை வாங்கிக் கொண்டு காபி தந்தார்.

பிஸ்லா, சுக்லா, பதான், காலிஸ் என எல்லோரும் அவுட் ஆக, சென்னையின் போக்கில் மேட்ச் திரும்பினாற்போல் சற்றே தோன்றியது. மும்பையுடனான லீக் மேட்சின் கடைசி மூன்று பந்துகளில் ஆட்டத்தின் போக்கை மாற்றிய பென் ஹில்ஃபினாஸ் இந்த ஆட்டத்தின் 19’ஆம் ஓவரை வீசி அதன் கடைசி பந்தில் ஆட்டத்தை கொல்கத்தா பக்கம் திருப்பித் தந்தார். வாழ்க நீர் எம்மான்!

ஆட்டம் முடிந்ததும் தோனி மைதானத்தை அணி வீரர்களுடன் வலம் வந்து எல்லோருக்கும் நன்றி சொல்லிக் கொண்டார் #Attitude அரங்கமே எழுந்து நின்று ஆரவாரம் செய்தது. #தலைவன்டா! ”We Will Meet in CLT20” என்று சென்னைக்கு விடை தந்தனர் மக்கள்.

ஷாருக் ரொம்பவும் உணர்ச்சி வெள்ளத்தில் இருந்தார். பாவம், வெரி லாங் வெய்ட்! மேலும் மும்பை மைதான நிர்வாகத்தை மனதினில் வைத்துக் கொண்டு ’சென்னை சிஎஸ்கே ஸ்டாஃப் மெம்பர்ஸ் வாழ்க”, என்று கோஷித்து அவர்களுக்காக இரண்டு குட்டிக்கரண நன்றிகளும் போட்டார்.

கொல்கத்தா வெற்றி பெற்ற தருணத்திலும், கோப்பையை கையில் வாங்கிய நிமிடத்திலும் நடைபெற்ற வாணவேடிக்கையைக் காண கோடி கண்கள் வேண்டும். “ஐநூறு ரூபா இதுக்கே சரியாப் போச்சு சார்”, என்றார் உடன் வந்த கண்ணன்.

நல்ல மேட்ச்! வொர்த் வாட்சிங் லைவ்! லாங் லிவ் ஐபிஎல்!

May 21, 2012

கோகிலவாணி

கோகிலாவாணி! இந்தப் பெயர் தமிழகத்தில் மிகவும் பரிச்சயமான ஒன்று. தருமபுரி பஸ் எரிப்பு சம்பவத்தில் இறந்த ஒரு கல்லூரிப் பெண்ணின் பெயர் கோகிலா வாணி. ஆனால், நான் இங்கே சொல்வது கோகிலவாணி பற்றி!

இருபத்தியோரு வருடங்கள் முன் இதே நாளில் நிகழ்ந்த ஒரு அரசியல் படுகொலை! அது அப்படியொன்றும் பெரிய விஷயமில்லை, விடுங்கள். ராஜீவ் காந்தியின் படுகொலையானது தமிழகத்தில் நியாயப்படுத்தப்பட்டு வருடங்கள் பலவாகின்றன. 

ராஜீவ் இலக்காக குறிக்கப்பட்டபோது அந்த இலக்கில் குறிக்கப்படாமலேயே இருந்து தொலைத்திருந்தாலும் செத்துத் தொலைத்து வைத்தவர்கள் எத்தனைபேர் என்ற கணக்கு பற்றி நீங்கள் என்றேனும் யோசித்திருக்கிறீர்களா?

அந்தக் கணக்கின் விடை உத்தேசமாக 15 என்கிறது புள்ளிவிபரக் கணக்குகள். 

அவர்களில் போலீசார் ஒன்பது பேர். அவர்களையும் விட்டொழிப்போம். இந்திய ஜனநாயகத்தில் காவலர்களுக்கு மரியாதை தரவேணுமா என்ன?

மீதம் அரைடஜன் பேரும் பொது ஜனங்கள். இவர்களில் இந்திய அரசியல் பேர்வழிகள் யாரும் இல்லை, அதுவும் ஒரு ஆச்சர்யம் தரும் உண்மையே! அந்த அறுவரில் முனுசாமி மற்றும் லதா கண்ணன் ஆகிய இவர்கள் இருவர் மாத்திரம் கைராட்டைக் கட்சியின் ஆகாத சொத்துக்கள். காங்கிரஸின் தொண்டரடிப்பொடிகள்!

அந்த லதா கண்ணனின் மகள்தான் இந்த கோகிலவாணி. அந்தச் சின்னப்பெண் செய்த ஒரே தவறு, அவள் அம்மா தொண்டாற்றிய கட்சியின் தேசியதலைவர் எதிரே ஹிந்தியில் ஒரு பாடலைப் பாடிக்காட்டும் ஆர்வத்தைக் கொண்டது.


"போட்டுத் தள்றா அந்த சின்னப் பொண்ண!", என்றெல்லாம் எந்தத் தலைவனும் சொல்லியனுப்பவில்லை. இருந்தாலும் தணுவுடனும் ராஜீவுடனும் சிதறிப் போனது அந்த சின்னஞ்சிறு ஜீவனும்.

கோகிலவாணிக்கு நம் நினைவஞ்சலிகள்!

உயிர்களின் முக்கியத்துவம் பற்றி தமிழ்நாடு முழுவதுமாக, இந்தியா முழுவதுமாக, உலக முழுவதுமாகப் பேசிக் கொண்டிருக்கும் இந்தவேளையில் தீவிரவாதத்தைக் கையிலெடுப்பவர்கள் “எவன் மீது கோபமோ அவனை மட்டும் கொல்வோம்” என்ற உறுதியை இன்றேனும் எடுத்துக் கொள்ள வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.

May 14, 2012

மெகா ட்வீட் அப்

இன்று (13/05/2012) தமிழ் ட்வீட்டர்களின் முதல் மெகா ட்வீட் அப் தமிழகத் தலைநகராம் சென்னையில் அடையாறு யூத் ஹாஸ்டலில் நடைபெற்றது. நினைவில் நின்ற விஷயங்கள் சிலவற்றைப் பகிர்கிறேன்:

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்திருந்தனர். பெங்களூரு, புனே, மஸ்கட் ரெப்ரஸண்டேஷன்களும் இருந்தன. 

தமிழ் ட்விட்டருலக மாதர் சங்கப் பிரதிநிதிகளாக Amas (@amas32), சோனியா அருண் (@rajakumaari), சங்கீதா (@geethutwits), ரேணு (@realrenu) ஆகியோர் வந்திருந்தனர்.

நிகழ்வின் நாளன்று பிறந்தநாள் குழந்தையான பரிசல் (@iParisal) நிகழ்ச்சியை நேர்த்தியாக அட்டகாசமாகத் தொகுத்து வழங்கினார். இது நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கியக் காரணம், KudoS பாஸ்!

நிகழ்ச்சி லைவ் ஸ்ட்ரீமிங் முறையில் இணையத்தில் ஒளிபரப்பப்பட்டது.

ஆனந்த விகடன், ஜீ தொலைக்காட்சியிலிருந்து நிகழ்ச்சியை கவர் செய்ய வந்திருந்தனர். அன்பர் மீரான் (@karaiyaan) தொகுத்த தமிழ் ட்விட்டர்கள் கையேடு (Tamil Twits தளத்தில் வந்த தகவல்களின் தொகுப்பு) வெளியிடப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் ஒரு காப்பி இலவசமாக வழங்கப்பட்டது.

அன்புத்தம்பி செல்வகுமார் (@selvu) எழுதிய செல்வு எஃபெக்ட்ஸ் புத்தகம் வெளியிடப்பட்டது. @amas32 செல்வகுமாருக்கு சிறப்புப் பரிசு தந்து வாழ்த்தினார்.

கேபிள் சங்கர், சுரேகா மற்றும் ”வாழை” நிறுவனத்தினர் சில உபயோக, சமூக நலத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்கள், விபரங்கள் தனிப்பதிவுகளாக.

நான் ரொம்பவும் எதிர்பார்த்த பலராமனின் (@balaramanL) குறும்படம் தயாராகவில்லை. எனவே முன்பே வெளியான டிரைலர் மற்றும் ஷூட்டிங் சொதப்பல்களை வைத்து ஒப்பேற்றினார்கள். விரைவில் குறும்படம் வெளிவரும் என நம்புவோம்.

நண்பர் கருப்பையா (@iKaruppiah) தன் வழக்கமான 140 எழுத்துக் கவிதையிலிருந்து தாவி இந்த முறை ஒரு நெடுங்கவிதை வாசித்தார். மழையின் சிலிர்ப்பை உணர்தல், ரசித்தல் குறித்தது என நான் உள்வாங்கிக் கொண்டேன்.

அன்பர் ஈரோடு தங்கதுரை (@jesuthangadurai) நின்றமேனிக்கு நகைச்சுவை புரிந்தார் (Stand-up comedy பாஸ்). லைவ்லி அண்ட் லவ்லி. அத்தனை சரளமாக சுவையுடன் பேசுதல் எளிதன்று. அவர் தந்த எழுதுகோலுக்கு நன்றிகள்.

 ரவிக்குமார் (@ravikumarMGR) மஸ்கட்டிலிருந்து வந்திருந்த சென்னை விஜயத்தை இந்த ட்வீட்-அப்’ற்கு சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். அவர் நடத்திய மிமிக்ரி நிகழ்ச்சியும், சூரியன் எஃப்.எம். ஆர்ஜே கோபால் (@rjcrazygopa) அவருடன் இணைந்து நடத்திய மிமிக்ரி அதகளமும் அருமை. இருவருக்கும் Amazing talent!

அன்பர் சண்முகம் (@smukam), Amas (@amas32) ஆகியோர் ட்வீட் பயன்பாடு குறித்து தங்கள் கருத்துகளை ரத்தினச் சுருக்கமாகப் பகிர்ந்து கொண்டனர்.

கரோக்கி செய்த சொதப்பல்களுக்கு இடையே நான் கொஞ்சம் பாடினேன் (நான் அறிந்து யாரும் ஓடவில்லை)

நண்பர் பட்டாசு ஒரு மலையாளப் பாடல் பாடினார்.

ஆங்... நண்பர் சென்னிமலை ”அட்ராசக்கை” செந்தில் (@senthilcp) ஒரு சரவெடி கொளுத்தினார். விபரங்களை நான் சொல்லமாட்டேன்.

இறுதியாக சூப், ஜாமூன், ஹல்வா, பிசிபேளாபாத், பஹளாபாத், சப்பாத்தி/குருமா, ஐஸ்க்ரீம், பீடா, மல்லி சாதம் என கலக்கலாக இரவு உணவு.

நிகழ்ச்சியை நல்லமுறையில் நடத்த உழைத்த செந்தில்நாதன் (@senthilchn), மீரான் (@karaiyaan) மற்றும் இந்த ட்வீட்-அப்’ற்கு முதல் விதை விதைத்த சத்யா (@expertsathya) ஆகியோருக்கு தமிழ் ட்விட்டர் நண்பர்கள் சார்பில் கோடி நன்றிகள்.

சில தகவல்கள், நபர்கள் பெயர்கள் விடுபட்டிருந்தால் அது என் நியாபகமறதியின் பலன், மன்னிக்கவும்!

அன்பர் செல்வா எடுத்த புகைப்படங்களின் தொகுப்பு: https://t.co/ESbjKyst

மேலும் சில படங்கள்: http://www.katturai.com/?p=3678

May 9, 2012

ஐந்தில் மூன்றா நான்கா நாம்?


நடந்து வரும் ஐபிஎல்-5’ல் டெல்லி அணியும் கொல்கத்தா அணியும் ப்ளே-ஆஃப் (அல்லது அரையிறுதி) சுற்றுகளுக்கான இருக்கைக்கு கிட்டத்தட்ட தயாராகிவிட்டன.

புனே அணியும் ஹைதராபாத் அணியும் வெளியேறின அணிகள் பட்டியலில் சேர்ந்தாயிற்று.

இந்த அட்டவணையைப் பாருங்கள்! 

மும்பை அணியும் மிச்சமிருக்கும் ஐந்து ஆட்டங்களில் தன் பெர்த்தை இன்னும் ஓரிரு வெற்றிகள் மூலம் கிட்டத்தட்ட உறுதி செய்து விடலாம்.

ப்ளே-ஆஃப் சுற்றுகளில் இன்னும் ஒருவர் உள்ளே நுழையலாம். அதற்கான போட்டியில்தான் நான்கு அணிகள் இருக்கின்றன. மேலே இருக்கும் டேபிளில் பச்சை வண்ணம் தீட்டிக் கொண்டு நிற்கும் அணிகளைப் பாருங்கள்.

சென்னைக்கு மிச்சம் இருக்கும் ஆட்டங்களின் விபரம் இதோ! இவை அனைத்திலும் நல்ல ரன்ரேட்டுடன் சென்னை வெற்றி பெறவேண்டிய நிலையில் இப்போது இருக்கிறது.2008 தொடங்கி இதுவரை நடந்துள்ள நான்கு ஐபிஎல் ஆட்டங்களில் சென்னை  மூன்று முறை இறுதிப் போட்டிக்கும், ஹைதராபாத் கோப்பையை வென்ற 2009’ஆம் ஆண்டு அரையிறுதி வரையும் சென்றுள்ளது. ஆக, இதுவரை அரையிறுதிச் சுற்றை எட்டா நிலை ஏற்பட்டதில்லை. இந்த முறையும் அதே நிலை தொடர வேண்டும் என்பதே சென்னைக்காரனான என் விருப்பம்.

ஆனால், அது நிறைவேறுவது அத்தனை எளிதில்லை! மேலே படத்தில் தலைவர் தோனி கையசைப்பதன் அர்த்தம் என்னவென்று இன்னமும் ஓரிரு ஆட்டங்களில் தெரிந்துவிடும். 

பார்ப்போம்!

May 7, 2012

கருப்பு நகரம்


வடசென்னை என்னை வளர்த்தது எனக் கூறிக் கொள்வதில் எனக்கு எப்போதும் ஒரு பெருமை, கர்வம் உண்டு. உலகின் உண்மையான மக்கள் வாழும் ஒருசில இடங்களில் வடசென்னைக்கு முதலிடம் உண்டு எனத் தீவிரமாக நம்புபவன் நான். வட சென்னையின் நினைவுகளை அசைபோட்டு சொல்வனம் இணைய இதழில் எழுதிய ஒரு பதிவு! சொல்வனத்திற்கு நன்றிகள்.
______________________________
“கவுறு அந்துக்கும் சார், தூக்காத தூக்காத! அதான் ஸ்டைக்கு இன்னும் முடிலல்ல, இன்னாத்துக்கு வண்டி எட்த்துன்னு வர?”, சில்லி மிட்-ஆனில் நின்றவன் திரும்பியும் திரும்பாமலும் சொல்லிய நேரத்தில் தன் கைக்கு எட்டிய கேட்சை அவன் தவறவிட்டான்.
ஏன், எதற்கு என்று என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் பெட்ரோலிய நிறுவனங்கள் பண்ணிய திட்டமிட்ட திடீர் ஸ்ட்ரைக்கினால் மூன்று நாளாய் எல்லா பெட்ரோல் பங்குகளும் மூடிக்கிடக்கின்றன. ”ஸ்ட்ரைக் முடிஞ்சிடுச்சி”, என்று யாரோ எங்கேயோ சொன்னாற்போல் காதுகளுக்கு இருக்கவே அந்த சனிக்கிழமை மதியத்தில் பெட்ரோல் டாங்கில் ஒட்டிக்கொண்டிருந்த கொஞ்சநஞ்ச எண்ணெயை நம்பி வண்டியை எடுத்துவிட்டேன். மூலக்கடை வரை போனால் பெட்ரோலிட்டு வரலாம்.
மூலக்கடை?
மாதவரத்திற்கும் பெரம்பூருக்கும் இடையே மூலக்கடையை நீங்கள் கண்டறியலாம். சென்னை கல்கத்தா நெடுஞ்சாலையில் சென்னையின் முதல் கேட்-வே ரெட்ஹில்ஸ் என்றழைக்கப்படும் செங்குன்றம். அங்கே நுழைந்து நீங்கள் சென்னையினுள்ளே நுழைந்தால் டேங்கர் லாரிகள், சிமெண்ட் லாரிகள், அரிசி மூட்டைகள் சுமக்கும் லாரிகள் என்று விதவித சரக்கு லாரிகள் நீண்டு வடம் பிடிக்கும் சாலைகள் கொண்ட வடசென்னையின் நெருக்கடியான போக்குவரத்து நெரிசலின் ஒரு சாம்பிளை உங்களுக்குக் காட்டிவிட்டு பெரம்பூருக்கோ, மாதவரத்திற்கோ, வியாசர்பாடிக்கோ உங்களை வழியனுப்பி வைப்பது இந்த மூலக்கடை என்னும் இரண்டாவது கேட்-வே.
சென்னையை ஒரு ஸ்கேல் வைத்து ரெண்டாய்ப் பிரிக்கும் ஒரு கோடு உண்டென்றால் அது பூந்தமல்லி நெடுஞ்சாலைதான். அந்தப்பக்கம் உன்னுது இந்தப்பக்கம் என்னுது என்று இங்கேதான் வடசென்னையும் தென்சென்னையும் கொஞ்சமாய் மத்தியச் சென்னையை அங்கங்கே சிதற விட்டுவிட்டு பிரிந்து கிடக்கின்றன. இதில் வடசென்னை எப்போதும் தீண்டத்தகாத ஒரு பிரதேசம். மூலக்கடை, கொடுங்கையூர், மாதவரம், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, புளியந்தோப்பு, வியாசர்பாடி, சர்மாநகர், முல்லைநகர், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், மணலி, எண்ணூர் மற்றும் இன்னபிற பகுதிகள்.
ஆப்பிரிக்கா முழுக்கவும் இருண்ட கண்டமாக இருப்பதாகவும், இந்தியாவின் சாலைகளில் புலிகள் ஓடுவதாகவும் உலக மக்களால் எப்படி நம்பப்படுகிறதோ, அதேபோல வடசென்னையில் வியர்வையில் நனைந்த எண்ணெய்த் தேகங்கொண்ட கரிய மனிதர்கள் மட்டுமே வசிப்பதாகவும், மடிப்பாக்கத்திலும் மந்தைவெளியிலும் இல்லாத குப்பைமேடுகள் எல்லாம் இங்கே மட்டுந்தான் இருப்பதாகவும் ஒட்டுமொத்த தென்சென்னையும் நம்பிக்கொண்டிருக்கிறது. அந்த நம்பிக்கை சற்றும் வீணாகிவிடுதல் கூடாது என்னும் முனைப்பில் ஒவ்வொரு அரசாங்கமும் தன்னால் இயன்றவரை இந்த ஊரை உதாசீனம் செய்கிறது. அண்ணாநகர், புரசைவாக்கம், கீழ்பாக்கம் முதலான மத்தியப் பகுதிகளை தென்சென்னைக் கால்கள் தாண்டினதாய் சரித்திரம் இல்லை.
14thwashermanpet_476399eமாதவரம், மாதவரம் பால்பண்ணை, கொடுங்கையூர், தபால்பெட்டி, பொன்னியம்மன்மேடு, எருக்கஞ்சேரி வாழ் மக்கள் துணியெடுக்க, சினிமா பார்க்க, எக்ஸ்ரே எடுக்க, சாப்பாடு பார்சல் வாங்க மூலக்கடைக்குத்தான் வரவேண்டும்.உயர்தர சைவ உணவகம் என்ற பலகை தாங்கிய இரண்டு ஹோட்டல்களும், அரை டஜன் ஃபாஸ்ட் ஃபுட் கடைகளும், ஒரு டஜன் பழ வண்டிக்கடைகளும், இன்னமும் ஏழெட்டு டஜன் இதர கடைகளும், மூன்று தியேட்டர்களும் இங்கே உண்டு. இப்படிப்பட்ட புண்ணிய க்ஷேத்திரத்திற்குத்தான் பெட்ரோல் பங்க் தேடியொரு நீண்ட பயணம் புறப்பட்டிருந்தேன்.
ஒண்ணரை கிலோமீட்டர்தான் ஓடியிருந்த வண்டி அந்தோணி ஆஸ்பத்திரி வந்ததுமே விக்க ஆரம்பித்தது. சோக்கைப் போட்டு விடாமல் ஆக்ஸலேட்டரை முடிந்தமட்டும் முடுக்கியதில் ஷூ கம்பெனிவரை விரட்ட முடிந்தது. வேறு வழியில்லை முக்கால் தொலைவு வந்தாயிற்று இன்னும் கொஞ்சம் போனால் பெட்ரோல் கிடைத்துவிடும், உருட்டத் துவங்கினேன்.
மூலக்கடை ஜங்ஷனில் வழக்கமாக நடுரோட்டில் நிற்கும் பழக்கடைகளும், பூக்கடைகளும் ஓடாத வண்டிகள் தந்த இடத்தையும் சேர்த்து முழுரோட்டையும் ஆக்ரமித்துக் கிடந்தன. ”எங்கள் ஆண்டவனைக் கேள்வி கேட்ட மால்கம் ஸ்பீடே! மன்னிப்பு கேள்” என்ற அந்த பச்சைநிறத் தமிழ் பேனரை சச்சின் படிப்பாரா இல்லை மால்கம் ஸ்பீட் படிப்பாரா என்றெல்லாம் யோசிக்க விழையவில்லை ”பெட்ரோல் பெட்ரோல்” என்று மனனம் செய்து கொண்டிருந்த என் மனம். கிட்டத்தட்ட ஒண்ணரை கிலோமீட்டர் உருட்டலுக்குப் பின் மூலக்கடை பஸ் டிப்போ வரை சென்று சேர்ந்ததில் கயிறு பிடித்து இழுத்து மூடிக் கிடந்த பெட்ரோல் பங்கை தரிசனம் செய்ய நேர்ந்தது.
ஒரு தற்காலிக கிரிக்கெட் மைதானமாகிப் போயிருந்தது அந்த பங்க். ஏழெட்டு பயல்கள் செங்கல் வைத்து வேலிக்காத்தான் குச்சிகளை ஸ்டம்ப்களாக நிற்கவைத்து விளையாடிக் கொண்டிருந்தான்கள். முப்பதுக்கு அறுபது ஏரியாவையும் கிரிக்கெட் மைதானம் ஆக்கும் சாதுர்யம் நம்மை விட்டால் வேறு யாருக்குக் கைவரும்? வாங்க வந்த பொருளின் நினைவகன்று அவர்கள் ஆட்டத்தில் சற்றே திளைத்தேன். இருபதின் ஆரம்ப வயதுகளில் இருந்தனர் அங்கே அத்தனை பேரும். அத்தனையும் வடசென்னையின் டை’யில் வார்த்தெடுத்த அக்மார்க் முகங்கள். அவர்கள் பேச்சினூடே நான்கு வார்த்தைக்கு ஒரு வார்த்தை மற்றவனின் ஆத்தாளையோ அல்லது அம்மாளையோ அழைப்பது அவர்களின் வொகாப்லரிக்கு அங்கே அவசியமாயிருந்தது. பந்தை வீசுபவனும் மட்டையை வீசுபவனும் கூட முடிந்த இடைவெளிகளில் ஆ’வையும் அ’வையும் இங்கே அழைத்தார்கள். வீச்சு கனஜோராய் இருக்குமோ என்னவோ!
பத்து நிமிட ஆட்டத்தில் அங்கே என் காத்திருத்தல் யாருக்கும் ஒரு பொருட்டாய் தெரியவில்லை. கயிற்றை அகற்றி உள்நுழைய முற்பட்டேன்.
“கவுறு அந்துக்கும் சார், தூக்காத தூக்காத! அதான் ஸ்டைக்கு இன்னும் முடிலல்ல, இன்னாத்துக்கு வண்டி எட்த்துன்னு வர?”, சில்லி மிட்-ஆனில் நின்றவன் திரும்பியும் திரும்பாமலும் சொல்லிய நேரத்தில் தன் கைக்கு எட்டிய கேட்சை அவன் தவறவிட்டான்.
“பொறம்போக்கு! அத்தப் புடிக்கத் தெர்ல்லியா உனுக்கு”, அத்தனை பேரிலும் அவன் ஒருவன் மட்டும்தான் பெட்ரோல் பங்க் சீருடை துறந்தவனாக இருந்தான். கேப்டனாயிருக்க வேண்டும், யாரைத் திட்டினான் எனத் தெரியவில்லை.
”ஸ்ட்ரைக் முடிஞ்சிடுச்சின்னு சொன்னாங்களே?”
”யாரு சொன்னா உன்னாண்ட முட்ஞ்சிர்ச்சின்னு? எவனா சும்மாங்காட்டியும் சொல்லிருப்பான்”, என்னைப் பார்த்துக் கொண்டே தன் ஏரியாவிற்குள் நுழைந்த பந்தை பிடித்து பவுலர் ஸ்டம்புக்கு விட்டெறிந்தான், “இப்டி புடிக்கணும் தெரிஞ்சிக்கோ”, சில்லி மிடானுக்கு இன்ஸ்டண்ட் பாடம் எடுத்தான்.
”சார், ஸ்டைக் முடியல. முட்ஞ்சதும் வாங்க சார். இன்னிக்காவது கொஞ்சம் வெளாடவுடுங்க”, கறாரான ஒரு குரல் டால்பி எஃபெக்டில் வலது மூலையிலிருந்து கேட்டது.
“யாரோ சொன்னாங்கண்ணா, அதுவா விஷயம்? ஒரு அரை லிட்டர் பெட்ரோல் போடு, வீடு வரியும் போயிருவேன்”.
“உனுக்கு தந்துடுவம்ப்பா. உன்னப்பாத்து வரிசகட்டி நிப்பானே லைனா. அல்லாருக்கும் எப்டி தரசொல்ற?”, மேலே பேசாமல் மறு உருட்டலைத் துவங்கினேன்.
“அன்னாண்ட எங்க போற? ரெட்டீல்ஸ் வரியும் எங்கயும் பெட்ரோல் கெடிக்காது”
“நான் வேணா பின்னாடி காம்பவுண்ட் பக்கம் வர்றேன். கொஞ்சம் பார்த்து குடேன் நைனா?”, அவன் பாஷையில் இறங்கிப் பார்த்தேன்.
“போ சார் போ சார்”, அதற்கு மேல் மரியாதை இல்லை. புறப்பட்டுவிட்டேன்.
கள்ளச்சந்தையில் பொருள் விற்பவர்களைக் கண்டாலே வெகுண்டு எழும் புரட்சிகர மனம் இப்போது சாலையில் யாரும் ப்ளாக்கில் பெட்ரோல் விற்கமாட்டார்களா என்று தேடியது. மறுபடி நாலரை கிலோமீட்டர் வண்டியை உருட்டிக் கொண்டே எப்படிப் போவதாம்? தெரிந்தவன் அறிந்தவன் எவனும் எதிரில் வரவில்லை, வந்தாலும் ஒரு இருநூறு மில்லி கடன் கேட்கலாம். நினைத்து அரை வினாடி கடக்கவில்லை பூமி என்கிற பூமிநாதன் எதிரில் திடீர்ப் பிரசன்னம் ஆனான்.
“ஹாய்! ஹவ் ஆர் யூ?”
“நீ எப்போடா இங்க்ளீஷ் தொரை ஆன?”
“போச்சு! அதைவிடு, பெட்ரோல் இருக்கா?”
“அதையேதான் நானும் கேக்கறேன். பெட்ரோல் இருக்கா?”
“சரி விடு! போயிட்டு வர்றேன்”
“வராதே போ”
பன்னிரண்டாம் வகுப்பு வரை ஒட்டி உறவாடி நட்பு வளர்த்துப் பழகிய இருவருக்கும் அங்கே பெட்ரோல் லேது என்றது பேச மறுபேச்சு இல்லை. இப்போதைக்குத் தேடல்தான் அவசியம்.
“பெட்ரோல் கெட்ச்சா ஃபோன் பண்றா”, என்றுவிட்டுப் போயேவிட்டான்.
giri
ரோட்டில் எல்லோரும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். நானும் பார்த்தவர்களையெல்லாம் மதித்து மறுபார்வை பார்த்துக் கொண்டே வந்தேன். மீண்டும் பழக்கடைகளையும், சச்சின், மால்கம் ஸ்பீடுகளையும் கடந்து மூலக்கடை பேருந்து நிறுத்தத்தையும் தாண்டி ஆளரவமற்ற அந்த கேட்பாரற்ற சாலையில் நடந்து கொண்டிருந்தேன்.
“என்னண்ணா! பெட்ரோல் இல்லியா?”, என்றவனை நான் எல்லா சினிமாக்களிலும் பார்த்திருக்கிறேன். நீங்கள் கூட பார்த்திருப்பீர்கள். வாராமல் விட்ட கலைந்த ஹிப்பித்தலை, எண்ணெய் வடிந்த கரியமுகம், பான்பராக் பல், உருண்டு திரண்ட உருவம், எமதர்மனின் எருமை போல ஒரு மோட்டார்பைக். எல்லா விஜய் சினிமாக்களிலும் இவன் வில்லன் பக்கம் இருந்து கொண்டு தவறாமல் விஜய் கையால் அடிவாங்கிக் காற்றில் நாலெட்டு பல்டி அடித்துப் பறந்து விழுவான்.
“ஆமா சார்”
“என்னண்ணா சார்’ன்னுல்லாம் கூப்புடற? ரமேஷ் மச்சான்தான நீ?”
“இல்லைங்க. நீங்க வேற யாரையோ சொல்றீங்க”
”அப்டியா? அப்போ சாரிண்ணா”, அவசர அவசரமாக அவன் பேசியது மகாநதி படத்தில் துலுக்காணம் பேசுவதை நினைவுப்படுத்தியது.
“தட்ஸ் ஓகே. பரவால்லைங்க”
”பெட்ரோல் வேணுமா?”
எருமையைப் பார்த்தேன். அட பெரிய திமில் கொண்ட எருமை. “ட்ட்ட்டிங்” என உள்ளே மணியடித்தது எனக்கு. அடடா! இதுதான் நான் தேடிய பெட்ரோல் பங்க் போல.
”இருக்கா?”
“ஃபுல்லா இருக்குண்ணே! கொருக்குபேட்டைல நம்மாளுதான்! ஃபுல் டேங்க் ரொப்பினு வன்ட்டேன்”, நான் நம்பமாட்டேனோ என்று பொறுப்பாய் சாவிபோட்டு டேங்கைத் திறந்து காட்டினான். பெட்ரோல்! பெட்ரோல்! ஆ….. தகதகத்து த் தளும்பிக் கொண்டிருந்தது தங்கம் தங்கம்!
”ரைட்டு, நீ ரவி சாரோட மச்சான்தானே?”
“எந்த ரவியை சொல்றீங்க? நான் ரவியோட அக்கா பையன்”
“இல்ல, உங்கக்காவதான அம்பேத்கார் தெருல ரவிக்கு குட்த்துகுது?”
அவன் எதற்காக என்னை இத்தனை தூரம் தெரிந்தவன் போலக் காட்டிக் கொள்கிறான் என்று யோசித்ததில் அவன் கொடுக்கும் பெட்ரோலுக்குக் கேட்கப் போகும் தொகையுடன் அது தொடர்புடையதாக இருக்குமா என என்னை யோசிக்க வைத்தது.
“இல்லீங்க. அக்கா இந்த ஊர்ல இல்லை”
“சரி வுடு. பாட்டில் இருக்குதா?”
“எதுக்கு?”
“பெட்ரோல் புடிக்கணும்ல”
“ஆ ஆ… !”, வெய்யிலுக்கு வழித்துணையாய் வாங்கிய கோக்கக்கோலா பாட்டிலை உதறி உதறித் தந்தேன். அவன் வண்டியைச் சாய்த்து நிறுத்தி பக்கவாட்டு ட்யூபை பிடுங்கியெடுத்து பாட்டிலில் பெட்ரோல் பிடிக்கத் துவங்கினான். பெட்ரோல் பெட்ரோல் பெட்ரோல் பெட்ரோல்…. மனசு அடித்துக் கொண்டது. ஏதோ இன்ஸ்டண்ட் கவிதையெல்லாம் யோசித்தது மனது. தயாரான கவிதையை எடுத்து வெளியே வீச வார்த்தைகள் வந்து விழவில்லை.
பாதி பாட்டில் வந்தவுடன், “போதும் போதும்”, என நிறுத்தினேன். ஒரு லிட்டர் வெளிமார்கெட்டில் அப்போது நாற்பத்தி சொச்ச ரூபாய். இவன் லிட்டருக்கு இருநூறு சொன்னாலும் பாட்டிலில் பிடித்த கால் லிட்டருக்கு ஐம்பதைத் தந்துவிடலாம்.
“வாய்ங்க்கண்ணா பரவால்ல”
“இல்ல, போதும் போதும்”
பாட்டிலைக் கொடுத்துவிட்டு வண்டியில் ஏறியமர்ந்தான். என் வண்டியை சாய்த்துவிட்டு பர்ஸை வெளியே எடுத்தேன்.
“எவ்ளோ?”
“என்னது எவ்ளோ?”
“எவ்ளோ தரணும்”
“ன்னாத்துக்கு?”
“பெட்ரோல்?”
“ண்ணா… இன்னாண்ணா? உள்ள வைண்ணா துட்ட”
என்ன இவன் கிறுக்கனாக இருக்கிறான்?
“இல்லல்ல ப்ளீஸ் வாங்கிக்கோங்க ப்ரதர். இருக்கற பெட்ரோல் கிராக்கிக்கு.. ப்ளீஸ் வாங்கிக்கணும்”
“ண்ணோவ்… துட்டுக்கா குட்த்தாங்க?”
“ப்ளீஸ் ஓசிலல்லாம் வேணாம். காசு வாங்கிக்கோங்க, இந்தாங்க”
“நீ எதுனா குடுக்குணுன்னு நெனச்சியன்னா யார்னா இப்டி பெட்ரோல் இல்லாம வண்டிய உர்ட்டினு போசொல்லோ பெட்ரோல் ஃப்ரீயா குடு. துட்ட உள்ள வைண்ணா”, வண்டியை உதைத்துக் கிளப்பிக் கொண்டு போயேவிட்டான்.
Related Posts Plugin for WordPress, Blogger...