Nov 30, 2010

நந்தலாலா- நெஞ்சைத் தொட்ட அனுபவம்

சிறப்புப் பதிவர்- சுனில் குமார்.


வெளியே சுற்றித் திரிய வகையில்லாமல், மழை பெய்துக் கொண்டிருந்த போன சனிக்கிழமை நேரம் போக்குவதற்காக ஒரு தியேட்டரில் புகுந்து நந்தலாலா படத்திற்கு டிக்கெட் எடுத்தேன்.

வழக்கமான தமிழ்ப்படம் போல் இரண்டு சண்டை, நான்கு பாட்டு, அதிலும் ஒன்று குத்துப் பாட்டு, ஹீரோயின் அதிர்ச்சி அடையும்போது புயல் நின்று போவது, என்றெல்லாம் ட்ரேட் மார்க் டைரக்ஷன் டச் இருக்கும் என்று எதிர்பார்த்தேன்.

எதுவுமே இல்லை. படம் முதிந்து லேசான மழையில் நனைந்து கொண்டே வீட்டுக்கு வரும்போது படத்தைப் பற்றி நினைத்துக் கொண்டே நடந்தேன்.

தாயைத் தேடி ஒரு சிறுவனும் இளைஞனும் ஒரு கிராமத்துக்குப் போகிறார்கள். அவர்களின் சாலை வழி பயணத்தில் நமக்கு கிடைக்கின்றன - வாழ்க்கையின் யதார்த்த அனுபவங்கள்.

சற்று மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன் தன்னை மனநலக் காப்பகத்தில் விட்டுப் போன தன் அம்மாவைத் தேடிக் கண்டுபிடித்துத் திட்ட வேண்டும் என்ற முடிவோடு இருக்கிறான்.

தன்னைப் பாட்டியிடம் விட்டுவிட்டு திரும்பி வராமல் போன அம்மாவைக் கண்டுபிடித்து ஒரு முத்தம் கொடுக்க வேண்டும் என்று அந்த சிறுவன் இருக்கிறான்.

லாரி டிரைவர், போலியோவால் பாதிக்கப்பட்ட ஒருவர், பள்ளி மாணவி, காரில் வரும் பணக்காரப் பொறுக்கிப் பசங்கள், இரண்டு தடியர்கள், இளநீர் வியாபாரி, கிராமத்து மனிதர்கள், கிராமத்துக் காற்று, வயல், டிராக்டர், பூரான், பாம்பு என எல்லாவித கேரக்டர்களும் ஒரு விலைமாதுவும் அவர்களின் பாதையில் இணைகிறார்கள். பல இடங்களில் வசனங்களே இல்லை.

சிறுவனின் அம்மாவை மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன் பளாரென்று கன்னத்தில் அறைவது ஒரு மௌன யுத்தம்.

அந்த சிறுவனையும் இளைஞனையும் தவிர மற்ற எல்லா கேரக்டர்களும் பத்து நிமிடங்களே மின்னி மறைந்தாலும் நந்தலாலா படம் நம் மனதில் நிலைத்து நிற்கும்.

நந்தலாலா ஒரு சூப்பர் படம். தயவு செய்து ஒரு முறையாவது இந்தப் படத்தைப் பாருங்கள். தியேட்டருக்குப் போய் பாருங்கள். நல்ல ஒரு அனுபவம்- என்ன ஒன்று, மிஷ்கினின் டைரக்சன் இசை ஞானி இளையராஜாவின் இசையை அங்கங்கே அடக்கி வாசிக்கும்படி செய்துவிட்டது. அது ஒன்றுதான் என் வருத்தம்.

நீரோடையில் நீந்திக் கொண்டிருக்கும் செடிகளில் ஆரம்பித்த ஒளிப்பதிவு - கேமரா ஆங்கிள் பல இடங்களில் மேலே மேலே போகிறது.

கொக்குஜீரோவோ என்னவோ ஒரு ஜப்பானியப் படத்தின் சாயல் இருக்கிறது என்று சொல்கிறார்கள்- எனக்கென்னவோ படமெங்கும் தமிழ் மணம் கமழ்வதாகத்தான் தெரிகிறது.

போனஸ்:


நந்தலாலா படத்தில் இளையராஜா இதுவரை யாரும் தொடாத சிகரங்களைத் தொட்டு விட்டார் என்று படம் பார்த்தவர்கள் பலர் சொல்கிறார்கள்- படத்தில் நெஞ்சைத் தொடும் இருபத்தைந்து இடங்களில் இசை ஞானி இசைத்த பின்னணி இசை இங்கே இருக்கிறது- Backgroundscore.com. கேட்டு மகிழுங்கள்.
.
.
.

Nov 29, 2010

திங்கள் அடுத்த திங்களில்...

நண்பர்களுக்கு,

பணிச் சூழலின் காரணமாக இன்றைய "நலம் தரும் திங்கள்" பதிவேற்ற இயலாத சூழலில் இருக்கிறேன்.அடுத்த திங்களன்று பதிவேற்ற இயலும் எனும் நம்பிக்கையுடன்,
-கிரி

Nov 27, 2010

லீவிங் டு கேதர்...

நண்பர்களுக்கு,

பணிச் சுமைகள் காரணமாகவும் மற்றும் நான் தற்போது எடுத்து செய்து வரும் புராஜக்டிற்குத் தேவையான தகவல் சேகரிப்பில் கவனம் செலுத்தத் தேவை இருப்பதாலும் பிளாக்கரில் இருந்து பதினைந்து நாட்களுக்கு விலகி இருப்பேன்.

So I am LEAVING blogger TO GATHER some info for my personal project.

இடையிடையே வரும் பதிவுகள் சிறப்புப் பதிவர்கள் புண்ணியத்தால் அல்லது மீள் பதிவுகளாக வெளிவரும்.மீண்டும் சந்திப்போம்.

Nov 26, 2010

ஸ்பெக்ட்ரம் - எட்டு வார்த்தையில் என் கருத்து

"சார், என்ன நீங்க என்னென்னவோ எழுதறீங்க, 2G பத்தி ஒண்ணும் சொல்லக் காணோம்?"

"இல்லைங்க, நமக்கு அரசியல் சரியா தெரியாது"

"அட, சும்மா தமாஷா (!!) எழுதுங்க சார்"

"சொல்றேன்ல, நமக்கு அரசியல் பத்தி அறிவு கம்மி"

"அப்போ மத்ததெல்லாம் முழுசா தெரிஞ்சா எழுதினீங்க?"

அட...இது என்னடா வம்பா போச்சி. இதுக்கு எப்படி பதில் சொல்ல?

"இல்லீங்க அது நெறைய பேரு எழுதிட்டாங்க. பழைய பஞ்சாமிருதம் அது. இனி எழுதி என்ன?"

"பரவால்ல சார், நாங்க படிக்கறோம் நீங்க எழுதுங்க"

இவை நேற்று மதிய உணவு மேஜையில் எங்கள் அலுவலகத்தில் நடந்த சம்பாஷனைகள்.

ஏதோ நான் எழுதினால்தான் இந்த விவகாரம் முற்றுப் பெரும் என என் தலை சிறந்த வாசக நண்பர் ஒருவர் கருதுவதால்....

ஒன்றே ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்.

ABSENCE OF EVIDENCE IS
 NOT EVIDENCE OF ABSENCE.
.
.
.

Nov 25, 2010

ஏன் கவிதை எழுத வேண்டும்?

ஏன் கவிதை எழுத வேண்டும்? (அல்லது) ஏன் கிவிதை எழுதக் கூடாது?- ஹரன் பிரசன்னாவின் "மூன்று கவிதைகளை" முன்வைத்து.
சிறப்புப் பதிவர்: நட்பாஸ்
முந்தைய இரு பதிவுகள்: 

மொழிபு மூலம் அறிதல் முறை:

....தகவல்களை ஓர் உண்மை நிலை போலவே கற்பனை செய்தும் பார்க்கலாம். இது மேலே சொன்னதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அறிதல்முறை. இதுவே இலக்கியத்தின் வழிமுறை. இவ்வாறு சொல்லிப் பார்த்தலை மொழிபு [Narration] என்கிறார்கள்.

ஆழ்தள அறிதலை நிகழ்த்த கலைகளே உள்ளன. கலைகள் நம்மில் நிகழ்த்துவது ஒரு வகை கனவின் வெளிப்பாட்டைத்தான்...

...இலக்கியம் ஓர் அறிவுத்துறை என்பதுடன் ஒரு கலையும் ஆகும் என்பதே அதன் முக்கியமான சிறப்பம்சம். ஓர் அறிவுத்துறையாக அது உண்மையை அறிய எத்தனிக்கிறது. ஓர் கலையாக அந்த உண்மையை மிக மிக ஆழத்துக்கு கலாச்சாரத்தின் தொடக்கத்துக்கு கொண்டு சென்று பரிசீலிக்கிறது. இப்படி சொல்லலாம். ஒரு பெரும் சிக்கலை நாம் சந்திக்கும்போது அதை அந்த தருணத்தை மட்டும் வைத்தல்ல, நம் இறந்த காலத்தின் கடைசி எல்லை வரை, பால்யம் வரை, கொண்டு சென்று பரிசீலிப்பது போல.

ஆக இலக்கியத்தின் ஒட்டுமொத்த பயன் என்ன ? அது ஓர் அறிதல் முறை. அறிந்தவற்றை மனிதனின் உணர்ச்சி சார்ந்த ஆழத்தால் பரிசீலனை செய்யும் கலை. இரு தளங்களையும் இணைத்து அது செயல்படும்போது எல்லா பிற அறிவுத் துறைகள் எதுவும் சென்று தொட முடியாத இடங்களை தொடுவதாக உள்ளது..."

- ஜெயமோகன்.எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். தனக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லையென்றால் அதைப் பேசியவரைப் பாரபட்சம் பார்க்காமல் நாவால் சுட்டு விடுவார். ரொம்ப கறாரானவர். ஒரு தடவை நான் ஒரு நண்பனின் திருமணத்துக்காக வெளியூர் சென்றிந்தபோது அவரை ஒரு விபத்தாக சந்திக்க நேர்ந்தது- ஆமாம், விபத்துதான்.

பார்த்தவுடனேயே நாலு எட்டில் நெருங்கி வந்து என் கையைப் பிடித்துக் கொண்டார், "என்னப்பா, நீ எங்க இங்கே? பெண் வீடா, மாப்பிள்ளை வீடா?"

எனக்கு சந்தோஷத்தில் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை, நாக்கு மட்டும் நீள ஓடியது- "ஹி ஹி, நமக்கு யாதும் ஊரே யாவரும் கேளிர். நாமல்லாம் கணியன் பூங்குன்றனார் கட்சி!-" என்று சொன்னேன்.

அவ்வளவுதான். உடனே அவர் முகம் மாறி விட்டது. கோபத்தில் என் கையை உதறி விட்டார், "யாதும் ஊரே யாவரும் கேளிர். சரி. அதுக்கு அடுத்த வரி என்ன?"

எவனுக்குத் தெரியும்! "அன்பே எங்கள் உலகத் தத்துவம்," என்று சொன்னால் நெற்றிக்கண் இல்லாமலேயே எரித்து விடுவார் மனுஷன். எதுவும் சொல்லாமல் எங்கோ பார்த்துக் கொண்டு நின்றேன்.

"இதோ பாரு பாசு, நான் உன் கிட்ட எவ்வளவோ தடவை சொல்லிட்டேன்- தெரியாத விஷயத்தை எல்லாம் இடம் பொருள் ஏவல் தெரியாம சொல்லிக்கிட்டுத் திரியாதே. வீணா எதுக்கு உனக்கு இந்தப் பாசாங்கு? தொறந்த வீட்டுல நாய் நுழையற மாதிரி எங்க வேணா வருவேன் போவேன்னு வெளிப்படையா சொல்லேன். தேவை இல்லாம கணியன் பூங்குன்றனார் பேரை எல்லாம் இழுத்துக்கிட்டு உனக்கு ஏன் ஒரு புனித பிம்பத்தைத் தயார் பண்ணிக்கறே?" கேட்டு விட்டார்.

நாக்கைப் பிடிங்கிக் கொள்கிற மாதிரி கேட்டு விட்டார். ரோஷப்பட்டால் முகத்தை எங்கே வைத்துக் கொள்வது? மையமாய் சிரித்துக் கொண்டு நின்றேன்.

"இதுக்குப் பேர்தான் credentialism. சொந்த சரக்கு விலை போகும்னு நம்பிக்கை இல்லாதவன்தான் பேரையும் பட்டத்தையும் வெச்சுக்கிட்டு பிழைப்பு நடத்துவான். உனக்கு இது தேவையா?"

தேவையில்லைதான். ஆனால் தேவைதான். சொந்த சரக்கு தயார் ஆகும்வரை அதைவிட நன்றாக இருக்கும் சரக்கைப் பயன்படுத்திக் கொள்கிறேனே, தப்பா? கேட்கவில்லை.

எனக்கு இங்கே ஜெயமோகன் அவர்களின் பெயரும் அவர் சொல்லியிருக்கிற மேற்கண்ட விஷயமும் தேவைப்படுகிறது- நான் எவ்வளவு சொல்லியும் விளங்க வைக்க முடியாத ஒரு விஷயத்தை மேலே இருக்கிற மேற்கோள் சுருக்கமாக, அழகாகச் சொல்கிறது. சில பேர் கம்யூனிஸ்டாக இருக்கிறார்கள், நான் இப்போதைக்கு, சொந்த சரக்கு தயாராகும் வரை க்ரடென்ஷியலிஸ்டாக இருந்துவிட்டுப் போகிறேனே, வேறு வழியில்லை என்கிறபோது என்ன தப்பு?

நான் ஜெயமோகன் அவர்கள் கலை குறித்து எழுதியிருக்கிற விவரணையைதான் பயன்படுத்திக் கொள்ளப் போகிறேன். அவர் அது குறித்து எழுதியிருக்கிற காரணிகளை, அடிப்படைகளை எடுத்துக் கொள்ளப் போவதில்லை. அதை அறிந்து கொள்ள ஆர்வமிருப்பவர்கள் நம் பதிவைப் படித்தவுடன், திண்ணைக்குச் செல்லுங்கள்.

ஆடிசம் (autism) என்று ஒன்று இருக்கிறது. அது ஒரு மாதிரியான எந்திரன் சிட்டி நிலை- "அந்த டிவியைப் போடு," என்றால் போட்டு விடுவார்கள். அவர்கள் அறிந்த மொழியின் ஆழம் அவ்வளவுதான்- அதன் பரப்பில் இருப்பதை மட்டுமே அவர்கள் பொருட்படுத்திக் கொள்வார்கள். உவமை, முரணி, இரட்டுற மொழிதல், உயர்வு நவிற்சி அணி இத்யாதி விவகாரமெல்லாம் அவர்களுக்குக் கை வராதது- வெளுத்ததெல்லாம் பால் என்று நம்புபவர்கள் என்றால் அது அவர்கள்தான்.

மொழி என்று இல்லை. நாம் முகத்தை வைத்துக் கொண்டு செய்கிற சேட்டைகள் அவர்களுக்குப் பிடிபடாத ஒன்று. சிரிப்புக்குப் பொருளே சொல்லித் தந்தால்தான் தெரியும். அதிலும் ஏளனச் சிரிப்பு, வெற்றிச் சிரிப்பு, நமுட்டுச் சிரிப்பு, திமிர் சிரிப்பு, வெட்கச் சிரிப்பு, வேதனைச் சிரிப்பு என்று எத்தனை வகைகள்!- அதுவெல்லாம் இவர்களால் புரிந்து கொள்ள முடியாதது. சுருக்கமாக சொன்னால், அடுத்தவர்கள் மனதில் இருப்பதை மட்டுமல்ல, மற்றவர்களுக்கு மனம் என்று ஒன்று இருப்பதையே 'உணர' இயலாதவர்கள் அவர்கள்- தனக்கு உணர்வுகள் இருந்தாலும், அடுத்தவர்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளத் தடுமாருகிரவர்கள் அவர்கள். தர்க்க நியாயம் மட்டுமே அவர்களால் எளிதில் புரிந்துக் கொள்ளக் கூடிய ஒன்று.


டெம்பிள் க்ராண்டின் என்று ஒருவர். மிகவும் பேசப்படுகிறவர்- அவரும் ஆடிஸ்டிக்தான். அவர் தனது சிந்தனையின் போக்கைக் குறித்து சொல்கிறார், படித்துப் பாருங்கள்- "படங்களால் சிந்தித்தல் - ஆடிசமும் கண்வழிச் சிந்தனையும்", விலங்குகளைப் போல் சிந்தித்தல்"- படித்துப் பாருங்கள். நிறைய சொல்லியிருக்கிறார், அதில் நான் முக்கியமாக சுட்ட விரும்புவது அவர் தன்னால் சொற்களைக் கொண்டு சிந்திக்க முடிவதில்லை என்று சொல்வதைத்தான். அது மட்டுமல்ல- நம்மைப் போன்றவர்கள் வார்த்தைக் கோர்வையாக நினைப்பதை அவரால் புரிந்து கொள்ளவே முடியவில்லையாம்: கல்லூரிக்கு வரும்போதுதான் அப்படி ஒரு விஷயம் இருப்பதே பிடிபட்டது அவருக்கு!

ஹரன் பிரசன்னாவின் கவிதைகளைப் பற்றி சொல்ல வந்தவன் இதை ஏன் பேசிக் கொண்டிருக்கிறேன்? மொழி என்பது நாம் நம் உணர்வுகளை இதயம் விட்டு இதயம் பகிர உதவும் பாலம் என்று சொல்லப் போகிறேன். வாய்மொழி வார்த்தைகள் சீராக, கோர்வையாகப் பயணிக்கிறதே, இந்த மொழிபு (narration) தகவலையும் அதன் உட்கிடக்கையான உணர்வையும் கடத்திச் செல்கிற வாகனம் என்று சொல்லப் போகிறேன். ஆடிசம் இருக்கிறவர்கள் மொழியை சுலபமாகப் பழகிக் கொள்வதில்லை என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும். அவர்களின் மொழிபு, உதாரணமாக ஒரு ஆடிஸ்டிக் சிறுவன் சொல்கிற கதை, அவனது கதையாடல், தகவல்கள் நிறைந்த ஒன்றாக இருக்கிறதே தவிர அவனது மொழி உணர்வுகள் செறிந்த ஒன்றாய் இருப்பதில்லை. சொல்லப்போனால் அதை தர்க்கமும் தகவல்களும் மட்டுமே எஞ்சிய, உணர்வுகள் வரண்ட, மொழியின் சாத்தியங்கள் உலர்ந்த, ஒற்றைப் பரிமாண வெற்று மொழிபு என்று சொல்லலாம்- வெறும் பேச்சு என்று சொல்கிறோமே, ஆழமில்லாத, மேலோட்டமான தகவல் பரிமாற்றம்.

கதைகளை விடக் கவிதை மொழியின் உச்ச சாத்தியங்களை விரித்துத் தருகிறது, இல்லையா? மொழியின் நுட்பங்கள் கைவராதவனது கற்பனை கவிதைக்கு உதவாத ஒன்று. கலைகளில் கவிதை, மொழியின் உயிர். மொழி நம் பகிரப்பட்ட, நமக்குப் பொதுமையாய் இருக்கிற உணர்வுகளின் கருவூலம். ஒரு நல்ல கவிஞன், தன் அறிவின் பிரகாசத்தை மட்டும் வெளிப்படுத்துபவனல்ல, தன் உணர்வுகளுக்கு வடிவம் கொடுக்கும் நாடகக்காரன் மட்டுமல்ல- அவன் நாம் அறிந்ததில் ஒரு காலும் அறியாததில் மறு காலும் ஊன்றி நிற்கும் ராட்சதன்: சொல்லப்பட்ட சொல்லில் சொல்லப்படாத பொருளைப் புகுத்தக்கூடிய மந்திரவாதி, புற உலக 'மெய்ம்மையை' சொற்களால் வார்த்தெடுத்து அகவுணர்வில் கரைக்கக்கூடியவன், சொல்லின்றி அகவுணர்வாய் ஊறும் உண்மையை அறியப்படக்கூடிய வகையில் வடிவமைத்து வெளிப்படையாய் மொழியக்கூடியவன்.

எனக்கே மூச்சு வாங்குகிறது! நீங்கள் எதற்கும் திரும்பவும் ஒரு தடவை ஜெயமோகன் அவர்கள் எழுதிய விவரணையைப் படித்து விட்டுத் தொடருங்கள்- நான் இது வரை சொன்னதை விட, அவர் எழுதியிருப்பது ஹரன் பிரசன்னாவின் கவிதைகளுக்குப் பொருத்தமாக இருக்கக் கூடும்!

-------

இந்தப் பதிவை எப்போதோ எழுதி முடித்திருக்க வேண்டும் நான்- ஹரன் பிரசன்னாவின் கவிதைகள் என்னைத் தோற்கடித்து விட்டன. விபரமாக சொல்கிறேன். ஏதோ விளக்கம் தருகிறேன் என்று கிளம்பி விட்டேனே தவிர எனக்கும் அவரது கவிதைகளை எப்படி எடுத்துக் கொள்வது என்று புரிவதாயில்லை. முதலில் ஒரு மாதிரியாக பிடிபடுவது போல் இருந்தது- நாம் சொல்வது முட்டாள்தனமாக இருந்து தொலைக்கப் போகிறது, எதற்கும் அவரது கவிதைகளைப் பற்றி யார் என்ன சொல்லியிருக்கிறார்கள், அவரேதான் என்ன சொல்லியிருக்கிறார் பார்ப்போம் என்று தேடினேன்- குழப்பம் அதிகமானதுதான் மிச்சம். வேறு வழியில்லை, என் மனதுக்குத் தோன்றியதை சொல்லிக் கொண்டு போக வேண்டியதுதான், வேறு வழியில்லை.

முதலில் என் குழப்பம் ஏன் அதிகமானது என்பதை சொல்லி விடுகிறேன். ஹரன் பிரசன்னா கிழக்கு பதிப்பகத்தில் பணி புரிகிறார் என்பது டிவிட்டரில் அவரைப் பின் தொடர்பவர்கள் அனைவரும் அறிந்த ஒன்றே. தமிழ் பேப்பர் கிழக்குப் பிரசுரம் என்பதும் ரகசியமில்லை. அங்கு தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் என்பவர் கவிதைகிவிதை எழுதிக் கொண்டிருக்கிறார். சொல்வனத்தில் தன் கவிதைகள் வந்திருக்கின்றன என்ற செய்தியை சொல்கிற ஹரன் பிரசன்னா தன் தளத்தில், கிவிஞர்களை விரட்டுவோம்-1 என்று அதற்குத் தலைப்பிடுகிறார். இதுவே அவர்தான் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனோ என்ற ஐயத்தை வரவைக்கிறது. போதாக்குறைக்கு அவர் வா மணிகண்டனின் தளத்தில் ரொம்ப நாள் முன்னமேயே எப்படி கவிதை எழுதுவது என்று வழி காட்டுவது மாதிரி கவிதைகிவிதை எழுதி இருக்கிறார்- இங்கே.. அது என் கண்ணில் பட்டுத் தொலைத்து விட்டபின் என்னால் ஹரன் பிரசன்னாவை சீரியசான கவிஞராகக் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அவர் கவிஞனின் அடையாளத்தோடேயே விளையாடுவது போல் தெரிகிறது, ஆபத்தான விளையாட்டு.

இருந்தாலும் அவர் இந்தக் கவிதைகளை சீரியஸாக எழுதியிருக்கிறார் என்று வைத்துக் கொண்டு படிக்கிறேன்- இதோ அவர் எழுதியுள்ள மூன்று கவிதைகளில் மூன்றாவது-

மகுடி


வாயின் வழியாக
பாம்புக் குட்டிகள்
வந்த வண்ணம்
எவனோ ஊதும்
மகுடிக்கு என் ஆட்டம்
ஊரெங்கும்
வழியெங்கும்
சிதறி ஓடும்
என் வயிற்றுப் பாம்புகள்
மகுடிக்காரனை விட்டுவிட்டு
எதிர்ப்படுவோரையெல்லாம்
கொத்திச் செல்கின்றன
கண்ணாடியில் என் முகமேகூட
வரைகலையில் மாற்றிவிட்ட மனிதன்போல
பத்தியாகவும் வாலாகவும்
மொழு மொழு உடலாகவும் தெரிகிறது
பாம்பிலிருந்து பாம்புக்குட்டிகள்
தோன்றுவது இயற்கையே
என்கிறது ஓர் அசரிரீ
மகுடிக்காரன் நிறுத்தினால்
என் பத்தி சுருங்கலாம்
பாம்புக்குட்டிகள் வீடடையலாம்
ஆனால்
நிற்பதே இல்லை மகுடிக்காரனின் இசை


நான் புரிந்து கொண்ட வரை ஹரன் பிரசன்னாவை உடைத்தெறிய முனைகிற கவிஞர் என்று சொல்லலாம். உணர்வுகள் உடைத்துக் கொண்டு வெளிவர முனைகின்றன, அல்லது வெளிவர வழியில்லாமல் அடங்குகின்றன. கண்ணாடிகள் உடைகின்றன, அல்லது ஏதேனும் சொல்கின்றன. அசாதாரணத்தின் நிழல் ஏறத்தாழ எப்போதும் அவர் கவிதைகளில் தலை காட்டுகிறது. மனிதனுக்கும் மிருகத்துக்கும் பெரிய அளவில் வேறுபாடு தெரிவதில்லை. இயற்கை நிறைய இடங்களில் வருகிறது, ஆனால் அதற்கும் மானுட சாயம் பூசப்பட்டிருக்கிறது- மிருகமாயிருக்கிறது மானுடம். இவரது இந்த மூன்று கவிதைகளோடு நிறுத்திக் கொள்ளாமல் முழுமையான ஒரு தொகுதியைப் பற்றிப் பேசுவது இது போல் எழுதுவதற்கு இன்னும் சிறப்பாக உதவக்கூடும்- ஆனால் அதற்குமுன் இவரது கவிதைகள் எவ்வளவு சீரியஸாக எழுதப்பட்டன என்பது குறித்து ஒரு தெளிவு வேண்டும். அது இல்லாதபோது நாம் சொல்வது அபத்தமாக இருந்துவிடுமோ என்ற அச்சம் எழுகிறது.

பாற்கடல் என்ற கவிதையைப் பாருங்கள்-

அலைகளுக்கு இடையே
ஆயிரம் ஆயிரமாய்
மிதந்து வருகின்றன
அந்த இரவில்
அப்போது மலர்ந்த
தாமரை மலர்கள்


இந்தக் கவிதையில் குதிரைகள் பாய்ந்தோடுகின்றன; அலையடிக்கிறது, அதில் ஆயிரம் மலர்கள் மட்டுமல்ல கட்டிலும் மிதக்கிறது- ஏதோ வெள்ளம் வந்துவிட்டது போலில்லை? அம்மா கூட என்ன நீர்ச்சத்தம் என்று கேட்கிறாள். ஆனால் இந்த காட்சியிலும் ஒரு அமைதி தெரிகிறது- கனவின் நிறத்தில் மலர்ந்த மனைவி, புரண்டு படுக்கிற மகனின் முகத்தில் புன்னகை. (வாயிடுக்கில் ஒழுகும் நீர் அவனது ஆழ்ந்த அமைதியான உறக்கத்தை மிக சுலபமாக காட்சிப்படுத்துகிறது- விஷ்ணுவின் புன்னகை என்பது போனஸ். ஒரு சமயம் கவிதையின் முடிவில் மலர் ஒன்று விஷ்ணுவுக்கு வைக்கப்படுவதற்கு அச்சாரமாக வருகிறதோ என்னவோ!) புற அமைதியும் அதன் ஆழத்தில் அது உடைபட்டுக் கொண்டிருக்கிற நிகழ்வும். வேறு சில சமயங்களில் இந்த உடைபட்ட நிஜம் அசாதாரணமான வகையில் வெளிப்படுகிறது. அதற்காக வெளிக்காட்சிக்குத் தெரியும் அமைதி பொய்யாவதில்லை. அதுவும் நிஜம்தான். இரண்டு வெவ்வேறு உலகங்களை இவரது கவிதைகள் சமதளத்தில் வைத்துப் பேசுகின்றன.

இந்தக் கவிதையைப் பொருத்தவரை, "கனவின் நிறத்தில்/ மலர்ந்த மனைவி/.." என்பதையும் "அந்த இரவில்/ அப்போது மலர்ந்த/ தாமரை மலர்கள்/..." என்பதையும் "புரண்டு படுக்கிறான் மகன்/ விஷ்ணுவின் புன்னகையை ஏந்தி/..." என்பதையும் "ஒரு மலரை எடுத்து/ விஷ்ணுவுக்கு வைத்தேன்/..." என்பதையும் தொடர்பு பண்ணிப் பேசக் கூடாது. அது எவ்வளவு அழகான, நெகிழ்வைத் தருகிற அன்பு கூடிய ஒரு இன்டிமேட்டான காட்சியை சுட்டுகிறது என்றாலும் இதையெல்லாம் ஒரு கவிஞனின் மனநிலையை உணர்த்துவதாக வைத்துப் பேசுவது நம் பண்பாடல்ல.

ஒளி என்ற கவிதையிலும் அசாதாரணமும் சாதாரணமும் இணைந்தியங்குகின்றன- காசைக் கடன் வாங்குகிற மாதிரி சூரியனின் ஒளியைக் கவிஞர் பைக்குள் போட்டுக் கொண்டு நடக்கிறார்- அவர் போகிற இடமெல்லாம் ஒளி அவரைச் சூழ்கிறது, "மனமெங்கும் சூழ்ந்திருந்த/ திசையறியா வேதனை/ எங்கோ ஓட/": மனமெங்கும் சூழ்ந்திருந்த/ திசையறியா வேதனை/ என்பது எவ்வளவு அழகான பிரயோகம்- வேதனையின் இயல்பை, அதன் உக்கிரத்தை மிக எளிமையான சொற்களில் சுட்டிக் காட்டி விடுகிறார் ஹரன் பிரசன்னா. அப்புறம் அடுத்த நாள் காலை சூரியன் வந்து இந்த வெளிச்சத்தைத் தூக்கிக் கொண்டு போய் விடுகிறான்- "நான் குளிரத் தொடங்கினேன்/ என் வெளிச்சத்தில்/ இன்னும் பிரகாசமாக சூரியன்" என்று முடிகிற கவிதையில் யாருடைய வெளிச்சத்தில் இப்போது யார் இருக்கிறார்கள் என்ற கேள்வி தொக்கி நிற்கிறது, இல்லையா? இந்த வெளிச்சம் பார்க்கப் போனால் யாருக்கும் சொந்தமில்லை என்று தோன்றுகிறது- யாரைத் தொடுகிறதோ, அவர்களுக்கு அது சொந்தமாகி விடுகிறது, இருந்தாலும் போனாலும்.

இது எல்லாம் நடக்கிற காரியமல்ல. ஆனால் ஒரு அசாதாரண நிகழ்வை எவ்வளவு சுலபமாக சாதாரண நிகழ்வுகளாகக் காட்டி விடுகிறார் பாருங்கள். அதுவும் எந்தவிதமான அதீத வார்த்தைப் பிரயோகமுமில்லாமல் சாதாரண நிகழ்வுகள் அசாதாரணத்தைத் தொடுகின்றன. இது சுலபமான விஷயமில்லை. சாதாரண நிகழ்வுகள், அசாதாரண நிகழ்வுகள், இரண்டும் ஒரே தளத்தில் இயங்குகின்றன, ஒன்றோடோன்று ஊடாடுகின்றன- இவை விவரிக்கப்படுவது எளிய சொற்களால், ஏறத்தாழ அன்றாட நிகழ்வுகளால். அதி அற்புதமான, பிரமிப்பைக் கூட்டக்கூடிய சொற்களாலும் காட்சிகளாலும் இதை இவர் செய்திருக்கலாம், அதுதான் இம்மாதிரியான கவிதைகளுக்கு இயல்பான, உஷாரான குரல். ஆனால் துணிந்து ஹரன் பிரசன்னா அதைத் தவிர்க்கிறார். ஜெயித்தால் ஜாக்பாட், தோற்றால் சட்டை கூட மிஞ்சாது.

மகுடியிலும் இந்த மாதிரி அசாதாரண விஷயங்கள் சாதாரணமாகப் பெசப்படுவதையும், சாதாரண விஷயங்கள் அசாதாரணத்தின் தளத்தைத் தொடுவதையும் பார்க்கலாம்- ஆனால் இன்னும் வேறு ஓரிரு விஷயங்களைப் பேசவிருப்பதால் இந்தக் கவிதையின் வாசிப்பை உங்களுக்கேவிட்டு விடுகிறேன். என்னைக் கேட்டால் நான் மேற்சொன்ன விஷயங்கள் ஹரன் பிரசன்னாவின் கவிதைகளின் பொதுத் தன்மையாக இருக்கிறது என்று சொல்வேன்-  இந்த மாதிரி எழுதுகிற எல்லாரது கவிதைகளிலும் இது இப்படித்தான் இருக்கிறது என்று நீங்கள் சொல்லக்கூடும், எனக்கு அது பற்றி எதுவும் தெரியாது.

----

நீங்களெல்லாம் எப்படியோ தெரியாது, நான் நாமனைவரும் நம் அக மற்றும் புறவுலகங்களின் இயல்பைக் கதைகள் வழியாக பாவித்துக் கொள்கிறோம் என்று நினைக்கிறேன். அதற்கு நம் தலைக்குள் ஓயாது பேசிக்கொண்டிருக்கும் குரலே சாட்சி. நாம் அனைவரும் நம் சுயசரிதையை நினைவில் உருவாக்கி வைத்திருக்கிறோம். அதை சரியாக எழுத முடியாதபோது, அல்லது நம் வாழ்வின் நிகழ்வுகளை அந்தக் கதையில் பொறுத்த முடியாதபோது உளச்சிக்கல்கள் வருகின்றன என்றும்கூட சில உளவியல் மருத்துவர்கள் சொல்கிறார்கள்.


கதையை விட கவிதை கூடுதல் செறிவுடன் உணர்வையும் நிகழ்வையும் ஒரே தளத்தில் வைத்துப் பேசுகிறது. தீவிர உளக் குமுறலில் இருப்பவர்களுக்கெல்லாம் அதனின்று விடுபட்டதன் பின்னணியில் ஏதோ ஒரு நிகழ்வு அவர்கள் வாழ்க்கைக் கதையில் திருப்பு முனையாக உட்கார்ந்திருக்கும். ரொம்ப அதிகமாக எழுதி விட்டதால் சீக்கிரம் முடிக்க வேண்டும் என்றுத் தோன்றுகிறது- வேறோரு சமயம் இது குறித்தெல்லாம் எழுதுகிறேன்!

நான் சொல்ல வருவது என்னவென்றால் நம்மைச் சுற்றியிருக்கிற காற்று மாதிரி கதைகள் நம்மை உருவாக்கிக் காப்பாற்றி வைக்கின்றன. கதையை விட கவிதைகள் அதன் அழகாலும் அடர்த்தியான வடிவாலும் மறக்க முடியாத சொற்களாகவும் காட்சிகளாகவும் மனதில் நிலைத்து நின்று விடுகின்றன. பிரமிளின் எழுதிச் செல்கிற இறகு பல பேருக்கு வாழ்க்கையின் இயல்பின் குறியீடாகக்கூட இருக்கும், இல்லையா? கவிதையின் சாத்தியங்கள் எண்ணற்றவை. மொழியின் வேரில் கிளைத்து, அதற்கு வளம் சேர்ப்பது கவிதை.

சமகால கவிதையின் கணிசமான அளவில் உரத்து ஒலிக்கும் குரல்களின் ஒரு போக்கு குறித்து ஒரு வார்த்தை, சண்டைக்கு வராதீர்கள்- தூசுகூடப் பட்டுவிடக் கூடாதென்று தன் சட்டையின் பளபளப்பைப் பாதுகாத்து எப்போதும் தன்னைப் புதுசாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கவலைப்பட்டுக் கொண்டே வேலைக்குப் போகிற புது மாப்பிள்ளை தன் நண்பர்களுக்கு எவ்வளவு சீக்கிரம் அலுப்பு தட்டிப் போய் விடுவானோ, அது போலவே தன்னைக் கவிதையாகக் காட்டிக் கொண்டு கவிதை பற்றியே பேசிக் கொண்டிருக்கிற கவிதைகளும் ரொம்ப சீக்கிரம் அலுப்பு தட்டி விடும், இல்லையா?

நல்ல வேளை, ஒரு ஈர்ப்பிருந்தாலும் ஆன மட்டும் அதை எதிர்த்துப் போராடுகிறார் ஹரன் பிரசன்னா. ஆனால் இந்த மொழிப் போரில் கவிதைகிவிதை எழுதி பேரைக் கெடுத்துக் கொண்டு கவிஞனாக தன் நம்பகத்தன்மையை இழந்து அவர் தியாகி ஆகி விடும் ஆபத்து இருக்கிறது என்று தோன்றுகிறது.  அதை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

======================

டிஸ்கிஇந்தப் பதிவை எழுதிய பிறகு இன்றுதான் தலையாலங்கானத்து நெடுஞ்செழியன் திரு ஹரன் பிரசன்னா அவர்கள் இல்லை என்று நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்தது. இதை அடிப்படையாக வைத்தே இந்தப் பதிவு எழுதப்பட்டிருப்பதால் இப்போது இதில் நிறைய உளரல் என்று தெரிய வருகிறது. எனவே வாசக அன்பர்கள் உயர்த்திய புருவமும் ஏளனச் சிரிப்புமாய் இந்தப் பதிவைத் தாண்டிப் போய் விடும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Nov 24, 2010

கவிதை எழுதுவது எப்படி


சிறப்புப் பதிவர்: நட்பாஸ்
சென்ற பதிவில் சொன்னதை சுருக்கமாக சொல்லி விடுகிறேன்- நண்பர் ஒருவர் இப்போது எழுதப்படுகிற கவிதைகளில் சில வகை கவிதைகளை எப்படி புரிந்து கொள்வது என்ற கவலையைத் தெரிவித்திருந்தார். அதற்காக சொல்வனத்தில் வந்த ஒரு கவிதையை விவாதித்து, நீங்கள் இந்த மாதிரியான கவிதைகளை எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளுங்கள், அந்த வசதி உங்களுக்கு இருக்கிறது என்று ஒருவாறு முடிக்க நேர்ந்தது. அப்போது போகிற போக்கில் புலவர்கள் இப்போது கவியரசர்கள் ஆகி விட்டார்கள், நீங்கள் புரிந்து கொள்வது கொள்ளாதது குறித்து அவர்களுக்குக் கவலை இல்லை என்று சொல்லி விட்டு அவர்கள் ஏன் அரசர்கள் ஆனார்கள், எந்த ராஜ்யத்தை ஆள்கிறார்கள் என்பதை அப்புறம் பார்க்கலாம் என்று சொல்லி இருந்தேன், இன்று அப்படி பார்க்க முடிகிறதா என்பதைப் பார்க்கலாம்.


இந்தத் திருக்குறளைப் படித்துப் பாருங்கள்-
"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்."
இதில் ஒரு தகவல் இருக்கிறது.

இது கம்ப ராமாயணம்-
"பூ ஒடுங்கின; விரவு புள் ஒடுங்கின, பொழில்கள்;
மா ஒடுங்கின; மரனும் இலை ஒடுங்கின; கிளிகள்
நா ஒடுங்கின; மயில்கள் நடம் ஒடுங்கின; குயில்கள்
கூ ஒடுங்கின; பிளிறு குரல் ஒடுங்கின, களிறு. "
இதிலும் தகவல் இருக்கிறது.

எல்லாம் எங்களுக்குத் தெரியுமப்பா என்கிறீர்களா? ஒரு பில்டப்புதான். இங்கே நீங்கள் ஒரு ஸ்மைலியைப் படிக்க வேண்டும்.

இப்போது பற்பல நூற்றாண்டுகளை ஒரே பத்தியில் பாய்ந்து கடந்து தற்கால கவிதைகளில் ஒன்றைப் பார்ப்போம்-

பூக்களைப் பிரித்துப் பிரித்து
தேடிக்கொண்டிருந்தேன் புதையலை
விடியலின் பின்பொழுதில்
பூக்களின் உதிர்ந்த மலைக்குள்
கண்டுபிடித்தேன்
என்னைக் காணவில்லை
என்று அழுதுகொண்டிருக்கும்
என்னை.
- "புதையல் தேடி"- இலா, சொல்வனம், இதழ் 26

கவிஞர் தன்னைக் கண்டு பிடித்துக் கொண்டு விட்டார் என்பதைத் தவிர வேறு ஏதாவது தகவல் கிடைக்கிறது? அந்தத் தகவலும் நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து வருவதாகத் தெரியவில்லை- தன்னால் கண்டு பிடிக்கப்பட்டபோது தேடப்பட்டவர் தன்னைக் காணவில்லை என்று அழுதுக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. கவிதை என்று ஒன்று இருக்கிறது என்பதைத் தவிர என்ன நடக்கிறது இங்கே? பூக்களைப் பிரித்துப் பார்த்ததற்கு பதிலாக வெங்காயத்தைப் பிரித்துப் பார்த்திருந்தாலாவது இந்தக் கவிதைக்கு ஒரு பொருள் காண்பது நமக்கு எளிதாக இருந்திருக்கும்.

கவிதையில் ஒன்றும் நடக்கவில்லை. அது இருக்கிறது. நம் மனதில்தான் எதுவும் நிகழ்கிறது. அங்கே என்ன நிகழ்கிறது என்பதை நம் வாசிப்பு அனுபவமே தீர்மானிக்கிறது.

மறுபடியும் சென்ற பதிவில் நான் குறிப்பிட்ட வா மணிகண்டனின் "நின்று பெய்யும் மழை - பிரான்சிஸ் கிருபா" என்ற கட்டுரைக்கே வருகிறேன். கொஞ்சம் அளவுக்கதிகமாகவே அங்கிருந்து ஒரு மேற்கோளை உருவி இருக்கிறேன், படித்துப் பாருங்கள்-

"ரசனையுடன் கவிதையை அவதானிக்கும் போது ‘பக்குவப்பட்ட, உண்மைத்தன்மையுடையன’ அல்லது ‘அலங்காரம் செய்யப்பட்ட சொற்க் கூட்டங்கள்’ என்று இரண்டு வகைகளுக்குள்ளாகவே கிட்டத்தட்ட அனைத்துக் கவிதைகளையும் மற்றும் கவிதை என்ற பெயரில் உற்பத்தி செய்யப்பட்டவைகளையும் உள்ளடக்கிவிடலாம். பக்குவப்பட்ட உண்மைத் தன்மையுடன் உள்ளனவற்றை கவிதை என்று தயக்கமில்லாமல் சொல்லிவிடலாம். மற்றவற்றை ‘கழிசடை’ என்று நிராகரித்துவிடலாம்.

இந்தத் தரம்பிரித்தல் பரிந்துரைகளின் மூலமாகவோ அல்லது மேதாவித்தனத்தாலோ செய்யக் கூடியதில்லை. தொடர்ந்து கவிதைகளை அணுகுவதாலேயே நிகழ முடியும். கவிதைகளை அணுகுதல் தொடர்ச்சியான வாசிப்பின் மூலமாக நிகழ வேண்டும். வாசிப்பின் மூலமாகவே வாசகன் உண்மையான கவிதைகளை நெருங்க முடியும். ஒரு கவிதை வாசகனுக்கு உண்மையான கவிதைகளை நெருங்குதல் எத்தனை முக்கியமானதோ அதே அளவுக்கு முக்கியமானது, போலிகளை விட்டு விலகுதலும்."

இது சற்றே தீவிரமான நிலைப்பாடு என்றுத் தோன்றுகிறது- வா மணிகண்டன் எழுதியுள்ளதில் என்ன பிரச்சினை என்றால் இவர் சொல்கிற மாதிரியான நல்ல கவிதைகளை முதன் முதலாக படிக்கிற நம்மைப் போன்ற பெரும்பாலோர், அவற்றை "அலங்காரம் செய்யப்பட்ட சொற் கூட்டங்கள்" என்றுதான் எதிர்ப்பார்கள், இல்லையா? "பக்குவப்பட்ட, உண்மைத்தன்மையுடைய" கவிதைகளை நம்மால் கண்டு பிடிக்க முடியும் என்ற நம்பிக்கையில் நிறைய கவிதைகளைப் படித்தால்தான் உண்டு. அப்போது கூட எதை வைத்து ஒரு கவிதையின் உண்மைத்தன்மையை அந்தக் கவிதையைக் கொண்டே உறுதி செய்துகொள்ள முடியும்? இதற்கெல்லாம் எனக்குத் தெளிவான பதில் தெரியவில்லை. அதே போல் போலிகளை விட்டு விலக வேண்டும் என்பதில்கூட ஒரு ஸ்டாலினியக் கண்டிப்பு தெரிகிறது. இது கவிதையைக் கொலைகாரச் சித்தாந்தத்துக்கு இட்டுச் செல்லும் பாதை என்பதை வா மணிகண்டன் உணர்ந்திருக்கிறாரா இல்லையா என்றுத் தெரியவில்லை.

சரி விடுவோம். நாம் புரிந்து கொண்ட அளவில், இங்கு, நீ நிறைய படித்தால்தான் எங்களைப் புரிந்து கொள்ள முடியும் என்ற வாதத்தில், கவிஞர்கள் எதை ஆள்கிறார்கள் என்ற கேள்விக்கு பதில் போலொன்று கிடைக்கிறது-

இந்த மாதிரி கவிதைகளைப் படிக்கும்போது கவிதை, கவிஞனின் பக்குவப்பட்ட உண்மைத்தன்மையுடைய குரலாய் வெளிவந்து ஒரு பக்கம் கிடக்கிறது, வாசகன் மறு பக்கம் கிடக்கிறான். இருவருக்குமிடையே முழுமையான பாலமாய்த் தகவலேதும் பரிமாறிக் கொள்ளப்படுவதில்லை.....

....என்றுதானே நினைக்கிறோம்? அதுதான் இல்லை. எனக்கும் உங்களுக்கும்தான் தகவல்கள் தெரிய வருகிறதில்லை. நிறைய கவிதைகளைப் படிக்கிறார்கள் இல்லையா, அவர்களுக்குத் தேவையான தகவல்கள் கிடைத்து விடுகின்றன. எவ்வகையான தகவல்கள்?

இங்கே ஒரு நொடி நிற்போம். இலா எழுதியிருக்கிற மாதிரியான கவிதைகளை உங்களாலும் என்னாலும் எழுதி விட முடியாதா என்ன? அது ஒன்றும் அப்படி ஆகாத காரியமாகத் தெரியவில்லை. இல்லையா?

ஆனால் இந்தக் கவிதையில் உள்ள ஒரு வகையான நேர்த்தியைப் பாருங்கள். இதை நாம் எழுதும் எல்லா கவிதைகளிலும் தொடர வேண்டும், முடியுமா? நாமானால் என்ன செய்வோம், இன்று இந்த மாதிரி ஒரு கவிதையை எழுதுவோம், நாளை நன்றாக இருக்கிறது என்பதற்காக

ஒரு வெண்பந்தாய்
இட்லி மாவில் விழுந்த எலி
தத்தித் தத்திப் போகிறது

கிருஷ்ண ஜெயந்திஎன்று எழுதிவிட்டு, ஆஹா என்று நாம் அதிசயிப்பதை உணர்த்துவதற்காக ஆச்சரியக் குறியைப் போட்டு அதை அழகும் செய்வோம், இல்லையா?- கிருஷ்ண ஜெயந்தி!

இதைப் படித்தபின் நீங்கள் எழுதும் எதையாவது கவிதை என்று புலவர் பெருமக்கள் ஒப்புக் கொள்வார்கள் என்கிறீர்கள்?

இந்த காலத்தில் கவிதை எழுதுகிறவர்கள் ஆள்வது மொழியை. அதன் எல்லைகளை எவ்வளவுக்கு விரிக்க முடியும் என்று சோதித்துப் பார்க்கிறார்கள். உங்கள் மொழி ஆளுமை எந்த அளவுக்கு நன்றாக இருக்கிறதோ அந்த அளவுக்கு நீங்களும் நல்ல கவிஞராக அங்கீகரிக்கப்படுவீர்கள். உங்கள் கவிதையும் நல்ல கவிதையாய் அறியப்படும். அதுதான் உண்மை.

நாம் தகவல் பெட்டகமாய் கவிதைகளை அணுகுவது அவர்களுடைய நோக்கத்துக்கு இடைஞ்சலாக இருக்கிறது. ஏன்? வாசகனின் கவனம் மொழியை விட்டு தகவலுக்குத் தாவி விடுகிறது. அது நல்ல கவிதைக்கு அழகில்லை, சரிதானே? கவிதை என்றால் அதை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறபடி இருக்க வேண்டும், அதுதானே அழகு?

அபத்தமாக ஒன்று சொல்கிறேன், சரி வருகிறதா பாருங்கள்- இது பொருத்தமாக இருந்தாலும் இருக்கக் கூடும்: நீங்கள் ஒருவரைத் தேடிப் போகிறீர்கள். வழி தேடிக் கொண்டிருக்கையில் ஒரு அழகான பெண் எதிர்ப்படுகிறாள். அவர், "லெப்ட்ல போய் செகண்ட் ரைட் திரும்பி கொஞ்ச தூரம் போனா பச்சை பெயிண்ட் அடித்த வீடு வரும். அதற்கு எதிர் வீட்டில்தான் இவர் இருக்கிறார்," என்று சொல்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். "சரி," என்று தலையாட்டி விட்டு நீங்கள் அவளைக் கடந்து போக முடிகிறதென்றால் அது அழகுக்கு மரியாதையா? அவள் நினைவாகவே இருந்து திரும்பத் திரும்ப அவளைத் தேடி வந்து எதிர்ப்பட்டால் அவளைப் பின்தொடர்ந்து அவள் வீட்டைக் கண்டு பிடிக்க வைக்க வேண்டும், அதுதானே அழகுக்கு அழகு? என்ன சொல்கிறீர்கள்?

அழகென்றால் அதன் தாக்கம் நம்மைக் கடத்திக் கொண்டு போய் தன்னில் இருத்தி வைத்துக் கொள்ள வேண்டும். இதைதான் இப்போது எழுதும் கவிஞர்கள் முயற்சி செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். நம் கவனம் கவிதையில் இருக்க வேண்டும், அதன் தகவல்களில் அல்ல. இதன் காரணமாகவே தகவல்களின் ஒழுங்கை, முழுமையை கலைத்து மொழியில், கவிதையின் கவித்துவத்தில் உள்ள ஒழுங்கை முன்னிறுத்துகிறார்கள் இவர்கள் என்று நினைக்கிறேன்.எது எப்படி இருந்தாலும், கவிதைகள் தனித்து நிற்பதில்லை. நான் முன் சொன்ன மாதிரி இந்த வகையான கவிதைகளை யாரும் அவ்வப்போது வாய்க்கிற தருணங்களில் எப்போதாவது ஓரிரு முறை எழுதி விடலாம். ஆனால் அதைத் தொடர்ந்து செய்கிற ஜட்ஜ்மன்ட் இருக்கிறதில்லையா, அதுதான் நீங்கள் எழுதுகிற கவிதையை கவனிக்கப்பட தக்கதாய் நிலை நிறுத்துகிறது.

இது அநியாயம் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் அது அப்படிதான் சார். இது மொழியின் எல்லைகளை விரிக்கிற வித்தை, இங்கு கத்துக்குட்டிகளுக்கு இடமில்லை. மொழி ஆளுமை உள்ளவர்கள் என்று அறியப்பட்டவர்களே இங்கு ஆட்சி செய்ய முடியும். நீங்கள் நவீன கவிதை எழுத நினைப்பவராக இருந்தால் இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்- கவிஞர்கள் தங்கள் கவிதைகள் மூலம் ஒருவரோடொருவர் உரையாடிக் கொள்கிறார்கள். அவர்களது உரையாடல் கவிதையின் பொருள் குறித்தல்ல- அதன் மொழி குறித்து, வடிவம் குறித்து, இயல்பு குறித்து. இதைப் பற்றி எழுதுகிறேன் அதைப் பற்றி எழுதுகிறேன் என்பதெல்லாம் ஒரு சாக்குதான்- கவிதைதான் அவர்களது பாடுபொருள். நாம் நிறைய கவிதைகளைப் படித்து, இவர்கள் பேசிக் கொள்வதைத் தொடர்ந்து ஒட்டுக் கேட்டால்தான் இவர்கள் பேசிக் கொள்வதை பாலோ பண்ண முடியுமென்று நினைக்கிறேன். இந்த மாதிரி கவிதைகளைப் படிப்பதற்காக நாம் இவ்வளவு மெனக்கெட வேண்டுமா என்பது வேறு விஷயம்.

நிறைய எழுதி விட்டேன்- இதில் தெளிவை விட கேள்விகள்தான் அதிகம் எழுந்திருக்கும். அதனால் இன்னொன்றையும் சொல்லி விடுகிறேன். கவிஞர்களை அரசர்கள் என்று சொன்னேனில்லையா, நம் கையேந்தி நிலையை மனதில் வைத்து, அது தவறு.

கவிஞர்கள் கடவுள் மாதிரி. படைப்பாளிகள் என்ற அளவில் மட்டுமல்ல, அவர்களின் இருப்பு உபாசகர்களின் கவனிப்பை நம்பி இருக்கிறது என்பதாலும்தான். என்னதான் நாங்கள் படைக்கிறோம், நீ எங்களை உபாசித்து அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் எட்டி நின்றாலும், பக்தன் கண்டு கொள்ளாமல் இவர்களைக் கைவிட்டால் கதி என்னாகும்? யோசித்துப் பாருங்கள், சிதிலமடைந்த கோயில்கள் நினைவுக்கு வருகிறதா இல்லையா?

கவிதைக்கு கவிஞன் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் வாசகனும், சரிதானே? தகவல்களைத் தவிர்த்து மொழியின் எல்லைகளை நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் விரித்து செல்லுங்கள், ஆனால் ஓரளவுக்கு மேல் ஓவராகப் போனால் வாசகர்கள் அந்நியப்பட்டுப் போய் விடுவார்கள், இல்லையா? அந்த ஆபத்தும் இருக்கிறது. ஆங்கிலக் கவிதைகளில் ஒரு தேக்க நிலை இருப்பதாக கேள்விப்படுகிறேன், ஒரு சமயம் இப்பாலும் அப்பாலும் இருக்க வேண்டிய கவிஞர்கள், ஒரேயடியாக அப்பால் போய் விட்டதால் இது நேர்ந்திருக்கிறதோ என்பது என் ஐயம்.

ஹரன் பிரசன்னாவின் மூன்று கவிதைகளை முன்வைத்து என்று சொல்லி விட்டு அதைப் பற்றி ஒரு வார்த்தைகூட பேசாமல் இன்னும் என்னடா இவன் கதை விட்டுக் கொண்டிருக்கிறான் என்று நீங்கள் கடுப்பாவது தெரிகிறது. ஒரு நாள் பொறுத்திருங்கள், அதையும் சொல்லி முடித்து விடுகிறேன்.

நாளைக்குமா, என்று பதறாதீர்கள் நண்பர்களே, இவ்வளவையும் தெரிந்து கொண்டால்தான் அவர் கவிதைகளை சரியான முறையில் அணுக முடியும்.

இதோ ஹரன் பிரசன்னாவின் மூன்று கவிதைகளில் இன்னொன்று- அவர் அப்பாலிருக்கிறாரா இப்பாலிருக்கிறாரா எப்பாலிருகிறார் என்று சொல்லுங்கள்-

பாற்கடல்

வெண்ணிறக் குதிரைகள்
மிடறு நிமிர்த்தி பாய்ந்தோடுகின்றன
புரண்டு படுக்கிறான் மகன்
விஷ்ணுவின் புன்னகையை ஏந்தி
தொப்புள்கொடியில் லக்ஷ்மியைத் தாங்கி
வாயிடுக்கில் ஒழுகும் நீரில்
மிதக்கிறது என் கட்டில்
கட்டிப் பிடித்துக்கொள்கிறாள்
கனவின் நிறத்தில்
மலர்ந்த மனைவி
என்ன நீர்ச்சத்தம் என்கிறாள் அம்மா
அலைகளுக்கு இடையே
ஆயிரம் ஆயிரமாய்
மிதந்து வருகின்றன
அந்த இரவில்
அப்போது மலர்ந்த
தாமரை மலர்கள்
ஒரு மலரை எடுத்து
விஷ்ணுவுக்கு வைத்தேன்
எங்கேயோ ஒலிக்கிறது மணிச்சத்தம்

.
.
.

Nov 23, 2010

"கவிதையை எப்படிப் படிக்க வேண்டும்?"

ஹரன் பிரசன்னாவின் "மூன்று கவிதை"களை முன்வைத்து
சிறப்புப் பதிவர்: நட்பாஸ்
ஒரு கவிதையை எப்படி வாசிப்பது? இந்த நாட்களில் எழுதப்படுகிற கவிதைகளைப் படிக்கிறவர்களில் நிறைய பேருக்கு இந்த சந்தேகம் வருகிறது. எனக்கும்கூடத்தான், ஆகப் பாருங்கள், நேற்று மாலை என் நண்பரொருவரிடமிருந்து அஞ்சல் ஒன்று வந்தது- சொல்வனம் இதழில் ஹரன் பிரசன்னாவின் மூன்று கவிதைகளைச் சுட்டி, "பாஸ், இதெல்லாம் என்ன? மூணுல ஒண்ணு கூட விளங்கல :(" என்று. அஞ்சலில் அவர் வெளிப்படுத்தியிருந்த முகம் திரும்பிய ஸ்மைலி அதிர்ச்சியில் உறைந்த ரத்தத்தை நினைவுபடுத்தியது எனக்கு. இந்த மாதிரி ஒருத்தர் நம்மை நம்பி கேட்கும்போது, "தெரியலையேப்பா!" என்று கையை விரிக்க என்னால் முடிவதில்லை. இருக்கிற குழப்பம் போதாதென்று ஏதோ என்னாலான கைங்கர்யம்- இதோ.


எது கவிதை, ஏன் கவிதை என்பதை விளங்கிக் கொள்ள அதே இதழில், வா மணிகண்டன் நவீன கவிதைகள் குறித்து எழுதியுள்ள, "நின்று பெய்யும் மழை - பிரான்சிஸ் கிருபா" என்ற கட்டுரையையும் பதிப்பித்திருக்கிறார்கள், அதை முதலில் படிப்பது பயனுள்ளதாக இருக்கும். அதை வாசித்துப் பார்த்தால் வா மணிகண்டன், கவிதை வாசகனுடன் கண்ணாமூச்சி ஆடுவதாக சொல்கிறார் என்பது புரிகிறது. 


இது எல்லா கவிதைகளுக்கும் பொருந்துமா இல்லை நவீன கவிதைகளுக்கு மட்டும்தான் பொருந்துமா என்று தெரியவில்லை. ஒரே கவிதையை வெவ்வேறு வாசகர்கள் வெவ்வேறு விதமாகப் புரிந்து கொள்வதை அவர் அங்கீகரிப்பது போலவும் தெரிகிறது. ஏனென்றால் பிரான்சிஸ் கிருபாவின் ஒரே ஒரு கவிதையைப் பற்றி அவ்வளவு பெரிய கட்டுரையை எழுதி விட்டு, "அல்லது முற்றும் வேறுமாதிரியாக இன்னொரு வாசகன் யோசிக்கலாம்," என்று பேனாவைத் தூக்கிக் கொண்டு கிளம்பி விடுகிறார்.எனக்கு இந்த பிரான்சிஸ் கிருபாவின் கவிதையை வேறு மாதிரியாக வாசிக்கத் தோன்றுகிறது. அதை கவனித்துவிட்டு ஹரன் பிரசன்னாவின் மூன்று கவிதைகளுக்கு வந்தால் நம் வேலை சுலபமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.


இது கவிதை:

விரித்த என் பாயில்
மீதமிருந்த இடத்தில்
படுத்து ஒடுங்குகிறது குளிர்காலம்.
பூக்கள்
ஒரு புன்னகையின்
தொடக்கமா முடிவா
என்றுதான் நான் கேட்டேன்.
அது என்னைக் கட்டியிறுக்கி
காலோடு கால் பின்னிக் கொண்டது.
அடுப்பில் விறகு அணைந்திருக்கிறது
எழுப்பிவிடட்டுமா என்று கேட்டேன்.
கைகளையும் பின்னிக்கொண்டது.
இரவு தீர என்னோடு
உறங்கிக் கிடந்தது.
சூரியசாட்டையிலிருந்து
மஞ்சள் ரத்தம் பரவியபோது
ஒரு முத்தத்தை உடைக்கமுடியாமல்
இரண்டு உதடுகள் திணறின
காட்டுக்கு வெளியே

(உரிமை- ஆசிரியருக்கே!)


கவிதையை அவரவர் திறமைக்கேற்றார்போல வாசித்துக் கொள்ளலாம் என்று வா மணிகண்டன் சொல்லி விட்டார். இதை நாம் எப்படி வாசிப்பது என்று பார்ப்போம்.


குளிர்காலம் என்பது பெண்ணாக இருக்கலாம், ஆணாக இருக்கலாம், இல்லை ஆளுயரத்துக்கு வளர்ந்த ஒரு பூனைக்குட்டியாகக் கூட இருக்கலாம். அது பாயில் மிச்சமிருக்கிற இடத்தில் ஒடுங்கிப் படுத்துக் கொண்டிருக்கிறது, பாவம்.நம் கவிஞர் சும்மா இருக்காமல் அதனிடம், "பூக்கள் ஒரு புன்னகையின் துவக்கமா முடிவா?" என்று வாயைக் கொடுக்கிறார். நியாயமான கேள்விதானே? காலையில் கொஞ்சம் அப்படி இப்படி வெளியே போனீர்களானால் உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் நம் நகரத்து சாலையோரங்களில் அங்கங்கே செடிகளில் பூக்களைப் பார்க்கலாம். "ஆஹா, பொழுது நன்றாக விடிந்தது. பூக்கள் மலர்ந்த முகத்தோடு அதை வரவேற்கின்றன, இது நல்ல நாள்தான்" என்று நீங்களும் பூக்களுக்கு குட் மார்னிங் சொல்லக் கூடும், உங்களுக்குக் காதலியோ மணம் மாறாத மனைவியோ இருந்தால் அந்தப் பூவை யாருக்கும் தெரியாமல் நீங்கள் உஷார் பண்ணவும் கூடும். ஆனால் அதே அந்தப் பூக்களின் மலர்ச்சி வெகு விரைவிலேயே வாடிப் போய் விடுமென்பதும் சிலபேருக்கு மட்டும் அந்த அதிகாலை வேளையிலும் நினைவுக்கு வரும்- "அச்சச்சோ!" என்று அதைப் பார்வையாலேயே வருடிக் கொடுத்து விட்டு தங்கள் வழியில் செல்கிற இவர்களில் பெரும்பாலானோர் முதியவர்களாக இருப்பார்கள் என்று தோன்றுகிறது.கவிதைக்கு வருவோம்- " "பூக்கள் ஒரு புன்னகையின் துவக்கமா முடிவா?"" என்று நம்மிடம் கேட்கப்பட்டிருந்தால், "நல்ல கேள்வி நன்றி கிருபா!," என்று சொல்லி விட்டு திரும்பிப் படுத்துக் கொண்டிருப்போம், அதைப் பேசி என்ன ஆகப் போகிறது?-. குளிர்காலம் அந்த மாதிரியான ஆள் இல்லை.என்ன செய்கிறது அது? பாய்ந்து வந்துக் கட்டியிறுக்கி கவிஞனின் காலோடு கால் பின்னிக் கொள்கிறது. ஏன் இப்படி செய்தது என்று கவிஞர் சொல்லவில்லை. பாவம், அவருக்கு மட்டும் குளிர்காலத்தின் மனசுக்குள் நுழைந்து அது என்ன நினைக்கிறது ஏது என்று அறிந்து கொள்ளக் கூடிய சக்தி இருக்கிறதா என்ன?சும்மாக் கிடந்த குளிர் காலத்திடம் வாய் கொடுத்து மாட்டிக் கொண்டாரா, அதுவும் கிட்டே வந்து கட்டிப் பிடித்துக் கொண்டதா, கவிஞருக்கு இப்போதுதான் குளிர் தெரிகிறது போலிருக்கிறது, "அடுப்பில் விறகு அணைந்திருக்கிறது, எழுப்பி விடட்டுமா?" என்று கேட்கிறார்."என்னடா இவன், உயிருக்கே உலை வைத்து விடுவான் போலிருக்கிறதே!" என்று குளிர்காலம் பயந்து விட்டதோ என்னவோ, கவிஞரின் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறது.அப்புறம் என்ன, கவிஞரை இறுக அணைத்துக் கொண்டு அவரது உடலின் கணப்பில் குளிர்காலம் நன்றாகத் தூங்கிப் போய் விடுகிறது. கவிஞர் இரவெல்லாம் குளிர் தாங்காமல் விறைத்துப் போய் கிடந்த கோலம் கவிதையின் வாயிலாகக் காணக் கிடைக்கிறது- "இரவு தீர என்னோடு உறங்கிக் கிடந்தது" என்கிறார். இதைத் தொடர்ந்து, இரவு தீர யார் விழித்துக் கிடந்தது என்ற கேள்வி எழுவது நியாயம்தானே?அப்புறம் பார்த்தால் ஒரு வழியாக சூரியன் சாட்டையாலடித்து இரவைத் தீர்த்துக் கட்டி விடுகிறான்- மஞ்சள் ரத்தம் வானெங்கும் பரவுகிறது. பார்க்கிறார் கவிஞர், எதையும் வாய் திறந்து பேச இயலாத ஊமையாக- "ஒரு முத்தத்தை உடைக்க முடியாமல் இரண்டு உதடுகள் திணறின" என்ற வரிகள், குளிர்காலம் இவரை வாயடைத்துப் போக வைத்து விட்டதை உணர்த்துகின்றன. முத்தமிடுவதைப் போல குவிந்து உறைந்து விட்ட உதடுகளில், குளிர்காலம் தன் முத்தத்தை இட்டு வைத்திருக்கிறது- சரிதானே சார் நான் இந்தக் கவிதையைப் படித்திருப்பது?இந்த மாதிரி அர்த்தம் செய்துகொள்ளும் வாசகர்களாகிய நம்மையெல்லாம் பிரான்சிஸ் கிருபா அத்தனை கவிஞர்களின் சார்பாகவும், "போடாங்க!" என்று வழியனுப்பி வைக்கிறார்- "காட்டுக்கு வெளியே!" என்ற கடைசி வரியில்.இதை எப்படி ஐயா அர்த்தம் பண்ணிக் கொள்வது?இதற்கான ஒரு க்ளூ வா மணிகண்டனின் வேறொரு கவிதையில் கிடைக்கிறது-


பந்த‌ல் சலித்த‌‌
வெய்யிலில் பேசிக் கொண்டிருந்தோம்.
தீராத இரவுகள் பற்றி பேசினீர்க‌ள்
நெருங்க முடியாத வனம் குறித்துச் சொன்னீர்கள்
விடையில்லாத‌ புதிர்க‌ளை சிலாகித்தீர்க‌ள்.

பேச‌ எத்த‌னித்தேன்.

நொறுக்கினீர்கள்.

மீன்க‌ளால் நிறைந்த‌
க‌ண்ணாடி தொட்டியொன்றை

- அந்திமழை, வா.மணிகண்டன் - கவிதைத் திருவிழா 58, மீன்களோடு நொறுங்கும் தொட்டி
(உரிமை- ஆசிரியருக்கே!)


இரவு, பகல். குளிர், வெயில். உறக்கம், விழிப்பு- உண்டோ இல்லையோ, வா மணிகண்டனின் இந்தக் கவிதையை பிரான்சிஸ் கிருபாவின் கவிதைக்கு எதிர்வினையாக வாசிக்கலாம், யார் கேட்க முடியும்? வாசகனுக்குதான் அந்த உரிமை இருக்கிறதே!


கவிஞன், என் கவிதை பூக்களைப் போல தன் பாட்டுக்குக் கிடக்கும், அதன் புன்னகையின் அடி முடி காண நினைக்கிற உன்னைப் பற்றி எனக்குக் கவலை இல்லை என்று வாசகனிடம் சொல்லி தன் சுதந்திரத்தை நிலை நிறுத்திக் கொள்கிறான். வாசகனுக்கு வேறு வழி இல்லை- தனக்குப் பிடித்திருக்கிறதோ இல்லையோ, ஏன் கவிஞனுக்கே பிடித்திருக்கிறதோ இல்லையோ, வாசகனும் தன் விருப்பப்படி கவிதையைப் பொருட்படுத்தும் சுதந்திரத்தைக் கை கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறான். கவிஞனுக்கு எது முழு சுதந்திரத்தைத் தருகிறதோ அதுவே கவிதை மீதான உரிமைகள் அனைத்தையும் பறித்து விடுகிறது என்பது வியப்பாக இருக்கிறது. அதே போல் வாசகனுக்கு தன் இஷ்டத்துக்கு கவிதையைப் படித்துக் கொள்ளும் முழு உரிமை இருந்தாலும் அந்த சுதந்திரம் அவனுக்கு அவ்வளவு திருப்தியானதாக இல்லை என்று நினைக்கிறேன்- கூடுமானவரை அவன் கவிஞன் என்ன சொல்ல வருகிறான் என்று தெரிந்து கொள்ளவே ஆசைப்படுகிறான்: இந்த சுதந்திரம் அவன் மேல் வலியத் திணிக்கப்பட்ட ஒன்று- நாடு கடத்தப்பட்டவனின் சுதந்திரத்தைப் போன்றது இது.இந்த நவீன கவிதையில் என்ன ஒரு சங்கடம் என்றால், கவிதைகளிடமிருந்து பெற்ற தகவல்களைக் கொண்டு வாசகன் தான் என்ன அர்த்தம் செய்து கொண்டானோ, அதை அவன் தன்னோடே வைத்துக் கொள்ள வேண்டும். கவிஞனிடம் போய் அதை சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. அப்படி செய்தால் வா மணிகண்டன் சொல்கிற மாதிரிதான் நாமும் சொல்லிக் கொண்டு திரும்பி வர வேண்டும், "பேச‌ எத்த‌னித்தேன். நொறுக்கினீர்கள். மீன்க‌ளால் நிறைந்த‌ க‌ண்ணாடி தொட்டியொன்றை" என்று. நவீன கவிஞர்கள் தங்கள் கவிதைகள் நன்றாக இருக்கின்றன என்று பாராட்டப்படுவதை விரும்புகிற அளவுக்கு அதன் பொருள் சட்டகப்படுத்தப்படுவதை வரவேற்கிற மாதிரி தெரியவில்லை.மொத்தத்தில் கவிதை தன் பாட்டுக்குக் கிடக்கிறது. அதன் பொருள் நம் உள்ளத்தில், "மீன்க‌ளால் நிறைந்த‌ க‌ண்ணாடி தொட்டி" போல் இருக்கிறது. இதை கொண்டு போய் அங்கே குத்திக் குடைந்து பொருத்திப் பார்க்க முனையாதீர்கள்- கவிதை உங்கள் நினைப்பை நொறுக்கி விடும். இந்த மாதிரியான கவிதைகள் எந்த அளவுக்கு கவிஞனாய் இல்லாத வாசகர்களுடன் நட்பு பாராட்டுகிறது என்பது கேள்விக்குரிய ஒன்றே. எது எப்படியிருந்தாலும் வாசகர்களுக்கு வேறு வழியில்லை, அவர்களாகவே முனைந்து அதை தங்களுக்கேற்ற வகையில் புரிந்து கொண்டு நிறைவடைய வேண்டியதுதான்.அந்த காலத்தில் புலவர்கள் அரசவைக்குப் போய் பாடுவார்கள் என்று கேள்வி. அரசன் அதற்குத் தக்க சன்மானம் தருவானாம். பொற்கிழி கிடைத்தால் புண்ணியம், புண்ணாக்கு கிடைத்தால்? "ஏன் ராஜா எனக்கு புண்ணாக்கைப் பரிசாகத் தந்தீர்கள்?" என்று அரசனைப் பார்த்து புலவன் கேட்க முடியுமா? "இதை வறுத்து சாப்பிட்டால் நன்றாக இருக்குமா இல்லை அவித்து சாப்பிட்டால் நன்றாக இருக்குமா?" என்ற கேள்விகளுடன் வீடு திரும்ப வேண்டியதுதான், இல்லையா?இந்த காலத்தில் கவிஞர்கள்தான் அரசர்கள். நாம் அவர்களுடைய குடிகள்- கிடைத்ததை வைத்துக் கொண்டு வயிற்றுப்பாட்டைத் தேற்ற வேண்டிய நிலையில் சமகாலப் புலவர்களின் புரவலர்களாகிய வாசகர்கள் நாம் இருக்கிறோம்.ஒருவாராக கவிதையில் எதை எதிர்பார்க்க வேண்டும், அதை எப்படி வாசிக்க வேண்டும் என்பதைத் தொட்டாகி விட்டது. கவிஞர்களை எப்படி அரசர்கள் என்று சொல்ல முடியும்? அவர்கள் எதை அரசாள்கிறார்கள்? நாம் அடுத்து இதைப் பார்க்க வேண்டும். அப்புறம், என் நண்பர் கேட்டாரே, சொல்வனத்தில் வெளியாகி இருக்கிற ஹரன் பிரசன்னாவின் "மூன்று கவிதைகள்" என்ற கவிதை குறித்து, அதையும் மறக்காமல் பார்க்க வேண்டும்.இது ஹரன் பிரசன்னாவின் மூன்று கவிதைகளில் ஒன்று- நான் மேலே சொன்ன விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு படித்துப் பாருங்கள், அப்படியொன்றும் சிக்கலான கவிதையாகத் தெரியவில்லை எனக்கு-


ஒளி

நீண்ட நேரம்
சூரியனை நோக்கி இருந்துவிட்டு
கொஞ்சம் ஒளியை
பைக்குள் போட்டுக்கொண்டு
உடல் அதிர நடந்தேன்
அந்தியில்
பச்சை இலைகள்
சூழ்ந்திருந்த தோட்டத்துள்
எனக்கு முன் சென்று
என்னை வரவேற்றது ஒளி
நீரில் மூழ்கினால்
என்னைச் சுற்றி
தங்க வெளிச்சம் பரப்பியது
என் பையிலிருந்த சூரியன்
இரவில் உறங்கும்போது
என் உடல் ஒளிர்ந்ததைக் கண்டேன்
மனமெங்கும் சூழ்ந்திருந்த
திசையறியா வேதனை
எங்கோ ஓட
உலகெங்கும்
வெளியெங்கும்
மனமெங்கும்
மின்னின
மறுநாள் காலை
ஒளியைத் திருப்பிக் கேட்க
வீட்டுக்குள் நுழைந்தது சூரியன்
நான் குளிரத் தொடங்கினேன்
என் வெளிச்சத்தில்
இன்னும் பிரகாசமாக சூரியன்

(உரிமை- ஆசிரியருக்கே!)

இதன் தொடர்ச்சியை வாசிக்க - இங்கே
.
.
.

Nov 22, 2010

நலம் தரும் திங்கள் - உடல்நலனில் யோகா, தியானம் - 2சென்ற வாரம் நம் உடல் நலனில் யோகா எவ்வாறு பங்கு வகிக்கிறது எனச் சுருக்கமாகப் பார்த்தோம்.

உண்மையாகப் பார்த்தோமென்றால் யோகா, தியானம் ஆகியவற்றைப் பற்றிப் படித்துக் கொண்டிருப்பதைவிட, உள்ளே நுழைந்து நீங்கள் அவற்றைத் தனதாக்கிக் கொண்டு தரிசிப்பது சாலச் சிறந்தது. அதன் மூலமே நீங்கள் அவற்றை உண்மையில் உணர இயலும்.

போன திங்கள்'ல பேசும்போது தியானம் பத்தி இந்த வாரம் சொல்றதா சொல்லிட்டு, படிக்கறதை நிறுத்துன்னு சொல்றது சரியா? எனக் கேட்கும் நண்பர்களுக்கு.... தியானம் பற்றி என் சிறு அறிவிற்குத் தெரிந்த தகவல்களை இங்கே பகிர்கிறேன், நான் உணர்ந்த சில விஷயங்களையும் சேர்த்து.

தியானம் என்றால்?


விழிப்புணர்வுடன் அல்லது விழித்த நிலையில் நீங்கள் உறக்கவயப்படும் நிலையையே தியானம் எனலாம்.

நித்திரையில் நீங்கள் உடல், மனம் இரண்டிற்கும் ஓய்வு தருகிறீர்கள். தியானத்திலும் கூட அதேதான் நடக்கிறது. தியானத்தில் உடல் முழுக்க முழுக்க ஓய்வு எடுக்கிறது. மனமும் கூட ஓய்வு எடுக்கிறது, ஆனால் ஒருவித விழிப்புணர்வுடன்.


எப்படி தியானம் செய்ய?

எப்படி தியானம் செய்வது என நாம் இக்கட்டுரை வாயிலாகப் பாடம் எடுக்க இயலாது. அது சாத்தியப்படும் விஷயமும் அல்ல. தியானம் செய்யப்படும் முறை பற்றி மட்டும் பார்க்கலாம்.

தியானத்தில் பல வகைகள் உள்ளன. எல்லா முறைகளுமே மனதை ஏதேனும் ஒரு விஷயம் நோக்கி ஒருமுகப்படுத்தும் பயிற்சிகளே.

சும்மா இருப்பதே சுகம்தானே எனத் தாயுமானவர் சொன்னதை சென்ற இரு வாரங்களுக்கு முன் "உடற்பயிற்சி" விஷயத்தில் பொருத்திப் பார்க்கலாகாது எனச் சொல்லியிருந்தோம். ஆனால் தியானம் என்று வரும்போது தாயுமானவர் வார்த்தைகளை நம் துணைக்கு அழைத்துக் கொள்வோம்.

"சும்மா இருப்பதே சுகம்" என்பது நிச்சயமாக தியானத்தில் இருப்பது சுகம் எனும் பொருளில் அந்த மகான் உதிர்த்த வார்த்தைகள். சும்மா இருப்பது என்றால் அப்படியே சும்மா இருப்பது. உடல் ரீதியாக மட்டுமல்லாமல், மன ரீதியாகவும் கூட. சாத்தியமா உங்களுக்கு? எந்த ஒரு எண்ணமும் இடை புகாமல் நிச்சலனமாக உங்கள் மனதை வைத்திருக்க உங்களால் இயன்றால் நீங்கள் தியான வயப்பட்டு விட்டீர்கள் என்று பொருள்.

மீண்டும் சொல்கிறேன்... 

மீண்டும் மீண்டும் சொல்கிறேன்... 
தியானத்தையும் கூட நீங்கள் ஒரு குருவின் துணைக் கொண்டே கற்றுக் கொள்ளுங்கள். புத்தக தியானம், தொலைக்காட்சி தியானங்கள் மூலம் உங்களால் முழுமையாக தியானம் கற்க இயலாது.


தியானத்தின் பலன்கள்:

ஓய்வின் வாயிலாக நீங்கள் அளிக்கும் அமைதி உங்கள் உடலுக்கும் மனதிற்கும் ஒரு புத்துணர்ச்சிக் காரணியாக அமைகிறது. தொடர் பயிற்சியின் வாயிலாக உடல், மன நலன்களில் நீங்கள் முன்னேற்றம் காணலாம் *.

தியானம் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. ஒரு முகப் பயிற்சியில் ஈடுபடும் மனமானது புத்திக் கூர்மைக்கு (intelligence) வழி வகுக்கிறது. 

கலைத்துப் போடப்பட்ட துணி மூட்டையில் ஒற்றைக் கைக்குட்டையைத் தேடுவது மிகக் கடினமான விஷயம். நம் மனம் எப்போதும் ஒரு துணிமூட்டை போலவே இருக்கிறது. தியானம் பழகிய மனது அழகாக அலமாரியில் அடுக்கி வைத்த துணிமணிகளாய் உங்கள் சிந்தனை அடுக்குகளை நேர்த்தி செய்யும் வல்லமை பெற்றது.

மனம் ஒழுங்குபட்டால் உடல் ஒழுங்குபடுகிறது.

இப்படியாக தியானத்தின் பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

* என் ஆசிரியர் சொன்னது:
தியானம் ஒரு கவிக்-பிக்ஸ் அல்ல, ஆனால் அது புத்தூர் கட்டு போல. உங்களுக்கு பொறுமை, நிதானம், விடா முயற்சி, தொடர் பயிற்சி இருந்தால் மட்டும்தான் அதன் நிஜப் பலன்களை நீங்கள் அடைய இயலும்.

தியானத்தின் போது நான் என்னவெல்லாம் உணர முடியும்?

சில வருடங்களுக்கு முன்... ஒரு தியானப் பயிற்சி வகுப்பில், பயிற்சி முடிந்ததும் நிகழ்ந்த கேள்வி பதில் பகுதியில்:

மாணவரின் கேள்வி: எனக்கு தியானம் பண்ணும்போது யானை மேலே உட்கார்ந்து பயணம் செய்யறாப்போல இருக்கு...

ஆசிரியர் பதில்: யானை மேலே உட்கார்ந்த மாதிரி தோணினா நல்லது. தோணலைன்னா ரொம்ப நல்லது.

இன்னொருவர் கேள்வி: எனக்கு ஆகாயத்துல பறக்கறாப்போல இருக்கு.

பதில்: ஆகாயத்துல பறக்கறாப்போல இருந்தா நல்லது. அப்படி பறக்கறாப்போல இல்லைன்னா ரொம்ப நல்லது.

கே: எனக்கு தூக்கம் வருது.

ப: தூக்கம் வந்தா நல்லது. வரலைன்னா ரொம்ப நல்லது.

இது கிண்டலுக்காக அந்த ஆசிரியர் தன் மாணவர்களுக்கு சொன்ன பதில்கள். இதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால் தியானத்தில்  ஒவ்வொருவரின் அனுபவமும், ஒவ்வொருமுறை அனுபவமும் வேறுபடும்.என்பதே.

உங்கள் அனுபவம் நோக்கிப் பயணம் செய்ய உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
யோகா / தியானம் - எங்கே கற்கலாம்?


நான் பிராணயாமப் பயிற்சிகளையும் சூன்யத் தியானத்தையும் ஈஷா யோக மையம் மூலம் கற்றேன். மிகவும் ஆற்றல் வாய்ந்த பயிற்சிகள் அவை.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் வாழும் கலைப் பயிற்சிகள் பற்றியும் மிகச் சிறந்த ஆற்றல் மிக்க பயிற்சிகள் எனக் கேட்டறிந்திருக்கிறேன்.

பாபா ராம்தேவ் அவர்களின் பயிற்சிப் பட்டறைகள் சர்வதேச அளவில் பிரபலமானவை.

மறைதிரு.வேதாத்ரி மகரிஷி அவர்களின் மனவளக் கலைப் பயிற்சிகள் மிக்க திறன் வாய்ந்தவை.

இவர்களிடம்தான் கற்கவேண்டும் என்று இல்லை. உங்கள் பகுதியில் யாரேனும் தேர்ந்த யோகா / தியானப் பயிற்சி ஆசிரியர்கள் இருந்தாலும் தேடித் பாருங்கள்.


தொடரின் முந்தைய பதிவுகள் 


.
.
.
Related Posts Plugin for WordPress, Blogger...