Dec 17, 2012

உசுப்பேற்றலும் உபரி வெளிச்ச அடையாளமும்


உசுப்பேற்றுதல் என்பது ஒரு கலை. இதில் ஹீரோயிசம், தாதாயிசம் என எல்லாவற்றையும் சேர்த்து ஒருவன் உருவகப்படுத்தப்படுகிறான். புகழுக்கு மயங்காதார் உண்டோ! சுற்றி இருக்கும் நாலுபேர் நம்மைப் பற்றி ஜே போட்டுக் கொண்டே இருந்தால் கேட்பதற்கு எப்போதும் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அந்த நாலு பேரின் எண்ணம் எல்லாம் பணம் அல்லது புகழாகத்தான் இருக்கும். பொழுதுபோக்காகவும் இருக்கலாம். எத்தனையோ காரணங்கள். அதாவது ஒருவனை மையப்படுத்தி, வெளிச்சத்தில் நிறுத்தி வரும் உபரி வெளிச்சத்தில் தன்னை அடையாளபடுத்திக்கொள்வது அல்லது சம்பாதிப்பது. இத்தகைய சம்பவங்களை நீங்கள் எங்கும் காணலாம். இப்படியான சம்பவத்தின் க்ளைமாக்ஸ் எப்போது ஆன்டி-ஹீரோயிசம் தான். உசுப்பேற்றியவர்கள் ஒதுங்கிக் கொள்ள ஹீரோ அகப்படுவான். இந்தக் கதையைப் பொறுத்தமட்டில் அது டேனி.

இல்லாதவர்கள் - ஜெயகாந்தன்



Dec 15, 2012

சிவாஜி - 3டி’யில்

நண்பர்களுடன் சிவாஜி 3டி பார்க்கப் போயிருந்தேன்.



ஒரு தூக்கக்கலக்கம் நிறைந்த மதியப் பொழுதில் நங்கநல்லூர் வேலன் தியேட்டரில் இந்தப் படத்தை முதல்முறை பார்த்ததாலோ என்னவோ ரஜினி படங்களில் சிவாஜியை சூப்பர் டூப்பர் என்றெல்லாம் சொல்லமாட்டேன். 

நிறைய பேருக்கு அந்த எம்.ஜி.ஆர் ஸீக்வென்ஸ் ரொம்பவும் விசிலடித்து ஆர்ப்பரிக்குமளவிற்குப் பிடித்திருந்தது. எனக்கு என்னவோ அந்த கதாபாத்திரதாரராக ரஜினி வரும்போது உப்புசப்பில்லாமல் க்ளைமாக்ஸை முடித்துவிடுவதாகத் தோன்றுவதுண்டு. ஷங்கரின் முதல்வன் படத்தின் அசத்தல் க்ளைமாக்ஸை நான் ஷங்கருக்கு பெஞ்ச்மார்க்காக வைத்துக் கொள்வது காரணமாயிருக்கலாம்.

நிற்க, சிவாஜி 3டி’க்குத் திரும்புவோம். படத்தில் 3டி வேலைகள் அசத்தலாகச் செய்திருக்கிறார்கள்.

படம் தொடங்கும்போது சூப்பர்ஸ்டார் ர....ஜி....னி.... என்னும் எழுத்துகள் நம்மை நோக்கி எறியப்படுவதில் தொடங்கி, பாடல்களிடையே வரும் பூத்தூவல்கள் நம் முன்சீட்டின்மீது தூவப்படுவது, பலூன்கள் தியேட்டருக்குள்ளேயே பறப்பதான எஃபெக்ட், எறியப்படும் கத்தி ஒன்று சரேலென்று நம் கண்ணைப் பதம் பார்ப்பதாய் பயமுறுத்துவது என்கிற 3டி எஃபெக்டுகளைவிட நாம் ரசிப்பது படத்தின் ரியாலிட்டி ஃபீலிங்.

அதாவது, படம் நம் கண்ணெதிரேயே நடப்பது போன்ற பிரமையை உருவாக்கும் காட்சி உருவாக்கம். படத்தின் காட்சியில் மனிதர்கள், பொருள்கள், கட்டிடங்கள், மரங்கள், மலைகள் என்று யாரெல்லாம் / என்னென்னவெல்லாம் வருகின்றார்களோ / வருகின்றனவோ.... அவையெல்லாம் நாம் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து படமாக்கப்பட்ட போது எந்த தொலைவில் இருந்தனவோ அதே தொலைவில் இருப்பதாய் நம் கண்களுக்குக் காட்சி தருகின்றன. என்னே ஒரு அறிவியல் முன்னேற்றம் இந்த வகை 3டி உருவாக்கம்!

மறுதிரையிடல்தான் என்றாலும், முன்னமே பார்த்த காட்சிகள்தான் என்றாலும்.... படத்தின் பன்ச் டயலாக் காட்சிகளில் தியேட்டரில் பறக்கும் விசில்களும், ரசிகர்களின் ஆர்ப்பரிப்புகளும் சொல்லிமாளாது. வெள்ளிக்கிழமை மதியக் காட்சிக்கு அரங்கம் நிறைந்து காணப்பட்டது.

3டி அசத்தல் வேலைக்காக ஒரு நல்ல தியேட்டரில் படத்தை நிச்சயம் பார்க்கலாம்.

Dec 11, 2012

பாரதி வாரம்

இன்று மகாகவி சுப்ரமணிய பாரதியார் பிறந்த தினம்.



இந்த வாரம் முழுவதும் ஆம்னிபஸ் தளத்தில் பாரதி குறித்த நூல்களைப் பற்றிப் பேசுகிறோம். இந்த இணைப்பில் பதிவுகளை வாசிக்கலாம்.

இன்று நண்பர் கணேஷ் வெங்கட்ராமன் எழுதியிருக்கும் “பாரதியார் கவிதைகள்’ மீதான அவரது பார்வை பாரதியார் பிறந்தநாளான இன்று வெளிவந்து சிறப்பு சேர்த்திருக்கிறது.

நேற்று மதியம் ட்விட்டரில் நண்பர்கள் நடராஜனும் நட்பாஸும் வெளியிட்ட வேண்டுகோளை ஏற்று நேற்றிரவு வீடு திரும்பிய பின் இரவு ஒன்றரை மணிவரை இந்தப் பதிவை எழுதி முடித்து எங்களுக்கு அனுப்பினார். மீண்டும் அதிகாலையில் எழுந்து சில திருத்தங்களையும் செய்து நாங்கள் துயிலெழுமுன் மீண்டும் எங்கள் மின்னஞ்சல் பெட்டியில் அந்தத் திருத்தங்கள் இருக்குமாறு பார்த்துக்கொண்ட அவரது பொறுப்புணர்வில் பாரதி மீதான அவரது ஆழ்ந்த ப்ரேமை எங்களுக்குப் புரிந்தது.

இந்தப் பதிவை வாசித்தால் அந்தப் ப்ரேமை உங்களுக்கும் நிச்சயம் புரியும்


Dec 3, 2012

பாரதிப் பெருவிழா


நூல் உலகம் இணையதளத்திலிருந்து வந்த கடிதம்...


அன்புடையீர் வணக்கம்,

மகாகவி சுப்பிரமணிய பாரதியின் நினைவாக, இன்று டிசம்பர் 2 -ம் நாள் துவங்கி பாரதியின் பிறந்த நாளான டிசம்பர் 11 முடிய, தமிழ் நூல்கள் 5 முதல் 10 சதவித தள்ளுபடி விற்பனையில் எங்கள் இணையத்தில் (நூல் உலகம் http://www.noolulagam.com ) கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

மேலும், வரும் டிசம்பர் 8-ம் நாள், சனிக்கிழமை சென்னை இராஜா அண்ணாமலை மண்டபத்தில் பாரதிப் பெருவிழா காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில் நடைபெறுகிறது. வரும் டிசம்பர் 11 -ம் நாள் பாரதி விழா ஈரோடு கொங்கு கலை அரங்கத்தில் நடை பெறுகிறது என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.

அன்புடன்,
ஜீவா புத்தகாலயம்.




Dec 2, 2012

கானுயிர் வாரமும் ஜெமோ கடிதமும்

வனவிலங்குகள் வாரத்தையொட்டி கடந்த மாதம் ஒரு வாரம் முழுவதும் வனவிலங்குகள் குறித்த புத்தகங்களை ஆம்னிபஸ் தளத்தில் அறிமுகம் செய்தோம். 66A விவகாரத்தில் தமிழ் இணையவுலகம் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்த் நேரம். எனவே சத்தமின்றி , வழக்கமாகச் செய்யும் விளம்பர ஆர்ப்பாட்டங்கள் ஏதுமின்றி நாங்கள் இந்தப் பதிவுகளை எழுதிக் கொண்டிருந்தோம். 

ஐந்தாறு புத்தக அறிமுகங்கள் வந்திருந்தன. அன்று ஜெமோ தளத்தில் “மிருகங்களைப் பற்றி” என்ற பதிவு வந்திருந்தது. அடடே! ஜெமோ’வும் வனவிலங்கு வாரத்திற்கு ஏதோ எழுதியிருக்கிறார் போல என்று பார்த்தால், நம் “ஆம்னிபஸ்” தளத்தின் வனவிலங்கு வாரப் பதிவுகள் பற்றி நான்கு வரிகள் எழுதிவிட்டு பதிவுகளுக்கெல்லாம் இணைப்பு தந்திருந்தார் ஜெமோ.

மகிழ்ச்சியுடன் இந்தக் கடிதம் எழுதினேன்:

அன்புள்ள ஜெ,
ஆம்னிபஸ் தளத்தில் வந்த வனவிலங்கு வாரம் தொடர்பான கட்டுரைகள் குறித்த உங்கள் அறிமுகத்திற்கு மிக்க நன்றி.
நாங்கள் ஆம்னிபஸ் தளத்தில் ‘வனவிலங்கு வாரம்’ கொண்டாடினதைப் பற்றி எங்கள் குழுமம் தவிர்த்து யாரிடமும் பேசவில்லை. உங்கள் பதிவு வருமுன் அதுபற்றி எங்கள் யாருடைய தளத்திலும் அதுபற்றி விளம்பரம் செய்யவும் இல்லை. எனினும் இதனையும் கவனித்துத் தாங்களாகவே தந்த அறிமுகம் மிக்க மகிழ்ச்சியையும் மேலும் நிறைய புத்தகங்கள் பற்றி எழுத வேண்டும் என்ற ஊக்கத்தையும் தருகிறது.
நன்றி கலந்த அன்புடன்,
கிரி ராமசுப்ரமணியன்

ஜெமோ அதற்கு எழுதியிருந்த பதில்:

அன்புள்ள கிரி
தொடர்ச்சியாக ஆம்னிபஸ் தளத்தை வாசித்துவருகிறேன். சிறப்பாக எழுதுகிறார்கள். ஆர்வமும் தொடர் உழைப்பும் கொண்ட முயற்சிகளுக்கு எப்போதுமே மதிப்புண்டு வாழ்த்துக்கள்
ஆம்னிபஸ் இணையதளத்தில் ஒரு பட்டியல் செய்யலாம். அதில் விமர்சிக்கப்பட்டுள்ள நூல்கள், ஆசிரியர்களுக்கு அகரவரிசைப்படி ஒருபட்டியலைக் கொடுத்தால் வரும்காலத்தில் குறிப்புகளை தேடி எடுக்க வசதி. இப்போதே நிறைய கட்டுரைகள் ஆகிவிட்டன
ஜெ

ஜெமோ போன்றோரும் நம் தளத்தைத் தொடர்ந்து வாசிக்கிறார்கள் என்னும் சேதி ஒருபுறம் பெருமகிழ்ச்சியைத் தருகிறது. மறுபுறம் எங்கள் எல்லோருக்கும் பொறுப்பு இன்னமும் கூடுகிறது. 

ஜெமோ குறிப்பிடும் ஆர்வமும் தொடர் உழைப்பும் எங்களிடம் நிலைத்திருக்க வேணும்.

இந்தப் பட்டியல் விஷயத்தை சிரத்தையாகச் செய்யுமாறு ஆம்னிபஸ் அன்பர்கள் முதலிலிருந்தே என்னை ஓட்டிக் கொண்டுள்ளார்கள். நான்தான்  ”தோ தோ” என்கிறேன். ஜெமோ’வும் சொல்லிவிட்டார். இனியாவது செய்தாகவேணும்.

Related Posts Plugin for WordPress, Blogger...