Dec 15, 2012

சிவாஜி - 3டி’யில்

நண்பர்களுடன் சிவாஜி 3டி பார்க்கப் போயிருந்தேன்.



ஒரு தூக்கக்கலக்கம் நிறைந்த மதியப் பொழுதில் நங்கநல்லூர் வேலன் தியேட்டரில் இந்தப் படத்தை முதல்முறை பார்த்ததாலோ என்னவோ ரஜினி படங்களில் சிவாஜியை சூப்பர் டூப்பர் என்றெல்லாம் சொல்லமாட்டேன். 

நிறைய பேருக்கு அந்த எம்.ஜி.ஆர் ஸீக்வென்ஸ் ரொம்பவும் விசிலடித்து ஆர்ப்பரிக்குமளவிற்குப் பிடித்திருந்தது. எனக்கு என்னவோ அந்த கதாபாத்திரதாரராக ரஜினி வரும்போது உப்புசப்பில்லாமல் க்ளைமாக்ஸை முடித்துவிடுவதாகத் தோன்றுவதுண்டு. ஷங்கரின் முதல்வன் படத்தின் அசத்தல் க்ளைமாக்ஸை நான் ஷங்கருக்கு பெஞ்ச்மார்க்காக வைத்துக் கொள்வது காரணமாயிருக்கலாம்.

நிற்க, சிவாஜி 3டி’க்குத் திரும்புவோம். படத்தில் 3டி வேலைகள் அசத்தலாகச் செய்திருக்கிறார்கள்.

படம் தொடங்கும்போது சூப்பர்ஸ்டார் ர....ஜி....னி.... என்னும் எழுத்துகள் நம்மை நோக்கி எறியப்படுவதில் தொடங்கி, பாடல்களிடையே வரும் பூத்தூவல்கள் நம் முன்சீட்டின்மீது தூவப்படுவது, பலூன்கள் தியேட்டருக்குள்ளேயே பறப்பதான எஃபெக்ட், எறியப்படும் கத்தி ஒன்று சரேலென்று நம் கண்ணைப் பதம் பார்ப்பதாய் பயமுறுத்துவது என்கிற 3டி எஃபெக்டுகளைவிட நாம் ரசிப்பது படத்தின் ரியாலிட்டி ஃபீலிங்.

அதாவது, படம் நம் கண்ணெதிரேயே நடப்பது போன்ற பிரமையை உருவாக்கும் காட்சி உருவாக்கம். படத்தின் காட்சியில் மனிதர்கள், பொருள்கள், கட்டிடங்கள், மரங்கள், மலைகள் என்று யாரெல்லாம் / என்னென்னவெல்லாம் வருகின்றார்களோ / வருகின்றனவோ.... அவையெல்லாம் நாம் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து படமாக்கப்பட்ட போது எந்த தொலைவில் இருந்தனவோ அதே தொலைவில் இருப்பதாய் நம் கண்களுக்குக் காட்சி தருகின்றன. என்னே ஒரு அறிவியல் முன்னேற்றம் இந்த வகை 3டி உருவாக்கம்!

மறுதிரையிடல்தான் என்றாலும், முன்னமே பார்த்த காட்சிகள்தான் என்றாலும்.... படத்தின் பன்ச் டயலாக் காட்சிகளில் தியேட்டரில் பறக்கும் விசில்களும், ரசிகர்களின் ஆர்ப்பரிப்புகளும் சொல்லிமாளாது. வெள்ளிக்கிழமை மதியக் காட்சிக்கு அரங்கம் நிறைந்து காணப்பட்டது.

3டி அசத்தல் வேலைக்காக ஒரு நல்ல தியேட்டரில் படத்தை நிச்சயம் பார்க்கலாம்.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...