Apr 23, 2012

ஹாரியும் மேரியும் பின்னே லாரியும்

எங்கள் திருமண வாழ்வின் ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். அதையொட்டி என் முன்னாள் அக்கவுண்ட்ஸ் ஆபீசர் ப்ரேம்குமார் அடிக்கடி சொல்லும் ஒரு கதை இங்கே உங்களுக்காக....ஹாரி - மேரி திருமணம் முடிந்து ஐம்பது வருடங்கள் நிறைந்திருந்தது. தடுக்கி விழுந்தால் விவாகரத்து செய்யும் கலாசாரத்தில் வசிக்கும் அவர்கள் ஒன்றாய் ஐம்பது வருடங்கள் வாழ்ந்தது பெரிதாய்க் கொண்டாடும் விஷயம்தான். ஊரே கூடி வாழ்த்திச் சிறப்பித்து ஒரு விழா எடுத்துக் கொண்டாடியது. உள்ளூர்ப் பத்திரிக்கையிலிருந்து வந்த நிருபர் கேட்டார்...

“இப்படிப்பட்ட அரிதிலும் அரிதான ஒரு வெற்றிகரமான உங்க மண வாழ்வின் ரகசியத்தை சொல்லுங்க ஹாரி.....”

ஹாரி சொல்ல ஆரம்பிச்சாரு...

“எங்க கல்யாணம் ஆகி சந்தோஷமா நாங்க குதிரை பூட்டின சாரட் வண்டியில எங்க தேனிலவுக்குப் புறப்பட்டோம். அது ஒரு மயக்கும் மாலை. மனசுக்கு இனிமையான குளிர். பக்கத்துல மேரி. நான் காதல் மயக்கத்துல மிதந்துக்கிட்டு இருந்தேன். எங்க எதிர்ல காத்திருக்கற அழகான, ரொமாண்டிக்கான எங்களுக்கே எங்களுக்கான காதல் வாழ்க்கையை நினைச்சு மனசு முழுக்க அந்த நினைவை நிரப்பிக்கிட்டு நான் மேரி முகத்தையே பார்த்துக்கிட்டு இருந்தேன்.

நாங்க போய்க்கிட்டு இருந்த வண்டியோட குதிரை பேரு ”லாரி”, அது லேசா மொரண்டு பண்ண ஆரம்பிச்சுது. அந்தக் குதிரை ஆக்சுவலா மேரியோட அப்பா வளர்த்தது. ரோட்டோட ஒரு பக்கமா வண்டியை இழுத்துக்கிட்டுப் போயி ஏடாகூடம் பண்ணத் தொடங்கிச்சு. அப்போ மேரிக்கு கொஞ்சம் கோபம் வந்துட்டது.

“லாரி, உனக்கு முதல் வார்னிங்”, அப்படின்னு சொன்னா. உடனே லாரி அவ பேச்சைக் கேட்டுட்டு ஒழுங்கா ஓட ஆரம்பிச்சான்.

மறுமடி நான் எங்கள் இன்ப நினைவுகள்ல திளைக்க ஆரம்பிச்சேன். இப்போ மேரியும் என் முகத்தையே பாக்கறா. இது ஒரு புது விதமான உணர்வு எங்க ரெண்டு பேருக்கும். எங்க மனசுல அலையடிச்சிக் குலுங்க ஆரம்பிக்குது. வண்டியும் அந்த நேரத்துல திடீர்ன்னு குலுங்குது. பார்த்தா லாரி மறுபடி மொரண்டு பிடிக்கறான். அவனுக்கு ஏதோ மூட் சரியில்லை போல. இப்ப கொஞ்சம் அதிகமாவே மேரி கோபப்பட்டா, 

“லாரி, செகண்ட் வார்னிங் உனக்கு”ன்னு சொன்னா. மறுபடி லாரி அடங்கிட்டான். சரியா ஓட ஆரம்பிச்சான்.

நாங்க எங்க இன்ப நினைவுகள்ல மறுபடி மூழ்க ஆரம்பிச்சோம். மேரி பேச வாய் எடுக்கறா, அவளுக்கு ஏனோ வார்த்தை வரலை.

“சொல்லு மேரி”, அப்படின்னு நான் சொல்ல அவ வெட்கத்துல சொல்ல வந்ததை சொல்லாம என் மார்புல சாயறா. சொர்க்கம்’ன்னா என்னான்னு அந்த வினாடிதான் எனக்குப் புரிஞ்சுது. என் உடல் எல்லாம் அதிர ஆரம்பிச்சுது. இது ஏதோ புது உணர்வுன்னு நான் யோசிக்க, இல்லையில்லை, லாரி மூணாவது தடவை மொரண்டு பண்ணறான்.

இந்த தடவை மேரி என்ன பண்ணினா தெரியுமா? தன் கைப்பையைத் திறந்தா உள்ளே இருந்து துப்பாக்கியை எடுத்து லாரியை ‘டமார்’ன்னு சுட்டுட்டா. லாரி செத்துட்டான்.

எனக்கு திக்குன்னு ஆகிடுச்சி. ஒரு அப்பாவி ஜீவனை இப்படியா மனசாட்சியே இல்லாம கொல்லுவா அப்படின்னு. எனக்கு கோவம் வர,

“என்ன மேரி, சின்ன விஷயம் இதுக்குப் போயி லாரியை கொன்னுட்டியே. உனக்கு என்ன அறிவு இல்லையா?”, அப்படின்னு சொல்றேன்....

அதுக்கு மேரி, “ஹாரி, எனக்கு இப்படியெல்லாம் பேசினா புடிக்காது. உனக்கு முதல் வார்னிங்....”, அப்படிங்கறா...

அதுக்கு அப்புறம் எங்க வாழ்க்கைல வீசினது எல்லாமே தென்றல் மட்டும்தான். 

இதான் எங்க இன்ப வாழ்வின் ரகசியம்.

9 comments:

rathinamuthu said...

திருமண நாள் நல்வாழ்த்துக்கள்! அருமையான பதிவு.

K.Arivukkarasu said...

திருமணநாள் வாழ்த்துகள் ! ஹாரியும் மேரியும் பின்னே லாரியும் கதை அருமை !!

Rathnavel Natarajan said...

எங்கள் மனப்பூர்வ திருமண நாள் வாழ்த்துகள்.

ஆனந்த் ராஜ்.P said...

இப்படிப்பட்ட அரிதிலும் அரிதான ஒரு வெற்றிகரமான உங்க மண வாழ்வின் ரகசியத்தை சொல்லுங்க'ன்னு இன்னும் ஒரு என்பது வருஷம் கழிஞ்சி நாங்களும் உங்களை கேக்கணும்..

இன்னும் அதே இனிமையான அடிமை வாழ்வு தொடர.... அடிமையில் ஒருவனாக வாழ்த்துகிறேன்.. வாத்துகள்.. ச்சீ வாழ்த்துகள் ..!!

chinnapiyan said...

குடும்பமத்தில் விட்டுக்கொடுத்து போவது சாலவும் நன்று.. ஆனால் கட்டுப்பாடு அவசியம்,கணவனோ மனைவியோ யாரிடம் வேண்டுமானாலும் இருக்கலாம்.ஆனா கணவனிடம் இருப்பதே நல்லது. மனைவியின் உணர்ச்சிக்கு மதிப்பும் மரியாதையும் அவசியம் கொடுக்க வேண்டும்.அதே சமயம் பெண் சுதந்திரம் என்று ஓவரா அனுமதித்தால் அது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும். மனைவியின் ஆலோசனை கேட்டுக்கொள்ளலாம்.ஆனால் முடிவு எடுப்பது கணவனாக இருக்க வேண்டும்.அதற்க்கு கணவன் ஒரு நேர்மையானவனாக் இருக்க வேண்டும்.தவறு செய்தால்கூட சமாளிக்க தெரிய வேண்டும்.கடந்த ஐந்து ஆண்டுகள் ஐந்து நிமிடமாய் போயிருக்கும்.இனி வருங்காலம் உங்களுக்கு கூடுதல் பொறுப்பையும் சகிப்புத்தன்மையும் கேட்க்கும். என் 34 வருட திருமண வாழ்வு இனிமையாக, வெற்றியுடன் கழிந்து சஷ்டிஅப்தபூர்த்தியும் நடந்து சீரும் சிறப்புமாய் போய்க்கொண்டிருக்கிரதர்க்கு இதுதான் காரணம். எங்களுக்கு கிடைத்த இனிமையான வாழ்வு உங்களுக்கும் கிடைத்து மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

இனிய திருமண நாள் வாழ்த்துகள்....

natbas said...

மண நாள் வாழ்த்துகள் சார்!

virutcham said...

வீட்டிலே மீனாட்சி ஆட்சியா ?
அப்படியே இருபத்தைந்து, ஐம்பது ... நு அமோகமா செல்ல வாழ்த்துக்கள்

Dr A S Kandhan said...

உங்கள் மணவாழ்க்கை என்றும்
சுகவாழ்வாக வாழ்த்துகின்றேன்!
என்கவிதை ஒன்றை இங்கே குறிப்பது பொருத்தமாய்
இருக்கலாம். .

சுகமான மணவாழ்வு

*சுகமான மணவாழ்வின்
இரகசியம் சொல்கின்றேன்-

என்வாயிற்குள் உன்காதை வை!

துணையானவள் உருவத்தினை
பாதரசக் கண்ணாடியில் பாராதே

காதல்ரசக் கண்ணாடியில் பார்-

குறைகள் குறையத் தெரியும்
நிறைகள் நிறையவே தெரியும்!

*மனைவியின் சமையலுக்கு
நாக்கை நடுவராக்காதே

காதல் மனதிடம் நீதிகேள்-

உணவில் உப்பில்லாவிட்டாலும்
தாம்பத்திய விருந்து சுவைக்கும்!

* மனைவியின் இல்லாத அறிவுதேடி
ஆய்வு செய்யாதே

இருக்கும் மனதில் ஆசைஎண்ணங்களைக்
கண்டுபிடி-

வாழ்க்கைமுறை பேதைத்தனமானாலும்
வாழும்முறை உணர்ச்சி மயமாகும்!

* மாமியார் மருமகள் சண்டையில்
நீதிபதியாகாதே

வழக்குரைஞராய் மாறி இருவருக்குமே வாதிடு; ஒருவரை ஒருவர் அறியாது-

சண்டைநிறுத்தம் சாத்தியப்படாதபோதும்
உறவுகளை ரத்தாகாமல் காப்பாற்று!

சுகமான மணவாழ்வின்
இரகசியம் சொல்கின்றேன்-

என்வாயிற்குள் உன்காதை வை!

Related Posts Plugin for WordPress, Blogger...