Apr 8, 2012

ஜெயமோகனின் சங்க சித்திரங்கள்

சங்க சித்திரங்கள் - ஒரு முன்னோட்டம்


சிறப்புப் பதிவர்: நட்பாஸ்


ழை! 

சங்க இலக்கியங்களின் அடிப்படை அழகியல் அதுவே. அவை மனித உணர்ச்சிகளை இயற்கை மீது ஏற்றிக் காட்டுகின்றன.- அதன்மூலம் இயற்கையின் முடிவற்ற விந்தைகளை மனித உணர்வுகளுக்கும் தந்துவிடுகின்றன. இரு நிலைக் கண்ணாடிகள் ஒன்றையொன்று பிரதிபலித்து முடிவின்மையை உருவாக்குவதைப் போல! - ஜெயமோகன், சங்கச் சித்திரங்கள், பக்கம் 59.


ஜெயமோகன், 
சங்கச் சித்திரங்கள், 
288 பக்கங்கள், 
கவிதா பப்ளிகேஷன் 
டிசம்பர், 2002 பதிப்பு 
விலை ரூ.100

இணையத்தில் இங்கே கிடைக்கும் 

சங்கச் சித்திரங்கள் தொகுதியில் ஜெயமோகன் அறிமுகப்படுத்தும் கவிதைகளில் பெரும்பாலானவை சோகம் மிகுந்தவை, ஜெயமோகனின் வாழ்க்கை நினைவுகள் இவற்றின் சோகத்துடன் இருள் சேர்த்து, அவற்றுக்கு மேலும் வலிய அழுத்தம் கொடுக்கின்றன. இது போதாதென்று சங்க காலக் கவிதையைவிட்டு தமிழ் வெகு தொலைவு விலகிச் செல்கிறது என்ற உண்மை வேறு. இந்த உணர்வுகள் சங்கக் கவிதைகளையே துயரில் தோய்ப்பதாக உள்ளன. 

"ஒரு கவிதையில் இருந்து எவ்வளவு தூரம் முன்னகர முடியும் என்பது பார்ப்பதுதான் சிறப்பான கவிதை வாசிப்பு.... கவிதையின் மர்ம முடிச்சு நம் மனத்தில் மலர் விரிவது போல எப்போது என்று சொல்ல முடியாத ஒரு தருணத்தில் அவிழ்வதே கவிதை அனுபவம் என்பது," என்று எழுதும் ஜெயமோகன் (பக்கம் 23), "படிமம் வாசகனின் கற்பனை மூலமே விரிந்து முழுமை கொள்ள முடியும்" என்கிறார் . என் நண்பர் ஒருவர் சொன்னதுபோல் படிமம் காதலியின் கடைக்கண் வீச்சு. அதற்கு இலக்காகிறவனின் மனதிலேயே அது முளைத்து, கிளை விட்டு, காடாகி, பூத்து மண்ட முடியும். பூமணத்தால் இரவைத் தூக்கமின்றி அடிக்க முடியும்," என்று கவிதையின் இதயமாக படிமங்கள் இருப்பதைச் சுட்டுகிறார் (பக்கம் 51). சங்கச் சித்திரங்களை வாசிப்பது என்பது, சிலைகள் உயிர்பெற்று எழுவதுபோல் படிமங்கள் தம் வியாபகத்தை விரிக்கக் காணும் அனுபவம். ஜெயமோகனின் எழுத்தில் அது பக்கத்துக்குப் பக்கம் நிகழ்கிறது.

இந்தப் புத்தகத்தில் மொத்தம் நாற்பது பாடல்களைப் பேசுகிறார் ஜெயமோகன். ஒவ்வொன்றிலும் எதிர்பாரா படிமங்கள் நம் நினைவைக் கிளருகின்றன - பாடல்கள் தரும் காட்சிக்கு இணையான சித்திரத்தை ஜெயமோகன் தன் அனுபவத்திலிருந்து வரைகிறார். அவற்றின் உணர்வு நம் நினைவுகளை நெகிழ்த்தி, சங்கக் கவிதைக்கு புது வெளிச்சம் தருகிறது. 

நுதிவேல் கொண்டு நுதல்வியர் தொடையாக், கடிய கூறும், வேந்தே; தந்தையும், நெடிய அல்லது, பணிந்துமொழி யலனே; இஃதுஇவர் படிவம்; ஆயின், வைஎயிற்று, அரிமதர் மழைக்கண், அம்மா அரிவை, மரம்படு சிறுதீப் போல, அணங்கா யினள், தான் பிறந்த ஊர்க்கே. - 
- மருதனிள நாகனார் (புறநானூறு - 348)

மறவன் தன் பெண்ணை அரசனுக்கு மணமுடித்துக் கொடுக்க மறுக்கும்போது "அரிமதர் மழைக்கண்" - மழை மேகங்கள் என கறுத்த விழிகள் கொண்ட பெண், "மரம்படு சிறுதீபோல்" ஆகிறாள் அவள் தான் பிறந்த ஊருக்கு. இன்றைய சாதிக் கலவரங்களில் ஒன்றின் பொறியாக இருந்திருக்கக்கூடிய ஒரு காதலர் வேட்டையை நேரில் கண்ட ஜெயமோகனின் அகம் இந்தப் பாடலில் உள்ள மழைக்கண் என்ற பதத்தின் துயரை உணர்கிறது. அவளது கண்ணீரும், அவள் குலத்தை அழிக்கும் நெருப்பும். பெண்ணின் கண்ணீரா நெருப்பானது? அந்த நெருப்பை அணைக்க பெண்கள் அழ வேண்டியது எவ்வளவு இருக்கிறது? இவற்றுக்கு விடையில்லை. ஆனால், "அரிமதர் மழைக்கண் அம்மா அரிவை மரம்படு சிறுதீ போல அணங்கா யினள்தான் பிறந்த ஊர்க்கே" என்று முடியும் பாடல் உயிர்பெற்று விட்டது, இனி மழைக் கண்களின் துயரைக் காணாதிருக்க நாம் முனைந்து நம்மைப் பழக்கப்படுத்திக் கொண்டால்தான் உண்டு.(பெற்ற நெருப்பு). 

  ஞாயிறு காணாத மாண்நிழற் படீஇய
மலைமுதல் சிறுநெறி மணல்மிகத் தாஅய்
தண்மழை தலைய வாகுக – நம் நீத்துச்
சுடர்வாய் நெடுவேல் காளையோடு
மடமா அரிவை போகிய சுரனே
- (குறுந்தொகை 378, கயமனார்).

வெயில் வருத்தக் கூடாது, அவள் பாதையில் நிழல் இருக்கட்டும், அவள் செல்லும் பாதையில் மணல் பரவட்டும், அதைக் மென்மழை குளிர்விக்கட்டும், என்று காதலனோடு ஓடிப் போன தன் பெண்ணை நினைத்து ஒரு தாய் பாடுகிறாள் நாயர் வகுப்பைச் சேர்ந்த தன் சக பணியாளரைக் காதலித்து மணம் புரிந்து கொண்ட ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்ணுடைய தாயின் உணர்வுகளை மனதில் கொண்டு ஜெயமோகன் இந்தப் பாடலை வாசிக்கும்போது உண்மை அதன் அத்தனை உக்கிரத்துடனும் சுடுகிறது (பாலை மழை).

நலத்தகைப் புலத்தி பசை தோய்த்து எடுத்துத்
தலைப்புடைப் போக்கித் தண்கயத்து இட்ட
நீரின் பிரியாப் பரூஉத்திரி கடுக்கும்
பேரிலைப் பகன்றைப் பொதியவிழ் வான்பூ
இன்கடுங் கள்ளின் மணம் இல கமழும்
புன்கண் மாலையும் புலம்பும்
இன்றுகொல் தோழி அவர் சென்ற நாட்டே'
- கழார்க் கீரன் எயிற்றியனார், குறுந்தொகை 330 

"நீரின் பிரியா பரூ உத்திரி: - இங்கே பிரிந்து விரிவது கசக்கிப் பிழிந்து ஆற்று நீரிலிட்ட துணி மட்டுமல்ல, நிகழ்வுகளால் உணர்த்தப்பட்டு மனதை ஆக்கிரமிக்கும் நினைவுகளும்தான். "இன்கடுங் கள்ளின் மணம்" - இனிப்பும் துவர்ப்பும் சேர்ந்த கள்ளின் மணம், பேதலித்த போதை நினைவுகளுக்கு அழகிய, எளிய படிமமாகிறது. இப்படிப்பட்ட இலை அவன் ஊரிலும் இருக்காதா, என்று கேட்கிறாள் தோழியிடம் - ஜெயமோகன் இந்தப் பாடலைத் தன் அந்நாளைய வாசகி அருண்மொழி நங்கையின் தலையில் உதிர்ந்து தங்கிய பொன்னிற கொன்றை மலரைக் கொண்டு வாசிக்கிறார் (கள் மணக்கும் மலர்).

இப்படி நாற்பது பாடல்கள். இவற்றில் ஒரே ஒரு பாடலைக் குறித்த ஜெயமோகனின் சித்திரத்தைக் கொஞ்சம் விரிவாக வாசிப்போம்.

 சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇப்
புனக்கிளி கடியும் பூங்கட் பேதை
தானறிந் தனளோ இலளோ பானாட்
பள்ளி யானையி னுயிர்த்தென்
உள்ளம் பின்னுந் தன்னுழை யதுவே
- கபிலர், குறுந்தொகை 

இந்தப் பாடல் ஏறத்தாழ இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது என்று நினைக்கிறேன். இன்றும் இதை நாம் படித்து ஓரளவுக்கு பொருள் புரிந்து கொள்ள முடிகிறது என்பதே பெரிய விஷயம். பாடலில், பூ, கிளி, பெண், யானை, என் உள்ளம் பின்னும் என்றெல்லாம் வருவதை வைத்து யாரோ ஒரு பெண்ணின் பின்னால் கபிலரின் உள்ளம் செல்கிறது என்று ஊகிக்க முடிகிறது. அந்த அளவுக்கு நாம் இந்தப் பாடலை சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறோம். 

இருந்தாலும் எங்கோ தொலைவில் இருப்பவர்கள் குறித்த துக்கச் செய்தியை நாம் புரிந்து கொள்வதற்கும் ரொம்பவும் நெருக்கமானவர்களின் துக்கத்தை நாம் புரிந்து கொள்வதற்கும் வித்தியாசம் இருக்கிறதில்லையா? அசுவாரசியமான செய்திக்கும் இடி விழுந்த மாதிரியான அதிர்ச்சிக்கும் இருக்கிற வித்தியாசம் இரண்டுக்கும் உண்டு. 

பல பேராலும் பாராட்டப்படும் ஏ.கே. ராமானுஜனின் ஆங்கில மொழிபெயர்ப்பு நம் போன்ற இணைய வாசகர்களுக்கு விஷயத்தை இன்னும் கொஞ்சம் தெளிவாக்குகிறது- 

Does that girl, eyes like flowers,
gathering flowers from pools for her garlands,
driving away the parrots from the millet fields,
does that girl know at all or doesn’t she,
that my heart is still there with her
bellowing sighs
like drowsy midnight elephant? 

இதைவிடத் தீவிரமாக கபிலரின் இந்தப் பாடல் நம் உள்ளத்தின் உள்ளிறங்க வேண்டுமென்றால் உதவி செய்வதற்கு எழுத்தாளர் ஜெயமோகன் இருக்கிறார். அவரது தளத்தில் கடலூர் சீனு இந்த இரு மொழிபெயர்ப்புகளைக் கவலையுடன் பகிர்கிறார்

வனத்தடாகத்தில் பூப்பறித்து மாலைகட்டி அணிந்து,
காட்டில் கிளியோட்டும் பெரிய கண்ணழகி அறியமாட்டாள்
தூங்கும் யானை போலப் பெருமூச்சு விட்டு
என் மனம் அவள் நினைவைத் தொடர்வதை
- கிரி உரை.
சுனைப்பூக்களைப் பறித்து மாலை தொடுத்துத்
தினைப்புனத்தில் கிளி விரட்டுபவளை
என் உள்ளம் ஒரு சாமத்தில் படுத்திருக்கும்
யானை போலப் பெருமூச்சு விட்டுப் பிரிந்த பின்னும்
அவளுடன் வசிப்பதை
அறிவாளோ அறியாளோ! - - சுஜாதா உரை 

கடலூர் சீனு கிரியின் மொழிபெயர்ப்பை "அகத்துடன் அகம் நிகழ்த்தும் பரிமாற்றம்." என்று ஒரு நிகழ்வாகவும் சுஜாதாவின் மொழிபெயர்ப்பை "“உலகத்தீரே இதனால் அறியப்படும் சேதி என்னவென்றால்..." என்ற அறிவிப்பாகவும் வாசிக்கிறார்- பொதுவாகவே சுஜாதாத்தனமாக சாற்றை விட்டுவிட்டு சக்கையை மட்டும் கொண்டு செல்வன மொழிபெயர்ப்புகள் என்று நம்புகிறார் சீனு, அவற்றை வாசிக்க நேரிடும் "தமிழே தெரியாத "வேர்ல்டு இலக்கிய” மேதாவி" என்ன சொல்லக்கூடும், என்பது அவரது அச்சமாக இருக்கிறது (காடுக்கு என்ன கதி நேரிடுமோ என்ற அந்த உத்தம வாசகனின் கவலைக்கு அடிப்படையாக இருந்த அந்த ராஜதுரோக சிந்தனை பாரதிக்குக் கிட்டாத தாந்தேவின் சிகரங்களை நினைவூட்டி பீதியைக் கிளப்பியது என்பது வேறு கதை, இங்கே, இப்போது எழுத்தாளர் ஜெயமோகனின் அதியற்புதமான சங்கச் சித்திரங்களைப் பாராட்டுவது மட்டுமே நம் நோக்கம்). 

நிற்க, எங்கேயோ போய் விட்டேன். சங்கச் சித்திரங்கள் புத்தகத்தில் ஜெயமோகனே நாம் பேசும் பாடலை இப்படி மொழிபெயர்க்கிறார்: 

சுனையில் பூக்கொய்து
மாலைதொடுத்து அணிந்து
தினைப்புனத்தில் கிளியோட்டும்
மலர்விழி அறிவாளா
நள்ளிரவில்
தூங்கும் யானையின்
மூச்சு போல
பெருமூச்சு விட்டபடி
என் மனம்
அவளைப் பின்தொடர்வதை?-(பக்கம் 160) 

ஆங்கிலத்தில், "breathtaking beauty", "she took my breath away" என்றெல்லாம் சொல்வார்கள். ஏறத்தாழ அதே பொருளில்தான் இந்தப் பாடல் இருக்கிறது - எங்கோ இருக்கும் அவளை கபிலரின் நினைவுகள் பெருமூச்சு விட்டபடி தொடர்கின்றன. 

இதன் விரிவான வடிவமாகவே இந்தப் பாடலையும் நீங்கள் கேட்கலாம்:


ஃப்ரெட்டி மெர்க்குரிக்கும் கபிலருக்கும் என்ன சம்பந்தம் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. கபிலர் பாடியதையே ஏறத்தாழ அச்சு அசலாக ஃப்ரெட்டியும் பாடியிருக்கிறார். காலம்தோறும் ஆண்மனம் உலகெங்கும் இப்படித்தான் பெருமூச்சு விட்டபடி பெண்களின் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கிறது போல.

  "...பானாட்
பள்ளி யானையி னுயிர்த்தென்
உள்ளம் பின்னுந் தன்னுழை யதுவே"

என்ற அடிகளின் பொருள் மிக அழகியது. எவ்வளவு யோசித்தாலும் இதுதான் என்று சொல்ல முடியாத தன்மை கொண்டது - ஆளாளுக்குத் தகுந்தபடி வாசித்துக் கொள்கிறார்கள். 

ஏ கே ராமானுஜம், 

 does that girl know at all or doesn’t she,
that my heart is still there with her
bellowing sighs
like drowsy midnight elephant?

என்றும், 

  ...அறியமாட்டாள்
தூங்கும் யானை போலப் பெருமூச்சு விட்டு
என் மனம் அவள் நினைவைத் தொடர்வதை

என்று கிரியும், 

 என் உள்ளம்
ஒரு சாமத்தில் படுத்திருக்கும்
யானை போலப் பெருமூச்சு விட்டுப் பிரிந்த பின்னும்
அவளுடன் வசிப்பதை
அறிவாளோ அறியாளோ!

என்று சுஜாதாவும், .... 

அறிவாளா
நள்ளிரவில்
தூங்கும் யானையின்
மூச்சு போல
பெருமூச்சு விட்டபடி
என் மனம்
அவளைப் பின்தொடர்வதை? 

என்று ஜெயமோகனும் மொழிபெயர்க்கிறார்கள்.
'உரை விளக்கங்கள், இலக்கணங்களை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு, தன் வாழ்க்கை அனுபவங்களையும் கற்பனையையும் மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவன் இக்கவிதைகளை அணுக வேண்டும். கவிதையின் அசல் வரிகளை மட்டுமே எடுத்துக் கொண்டால் போதும். அவற்றுடன் உள்ள துறைக் குறிப்புகள் போன்றவைகூடத் தேவை இல்லை.... சங்க காலக் கவிதைகளை, சமகால நவீன கவிதைகளை எப்படி வாசிக்கிறோமோ அப்படி வாசிப்பதே நல்லது... பண்டைய கவிதைகளில் வெறும் வர்ணனைகளாகவோ அணியலங்காரங்களாகவோ நாம் கண்டு வருபவை உண்மையில் உக்கிரமான படிமங்களாக இருக்கக்கூடும்.....அந்தப் படிமம் அவனையும் மீறிய ஒன்று. சிற்பி செதுக்கியதுதான் தெய்வச் சிலை. ஆனால் தெய்வம் அவனுக்குக் கட்டுப்பட்டதல்ல. அவனும் வணங்கும் பிரம்மாண்டம் அது. ஒரு கனவுக்கு முடிவின்றி அர்த்தம் சொல்லிக் கொண்டே இருக்கலாம்," 
என்று சங்கக கவிதைகளை அணுகுவது எப்படி என்று தன் வாசகனுக்குக் குறிப்புகள் தருகிறார் ஜெயமோகன் (பக்கங்கள் 52, 53). 

"சங்கச் சித்திரங்கள்" புத்தகத்தில், இந்த அணுகுமுறையைக் கொண்டு ஜெயமோகன் தன் வாழ்க்கை அனுபவத்தின் தளத்தில் கற்பனைத் திறனைக் கொண்டு படைக்கும் சித்திரம் மிக அருமையான ஒன்று - வாசகன் ஒரு உயர்ந்த கலைஞனைத் தொடும் இடம் அது. கபிலருக்கு இணையான படைப்பாற்றலை ஜெயமோகனின் வாசிப்பில் நாம் காண்கிறோம். ... 

பானாட்
பள்ளி யானையி னுயிர்த்தென்
உள்ளம் பின்னுந் தன்னுழை யதுவே 

என்ற அடிகளைப் பொதுவாக அனைவரும், 'உன்னைத் தொடரும் என் ஏக்க நினைவுகள்,' என்ற அளவில்தான் புரிந்து கொள்வோம். ஃப்ரெட்டி மெர்க்குரி போன்ற கற்பனாவாதிகள், "என் நினைவுகள் உன்னைத் தொடரும், அவை எப்போதும் உன்னோடிருக்கும், நீ எங்கிருந்தாலும் உன்னைக் கண்டடையும்," என்றெல்லாம் சொல்லலாம்.

ஆனால் ஜெயமோகன் கபிலரின் சங்கக் கவிதையுடன் காட்டும் சமகாலச் சித்திரம், "இருளின் பெருமூச்சு," என்ற ஒன்று. அதில் அவர் தான் மும்பையில் இருந்த நாட்களை நினைவு கூர்கிறார். பிழைப்பு தேடி வந்த இடத்தில், இருக்க இடமின்றி ஒரே அறையில் முகமற்ற பலர். அவர்களுடன் ஜெயமோகனும் ஒரு ஓரத்தில் ஒட்டியிருக்கிறார். 

ஓணத் திருநாள் இரவு. ஒரு தூக்கத்துக்குப்பின் கண்விழிக்கிறார் ஜெயமோகன். அறைக்குள் நிரம்பியிருந்த இருளில் ஒரு வித்தியாசம் தெரிகிறது. இன்னதென்று சொல்ல முடியாத உணர்வுடன் ஜெயமோகனின் இளமை நினைவுகள் அவரை ஆக்கிரமிக்கின்றன.
"தீபாவளிக்கு மழைகுளிர் போல ஓணத்துக்கு இளவெயில். ஊஞ்சல் ஆடும்போது மண்ணில் விரியும் நிழல்கோலங்கள். புத்தாடைகளின் மணம், முன்மதியத்தில் ஒரு தருணத்தில் தேங்காய்பால் முறுகி வெல்லத்துடன் முயங்கி மெல்ல எழும் பிரதமனின் மணம். அம்மா அகப்பையில் அள்ளித் தரும் பிரதமனின் ஈடற்ற சுவை. பிரியத்தின் இனிப்பு ஒரு துளி சொட்டிய இடத்தில் சென்று மொய்க்கின்றன எண்ணக் கூட்டங்கள். திடீரென்று அந்த விஷயம் புரிந்தது. அறையில் அத்தனை பேருமே தூங்காமல் படுத்திருக்கிறார்கள்! மூச்சொலிகள் இல்லாததுதான் அந்த வித்தியாசத்தை உருவாக்கியது. உடலின் அசைவு என் மனநெகிழ்வை வெளிக்காட்டிவிடும் என்று பயந்தவன் போல தசைகளை உறையச் செய்தபடி படுத்திருந்தேன்..."
அங்கே திடீரென்று இருளே உடைந்தது போல், ஒரு பெரிய மிருகத்தின் துயரம் போல் ஒரு பெருமூச்சு எழுகிறது. அதன்பின் அறையை வெவ்வேறு மூலைகளிருந்து எழும் பெருமூச்சுகள் நிறைக்கின்றன.
"அன்று மும்பையில் அந்த மூச்சொலியுடன் நான் இருளில் தூக்கம் கலைந்து எழும் வலிகொண்ட மதயானை ஒன்றையும் உணர்ந்தேன்," 
என்று எழுதுகிறார் ஜெயமோகன். 

உறங்கும் யானையின் உயிர்த்து என்பது அதன் ஆழ் பெருமூச்சு மட்டுமல்ல- அதன் வலி உயிர்த்தெழுகிறது என்றும் வாசிக்கலாம். அப்படிப்பட்ட பெருமூச்சே பெண் நினைவுகளைத் தொடர்கிறது. 

கபிலரின் பாடலுக்கு ஜெயமோகன் தரும் வாசிப்பு உழை என்ற சொல்லில், பெருமூச்சு என்ற பொருளுடன் வலியை இணைத்து அதை ஒரு படிமமாகவே மாற்றுகிறது. உழைப்பு, உழல்தல் போன்ற சொற்களில் உள்ள வலியும் பெருமூச்சும் மறக்க முடியாதவை..
.
.
.

1 comment:

anandrajah said...

நானும் படித்திருக்கிறேன்.. ஆ.வி யில்..!!
தேடிக்கொண்டிருந்தேன்.., கொடுத்து விட்டீர்கள்.
நன்றி.
உங்களது விமர்ச்சனம் அருமை.., பிற எழுத்தாளர்களின் விளக்கத்தையும் பகிர்ந்து கொண்டது உமது "தேடலை" தெளிவுபடுத்துகிறது..!

சொன்னமாதிரியே ஆர்டர் பண்ணிவிட்டேன்..!

மீண்டும் நன்றி பகிர்ந்து கொண்டமைக்கு .

Related Posts Plugin for WordPress, Blogger...