Mar 31, 2011

ஐந்தும் வளையாதது!

சொல்ல வார்த்தைகளற்ற ஒரு அற்புத வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது இந்தியா.

உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக ஐந்தாம் முறையாக பாகிஸ்தானை வென்றிருக்கிறோம். பாகிஸ்தான் பிரதமரை சாட்சிக்கு அழைத்ததுதான் நேற்றைய ஆட்டத்தின் உச்சகட்ட காமெடி அல்லது பரிதாபம்.

இதேபோல 1996 உலகக்கோப்பை காலிறுதியில் பாகிஸ்தானை துவம்சம் செய்துவிட்டு அரையிறுதிக்கு கிழக்காலே கொல்கத்தாவில் இலங்கையைச் சந்தித்தது. அதன் பின் நடந்த கதையை அனைவரும் அறிவோம். இம்முறையும் அதே துவம்சம், அதே பாகிஸ்தான், மேற்காலே மும்பையில் அடுத்ததாக அதே இலங்கை. முடிவு வேறாக இருக்கப் பிரார்த்தனைகள்.

சொல்ல வார்த்தைகளற்ற என சொல்லிவிட்டு இவ்வளவு பேசுவது மகா குற்றம். நேற்றைய ஆட்டத்தின் சில அற்புதத் தருணங்கள் க்ரிக்இன்ஃபோ'வின் மூன்றாவது கண் வழியே...









Mar 30, 2011

தோனி பாய்ஸ்'க்கு வாழ்த்துக்கள்!


இன்று அலுவலகத்தில் ஒரு கான்பரன்ஸ் கால். கடந்த மூன்று மாதங்களில் செயல்பாடுகளில் சிறந்த அணி ஒன்றைத் தேர்ந்தெடுத்து அந்த அணியை "சாம்பியன்" என அறிவித்து மலர்க்கிரீடம் சூட்டுவார்கள். யார் சாம்பியன் என்பதை நாங்கள் பேசி அடுக்கடுக்காய் அடுக்கும் பாயிண்டுகள் தீர்மானிக்கும்.

"நான் இப்படி" என ஒருவர்  சொன்னால் "நான் அப்படி" என இன்னொருவர் சொல்லுவார். பேசிக்கொண்டிருக்கும்போதே "அது எப்படி" என குறுக்குக் கேள்விகள் வந்துவிழும். அத்தனையையும் சமாளித்து பேசிமுடித்துக் கவிழ்த்தால் பின்னொருநாளில் யார் சாம்பியன் என அறிவிப்பைத்தாங்கி மின்னஞ்சல் ஒன்று வரும். சாம்பியன்ஷிப்  வாங்கின அணி எழுந்து நின்று ஆர்ப்பரிக்கும்.

இன்றைக்கு அந்த கான்காலுக்கு முன்னதாக நாங்கள் செய்து கொண்டிருந்த ஆயத்தங்களும், கான்காலின் போது எங்களைச் சூழ்ந்திருந்த அந்த சூழலின் அழுத்தமும் சொல்லி மாளாது.

இது இப்படி இருக்கையில், நம் இந்திய பாகிஸ்தான் அணிகளிடையேயான இன்றைய ஆட்டத்திற்கு இந்த பாரதமே ஆடுகிறது பாருங்கள் ஒரு ஆட்டம். அதிலும் குறிப்பாக நம் மீடியா செய்து கொண்டிருக்கும் நர்த்தனங்கள் பற்றி என்னத்த சொல்ல?


இத்தனை பிரஷர்'களுக்கு இடையே ஆடத் தயாராக இருக்கும் தோனி பாய்ஸ்'க்கு வாழ்த்துக்கள்!




படங்கள் - நன்றி: ஜெய் ஹிந்த்  

Mar 26, 2011

கார்பரேட் கனவுகள் - ஒரு சின்ன போஸ்டர்

காலை எழுந்ததும் செல்போனில் கண்விழிப்பது சமீப வருடங்களாக வழக்கம். இன்றும் அதே.

ஒரு எழுத்தாளனுக்கு (!!) நூற்று சொச்ச மிஸ்கால்களும் அதே சொச்ச குறுஞ்செய்திகளும் அந்த இரவில் வந்திருக்க வேண்டும். ஆனால் நான் மடிப்பாக்கத்தில் வாழ்ந்து தொலைப்பதால் (எத்தனை நாள்தான் இந்தியா, தமிழ்நாடு என்றெல்லாம் டேமேஜ் செய்வது. சொந்த லொகாலிடியையும் டேமேஜ் செய்வோம் தோழர்ஸ்) அப்படி பாக்கியம் ஏதும் எனக்கில்லை.

ஆனால் எண்ணி ரெண்டே ரெண்டு குறுஞ்செய்திகள். இரண்டுமே அலுவலகத் தோழி ஒருவரிடமிருந்து.

முதல் செய்தி - 01:32am ==> "Just started your book"


இரண்டாம் செய்தி - ௦2:26am ==> "Finished reading. Feedback in the morning"

அவ்வளவுதான்......!

Feedback வந்தவுடன் நான் வாங்கிக் கொள்கிறேன். நீங்கள் இன்னமும் புத்தகம்  வாங்கவில்லை என்றால் இங்கே க்ளிக் செய்யுங்கள்.
.
.
.

Mar 25, 2011

யுவராஜ சரிதம்!


இந்திய உலகக் கோப்பைகளில் இருபத்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவை வென்றுள்ளது.

நான்கு உலகக் கோப்பைகளாக இறுதிப்போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலியா காலிறுதியோடு வெளியேறுகிறது.

தொடர்ச்சியாக நான்காவது உலகக்கோப்பை வெல்லும் ஆஸ்திரேலிய கனவு பொய்த்திருக்கிறது.

கேப்டனாக தொடர்ந்து  மூன்றாவது உலகக் கோப்பை வெல்லும் பாண்டிங்கின் கனவும் பொய்த்திருக்கிறது.

1983'க்குப் பின் முதன்முறையாக அரையிறுதி விளையாடும் வாய்ப்பை ஆஸ்திரேலியா தவறவிட்டுள்ளது.

இத்தனை நிகழ்ந்ததும் இன்னமும் நிறையவும்
அத்தனையும் செய்தான் இவன்


....இன்றைய புகைப்படம்....
ஒரு மாறுதலுக்கு டிவிட்டருக்குப் பதிலாக இங்கே!
பின்னூட்ட வெண்பாம்கள் படையுங்கள் தோழர்ஸ்.... 

Mar 21, 2011

புத்தக வெளியீடு - "சுகப்பிரசவம்"

அற்புதமாக நடந்து முடிந்தது விழா! இன்னமும் உள்ளே அலையடித்துக்கொண்டே இருக்கிறது! 

மூன்று மணி சுமாருக்கு விழா அரங்கத்தினுள் நுழைந்தபோது இந்த அரங்கம் இந்த விழாவிற்குப் போதுமா, சரியாக இருக்குமா என சந்தேகம் ஏற்பட்டது.. வரப்போகும் முக்கிய விருந்தினர்கள், வருகையாளர்கள் அனைவரையும் கற்பனைக் கண்ணால் ஓட்டிப் பார்த்தபோது ஏனோ திருப்தியில்லை. மண்டபம் சிறிதோ, மேடை சிறிதோ என்று சந்தேகம். நூற்று ஐம்பது பேர் உட்கார இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. சிறப்பு விருந்தினர்கள் எட்டுபேர் என்பதால் நீளமாக ராம்ப் போல இருந்த மேடையை மாற்றியமைத்து அகலமாக்கினோம். கொஞ்சம் திருப்தியானது.

ஐந்து மணிமுதல் மண்டபம் நிறையத் தொடங்கியது.  சிலம்பொலி ஐயா அவர்கள் முதலில் வந்தார், அடுத்து சொக்கன் அவர்கள், சற்றே இடைவெளி விட்டு லேனா தமிழ்வாணன் அவர்கள், இனியவன் அவர்கள் என ஐந்து பதினைந்திற்கு முன்னதாகவே முக்கிய விருந்தினர்களில் சரி பாதி அரங்கத்தில் இருந்தனர். சரியாக ஐந்தரைக்கு மண்டபம் நிறைந்துவிட்டது.

வருபவர்களுக்கு சமோசா தருவதாகத்தான் முதலில் இருந்தது. ஆனால்..................................... பின்னர் அது ஸ்வீட் காரம் காபி வழங்க என ஏற்பாடானது. கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாவுடன் முந்திரி பக்கோடா. நூற்று ஐம்பது பேரை எதிர்பார்த்தோம். கடைசியில் வந்த நாற்பது பேருக்கு ஸ்வீட்டும் இல்லை காரமும் இல்லை என்றாகும் அளவிற்கு நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் விழாவிற்கு அதிக ரெஸ்பான்ஸ்.

ஆறு மணிக்கு சற்று முன்னே டாக்டர் ஷ்யாமா அவர்களும் வந்து சேர, ஐந்தரை மணியளவில் நிகழ்ச்சி என்று சொல்லியிருந்தாலும் இந்திய காலநேர நிர்ணயங்களைக் கருத்தில் கொண்டு ஆறு மணிக்கு சரியாக நிகழ்ச்சி தொடங்கியது. ஆறு ஐந்திற்கு பி.கே.பி. அவர்களும் வந்து சேர்ந்தார். தவிர்க்க முடியாத காரணங்களால் பாக்யம் ராமசாமி அவர்கள் வர இயலவில்லை.

முதலில் பதிப்பாளர் செங்கை பதிப்பகம் அரு.சோலையப்பன் அவர்களின் வரவேற்புரை அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களுக்கும், புத்தகம் வெளிவரப் பின்னணியில் பணி புரிந்தவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து புத்தகம் வெளியிடப்பட்டது. என் வாழ்வின் முக்கிய மைல் ஸ்டோன்! ஒரு மாபெரும் தருணம்! சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் வெளியிட முதல் பிரதியை திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

இந்தப் புத்தகத்தை வெளியிட்ட செங்கை பதிப்பகத்தின் அரு.சோலையப்பன் அவர்களின் தந்தை "அருணோதயம்" அருணன் அவர்களின் நட்பினைப் பாராட்டி இந்த விழாவில் சிலம்பொலியார் கலந்து கொண்டார்.

நான் ஆதிநாள் தொட்டு திரு பி.கே.பி. அவர்களின் தீவிர வாசகன். எனவே பதிப்பாளரிடம் என் முதல் புத்தகத்தின் முதல் பிரதியை பி.கே.பி. அவர்கள் பெற்றுக் கொண்டால் அது பெருமைக்குரியதாக இருக்கும் என குறிப்பிட்டேன். திரு. அருணன் அவர்கள் வாயிலாக அதுவும் சாத்தியமாயிற்று. (பி.கே.பி.அவர்களின் முதல் புத்தகம் அருணோதயம் வாயிலாகவே வெளியானது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது)

பின்னர் முக்கிய விருந்தினர்கள் புத்தகத்தைப் பாராட்டிப் பேசினார்கள். என்ன பேசினார்கள் என்பதை நான் இங்கே சொன்னால் இது சுயதம்பட்டப் பதிவு ஆகிவிடும். ஆகவே அதனைத் தவிர்க்கிறேன். எனினும், இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், பேசிய எல்லோருமே புத்தகத்தை அட்டை டு அட்டை படித்துவிட்டு வந்திருந்தார்கள். ஒவ்வொருவரும் ஏதேனும் மூன்று பதிவுகள் குறித்து குறிப்பிட்டுச் சொன்னார்கள். எனக்கென அவர்கள் ஒதுக்கிய நேரத்தை நினைத்து மிகவும் பெருமிதமாக இருந்தது. 

சிலம்பொலியார் அவருடைய களம் இதுவல்ல என்றாலும் புத்தகத்திலிருந்து நிறைய மேற்கோள்கள் காட்டிப் பேசினது ஏதோ விழாவிற்கு வருகிறோம், எதையோ பேசுவோம் என்றில்லாது சிறியவிழா எனினும் அதற்கும் தயாராக வந்த நேர்மையை பறைசாற்றியது.  பேசி முடித்தபின் அவர் சபையினில் எனக்கு பொன்னாடை போர்த்தியபோது "நான் சரியாகத்தான் பேசினேனா?" என என்னிடம் கேட்டுக் கொண்டார். ஒரு தமிழ் இலக்கிய சூழலின் ஒரு மாபெரும் ஆளுமை என்னைப் போன்றவனிடம் அதைக் கேட்கும் தேவை இல்லை எனினும் அவரின் அந்தப் பண்பை மிகவும் வியந்தேன்.

பி.கே.பி. அவர்கள் பதினைந்து நிமிடங்கள் பேசினார். நான் மேடையில் அமர்ந்திருக்க.... என் குரு என்னைப் பாராட்டிப் பேசினார். இதுவன்றோ வாழ்வின் தலைசிறந்த தருணம்? தொட்டால் தொடரும், பின்னிரவில் நதியருகில், நாயகி நாளை வருவாள், மன்மதப் புதிர், ஒரு நிஜமான பொய் , டிசம்பர் பூ டீச்சர் என பி.கே.பி. அவர்களின் கதைகளைத் தேடித்தேடிப் படித்த தருணங்களில் நான் நினைத்தும் பார்த்திருக்க மாட்டேன் இப்படி அவர் வாயால் என் படைப்பிற்கு வாழ்த்துக்கள் கிடைக்கும் என. 

சொக்கன் அவர்கள் அவருக்கே உரிய பாணியில் (சற்றே பதட்டத்துடனும் கூட) புத்தகத்தை அறிமுகம் செய்தார். ஒரு அறிமுக எழுத்தாளன் புத்தகத்திற்கு அணிந்துரை எழுதியதுடன் அழைப்பை ஏற்று நேரிலும் அவர் கலந்து கொண்டது நிச்சயம் எனக்கு மிகவும் பெருமை சேர்த்த விஷயம். காலத்திற்கும் அவருடனான நட்பு தொடரவேண்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

டாக்டர் ஷ்யாமா மற்றும் "இலக்கியவீதி" இனியவன் அவர்கள் இருவரும் தங்கள் உடல் நலனைக்கூட கருத்தில் கொள்ளாமல் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தியது மிகவும் மகிழ்ச்சியளித்தது. இவர்கள் இருவருமே அவரவர் சார்ந்த சூழலில் சத்தமில்லாமல் படைத்து வரும் சாதனைகளைப் பட்டியல் இடுதல் சிரமம். 

லேனா அவர்களின் வாழ்த்துரை நிகழ்ச்சியின் ஹைலைட் என்றால் அது மிகையில்லை. தான் பேசவேண்டியதை எல்லாம் பி.கே.பி. அவர்கள் பேசிவிட்டதாக லேனா அவர்கள் குறிப்பிட்டுவிட்டுப் பேசத் துவங்கினாலும் சரியாக முப்பது நிமிடங்கள் என்றால் முப்பது நிமிடங்கள் பேசினார் லேனா. அவருக்காகவே என நிகழ்ச்சியைக் காண வந்தவர்களை அவர் ஏமாற்றவில்லை. எத்தனை நிமிடங்கள் பேசினாலும் கேட்பவர்களை பேச்சால் எப்படிக் கட்டிப்போட வேண்டும் என்பதை அவரிடம் நிச்சயம் கற்க வேண்டும்.

விழாப் பிரபலங்கள் அனைவருமே அவரவர் துறையில் இப்படியப்படி நகர நேரமில்லாமல் உழன்று கொண்டிருப்பவர்கள். இருந்தும் அந்த சனிக்கிழமை மாலைப் பொழுதை என் புத்தக வெளியீட்டிற்கென ஒதுக்கியமைக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் சொல்லக் கடமைப்பட்டவனாகிறேன்.


இறுதியாக நான் ஆற்றிய ஏற்புரை / நன்றியுரை அதனைத் தொடர்ந்த நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது.


நேரில் வந்து விழாவைச் சிறப்பித்த என் அலுவலக நண்பர்கள், குடும்ப நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த புத்தக வெளியீட்டை சிறப்பிக்க வருகை தந்த கோவை திரு.ஜெயராமன்-சரஸ்வதி, திருவனந்தபுரம் திரு.அசோக்-ரமா ஆகியோருக்கும், என் "பி.பீ.ஓ குரு"   பெங்களூரு அர்விந்த் அவர்களுக்கும் என் சிறப்பு நன்றிகள்!

இதுவரை ஆயிரத்தி இருநூறு புத்தகங்கள் விற்றுள்ளன என சொல்ல ஆசைதான், இருந்தாலும் அதற்கு ஒரு ஆயிரம் புத்தகங்கள் குறைவாக விற்றுள்ளதால் அப்படிச் சொல்ல இன்னமும் நாளாகும்.

புத்தகத்தை இணையத்தில் பெற ==> உடுமலை டாட் காம்


விழாவில் நாங்கள் எடுத்த சில புகைப்படங்கள் இங்கே
(புரொபஷனல் கலைஞர் எடுத்த படங்கள் பின்னர்...)

 தமிழ்த்தாய் வாழ்த்து

எழுத்துலக அ'னா ஆ'வன்னா கற்றுத்தந்த என் குருவுக்கு


இந்தப் புத்தகம் எழுதத்தூண்டிய சொக்கனுக்கு 

 புத்தகம் வெளியான அந்த அருமையான தருணம் 

சிலம்பொலியார் இந்தச் சிறுவனுக்கு செய்த சபை மரியாதை


 என் குரு என் எழுத்தைப் பாராட்டி பேசினபோது...

லேனா அவர்களின் அந்த ஹைலைட்டான முப்பது நிமிடங்கள்! 


 பதிப்பாளரிடம் என்னை அறிமுகம் செய்த பழனிக்கு மரியாதை
இனியவன் ஐயாவுடன் ஒரு இனிய தருணம் 

Mar 16, 2011

பி.பீ.ஓ'க்களின் எதிர்காலம்




அவர் ஒரு பிரபல மனிதர். வரும் சனிக்கிழமை நடைபெற உள்ள நம் புத்தக வெளியீட்டு விழாவிற்கு நேரில் அழைக்கச் சென்றிருந்தோம்.

புத்தகத்தைக் கையில் வாங்கிப் பார்த்தவர் இன்டர்வியூக்களில் கேட்பது போல் கேட்ட முதல் கேள்வி, "பி.பீ.ஓ.'க்களோட எதிர்காலம் எப்படிங்க இருக்கு?", நான் எனக்குத் தெரிந்த பதிலைச் சொன்னேன்.

அடுத்த கேள்வி, "உங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கறதுல அல்லது வெளிநாட்டுல இருந்து வேலை இங்க வர்றதுல ஒரு saturation point அப்படின்னு ஏதும் இருக்கா?". இந்த கேள்வி இதுவரை பி.பீ.ஓ. துறைக்கு வெளியே என் வட்டத்தில் யாரும் கேட்டதில்லை. தயாராக என்னிடம் இருந்த பதிலைச் சொன்னேன்.

அவர் விடவில்லை, "வெளிநாட்டுக்காரன் ஒரு தீர்மானம் போடறான் சார், அவுட்சோர்சிங்'ல வேலை கொடுக்கக்கூடாது அப்படின்னு. அப்போ உங்க எதிர்காலம் பத்தி என்ன சொல்லுவீங்க?". அட.... இந்தக் கேள்விக்கும் பதில் உள்ளது. அதையும் சொன்னேன்.

 இவை நேரிடையான தகவல் அறியும் பொருட்டு கேட்கப்படும் கேள்விகள். இது போன்ற கேள்விகள் நம்மை பயமுறுத்தாது. நான் சொன்ன  பதில்களனைத்தும் இந்த நான்கரை ஆண்டுகளில் இந்த பி.பீ.ஓ. உலகத்தில் நான் கற்றவைகள் வாயிலாகச் சொன்னவை.

இவை தவிர்த்து,  "என்ன சார், ஒபாமா உங்களுக்கு வேலை தரமாட்டாராமே?",  என்பதான கேள்விகள். "ஜெர்மனில புதுசா அவுட்சோர்சிங்'ற்கு  எதிரா பில் பாஸ் பண்ணியிருக்காங்க தெரியுமா சார்? இனிமே அங்க இருந்து பிசினஸ் வராது", இது போன்ற சுய தீர்மான தகவல்கள்.

இவ்வகைக் கேள்விகள் / அரைகுறைத் தகவல்கள் இந்தத் துறையில் இருப்பவர்கள், இல்லாதவர்கள் எல்லோருக்கும் இருப்பதே. சரியான தகவலை அல்லது பதிலை, சரியான நபர்கள், சரியான இடத்தில் பகிர்ந்து கொள்ளாததே இங்கே பிரச்னை. வணிக நாளிதழ்களைப் புரட்டி இந்தத் துறையின் போக்கு குறித்து சரிவர புரிந்து கொள்ளும் ஆர்வமும் இங்கே பலருக்கு இல்லை. கேள்விகளை எழுப்பிவிட்டோ அல்லது தகவல்களை அள்ளித் தெளித்துவிட்டோ போய்க்கொண்டே இருக்கவேண்டும். 

இவர்களுக்காக கார்பரேட் கனவுகள் புத்தகத்தில் நான் எழுதின அத்தியாயம்தான் "ஒபாமா மசோதாக்கள்". இந்த அத்தியாயத்தில் அமெரிக்க தேர்தல் நேரத்தில் ஒபாமா தந்த வாக்குறுதிகளைக் குறித்தும் ஆட்சிக்கு வந்தபின் எந்த விதத்தில் அவர் அவுட்சோர்சிங் துறை மீது கை வைத்தார் என்பது குறித்தும் எழுதியிருக்கிறேன். 

அவர்கள் வேலையை இங்கே கைமாற்றிவிட செய்யும் அடங்கள் எதற்காக? இந்த நிகழ்வுகளின் பின்னணியில் இருக்கும் அரசியல், ஒபாமா வருகைக்குப் பின் இந்தத் துறையின் போக்கு இவை குறித்து விவாதிக்கிறது இந்த அத்தியாயம்.

மேலும்.....         

.....மேலும் தகவல்கள் புத்தகத்தில்....!

வரும் சனிக்கிழமையன்று சென்னையில் கார்பரேட் கனவுகள் புத்தக வெளியீட்டு விழா. அங்கு சந்திப்போம் நண்பர்களே!
.
.
.

Mar 14, 2011

புத்தக வெளியீடு அழைப்பு - கார்பரேட் கனவுகள்!



அன்பு நண்பர்களுக்கு, 


நான் எழுதி வெளிவந்துள்ள என் முதல் புத்தகம் "கார்பரேட் கனவுகள்" வெளியீட்டு விழா வரும் பத்தொன்பதாம் தேதி சென்னை ராயப்பேட்டை ஸ்வாகத் மினி ஹாலில் நடைபெற உள்ளதால் தாங்கள் வந்திருந்து விழாவை சிறப்பிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன். 


விழா விபரங்கள்:


நாள்: சனிக்கிழமை, 19/03/2011 மாலை 05:30 மணிக்கு. 
இடம்: ஹோட்டல் ஸ்வாகத் (மினி ஹால்), ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை, சென்னை.
 
புத்தக வெளியீடு: அய்யா சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள்
முதல் பிரதியைப் பெறுபவர்: எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள்.
நூல் அறிமுகம்: எழுத்தாளர் திரு. என்.சொக்கன் அவர்கள்


வாழ்த்து:
மூத்த எழுத்தாளர் திரு.ஜ.ரா.சு அவர்கள் (பாக்யம் ராமசாமி)
மூத்த பதிப்பாளர் அருணோதயம் திரு. அருணன் அவர்கள்
எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் அவர்கள்
டாக்டர் ஷ்யாமா அவர்கள்
"இலக்கியவீதி" இனியவன் அய்யா அவர்கள்.






"கார்பரேட் கனவுகள்" புத்தகம் குறித்து....


BPO -  இந்த மூன்றெழுத்துக்கள் கடந்த ஐந்து முதல் பத்து வருடங்களில் இந்திய வேலைவாய்ப்புச் சந்தையில் உருவாக்கிய மாற்றத்தை ஒரு புரட்சி என்றே சொல்லலாம்.
பி.பீ.ஓ’க்கள் பற்றித் தெரியாதவர்களும் அறிந்து கொள்ளவேண்டிய அடிப்படைத் தகவல்கள் தொடங்கி இங்கே இருக்கும் வேலை முறைகள், சிக்கல்கள், இத்துறை சார்ந்த மனிதர்கள் சந்திக்கும் நடைமுறைச் சவால்கள், ஒபாமா மசோதாக்களால் இந்தத்துறை காணும்  பாதிப்புகள், சக ஊழியர்கள் கொண்டாடும் கொண்டாட்டங்கள், குதூகலங்கள், துயரங்கள், வெற்றி ரகசியங்கள், நான் சந்தித்த சில சுவாரசிய மனிதர்கள், சில சுவாரசியமான சம்பவங்கள் ஆகியவை பற்றிப் பேசுகிறது இப்புத்தகம்.

வெறுமனே கதை சொல்லும் அனுபவக் குறிப்புகளாக மட்டுமில்லாமல் அல்லது வெறுமனே பி.பீ.ஓ. என்றால் என்ன என்னும் வகையில் விளக்கக் குறிப்புப் புத்தகமாக இல்லாமல் இரண்டையும் கலந்து கொடுக்கும் ஒரு முயற்சியே இந்தப் புத்தகம்.


பி.குதங்கள் நண்பர்களிடம் இந்த அழைப்பைப் பகிர்ந்து கொள்ளுமாறும் வேண்டிக் கொள்கிறேன்.


ஸ்வாகத் ஹோட்டலுக்கு மேப் : http://goo.gl/4352X  





.
.
.

Mar 9, 2011

ஸ்வாமி (சிறுகதை)


சச்சினை விழுங்கிவிடுவது போல அந்தப்பெண் பார்த்துக் கொண்டிருந்தாள். வரைந்தவன் ஒரு தேர்ந்த கலைஞன் என எண்ணிக்கொண்டேன். அச்சுஅசல் ஒரு புகைப்படம் போலவே வண்ணங்களைக் குழைத்து சச்சினைத் தீட்டியிருந்தான்.

"ஹவ் மச்?", கேட்டவளிடம் பான்பராக் வாயைத்திறந்தால் அவள் முகத்தில் உமிழ்ந்துவிடும் அபாயம் கருதி ஒரு நிமிடம் என ஒற்றைவிரலைக் காட்டிவிட்டு வாயிலிருந்ததை உமிழத் திரும்பினான் அவன்.  அருகில் "போட்டோ வித் சச்சின் - Rs.50/-" என எழுதியிருந்தது.

"சித்தப்பா, ஒரு போட்டோ?", ஆதித்யா கையைப் பிடித்து இழுத்தான்.

"மேட்ச் ஆரம்பிச்சிடும். மொதல்ல கையில டிக்கெட் வாங்கிடலாம் வா"

கனஜோராய் இருந்தது கூட்டம். பட்டொளிவீசிப் பறந்த மூவர்ணக் கொடிகள், பீப்பீ ஓசைகள், வண்ணக் கலவைகள் தெளித்த முகங்கள், ஏதேதோ கோஷங்கள். எல்லாவற்றிலும் நீந்திக்கொண்டு அந்த சின்னவாசலில் என் பெயர் சொல்லி அலுவலகஅறை செல்லும் வழி கேட்டேன். "ரத்ன வெங்கடேஷ்'னு ஸ்டேடியத்துல இருப்பாரு அவரைப் பாரு, சீட் அரேன்ஜ் பண்ணித் தருவாரு" என பாலு சொல்லியிருந்தான்.

அத்தனை பிரசித்தி பெற்ற அந்த மைதானத்தின் அலுவலகஅறை சொல்லி வைத்தாற்போல் கலைந்து கிடந்த காகிதக் குப்பைகளுக்கு இடையே இருந்தது. அங்கு அமர்ந்திருந்த பெரியவர் ஒருவர் அத்தனை கூச்சல்களுக்கும் இடையே கருமமே கண்ணாக ஏதோ குறுக்கெழுத்துப் போட்டிக் காகிதத்தை நிரப்பிக் கொண்டிருந்தார்.

"ரத்ன வெங்கடேஷ்?"

"ஹரியா?", எனக் கேட்டுவிட்டு என் தலையசைப்புக்கு "கம் கம். அவரு பருதாரே. யு ஸிட்!", என நாற்காலியைக் காட்டிவிட்டு மீண்டும் குறுக்கெழுத்தில் மூழ்கினார். இருவரும் உள்சென்று அவர் முன் அமர்ந்தோம். அந்த அறையை நோட்டம் விடலாம் என்று திரும்பிய முதல் பார்வையிலேயே அவர் இடறினார். கருப்பு வெள்ளைப் படம் கலரில் மாற்றப்பட்டு சட்டத்திற்குள் சிரித்தவாறு ஒளிந்திருந்தார்.

"இவரு...." என நான் இழுக்க, அசுவாரசியமாகத் தலையைத் திருப்பிப் பார்த்து, "ஸ்வாமி", என்றார்.

நான் அவரை நேரில் பார்த்தபோது இன்னும் வயதான ஸ்வாமியாக இருந்தார் அவர். எத்தனை யோசித்தும் நான் நேரில் பார்த்த ஸ்வாமியின் முகம் என் நினைவுக்கு கச்சிதமாக வர மறுத்தது.

ணிந்தர்சிங் பந்தை மார்ட்டின் க்ரோ எதிர்கொண்டிருப்பதாக வர்ணனையாளர் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் நாங்கள் அந்த கேண்டீனுக்குள் நுழைந்து அமர்ந்தோம். கல்லூரிக்கு அது லஞ்ச் நேரம்.  

எங்கள் கல்லூரி காண்டீன் மிகச் சிறியது. காண்டீன் என்று பெயருக்கு ஒன்று இருக்க வேண்டும் என்ற ஏற்பாட்டில் அமைந்த ஒன்று. டிபன், சாப்பாட்டிற்கு என ஒரு மூலை, காபி பிஸ்கட்டுகளை விற்க ஒன்று, கொஞ்சம் கேக் வகைகள், நொறுக்குப் பண்டங்கள் என ஒரு மூலை. ஆயிரத்து சொச்ச பேர் படிக்கும் அங்கே இருபதுக்கு இருபதில் சின்னதாய் பத்து பன்னிரண்டு பேர் மட்டும் அமர ஸ்டூல்கள் போட்டு மற்றவர்கள் இடுக்கி நின்றுகொண்டோ அல்லது வெளியில் நின்றோ பசியாற என அமைந்திருந்தது.

அந்த சல்வார் பெண்ணின் முகத்தில் கிட்டத்தட்ட தன் முகம் புதைத்துப் பேசிக்கொண்டிருந்த அந்த ஜீன்ஸ் பையன் அங்கிருந்த மற்ற யாருக்கும் கேட்காது என்ற நினைப்பில் கிசுகிசுத்துக் கொண்டிருந்தது அங்கிருந்த இரைச்சல்களையும் தாண்டி எல்லோருக்கும் கேட்டது.

எனக்கும் ஸ்ரீவத்சனுக்கும் அரிதாகவே கல்லூரி கேண்டீனைப் பயன்படுத்தும் வழக்கம் இருந்தது. கல்லூரியை விட்டு வெளியே வந்தால் அந்த மல்லேஸ்வரத்தில் நல்ல சைவ சாப்பாட்டைத் தேடி அலையும் அவசியம் இல்லாமல் தடுக்கி விழுந்தால் ஒரு அய்யர் மெஸ் கிடைக்கும். மாம்பலம் அய்யர் ஒருவர் நடத்தி வந்த ஹோட்டல்தான் எப்போதும் எங்கள் அன்னசாந்தி நிலையம்.  அந்த ஹோட்டலை ஒட்டிய சந்து ஒன்றிலேயே ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து நாங்கள் இருவரும் தங்கியிருந்தோம். 


"ஏனு பேக்கு?",  கேட்ட ஸ்ரீவத்சனை இரண்டு நிமிடங்கள் வெறுமையாக ஒரு இதழ் விரித்த புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார் அந்தப் பெரியவர். அந்தப் புன்னகைக்குப் பின்னால் என்ன அர்த்தம் என யூகிக்க இயலவில்லை. அங்கே அந்தக் கல்லூரியின் எல்லாப் பகுதிகளிலும் அவரைப் பார்க்கலாம். எப்போதும் ஏதோ நடை நடப்பதையே தவம் போலச் செய்து கொண்டிருப்பார். விடுவிடுவென ஒரு குழந்தையை ஒத்த நடை. நடப்பதைத் தவிர வேறெந்த செயல்களிலும் அவர் தீவிரம் காட்டி யாரும் பார்த்ததில்லை.

வயது சுமார் எண்பதை நெருங்கியிருக்கலாம் போலத் தோற்றம். நெடுநெடு உயரம், மாநிறம், நாயகன் படத்தில் வரும் வயதான கமல்ஹாசன் போல வெளுத்தும் கறுத்தும் தூக்கி வாரப்பட்ட தலைமுடி, எப்போதும் ஏதோ பரபரப்பாக இருப்பதுபோல் எங்கும் ஒரு பார்வை, கால்சட்டை எந்த நிறத்தில் அணிந்தாலும் அதற்கு எப்போதும் வெள்ளை மேல்சட்டை, கையில் ஏதோ ஒரு ஒற்றைப் புத்தகம், பாக்கெட்டில் ஒரு ஹீரோ பேனா. இதுதான் அவர்.

மிகவும் அபூர்வமாகவே அவர் கையிலிருந்து பணம் தந்து சாப்பிடுவார். பெரும்பாலான நேரங்களில் அருகில் வந்து அமர்ந்தால் அவருக்கும் சேர்த்து ஆர்டர் செய்வதை மாணவர்கள் ஒரு வழக்கமாகவே வைத்திருந்தார்கள்.

"பாப்கார்ன்", என்று ஸ்ரீவத்சன் கைகளில் இருந்த பொட்டலத்தைச் சுட்டிக் காட்டினார்.  பற்கள் இருக்கின்றனவா என சோதிப்பது போல அவர் வாயை உற்று நோக்கினான் ஸ்ரீ. அதைப் புரிந்து கொண்டவர் போல, "ஐ ஹாவ் ஆல் மை டீத். ஆல் மை தர்ட்டி-டூ. பட் ஆல் டூப்ளிகேட்", என கெக்கலித்துச் சிரித்தார்.

"கொடுதியா?"

ஒரு பேப்பர் தட்டை அவர் பக்கம் நகர்த்தி அதில் மீதம் வைத்திருந்த பாப்கார்னை கொட்டிவிட்டு டீ வாங்க எழுந்து சென்றான் ஸ்ரீ. குழந்தையின் ஆர்வத்தோடு பாப்கார்னை நிதானமாக ரசித்துத் தின்றார் அவர். தின்று கொண்டே ரேடியோ வர்ணனையை ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். பக்கவாட்டில் அமர்ந்திருந்த ஒருவனிடம், "மேட்ச் எங்க நடக்குது தெரியுமா?", என்றார் கன்னடத்தில்.

"நம்ம ஊர்லதான்", நான் சொன்னேன்.

"ஹெசரு ஹேளு"

"ஹரி.... ஹரிராம் "

"நோ..நோ... நின்ன ஹெசரில்லா, ஸ்டேடியம் ஹெசரு ஹேளு", டீ வடையுடன் ஸ்ரீ வந்து அமர்ந்தான். கொஞ்சம் யோசித்துவிட்டு "ஐ டோன்ட்  ரிமெம்பர்", என்றேன்.

"ஓகே", என்றுவிட்டு மீண்டும் வர்ணனையில் மூழ்கினார். ஸ்ரீயை நோக்கி "டூ யு ஹாவ் மனி?", என்றார்.  என்னையும் நோக்கி ஒரு ஆர்வமான கேள்வியுடனான ஒரு பார்வை. ஒருவர் முகத்தை ஒருவர் மாற்றிமாற்றிப் பார்த்துக் கொண்ட எங்கள் அமைதியைப் பார்த்து, "தமிழா?", என்றார்.

"ம்ம்"

"பணம் கேக்க மாட்டேன். கையில இருக்கா சொல்லு"

"இருக்கு. நூறு ரூபாய்"

"நீ பைசாக்காரன். சேர்த்து வெச்சுக்கோ. வயசானா ஹெல்ப் பண்ணும்", என்னைப் பார்த்து, "என்ன படிக்கறீங்க?" எனக் கேட்டார்.

"காமர்ஸ்"

"அது மட்டும் போதாது இப்போ. மேலே மாஸ்டர்ஸ் பண்ணனும்"

"நான் சி.ஏ. சேர்த்து படிச்சிக்கிட்டு இருக்கேன்"

"வெரிகுட்! மெட்ராஸா?"

"இவரு மெட்ராஸ், நான் விழுப்புரம்", என்றேன். "இவரு" என நான் சொன்னபோது என்னையறியாமல் அதில் கன்னட பதம் புகுந்தது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. விழுப்புரம் என்று சொன்னேனே தவிர உளுந்தூர்பேட்டை தாண்டி உள்ளே கிராமம் எனக்கு. கார்ப்பரேட் கம்பெனிகள் நுழைந்திராத தூய மனித விவசாயம், சுமாரான போகம் என கிராமத்து வாழ்க்கை. எங்கள் குடும்பத்தில் பட்டம் படிக்கவென ஊரைவிட்டு வெளியே வந்த முதல்ஆள் நான். உளுந்தூர்பேட்டையை அவர் அறிவாரா என நான் அறியேன். விழுப்புரமே அவருக்குத் தெரியுமா என்று எனக்கு சந்தேகம். பாப்கார்னைத்  தின்று முடித்து எழுந்து கையுயர்த்தி ஒரு சலாம் வைத்துவிட்டு போய்விட்டார்.

"என்னவோ போ", என்றான் ஸ்ரீவத்சன்.

"யாருடா அவரு? இங்க எதுவும் வேலை செய்யறா மாதிரி தெரியலை. கரெஸ்பாண்டன்ட்டுக்கு தெரிஞ்சவரோ?"

"ரொம்பவே தெரிஞ்சவரு"

ஸ்ரீ வாயைத் திறக்க எத்தனித்தபோது கேண்டீனை ஒரு சுற்று சுற்றிவிட்டு மீண்டும் எங்கள் அருகிலேயே வந்து அமர்ந்து கொண்டார் அவர். எங்கள் பக்கம் திரும்பியும் பார்க்கவில்லை. ரேடியோவில் கதறிக் கொண்டிருந்த கிரிக்கெட் வர்ணனையை மீண்டும் கவனமாகக் கேட்க முயன்று கொண்டிருந்தார்.

என் பக்கம் திடீரென திரும்பி  "மை நேம் இஸ் ஸ்வாமி, அது தெரியுமா?", நான் உதடு பிதுக்கி இல்லை என்றேன். அவர் ஆச்சர்யம் அடைந்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை. "இந்த காலேஜ் முழுக்க எல்லாரும் பேசிக்கற என் கஷ்டம் பத்தின கற்பனைக் கதை பத்தி தெரியுமா உனக்கு?"

"இல்லை. நான் கொஞ்சம் புதுசு இந்த காலேஜுக்கு. நடுவுலதான் வந்து சேர்ந்தேன்"

"யு வேர் ஆஸ்கிங் அபவுட் மி டு யுவர் ஃபிரெண்ட். எல்லோரும் என் குடும்பம் பத்தி தப்பா சொல்லுவாங்க. என் மகன், மனைவி உட்பட எல்லோரும் என் அசெட் எல்லாத்தையும் என்கிட்ட இருந்து எழுதி வாங்கிட்டு என்னை கண்டுக்கறது இல்லைன்னு சொல்லுவாங்க. டு யு தின்க் அயம் மேட் டு டூ ஆல் தட்? டோன்ட் பிலீவ் இட்", தெள்ளத் தெளிவாகப் பேசினார். அவர் ஒரு மனநிலை தவறிய ஆசாமி என இதுவரை நினைத்திருந்தேன்.

"நீங்க பேசிக்கறதை விட அதிக கஷ்டம் என் வாழ்க்கைல இருக்கு. ஆனா நீங்க பேசிக்கற கஷ்டம் எதுவும் என் வாழ்க்கைல இல்லை. நான் உங்களோட எல்லாம் ஜோவியலா இருக்க உங்களோட சாப்பிடறேன். அவ்வளவுதான். ஓகே யங் மென்? உங்க நேரத்தை நான் வீணடிக்க விரும்பலை. பாக்கலாம்.", எழுந்துவிட்டார்.

அவர் நகர்ந்துவிட்டதை உறுதி செய்து கொண்டு, "யார்றா அவரு?", மீண்டும் நான்.

"இந்த காலேஜோட ஸ்தாபகர்கள்ல ஒருத்தர்"

"ஸ்தாபகர்?"

"ஃபவுண்டர்"

"அடக்கடவுளே! அப்புறம் எதுக்கு இப்படி திரியறாரு?"

"விதி! அதான் சொன்னாரே. தான் படாத கஷ்டம், படற கஷ்டம்னு எல்லாம். உண்மைய ஒத்துக்க அவருக்கு வெக்கம். அதனால ஏதோ சொல்லிட்டுப் போறாரு. நிஜமாவே அவர் வீட்டுல எல்லோரும், அவர் ப்ரெண்ட்ஸ், அவரை உபயோகப்படுத்திக்கிட்ட இந்த மானம்கெட்ட சொசைட்டி எல்லாமே இப்போ அவரை கைவிட்டுடுச்சி அப்படிங்கறதுதான் நிஜம். அவர்கிட்ட இப்போ ஒண்ணுமில்லை. அவர் சாப்பாட்டுக்குக் கூட கஷ்டப்படறாருன்னு சொல்றாங்க. இங்க காலேஜ்ல அவர் நடந்துக்கற முறையை பார்த்தா அதை நம்பாம இருக்க முடியலை. இருந்தாலும் எவ்வளவு தூரம் உண்மைனும்  தெரியலை."

"கொடுமைடா"

"டைம் கிடைச்சா நம்ம காலேஜ் லைப்ரரில சில்வர் ஜுபிலி சோவனிர், பழைய ஜர்னல் எல்லாம் படிச்சிப்பாரு. இவர் எழுதின ஆர்ட்டிகிள்ஸ், இவரைப் பத்தி மத்தவங்க எழுதின ஆர்ட்டிகிள்ஸ் நிறைய இருக்கு", ஸ்ரீ ஒரு புத்தகப்பித்து குடும்பத்தைச் சேர்ந்தவன். சென்னையில் அவன் வீட்டிற்குச் சென்றால் ஏதேனும் புத்தகத்தைக் கையில் திணிப்பார்கள் அல்லது நம் கையில் ஏதும் புத்தகம் இருந்தால் பிடுங்கிக் கொள்வார்கள்.

"இந்த ஸ்டேட்டுக்கு ஒரு கிரிக்கெட் அசோசியேஷன் அமைஞ்சதுல முக்கிய பங்கு வகிச்ச அவருக்கு இப்படி ஒரு கஷ்டம்", என்றான் ஸ்ரீ.

"ம்ம்... விட்டா இந்திய கிரிக்கெட் அசோசியேஷன் அமைஞ்சதே அவராலதான்னு சொல்லுவே போலிருக்கு??"

"அவ்ளோ தூரம் சொல்ல மாட்டேன். இன்னும் ஒரு முக்கியமான விஷயம் இருக்கு"

"என்ன?"

"இந்த ஊரு கிரிக்கெட் ஸ்டேடியமே அதை கட்டிமுடிக்க உறுதுணையா இருந்த அவர் பேர்லதான் இருக்கு"

"அட பகவானே, அந்த ஸ்வாமி இவர்தானா?"

"சாட்சாத்"


"ப்புறம் அவர் என்ன ஆனார் சித்தப்பா?"

மைதானத்தில் தோனி - யுவராஜ் ஜோடி அந்த ஒருநாள் ஆட்டத்தை டெஸ்ட் கணக்காக சர்வ நிதானமாக ஆடிக் கொண்டிருந்தது.

"என்ன ஆனாரு. அப்புறம் கொஞ்ச நாள் நான் அவரை அதே மாதிரி எங்க காலேஜ்ல பாத்தேன். அப்புறம் ஒரு ரெண்டு மூணு வருஷம் அவர் காலேஜ் பக்கமே வரலை. அப்புறம் ஒரு நாள் அவர் இறந்த சேதி வந்தது. ஒரு சவுத் ஆப்ரிக்கா - இந்தியா கிரிக்கெட் மேட்சுக்கு முன்னால ஒரு ரெண்டு நிமிஷம் இந்திய கிரிக்கெட் அணியினர் அவருக்கு மவுன அஞ்சலி செலுத்தினாங்க. தட்ஸ் இட்"

"அவ்வளவு பெரிய மனுஷனுக்கு அவ்ளோதான் மரியாதையா?"

"சொல்ல விட்டுட்டேனே, எங்க காலேஜ் ரெண்டு நாள் லீவ் விட்டாங்க"

Mar 4, 2011

இரு கவிதைகள்



வலி பொறு

திராவக வீச்சத்தொடே
இந்த இன்னொருவனும்.
ஆதிநாள் வாசம் இன்றும்
நெஞ்சில் எழும்ப
சொல்லிக்கொள்ளாமல்
கண்ணிலே நீர்
வலிபொறுக்கச் சொல்லும்
இந்தப் பொறுக்கியிடம்
என் அசட்டுச் சிரிப்பினூடே
எப்படிக் கேட்பேன்
எந்த வலியை என?



எலக்கிய எளவல்...


கவிதை வருமா?
வாசிக்க வரும்
கதை?
அதுவும் வாசிக்க மட்டும்...
கட்டுரை எழுத?
ஏதோ சுமாரா...
எழுத்தாளனா நீ?
பின்ன?
மூணும் சரியா வர்லியே?
திட்ட வருமண்ணே?
விமர்சனம் சொல்றியா?
திட்ட... திட்டறதை சொன்னேன்.
அட எலக்கியம்... உள்ள வா தம்பி!

Mar 3, 2011

உலகக்கோப்பை - அதிர்ச்சி வைத்தியம் ஆரம்பம்!

நாம் எல்லோரும் ஆவலாக எதிர்நோக்கியிருந்த அப்செட் ரவுண்ட் ஆரம்பமாகியிருக்கிறது!

ஒவ்வொரு உலகக்கோப்பையிலும் இது போன்ற சின்ன அணிகள் ஜாம்பவான் அணிகளை வீழ்த்துவது சகஜம் மற்றும் இது காலம்காலமாக நிகழ்ந்துவரும் சம்பிரதாயம் (!) எனலாம். சென்ற உலகக்கோப்பையில் இந்திய, பாகிஸ்தான் அணிகளை முதல் ரவுண்டிலேயே வெளியேற்றிய புண்ணியம் இதுபோன்ற அதிர்ச்சி வைத்தியங்கள் தந்த குட்டி அணிகளைச் சேரும்.

கெவின் ஓ'பிரெயின் ஆடிய ருத்ரதாண்டவ ஆட்டத்தைக் கண்டவர்கள் புண்ணியம் செய்தவர்கள். உலகக் கோப்பையின் அதிவேக சதம் அடித்த (50 பந்துகளில் சதம்) கெவினின் ஆட்டம் கிரிக்கெட் உள்ளவரை மறக்க இயலாதது. கெவினுக்கு அடுத்து குறிப்பிடத் தக்கவர் ஆல்ரவுண்ட் அசத்திய பண்ணிய மூனி. அவர் சாய்த்த நான்கு விக்கெட்டுகள் மற்றும் கடைசி கட்டத்தில் அவர் குவித்த முப்பத்து மூன்று ரன்கள் அயர்லாந்து ஆட்டத்தின் அதிமுக்கிய அம்சம். மூனிக்கு இணையாக பாராட்டப் படவேண்டியவர் ஆறாம் விக்கெட்டுக்கு கெவினுடன் சேர்ந்து நூற்று அறுபது ரன்கள் சேர்த்த க்யூசாக். ஆக மொத்தத்தில் ஒரு அற்புத விருந்து படைத்தனர் அயர்லாந்து அணியினர்.

இரண்டு அருமையான 300+ சேஸ்'களை விருந்துபடைத்து பெங்களூரு மைதானம் இந்த உலகக் கோப்பைக்கு விறுவிறுப்பு கூட்டியிருக்கிறது!    

மேலும் சுவைகள் பலவற்றை எதிர்நோக்குவோம்.









படங்கள் நன்றி: க்ரிக்இன்போ
.
.
.

Mar 1, 2011

பட்ஜெட் துண்டும் பிரணாப் யோசனையும்



இந்த நிதிப் பற்றாக்குறை என்ன பண்ணினாலும் ஒழிக்க முடியாத விஷயமா இருக்கே, என்ன பண்ணலாம்?

அரே.... என்னய்யா இதையெல்லாம் என்னைக் கேட்டுக்கிட்டு... இங்க வா ஒரு ஐடியா சொல்லறேன்...

அட... இது எப்படி எனக்குத் தோணாம போச்சு! வாங்க வாங்க...உடனே திஹாருக்குப் போயி அவர்ட்ட பேசிட்டு வந்துடலாம். அப்படியே பட்ஜெட் அறிக்கைலையும் இதை சேர்த்துடலாம் இல்ல? "இந்தியா அ.ராசாவிடம் நிதி உதவிக் கோரிக்கை விடுக்கும்" - கேப்ஷன் கரெக்டா இருக்கா?

சரியான வெவரம் கெட்டத் தனமா இருக்கு! இதையெல்லாம் வெளிப்படையாவா பண்ணுவாங்க! போகும்போது சொல்லாம போன பணம் வரும்போதும் சொல்லிக்காமதான்யா வரணும்.

அப்ப சரிங்க! அப்படியே கமுக்கமா பண்ணிப்புடறேன்!


ராமு: ஆஹா! நம்ம அரசியல்வாதிங்கதான் எவ்ளோ நல்லவங்களா இருக்காங்க? அ.ராசா மத்திய அரசுக்கு நிதியுதவி பண்றாராமே?

சோமு: தூங்காத மேன்! கனவு காண்றத நிறுத்து. நம்ம அரசியல்வியாதிங்க என்னிக்கி திருந்தி இருக்காங்க. எந்திரிச்சி மூஞ்சி கழுவிக்கிட்டு வா!
.
.
.
Related Posts Plugin for WordPress, Blogger...