Apr 30, 2010

எம்.எஸ். - "காற்றினிலே வரும் கீதம்"



காற்றினிலே வரும் கீதம்:

கலையுலக சாம்ராஜ்யத்தில் சிறந்து விளங்கிய கல்கி அவர்கள், எம்.எஸ்.சுப்புலட்சுமி, இசையமைப்பாளர் எஸ்.வி.வெங்கட்ராமன் இவர்களின் சங்கமத்தில் வெளிவந்த இப்பாடலைப் பற்றி எழுத அடியேனுக்கு அத்தனை ஞானமில்லை. எனினும் இப்பாடல் குறித்த என் ரசனையை, வியப்பை இங்கு பதிவு செய்கிறேன்.


நெஞ்சினிலே...
நெஞ்சினில் இன்பக் கனலை எழுப்பி
நினைவழிக்கும் கீதம்


ஆஹா....என்ன வரிகள். இந்தப் பாடலை எழுதிய கல்கி திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு அப்போதே தெரிந்திருக்கிறது. இந்தப் பாடல் காலங்களைக் கடந்து ஒலிக்கப்போகும் அற்புதப் பாடலென்று. கேட்கையில் நம் நினைவுகள் அனைத்தையும் மறக்கடித்து இப்பாடலில் அமிழ்த்தும் கீதம் அல்லவா இது.


எம்.எஸ். அவர்களால் எப்படி இசையுலகில் கொடிகட்டிப் பறக்க இயன்றது என்பதற்கு இந்த ஒரு பாடல் அழகான சான்று. 

காற்றினிலே........என அவர் பாடலைத் துவங்குகையிலேயே நமக்கு மூளையில் சுரப்பிகள் உசுப்பப்பட்டு ஒரு போதை கூடிய மயக்கம் நேர்கிறது. எழுத்தாளர் சுஜாதா அவர்கள் இருந்திருந்தால் இப்பாடலைக் கேட்கையில் நமக்கு நேரும் மயக்க நிலைக்கான அறிவியற்கூறு என்னவென்று சொல்லியிருப்பார்.

இந்தப் பாடல் சிந்துபைரவியா (ரி1 ஸ்வர ஓசை இப்பாடலில் இல்லை), நாட்டைபைரவியா (த2  ஓசையும் இல்லை) அல்லது ரதிபதிப்ரியாவா (ஆனால் முதல் வரியில் அதற்கான அடையாளங்கள் ஏதுமில்லை) என்னும் விவாதங்கள் காலகாலமாய் நிகழ்ந்து வருகின்றன. எப்படியாயினும் ராகத்தின் பெயர் குறித்த அவசியம் இசையை ரசிக்க நமக்குத் தேவைப்படுவதில்லை.


மூன்று வரிகளில் எழுதப்படும் ஹைக்கூ வடிவக் கவிதையை இருபது வரிகளில் சொல்கிறார் கல்கி. இந்த கீதம் வேறொன்றுமல்ல நம் வேணுகோபாலனின் வேய்ங்குழல் கீதம்தான் என்று பாடலின் கடைசி வரிகளில் மெலிதாய் அவிழ்கிறது முடிச்சு.

நீல நிறத்து பாலகன் ஒருவன்
குழல் ஊதி நின்றான்
காலமெல்லாம்
காலமெல்லாம் அவன் காதலை எண்ணி
உருகுமோ என் உள்ளம்

கண்கள் பனிக்கின்றன. உருகியோடிக் கொண்டேயிருக்கிறது நம் உள்ளம்!







Apr 28, 2010

சுறா - முன்னோட்டமும் என்னோட்டமும்

முன் குறிப்பு: எழுத்துலக ஜம்பாவான் (!!!) சாறு (ஸ்பெல்லிங் கரெக்டா?) நிவேதிதாவிற்கும் எனக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை, நானும் அவரும் முன்னிலை விஜய் ரசிகர்கள் என்பதுதான். 





நான் எழுதவே கூடாது என எதை நினைக்கிறேனோ, அதைத்தான் எழுதி முடிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறேன்.


இந்தப் பதிவை எழுத என்னைத் தள்ளிய விஷயங்கள் இரண்டு. முதல் விஷயத்தைப் பற்றி கடைசியில் சொல்கிறேன். முதலில் இரண்டாம் விஷயத்தைப் பார்ப்போம்.


விஷயம் 2 :

வரும் சனிக்கிழமை சுறா படம் காலைக்காட்சிக்கு பதிவு செய்திருக்கிறேன். தெரியாத்தனமாய் பேஸ்புக்கில் இதுபற்றி ஒரு அப்டேட் கொடுத்திருந்தேன் இப்படி....


"ஆண்டவன் மீது பாரத்தை போட்டுவிட்டு சுறா படத்திற்கு டிக்கெட் பதிவு செய்திருக்கிறேன். இரண்டாம் நாள் என் அக்கா மகளை அழைத்துச் செல்கிறேன்"

இதற்கு வந்த பதிலடிகளைப் பாருங்கள்:

ர.பாஸ்கர் .: ஆனாலும் உனக்கு தைரியம் ஜாஸ்திதான். தியேட்டர்ல சுறா பாக்குற ரேஞ்சுக்கு வந்துட்டியா? கடவுள் உன்னை காப்பாத்தட்டும்.


சங்கரன்: ரெண்டாவது நாள் படம் ஓடுதான்னு பாருய்யா.


கீ.ரவி: நோ.........உன் மேலே பரிதாபப்படறேன்.


கா.கு: நீங்கள் மிகச் சிறந்த ரிஸ்க் டேக்கர்.


ஜெ.நாணா  : என்னக் கொடுமை கிரி இது. நீங்களா இப்படி?


ர.பாஸ்கர் : சுறாவ தியேட்டர்ல பாக்க வந்த தைரியசாலின்னு உன்னை பாக்கறதுக்கு எக்கச்சக்க கூட்டம் வரப் போகுது.


மு.மோ: நானும் பதிவு பண்ணிருக்கேன். பாத்துட்டு வெளிய வரும்போது தலைவலி இல்லாமல் இருக்கணும்.


ர.பாஸ்கர்: @ மு.மோ , உங்களுக்கு வெளிய வரும்போது தலை பத்திரமா இருக்கணும். அதுக்கு அப்புறம் தலைவலி பத்தி கவலைப்படுங்க.


நான் என்ன பதில் சொல்ல. வாயை மூடி மௌனம் காக்கிறேன். எங்கள் தலைவர் படம் வந்து இவர்கள் அனைவர்க்கும் பதில் சொல்லும்.


விஷயம் 1:


போக்கிரி படத்தின் பப்பட உட்டாலக்கடி உல்டாவை "லொள்ளு சபா" குழுவினர் செய்திருக்கிறார்கள். சமீபத்தில் இதைப் பார்த்தபோது இதைவிடச் சிறந்த முன்னோட்டம் சுறா படத்திற்கு இருக்க முடியாது என உணர்ந்தேன். இந்த மூன்று வீடியோ காட்சிகளையும் பார்த்து விட்டு நீங்கள் சுறாவைப் பார்த்தால், உங்களுக்கு சுறா பற்றிய ஒரு புரிதல் நிலை ஏற்பட வாய்ப்பு உண்டு.

உங்களுக்கு என் வாழ்த்துக்களும் ஆசிகளும்.








பின்குறிப்பு: முன் குறிப்பு எழுதினா பின்குறிப்பு கண்டிப்பா எழுதணுமா என்ன? சனிக்கிழமை என் தளத்துல பட விமரிசனத்தை எதிர்பாருங்கள். அதுதான் பின்குறிப்பு.



ஐ.பி.எல் - ராஜ்தீப்பின் "மூன்று" வேண்டுகோள்









கிரிக்கெட் பற்றி மூச்சுத் திணறத் திணற பேசியாயிற்று, எழுதியாயிற்று. ஒரு பெரிய இடைவெளி விடவேண்டும் என்ற நேரத்தில்தான் நம்ம Breaking News அண்ணன் ராஜ்தீப் சர்தேசாயின் டிவிட்டர் பதிவு ஒன்று பற்றி நண்பன் ரோகன் ஒரு தகவல் சொன்னான்.

ஐ.பி.எல்லில் போயும் போயும் சென்னையிடம் மும்பை தோற்ற கலக்கத்தில் சர்தேசாய் அண்ணன் என்ன சொல்கிறார் எனப்பாருங்கள்.

"Can we please have best of 3 games final next year? not saying this as a disappointed mumbai supporter, but a cricket fan "

நல்லா சொல்லியிருக்காரு இல்ல? போன ரெண்டு வருஷமா அண்ணன் ஐ.பி.எல். பார்க்கலியா? அப்போ அவருக்கு இதே கேள்விய கேட்கத் தோணலையா?

சரி அது இருக்கட்டும். நம்ம ரோகன் அதுக்கு என்ன பதில் சொல்லியிருக்காரு பாருங்க.


"We already have a 3 game final, the other 2 are just called league matches. Total results - 2:1 "


எப்பூடி?





Apr 27, 2010

பதிவர் பாஸ்கருக்கு ஒரு பச்சடிப் பதிவு



பாஸ்கரின் கடிதம்
என் அன்பிற்கும் அவதானத்திற்கும் உரிய நண்பர் கிரி அவர்களுக்கு,
அந்த நாள் இன்னும் நினைவிலிருக்கிறது. நவம்பர் 29 2009 என்று நினைக்கிறேன். அன்றுதான் முதல் முதலாக பொறி உருண்டை செய்வது எப்படி என்று படித்தேன். அதற்கடுத்த நாள் நடந்த நெஞ்சை குளிர்விக்கும் இனிய நிகழ்வுகளை என்னால் மறக்க முடியாது. என் மனைவி வேலைக்குக் கிளம்பிச் சென்றதும், நான் தாங்கள் தங்கள் தளத்தில் இடுகையிட்டிருந்த செய்வகையின்  துணையோடு பொறி உருண்டை செய்து வைத்து, அவள் வந்ததும் அவளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி, அப்புறம் அவள் அந்த சந்தோஷத்தில் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்த… இதற்கு மேல் சொல்ல முடியாது, சொன்னால் லீனா மணிமேகலைக்கு நேர்ந்த கதிதான் உங்களுக்கும்… பேர் ரிப்பேர் ஆகி விடும்.
 அரை கிலோ வெல்லம்). வெல்லத்தை தண்ணீரில் கரைத்து, அழுக்கு போக வடிகட்டி, பாகு பிடித்து, பொரி கலந்து, உருண்டை பிடித்து….. அப்புறம் என்ன… சாப்பிடுங்க… “
இதை விட  சுருக்கமாக இந்த இனிய சங்கதியை, ஒரே வரியில், நெஞ்சத்து அழுக்கை எல்லாம் வடிகட்டித் தாங்கள் சாரத்தை  மட்டும் தெளிவாக்கித் தந்திருக்கிற மாதிரி வேறு யாராலும் செய்திருக்க முடியாது.... (மேலும் வாசிக்க



பாஸ்கர்,
நெடுநாட்களுக்குப் பிறகு எழுதுகிறீர்கள். என் தாமத பதிலுக்குக் காரணம் என் தொடர்ச்சியான பயணங்கள். உங்கள் கேள்விக்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்? முதலில் ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன், இது போலக் கேள்விகள் மூலம் துதிபாடி, பதில்கள் மூலம் அவற்றை வாங்கிக்கொள்ள நீங்கள் சாருவோ அல்லது நான் மற்ற யாருமோ அல்ல.

மேலும் இந்தக் கேள்வியில் உள்ளார்ந்து பொதிந்திருக்கும் ரகசிய அர்த்தமொன்றும் எனக்கு விளங்காமலில்லை. அந்த எழுத்தாளருக்கு இருக்கும் அதே அடையாளப் பிரச்சினைதான் எனக்கும். தமிழகத்தில் என்னைத் தெலுங்கன் என்கிறார்கள், ஆந்திரா சென்றாலோ அரவோடு (தமிழன்) என்கிறார்கள். வாய்கிழிய இத்தனை பேசும் உனக்கு வாய்க்கு ருசியாய் கோங்குரா ஊறுகாய் செய்யத் தெரியுமா எனக் கேட்டுள்ளீர்கள். 

எப்படியிருந்தாலும் என் தளத்தை நோக்கி வீசப்பட்ட கேள்வி இது என்பதால் என் பதில் இங்கே! 



கோங்குரா பச்சடி செய்முறை




தேவையான பொருட்கள்:
புளிச்ச கீரை - ஒரு கட்டு (இலைகளை மட்டும் தனியே எடுத்துக் கொள்ளவும்)


வறுத்து அரைக்க:
காய்ந்த மிளகாய் - பத்து (அல்லது கூடக் குறைய...காரத் தேவைக்கு ஏற்றாற்போல்)
கொத்துமல்லி விதை  - இரண்டு டீ ஸ்பூன்
கடலைப்பருப்பு - இரண்டு டீ ஸ்பூன்
வெந்தயம் - அரை டீ ஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
சமையல் எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப


செய்முறை:


1 ) வெறும் வாணலியில் வறுத்து அரைக்கும் பொருட்களை தனித்தனியே வறுத்து வைத்துக் கொள்ளவும்.


2 ) ஆய்ந்து வைத்த புளித்தக் கீரையை சிறிது எண்ணெய் ஊற்றி சுருள வதக்கி வைத்துக்கொள்ளவும்.


3 ) வறுத்து வைத்த பொருட்களை மிக்சியில் ஓரளவு பொடி செய்து கொண்டு, வதக்கி வைத்த கீரையையும் உப்பையும் அதில் போட்டு அரைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.


4 ) வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, காய்ந்தமிளகாய் இரண்டு, கறிவேப்பிலை தாளித்துக் கொண்டு அரைத்து வைத்த துவையலையும் அதன் மேலிட்டு எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கவும்.


5 ) ஆறியவுடன் தனியே ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும்.


சுவையான கோங்குரா பச்சடி தயார். இதை ஐந்து நாட்கள் வரை உபயோகிக்கலாம். இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம், சாதத்தில் பிசைந்து சாப்பிட தயிர் பச்சடி தொட்டுக்கொள்ள உகந்தது.


வெள்ளைப் பூண்டு எங்கள் வீட்டுப்படி ஏறுவதில்லை. வெங்காயம் ஒரு வேண்டாத விருந்தாளி. ஆகவே அவற்றை இந்த செய்முறையில் சேர்க்கவில்லை. உங்கள் தேவைக்கு ஏற்ப அவற்றையும் சேர்க்கலாம்.

கோங்குரா குறித்த இன்னும் சில குறிப்புகள்:


Apr 26, 2010

ஹைடெக் பக்தி

வசந்த் டி.வி.யில் நேற்று சென்னை அனகாபுத்தூர் அகத்தீஸ்வரர் திருக்கோவிலின் திருக்குடமுழக்கு ஒளிபரப்பு.



தமிழ்த் தொலைகாட்சிகளின் விதிமீறல் எதிலும் ஈடுபடாமல் வழக்கம்போல இயன்றமட்டும் தப்புத் தப்பாய் உச்சரிப்பில் ஒரு பெண்மணி வர்ணனை கொடுத்து கடுப்பேற்றிக் கொண்டிருந்தார். தலப்புராணம், சன்னதிகள், கொடிமரம், பலிபீடம் என அனைத்துத் தகவல்களும் விவரிக்கப்பட்டன.

காமெரா மேலும் கீழும் சென்று வந்தவாறே பக்தர்களின் பரவசங்களை பதிவு செய்து காட்டிக் கொண்டிருந்தது. இடையிடையே எஸ்.பி.பி. குரலில் பக்திப்பாடல்கள் பின்னணியில் ஒலித்துக் கொண்டிருந்தது.

ஓகே... சொல்ல வந்ததைச் சொல்கிறேன்.

முகூர்த்த நேரமும் வந்து கோவில் விமானங்களுக்கு குடமுழக்கு செய்யப்பட்டது. திடீரென கோவில் கோபுரத்தின் தலைமீது விர்ரெனப் பறந்து வந்து நின்றது ஒரு ஹெலிகாப்டர். மேலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக தொடர்ச்சியாக பூக்கள் உதிர்க்கப்பட்டன. ஆச்சர்யத்தில் பிளந்த என் வாய் மூடிக்கொள்ள நிமிடங்கள் பிடித்தன.

மகளிர் மட்டும் படத்தில் வரும் ஒரு வசனம் நினைவுக்கு வந்தது - TECHNOLOGY HAS IMPROVED SO MUCH .

அடுத்து....

குடமுழக்குப்  புனிதநீர் பெரிய பிளாஸ்டிக் குழாய் மூலமாக கோவில் உள்ளும் வெளியும் நின்றிருந்த பக்தகோடிகள் மீது அதிவேகத்தில் பீய்ச்சியடிக்கப்பட்டது.

காலம் மாறிப்போச்சு சார்!

Image Courtesy: virutcham.com

ஐ.பி.எல். கோப்பை சென்னைக்கு...ஹுர்ரே....

ஜெயிச்சாச்சுங்கோ!


சென்னை ரசிகர்கள் அனைவர்க்கும் இந்தப்பாடல் சமர்ப்பணம்.


அப்போ தோத்துப்போன தலைவர் டெண்டுல்கருக்கு?

அவருக்கு இந்தப்பாட்டு!











Apr 24, 2010

ஆண்டவனின் அவதாரத் திருநாள்






சச்சினின் முப்பத்து ஏழாவது பிறந்த நாள் இன்று.


சச்சின் போன்ற கிரிக்கெட் மகாமேதை வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்வதில் பெருமிதம் கொள்கிறேன். அவ்வகையில் நான் அதிஷ்டசாலி எனவும் பெருமைப்பட்டுக் கொள்கிறேன்.

சாதனை மன்னனுக்கு அன்பு வாழ்த்துக்கள்!

இளம் சச்சினில் ஒரு இன்னொசன்ட் பேட்டி யூடியூபில் கிடைத்தது. அந்தக் கன்னிப் பேட்டியைப் பாருங்கள், கொள்ளை அழகு!




அவர் குறித்து உலக கிரிக்கெட் ஜாம்பவான்கள் என்ன சொல்கிறார்கள் எனப் பாருங்கள்.

மேத்யு ஹேடன் 
நான் கடவுளை நேரில் கண்டேன். அவர் இந்திய கிரிக்கெட்டில் நான்காம் ஆட்டக்காரராக களமிறங்குகிறார்.

பிரையன் லாரா
அவர் ஒரு ஜீனியஸ், நான் சாதாரணன்.
ஆன்டி பிளவர்:
உலகில் இருவகை ஆட்டக்காரர்கள் உண்டு. ஒன்று சச்சின், இன்னொன்று மற்றவர்கள்.

ஷேன் வார்னே:
பிராட்மேனுக்கு நிகராய் ஒரு கிரிக்கெட்டர் உண்டென்றால் அது சச்சின் தவிர யாருமில்லை.

மார்க் டைலர்:
1997 டெஸ்ட் போட்டி தோல்வியின் போது: நாங்கள் இந்திய அணியிடம் தோற்கவில்லை, சச்சின் என்ற மாபெரும் ஆட்டக்காரனிடம்தான் தோற்றோம். 



Apr 23, 2010

மாமனிதப் பண்பு

இரு கடிதங்களில் இரண்டாம் கடித அன்பரும் நண்பரான இனிய நிகழ்ச்சி நடந்தேறியது.

அபிலாஷ் எழுத்துக்கள் எதையும் வாசித்தவனில்லை நான். அவரிடம் தனித்த விரோதமோ, என் எழுத்துக்களை அவர் விமரிசிக்க அவர் எழுதியதை நான் விமரிசிக்க என எங்களிடையே ஏதும் நிகழ்ந்ததில்லை இதுவரை.

நேற்று நடந்த முட்டல் மோதல்களுக்குப் பின் இன்று காலை அபிலாஷ் தளத்தைக் குறித்தும் என் தளத்தில் எழுதிவிட்டு அலுவல்களைப் பார்க்கச் சென்றுவிட்டேன். நண்பர் பரிதி அனுப்பிய குறுஞ்செய்தி வாயிலாக அபிலாஷ் தான் எழுதியவைகளுக்கு வருத்தம் தெரிவித்து தன் தளத்தில் எழுதியிருந்ததை அறிந்தேன்.

அபிலாஷின் அந்த இடுகை:  இன்று கற்றவை

தவறு செய்தல் மனித இயல்பு. அதற்காக உணர்ந்து வருந்தி மன்னிப்பு கேட்டல் மாமனிதப் பண்பு. அதை தன் பதிவு மூலம் எனக்கு உணர்த்தியமைக்கு அபிலாஷுக்கு நன்றி.

மேலும், என் தேவையற்ற சீண்டல்கள் மூலம் முன்னமே தன் மீது பட்டிருந்த காயங்களை மேலும் ரணமாக்கிக் கொண்ட அபிலாஷிடம் நானும் என்னை மன்னிக்கக் கோருகிறேன்.

Apr 22, 2010

இரு கடிதங்கள்

தீதும் நன்றும் பிறர் தர வாரா!

இது எத்தனை உண்மையான வார்த்தை. இதை நானும் எத்தனை பேருக்கு உபதேசித்திருப்பேன். ஆனால் நானாகப் புரிந்து கொள்ள எனக்கு அவ்வப்போது இனிய அல்லது கசப்பான அனுபவங்கள் தேவைப்படுகின்றன. நேற்று ஒரே நாளில் எனக்கு இரண்டு வெவ்வேறு அனுபவங்கள் கிட்டின. ஒன்று நன்று, இன்னொன்று தீது.

கடிதம் 1

மனமாற்றமும் மதமாற்றமும் பதிவிற்கு அன்பர் தமிழ் மீரான் என் கருத்தை மறுத்து எதிர்வினை இட்டார். அவர் கருத்தை நான் ஒப்புக்கொள்ளாவிடினும் அதற்கு நேற்று  என்னால் இயன்றவரை தன்மையாக ஒரு பதிவு வழியாகவே என் பதிலைச் சொல்லியிருந்தேன்,. ஒரே கடிதத்தில் நண்பரானார் தமிழ் மீரான்.


கடிதம் 2

என் நண்பனின் தாயார் "சின்னப்பயல்களிடமும், நாய்க்குட்டிகளிடமும் சகவாசம் வைத்துக்கொள்ளக் கூடாது", என அடிக்கடி சொல்வர். எந்த நேரத்திலும் உங்களுக்கு சபையில் அவமானம் நேரலாம். நான் செய்ததே தவறு எனினும், இடம் தெரியாமல் ஒரு அரைவேக்காட்டுத் தளத்தில் நேற்று என் கருத்து ஒன்றை கிண்டல் தொனியில்  சொல்லி சற்றே சேற்றை வாரிப் பூசிக்கொண்டேன். 


அது பற்றிய விவரங்களை இங்கே தர விருப்பமில்லை ஏனென்றால்....?

ஒரு கற்பனைக் காட்சிக்கு வாருங்கள்....

பின்னொரு நாளில் நான் ஒரு வேளை பிரபல எழுத்தாளனாகி புத்தகங்கள் வெளியிடும் நிலைக்கு வருகையில் நான் மேடையில் அமர்ந்திருக்கிறேன். முன் வரிசையில் என் நண்பர் பரிதி ஆடலரசன். அவர் அருகில் என்னைப்பற்றி ஒன்றும் தெரியாத ஒருவர்,

"யாரு சார் இந்த எழுத்தாளர், புதுசா இருக்காரு?", என என்னைக்  காட்டி வினவ...
நண்பர் பரிதி: "அவரா, அவர்தான் சார் அந்த இந்திரஜித் பய கிட்ட கெட்ட கெட்ட வார்த்தையில ஒரு தடவ திட்டு வாங்கினாரே அவர்தான்", என எனக்கு ஒரு நல்ல அறிமுகம் தர.....தேவையா இதெல்லாம் எனக்கு. 

இனி இணையத்தில் அடக்கி வாசிக்க வேண்டும்.

Apr 21, 2010

சாருவின் அபிலாஷை. ஜெயமோகனின் வணக்கம்!

எழுத்துலகக் குடுமிப்பிடிச் சண்டைகள் காலம்காலமாக நாம் பார்த்து வருவது. ஆனால் அதன் பரிமாணம் அடுத்தடுத்த அசிங்கக் கட்டங்களில் அரங்கேற்றம் நிகழ்த்தும் போது நமக்கு "சே" என்றாகிறது.

சாருவைப் பற்றி நாம் அனைவரும் அறிந்தது. அவர் பயன்படுத்தும் ஆயுதங்கள் எப்போதும் விகாரமானவைகள். இப்போது அவர் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் "அபிலாஷ்".

அபிலாஷ் ஜெயமோகனை தன் முன்னாள் குருநாதர் என விளிக்கிறார். அவர் இப்போது சாருவைத் தன் தற்கால குருநாதராக தத்து எடுத்திருப்பதால் இந்த விளிப்பு. அபிலாஷ் நான்கு முழ நீளத்திற்கு ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் பாருங்கள். எனக்கு அப்படியே கண்ணைக் கட்டுகிறது.

அது தன்னிலை விளக்கமா அல்லது தன்னிரக்க விளக்கமா எனத் தெரியவில்லை. ஆனால் அக்கட்டுரையின் காரசாரம் அபிலாஷின் தத்து குருநாதரின் தடாலடி தோரணையில் இருப்பது அபிலாஷின் உண்மை மீதான பலப்பல கேள்விகளை எழுப்புகிறது.

நேற்றைக்கு திடீரென ஜெயமோகன் தன் தளத்தில் வணக்கம் எனப்போட்டு, தான் அடுத்த அறிவிப்பு வரும் வரையில் இணையத்தில் எழுதுவதில்லை என்கிறார்..ஜெயமோகனின் "ஆன்மாவைக் கூவி விற்றல்" அவரது இந்த முடிவிற்கான இடை ஆரம்பம். அபிலாஷின் உயிரோசைக் கட்டுரை "கிளி எடுத்த சீட்டு" முதல் ஆரம்பம்.


எல்லாம் அரசியல். அதுதான் இப்போதைக்கு நாம் தெரிந்துகொள்ள வேண்டியது.

மன / மதமாற்றம் ௦௦- எதிர்வினை


மிக அபத்தமான ஒப்பீடு செய்துள்ளீர் நண்பரே..
நித்யானந்தா ஊருக்கு உபதேசம் செய்துவிட்டு தான் மட்டும் கபடத்தனமாக செக்ஸ் லீலைகளில் ஈடுபட்டவர் மட்டுமல்லாமல் இன்னமும் தான் தவறே செய்யாத யோக்கியர் என்று ஏமாற்றிக்கொண்டிருப்பவர். ஆனால் பெரியார்தாசனோ கடந்த காலங்களில் தான் கூறிய நாத்திகக் கருத்துக்கள் தவறானவை என பகிரங்கமாக ஒப்புக்கொண்டதோடு அதற்காக மன்னிப்பும் கேட்டவர். அவர் ஊருக்கு நாத்திகம் போதித்து தான் மட்டும் ரகசியமாக இஸ்லாத்தை ஏற்றிருந்தால் ஊடகங்கள் கண்டிப்பாக அவரை ஒரு வழியாக்கியிருக்கும். கொஞ்சம் சிந்தித்து கருத்தை பதிவிடுங்கள் நண்பரே.!




தமிழ் மீரான் அவர்களுக்கு,

உங்கள் கருத்திற்கு நன்றி, அது எனக்கு ஏற்புடையது இல்லை எனினும்.

பேராசிரியரின் பேச்சு வெளியிடப்பட்ட இந்தப் பதிவைப் படியுங்கள். இந்திய மரபும் பார்ப்பன திரிபும். இது ஒரு பானை சோற்றின் ஒரே ஒரு சோற்றுப்பதம்இது போன்றதொரு மூன்றாம் தரப் பேச்சாளரைப் பற்றித்தான் நான் விமரிசித்திருக்கிறேன். நிலையற்ற தன்மையின் ஒட்டு மொத்த உருவமாயிருக்கும் அவர் பற்றித்தான் என் கருத்தே ஒழிய அவர் சார்ந்த எந்த இனத்தையும் பற்றியதல்ல என்பதை தெளிவாய்ப் புரிந்து கொள்ளுங்கள். 

கடவுள் மறுப்பு தவறானதல்ல. அது அவரவர் கொள்ளும் தனி மனிதக்கொள்கை.  கடவுள் இல்லை என நாத்திகம் பேசுதற்கும், இது போல கீழ்த்தரமான பொதுப் பேச்சுக்களில் ஈடுபடுதலுக்கும் வித்தியாசம் நிச்சயம் உள்ளது என்பது நீங்களும் ஒப்புக்கொள்ளும் விஷயம்தான்.

எது வேண்டுமானாலும் செய்துவிட்டு மன்னிப்பு கேட்பது சரியென்றால், நித்தி அவர்கள் எந்நிலையிலும் ஒரு மன்னிப்பைக் கேட்டார் என்றால் அவர் செய்த அத்துணையும் சரியாகிவிடும் அல்லவா? மேலும், நான் நித்தியானந்தா செய்ததை எந்நிலையிலும் சரி எனக் கூறவில்லை. ஆனால் அவர் அந்தரங்கம் அறியும் அரிப்பைக் கொண்டிருக்கும் நம் எல்லோர் மன நிலையையே சாடியிருக்கிறேன். ஊடகங்கள் நித்தி அவர்களை கூவிக்கூவி விற்றதும், பேராசியரைக் கண்டும் காணாது  இருந்ததற்கும் காரணம், உலகமெங்கும் மனிதச் சந்தை ஒரே போல இருக்கிறது. SEX SELLS, அவ்வளவுதான்.

அன்புடன்,
கிரி

Apr 20, 2010

மனமாற்றமும் மதமாற்றமும்

ஸ்வாமியின் மனமாற்றமும் நாத்திகனின் மதமாற்றமும்



பேராசிரியர் பெரியார்தாசன் என்றழைக்கப்பட்ட பேராசிரியர் அப்துல்லா என்று இன்று அழைக்கப்படும் அன்பரின் மதமாற்றம் குறித்த என் கருத்துக்களைப் பதிய வேண்டாம், இது ஒரு விவகாரமான விஷயம் என்றே இருந்தேன். பின்னர், ஒரு பிரபல எழுத்தாளரின் தளத்தில் இதுகுறித்த என் கேள்விகளைப் பதிவு செய்தேன். எழுத்தாளருக்கு என் கேள்வியின் மேல் ஆர்வம் ஏற்படவில்லை அல்லது நேரமில்லை என எண்ணுகிறேன். 

ஆகவே, இங்கே என் கருத்துக்கள்.

என் கருத்தில் மதமாற்றம் என்பது ஒவ்வொரு மனிதனுள்ளும் நிகழும் ஒரு மாபெரும் மாற்றம், அது பணத்தைக் காட்டுவதன் மூலம் மட்டுமே நிகழும் விஷயமல்ல.ஒருவனின் உள்ளே வரும் அல்லது உள்ளே வரவேண்டிய மாற்றம். எந்த மதமாயினும் அங்கு ஒருவன் வெளிச் செல்கிறான் என்றால், அவன் பற்றி அம்மதம் கவலை கொள்ளும் அவசியமில்லை என்பதுவும் என் கருத்து. அவன் இருந்தாலும் இல்லையென்றாலும் அது அம்மதத்திற்கு இழப்பல்ல. 

சரி விஷயத்திற்கு வருவோம். மதம் மாறிய யார் பற்றியும் நான் இதுவரை பேசியதில்லை. பேராசிரியர் பற்றி நான் இங்கு பேச விழையும் காரணம், அவர் ஒரு நாத்திகராய்த் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டும், மதங்கள் மற்றும் மதங்கள் சார்ந்த பின்பற்றுதல்களை விமரிசிப்பவராக அல்லாமல், எள்ளி நகையாடும் ஒரு அசிங்கமான வழிமுறையைக் கொண்டிருந்ததால்தான். நான் போற்றி மதிக்கும் தெய்வங்கள் மற்றும் ஆச்சார்யார்கள் குறித்த விமரிசனங்களும் கருத்துக்களும் எனக்கு ஏற்புடையவைகளே. ஆனால் அசிங்கத்தை அள்ளி வீசுதல் அல்ல. ஆகவேதான் இந்தப் பதிவு.

பேராசிரியரே ஒரு பேட்டியில் சொன்னார், நான் கூறிய கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு ஆயிரம் பேராவது நாத்திகர்கள் ஆகி இருப்பார்கள் என.

என்னுடைய கேள்வி இங்கு ஒன்றே ஒன்றுதான். பிரம்மச்சர்யத்தை போதித்த நித்தியானந்தா, தான் போதித்ததை பின்பற்றாது நடிகை ஒருவருடன் கூடிக்குலவியது தவறு என்றால், பேராசிரியர் செய்ததும் அதற்கு சற்றும் குறைவில்லாத...இன்னும் சொல்லப்போனால் அதனைவிட ஆயிரம் மடங்கு அசிங்கமான விஷயம்.

நித்தியானந்தாவின் அந்தரங்கங்களை அதிகாரம் கையிலிருக்கும் தைரியத்தில்  உலகுக்கே வெளிச்சம் போட இருபத்து நான்கு மணிநேரமும் நீலப்படக் கணக்கில் ஓட்டிய ஊடகங்கள்... நித்தியானந்தாவிற்கு சற்றும் குறைவில்லாது, போதித்ததை பின்பற்றாது மாற்று வழியில் சென்ற பேராசியரின் தோலை உரிக்க என்ன செய்தன. .

செக்ஸ் என்றால் நாக்கைத் தொங்கப் போட்டவாறு கண்ணிமைக்காது பார்க்கும் நம்மைச் சொல்ல வேண்டும்.

ராவண் என்கிற அசோகவனம் - இசை வரவு!


காத்திருந்தது போதும் நண்பர்களே...!!

இன்னமும் நான்கே நாட்கள், மணிரத்னத்தின் இயக்கத்தில் அவர் ஆதர்ச இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ராவண் (தமிழில் அசோகவனம்) பாடல்கள் வெளிவருகின்றன.

எல்லாத் தமிழ் இசை ரசிகர்களைப் போலவும் நானும் பாடல்களைக் கேட்க ஆவலாயிருக்கிறேன். விண்ணைத் தாண்டி வருவாயாவின் மயக்கும் மந்திர இசைக்குப் பின் வரும் பாடல்கள். ரஹ்மானுக்கு மணி எப்போதுமே ஸ்பெஷல்தான். அசோகவனமும் அவர்களிருவரின் வெற்றிக் கூட்டணியின் மற்றுமோர் அற்புதப் படைப்பாய் அமையுமென்பதில் சந்தேகமில்லை.

இந்த முறை மணி அவர்களுக்காக தமிழில் களமிறங்குகிறார் அவர் படத்தில் முதன்முறையாக சீயான் விக்ரம். செவிக்கும் கண்களுக்கும் மனதிற்கும் படம் பெரும் விருந்தாய் அமையும் என எதிர்பார்ப்போம்.


சின்னதாய் இசை ஆல்ப வெளியீட்டை விளம்பரப்படுத்த வெளிவந்திருக்கும் டிரைலர் இங்கே...

Apr 18, 2010

ருத்ரதாண்டவ தோனி..அரையிறுதியில் CSK


தோனியின் அந்த கடைசி ஓவர் அடியை நேரிடையாகவோ அல்லது  நேரலையிலோ இன்று பார்க்காதவர்கள் முன் ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள்.

இருபது தினங்களுக்கு முன் இதே போன்று கடைசி ஓவரில் இதே இர்பான் பதானின் கடைசி ஓவரின் கடைசி மூன்று பந்துகளில் இரண்டு ரன்களை எடுக்காது, சென்னை கவ்வியது மண்ணை.

இந்த ஆட்டத்தின் கடைசி ஓவரும் இர்பானின் கையிலேயே கொடுக்கப் பட்டது. எதிரே இர்பானைச் சந்திக்க அணியின் கேப்டன் தோனி. எடுக்க வேண்டிய ரன்கள் பதினாறு.

முதல் பந்து யார்க்கராக வர லாங் ஆப் திசையில் நான்கு ரன்கள். 

இரண்டாம் பந்து எட்ஜ் ஆகி சங்கக்காரா அதைத் தவற விட்டு, இரண்டு ரன்கள். இன்னும் நான்கு பந்துகளில் பத்து தேவை.

கடைசி இரண்டு பந்துகளும் வைட் லாங் ஆனில் அரங்கம் தாண்டிப் பறந்து இரண்டு சிக்சர்கள். சென்சேஷனல் மொமென்ட் என்பார்கள்....அப்படி இருந்தது அந்த அடி.

அப்படி ஒரு ஆக்ரோஷ தோனியை யாரும் இதுவரை பார்த்திருக்க மாட்டார்கள். கடைசி சிக்சரை அடித்து விட்டு வெற்றி உறுதியானதும் அவர் ஆக்ரோஷமாக உச்சரித்த வார்த்தைகளை இங்கே அச்சிலேற்ற முடியாது.




சென்னையின் இன்னிங்சை இந்த யுடியூப் லிங்கில் பாருங்கள். குறிப்பாய் இதன் பதினேழாம் நிமிடத்தில் இருந்து தோனியின் ருத்ரதாண்டவம் காணலாம்.

Apr 16, 2010

ஹலோ ஹலோ - தமிழ்க் கொலை



நான் நீண்ட நாட்களாக எழுத நினைத்த ஒரு பதிவு. ஒரு மறுமொழி வடிவில் இன்று ஜெயமோகன் அவர்களின் "ஹலோ ஹலோ" பதிவிற்குக் கீழே காணக் கிடைத்தது. அன்பர் பிரசன்னா படம் பிடித்தது போல் எழுதியிருக்கிறார். ஜெயமோகனின் பதிவிற்கான இணைப்பு கீஈஈஈ....ழே...

*(பண்பலை = FM Radio)



அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
இனிய காலை வணக்கம். சமீபமாக உங்கள எழுத்துகளில் நகைசுவை சற்று தூக்கலாக இருக்கிறதே… உங்களின் இந்த கட்டுரையை யாராவது வாசிக்க சொல்லி விட்டு கண்ணை மூடி கொண்டு கேட்டால் அப்படியே ஒரு பண்பலை ஒலிபரப்பை நேரடியாக கேட்டது போலவே இருக்கும்.
தகவல் தொழிநுட்பம் வளர்ந்து விட்ட இன்றைய சூழ்நிலையில் பண்பலைகளின் பங்களிப்பை இன்று நாம் ஒதுக்கி விட முடியாது. பல சிறிய நிறுவனங்களின் விளம்பரங்களால் பலன் அளித்தும் பலன் அடைந்தும் கொண்டு இருக்கும் இது போன்ற பண்பலைகள் பல மாவட்டங்களில் வேருன்றி போய் இருக்கின்றன.
ஒரு நல்ல விளம்பரதாரர் எனவும் , ஒரு மிக சிறந்த பொழுது போக்கு அம்சமாகவும் இவர்களின் பணி பாராட்டுக்கு உரியது தான். ஆனால் அந்த மாவட்ட வட்டார வழக்கில் பேசுகிறேன் என இவர்கள் தமிழை படுத்தும் பாடு சொல்லி மாளாது.
ஒரு பாடலை விளம்பரங்களுக்கு இடையில் இவர்கள் போடுவதில் இருக்கும் ஆர்வம் அந்த பாடல் பற்றிய சரியான் தகவல்களை நேயர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் சிறிதும் இல்லை.
மதுரை பண்பலை ஒன்றில் நேற்று காலையில் தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து சொல்கிறேன் என ஒரு தொகுப்பாளினி தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் என சொல்கிறார். பொங்கல் அன்று என்ன வாழ்த்துகள் கூறுவார் என தெரியவில்லை.
பாரதியார் பிறந்த நாள் அன்று ஒருவர் பாரதியாருக்கே வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்.
தமிழ் பற்றியும் தமிழ் பேச்சுக்கள் பற்றியும் சரியான விழிப்புணர்வு இல்லாத இவர்களின் குரல்களை கேட்டு தான் தமிழனின் பொன் காலை பொழுது விடிகிறது ….
என்ன செய்வது தமிழுக்கும் தமிழனுக்கும் வந்த நவீன சோதனை….. மேற்சொன்ன அனைத்தையுமே உங்களின் இந்த கட்டுரை புட்டு புட்டு வைக்கிறது.


அன்புடன்
பிரசன்னா






நன்றி: ஹலோ! ஹலோ!



சுறாவைக் காமெடி பீஸ் ஆக்கும் வைகைப்புயல்!

என்ன ஒரு ஒப்பீடு...!!!!

அடடடடா! வைகைக் குசும்புன்னா தனி ரகம்யா!





இந்த விளம்பரத்துல நம்ம வடிவேலு அண்ணாச்சி என்ன சொல்றாவுக கேட்டியளா? சாமியார் படத்தையே ஓட்டு ஓட்டுன்னு ஒட்டின சன் டி.வி.காரங்களுக்கு சுறா எம்மாத்திரம் அப்டின்னு சொல்றாரா? இல்ல சாமி படத்தப் போலவே ஜல்சாக் காட்சிகள் நிறைஞ்சதா நம்ம ஷார்க் படம் வெளி வருதுன்னு பூடகமாச் சொல்றாரா?

எப்படியோ படத்தின் தரம் பற்றி இங்கே யாருக்கும் கவலையில்லை. (விஜய் படம் என்று வந்து விட்டால் தரம் பற்றி பேசும் அவசியம்.....????). படத்தை ஓட்டு ஓட்டு என ஓட்டுவது எப்படி, அதுதான் இன்றைய இண்டஸ்ட்ரி கவலை.

ஓட்டுங்க சார் நல்லா ஓட்டுங்க...!!

Apr 13, 2010

விகிர்தி புத்தாண்டு வாழ்த்துக்கள்!



திராவிட பாரம்பர்ய பகுத்தறிவுப் பட்டறை பக்தர்கள் தவிர்த்த உலகின் அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!


தமிழ்ப் புத்தாண்டு குறித்த ஒரு சுவையான பதிவை யாழ்பறவையில் படித்தேன். நீங்களும் படியுங்கள். சுவையான, தெளிவான தகவல்கள்.

மீண்டும் அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.

Apr 11, 2010

முத்துராமன் ஒரு தாழ்மையான வேண்டுகோள்

சக வலைப்பூவாளர் ஒருவர் அறுவை சிகிச்சைக்கு உதவி வேண்டப்பட்டுள்ளது. உதவும் உள்ளங்களுக்கு வந்தனங்கள்!

மாயவரத்தானின் வலைப்பூ....: முத்துராமன் - ஒரு தாழ்மையான வேண்டுகோள்![#515]

பெண்களுக்கு எதிரி?

நண்பர் பாஸ்கரின் இன்றைய இடுகை "பெண்ணுக்கு பெண்தான் எதிரி!" படித்ததும் கோபமாக வந்தது.


நான் எப்போதும் பெண்கள் பக்கம் பரிந்து பேசுபவன். மக்கள்திலகம்  எம்.ஜி.ஆர்., சூப்பர்ஸ்டார் ரஜினி, இளையதளபதி விஜய் இந்த மூவருக்கும் அடுத்ததாக தமிழகத்தில் பெண்களுக்காக குரல் கொடுக்க ஒருவர்(ன்) உண்டென்றால் அது நான்தான் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. சரி அவசரமாக நண்பனைப் பார்க்க வேண்டியிருந்ததால், திரும்பி வந்ததும் காரசாரமாக பாஸ்கர் அவர்களுக்கு கச்சேரி வைத்துக் கொள்ளலாம் எனப் புறப்பட்டேன்.


வா மச்சான் என பரிவுடன் வீட்டினுள் அழைத்துச் சென்றான் நண்பன். "எப்படி இருக்கீங்க?" எனக் கேட்டவாறு நண்பனின் அண்ணி காப்பி கொண்டு வந்து கொடுத்தார்.  சமீபத்தில்தான் நண்பனின் அண்ணனுக்கு கல்யாணமாகி இருந்தது. "நல்லா இருக்கேன் அண்ணி", என்றவாறு அந்தக் காப்பியை குடித்து முடித்தேன். "காபி நல்லாருக்கு", என்று நான் சொல்ல, "அது டீ", என பதில் வந்து என்னை அசடு வழிய வைத்தது. ஹிஹி என சமாளித்தேன்.

"அம்மா எங்கேடா?", என நான் கேட்க, ஜன்னலைத் திறந்து வீதி முனையைக் காட்டினான். அங்கே அவன் அம்மா ஒரு பெட்டிக்கடையில் அமர்ந்தவாறு மிட்டாய், பிஸ்கட்டுகள் விற்றுக் கொண்டிருந்தார். "டேய், என்னடா நடக்குது?, இப்போ என்ன தேவைன்னு அங்க கடை போட்டுக் கொடுத்திருக்கீங்க?", எனக் கேட்டேன். அவர்கள் வீட்டில் அவன் அம்மா உழைத்துத்தான் உலை பொங்கும் அவசியம் இல்லை. சுமாராய் வசதி உள்ள குடும்பம்தான்.

"மச்சான் உனக்கே தெரியும், அண்ணனுக்கு இப்போதான் கல்யாணம் ஆச்சு. ஒண்ணு தெரிஞ்சுக்கோ மச்சான், ரெண்டு சிங்கத்த ஒரு கூண்டுல வெக்கலாம், ஆனா ரெண்டு பொம்பளைங்கள ஒரு வீட்டுல வெக்கக் கூடாதுடா!" என ஏதோ தத்துவம் உதிர்த்தான். எனக்கு ஏதோ புரிந்தது, ஏதோ புரியவில்லை. "சரிடா, நான் வர்றேன்", எனப் புறப்பட்டு வந்தேன்.

ஒருவேளை பாஸ்கர் ஆய்வுக் கட்டுரைகளை மேற்கோள் காட்டி எழுதினது சரிதானோ? நீங்கள்  யாராவது சொல்லுங்களேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...