Apr 27, 2010

பதிவர் பாஸ்கருக்கு ஒரு பச்சடிப் பதிவுபாஸ்கரின் கடிதம்
என் அன்பிற்கும் அவதானத்திற்கும் உரிய நண்பர் கிரி அவர்களுக்கு,
அந்த நாள் இன்னும் நினைவிலிருக்கிறது. நவம்பர் 29 2009 என்று நினைக்கிறேன். அன்றுதான் முதல் முதலாக பொறி உருண்டை செய்வது எப்படி என்று படித்தேன். அதற்கடுத்த நாள் நடந்த நெஞ்சை குளிர்விக்கும் இனிய நிகழ்வுகளை என்னால் மறக்க முடியாது. என் மனைவி வேலைக்குக் கிளம்பிச் சென்றதும், நான் தாங்கள் தங்கள் தளத்தில் இடுகையிட்டிருந்த செய்வகையின்  துணையோடு பொறி உருண்டை செய்து வைத்து, அவள் வந்ததும் அவளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி, அப்புறம் அவள் அந்த சந்தோஷத்தில் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்த… இதற்கு மேல் சொல்ல முடியாது, சொன்னால் லீனா மணிமேகலைக்கு நேர்ந்த கதிதான் உங்களுக்கும்… பேர் ரிப்பேர் ஆகி விடும்.
 அரை கிலோ வெல்லம்). வெல்லத்தை தண்ணீரில் கரைத்து, அழுக்கு போக வடிகட்டி, பாகு பிடித்து, பொரி கலந்து, உருண்டை பிடித்து….. அப்புறம் என்ன… சாப்பிடுங்க… “
இதை விட  சுருக்கமாக இந்த இனிய சங்கதியை, ஒரே வரியில், நெஞ்சத்து அழுக்கை எல்லாம் வடிகட்டித் தாங்கள் சாரத்தை  மட்டும் தெளிவாக்கித் தந்திருக்கிற மாதிரி வேறு யாராலும் செய்திருக்க முடியாது.... (மேலும் வாசிக்கபாஸ்கர்,
நெடுநாட்களுக்குப் பிறகு எழுதுகிறீர்கள். என் தாமத பதிலுக்குக் காரணம் என் தொடர்ச்சியான பயணங்கள். உங்கள் கேள்விக்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்? முதலில் ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன், இது போலக் கேள்விகள் மூலம் துதிபாடி, பதில்கள் மூலம் அவற்றை வாங்கிக்கொள்ள நீங்கள் சாருவோ அல்லது நான் மற்ற யாருமோ அல்ல.

மேலும் இந்தக் கேள்வியில் உள்ளார்ந்து பொதிந்திருக்கும் ரகசிய அர்த்தமொன்றும் எனக்கு விளங்காமலில்லை. அந்த எழுத்தாளருக்கு இருக்கும் அதே அடையாளப் பிரச்சினைதான் எனக்கும். தமிழகத்தில் என்னைத் தெலுங்கன் என்கிறார்கள், ஆந்திரா சென்றாலோ அரவோடு (தமிழன்) என்கிறார்கள். வாய்கிழிய இத்தனை பேசும் உனக்கு வாய்க்கு ருசியாய் கோங்குரா ஊறுகாய் செய்யத் தெரியுமா எனக் கேட்டுள்ளீர்கள். 

எப்படியிருந்தாலும் என் தளத்தை நோக்கி வீசப்பட்ட கேள்வி இது என்பதால் என் பதில் இங்கே! கோங்குரா பச்சடி செய்முறை
தேவையான பொருட்கள்:
புளிச்ச கீரை - ஒரு கட்டு (இலைகளை மட்டும் தனியே எடுத்துக் கொள்ளவும்)


வறுத்து அரைக்க:
காய்ந்த மிளகாய் - பத்து (அல்லது கூடக் குறைய...காரத் தேவைக்கு ஏற்றாற்போல்)
கொத்துமல்லி விதை  - இரண்டு டீ ஸ்பூன்
கடலைப்பருப்பு - இரண்டு டீ ஸ்பூன்
வெந்தயம் - அரை டீ ஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
சமையல் எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப


செய்முறை:


1 ) வெறும் வாணலியில் வறுத்து அரைக்கும் பொருட்களை தனித்தனியே வறுத்து வைத்துக் கொள்ளவும்.


2 ) ஆய்ந்து வைத்த புளித்தக் கீரையை சிறிது எண்ணெய் ஊற்றி சுருள வதக்கி வைத்துக்கொள்ளவும்.


3 ) வறுத்து வைத்த பொருட்களை மிக்சியில் ஓரளவு பொடி செய்து கொண்டு, வதக்கி வைத்த கீரையையும் உப்பையும் அதில் போட்டு அரைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.


4 ) வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, காய்ந்தமிளகாய் இரண்டு, கறிவேப்பிலை தாளித்துக் கொண்டு அரைத்து வைத்த துவையலையும் அதன் மேலிட்டு எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கவும்.


5 ) ஆறியவுடன் தனியே ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும்.


சுவையான கோங்குரா பச்சடி தயார். இதை ஐந்து நாட்கள் வரை உபயோகிக்கலாம். இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம், சாதத்தில் பிசைந்து சாப்பிட தயிர் பச்சடி தொட்டுக்கொள்ள உகந்தது.


வெள்ளைப் பூண்டு எங்கள் வீட்டுப்படி ஏறுவதில்லை. வெங்காயம் ஒரு வேண்டாத விருந்தாளி. ஆகவே அவற்றை இந்த செய்முறையில் சேர்க்கவில்லை. உங்கள் தேவைக்கு ஏற்ப அவற்றையும் சேர்க்கலாம்.

கோங்குரா குறித்த இன்னும் சில குறிப்புகள்:


7 comments:

natbas said...

சுவையான பதிவு. மிக்க நன்றி ஐயா.

இதுபோல் மேலும் பல உபயோகமான பதிவுகளைத் தங்கள் தளத்தில் எதிர்பார்க்கிறேன்.

natbas said...

ஒரு சந்தேகம்.
தொடர்ச்சியான பயணங்கள் என்று சொன்னீர்களே:
நீங்கள் கானாவில் இருப்பதாக ஒரு நண்பர் சொன்னார் ( உங்கள் "கலகக்காரனின் சமையற் குறிப்புகள்: மொலோடோவ் காக்டெயில் முதல்..." என்ற புத்தகம் 22 ஆப்பிரிக்க மொழிகளில் வெளிவந்திருப்பதாகவும், உங்களை சந்திக்க மண்டேலா விருப்பம் தெரிவித்ததாகவும் நீங்கள்தான் அதை மறுத்து லோரட்டா குத்துபரோட்டா என்ற இளம் எழுத்தாளரின் பின்நவீனத்துவம் குறித்த மாநாட்டுக்குத் தலைமை தாங்க கானா சென்றிருப்பதாகவும் சொன்னார்) , அதைப் பற்றி இன்னொருவரிடம் கேட்டபோது, இல்லை "இல்லை அவர் டிம்பக்டூ போயிருக்கிறார், அங்கே அவர் டிம்பக்டூவின் அரசவை கதை சொல்லியாக நியமிக்கப்பட்டு விட்டார். " என்று சொன்னார். உண்மையில் என்ன நடந்தது?

உங்கள் பயணக் குறிப்புகளைப் படிக்க ஆவலாக இருக்கிறேன்.

கிரி said...

இதற்குப் பதிலிட தனியே ஒரு பதிவுதான் இடவேண்டும். கொஞ்சம் காத்திருங்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//வெள்ளைப் பூண்டு எங்கள் வீட்டுப்படி ஏறுவதில்லை. வெங்காயம் ஒரு வேண்டாத விருந்தாளி//
இவற்றை சமையலில் நீங்கள் சேர்க்காததற்கு ஏதாவது சிறப்புக் காரணம் உண்டா?

ஏன்ஜெலினா ஜோலி said...

கிரி, உங்களது இந்த பதிவு எனது வலியை அதிகரிக்கச் செய்கிறது. உங்கள் மீது எனக்கிருக்கிற எனது நேசத்தையும், அதற்காக நான் என் கணவரை விவாக ரத்து செய்து விட்டு வரத் தயாராய் இருக்கிறேன் என்ற செய்தியையும் பல முறை சொல்லியும் உங்கள் பக்கத்திலிருந்து மௌனம்தான் பதிலாக வருகிறது,

இதை நான் படிக்கும்போது கோல்டன் கேட் பாலத்தில் நடந்து போய்க் கொண்டிருந்தேன். கோங்குரா பச்சடியை நீங்கள் சமைத்துப் பரிமாற நான் சாப்பிட முடியாமலிருக்கிற அவலத்தை நினைத்தபோது எனக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது: அப்படியே ஒரு வேன்குருவியைப் போல கோல்டன் கேட் பாலத்திலிருந்து கீழ்நோக்கி பறந்து விடலாமா என்று தோன்றியது. என்ன சொல்கிறீர்கள் கிரி? இனிப்பான செய்தி வருமா, அல்லது அடுத்ததாக அல்வா தருவீர்களா?

கிரி said...

@ யோகன் பாரிஸ்

காரணம் வீட்டிலிருக்கும் உணவுப் பழக்க வழக்கம்தான். வேறேதுமில்லை.

கிரி said...

@ அஞ்சலீனா ஜோலி

தற்சமயம் தங்களுக்கு உதவும் நிலையில் நானில்லை.

அல்வாப்பதிவை எதிர்பாருங்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...