Jun 18, 2013

ட்ராஃப்டில் தூங்கிப்போன டெல்லி கேஸ்...

முன்குறிப்பு: இந்தப் பதிவை எழுதி ட்ராஃப்டிலேயே வைத்துவிட்டு தூங்கிவிட்டேன் போல.... இப்போதுதான் பார்த்தேன். காசா பணமா, அமுக்குடா பப்ளிஷ் பட்டனை...!

அலுவலக கேண்டீனில் ஏதோவொரு ஆங்கில செய்தி சேனல் ”டெல்லி ரேப் கேஸ் டெல்லி ரேப் கேஸ்” என்று கூவிக் கொண்டிருந்தது. தேநீர் இடைவெளியில் பிரகாஷும் பாலாவும் எனக்கு இடவலமாய் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். ஆஸ்திரேலிய முதலாளிகளுக்கு உழைக்கத் துவங்கிய பின் நள்ளிரவோ அதிகாலையோ...  ஏதோவொரு மூன்று மணிக்கு எழுந்துத் தொலைய வேண்டியிருக்கும் சோக நிகழ்வை அசைபோட்டவாறு, ”இப்பிடி ஆகிப் போச்சே நம்ம பொழப்பு?” என்றபடி கொட்டாவியை மென்று கொண்டு தூக்கத்தைக் கொன்ற வண்ணம் அவர்களிருவருக்குமிடையே இரண்டு காதுகளையும் வேறு வழியின்றி கொடுத்துக் கொண்டிருந்தேன்.

“இந்த மீடியாவுக்கு இது இன்னொரு செல்லிங் ப்ராடக்ட் ஆகிடுச்சி இல்ல?”

“ஏ அப்டி சொல்லாதப்பா”

“பின்ன எப்டி சொல்லணும்?”

“இந்த சம்பவத்துக்கு முன்ன டெல்லில 2012’ல எத்தனை ரேப் நடந்துச்சாம் தெரியுமா?”

“எத்தனை”

“நூத்தி இத்தனாம் சொச்சம்”, ஏதோ ஒரு எண்ணைச் சொல்கிறார் பாலா. நான் அசுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

“அதுக்கு என்னப்பா இப்போ?”

இப்படியே இன்னமும் பத்து நிமிஷம் பேசுகிறார்கள். பேசிக்கொண்டே இருக்கிறார்கள். 

கடைசியாக மறக்காமல் கரெக்டாக பாய்ண்ட்டுக்கு என்னிடம் வருகிறார்கள்.

“சார், நீங்க இதுபத்தி எதுவும் எழுதலையா?”

”எது பத்தி?”

“இந்த டெல்லி ரேப் கேஸ்”

“இல்லைங்க! இப்பல்லாம் சரியா எழுத ஒக்கார்றதில்லை”

“ஒக்காரணும் சார். எழுதணும். தட்டிக் கேக்கணும். மீடியான்னா என்னான்னு காட்டணும்”

"யாருது மீடியா?”

“நம்மள்துதான் சார்?”

“இங்க யாரு நம்மளுன்றது?”

“நீங்க எழுதறீங்கன்னா நீங்களும் மீடியாதான் சார்”

“நான் எழுதினா நாப்பது பேர் படிச்சா அதுவே ரொம்ப அதிகமப்பா”

“அந்த நாப்பதுல ஒரு பாரதி இருந்துட்டா? ஒரு மரப்பொந்துக்கு அக்கினிக் குஞ்சைத் தர்றதா உங்க எழுத்து இருந்துட்டா? வெந்து வேக்காடாகிடும் சார் நாடே!’ 

”அது சரி!”, மீண்டும் அசுவாரசியம். மறுபடி கொட்டாவி. 

”அத்தனை வீரியமெல்லாம் கொண்டு எழுத நமக்கு வாராதப்பா”

“வரும் சார்! வரும்! எனக்கு கோவம் வருது சார்! இப்போ ஓங்கி அடிச்சா இந்த மேஜையே ஒடைஞ்சிடும். அவ்ளோ ஆத்திரமா வருது. எனக்கு எழுத வந்தா உங்களைக் கேப்பேனா? நானே சரசரன்னு எழுதிட மாட்டேன்?”

”சரி! என்ன எழுதணும்னு சொல்லு...  அப்படியே எழுதிடறேன்”

“உங்ககிட்ட சொன்னனே! வாங்க எந்திரிங்க போகலாம். யோவ் பாலா! எந்திரிய்யா”

அந்த அத்தியாயம் முடிந்தது. அவரவர் அவரவர் வேலையை வழக்கம்போல் பார்க்கப் போய்விட்டோம்.

அதன்பிறகு அன்று முழுக்க பாலா சொன்ன அந்த நூற்று சொச்ச எண்களே என் மனசில் ஓடிக் கொண்டிருந்தது. நம் நாட்டின் தலைநகரில் மட்டும் இப்படி இத்தனை அநியாயங்கள் நடக்கிறதென்றால்? இவை பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மாத்திரமே. பதிவு செய்யப்படாமல் போனவை, பதிவு செய்ய வேண்டாம் என்று விடப்பட்டவை என்று எத்தனை எத்தனை இருக்கும்?  இந்த சம்பவத்திற்கு முன்பு நடந்த அந்த மற்ற நூற்று சொச்சத்தில் இதைவிடக் கொடூரக் கதைகள் இருந்திருக்கக் கூடும். 

நாம் தவறு செய்த அந்த ஆறு பேரைத்தான் பார்க்கிறோம். அவர்களுக்கு அவசர அவசரமாக ஏதும் கொடூர தண்டனை கொடுத்து ஒரு சராசரி மனிதனின் பழிக்குப்பழி மனோபாவத்திற்குத் தீனி போட்டுவிடத் துடிக்கிறது நம் மனது. 

நூற்று சொச்சம், கூடவே இந்த ஒன்று. இத்துடன் முடிந்துவிடுவதில்லை விஷயம். இது இன்னமும் தொடரும். தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

என்ன செய்யப் போகிறோம்?

Jun 14, 2013

கிழக்கு வாசல்

நன்றி: B.Ramesh <http://www.flickr.com/people/9219615@N03>


உலகின் முதல் அதிசயம்.
சத்தமிடும் ரகசியம்.

காலவெள்ளம்

தேங்கிநிற்கும் நீலப் பள்ளம்.
(தண்ணீர் தேசம் - வைரமுத்து)


நகர நெரிசலில் அரை வாளி, கால் வாளி நீரைப் பார்த்துப் பழகிய ஒரு சின்னஞ்சிறுவன் ஒருநாள் முதன்முறையாக கடற்கரைக்கு வந்திருந்தான். தன்னெதிரே பரந்து விரிந்த நீர்ப்பரப்பைப் பார்த்து இரண்டு நிமிடங்கள் வாய்ப்பூட்டி நின்று விட்டு அடுத்து என்ன தோன்றியதோ ஐந்து நிமிடங்களுக்கு பி.எஸ்,வீரப்பா தொனியில் பகபக’வென சிரித்துக் கொண்டேயிருந்தான். ”அத்தனை நீர்” என்பது அந்தச் சின்னக் கண்களுக்கு மட்டுமல்ல உலகில் ஒவ்வொருவருக்குமே அப்படி ஒரு அதிசயம்.

பொதுவாகக் கடலும் யானையும்தான் இந்த உலகின் தீராத அதிசயங்கள் எனச் சொல்வார்கள்.

ரயிலுக்கும் இந்தத் தீரா அதிசயப் பட்டியலில் ஒரு காலத்தில் இடம் இருந்தது. ஊரெங்கும் நீராவி எஞ்சினின் புகைமணத்தைப் பரப்பி விட்டபடி நம்மைக் கடக்கும் ரயில்களின் கருப்புவெள்ளை நினைவுகளை மின்ரயில்களின் வருகையில் தொலைத்து வருடங்கள் ஆயிற்று. அதன் பின்னர் ரயில் மீதான காதல் மக்களுக்குக் கரைந்து கொண்டே வந்து, இப்போது அந்த ரயில் நம்மூரில் கண்டா முண்டாவென விபத்துகளை ஏற்படுத்திக் கடலுக்கும் யானைக்கும் அடுத்ததாக அந்தப் பட்டியலில் இருந்த தன் பெயரைத் தானே நீக்கிக் கொண்டது.

கான்க்ரீட் காடாகிப் போன சென்னையில் நான் அறிந்த வரையில் யானையை பார்த்தசாரதி கோயிலில் மட்டுமே பார்க்க முடியும். அல்லது எப்போதாவது புறநகர்ப் பகுதிகளில் உலாவரும் ”பிச்சை நடை” நடக்கும் யானைகளைப் பார்க்கலாம்.

ஆக, ரயிலையும் யானையையும் தவிர்த்தால் மிச்சமிருக்கும் மற்றொரு மாபெரும் தீராத அதிசயமான சமுத்திரத்தைத் தன்பால் கொண்ட பெருமை சென்னையைச் சேரும். 2004’ன் சுனாமியின் பேரழிவுகளைக்  கொஞ்சம் கஷ்டப்பட்டு மறந்தோம் என்றால் சென்னையின் கடல் புராணத்தைப் பேசிக் கொண்டே போகலாம்.

மெரினா திரைப்படத்தில் சென்னைக் கடற்கரையின் வாழவைக்கும் / ஓட வைக்கும் கதைகளைச் சொல்லியிருப்பார் பாண்டிராஜ். அது சினிமாவின் ஃப்ரேம். நிஜத்தின் ஃப்ரேம் இன்னும் அழகாகப் பல இடங்களிலும், பயங்கர விகாரமாகச் சில இடங்களிலும் இருக்கலாம். இருக்கிறது.

அண்ணாவும், எம்ஜிஆரும், உழைப்பாளர் சிலையும், பீச் ரோடில் இருந்து கடலலை வரை கால் புதைய ரசனையோட நம்மை நடைநடக்க வைக்கும் மணற்பரப்பும், மதுரைப் பயல்களின் தெற்கத்தித் தமிழில் "நைநைநை” நச்சரிப்பில் கிடைக்கும் சுண்டலும் கைமுறுக்கும், வெயில் வேளைகளில் படகு மறைவுகளிலும் வெயில் சாய்ந்தால் வெட்டவெளி மணல்வெளியிலும் அங்க அடையாளங்களைச் சரிபார்த்தபடியும் இருக்கும் காதலர்களும், ”ஸ்ஸோஸியே” என்று கையில் இரும்புக் குச்சி தாங்கிய கைரேகை ஜோசியம் பார்க்கும் பெண்மணிகளும், பலூன் சுடும் கடைகளும், நான்குநாள் விற்காத சமோசா சுண்டலைச் சுடச்சுட உங்கள் தலையில் கட்டத் தயாராய் இருக்கும் பயல்களும், வாங்கும்போது பத்து ரூபாய் சொல்லிவிட்டு தின்றுமுடித்தபின் ஐம்பது ரூபாய் பிடுங்கும் ஐஸ்வண்டிக்காரர்களும்,   கார்க் ஓபனர் வைத்து கிலீர் ஜிலீர் சத்தத்துடன் கூல்ட்ரிங்க் விற்கும் தள்ளுவண்டிகளும், சோழி விற்கும் கடைகளும், மீன்படத்துடன் மீன்வாசமும் காற்றினில் ஆடவிடும் மீன்பஜ்ஜிக் கடைகளும், ரஜினி கமல் த்ரிஷாவுடன் உங்களை நிற்கவைக்கவல்ல திறந்தவெளி ஃபோட்டோ ஸ்டுடியோக்களும், மணற்கேணி தோண்டி  நீரிறைத்து விற்பவர்களும் என மெரினா பீச்சில் சொல்லவல்ல சுவாரசியங்கள் ஆயிரம் உண்டு.


இந்தக் காரணம் அந்தக் காரணம் என்றல்ல, என்னத்துக்காகவேனும் கடற்கரை வரலாம். தண்ணியடிக்கக் காரணமா தேவை? சந்தோஷம், கொண்டாட்டம், துக்கம், வெறுமை, சும்மா ஜஸ்ட் லைக் தட், அப்புறம்.... அது இருக்கு ஆயிரம் காரணங்கள். அதுபோலத்தான் பீச்சாங்கரை விஜயங்களும்.

காதலியுடன் கடலை போடும் காரணங்கள் பொதுவாக இங்கே முன்னிலை பெறுகின்றன. டீஸண்டான காதல்கள் கடற்கரைப் பக்கம் ஒதுங்குவதாக நாம் அறிவதில்லை. க்ளைமாக்ஸ் தவிர மற்ற அனைத்து அரங்கேற்றங்களும் இங்கே ம்ம்ம்ம்ம். பங்குனி மாதத்தின் மட்டமதியச் சூரியச்சுடர் இவர்களுக்கு மட்டும் மார்கழி மாதத்து இரவின் குளிர் நிலவு. ஒரு துப்பட்டாவின் நிழல் போதுமானதாயிருக்கிறது வெயில் மறைக்கவும் அதன் மறைவில் மறைத்தவைகள் பகிரவும்.

கல்யாணம் ஆன புதுசுகளின் விஸிட்டிங் லிஸ்டில்  சினிமாவுக்கு அடுத்ததாக பீச் உண்டு. கூட்டுக் குடும்ப அன்பர்கள் தலைமுடிபற்றி இளம்மனைவியர் உலுக்கப் பழகும் இடம் இதுவே.

நண்பர்களுடன் வரும் இளந்தாரிகள் சட்டை கழற்றி இவனை அவன் தூக்கிப்போட்டு அவனை இவன் தூக்கிப் போட்டு தெரியாத நீச்சலை அடித்து முடிக்கச் சிறந்த இடம்.

குழந்தைகள், மாலைச் சிற்றுண்டி வகையறாக்கள் மற்றும் பெரிய பெட்ஷீட், சகிதம் வரும் ஐந்து வருடங்கள் கடந்தக் கல்யாணஸ்தர்கள். பாதுகாப்பான இடைவெளியில் பெற்றெடுத்தவைகள் பாதுகாப்பான இடைவெளியில் பந்து, பட்டம் என ஏதோ ஆடிக்கொண்டிருக்க ஒரு சிக்கனமான தொட்டுக்கோ தொடைச்சிக்கோ வகையில் இருபத்தியிரண்டாம் சின்ன ஹனிமூன் அரங்கேற்றலாம்.

தனிமைத் தண்ணியடி பார்ட்டிகள் தீர்த்தவாரி முடிந்தபின் தனிமையில் வந்து நெட்டுக்குத்தல் பார்வையுடன் முட்டிக்கொண்டு நிற்கும் கண்ணீருடன் சிலப்பல மணிநேரங்கள் அமர்ந்திருக்கும். பேசாத் தனிமை சிலது. பேச்சுடன் தனிமை சிலது.
கடலலை தீண்டாத நிலப்பரப்பின் தமிழ்மக்கள் பஸ் கட்டிக்கொண்டு சென்னை வந்தால் மதியத்திற்குப் பின் மாலை கவியும் வேளை வரை கொண்டு வந்த பஸ்சை எங்கேனும் ஓரத்தில் பார்க்கிவிட்டு நேரம் செலவிட வருவது மெரினாவிற்கே.

நமக்குத்தான் சங்கூதுதல் சாயுங்காலச் சடங்கொலியாகவும் அபசகுணமாகவும் ஆகிவிட்டது.சங்கு காற்றின் நுண்கிருமிகளை அழிக்க வல்லது என்பது அறிவியற்பூர்வ உண்மை. வீட்டு வாசலில் நம் வீடுகளில் சங்கைக் கட்டித் தொங்கவிடும் வழக்கு இப்போது ஒழிந்துவிட்டது.  வடஇந்தியர்களுக்கு சங்கின் ஒலி பூஜை மணியோசை. வெற்றி முழக்க ஒலி. மெரினா வந்தால் மறக்காமல் அவர்கள் ஷாப்பிங் லிஸ்டில் சங்கு இருக்கும். விரல்களுக்கிடையே கச்சிதமாய்ப் பொருத்தி அமர்த்தி, ஊதிப்பார்த்து, விலைபேசி இவர்கள் வாங்கும் அழகே அழகு.

உபி, மபி, ஹிபி என வடக்கத்தியர்கள் இங்கே வந்தால் கடல்மாதா தரிசனம் காணாமல் திரும்புவது இல்லை. நாற்புறமும் நிலத்தால் சூழ்ந்த பகுதியிலிருந்து வருபவர்களுக்கு கடல் என்பது ஒரு பேரதிசயம். நீரில் இறங்கினதும் சமுத்திரத் தண்ணீரைத் தலையில் தெளித்துக் கண்ணில் ஒற்றிக் கொள்பவர்கள் நம்மவர்களில் ஒண்ணேமுக்கால் சதம் என்றால் வடக்கத்தியர்களில் தொண்ணூற்று ஒன்பதே முக்கால் சதத்தினர்.

அடடே! இத்தனை சொன்னவன் அந்த உப்பும் மிளகாய்த் தூளும் தூவின கீறல் விழுந்த ஒட்டு மாங்காய்களை மறந்தனனே! விடு ஜூட்! நான் கடல்மாதாவை தரிசிக்கப் போய் வருகிறேன், மெரினாவோடான உங்கள் சுவாரசிய அனுபவங்களை எனக்கு எழுதுங்களேன்....

Jun 12, 2013

வெஸ்டின்’டீஸர்’கள்

நேற்றைய ஒருநாள் போட்டியில்....
”எலே! தர்ட் அம்பயரயா ரெஃபரல் கேட்ட? அவரும் அவுட்டுன்னுட்டாருலே” என்று ரோஹித்தைக் கிண்டலடிக்கும் வெஸ்ட் இண்’டீஸர்கள்

நன்றி: படத்தைப் பிரசுரித்த ஈஎஸ்பிஎன்-க்ரிகின்ஃபோ & லின்க் தந்த அண்ணன் கணேஷ் சந்திரா

Jun 10, 2013

ரோஸ்டட் ரைஸ் பேஸ்ட்

தமிழ் இணைய ஜாம்பவான்கள் சிலர் அவ்வப்போது ஏதேனும் ஆங்கில வார்த்தையைக் கற்பழிக்கிறேன் பேர்வழி என்று தமிழ்ப்’படுத்தி’த் தொலைக்கிறார்கள். அப்போதெல்லாம் நறநறவென்று கோபம் பொத்துக் கொண்டு வரும். என்னய்யா வேலையத்த வேலை என்று. 

ஆனால் யோசித்துப் பார்த்தால் ஆங்கிலத்தில் என்ன ஏது என்றே புரியாத ஒரு வார்த்தையைக் கண்டு துள்ளிக் குதித்து தப்பித்து ஓடிவிடும் ஒருத்தர், எந்த ஒரு வார்த்தையையும் புரிந்து கொள்ளத் தலை வணங்காத ஒருத்தர், தமிழ் என்று சொன்னால் ஒருவேளை... எத்தனை கடினமான, புதுசான, புதுமையான, விநோதமான வார்த்தையாக இருந்தாலும் அதற்கு அர்த்தம் தேட முயலலாம். 

“லாம்....” என்றுதான் சொல்கிறேன். ஆகவே தமிழ்ப்படுத்தல் எதிர்ப்புக் குழு எதிர்ப்புக் குரல் எழுப்ப வேண்டாம். நான் இன்னமும் உங்க பக்கந்தான் இருக்கேன்.

சரி, விசியத்துக்கு வாரேன். என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால்....  இந்தப் ‘படுத்தல்’ அன்பர்கள் தங்கள் ஆங்கிலம் டு தமிழ்ப் படுத்தலோடு சேர்த்து நல்ல சில தமிழ்ப் பெயர்ச் சொற்களையும் ஆங்கிலப் படுத்த உதவலாம்.

ப்ரைம் உதாரணங்கள் இரண்டை முன் வைக்கிறேன் - 

ஒன்று: “இட்லி”
இரண்டு: ”தோசை”

வொய் இட்லி அண்ட் தோசை ஸடன்லி?

காரணம் இருக்கே...

கெர்ரி இன்வுட் என்றொரு அன்பர். எங்கள் அபிமான வெள்ளைக்கார கிளையண்ட். நல்லவர் வல்லவர்; சமீபத்தில் பாரத நாட்டிற்கு ஒரு திக் விஜயம் மேற்கொண்டார். தாங்கள் தந்த வேலைகளெல்லாம் செவ்வனே செய்யப்படுகின்றனவா என செக் செய்ய அவர் மேற்கொண்ட விஸிட்.

முதல்நாள் வேலைகள் இனிதே நிறைவடைந்து இரவு உணவுக்கு ’மல்ட்டி கஸின்” ரெஸ்டாரண்ட் ஒன்றிற்கு அழைத்துச் சென்றோம். அங்கே பெரிதாக ஒரு பிரச்னையும் இல்லை. பெரும்பாலான ஐட்டங்கள் அவர் ஏற்கெனவே சுவைத்துப் பார்த்ததாகவே இருந்தன. 

“டோண்ட் மேக் இட் ஸ்பைஸி. தட்ஸ் தி ஒன்லி ரிக்வெஸ்ட்” (காரமா சமைச்சிடாதே! அது மட்டுந்தான் என் வேண்டுகோள்) என்று ஒவ்வொரு தட்டு அவர் பக்கமாக வரும்போதும் அங்கே வேலை செய்த கஸினிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

இரண்டாவதுநாள் மதிய உணவுக்கு ஒரு அசட்டுத் தைரியத்தில் நம்ம ‘சரவணபவனுக்கு’ அவரை தள்ளிக்கொண்டு போயிருந்தோம். 

நானும், என் சகாக்களும், எங்கள் பாஸும் அவருக்கு வெரைட்டி ரைஸ் வாங்கிக் கொடுத்து விடலாம் என்று நினைத்தோம்.

”சார்! அந்தாளெல்லாம் சோறு துன்ன மாட்டான் சார்”, இது நான்.

“ஏன்யா? நீ அந்த ஊருக்குப் போனா பீட்ஸாவும் பர்கரும் தின்னலை?”

“டூ யூ வாண்ட் டிஃபன்? ஆர் டூ யூ மைன்ட் ஈட்டிங் ரைஸ்?”

“விச் ஈஸ் ஸ்பைஸி?” - என்னா கேள்விய்யா!?

“வீ டோண்ட் குக் எனிதின் ஸ்பைஸி ஃபார் அவர் ஃபாரின் விசிட்டர்ஸ் ஸார்”, என்றார் சப்ளை அன்பர்.

“ஓகே! வாட்ஸ் தி டிஃபரன்ஸ். வாட் ஈஸ் டிஃபன்?”, என கேள்வி வந்தது கெர்ரி’யிடமிருந்து

இதென்னடா வம்பாப் போச்சி என யோசிக்கையில்...

“ரைஸ் ஈஸ் சிம்ப்ளி ரைஸ், வாட் எவர் எல்ஸ் குக்ட் ஹியர் ஈஸ் டிஃபன்”, என்றொரு அற்புத பதிலை சகா ஒருத்தன் தந்தான்.

அந்த நேரம் பார்த்து ”பெத்த பாஸு” என்று ஒருத்தர் இருக்கிறாரே, அதாங்க எங்க எல்லாருக்கும் பாஸ், அவர் அங்கே பிரசன்னமானார்.

”கெர்ரி, டூ யூ வாண்ட் டு டேக் தோஸா?”

அது என்ன என்று கேட்பதற்கு முன்னால், “ஈஸ் இட் ஸ்பைஸி?”, என்ற கேள்விதான் மறுபடியும் வந்து விழுந்தது.

அதாகப்பட்டது வெள்ளை அன்பர்கள் பெரும்பாலானவர்களுக்கு இந்த பச்சை/சிவப்பு மிளகாய் வகையராக்களுடன் பரிச்சயம் கிடையாது. அதன் ஒரேயொரு விதையைத் தெரியாமல் விழுங்கி விட்டாலும் மறுநாள் முழுக்க “ரெஸ்ட் ரூமில்” குடித்தனம் செய்ய நேரிடும் என்னும் பயத்தை இந்தியாவிற்குள் நுழையும்போதே போர்த்திக் கொண்டுதான் உள்நுழைகிறார்கள் அவர்கள்.

”நோ சார், ஐ ரிபீட். வீ டோண்ட் குக் எனிதின் ஸ்பைஸி ஃபார் அவர் ஃபாரின் விசிட்டர்ஸ்”இப்போது, வரலாற்று சிறப்பு மிக்கக் கேள்வி வந்து விழுந்தது.

“வாட் ஈஸ் தோஸா?”

பெத்த பாஸு முதலில் வாயைத் திறந்தார்.

“இட்ஸ் எ கைண்ட் ஆஃப்...”

“ஃப்ரைட் ஐட்டம்?”

“நாட் ஃப்ரைட்... ஓகே.... யூ கேன் டெல் இட் ஈஸ் கைண்ட் ஆஃப் ஃப்ரைட்...”

“பாஸ், வி மே கால் இட் ரோஸ்டட்”, பக்கவாட்டில் சகா ஒருத்தனின் குரல்.

“யா... பெட்டர் வி கால் இட் ரோஸ்டட்”

“ரோஸ்டட் ஆஃப் வாட்?”, இது கெர்ரி

“யூ நோ ரைஸ்... இட் ஈஸ் க்ரைண்டட் அண்ட் மேட் லைக் எ பேஸ்ட்”

“யூ மீன் குக்ட் ரைஸ்..?” (அடடே... வாட்டே கொஸ்சின். இப்படியும் ஒருக்கா இட்லி பிழிந்து பார்க்கவேணும்)

“நோ நோ.... வித்தவுட் குக்கிங் வீ க்ரைண்ட் இட்...”

“ஓ... மேகிங் இட் பவுடர் அண்ட்....”

“அய்யோ ராமா.... சார்... சர்வர் சார்... அந்த தோசையைக் கொணாந்து காட்டுங்க சார். அந்த படம் போட்ட புக்கெல்லாம் உங்ககிட்ட இல்லியா?”

”நோ சார். வீ டோண்ட் ஹேவ்....மே ஐ ப்ரிங் ரோஸ்டட் வெஜிடபிள் தோஸா சார்?”

“நோ ஸ்பைஸி. ஓகே”

“டேய்... மறுபடியுமாடா...” தீனமாக ஒரு குரல் பின்னணியில் கேட்டது.

“பெட்டர் ப்ரிங் இட் அஸ் ரோஸ்டட் கீ வெஜிடபிள் தோஸா.... நல்லா நெய் ஊத்தி வாசமா இருக்கட்டும்”, இது மீண்டும் பெத்த பாஸு.

பதினைந்து நிமிட அவகாசத்தில் சுருட்டிய நியூஸ் பேப்பரென இரண்டு தட்டுகளில் தோசை வந்து சேர்ந்தது.

தோசை ஒன்றைக் கைகளில் அள்ளிக் கொண்டு அதன் இந்தப்புற சுருட்டல் துவாரத்திலிருந்து மறுதுவாரம் வழியாக அந்த அறை முழுதும் இருந்த எங்களைப் பார்த்துக் கண்ணடித்தார் கெர்ரி.

“கெர்ரி, தட் வில் ப்ரெக் இஃப் யூ டூ லைக் தட். ஸ்டார்ட் ஈட்டிங்”

“தட்ஸ் ரைட்...! ஓ இட்ஸ் ஸோ நைஸ்...கூல்.... ஹவ் டூ யூ மேக் திஸ்...??”, சர்வரைப் பார்த்த கேள்வி இப்போது.

மறுபடி மொதல்லேர்ந்தாஆஆஆஆஆஆ..........!


Jun 2, 2013

பெற்றோர் - குழந்தைகள் வாரம்

ஆம்னிபஸ் மீண்டும் ஒரு சிறப்பு வாரத்தைக் கொண்டாட இருக்கிறது.

தமிழ் எழுத்துச் சூழலில் தரமான குழந்தை இலக்கியத்திற்கான இடம் மிகமிகக் குறைவு என்பதை எல்லோரும் எப்போதும் பேசுகிறோம்.

நம் குழந்தைகளின் அடுத்த தலைமுறை புத்தகம் படிக்கும் தலைமுறையாக இருக்குமா இல்லையா என்பதை யார் எப்படித் தீர்மானிக்கப் போகிறார்கள் / போகிறோம் என்பது பெரிய கேள்வியாக, கவலையாக இருக்கிறது.


இதற்கு நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதற்கான தேடலில், வேலையில் இறங்குமுன்; ஆம்னிபஸ்சின் தொடர் வாசக சீனியர்கள் சிலரிடம் தங்கள் குழந்தைகளுக்கு என்ன கதை/புத்தகத்தை பரிந்துரைப்பீர்கள், அல்லது அவர்களுக்கு என்ன கதையைச் சொல்வீர்கள். ஏன் சொல்வீர்கள்? அதாவது அந்தக் கதையிலிருந்து நீங்கள் குழந்தைகளுக்கு உணர்த்தும் values என்ன? அதைக் குழந்தைகள் எப்படி எடுத்துக் கொண்டார்கள் என்று கேட்டோம்.

இவற்றைத் தங்கள் சொந்த அனுபவத்தைக் கொண்டு எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என கேட்டுக் கொண்டோம். தங்கள் குழந்தை அந்த புத்தகத்தைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்,நீங்கள் எந்த values ஐ கற்றுக் கொடுக்க உங்கள் குழந்தைக்கு ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை வாங்கிக் கொடுத்தீர்கள் என்பதையும் எழுதக் கேட்டுக் கொண்டோம்.

மிகவும் சுவாரசியமான சில பதிவுகள் வந்து சேர்ந்துள்ளன. குட்டிச்சுட்டிகளை வீட்டில் கொண்ட ஒவ்வொரு பெற்றோருக்கும் இந்தப் பதிவுகள் நிச்சயம் சுவாரசிய பகிர்வுகளாக அமையும்.

நாளை தொடங்கி அடுத்த ஒருவார காலத்திற்கு வெளிவரும் இந்த சிறப்புப் பதிவுகளைக் காத்திருந்து வாசிக்குமாறு ஆம்னிபஸ் வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம். 


Related Posts Plugin for WordPress, Blogger...