Jun 14, 2013

கிழக்கு வாசல்

நன்றி: B.Ramesh <http://www.flickr.com/people/9219615@N03>


உலகின் முதல் அதிசயம்.
சத்தமிடும் ரகசியம்.

காலவெள்ளம்

தேங்கிநிற்கும் நீலப் பள்ளம்.
(தண்ணீர் தேசம் - வைரமுத்து)


நகர நெரிசலில் அரை வாளி, கால் வாளி நீரைப் பார்த்துப் பழகிய ஒரு சின்னஞ்சிறுவன் ஒருநாள் முதன்முறையாக கடற்கரைக்கு வந்திருந்தான். தன்னெதிரே பரந்து விரிந்த நீர்ப்பரப்பைப் பார்த்து இரண்டு நிமிடங்கள் வாய்ப்பூட்டி நின்று விட்டு அடுத்து என்ன தோன்றியதோ ஐந்து நிமிடங்களுக்கு பி.எஸ்,வீரப்பா தொனியில் பகபக’வென சிரித்துக் கொண்டேயிருந்தான். ”அத்தனை நீர்” என்பது அந்தச் சின்னக் கண்களுக்கு மட்டுமல்ல உலகில் ஒவ்வொருவருக்குமே அப்படி ஒரு அதிசயம்.

பொதுவாகக் கடலும் யானையும்தான் இந்த உலகின் தீராத அதிசயங்கள் எனச் சொல்வார்கள்.

ரயிலுக்கும் இந்தத் தீரா அதிசயப் பட்டியலில் ஒரு காலத்தில் இடம் இருந்தது. ஊரெங்கும் நீராவி எஞ்சினின் புகைமணத்தைப் பரப்பி விட்டபடி நம்மைக் கடக்கும் ரயில்களின் கருப்புவெள்ளை நினைவுகளை மின்ரயில்களின் வருகையில் தொலைத்து வருடங்கள் ஆயிற்று. அதன் பின்னர் ரயில் மீதான காதல் மக்களுக்குக் கரைந்து கொண்டே வந்து, இப்போது அந்த ரயில் நம்மூரில் கண்டா முண்டாவென விபத்துகளை ஏற்படுத்திக் கடலுக்கும் யானைக்கும் அடுத்ததாக அந்தப் பட்டியலில் இருந்த தன் பெயரைத் தானே நீக்கிக் கொண்டது.

கான்க்ரீட் காடாகிப் போன சென்னையில் நான் அறிந்த வரையில் யானையை பார்த்தசாரதி கோயிலில் மட்டுமே பார்க்க முடியும். அல்லது எப்போதாவது புறநகர்ப் பகுதிகளில் உலாவரும் ”பிச்சை நடை” நடக்கும் யானைகளைப் பார்க்கலாம்.

ஆக, ரயிலையும் யானையையும் தவிர்த்தால் மிச்சமிருக்கும் மற்றொரு மாபெரும் தீராத அதிசயமான சமுத்திரத்தைத் தன்பால் கொண்ட பெருமை சென்னையைச் சேரும். 2004’ன் சுனாமியின் பேரழிவுகளைக்  கொஞ்சம் கஷ்டப்பட்டு மறந்தோம் என்றால் சென்னையின் கடல் புராணத்தைப் பேசிக் கொண்டே போகலாம்.

மெரினா திரைப்படத்தில் சென்னைக் கடற்கரையின் வாழவைக்கும் / ஓட வைக்கும் கதைகளைச் சொல்லியிருப்பார் பாண்டிராஜ். அது சினிமாவின் ஃப்ரேம். நிஜத்தின் ஃப்ரேம் இன்னும் அழகாகப் பல இடங்களிலும், பயங்கர விகாரமாகச் சில இடங்களிலும் இருக்கலாம். இருக்கிறது.

அண்ணாவும், எம்ஜிஆரும், உழைப்பாளர் சிலையும், பீச் ரோடில் இருந்து கடலலை வரை கால் புதைய ரசனையோட நம்மை நடைநடக்க வைக்கும் மணற்பரப்பும், மதுரைப் பயல்களின் தெற்கத்தித் தமிழில் "நைநைநை” நச்சரிப்பில் கிடைக்கும் சுண்டலும் கைமுறுக்கும், வெயில் வேளைகளில் படகு மறைவுகளிலும் வெயில் சாய்ந்தால் வெட்டவெளி மணல்வெளியிலும் அங்க அடையாளங்களைச் சரிபார்த்தபடியும் இருக்கும் காதலர்களும், ”ஸ்ஸோஸியே” என்று கையில் இரும்புக் குச்சி தாங்கிய கைரேகை ஜோசியம் பார்க்கும் பெண்மணிகளும், பலூன் சுடும் கடைகளும், நான்குநாள் விற்காத சமோசா சுண்டலைச் சுடச்சுட உங்கள் தலையில் கட்டத் தயாராய் இருக்கும் பயல்களும், வாங்கும்போது பத்து ரூபாய் சொல்லிவிட்டு தின்றுமுடித்தபின் ஐம்பது ரூபாய் பிடுங்கும் ஐஸ்வண்டிக்காரர்களும்,   கார்க் ஓபனர் வைத்து கிலீர் ஜிலீர் சத்தத்துடன் கூல்ட்ரிங்க் விற்கும் தள்ளுவண்டிகளும், சோழி விற்கும் கடைகளும், மீன்படத்துடன் மீன்வாசமும் காற்றினில் ஆடவிடும் மீன்பஜ்ஜிக் கடைகளும், ரஜினி கமல் த்ரிஷாவுடன் உங்களை நிற்கவைக்கவல்ல திறந்தவெளி ஃபோட்டோ ஸ்டுடியோக்களும், மணற்கேணி தோண்டி  நீரிறைத்து விற்பவர்களும் என மெரினா பீச்சில் சொல்லவல்ல சுவாரசியங்கள் ஆயிரம் உண்டு.


இந்தக் காரணம் அந்தக் காரணம் என்றல்ல, என்னத்துக்காகவேனும் கடற்கரை வரலாம். தண்ணியடிக்கக் காரணமா தேவை? சந்தோஷம், கொண்டாட்டம், துக்கம், வெறுமை, சும்மா ஜஸ்ட் லைக் தட், அப்புறம்.... அது இருக்கு ஆயிரம் காரணங்கள். அதுபோலத்தான் பீச்சாங்கரை விஜயங்களும்.

காதலியுடன் கடலை போடும் காரணங்கள் பொதுவாக இங்கே முன்னிலை பெறுகின்றன. டீஸண்டான காதல்கள் கடற்கரைப் பக்கம் ஒதுங்குவதாக நாம் அறிவதில்லை. க்ளைமாக்ஸ் தவிர மற்ற அனைத்து அரங்கேற்றங்களும் இங்கே ம்ம்ம்ம்ம். பங்குனி மாதத்தின் மட்டமதியச் சூரியச்சுடர் இவர்களுக்கு மட்டும் மார்கழி மாதத்து இரவின் குளிர் நிலவு. ஒரு துப்பட்டாவின் நிழல் போதுமானதாயிருக்கிறது வெயில் மறைக்கவும் அதன் மறைவில் மறைத்தவைகள் பகிரவும்.

கல்யாணம் ஆன புதுசுகளின் விஸிட்டிங் லிஸ்டில்  சினிமாவுக்கு அடுத்ததாக பீச் உண்டு. கூட்டுக் குடும்ப அன்பர்கள் தலைமுடிபற்றி இளம்மனைவியர் உலுக்கப் பழகும் இடம் இதுவே.

நண்பர்களுடன் வரும் இளந்தாரிகள் சட்டை கழற்றி இவனை அவன் தூக்கிப்போட்டு அவனை இவன் தூக்கிப் போட்டு தெரியாத நீச்சலை அடித்து முடிக்கச் சிறந்த இடம்.

குழந்தைகள், மாலைச் சிற்றுண்டி வகையறாக்கள் மற்றும் பெரிய பெட்ஷீட், சகிதம் வரும் ஐந்து வருடங்கள் கடந்தக் கல்யாணஸ்தர்கள். பாதுகாப்பான இடைவெளியில் பெற்றெடுத்தவைகள் பாதுகாப்பான இடைவெளியில் பந்து, பட்டம் என ஏதோ ஆடிக்கொண்டிருக்க ஒரு சிக்கனமான தொட்டுக்கோ தொடைச்சிக்கோ வகையில் இருபத்தியிரண்டாம் சின்ன ஹனிமூன் அரங்கேற்றலாம்.

தனிமைத் தண்ணியடி பார்ட்டிகள் தீர்த்தவாரி முடிந்தபின் தனிமையில் வந்து நெட்டுக்குத்தல் பார்வையுடன் முட்டிக்கொண்டு நிற்கும் கண்ணீருடன் சிலப்பல மணிநேரங்கள் அமர்ந்திருக்கும். பேசாத் தனிமை சிலது. பேச்சுடன் தனிமை சிலது.
கடலலை தீண்டாத நிலப்பரப்பின் தமிழ்மக்கள் பஸ் கட்டிக்கொண்டு சென்னை வந்தால் மதியத்திற்குப் பின் மாலை கவியும் வேளை வரை கொண்டு வந்த பஸ்சை எங்கேனும் ஓரத்தில் பார்க்கிவிட்டு நேரம் செலவிட வருவது மெரினாவிற்கே.

நமக்குத்தான் சங்கூதுதல் சாயுங்காலச் சடங்கொலியாகவும் அபசகுணமாகவும் ஆகிவிட்டது.சங்கு காற்றின் நுண்கிருமிகளை அழிக்க வல்லது என்பது அறிவியற்பூர்வ உண்மை. வீட்டு வாசலில் நம் வீடுகளில் சங்கைக் கட்டித் தொங்கவிடும் வழக்கு இப்போது ஒழிந்துவிட்டது.  வடஇந்தியர்களுக்கு சங்கின் ஒலி பூஜை மணியோசை. வெற்றி முழக்க ஒலி. மெரினா வந்தால் மறக்காமல் அவர்கள் ஷாப்பிங் லிஸ்டில் சங்கு இருக்கும். விரல்களுக்கிடையே கச்சிதமாய்ப் பொருத்தி அமர்த்தி, ஊதிப்பார்த்து, விலைபேசி இவர்கள் வாங்கும் அழகே அழகு.

உபி, மபி, ஹிபி என வடக்கத்தியர்கள் இங்கே வந்தால் கடல்மாதா தரிசனம் காணாமல் திரும்புவது இல்லை. நாற்புறமும் நிலத்தால் சூழ்ந்த பகுதியிலிருந்து வருபவர்களுக்கு கடல் என்பது ஒரு பேரதிசயம். நீரில் இறங்கினதும் சமுத்திரத் தண்ணீரைத் தலையில் தெளித்துக் கண்ணில் ஒற்றிக் கொள்பவர்கள் நம்மவர்களில் ஒண்ணேமுக்கால் சதம் என்றால் வடக்கத்தியர்களில் தொண்ணூற்று ஒன்பதே முக்கால் சதத்தினர்.

அடடே! இத்தனை சொன்னவன் அந்த உப்பும் மிளகாய்த் தூளும் தூவின கீறல் விழுந்த ஒட்டு மாங்காய்களை மறந்தனனே! விடு ஜூட்! நான் கடல்மாதாவை தரிசிக்கப் போய் வருகிறேன், மெரினாவோடான உங்கள் சுவாரசிய அனுபவங்களை எனக்கு எழுதுங்களேன்....

2 comments:

Jawahar said...

மெரினா ஒரு அமுதசுரபி. அதைப் பல கோணங்களில் புதுப் பரிமாணங்களில் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.. அலுக்கவே அலுக்காது!

http://kgjawarlal.wordpress.com

raja vel said...

ennamo ponga..... palasaiyellam yabagapaduthikittu....

Related Posts Plugin for WordPress, Blogger...