Jun 10, 2013

ரோஸ்டட் ரைஸ் பேஸ்ட்

தமிழ் இணைய ஜாம்பவான்கள் சிலர் அவ்வப்போது ஏதேனும் ஆங்கில வார்த்தையைக் கற்பழிக்கிறேன் பேர்வழி என்று தமிழ்ப்’படுத்தி’த் தொலைக்கிறார்கள். அப்போதெல்லாம் நறநறவென்று கோபம் பொத்துக் கொண்டு வரும். என்னய்யா வேலையத்த வேலை என்று. 

ஆனால் யோசித்துப் பார்த்தால் ஆங்கிலத்தில் என்ன ஏது என்றே புரியாத ஒரு வார்த்தையைக் கண்டு துள்ளிக் குதித்து தப்பித்து ஓடிவிடும் ஒருத்தர், எந்த ஒரு வார்த்தையையும் புரிந்து கொள்ளத் தலை வணங்காத ஒருத்தர், தமிழ் என்று சொன்னால் ஒருவேளை... எத்தனை கடினமான, புதுசான, புதுமையான, விநோதமான வார்த்தையாக இருந்தாலும் அதற்கு அர்த்தம் தேட முயலலாம். 

“லாம்....” என்றுதான் சொல்கிறேன். ஆகவே தமிழ்ப்படுத்தல் எதிர்ப்புக் குழு எதிர்ப்புக் குரல் எழுப்ப வேண்டாம். நான் இன்னமும் உங்க பக்கந்தான் இருக்கேன்.

சரி, விசியத்துக்கு வாரேன். என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால்....  இந்தப் ‘படுத்தல்’ அன்பர்கள் தங்கள் ஆங்கிலம் டு தமிழ்ப் படுத்தலோடு சேர்த்து நல்ல சில தமிழ்ப் பெயர்ச் சொற்களையும் ஆங்கிலப் படுத்த உதவலாம்.

ப்ரைம் உதாரணங்கள் இரண்டை முன் வைக்கிறேன் - 

ஒன்று: “இட்லி”
இரண்டு: ”தோசை”

வொய் இட்லி அண்ட் தோசை ஸடன்லி?

காரணம் இருக்கே...

கெர்ரி இன்வுட் என்றொரு அன்பர். எங்கள் அபிமான வெள்ளைக்கார கிளையண்ட். நல்லவர் வல்லவர்; சமீபத்தில் பாரத நாட்டிற்கு ஒரு திக் விஜயம் மேற்கொண்டார். தாங்கள் தந்த வேலைகளெல்லாம் செவ்வனே செய்யப்படுகின்றனவா என செக் செய்ய அவர் மேற்கொண்ட விஸிட்.

முதல்நாள் வேலைகள் இனிதே நிறைவடைந்து இரவு உணவுக்கு ’மல்ட்டி கஸின்” ரெஸ்டாரண்ட் ஒன்றிற்கு அழைத்துச் சென்றோம். அங்கே பெரிதாக ஒரு பிரச்னையும் இல்லை. பெரும்பாலான ஐட்டங்கள் அவர் ஏற்கெனவே சுவைத்துப் பார்த்ததாகவே இருந்தன. 

“டோண்ட் மேக் இட் ஸ்பைஸி. தட்ஸ் தி ஒன்லி ரிக்வெஸ்ட்” (காரமா சமைச்சிடாதே! அது மட்டுந்தான் என் வேண்டுகோள்) என்று ஒவ்வொரு தட்டு அவர் பக்கமாக வரும்போதும் அங்கே வேலை செய்த கஸினிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

இரண்டாவதுநாள் மதிய உணவுக்கு ஒரு அசட்டுத் தைரியத்தில் நம்ம ‘சரவணபவனுக்கு’ அவரை தள்ளிக்கொண்டு போயிருந்தோம். 

நானும், என் சகாக்களும், எங்கள் பாஸும் அவருக்கு வெரைட்டி ரைஸ் வாங்கிக் கொடுத்து விடலாம் என்று நினைத்தோம்.

”சார்! அந்தாளெல்லாம் சோறு துன்ன மாட்டான் சார்”, இது நான்.

“ஏன்யா? நீ அந்த ஊருக்குப் போனா பீட்ஸாவும் பர்கரும் தின்னலை?”

“டூ யூ வாண்ட் டிஃபன்? ஆர் டூ யூ மைன்ட் ஈட்டிங் ரைஸ்?”

“விச் ஈஸ் ஸ்பைஸி?” - என்னா கேள்விய்யா!?

“வீ டோண்ட் குக் எனிதின் ஸ்பைஸி ஃபார் அவர் ஃபாரின் விசிட்டர்ஸ் ஸார்”, என்றார் சப்ளை அன்பர்.

“ஓகே! வாட்ஸ் தி டிஃபரன்ஸ். வாட் ஈஸ் டிஃபன்?”, என கேள்வி வந்தது கெர்ரி’யிடமிருந்து

இதென்னடா வம்பாப் போச்சி என யோசிக்கையில்...

“ரைஸ் ஈஸ் சிம்ப்ளி ரைஸ், வாட் எவர் எல்ஸ் குக்ட் ஹியர் ஈஸ் டிஃபன்”, என்றொரு அற்புத பதிலை சகா ஒருத்தன் தந்தான்.

அந்த நேரம் பார்த்து ”பெத்த பாஸு” என்று ஒருத்தர் இருக்கிறாரே, அதாங்க எங்க எல்லாருக்கும் பாஸ், அவர் அங்கே பிரசன்னமானார்.

”கெர்ரி, டூ யூ வாண்ட் டு டேக் தோஸா?”

அது என்ன என்று கேட்பதற்கு முன்னால், “ஈஸ் இட் ஸ்பைஸி?”, என்ற கேள்விதான் மறுபடியும் வந்து விழுந்தது.

அதாகப்பட்டது வெள்ளை அன்பர்கள் பெரும்பாலானவர்களுக்கு இந்த பச்சை/சிவப்பு மிளகாய் வகையராக்களுடன் பரிச்சயம் கிடையாது. அதன் ஒரேயொரு விதையைத் தெரியாமல் விழுங்கி விட்டாலும் மறுநாள் முழுக்க “ரெஸ்ட் ரூமில்” குடித்தனம் செய்ய நேரிடும் என்னும் பயத்தை இந்தியாவிற்குள் நுழையும்போதே போர்த்திக் கொண்டுதான் உள்நுழைகிறார்கள் அவர்கள்.

”நோ சார், ஐ ரிபீட். வீ டோண்ட் குக் எனிதின் ஸ்பைஸி ஃபார் அவர் ஃபாரின் விசிட்டர்ஸ்”இப்போது, வரலாற்று சிறப்பு மிக்கக் கேள்வி வந்து விழுந்தது.

“வாட் ஈஸ் தோஸா?”

பெத்த பாஸு முதலில் வாயைத் திறந்தார்.

“இட்ஸ் எ கைண்ட் ஆஃப்...”

“ஃப்ரைட் ஐட்டம்?”

“நாட் ஃப்ரைட்... ஓகே.... யூ கேன் டெல் இட் ஈஸ் கைண்ட் ஆஃப் ஃப்ரைட்...”

“பாஸ், வி மே கால் இட் ரோஸ்டட்”, பக்கவாட்டில் சகா ஒருத்தனின் குரல்.

“யா... பெட்டர் வி கால் இட் ரோஸ்டட்”

“ரோஸ்டட் ஆஃப் வாட்?”, இது கெர்ரி

“யூ நோ ரைஸ்... இட் ஈஸ் க்ரைண்டட் அண்ட் மேட் லைக் எ பேஸ்ட்”

“யூ மீன் குக்ட் ரைஸ்..?” (அடடே... வாட்டே கொஸ்சின். இப்படியும் ஒருக்கா இட்லி பிழிந்து பார்க்கவேணும்)

“நோ நோ.... வித்தவுட் குக்கிங் வீ க்ரைண்ட் இட்...”

“ஓ... மேகிங் இட் பவுடர் அண்ட்....”

“அய்யோ ராமா.... சார்... சர்வர் சார்... அந்த தோசையைக் கொணாந்து காட்டுங்க சார். அந்த படம் போட்ட புக்கெல்லாம் உங்ககிட்ட இல்லியா?”

”நோ சார். வீ டோண்ட் ஹேவ்....மே ஐ ப்ரிங் ரோஸ்டட் வெஜிடபிள் தோஸா சார்?”

“நோ ஸ்பைஸி. ஓகே”

“டேய்... மறுபடியுமாடா...” தீனமாக ஒரு குரல் பின்னணியில் கேட்டது.

“பெட்டர் ப்ரிங் இட் அஸ் ரோஸ்டட் கீ வெஜிடபிள் தோஸா.... நல்லா நெய் ஊத்தி வாசமா இருக்கட்டும்”, இது மீண்டும் பெத்த பாஸு.

பதினைந்து நிமிட அவகாசத்தில் சுருட்டிய நியூஸ் பேப்பரென இரண்டு தட்டுகளில் தோசை வந்து சேர்ந்தது.

தோசை ஒன்றைக் கைகளில் அள்ளிக் கொண்டு அதன் இந்தப்புற சுருட்டல் துவாரத்திலிருந்து மறுதுவாரம் வழியாக அந்த அறை முழுதும் இருந்த எங்களைப் பார்த்துக் கண்ணடித்தார் கெர்ரி.

“கெர்ரி, தட் வில் ப்ரெக் இஃப் யூ டூ லைக் தட். ஸ்டார்ட் ஈட்டிங்”

“தட்ஸ் ரைட்...! ஓ இட்ஸ் ஸோ நைஸ்...கூல்.... ஹவ் டூ யூ மேக் திஸ்...??”, சர்வரைப் பார்த்த கேள்வி இப்போது.

மறுபடி மொதல்லேர்ந்தாஆஆஆஆஆஆ..........!


3 comments:

சீனு said...

ஹா ஹா ஹா செம அனுபவம்... எங்காளுங்க கிளையன்ட்டுக்கு மிளகா பஜ்ஜிய வாங்கிக் கொடுத்து வாங்கிக் கட்டிகிட்டது நியாபகம் வருது

Giri Ramasubramanian said...

:))))))))

BOOPATHI RAJ said...

yes..

Related Posts Plugin for WordPress, Blogger...