Aug 30, 2010

மதம் கொத்திப் பறவைகள்...

சுமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால்.....


நெற்குன்றத்தில் அப்போது நான் வேலை செய்து வந்த நேரம். பைக் வசதியெல்லாம் இல்லாத ஒரு காலம். மாதவரத்திலிருந்து கோயம்பேடு, கோயம்பேடிலிருந்து நெற்குன்றம் என இரண்டு பேருந்துகள் தாண்டி அலுவலகம்.

வாழ்க்கையின் மிக சுவாரசியமான நாட்கள் அவை. லூகாஸ், அண்ணாநகர், கோயம்பேடு, வடபழனி, அசோக்நகர், கிண்டி வழியாக தாம்பரம் வரை செல்லும் 170A மட்டுமே துணை அப்போது.  இத்தனை இடங்களை கடக்கும் அப்பேருந்தில் நீண்டதூரப் பிரயாண நண்பர்கள் என ஆறேழு பேர் சேர்ந்தோம்.



மூலக்கடையைக் கடக்கும்போது புளிமூட்டையாகிவிடும் பேருந்து. நடுவில் நுழைவாசல் உள்ள பேருந்து. எனவே பின் பாதி முழுக்க ஆண்கள் ராஜ்ஜியம் ஆகிவிட, கடைசி சீட்டை ஆக்கிரமிப்போம் நாங்கள். "கிரி, ம்ம்ம்.... ஆரம்பிங்க 'வராக நதிக்கரையோரம்", எனக் குரல் வரக் காத்திருக்கும் எங்கள் ஜமா.  பாட்டுக் கச்சேரியை ஆரம்பிப்போம். ஜன்னலோரம் அமரும் பவித்ரன் ஒரு கையை வெளியே வைத்து பேருந்தின் வெளிப்புறம் தாளம் தட்ட, நானும் சரவணனும் பாட ஆரம்பிப்போம்.  என்னடா நூறுபேர் மத்தியில் பாடுகிறோமே என்றெல்லாம் யோசிக்காத பருவம் அது.


அங்கே ஒவ்வொருவரின் ரீயாக்ஷனும் ஒவ்வொரு  மாதிரியாய் இருக்கும்.


"என்ன தம்பி, பழைய பாட்டெல்லாம் பாட மாட்டீங்களா?"


பீ.பி.ஸ்ரீநிவாஸ் பாடல் பாடினால், "சார், ஜெமினி கணேசனே நேர்ல வந்தாப் போல பாடறீங்க சார்" (நல்ல வேளை, அவர் இதை கேட்கலை).


"கண்ணுபடப் போகுதய்யா சின்ன கண்டக்டரே", என பவித்ரன் பாடினால் அந்த ஒல்லிப்பிச்சி கண்டக்டர், "ஏய், யாருய்யா, இங்க பாடவே கூடாது. அண்ணாநகர் போலிஸ் ஸ்டேஷன்'ல வண்டியப் போடுப்பா டிரைவர்", என எங்களை மறு கலாய்ப்பு செய்வார். 


"அண்ணா, புதுசா பாட மாட்டேங்களா? பழைய பாட்டா பாடி போர் அடிக்கறீங்க?" ஸ்கூல் வாண்டு ஒன்றின் நேயர் விருப்பத்திற்கு சரவணன் புதுப் பாடல் எதையேனும் எடுத்து விடுவான்.


சுந்தரம் சாருக்கு பழைய பாட்டு, குறிப்பாக "கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே", தினமும் பாட வேண்டும். அவருடனே பிரயாணம் செய்யும் அவர் சகலைக்கு எந்தப் பாட்டு பாடினாலும் ஒகே ஆனால் பாடுபவர் காலை வார வேண்டும்.


சிரித்தவாறே பாடல் கேட்கும் சதாசிவம் ஒவ்வொரு பாடலுக்கு இடையேயும் அப்பாடல் பற்றிய ஒரு கருத்தைப் பகிர்வான். எங்கள் ஜமாவின் அப்துல் ஹமீது அவன். இன்னைக்கும் இதே பாட்டாய்யா, சரி பாடித்தொலை என்பான் ரமேஷ்.


இதில் எதிலும் சேர்த்தியில்லை பாபு. அவன் எங்கள் குழுவில் எப்படிச் சேர்ந்தான் என்பது எங்கள் யாருக்கும் புரியாத ரகசியம். தவறாமல் தினம் வருவான், எங்கள் குழுவுடன் ஒன்றோடோன்றாக அமர்வான். என்ன பாடினாலும் என்ன பேசினாலும் ஒரு வெறித்த மௌனத்துடன் இருப்பான். நம்முடைய நாற்பது வார்த்தைக்கு அவனிடமிருந்து ஒரு வார்த்தை பதிலாக இருக்கும். கையில் எப்போதும் திறந்த நிலையில் ஒரு சிறு புத்தகம், வாயில் தவறாமல் ஏதோ ஒரு மந்திர ஜபம். இதுதான் பாபு.


நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு புனிதத் தலத்திற்கு செல்வதாக முடிவானது. "நான் வரலை" என பாபு தவிர்த்தான். அவன் மதம் சார்ந்த நம்பிக்கைகள் எங்களுடன் வருவதற்கு அவனுக்கு இடம் தரவில்லை என எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது. 


ஆனால் எங்களால் புரிந்து கொள்ள இயலாத ஒரு விஷயம், அத்தனை மாதங்களாகப் பேசாமல் வந்து கொண்டிருந்த பாபு அதன்பின் புதிதாகப் பேச ஆரம்பித்தான். கொஞ்சமல்ல, நிறைய பேசினான். அவன் பேசிய அத்தனையும் மதம் சம்பத்தப்பட்ட பேச்சுக்கள். தன் மதத்துடன் எங்களில் பலர் சார்ந்திருந்த மதத்தையும், கடவுள்களையும் குறித்து சம்பந்தப்படுத்தி, ஒப்பிட்டு என   மெல்ல மெல்ல ஏதேதோ பேசத் துவங்கினான். இதை எங்களில் யாரும் ரசிக்கவில்லை.


பேச்சு ஆரோக்கியமான சூழலில் பயணிப்பதாக எங்களில் யாருக்கும் தெரியவில்லை. ஒரு கட்டத்தில் எங்கள் பேச்சுக்கள் கருத்து யுத்தமாகத் தொடங்கி, அதன் பின் பட்டிமன்ற பாணியில் பயணிக்கத் துவங்கியது. அதனை பெரும் சண்டையாக வெடிக்க வைக்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தது விதி.


பாபு தவிர்த்து மற்ற எல்லோரையும் ஒரு வார இறுதியில் சந்திக்க அழைத்தார் சுந்தரம் சார். "நாம் பாபுவைத் தவிர்ப்போம்", என்றார். அப்படியே ஆகிப் போனது. இப்போது நாங்கள் எல்லோரும் பழைய பாபுவாகிப் போனோம். "ஒரு ஹாய்", "ஒரு பை", அத்துடன் அவனிடம் நிறுத்திக் கொண்டோம்.



பாபு இதனை எதிர்பார்க்கவில்லை. எங்கேனும் பேச்சு துவங்குமா எனக் காத்திருந்தான். அவனுக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களை சரியாக அவன் பயன்படுத்திக் கொண்டாலும், எங்களில் ஒருவர் ஏதேனும் பேசி அந்தச் சூழலை மாற்றுவதாக நாங்கள் ஏற்கெனவே ஏற்பாடு செய்திருந்ததால், சிலப்பல நேரங்களில் அது பாபுவுக்கு மூக்குடைப்பில் சென்று முடிந்தது.


இப்போது அவனுடைய அடுத்த இலக்கு நானாகிப் போனேன். தினம் அவன் பேருந்து ஏறும் இடத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர்கள் நடந்து வந்து நான் பேருந்து ஏறும் இடத்தில் நின்று கொண்டு என்னிடம் மெல்லப் பேச்சு தரத் துவங்கினான். மீண்டும் மத யானை முருங்கை மரம் ஏறியது. தாங்குமா?


கடவுள் கதைகள் கொஞ்ச நாளைக்கு. சரி, சுவாரசியமாக இருக்கிறதே என நினைத்தேன். கடவுள் விளம்பரங்கள் கொஞ்ச நாட்களுக்கு நடந்தது. என்னால் பொறுத்துக் கொள்ள முடிந்தது. ஆனால் அடுத்தக் கட்டம்?


"நீங்கள் உங்கள் கடவுள்களை நம்பாதீர்கள்", என்றான். எனக்கு விவாதம் செய்யும் மனநிலை எப்போதும் இல்லை. அவன் ஒரு முடிவோடு வருகிறான், அவனிடம் பேசிப் பயனில்லை.


"நாம் வேறு பேசலாமா?"


"அவை சாத்தான்கள்"


"இருக்கட்டும் பரவாயில்லை"


"அப்போ அங்கேதான் கடைசி வரை இருப்பீர்களா"


"உங்களால் இங்கு வர முடியுமா", எனக் கேட்டேன்.


"ச்சே ச்சே! அது சாத்தியமே இல்லை."


"அதே போலத்தான், ச்சே ச்சே, எனக்கும் அது சாத்தியமே இல்லை.", முடிந்தது என நினைத்தேன்.


"நீங்க வேணா பாருங்க ரெண்டாயிரமாவது வருஷம் உலகத்துக்கு ஒரு பெரிய ஆபத்து வரப் போகுது. அதுக்கு அப்புறம் சாத்தான்களை நம்பறவங்க எல்லோரும் செத்துப் போயிடுவாங்க. எங்க மதத்தை நம்பறவங்க, எங்க கடவுளை ஏத்துக் கிட்டவங்க மட்டும்தான் உயிரோட இருப்பாங்க".


எனக்குக் கோபம் வந்திருக்க வேண்டும். ஆனால் அவனுக்குத் தப்புத் தப்பாய் கேன்வாசிங் வேலை சொல்லித் தந்த சேல்ஸ் மேனேஜர் மீது பரிதாபம் ஏற்பட்டது. 


"அந்தப் பக்கம் வந்து உயிரோட இருக்கறதை விட, இந்தப் பக்கம் இருந்து செத்துப் போயிடறேன். அந்தக் கவலை உங்களுக்கு வேணாம். இனிமே இந்த கேன்வாசிங் வேலை வெச்சுக்கிட்டு என்கிட்ட வந்தா அசிங்கமா திட்டுவேன் போயிடுங்க", என்றேன்.


அவ்வளவு கடுமையாகப் பேசியிருக்கத் தேவையில்லை என்றாலும் எனக்கு விவாதத்தை முடிக்க வேறு வழி தெரியவில்லை. அதன் பின் பாபு என்வழியில் கடைசிவரை வரவில்லை. அவன் சேல்ஸ் டார்கெட் புத்தகத்தில் என் பெயரை நீக்கியிருக்கக் கூடும்.


அவன் மதம் சார்ந்த ஒரு பெரியவரிடம் இது பற்றிக் கேட்டேன். அவர் பாபு சார்ந்த மதத்திலேயே வேறொரு உப பிரிவைச் சேர்ந்தவர். 


"_________ _________ _________ _________ _________ _________ _________ _________", அப்பா, அம்மா,  குல கோத்திரம் எல்லோரையும் அந்த இடத்திற்கு அழைத்து கெட்ட கெட்ட வார்த்தைகளில் வைதார். "இவனுங்கலாலதான் எங்க மதத்துக்கே கெட்ட பேரு சார், நீங்க அவங்களையெல்லாம் ஜஸ்ட் இக்னோர் பண்ணுங்க" என்றார். "அதைத்தான் நான் செய்தேன்", என்றுவிட்டு வந்தேன்.


பாபு சார்ந்த மதத்தின் அதே உபப் பிரிவு நண்பன் ஒருவனிடம் பேசிக் கொண்டிருக்கையில்,  "அது கண்டிப்பாக தவறுதான், கண்டிக்கத் தக்க செயல்தான். இன்னும் சொல்லப் போனால், கடவுள் பெயரை பொதுவில் சொல்லாதே, அப்படின்னே எங்க மதம் சொல்லுது. இருந்தும் இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவங்க தனிரகம், ஜஸ்ட் இக்னோர் பண்ணுங்க", இங்கும் அதே கருத்து.


இவங்களை என்ன பண்ணலாம்? எந்த நம்பிக்கையில் இப்படி மடத்தனம் செய்கிறார்கள். எங்கள் மதத்தை இத்தனை பேர் தழுவுகிறார்கள் என்ற புள்ளியியல் விபரங்களால் இவர்களுக்கு என்ன பலன்?


யாரேனும் சொல்லுங்களேன்!
.
.
.

Aug 26, 2010

நடிகர் சூர்யாவின்...."வாழ்வுக்கும் சாவுக்கும் வித்தியாசம்"

சாலைவிதிகள், விபத்துக்கள், தலைக்கவசத்தின் அவசியம் பற்றி நான் ஏற்கெனவே பல பதிவுகள் எழுதியிருக்கிறேன். (இணைப்பு இங்கே)

இங்கே சூர்யா அவர்கள் "நச்"சென்று பொட்டிலடித்தாற்போல்  சொல்வதைக் கேளுங்கள். இதற்கு மேலும் நீங்கள் மாட்டேன் மாட்டேன் என்று முரண்டு பிடித்தால்....... கடவுளாலும் உங்களைக் காக்க முடியாது.

வாழ்வுக்கும் சாவுக்கும் வித்தியாசம்...... ஒரே நொடிதான்! கொஞ்சம் யோசிங்க!

Aug 22, 2010

வட போச்சே!



வடசென்னை மீது தீராக் காதல் கொண்டவன் நான். இதே போல ஒரு ஆகஸ்ட் மாதத்தில் இருபது வருடங்கள் முன் மாதவரம் வந்து சேர்ந்தது நேற்று நடந்தது போல் இருக்கிறது.


இருபது வருடங்கள் கடந்த பின், வேலை, பயணம், ஆரோக்கியம், அகில் என்று சிலப்பல காரணங்களைக் கூறிக்கொண்டு மடிப்பாக்கத்திற்கு இடம் பெயர்கிறேன்.



The Impacts:
அலுவலகம் சென்று வர பயண தூரமும் பயண நேரமும் நான்கில் ஒரு பங்காகக் குறைகிறது.

இனி அகில் உடன் நிறைய நேரம் செலவிடலாம்.

கூட்டுக் குடும்ப "கோடி நன்மைகளை" இழக்கிறேன்.

தனிக்குடும்ப சுதந்திரத்தை சுவாசிக்கப் பழக இருக்கிறேன்.

மாம்பழ ஸ்பெஷல் ஏரியா டூ  மாமிக்கள் ஸ்பெஷல் ஏரியா.

மடிக்கணினி வாங்கும் வரை எழுதுவதில் இடையிடையே இடைவெளிகள் இருக்கும்.

இனி ஆட்டோ அனுப்புபவர்கள் மடிப்பாக்கம் அனுப்பவும் 
.
.

Aug 21, 2010

களவாணிகளுக்கு இடையே ஒரு கலைவாணி!

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் -அதை
ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;- தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
இப்படியொரு கருநிறத்து அக்கினிக் குஞ்சொன்றைக் கண்ட அனுபவத்தையும் அந்த அக்கினிக்குஞ்சின் பேட்டியையும் கூட்டஞ்சோறு தளத்தில் படிக்கும் பாக்கியம் கிட்டியது.

கிரி டிரேடிங்'கில் பணி புரியும் இந்த எளிய பெண் "கலைவாணி"யின் வேலை மீதான சிரத்தையும், பக்தியும்; தான் கையாளும் பணி குறித்த ஆழ்ந்த ஞானமும், சிறந்த வாடிக்கையாளர் சேவையும் நம்மில் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று.

இக்கட்டுரையில் இருந்து சில பத்திகள் இங்கே:

என்னையே குருகுருவெனப்  பார்த்துக்கொண்டிருந்த அந்த எளிய பெண்ணை உதாசீனப்படுத்தி விட்டு, என் புத்தகத் தேடுதலைத் தீவிரமாக்கினேன்
“ஸார்,  உங்களுக்கு ஏதாவது உதவி தேவையா ?”
‘தத்வ போதா’   பற்றி இந்தப் பெண்ணுக்குத் தெரிந்திருக்க நிச்சயம் வாய்ப்பில்லை என்ற அலட்சியத்துடன்,  நான்,
“ஆமாம்.  நான் ‘தத்வ போதா‘  என்ற புத்தகத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.”
“சம்ஸக்ருதத்திலா  அல்லது சம்ஸ்கிருதம் மற்றும் ஆங்கிலத்திலா ?
கடவுளே,  இந்தப் பெண்ணுக்குத் தெரிந்திருக்கிறது  !!!
“சம்ஸ்கிருதம் மற்றும் ஆங்கிலத்தில்”
“அப்படியானால், இதை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.” ,  அவள் கையில்  ‘தத்வ போதா‘ தமிழ்ப் புத்தகம்.
“இந்த எளிமையான அதே சமயம் அருமையான தமிழ்ப் பதிப்பை இந்து பதிப்பகத்துக்காக என். சிவராமன் என்பவர் எழுதியிருக்கிறார்.  உள்ளே சம்ஸ்கிருத சுலோகங்களும் உள்ளன.”
அடக் கடவுளே….  இந்த அறிவுஜீவிப் பெண்ணை எதனால் இவ்வளவு மட்டமாக எடை போட்டு விட்டேன்  ?  நான் ஒரு N.R.I என்ற ஆணவமா ?  அல்லது இந்த கருப்பான கிராமத்துப் பெண் போன்ற தோற்றம் கொண்ட இந்தப் பெண்ணுக்கு ‘தத்வ போதா‘  பற்றி எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்ற என் அவசர முன் முடிவா ?
இந்த அருமையான பெண்ணுக்கு முன் அடி முட்டாளாக உணர்ந்தேன்.  மிகுந்த பணிவுடனும், மரியாதையுடனும் அந்தப் பெண்ணிடம் பேச ஆரம்பித்தேன்.
“மேடம்,   உண்மையைச் சொல்லப் போனால் நேற்று வரை இந்த ‘தத்வ போதா‘   புத்தகத்தை எழுதியவர் யார் என்று கூட எனக்குத் தெரியாது.  நேற்று நான் கேட்ட ஒரு உரை தான் இந்தப் புத்தகத்தைத் தேட என்னைத் தூண்டியது…..”
“நீங்கள் சென்றது பாரதீய வித்யா பவனில் கோதா வெங்கடேச சாஸ்திரி  ஆற்றிய உரைக்கா ?”
வியப்பின் எல்லைக்கே சென்ற நான்,  “உங்களுக்கு எப்படித் தெரியும் ?”
“இந்தத் தலைப்பில் வழக்கமாக உரையாற்றுபவர் அவர்.  மேலும் இது போன்ற தலைப்புகளில்  உரையாற்றுபவர்களில் மிகச் சிறந்தவர் அவர்.”
“உங்களுக்கு இது போன்ற விஷயங்களில் ஆர்வம் உண்டா ? “
“ஆமாம்.  நான் சுவாமி விவேகானந்தர் பற்றியும்,  ராமகிருஷ்ணர் பற்றியும் நிறையப் படித்துள்ளேன்.  உண்மையில், இந்த ‘தத்வ போதா‘  என் மனதிற்கு நெருக்கமான ஒன்று.”
“என்ன !  நீங்கள் இந்த ‘தத்வ போதா‘  ஏற்கனவே படித்திருக்கிறீர்களா ?”
“சிவராமன் எழுதிய இந்தப் புத்தகத்தை நான் முழுக்கப் படித்துள்ளேன்.  இதன் சிறப்பே,  நீங்கள் படிக்க ஆரம்பித்தால்,  முடிக்கும் வரை கீழே வைக்க மாட்டீர்கள்.”
“அப்படியென்ன சிறப்பு இந்தப் புத்தகத்தில் ?”
“ஸார்,  நீங்கள் என்னுடன் விளையாடுகிறீர்கள் என்று எண்ணுகிறேன்..  உங்களுக்கு உண்மையிலேயே இந்த ‘தத்வ போதா‘  பற்றி ஒன்றும் தெரியாதா ?”
அந்தப் பெண்ணிடம் என் அறியாமைக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டேன்.
“ஸார்,  என்னைப் பொருத்த வரையில் இந்தப் புத்தகத்தைப் படித்தால் உங்களுக்குக் கிடைப்பது முழுமையான வேதாந்த சாரம்.  அஹங்காரம் உங்களிடமிருந்து முற்றிலும் மறைந்து, நீங்கள் மேலும் பணிவாக நடக்க ஆரம்பிப்பீர்கள்.”
“எளிமையான இந்தப் புத்தகத்தைப் படிப்பதன் மூலம் இவ்வளவு பலன்களைப் பெற முடியுமா ?”  என்று சிறிது அவநம்பிக்கையுடன் கேட்டேன்.
“நிச்சயமாக.   ஆனால் நீங்கள் சிரத்தையுடனும், முழு நம்பிக்கையுடனும் இதைப் படித்தால் முழுப் பலன் கிடைக்கும்.”

கட்டுரையை முழுதும் வாசிக்க:   
"கிரி ட்ரேடிங் கலைவாணியும் ஆதி சங்கரரின் தத்வ போதமும்…."
.
.
.

Aug 20, 2010

நர்சிம்'மை அடிக்கணும்....




இப்படியொரு கவிதை மாமாங்கத்திற்கு ஒருமுறைதான் படிக்க முடிகிறது.....


"கூடு" நர்சிம்மின் அற்புதமான கவிதை!!


நண்பர்கள் மத்தியில் பாராட்டுதல்களுக்கு, "கொன்னுட்டடா மச்சான்" என முதுகில் ஓங்கி ஒரு அடி கொடுப்பார்கள். நர்சிம் ஒரு சீனியர் பதிவர், எழுத்தாளர்..... இருந்தும் இக்கவிதையைப் படித்தவுடன் ஓடிச்சென்று அவரை அன்பாய் முதுகில் ஓங்கியொரு சாத்து சாத்த வேண்டும் போலிருந்தது.
//கூடல் ஊடல்களின் பொருட்டல்ல
அது ஒரு பொருட்டல்ல//
ஆஹா.... இது போல் தமிழில் மட்டுமே எழுத இயலும், குறிப்பாக தேர்ந்த கைகளால்.
//இருக்கிறது என்கிற எண்ணம்
இருக்கிறது இன்னும்//
யு-டர்ன் அடித்து வந்துத் திரும்பப் படிக்கும்போதுதான் விளங்குகின்றன சில அற்புத வரிகள்.

பின்நவீனத்துவப் புரியாக் கவிதைகளுக்கும், அருஞ்சொற்ப்பொருள் விளக்க மூன்றாம் தரக் கவிதைகளுக்கும் இடையே இப்படி வெளிவரும் "தெளிவான" கவிதைகள் "நச்" என இதயம் தொடுகின்றன.


அட்டகாசம் நர்சிம்!


நன்றி: http://narsim.in
.
.
.

Aug 18, 2010

கிரிக்கெட்டின் அசிங்க அத்தியாயங்கள்....


இது பொய்....!!!


இது நிஜம்...!!

சுராஜ் ரந்திவ் அநியாயக் கொடுமையாக ஒரு போலி நோ-பால் போட்டு, வீரேந்திர சேவாக் சதமடிப்பதைத் தடுத்து, சர்ச்சையாகி, அவர்கள் மன்னிப்புக் கேட்டு, "ஒழியுது போ" என நம்மவர்கள் சொல்லி..... என இவை எல்லாம் நீங்கள் அறிந்த சமீபத்தைய அசிங்கங்கள்.

ஒரு பழைய மேட்டர் இங்கே பாருங்க. இது ஆஸ்திரேலிய அநியாய அசிங்கம். ஆஸ்திரேலியர்களை யாராலும் இதுபோன்ற விஷயங்களில் பக்கத்தில் கூட நெருங்க முடியாது போலிருக்கிறது.





(பொறுமை இல்லாதவர்கள் ஐந்தாவது நிமிடத்தில் இருந்து பாருங்கள்)

Aug 16, 2010

மதராசப்பட்டினம் - என் பார்வையில்...

முதலில் நண்பர் முரளியின் பார்வையில் நான்கே வரிகள் இப்படத்திற்கு விமரிசனம் எழுதியிருந்தேன். அப்போது இப்படத்தை நான் பார்த்திருக்கவில்லை. மிகத் தாமதமாகவே அலுவலக நண்பர்களுடன் சென்ற வாரம் மதராசப்பட்டினம் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது.


வாவ்......!! என்ன படம் சார்!?






டைட்டானிக் ஸ்டைலில் துவங்கி இடையில் லகான் திரைத் தூவல்களுடன் தொடர்ந்து அங்கங்கே தொடர்ந்து டைட்டானிக்கை நினைவுறுத்திய வண்ணம் படம் சென்றாலும், "மதராசப்பட்டினம்" தமிழில் ஒரு முற்றிலும் மாறுபட்ட முயற்சி.

தேவையான அளவிற்கு மட்டும் ஹீரோயிசத்தைக் காட்டியிருக்கும் ஆர்யா கனகச்சிதமாக தன் ரோலைச் செய்துள்ளார். Nothing more Nothing  less! அவருடைய கேரியரில் முக்கிய மைல் கல் மதராசப்பட்டினம். 

கதாநாயகி எமி'க்கு முன்னதாக நட்சத்திரப் பரிவாரத்தில் மின்னுபவர் ஹனீபா. மனிதர் மொழி பெயர்ப்பாளராக "நம்பி" ரோலில் வந்து பின்னியெடுக்கிறார். அவர் மரணத்திற்கு முன் கடைசியாய்ச் செய்த படம் இது. அவருடைய வழியனுப்புதலை நன்றாகவே செய்துள்ளது தமிழ்த்திரை. வாழ்த்துக்கள் விஜய் சார்.

"வெள்ளைநாயகி" எமி. க்யூட்'டாக இருக்கிறார். பாந்தமாக நடித்திருக்கிறார். கொடுத்த கேரக்டருக்கு முழுசாக மார்க் ஸ்கோர் பண்ணியிருக்கிறார். வெல்கம் டு இந்தியா மேடம். வெள்ளை நாயகியின் மூத்த கதாபாத்திரத்தைப் பற்றியும் இங்கே சொல்லியாக வேண்டும். அந்தப் பெண்மணியின் இறுக்கமான முக பாவங்களுடன் கூடிய நடிப்பு, 'சபாஷ்' போட வைக்கிறது.

அந்த வெள்ளைக்கார வில்லன் அபாரம். அவன் மூலமாக டைரக்டர் சொல்லியிருக்கும் ஆங்கிலேயக் காலத்து அராஜகச் செயல்பாடுகள் அதிர்ச்சி தருகின்றன. குறிப்பாக புரட்சி வீரன் ஒருவனைக் கொன்றுவிட்டு "பாரத் மாதா கி ஜே" என கெக்கலிப்பது குரூரம்.

நாசர், எம்.எஸ்.பாஸ்கர், பாலாசிங், "மிர்ச்சி" பாலாஜி, ஆர்யாவின் நண்பர்கள் குழாம், ஆர்யாவின் தங்கை ரோலில் வரும் அந்தச் சின்னப் பெண் என படத்தில் வரும் அத்தனை பேருமே அசத்தியிருக்கிறார்கள்.

படத்தின் முக்கிய ஹைலைட் "பூக்கள் பூக்கும் தருணம்" பாடல். ஜி.வி.பிரகாஷ் மெலடியில் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். நா.முத்துக்குமார் எழுத்துக்களில் காதல் நம் ரத்த நாளங்களில் எல்லாம் புகுந்து படுத்தியெடுக்கிறது.

படத்தின் அதி முக்கிய ஹைலைட் "பழைய சென்னை". இங்கே கலை இயக்கம் செய்தவர்களும் கிராபிக் வேலை செய்தவர்களும் பெரும் பாராட்டிற்கு உரியவர்கள். படத்தை விட்டு அவற்றைத் தனிமைப்படுத்தாது, எங்கும் மிகைப் படுத்தாது படத்தினூடே அவை வரும் வண்ணம் செய்திருப்பது இயக்குனரின் பெரிய வெற்றி.

ஆரம்பப் பாடல், ஒரு காதல் தோல்விப்பாடல், நீண்ட நெடிய கிளைமாக்ஸ், "துரையம்மாள் டிரஸ்ட்" சம்பந்தப்பட்ட கொஞ்சம் மிகைக் காட்சிகள் என சில குறைகள் இருந்தாலும் அவை ஜனரஞ்சகத்திற்காக சேர்க்கப்பட்டவை என நாம் புரிந்து கொள்ளலாம்.  

விடுதலைப் பின்னணியில் அழகழகாய் ஒரு காதல் கதை தந்தமைக்காக படத் தயாரிப்பாளர் "கல்பாத்தி" அவர்களுக்கும் படத்தை வெளியிட்ட ரெட் ஜயண்ட் குழுவினருக்கும் மிக முக்கியமாக இயக்குனர் விஜய் அவர்களுக்கும்  ஒரு ராயல் சல்யூட்.

Aug 15, 2010

சும்மா வரவில்லை சுதந்திரம்...


"நான் சுட்டேன். கூட்டம் சிதறிப்போகும் வரை சுட்டுக்கொண்டேயிருந்தேன். மக்களின் நெஞ்சிலே எவ்வளவு பெருந்தாக்கம் ஏற்படுத்த வேண்டுமென்று எண்ணங் கொண்டேனோ அதன் படிக்கு அத்தனை அதிகம் சுடவில்லை என்றுதான் நினைக்கிறேன். என்னிடம் மட்டும் இன்னும் கூடுதலாகப் படையாட்கள் இருந்திருந்தால் அடிபட்டோர் மற்றும் இறந்தோரின் எண்ணிக்கை இன்னும் கூடுதலாகவே இருந்திருக்கும். நான் அங்கு போனது வெறுமே கூட்டத்தை கலைக்க மாத்திரமல்ல. மக்களின் நெஞ்சிலே ஒரு குலைநடுக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் போனேன். அங்கு கூடினவர்கள் நெஞ்சில் மட்டுமல்ல, பஞ்சாப் முழுதும் ஆன எல்லோருக்குமே குலை நடுக்கம் தோன்ற வேண்டும் என்றுதான் சுட்டுக்கொண்டேயிருந்தேன். அவசியத்துக்கு மேல் கடுமை காட்டிவிட்டேனோ என்ற கேள்விக்கே இடமில்லை"

ஜாலியன் வாலாபாக் படுகொலைகளுக்கு வித்திட்ட மற்றும் முன்னின்று பிரிட்டின் படைகளைக் கொண்டு ஆயிரக் கணக்கான (பெண்கள், சிறுவர்கள் உட்பட) இந்தியர்களைக் கொன்று குவித்த ஜெனரல் டையர் (General Dyer) தந்த வாக்குமூலம் இது.



படிக்கும்போதே குலை நடுங்குகிறது. இத்தனை அதிர்ச்சி தரும் சம்பவங்கள், துயரங்கள் மற்றும் தியாகங்கள் தாண்டித்தான் போராடிச் சுதந்திரம் பெற்றோம் நாம்.  


ஆனால், இன்னொரு புறம் என்னுள் எழும் கேள்வி, "இத்தனை தைரியமும், தாய்நாட்டுக்கென உயிரையும் தரும் பண்பும் எங்கே போனது நம்மில்?"


எப்படியோ..... தன்னுயிர் தந்து நம்மை அடிமைத்தளையில் இருந்து விடுவித்த அத்தனை ஆத்மாக்களையும் இந்த சுதந்திரப் பொன்னாளில் வணங்கி மகிழ்கிறேன்.






ஜெய் ஹிந்த்...!!!

Aug 11, 2010

வழிமேல் விழி வைத்து...

சிதறிக் கிடந்த என் துணிகளெல்லாம் பீரோவினுள் சென்று ஒளிகின்றன. இத்தனை நாளாய் அழுக்குத் துணிக் கூடைக்குள் செல்ல மறுத்துக் கொண்டிருந்த அத்தனை ஜீன்ஸ்களும் டி.சர்ட்டுகளும் ஒவ்வொன்றாய் ஓடிக் குதித்து அறையைவிட்டு வெளிநடப்பு செய்கின்றன.

இத்தனை நாட்களாக அண்ணன் மகள் சஹானாவின் விளையாட்டு அறை என் அறை. இறைந்து கிடந்த அவள் விளையாட்டுப் பொருட்களுக்கும், பந்து, பலப்பங்கள், புத்தகங்களுக்கும் இடையே புதைந்து கிடந்த என் அறை, அத்தனையையும் மூட்டை கட்டி அண்ணனின் அறைக்கு மாற்றிய பின் சற்றே விசாலமாய்த் தெரிகிறது.

அறையின் சுவரோர சிலந்திப் பின்னல்களையும் ஜன்னலோரத் தூசுகளையும் காணாமல் செய்தாயிற்று. படித்தும் படிக்காமலும் பக்கத்திற்கு ஒன்றாய்க் கிடந்த புத்தகங்களையும் அலமாரிக்குள் அடுக்கியாயிற்று.

பின்னணியில் வாணலியில் கரண்டி கிண்டும் 'டிங் டிங் டிங் டிங்" ஓசை கேட்கிறது. அம்மா கேசரி கிளறிக் கொண்டிருக்கிறார்.

காலைமுதல் ஒன்று மாற்றி ஒன்றாய் இந்தப் பாடல்கள் கணினியில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.... மண்ணில் வந்த நிலவே, சின்ன சின்னக் கண்ணனுக்கு, சின்னத் தாயவள்...

ஆறு மாத அம்மா வீட்டு வாசத்திற்குப் பின் இன்று அகிலுடன் அகம் வருகிறாள் அன்பு மனைவி.

அகில் வருகையை எண்ணிக் குதூகலமாக இருக்கிறது. 

"அப்போ அன்பு மனைவியின் வருகையை எண்ணி?" யாரோ கிராஸ் டாக்கில் கேட்கிறார்கள்.

ஹ ஹ ஹா.... அட சந்தோஷந்தாங்க!!

வாழ்வின் புதிய அத்தியாயங்களுக்குத் தயாராகிறேன்.

பழைய அத்தியாயம் ஒன்று தொடர்பான இடுகை இங்கே:  ஒரு தற்காலிகப் பிரிவு..
.
.
.









Aug 5, 2010

ரத்த சரித்திரம் - நிஜமான....


முன் குறிப்பு 1: Universal donar / Universal recipient இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் 'சரியான' அர்த்தம் உங்களுக்குத் தெரியுமா? தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் இந்தப் பதிவு உங்களுக்காகத்தான்.



முன்குறிப்பு 2: சூர்யா நடிக்கும் RGV'யின் ரக்தசரித்ரா'விற்கும் இந்தப் பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, மன்னிக்கவும்.

லுவலகத்தில் ரத்த தானம் பற்றிய பேச்சு வந்த போது வழக்கம்போல நண்பர்கள் ஓ' பாசிடிவ் வகை ரத்தத்தை தவறுதலாக யுனிவேர்சல் டோனர் (உலகளாவிய கொடையாளி) எனக் குறிப்பிட்டனர். பி' பாசிடிவ் ரத்த வகையினர் யுனிவெர்சல் ரெசிபியன்ட் (உலகளாவிய பெறுனர்) எனவும் சிலர் தவறுதலாகச் சொன்னார்கள்.  


சரியாகக் குறித்துக் கொள்ளுங்கள். 
Universal Donors என்பவர்கள் ஓ' நெகடிவ் (O-) ரத்த வகையினர்.
Universal Recipients AB பாசிடிவ் (AB+) வகை ரத்தப் பிரிவினர்.

நவயுகக் கர்ணர்கள்:

கர்ணன் இன்று உயிரோடு இருந்திருந்தால் அவனது ரத்த க்ரூப் ஓ நெகட்டிவாக இருந்திருக்கும். கர்ணனுக்கு ஓ போடுவதில் தமிழர்களாகிய நமக்குத்  தயக்கம் ஒன்றும் இருக்காது, ஆனால் இருப்பது அத்தனையும் கொடுத்த கர்ணனுக்கு நெகட்டிவ் என்ற பதம் தருவது நியாயம்தானா  என்றால் வேறு வழியில்லை- அவன் நெகட்டிவ் காரக்டர்தான். கர்ணன் ஓ நெகட்டிவாக இருக்கும் பட்சத்தில்தான் கேட்டவருக்கெல்லாம் அவனால் ரத்தம் கொடுக்க முடியும். அப்படி இல்லாவிட்டால்  துரியோதனன் மருத்துவமனையில் உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருக்கும்போது கர்ணனாகவே இருந்தாலும் கையைப் பிசைந்துகொண்டு நிற்க வேண்டியதுதான். செஞ்சோற்றுக் கடனை அந்த வகையில் அவனால் கழிக்க முடியாது.



எனவே, ஓ நெகட்டிவ் ஆட்கள் நவயுக கர்ணன்கள்: அதனால்தான் அவர்கள் யூனிவர்சல் டோனார்ஸ்- அகில உலகக்  கொடையாளர்கள் - என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்கள் (ஜே.கே.ரித்தீஷ் மற்றும்  ஆன்மீக அண்ணா / "சின்ன எம்,ஜி.ஆர்." சுதாகரன் ரசிகர் மன்றத்தினர்  மன்னிக்கவும்). 

ஓ நெகடிவ் வகையினர் ரத்த தானம் செய்கிறவர்களானால் இவர்களுக்கு கோயிலே கட்டிக் கும்பிடலாம். இவர்கள் காப்பாற்றும் உயிர்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அமெரிக்காவில் நூற்றுக்கு ஏழு பேர் இப்படியென்றால் இந்தியாவில் நூற்றுக்கு இரண்டு பேர்தான் இப்படிப்பட்ட கொடை வள்ளல்களாக  இருக்கிறார்கள். 



நவயுகக் குசேலர்கள்:

அகில உலகக்  கொடையாளர்கள் என்று இருந்தால் அகில உலக குசேலர்களும் இருக்க வேண்டுமே!- AB பாசிட்டிவ் ஆட்களுக்கு எல்லாருடைய ரத்தமும் பொருந்தும். நீ இத்த குடுத்தாத்தான் வாங்குவேனப்பா அத்தக் குடுத்தாத்தான் வாங்குவேனப்பா என்னும் ரகங்களில்லை இவர்கள். அட நீ எத்தக் குடுத்தாலும் ஏத்துக்குவானப்பா இவன் என்பவர்கள். ஒரு வகையில் அதிஷ்டசாலி ரத்த வகையினர் இவர்கள் எனலாம். 


புரியும்படி சொல்லவேண்டுமென்றால், O- ரத்த வகை தண்ணீரைப் போல. பெரும்பாலும் எந்த திரவத்துடனும் உறவாடிக்கொள்ளும். இங்கேதான் சேருவேன் அங்கேதான் சேருவேன் என்று  சொல்லாது.

AB+ வகையினரை "அவியலுடன்" ஒப்பிடலாம். எதுவும் என்னில் சேரும் என்னும் ரகத்தினர் இவர்கள்.

"அது எப்படி இவர்கள் இருவரும்?" எனக் கேட்டீர்கள் என்றால் இவர்களின் அடிப்படையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியிருக்கும்.


நீங்கள் அறிவியல் பசி கொண்டவர் என்றால் இங்கே ஆன்ட்டிபாடி மற்றும் ஆண்டிஜென் பற்றிப் படியுங்கள்....இல்லையென்றால் நேரிடையாக "எப்படித் தீர்மானிக்கிறார்கள்" பகுதிக்குத் தாவுங்கள்.

ஒரு கொலைகார யுத்தம்:



A, B, O என்று ரத்தத்தை அணி பிரிக்கிறோம், இல்லையா, இதை எப்படி செய்கிறோம்? சில சிறு குறிப்புகள். 


முதலில் ஆன்ட்டிபாடி என்றால் என்ன? இதைப் படித்ததும் நீங்கள் நமட்டு சிரிப்பு சிரித்தால் யூட்யூபில் மல்லு மல்லு என்று தேடித் தேடித் தவறான பாடம் படிக்கிறீர்கள் என்று பொருள்.

பூட்டில் சாவியைப் பொருத்துகிற மாதிரி ஆண்ட்டிபாடி ஆண்ட்டி ஜென்னைப் பொருத்திக் கொள்கிறது. மறுபடியும் சிரித்தால் உங்க அம்மாகிட்ட சொல்லி அடி வாங்கிக் கொடுப்பேன். 

ஆண்ட்டிபாடி என்றால் என்ன? அது ஒரு வகை புரதம் (ப்ரோடீன்- செக்). இதை வைத்து நம் எதிர்ப்பு சக்தி அந்நிய சக்திகளை அடையாளம் கண்டு அழிக்கிறது. எப்படி செய்கிறது என்பதுதான் வினோதம். 

காட்ரேஜ் பூட்டு இருக்கிறது. உங்க வீட்டு பூட்டும் என் வீட்டுப் பூட்டும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. ஆனால் என் சாவி உங்க பூட்டைத் திறக்குமா? திறக்காது இல்லையா? ஒவ்வொரு பூட்டும் ஒவ்வொரு மாதிரி.

அப்படி தான் ஆண்ட்டிபாடி விஷயத்திலும்.



இந்த குழாயின் முனையில் மஞ்சளாக என்னமோ தன்னை இணைத்துக் கொண்டு இருக்கிறது இல்லையா? அதுதான் ஆண்ட்டிஜென. இங்கேதான் ஆண்டவனின்/ இயற்கையின் அறிவு வேலை செய்கிறது.

 இது மாதிரி கோடிக்கணக்கான ஆண்ட்டிபாடிக்கள் இருக்கும். அதில்  ஒவ்வொன்றின் முனையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஆண்ட்டிஜென் என்றால் பூட்டு என்று சொன்னேன் இல்லையா?

நாமெல்லாம் சாவியைப் பூட்டில் பொருத்துகிறோம் என்றால், நம் ரத்தத்தில் பூட்டு தேடிக் கொண்டு போய் சாவியில் பொருந்துகிறது. ஆண்ட்டிபாடி தான் பூட்டு. ஆண்ட்டிஜென் தான் சாவி. மறந்திருக்க மாட்டீர்கள்தானே?

ரத்தத்தில் எதிர்ப்பு அணுக்கள் இருக்கின்றன இல்லையா? அவை படைத்த மோகினிகள் தான் இந்த ஆண்ட்டிபாடிக்கள். இவை ரத்தம் எங்கும் விரவி நிற்கும். இவற்றைப் பெற்ற வெள்ளை ரத்த அணுக்கள் ஒன்றும் பண்ணாது. 

ஆனால் வெளியிலிருந்து கிருமிகள் வருகின்றன அல்லவா? அவற்றுக்கும் ரத்த சரித்திரம் நம்மைப் போலத்தான். ஒரு இனம் இன்னொரு இனத்துக்கு எதிராக போர் செய்து படுகொலை செய்கிற மாதிரி ஒரு ரத்தம் இன்னொரு ரத்தத்தில் கலக்கும்போது கலவரம் ஏற்படுகிறது. 

ஆமாம் ஒரு கிருமி உங்கள் உடலில் நுழைந்தால் அதன் ஆண்ட்டிஜென்கள் நம் உடலில் நுழைகின்றன. நம் உடலைத் திறந்து உயிரைக் குடிக்க கிருமிகள் பயன்படுத்தும் சாவிகள் அவை.

ஆனால் நம் ஆரோக்கியத்துக்குதான் ஆண்ட்டிபாடி வடிவில் பூட்டு இருக்கிறதே! ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாடலில்: தனக்குத் தக்க- தான் பொருந்துகிற மாதிரியான ஆண்ட்ஜென கிடைத்ததும்- கபாலேன்று கட்டிப் பிடித்துக் கொண்டு தன்னோடு பிணைத்துக் கொண்டு விடுகிறது.

அப்புறம் என்ன? எதிரியை அடையாளம் கண்டு பிடிச்சாச்சு. யார் மேலடா கை வெச்சே? என்று வெள்ளை அணுக்கள் போருக்குப் புறப்பட்டு கும்மோ கும்மென்று கும்மி கிருமிகளின் சாவிகளை (ஆண்டிஜென்) பரலோகத்துக்கு அனுப்பி வைக்கும். ரொம்ப சிம்பிள் ஜென்டில்மென்!

என்னமோ கதை விடுறீங்க- ஆண்ட்டிபாடி கட்டிப் பிடித்து காட்டிக் கொடுத்த ஆண்ட்டிஜென்- பூட்டு சாவி, லாக் அவுட்டுன்னு ஏதேதோ சொல்றீங்களே, இதுக்கும் ரத்த க்ரூப்புக்கும் என்னய்யா சம்பந்தம்னு கேக்கறீங்களா? 

இருக்குன்னேன்- 

ரத்தத்துல நாலு வகையான அடையாளம் கண்டு வெச்சிருக்காங்க: A, B, AB, O: இதுக்கு அடிப்படையே இந்த ஆண்ட்டிபாடி ஆண்ட்டிஜென் விளையாட்டுதாங்க. 



எப்படித் தீர்மானிக்கிறார்கள் ?

ரத்தத்தில் சிவப்பு அணுக்களைச் சுற்றி மூன்று வகையான புரதங்கள் (proteins) உள்ளன. அவை முறையே A, B மற்றும் Rh ஆகியன. A மற்றும் B ஆகியன ரத்த வகையையும் Rh குறியீடு ரத்தம் "பாசிடிவா அல்லது நெகடிவா" என்பதையும் தீர்மானிக்கின்றன.

A அல்லது B இரண்டு வகைப் புரதங்களும் அமையாத ரத்த வகை ஓ வகை ரத்தம் ஆகிறது.

இப்போது இந்த உதாரணத்தைப் பாருங்கள்:

A வுடன் சேர்ந்து Rh இருந்தால் அது A+
A மட்டும் தனியே இருந்தால் அது A-
B'யுடன் Rh இருந்தால் அது  B+
B தனியே இருந்தால் B-
A, B மற்றும் Rh ஒருசேர இருப்பது AB+
Rh துணை இல்லாமல் A மற்றும் B மட்டும் கூட்டணி அமைத்திருந்தால் அது AB-
A'வும் இல்லை B'யும் இல்லை ஆனால் Rh மட்டும் இருக்கு சார்" என்றால் அது O+
சிவப்பு அணுக்களை சுத்தி இவங்கள்ல யாருமே இல்லப்பா என்றால் அவர்தான் நம்ம அகில உலகக் கொடையாளி O-
தலை சுத்துதா? கொஞ்சம் நிதானமாப் படிச்சிப் பாருங்க புரியும்.


முடிக்குமுன்....


யார் யாரிடம் பெறலாம், யார் யாருக்குத் தரலாம் என்பதை எளிமையாக விளக்கும் ஒரு எளிய டேபிள். (நன்றி: விக்கி வழியே மோகன் )






கடைசியாக.....

எப்படி Universal donor  / Universal Recipient?

ஓ நெகடிவ் (O-) ரத்தத்தில் எந்த புரதங்களும் (புரோட்டீனும்) இல்லாததால் அது எல்லோருடனும் சேர முடிகிறது.

ஏபி பாசிடிவ் (AB+) ரத்தத்தில் எல்லாப் புரதங்களும் கலந்திருப்பதால் எந்தத் தங்கு தடையும் இன்றி அது யாரை வேண்டுமானாலும் கூட்டு சேர்த்துக் கொள்ள முடிகிறது. 

.
நன்றி: 


நட்பாஸ் அவர்களுக்கு - மொழி பெயர்ப்பு மற்றும் பூட்டு சாவித் தகவல்களுக்கு...
விக்கி மற்றும் இன்ன பிறர்: தகவல் உதவிக்கு.
.
.
.


Aug 1, 2010

நண்பர்கள் தின வசவுகள்....


உலகமே "நண்பர்கள் தினத்திற்கு" மாறி மாறி வாழ்த்துக்களை ஈமெயிலில், எஸ்.எம்.எஸ்'சில், அழைப்பில், நேரில், டுவீட்டில், பேஸ்புக்கில், ஆர்குட்டில் என வகை வகையாக பரிமாறிக் கொண்டிருக்க... நாமளும் அதையே பண்ணனுமா என்ன? 

இந்த தாயார், தந்தையார், காதலர், அம்மத்தா, அப்பச்சன் தினங்கள் என அனைத்து நாட்களுக்கும், நண்பர்கள் தினத்திற்கும் கூட, நான் நண்பன் அல்லன். அப்படி ஒன்றும் எதிரியும் அல்லன். வாழ்த்து சொல்றியா தேங்க்ஸ்....வாங்கிக்கறேன். வாழ்த்து சொல்லணுமா இந்தா வாங்கிக்கோ வாழ்த்துக்கள். என்னவோ பண்ணிக்கோ போ என்று சொல்லும் ரகம்.

ஆனாலும் சில நேரங்களில் இவர்கள் பண்ணும் அலம்பல் தாங்காமல் "நிறுத்துங்கடா டேய்" என்று உச்சஸ்தாயியில் கத்தவேண்டும் போல வெறி வருகிறது. ஒரு நாள் எவனையாவது ஓங்கி உதைக்கத்தான் போகிறேன் போல.

இன்று என் நண்பன் (!) விஷால் அனுப்பின ஒரு குறுந்தகவலைப் பாருங்கள்...

1935'ஆம் வருடம் ஆகஸ்டு முதல் சனிக்கிழமை ஒன்றில் அமெரிக்க அரசு இளைஞன் ஒருவனைக் கொன்று போட்டது. மறுதினம் இறந்தவனின் உயிர் நண்பன் அதைத் தாங்க ஒண்ணாது தற்கொலை செய்துகொண்டு இறந்தான். அவன் நினைவாக அமெரிக்க அரசு (!!!), ஆகஸ்ட் முதல் ஞாயிறை "நண்பர்கள் தினமாக" அறிவித்துள்ளது (சொல்லவே இல்ல?). இந்த எழுபத்தைந்தாவது நண்பர்கள் தினத்திற்கு உன்னை அட்வான்ஸாக வாழ்த்துகிறேன். 
நானும் உயிரோட இருக்கேன், நீயும் உயிரோட இருக்க. "என்னோட போறாதகாலம்" நம்ம நட்பும் உயிரோட இருக்கு. இப்படி மொக்க போட்டு என்னோட வீக்-என்டை  ஏண்டா பாழ் பண்ற நாசமாப் போனவனே என காரசாரமாக பதில் அனுப்பினேன்.

இதனால் இப்படி சக-சகாக்களை வகைதொகையில்லாமல் தாறுமாறாக லொள்ளு செய்யும் சகலமான/ணவர்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்.....



"உங்க எல்லோருக்கும் என் நண்பர்கள் தின வசவுகளை உரித்தாக்குகிறேன்...."
.
.
.

image couresy: angryzenmaster.com
Related Posts Plugin for WordPress, Blogger...