Jun 18, 2013

ட்ராஃப்டில் தூங்கிப்போன டெல்லி கேஸ்...

முன்குறிப்பு: இந்தப் பதிவை எழுதி ட்ராஃப்டிலேயே வைத்துவிட்டு தூங்கிவிட்டேன் போல.... இப்போதுதான் பார்த்தேன். காசா பணமா, அமுக்குடா பப்ளிஷ் பட்டனை...!

அலுவலக கேண்டீனில் ஏதோவொரு ஆங்கில செய்தி சேனல் ”டெல்லி ரேப் கேஸ் டெல்லி ரேப் கேஸ்” என்று கூவிக் கொண்டிருந்தது. தேநீர் இடைவெளியில் பிரகாஷும் பாலாவும் எனக்கு இடவலமாய் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். ஆஸ்திரேலிய முதலாளிகளுக்கு உழைக்கத் துவங்கிய பின் நள்ளிரவோ அதிகாலையோ...  ஏதோவொரு மூன்று மணிக்கு எழுந்துத் தொலைய வேண்டியிருக்கும் சோக நிகழ்வை அசைபோட்டவாறு, ”இப்பிடி ஆகிப் போச்சே நம்ம பொழப்பு?” என்றபடி கொட்டாவியை மென்று கொண்டு தூக்கத்தைக் கொன்ற வண்ணம் அவர்களிருவருக்குமிடையே இரண்டு காதுகளையும் வேறு வழியின்றி கொடுத்துக் கொண்டிருந்தேன்.

“இந்த மீடியாவுக்கு இது இன்னொரு செல்லிங் ப்ராடக்ட் ஆகிடுச்சி இல்ல?”

“ஏ அப்டி சொல்லாதப்பா”

“பின்ன எப்டி சொல்லணும்?”

“இந்த சம்பவத்துக்கு முன்ன டெல்லில 2012’ல எத்தனை ரேப் நடந்துச்சாம் தெரியுமா?”

“எத்தனை”

“நூத்தி இத்தனாம் சொச்சம்”, ஏதோ ஒரு எண்ணைச் சொல்கிறார் பாலா. நான் அசுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

“அதுக்கு என்னப்பா இப்போ?”

இப்படியே இன்னமும் பத்து நிமிஷம் பேசுகிறார்கள். பேசிக்கொண்டே இருக்கிறார்கள். 

கடைசியாக மறக்காமல் கரெக்டாக பாய்ண்ட்டுக்கு என்னிடம் வருகிறார்கள்.

“சார், நீங்க இதுபத்தி எதுவும் எழுதலையா?”

”எது பத்தி?”

“இந்த டெல்லி ரேப் கேஸ்”

“இல்லைங்க! இப்பல்லாம் சரியா எழுத ஒக்கார்றதில்லை”

“ஒக்காரணும் சார். எழுதணும். தட்டிக் கேக்கணும். மீடியான்னா என்னான்னு காட்டணும்”

"யாருது மீடியா?”

“நம்மள்துதான் சார்?”

“இங்க யாரு நம்மளுன்றது?”

“நீங்க எழுதறீங்கன்னா நீங்களும் மீடியாதான் சார்”

“நான் எழுதினா நாப்பது பேர் படிச்சா அதுவே ரொம்ப அதிகமப்பா”

“அந்த நாப்பதுல ஒரு பாரதி இருந்துட்டா? ஒரு மரப்பொந்துக்கு அக்கினிக் குஞ்சைத் தர்றதா உங்க எழுத்து இருந்துட்டா? வெந்து வேக்காடாகிடும் சார் நாடே!’ 

”அது சரி!”, மீண்டும் அசுவாரசியம். மறுபடி கொட்டாவி. 

”அத்தனை வீரியமெல்லாம் கொண்டு எழுத நமக்கு வாராதப்பா”

“வரும் சார்! வரும்! எனக்கு கோவம் வருது சார்! இப்போ ஓங்கி அடிச்சா இந்த மேஜையே ஒடைஞ்சிடும். அவ்ளோ ஆத்திரமா வருது. எனக்கு எழுத வந்தா உங்களைக் கேப்பேனா? நானே சரசரன்னு எழுதிட மாட்டேன்?”

”சரி! என்ன எழுதணும்னு சொல்லு...  அப்படியே எழுதிடறேன்”

“உங்ககிட்ட சொன்னனே! வாங்க எந்திரிங்க போகலாம். யோவ் பாலா! எந்திரிய்யா”

அந்த அத்தியாயம் முடிந்தது. அவரவர் அவரவர் வேலையை வழக்கம்போல் பார்க்கப் போய்விட்டோம்.

அதன்பிறகு அன்று முழுக்க பாலா சொன்ன அந்த நூற்று சொச்ச எண்களே என் மனசில் ஓடிக் கொண்டிருந்தது. நம் நாட்டின் தலைநகரில் மட்டும் இப்படி இத்தனை அநியாயங்கள் நடக்கிறதென்றால்? இவை பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மாத்திரமே. பதிவு செய்யப்படாமல் போனவை, பதிவு செய்ய வேண்டாம் என்று விடப்பட்டவை என்று எத்தனை எத்தனை இருக்கும்?  இந்த சம்பவத்திற்கு முன்பு நடந்த அந்த மற்ற நூற்று சொச்சத்தில் இதைவிடக் கொடூரக் கதைகள் இருந்திருக்கக் கூடும். 

நாம் தவறு செய்த அந்த ஆறு பேரைத்தான் பார்க்கிறோம். அவர்களுக்கு அவசர அவசரமாக ஏதும் கொடூர தண்டனை கொடுத்து ஒரு சராசரி மனிதனின் பழிக்குப்பழி மனோபாவத்திற்குத் தீனி போட்டுவிடத் துடிக்கிறது நம் மனது. 

நூற்று சொச்சம், கூடவே இந்த ஒன்று. இத்துடன் முடிந்துவிடுவதில்லை விஷயம். இது இன்னமும் தொடரும். தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

என்ன செய்யப் போகிறோம்?

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...