Apr 4, 2012

பார்வை - நிமிஷக்கதை


மேடவாக்கம் வந்து வலப்புறம் திரும்பி நின்றது T51 பேருந்து.
“மேடவாக்கம் வந்து பஸ்சு கெழக்கால திரும்பி நிக்கும். அதுக்கு ரெண்டு மூணு ஸ்டாப்பு தாண்டுனா வரும் தம்பி”, ஏதும் புலப்படாமலும் கூட ஜன்னலுக்கு வெளியே கண்கள் சுருக்கிப் பார்த்துக்கொண்டு சொன்னார் அந்தப் பெரியவர்.
சென்னை வந்து சேர்ந்த இந்த இருபது ஆண்டுகளில் முதன்முறையாக திசை சொல்லிப் பேசும் ஒருவரைப் பார்க்கிறான் அவன்.
இதற்கு மேல் சோழிங்கநல்லூர் வரை எந்தத் திருப்பமும் இல்லை. அங்கேயும் பேருந்து இடப்பக்கம்தான் திரும்பும். கிழக்கு என்றால்…. அது நமக்கு வங்காள விரிகுடா இருக்கும் திசை. இப்படியே நேரே போய் ஓ.எம்.ஆர். தாண்டி ஈ.சி.ஆர். இணைப்புசாலை கடந்தால் வங்காள விரிகுடா. நாம் இப்போது கடற்கரை நோக்கிய திசையில்தான் இருக்கிறோம். ஆக, இப்போது பேருந்து கிழக்கால் திரும்பி நின்றிருக்கிறது.  எல்லாவற்றையும் யோசித்துக் கணக்குப் போட்டு முடித்த பின் கிழக்குத் திசை புலப்பட்டது.
“நீங்க சொன்ன மேடவாக்கம் பஸ் ஸ்டாப் வந்துடுச்சிங்க, ஆனா எனக்கு தமிழ்நாடு ஆஸ்பத்திரி சரியாத் தெரியாது”, கடந்த ஒரு வருடமாக அந்தத் தடத்தில் பயணம் செய்தும் தமிழ்நாடு ஆஸ்பத்திரியைப் பார்த்ததில்லை அவன்.
‘இப்ப அந்த ஹாஸ்பிடலுக்கு குளோபல் ஹாஸ்பிடல்’னு பேர் சார். இங்கருந்து ரெண்டாவது ஸ்டாப்”, பின்சீட்டுக்காரன் சொன்னான்.
மேலும் ஒரு நிறுத்தம் கடந்ததும் பெரியவர் எழுந்துவிட்டார்.  வீராவேசம் வந்தவர் போல் ஏனோ கை வீசியவண்ணம் தட்டுத் தடுமாறி படிக்கட்டு அருகே சென்று நின்று கொண்டு “தமிழ்நாடு ஆஸ்பத்திரி வந்தா சொல்லுப்பா” யாரையும் பார்க்காமல் ஆனால் உத்தேசமாக எல்லோரையும் பார்த்தவாறு சொன்னார்.
”தோ, வர்ற ஸ்டாப்தான் பெர்சு. கீய வுய்ந்துறாம நில்லு”, முன்பக்கமிருந்து குரல் கேட்டது. அவன் எழுந்தான். ஆபீசுக்கு ஏற்கெனவே நேரமாகிவிட்டது, ஆனது ஆச்சு இன்று ஒரு நல்ல காரியம் செய்ததாக இருக்கட்டும் என, ”பெரியவரே, அவ்ளோ தூரம் உள்ள நடக்கணுமே. நா வேணா உங்களோடா ஆஸ்பத்திரி வரை வரட்டா?”
ப்ரேக் அடித்து நின்றது பேருந்து. “க்ளோபல், தமிழ்நாடு எல்லாம் எறங்கு”, கண்டக்டர் கூவ….
“வேணாம் கண்ணு. தொண எதுர்பாத்து நிக்குற வய்சில்ல எனுக்கு. போறுது தனியாத்தானே போவுணும்”, இறங்கி நடக்க ஆரம்பித்துவிட்டார்.
image credit – Antigua Daily Photo

4 comments:

K.Arivukkarasu said...

மிகவும் ரசித்துப் படித்தேன்! நன்றி !!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு நண்பரே.... வாழ்த்துகள்.....

Giri Ramasubramanian said...

@ அறிவுக்கரசு
@ வெங்கட் நாகராஜ்

நன்றி சார்’ஸ்

Rathnavel Natarajan said...

அருமை.
வாழ்த்துகள்.

Related Posts Plugin for WordPress, Blogger...