Apr 6, 2013

சமுத்ராமானுஜம்


ஸ்ரீ ரங்கத்தில் இருக்கும் ராமானுஜரின் 'தானான திருமேனி' அவரது mummify செய்யப்பட அசல் திருமேனி என்று சொல்கிறார்கள். இது எந்த அளவு உண்மை?  < கலைடாஸ்கோப்-87 >


இணையத்தில் யார் எழுதுவதை வாசித்தாலும், வாசிக்க மறந்தாலும் சமுத்ரா எழுதுவதை வாசிக்க நான் மறப்பதில்லை, தவிர்ப்பதில்லை. சமுத்ராவின் புதிய பதிவு ஒன்று கூகுள் ரீடரில் மினுக்குவதைக் கண்டால் துள்ளிக்குதியாட்டத்துடன் படிக்கத் தொடங்கிவிடுகிறேன். காரணம்? சமுத்ராவைத் தொடர்ந்து வாசிப்பவர்க்கே இது புரியும்.

சமீபத்திய கலைடாஸ்கோப்’பில் ராமானுஜ காவியம் படித்த சங்கதியை எழுதியிருக்கிறார் சமுத்ரா. ஆம்னிபஸ்சுக்கு சத்யா எழுதிய ராமானுஜ காவிய அறிமுகம் வாசித்துவிட்டு ஆன்லைனில் ஆர்டர் பண்ணி வாங்கிப் போட்ட ராமானுஜ காவியம் அலமாரியில் தூங்கிக் கொண்டிருக்கிறது. சமுத்ராவை வாசித்த பிறகு அதை எடுத்துப் புரட்ட வேண்டும் என உடனடி உந்துதல் தோன்றுகிறது. வாசித்தால் என் அனுபவத்தையும் பகிர்கிறேன்.

சென்றவருடம் குடும்ப சகிதம் ஸ்ரீரங்கம் சென்றிருந்தபோது ஸ்ரீரங்கர் கோயிலில் ராமானுஜர் சன்னதிக்குப் போனோம்.

”“ராமானுஜரை நல்லாப் பாரு. ஒரு ஸ்பெஷாலிட்டி உண்டு”, உள்ளே நுழையும்போதே அம்மா சொன்னார்.

“என்னது அது?”

“தீபம் காட்டுவாங்க. நல்லா கவனி. நீயே கண்டுபிடி”

குருக்கள்… அயாம் சாரி…. பட்டர் தீபம் காட்டினார். எவ்வளவு பார்த்தும் ஒன்றும் பிடிபடவில்லை.

“தெரியலையே”

“நல்லாப் பாரு”

“ப்ச்”, ஆயாசம்தான் மிஞ்சியது. சரியாகப் பார்த்து முடிக்குமுன் தீபாராதனை முடித்து தீபம் எங்களை நோக்கி வந்துவிட்டது.

“என்னம்மா அது, சொல்லலாமில்ல?”

“ராமானுஜர் கண்ணுல பாருடா ஒரு ஜீவன் இருக்கும்”

”இதை மொதல்லயே சொல்லக்கூடாதா. சரியா பாத்திருப்பேனே. சரி, வெயிட் மாடி. அடுத்த செட் மக்கள் வரும்போது தீபாராதனை பார்ப்போம்”

அடுத்த கூட்டம் வந்து சேர, அடுத்த தீபாராதனைக்குத் தயாரானார் ராமானுஜர். இப்போது கண்களைக் கவனித்தேன். ஓ! என்ன உயிரோட்டமான கண்கள்! ஒளிரும் உயிருள்ள கண்கள் அவை. சிலைவடிவிலான தெய்வத்தின் கண்களில் ஏது ஒளியும் பிரகாசமும்?

பட்டரையே கேட்டேன், “ஸ்வாமி, ராமானுஜர் கண்கள் ஜ்வலிக்கறதே உயிரோட்டமா?”, ஏதும் வியாக்கியானம் தரப்போகிறார் என பிடித்துப் பருக ஏதுவாய் சற்றே பவ்யமாய் நின்று கொண்டேன்.

“அப்படியா? அது அவாவா பார்வையையும், மனசையும் பொருத்த விஷயம். உயிரோட்டம் தெரிஞ்சா தெரியறதுன்னு அர்த்தம். தெரியலைன்னா தெரியலை. அவ்வளவுதான்”, என சுருக்கமாக முடித்துக் கொண்டார். நீங்க நகரலாம் என்ற சொல்லாத சொல்லும் அவர் பேசி முடித்த தோரணையில் இருந்தது.

< மீண்டும் இந்தப் பதிவின் முதலிரண்டு வரிகளைப் படித்துக் கொள்ளுங்கள் >

ரி ஜீவன் விஷயத்தை விடுங்கள். சமுத்ராவின் ராமானுஜ சாப்டரில் அடுத்த விஷயத்தைப் பார்ப்போம்.

ராமானுஜ வரலாறில் சமுத்ரா சுட்டும் (கீழ்வரும்) இந்தக் கதையில் வரதாழ்வான் கொண்ட நேர்மை இந்தக் கலியுகத்தில் சாத்தியம்தானா என்று நீங்கள் யோசியுங்களேன்.

வரதாழ்வான் என்னும் பக்தன் ஒருவன். அவன் இல்லாத நேரம் பார்த்து அவன் அகத்துக்கு வந்துவிடுகிறார் ராமானுஜர். வீட்டிலோ பரம தரித்திரம். வரதாழ்வான் மனைவி உடையவரை உபதரிசித்து ஸ்நானம் செய்து வந்ததும் திருவமுது தயாராய் இருக்கும் என்று சொல்லிவிடுகிறாள் . வீட்டில் அரிசி, பருப்பு, புளி மிளகாய், மேகி நூடுல்ஸ்  ஒன்று கிடையாது. ஓடுகிறாள் வணிகன் கடைக்கு...வணிகனுக்கு அவள் மீது ஒரு கண்...'நீ என் வீட்டுக்கு மளிகை சாமான் அனுப்பினால் யதிராஜர் குடற்பசி தீர்ப்பேன்; அப்படியே இன்று இரவு உன்னிடம் வந்து உன் உடற்பசி தீர்ப்பேன்' என்கிறாள். அவனும் வாயெல்லாம் பல்லாய் இளித்து, வேண்டுமட்டும் சாமான் அனுப்புகிறான். அவளும் எதிராஜருக்கு இன்சுவை விருந்து படைக்கிறாள் .வரதாழ்வானும் வீடு திரும்பி ஸ்வாமிகளை சேவிக்கிறான். பிறகு நடந்ததை அறிந்த ராமானுஜர், தன் பிரசாதத்தை வணிகனிடம் கொடுத்து விடும்படி சொல்லி விடைபெறுகிறார்.
அன்று இரவு, வரதாழ்வான் மனைவியை வணிகனின் வீட்டில் விடச் செல்கிறான். பிரசாத்தை உண்டதும் வணிகனுக்கு தன்  கண் முன் சாட்சாத் நாராயணனும் திருமகளும் நிற்பதாகத் தோன்றுகிறது. மனம் மாறும் வணிகன் இனி பரஸ்த்ரீகளை ஏறெடுத்தும் பாரேன் என்று சத்தியம் செய்கிறான்.

இத்தகைய நேர்மைக்கு நிகழ்காலத்தில் நேரடி உதாரணங்கள் தேடவியலாத காலகட்டத்தில் நான் வாழ்வதால் இந்த குறிப்பிட்ட விஷயத்தில் வரதாழ்வான்கள் இருக்கிறார்களா என்பதை நானறியேன். அப்படியே நியாயவான்கள் தப்பித்தவறி இருந்தாலும் கலியுகத்தில் அவர்களுக்கான பட்டம் வேறாக இருக்கும் < சரோஜாதேவி புத்தகக் கதைகள் உங்களுக்கு நினைவுக்கு வந்தால், நீங்கள் சாக்‌ஷாத் கலியுகவாசி என்று அர்த்தம். என் நண்பர் அதைத்தான் எனக்குச் சுட்டினார் >. 

அந்த விஷயத்தில் இல்லை என்றாலும் வரதாழ்வானுக்கு நிகரான நியாயவான்களை நான் நேரில் பார்த்ததுண்டு. ஒரு உதாரணம் நம் பதிவுகளில் அடிக்கடித் தென்படும் ‘குமரகுரு’. ஒரு தர்மத்தைக் கடைபிடிக்க ‘புரைதீர்ந்த’ இன்னொரு அதர்மம் தப்பில்லை என்பார் குமரகுரு. என்ன, அவர் போன்றவர்களை கிறுக்கர்களாக அல்லது முட்டாள்களாக உலகம் வருணிக்கும். They don’t bother about this stupid world, anyway!

வரதாழ்வான் கதையையும் இங்கே மேலே நான் எழுதியிருக்கும் என் கருத்தையும் குமரகுருவிடம் சொன்னதற்கு அவர் கேட்ட கேள்வி: ”Why VARADHAZHVAN’s wife is not appreciated here?”

என்னுது ஆண்புத்தி! வேறென்ன சொல்ல?

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...