Feb 10, 2011

கறை (ரொம்ப) நல்லது!கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு முன்னால் நான் பிறக்க இன்னும் ஏழெட்டு வருடங்கள் பாக்கியிருந்த ஒரு காலகட்டத்தில் ஒரு நல்காலைப் பொழுதில் எங்கள் வீட்டில் அரங்கேறிய  ஒரு நிகழ்வு...

"அப்பா வந்துட்டியா வா வா வா..."

"கண்ணா, உனக்கு எத்தன தடவை சொல்லியிருக்கேன். எழுந்த கையோட அப்படியே வீதிக்கு வந்து நிக்காதேன்னு. பல்லு தேச்சியா, மொகம் கழுவி காபி சாப்டுட்டு வெளிய வந்து உட்காரு"

"எனக்கு அதெல்லாம் தெரியும். நீ என்ன கைய பின்னால மறைச்சி வெச்சுட்டு இருக்க?"

"ஒண்ணுமில்லையே! ஒண்ணுமில்ல! நீ போயி காபி சாப்பிட்டுட்டு வா, நான் கொஞ்சம் இங்க ஒக்காந்துட்டு இருக்கேன்"

"அதெல்லாம் இருக்கட்டும். என் பல்லும் அம்மா காபியும் எங்கயும் போகாது. நீ உன் கையில மறைச்சி வெச்சுட்டு இருக்கற குமுதத்தை இங்க கொஞ்சம் தந்துட்டு உள்ள போயி ஏதாவது வேலை இருந்தா பாரேன்"

"குமுதமா? குமுதம் எங்க இருந்து வந்துது?"

"கடைல இருந்து. இப்ப காலங்கார்த்தால போயி வாங்கிட்டு வந்தயில்ல?"

"ஹி ஹி ஹி...! இல்லியே!"

"பொய் சொல்லாதப்பா. அந்த கைய முன்னால காட்டு!"

ஏய்! ஏய்! ஏய்! பல்லு கூட வெளக்கமா என்னைத் தொடாத. நான் குளிச்சு எல்லாம் ஆச்சு. பூஜை கூட இன்னும் முடியலை"

"அப்போ பூஜையை முடிச்சிட்டு வா. அதுக்குள்ள நான் குமுதம் படிச்சிட்டு தந்துடறேன்"

"டேய் டேய்... இருடா. ரெண்டே நிமிஷம். அப்புசாமி மாத்திரம் படிச்சிட்டு தந்துடறேன். அப்புறம் நீ முழுக்க படிச்சிக்கோ"

"நானும் அதேதான் சொல்றேன். நானும் அப்புசாமி மட்டும் படிச்சிட்டு ரெண்டே நிமிஷம், குமுதம் மொத்தத்தையும் உன்கிட்டே தந்துடறேன். நீ அப்புறம் நாள் முழுக்க அந்த அப்புசாமியையும் ஆப்பிரிக்க அழகியையும் வெச்சுக்கோ"

"அப்பன் கிட்ட பேசற பேச்சா பேசறான். விச்சி! ஏ விச்சி! இவனை என்னன்னு கேளு! காலைவேளையில பல்லுகூட தேக்க செய்யாம என்கிட்டே வந்து ராவடி பண்றான்"

"அப்பா...அப்பா... குடு குடு... தூணை சுத்தி ஓடாதே. திண்ணைலருந்து டிச்சில விழுந்துடப் போறே"

என் அப்பாவும் தாத்தாவும் அப்புசாமிக்கும் ஆப்பிரிக்க அழகிக்குமாய்ப் வாரவாரம் போட்டுக்கொண்ட சண்டைகளை அம்மா இத்தனை வருடங்களில் எங்களுக்கு எத்தனை முறை சொன்னாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருக்கும்.

எங்கள் வீட்டில் வரலாறு கண்ட அந்த அ.ஆ.அ. கதையை புத்தக வடிவில் இரண்டொரு வருடங்கள் முன்பு புத்தகக் காட்சியில் கண்டபோது கையிருப்புக் காசு அனைத்தும் காணாமல் போயிருந்தது. வருடந்தோறும் இதே கதைதான். அ.ஆ.அ. கண்ணில் படும்போது என் அந்த வருட பட்ஜெட் அல்லது கையிருப்பு ரொக்கம் காணாமல் போயிருக்கும். இந்த வருடமும் அப்படியே ஆகிப்போனது.

அப்படிப்பட்ட ஒரு புத்தகத்தை புத்தக மணம் மாறாமல் புத்தம்புதிதாய் இருபது ரூபாய்க்குத் தருகிறேன் என ஒருவர் கடைகட்டிச் சொன்னால் உங்களுக்கு  எப்படியிருக்கும்?

பத்ரி அவர்களின் அதிரடிப் புத்தகத் திருவிழாப் பதிவும் பாரா அவர்களின் கறை நல்லது படித்த போதெல்லாம் "சுண்டியிழுக்கறாங்க சுண்டியிழுக்கறாங்க டோய் சலனம் காட்டாதே!" என இருந்தது.  சொக்கனின் ட்வீட் வழியே ஹாய் மதன் முதலான புத்தகங்கள் இருபது ரூபாய்க்குக் கிடைக்கின்றன எனத் தெரிந்தது. ஓகே...நம்ம பட்ஜெட் இருநூறு ரூபாய். போறோம் அஞ்சு பத்து புக்கு வாங்கறோம். வந்துடறோம் எனத் தீர்மானம் நிறைவேறியது.

இன்று யதேச்சையாக வங்கி வேலையாய் அலுவலகத்திக்கு மட்டமடித்துவிட்டு அப்படியே மயிலை குளம் அருகே கிழக்கில் நுழைந்தேன். அப்போது அள்ளினதுதான் அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும். இருபது என்றால் இருபது...ஆமாம் இருபதே ரூபாய்க்கு! அட்டை மட்டும் லேசாய் லேசாய் கறை பட்டிருக்கிறதே தவிர...புத்தகம் இன்னும் காகித மணம் மாறாமல் அப்படியே!

நான் நுழைந்தது மதியம் இரண்டே கால் சுமாருக்கு. அங்கு அமர்ந்திருந்த ஒரேயொரு விற்பனை சிப்பந்தி கொலைப் பசியில் இருந்தே நேரம். நான்கைந்து பேர் சுற்றி சுற்றி புத்தகங்களை மேய்ந்து கொண்டிருந்தார்கள்.

"சார், டெய்லி சாப்பிடப்போக நாலு மனியாகிடுது. கொஞ்சம் சீக்கிரம் பாத்தீங்கன்னா. போயிட்டு வந்துடுவேன். ரெண்டே முக்காலுக்குள்ள வந்து  திறந்திடலாம். நீங்க மறுபடி வாங்க ப்ளீஸ்!", என கெஞ்சிக் கொண்டிருந்தார். நம் புத்தகப் பசியை அவர் அறியார் பாவம்.

ஐந்தே நிமிடம் ஒரு சூறாவளிச் சுற்றில் பதினேழு புத்தகங்களை அள்ளினேன். 

யுவகிருஷ்ணாவின் "சுண்டியிழுக்கும் விளம்பர உலகம்"
பாக்கியம் ராமசாமியின் அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்
வீயெஸ்வி எழுதிய எம்.எஸ். (வாழ்வே சங்கீதம்)
என் சொக்கன் - என் நிலைக்கண்ணாடியில் உன் முகம், திராவிட், வ.மெ.இடையினம் மற்றும் ரிச்சர்ட் ப்ரான்சன்
இரா.முருகனின் ராயர் காப்பி கிளப் மற்றும் சைக்கிள் முனி
எஸ்.சந்திரமௌலியின் "கோபுலு (கோடுகளால் ஒரு வாழ்க்கை)
ஆர்.முத்துக்குமார் எழுதிய அத்வானி
பா.ரா'வின் பர்வேஸ் முஷாரஃப் 
இந்திரா பார்த்தசாரதியின் "இயேசுவின் தோழர்கள்"
எஸ்.எல்.வி.மூர்த்தி எழுதிய பி.பீ.ஓ. ஓர் அறிமுகம்
வாசுதேவ் தொகுத்த "பூஜைரூம்"
ஞானியின் ஓ பக்கங்கள் 2007
யுவன் சந்திர சேகர் சிறுகதைகள்

பசியில் இருந்த அந்த விற்பனை சிப்பந்திக்கு நன்றி. இல்லையென்றால் ஐந்து பத்து இருபது விலைகளில் அங்கிருந்த இன்னமும் இருபது புத்தகங்களை அள்ளியிருப்பேனோ என்னவோ?

"தி.நகர்'ல இன்னமும் பெரிய இடம் சார். இன்னமும் நிறைய புக் இருக்க வாய்ப்பு இருக்கு" என ஒரு குரல் கேட்டது. சாவதானமாக இன்னும் ஒருமுறை போக வேண்டும் போலத்தான் இருக்கிறது. இருந்தாலும்....

நான் வாங்கிய புத்தகங்களின் ஒரிஜினல் விலை ரூ.1545/- நான் வாங்கின விலை ரூ. 365/-. போதுமா கனவான்களே? ரூ.1180/- தள்ளுபடி.... அதாவது 76% தள்ளுபடி. 


கறை ரொம்ப நல்லதுதானுங்களே?

வரும் ஞாயிறுவரை தி.நகரிலும் மயிலையிலும் இந்த தள்ளுபடி விற்பனை உள்ளது. 

இடம் 1:
மைலாப்பூர் குளம் எதிரில்.
தொலைபேசி எண் : 9500045643

இடம் 2:
L.R. சுவாமி ஹால்
சிவா விஷ்ணு கோயில் எதிரில்
சங்கர பாண்டியன் ஸ்டோர் அருகில்
தி. நகர்,சென்னை
தொலைபேசி எண் : 9500045608
.
.
.

2 comments:

தங்கராசு நாகேந்திரன் said...

நல்லதுதான்

susila said...

sollieruntha nanum vanthu allieruppenille susila

Related Posts Plugin for WordPress, Blogger...