Sep 4, 2008

சுஜாதாவின் "பிரிவோம் சந்திப்போம்"


இன்றுதான் படித்து முடித்தேன் இரண்டாம் பாகத்தை. எப்படியும் இன்னும் ஒருவாரம் கதையின் ஆக்கிரமிப்பில் இருப்பேன், நிச்சயம்.

பாபநாசம் ரகுவைக் காதலித்து கல்யாணம் நிச்சயித்தபின் அமெரிக்க ராதாகிஷனை அப்பா சொல்படி மணந்து அமெரிக்காசெல்கிறாள் மதுமிதா. ரகுவைச் சுற்றியே வலம் வரும் முதல் பாகம் அவன் உள்ளக்குமுறல்களுடன் முடிகிறது . இரண்டாம் பாகம் MBA படிக்க ரகுவையும் அமெரிக்கா அழைத்துச் செல்கிறது. அவன் அங்கு சந்திக்கும் விந்தையான அனுபவங்கள், மதுவை சந்திப்பது, மதுவுக்கு ராதாகிஷன் செய்யும் துரோகம், இந்திய வம்சாவளிப் பெண் ரத்னாவை சந்திப்பது என கதை விரிந்து எங்கெங்கோ சென்று கடைசியில் மது இறந்து, ரத்னாவை ரகு மணப்பதாய்கதை முடிகிறது.

இந்தக் கதையில் கதையை விட அதை சொன்ன விதத்தில் சுஜாதா எங்கோ நிற்கிறார்.

1980களில் அப்போது சுஜாதா விவரிக்கும் நாகரிகத்தில், கலாச்சாரத்தில் இப்போது நாம் கொஞ்சம்தான் மிச்சம் வைத்திருக்கிறோம்; கம்ப்யுட்டர், மொபைல் போன், சாட்டிலைட் TV தவிர பெரிய வளர்ச்சி எதையும் சொல்லமுடியவில்லை. ஆனால், அப்போதே அவர் விவரிக்கும் அமெரிக்கா, அதன் தொழில்நுட்பம், அந்த மக்கள், அவர்களின் கலாச்சாரம், விமானம், கார்கள், சாலைகள் அனைத்தும் நமக்கு பிரமிப்பு, மயக்கம், பயம், அருவருப்பு அனைத்தையும் தருகின்றன.

நான் ஏற்கெனவே சுஜாதாவின் அதிதீவிர வாசகன். இந்தக் கதையை படித்த பின், அவரைப் போன்ற பிதாமகர்களுக்கும் சாவைக் குறித்து அழைத்துச் சென்ற கடவுள் மேல் கோபம் வந்தது.

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...