Oct 7, 2010

ஏன் படிக்கிறேன்?

இந்தத் தொடர் பதிவை எழுத என்னை அழைத்த நட்பாஸ் அவர்களுக்கு நன்றி. ஏன் படிக்கிறேன் என்று அவர் எழுதிய பதிவு இங்கே.இப்போது நான் ஏன் படிக்கிறேன் என....

...வெளிப்படையாகச் சொன்னால் இது ஒரு அபத்தமான கேள்வி. ஒரு தேர்ந்த வாசிப்பாளனுக்கு வாசிப்பு என்பது தன்னிச்சையாக நிகழும் செயல். தன்னிச்சையாக நிகழும் செயல்கள் காரண காரியங்களைச் சொல்லிக்கொண்டு நேர்வதில்லை. அவை அவன் வாழ்வில் நிகழ்ந்தேயாக வேண்டிய கட்டாயம் ஒரு வகையில் உருவாகி விடுகிறது.

மோகனைக் கேட்டேன், "மோகன், நீ ஏன் படிக்கற?"

"ஹாபிட்", ஒற்றை வார்த்தையில் பதில் வந்து விழுகிறது.

"என்ன படிப்ப நீ?"

"எனி டெக்ஸ்ட், எனிதிங் தட் இன்ட்ரஸ்ட்ஸ் மி"

வாசிப்பனுபவம் பலருக்கு இப்படியே. வாசிப்பு ஒரு வாடிக்கையாகிப் போனால் எது கிடைத்தாலும் படிக்கிறோம். ஆழமாக நினைவில் கொள்ளும் விஷயமாக அவை இருக்கவேண்டும் அவசியம் இல்லை. சுவாசித்தாக வேண்டும், உயிர் உடலோடு ஒட்டிக் கொண்டு இருந்தாகவேண்டும். அவ்வளவே. ரொம்ப ஓவராகச் சொல்கிறேன் எனப் பார்க்கிறீர்களா? ஆனால், அதுதான் நிஜம்."போன வாரம் விகடன்லயோ  குமுதத்துலயோ எழுதியிருந்தான்......", இப்படி சம்பாஷிக்கிறோம். சில நேரங்களில் எங்கு படித்தோம் என்பதை விட என்ன படித்தோம் என்பது முக்கியமாகிப் போகிறது.

"போன வார குமுதத்துல அது பத்தி என்னவோ எழுதியிருந்தான்பா...", இங்கே ஏதோ நுனிப்புல் மேயப்பட்டிருக்கிறது. அல்லது பழக்க ரீதியான வாசிப்பு நீங்கள் வாசித்ததை உங்கள் நினைவு அடுக்குகளில் சேமிக்கவில்லை. இருபத்தி நான்காம் தேதி குடித்த தண்ணீரும், முப்பத்தி நான்காம் தேதி சுவாசித்த காற்றும் நம் நினைவில் இருந்தாக வேண்டுமென்றில்லை.

"காவிரித் தண்ணி குடிச்சிருக்கியா?" காவிரி நீர் உங்கள் பேவரைட் ஆனால் காவிரி ஓடும் ஊரில் நீங்கள் பருகிய நீரின் ஒவ்வொரு சொட்டின் சுவையையும் நீங்கள் நினைவு கூர்கிறீர்கள். 

குன்னூரிலும் கொடைக்கானலிலும் சுவாசித்த குளிர்க் காற்று என்று நினைத்தாலும் மனசில் ஜில் ஜில் என்கின்றது.

அப்படித்தான் எனக்கு. பல நேரங்களில் நேற்று வாசித்ததை இன்று நினைவில் கொள்ள இயல்வதில்லை. ஆனால், சின்ன வயசில் படித்த பூந்தளிரில் வந்த "காக்கை காளி" மற்றும்  "கபீஷ்" குரங்குக் கதைகள் இன்றும் நினைவில் உள்ளன.

கொஞ்ச வருடங்கள் கழித்து தொட்டால் தொடரும் (பட்டுக்கோட்டை பிரபாகர்) படித்தபோது, ஸ்ரீராம் அறையில் இருந்து கசிந்து வந்த கஜல் இசை என்னை கஜல் பாடல்கள் வசம் கொண்டு சென்றன. இன்றும் என் அறையில் இருந்து ஹரிஹரனின் கஜல் கசிகையில் தொட்டால் தொடரும் நாயகன் ஸ்ரீராம் நினைவிற்கு வருகிறார். வாசிப்பு சில நேரங்களில் நம் தின வாழ்வின் செய்கைகளில் சற்றே சில பாதிப்புகளைக் கொண்டு வருகிறது.

சத்குரு தன் கட்டுரை ஒன்றில் "நீ எதிரியாக நினைத்துக் கொண்டு பத்து வருடங்களுக்கு முன் சண்டையிட்டுப் பிரிந்து, அதன்பின்  பேசாமல் பழகாமல் இருக்கும் உன் பழைய தோழன் இன்று காலங்கள் கடந்து, வருடங்கள் ஓடியபின் ஒரு ஞானியாக, மேதையாக, மாற்றம் கண்ட மனிதனாக மாறியிருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் மாறாமல் இருப்பது, அவன் குறித்த "அவன் கெட்டவன்" என்று இன்னமும் நீ மனதில் கொண்டிருக்கும் உன் அழுக்குப் பிடித்த அந்த எண்ணம் ஒன்று மட்டும்தான்", என்றதைப் படித்துவிட்டு பன்னிரண்டு வருடங்கள் பார்க்காமல், பேசாமல் இருந்த என் உறவினர் ஒருவரைப்  பார்க்கப் போனேன் நான். வாசிப்பு சில நேர்மறையான பாதிப்புகளை வாழ்வில் தருகிறது.

சிவசங்கரியின் "சின்ன நூல்கண்டா உங்களை சிறைப்படுத்துகிறது" படித்திருக்கிறீர்களா? லேனா அவர்களின் ஒரு பக்கக் கட்டுரைகள்? சக்தி விகடனில் தென்கச்சி சுவாமிநாதன் அவர்களின் "கடைசிப் பக்கத் தகவல்கள்"? - இவை படித்து நான் என்னில் கொண்டு வந்த ஒழுங்குமுறைகள் நிறைய நிறைய.

பாஸ்கர் எழுதிய பதிவின்படி, அவருக்கு வாசிப்பு என்பது ஒரு ஆழமான அடிக்ஷன், மருந்து மாத்திரைகளில் தீர்க்க முடியாத போதை ஒரு வியாதி. 

எனக்கு அத்தனை அளவிற்கு அடிக்ஷன் இல்லை என்றாலும், கொஞ்சம் எங்கள் வீட்டில் நிகழ்வதைப் பாருங்கள்.

"என்னங்க, கொஞ்சம் நியூஸ் பேப்பர் எடுத்து அந்த நாலு அலமாரிலயும் போட்டு வைங்க. பொம்மை அடுக்கணும்"

"ம்ம்ம்...", கணினி முன் நான்.

அதிஷா: "பை தி வே, குட ஈவேநிங் மச்சி சார்"

கொஞ்சம் கழித்து, "ஆச்சா?"

மீண்டும், "ம்ம்ம்...."

மாமல்லன்: கொசு போட்ற போடு யானைக்கு வலிக்குது மெய்யாலுமா?

"பண்ணிட்டீங்களான்னு கேட்டேன்..."

வம்பு மடங்கள் இன்று டுவிட்டராகச் சுருங்கியோ அல்லது விரிந்தோ நம் கணினிக்குள்ளேயே வெட்டிப் பேச்சுகளையும், கிசுகிசுக்களையும் சீண்டல்களையும் கொண்டு வந்தபின், பக்கத்திலிருக்கும் பெண்டாட்டியின் பேச்சைவிட பத்து ஆயிரம் மைல் தாண்டி எவனோ ஒருத்தன் டுவீட்டிய வம்புச் செய்தி சில நேரங்களில் சுவாரசியம் தருகிறது. (கொஞ்சம் கழித்து தலையில் புடைக்கும் அளவிற்கு சப்பாத்திக் கட்டையடி கிடப்பது தனி அப்டேட்). அப்படியேனும் வெட்டியாக எத்தையோ படிக்கச் சொல்கிறது வாசித்து வாசித்து உரம் சேர்த்துவைத்த அந்த வாடிக்கை.

இப்படியாக...

வாசிப்பு சில நேரங்களில் பொழுது போக்கு.
வாசிப்பு பல நேரங்களில் உற்ற தோழன்
வாசிப்பு சில நேரங்களில் ஏதோ ஒரு விஷயத்திற்கு ஏதேனும் விடை தருகிறது.
வாசிப்பு பல நேரங்களில் மனதிற்கு மருந்து.
வாசிப்பு எப்போதும் இங்கு பலருக்கு சுவாசிப்பு...
....என்று சொன்னால் இது கொஞ்சம் ஓவராய்ப் படுகிறது. எனினும் இப்படித்தான் முத்தாய்ப்பாய் முடிக்க வேண்டியிருக்கிறது. நீங்கள் வேறு ஏதேனும் உருப்படியாக வாசிக்க வேண்டாமா?


நான் இங்கே இத்தொடர் பதிவைத் தொடர அழைப்பது நண்பர் கோபி ராமமூர்த்தி, Criative-Rascal மோகன், பாலாஜி சரவணா, நண்பர் பதிவுலகில் பாபு மற்றும் விருட்சம் ஆகியோரை.

நண்பர் சண்முகத்தை ஒரு விருந்தினர் பதிவு எனக்காக எழுதுமாறும் வேண்டிக்கறேன்.
.
.
.


13 comments:

natbas said...

நல்லா எழுதி இருக்கீங்க சார். நீங்க வாழ்க்கையைப் புரிஞ்சுக்க, பண்படுத்த, புத்தகங்களைப் படிக்கறீங்கன்னு நினைக்கிறேன். இந்த மாதிரி நிறைய எழுதுங்க என்று கேட்டுக் கொள்கிறேன்.

"ஸஸரிரி" கிரி said...

நன்றி நட்பாஸ் சார்!
சரியா சொன்னீங்க. வாசிப்பு மூலமா வாழ்க்கைய புரிஞ்சிக்க, பக்குவம் சேர்த்துக்க முடியுது.

A doctor said...

அழகாக எழுதியிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.இன்னும் சிறிதுகாலத்தில் நீங்களும் புத்தகங்களை எழுதுவீர்கள் என்று தெரிகிறது எழுத்தில்.
வீட்டில் ஹெல்மட் பாவித்தால் என்ன?

"ஸஸரிரி" கிரி said...

தேங்க்ஸ் டாக்டர்!
புத்தகம் எழுதறதா? அது ஒரு கனவு. ஈடேருதா பாப்போம்.
பை தி வே! வீட்டுல மூணு ஹெல்மெட் ஒடஞ்சி நாலாவது ஸ்டிராங்கா ஒண்ணு தேடிட்டு இருக்கேன்.

Gopi Ramamoorthy said...

சூப்பர் பாஸ். ஆனா நீங்க யாராவது எழுதக் கூப்பிட்டு இருக்கலாமே. பக்கத்து இலைல பாயசம் ஊத்துங்க:))))))

"ஸஸரிரி" கிரி said...

மன்னிக்கவேண்டும் மன்னர் மன்னா....!!
மறந்துவிட்டேன். இப்போ பதிவின் கடைசியில் கோரிக்கை விடுத்துட்டேன். சீக்கிரம் எழுதுங்க.

natbas said...

"ஸஸரிரி" கிரி சார், இப்படி எல்லாம் போற போக்கில கூப்பிடக் கூடாது. ஒழுங்கு மரியாதையா பதிவுக்கு உள்ளார சுட்டி வெச்சு, "ஐயா, இந்த மாதிரி இது விஷயம். இது குறித்து உங்களைத் தொடர் பதிவிட அழைக்கிறேன்," அப்படின்னு கூப்புடணும். அதுதான் மொறை.

ம.தி.சுதா said...

நல்லாயிருக்கு சகோதரம் வாழ்த்துக்கள்....

"ஸஸரிரி" கிரி said...

நட்பாஸ்,
கொஞ்சம் தெளிவாயிட்டு சொல்லுங்கோ. என் பதிவுல அவங்க இணைய சுட்டி தரவா? இல்லை, அவுக இணையத்துக்குப் போயி இந்த பதிவுக்கு சுட்டி தரவா?

மரமண்டைக்கு வெளங்கள பாத்தீயளா !!!

"ஸஸரிரி" கிரி said...

ம.தி.சுதா,
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி.

natbas said...

உங்க பதிவு வழியாதானே கூப்பிடணும்? உங்க பதிவுல சுட்டி தந்தா நாங்களும் யாரு இவரு என்ன எப்படி எழுதப் போறாருன்னுன்னு போய் பாப்போம், அவங்களுக்கும் எழுத ஒரு ஊக்கம் கிடைக்கும், இல்லையா?

Anonymous said...

கிரி, தொடர்ந்த பதிவு நன்றகா இருக்கிறது, வாழ்த்துக்கள்!

virutcham said...

கிரி, பதிவு நல்லா இருக்கு. போகிற போக்கில ஆட்டத்திலே என்னை சேர்த்து இருக்கீங்க. தற்செயலா இந்தப் பக்கம் வந்தததோட நிக்காமல் கொஞ்சம் பழைய பதிவுகளை புரட்டினப்போ கண்ணுல பட்டுது. இல்லேனா எப்படித் தெரியும்? நான் எப்படியாவது பார்த்திடுவேன்னு நம்பிக்கையோட கூப்பிட்டதே தெரியாமா கூப்பிட்டிருக்கீங்க. நவராத்திரிக்கு பாட்டு பாடுங்கன்னு தானா வீட்டுக்குள்ளே வந்தவங்களைச் சொல்லறா மாதிரி.
அழைப்புக்கு நன்றி.
உங்களை மாதிரி தெளிவா வாசிக்க காரணம் ஒன்னும் இல்லைன்னு சொல்லற அளவுக்கு எனக்குத் தெளிவான காரணங்கள் இருக்கானு இனிமே தான் யோசிக்கணும்.

Related Posts Plugin for WordPress, Blogger...