Apr 19, 2011

பெயர்க் காரணம் - தொடர்ப்பதிவு

இந்தத் தொடர்பதிவிட அழைத்த கோபி அவர்களுக்கு மிக்க நன்றி (அதனால் அவர் முன்னுரையை அப்படியே இங்கே செலவில்லாமல் போட்டுக் கொள்கிறேன்)

தொடர்பதிவுகளால் பல நன்மைகள் உண்டு. நம்மையும் மதித்து ஒருவர் பதிவிட அழைக்கிறார் என்று நினைக்கும்போது மகிழ்ச்சியாகவே இருக்கிறது. மனித மனம் ஏங்குவது அங்கீகாரம் என்ற ஒன்றுக்குத்தானே.

இன்னொரு முக்கியமான விஷயம். பதிவிட எனக்கு விஷயம் இல்லாத இதுபோன்ற தருணங்களில் (எப்போவுமே அப்படித்தான்னு யாருப்பா முணுமுணுக்கிறது) இது போன்ற அழைப்புகள் பாலைவனச்சோலை மாதிரி.

இதுபோன்ற பதிவுகளால் நட்பு வட்டம் பெரிதாகிறது. நல்ல விஷயங்கள் பகிரப்படுகின்றன. சக பதிவர்கள் பற்றிய புரிதல் அடுத்த நிலைக்கு நகர்கிறது. ஆக மொத்தத்தில் இது ஒரு ஆரோக்கியமான விஷயம் (ஐயோ முடியலைன்னு யாருப்பா கத்துறது).________________________________________________________________


முன்குறிப்பு: காலச்சக்கரத்தில் மேலே, கீழே, முன்னே, பின்னே, இடது, வலது  என மாறிமாறிப் பயணம் செய்ய வேண்டியிருப்பதால் பயண நேரங்களில் வாந்தி, மயக்கத் தொந்தரவு இருப்பவர்கள் தயவு செய்து அவோமின், டொமஸ்டால் போன்ற மாத்திரைகளை எடுத்துக் கொண்டு இந்தப் பதிவைப் படிப்பது நலம் 


ஆயிரத்தி தொள்ளாயிரத்தி அத்தனையாம் வருஷம்......

மழையும் இல்லாமல், இடியும் இல்லாமல், வெயிலும் இல்லாமல், காற்றும் இல்லாமல் கடலலை இல்லாமல், வெறுமையில் இந்த உலகம் உழன்று கொண்டிருந்த ஒரு சுபயோகமில்லாத அந்த செப்டம்பர் மாதம் ஆறாம் நாளை சுபநாளாக்க....

ஆம் ஆம் அதே நாள்தான்.... மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத் தாவிய சேவடியாம் நம் வாமனனின் பாதத்தைத் தன் சிரசில் தாங்கி சேரத் திருநாட்டிற்கு மாவலி மன்னன் ஓணத் திருநாள் தந்த அந்தப் புரட்டாசி மாதத்தின் திருவோணத் திருநாளில் அவதரித்தான் ஒரு தேவ பாலகன்.....

ஷ்.... ஹப்பா....இப்பவே கண்ணைக் கட்டுதே என்னும் அன்பர்களுக்காக மட்டும் இங்கேயே சுருக்கமாகச் சொல்லிக் கொள்கிறேன். அந்த பாலகன் யாருமல்ல, தன் எண்ணங்களாலும் எழுத்துக்களாலும் சொற்களாலும் சோடைபோகா சிந்தனையாலும்  கடந்த பதினெட்டுத் திருத்திங்கள்களாய் வீரத்திற்கு ஈரத்திற்கும் பெயர்போன ....

...யோவ்! நிறுத்தித் தொலைச்சுட்டு யாருன்னு சொல்லுவியா?....

.... அது நாந்தாங்க! வேறாருமில்லை!

காலச் சக்கரத்தை சற்றே முன்னோக்கிச் சுற்றி கொஞ்சம் முப்பத்து சொச்ச வருடங்கள் கடந்தால்.... இருங்கள் இருங்கள் ஏதோ ஆரவாரம் கேட்கிறது. இது சென்னை போல இருக்கிறது. ஆம் கூவத்தின் மணம் நாசியெங்கும் கமழ்கிறதே. ராயப்பேட்டை ஸ்வாகத் ஹோட்டல் என்கிறது இங்கிருக்கும் பித்தளை எழுத்துக்கள். ஆம் ஆம்.... அந்தப் பாலகன் வளர்ந்து உருவாகி இன்று அந்த மேடையில் அமர்ந்திருக்கிறான். ஆன்றோர் சான்றோர் அனைவரும் அவன் எழுதிய எழுத்தினைப் பற்றிப் பேசியமர, ஏற்புரை வாசிக்க போடியம் வருகிறான் அந்தப் பொடியன்.  

அவன் எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா அது. அந்தப் புத்தகம் உருவாகிட முக்கியக் காரணம் தன் தாய்தான் எனக் கூறி அவளுக்கு ஒரு பொன்னாடை போர்த்திட வருகிறான் அவன். அவ்வேளையில் அந்த அன்னையின் மனதினில் கீற்றாய் ஓர் எண்ணம். அந்த பாலகன் உருவான வரலாறை அவள் அந்த ஓரிரு நொடிகளிலேயே முப்பத்து சொச்ச வருடங்கள் பின்னோக்கிச் சென்று அசைபோட்டுத் திரும்புகிறாள்.

நான்கு தலைமுறைகளாக அந்தக் குடும்பத்தில் ஒற்றை ஆண் வாரிசு என்பதே தொடர்கதை. அந்தப் பாலகனின் அப்பா ராமசுப்ரமணியன், தாத்தா பட்டாபிராமன், கொள்ளுத்தாத்தா சுப்பராமையா, எள்ளுத்தாத்தா பட்டாபிராமன் என எல்லோருமே ஒற்றை ஆண் வாரிசுகள். அதற்கும் முந்தின தலைமுறையிலேயே மூன்று சகோதரர்கள் ஒரே வீட்டில் பிறந்திருந்தார்கள். அவர்கள் பெயர் முறையே ரங்கநாதன், ராமையா, சோமையா. இந்த வீட்டினில் மீண்டும் ஒற்றை வாரிசுக் கதை தொடர்ந்திடக் கூடாது என, அந்தப் பாலகனுக்கு முன்னதாகப் பிறந்த மூத்த சகோதரனுக்கு "ரங்கநாதன்" எனப் பெயரிட்டார்கள் அவன் பெற்றோர். அந்த வீட்டின் நம்பிக்கை வீண் போகாமல் பாலகனுக்கு முன்னதாக மற்றுமொரு ஆண் வாரிசும் பிறந்தது. ராமையா என்னும் பெயர் எழுபதுகளில் கொஞ்சம் பழமையானது என்பதால் அந்தக் குழந்தைக்கு ராமையாவில் ராமனை எடுத்துக் கொண்டு "பட்டாபிராமன்" என்று தாத்தாவின் பெயரையே அந்தக்  குழந்தைக்கு வைத்தார்கள்.


அதன் பின் ஒரு பெண்குழந்தை, அதற்கும் அடுத்ததாக அந்த வீட்டில்  பிறந்தான் இந்தப் பதிவின் நாயகனான அந்தப் பாலகன். சோமையா என்னும் பெயரை நீட்டி நிறுத்தி சோமசுந்தரம் என்னும் பெயர் வழங்கி மகிழ்ந்தனர் (!!) அவனைப் பெற்றவர்கள்.


அந்தப் பாலகனைக் கருவினில் சுமக்கையில் அந்தத் தாய் சுமந்த வேதனைகளைச் சொல்லி மாளாது <பொறந்த பின்னால மட்டும் வேதனை இல்லாம வேறே என்னத்தக் கண்டுச்சி அந்தத் தாயி என்று பின்னணியில் ஒலிக்கும் குரல்கள் என்னைக் கலங்கடித்து விடாது என்பதைப் புரிந்து கொண்டு சத்தம் போடாமல் படியுங்கள் தோழ தோழிகளே>.


நல்ல குடும்பத்திற்கு நாலு போதுமே என்னும் இந்திய அரசின் விளம்பரங்கள் தேய்ந்து "முத்தான குடும்பத்திற்கு மூன்று போதுமே" என்னும் விளம்பரக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருந்த அந்த வேளையில் "இரண்டு மகன்களும் ஒரு மகளும் ஆயிற்று, மீண்டும் மகள் பிறந்தால் என்ன செய்வாய்?" என்று ஊரும் உலகும் அந்தத் தாயைக் கேட்ட வேளைதனில் "இல்லையில்லை, இந்தப் பிள்ளை இப்பூவுலகினில் அவதரித்துப் பண்ணி முடிக்க வேண்டிய காரியங்கள் எண்ணிலடங்காதவை. எனவே நான் இவனைப் பெற்றே தீருவேன்", என வைராக்கியம் இருந்து அந்தப் பாலகனைப் பெற்றாள் அந்தத் தாய். அந்தத் தாயின் அந்த வைராக்கியத்தை மெச்சி இப்படியொரு "அவதாரத்தைப்" பெற்ற அவளுக்கு தத்தமது கம்ப்யூட்டர் முன் சாஷ்ட்டாங்கமாய் நமஸ்கரிக்கும் தோழ தோழிகளே, உங்களது வணக்கங்களை அந்தத் தாயிடம் சேர்ப்பித்து விட்டேன் என்பதனையும் இந்த வேளையில் உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்.  


"சோமசுந்தரம்? யு மீன் சோமு? தட்ஸ் எ ஓல்ட் நேம்" என்று சொன்ன  சிலபேர், அவன் பிறந்த ஊர் கிருஷ்ணகிரி என்பதால் அவனை "கிரி கிருஷ்ணா" என்றும் அழைக்கத் துவங்கினர். கொஞ்ச நாட்களில் கிருஷ்ணா தேய்ந்து கிரி என்று மட்டும் ஆகிப்போனது. பிறந்ததும் பர்த் சர்டிபிகேட் வாங்கும் வழக்கம் இல்லாத காலகட்டம் அது.  பள்ளியில் சேர்க்கும் பருவத்தில் அங்கே என்ன பெயர் சொல்கிறோமோ அதுவே பர்த் சர்டிபிகேட் ஆகிப்போகும் அப்போது. ஐந்து வருடங்கள் ஆனபின் பஞ்சாயத்துப் பள்ளியில் நெடிய க்யூவில் நின்று ஃபாரம் வாங்கி அதை நிரப்பும்போது "சோமசுந்தரம்? கிரி கிருஷ்ணா? கிரி?" என்ற தன்னைத்தானே கேட்டுக் கொண்ட அந்தப் பாலகனின் தந்தை "கிரி என்பதே ஓகே", என்னும் முடிவுக்கு வந்ததே என் பெயருக்கான 'சிம்பிள்" காரணம்.


ஆகவே மக்களே! இதற்கு மேலே இங்கே சொல்ல வேறு ஒன்றும் இல்லாததால் நீங்கள் வேறு உருப்படியான பதிவுகளைப் படிக்கச் செல்லலாம்.


<பதிவைப் படிக்கும் எல்லோரையும் இந்தத் தொடர்ப்பதிவைத் தொடர அழைக்கிறேன்.>
.
.
.15 comments:

susila said...

thankyou giri susila

கிருஷ்குமார் said...

ஒரு கொட்டாவியோட தான் படிக்க ஆரம்பிச்சேன் ..ஆனா விறுவிறு ன்னு கொண்டு போயிட்டு சட்டுன்னு ஸ்டாப் பண்ண மாதிரி இருக்கே ! By the Way, உங்க முழு பேரு என்னன்னு இன்னமும் எனக்கு தெரியல!

கிருஷ்குமார் said...

முழுபெயரும் கிரி தானா?

"ஸஸரிரி" கிரி said...

@ சுசிலா

:)

"ஸஸரிரி" கிரி said...

@க்ரிஷ்
என் முழுப் பெயருமே கிரி மட்டுமே.

ச்சின்னப் பையன் said...

:-)))))))

இளங்கோ said...

////
நான் ஏற்கனவே எழுதிட்டேன் :)

natbas said...
This comment has been removed by the author.
natbas said...

ஐயா, அடியேனின் தொடர் பதிவு இங்கே இருக்கிறது

http://livelyplanet.wordpress.com/2011/04/19/postforgiriandmankuthirai/

படித்துப் பார்த்துவிட்டு ஒரு வார்த்தை சொன்னால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்.

நன்றி.

Rathnavel said...

நல்ல பதிவு கிரி.
தங்கள் பெயர்க்காரணம் நல்ல பதிவு. எனக்கு சோமசுந்தரம் என்று SSLC வரை (1965) ஒரு நண்பர் பள்ளியில் கூட படித்தார். பின்பு அவர் தொடர்பு விட்டுப்போய்விட்டது. எனது மூத்த பையன் கல்யாணத்திற்கு (2005) பத்திரிக்கை அனுப்பியிருந்தேன். கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள்
கழித்து வந்திருந்தார். ஆச்சரியம். இடையில் பார்க்கவேயில்லை.
Warrior என்பவர் எழுதிய maruthupaandy.blogspot.com நேரம் இருக்கும்போது படித்துப்பாருங்கள். குறிப்பாக அவரது இருநூறாவது பதிவு. படித்துப்பார்த்து விட்டு எனக்கு எழுதுங்கள்.
வாழ்த்துக்கள் கிரி.

"ஸஸரிரி" கிரி said...

@ Rathnavel sir

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி! மருதுபாண்டியை நிச்சயம் வாசிக்கிறேன். நன்றி!

"ஸஸரிரி" கிரி said...

@ chchinnap paiyan

பெரியவா வந்திருக்கேள்! மெத்த நன்றி!

"ஸஸரிரி" கிரி said...

@இளங்கோ

தேங்க்ஸ் சகா! உங்க பதிவையும் வாசித்தேன்.

Anonymous said...

.....

amas said...

பிறப்பின் ரகசியமும் பெயர் காரணமும் அறிந்து மகிழ்ந்தேன்! வாழ்த்துகள் :) Fantastic style, loved it :)
amas32

Related Posts Plugin for WordPress, Blogger...