May 1, 2011

மூன்று கைகளுடன் பிறந்த குழந்தை


சிறப்புப்பதிவர் : நட்பாஸ் 

நேற்று என்னால் தேவநேயப் பாவாணர் அரங்கில் நிகழ்ந்த "வெங்கட் சாமிநாதன்- வாதங்களும் விவாதங்களும்" என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவுக்குப் போக முடிந்ததென்றால் அதற்கு நான் என் நண்பர் கோபி அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

ஏடிஎம் அட்டை எப்போதோ காலாவதியாகி விட்ட நிலையில், வீட்டில் வெறும் இருபது ரூபாய்தான் இருக்கிறது என்ற என் கையறு நிலையை இரவுதான் நான் உணர்ந்த்திருந்தேன். அதனால் ஐஓபி வங்கி கிளை திறப்பதற்கு அரை மணி நேரம் முன்னமேயே அங்கு போய் காசு எடுப்பதற்காக க்யூவில் நிற்க வேண்டிய அவசர நிலை. காஷியர் வந்தார், சன்னலைத் திறந்தார், "காசு கட்டறவங்க முதல்ல வாங்க," என்றார். நியாயம்தானே? பணம் நம்முடையது என்றாலும் வாங்குபவனை விட எப்போதும் கொடுப்பவனைக் கூடுதல் மரியாதையுடன் வரவேற்பதுதானே வணிக பண்பாடு? 

அப்போது முன்னால் வந்தவர்தான் கோபி. என்னைக் கண்டு, "இங்கேயும் நம்மாளுங்களைப் பாக்காம இருக்க முடியாதா?" என்று அலுத்துக் கொண்டாலும், நான் பஸ்ஸில்தான் வீடு திரும்பவிருக்கிறேன் என்ற என் நிலையை அனுதாபத்துடன் அவதானித்தார். 

"க்யூவில் எவ்வளவு நேரம் நிப்பே? நான் பைக்கில் போறேன், என்கூட வந்துடேன், " - அடியேனின் பொருளாதார நிலை அதற்கு இடம் தருவதாயில்லை என்பதை அவருக்குத் தெரிவித்தேன்.

"உனக்கு எவ்வளவு வேணும்?"  என்று என் கையிலிருந்த பணமெடுப்புப் படிவத்தை வாங்கிப் பார்த்தார், "ஐயாயிரம்தானே? நான் தரேன், வா"

அவர் என்னை என் வீட்டில் சேர்ப்பித்துவிட்டு அப்புறம்தான் தன் வீட்டுக்குப் போனார், இத்தனைக்கும் அவருக்குத் திருமணமாகி குழந்தைகளெல்லாம் இருக்கிறார்கள்.

("மாமா, நீ மாமியைக் கல்யாணம் செஞ்சப்புறம் எவ்வளவு நாள் சந்தோஷமா இருந்தே?"

"ரெண்டு வருஷம்"

"எல்லாரும் ஒரு வருஷம்னுதானே சொல்லுவாங்க. நீ மட்டும் எப்படி ரெண்டு வருஷம் சந்தோஷமா இருந்தே? அந்த ரகசியத்தை சொல்லுங்க. ப்ளீஸ்"

"அந்த ரெண்டு வருஷம் அவ ட்ரான்பர் ஆகி திண்டுக்கல்லில் இருந்த வருஷங்கள்"

கோபி வழியில் சொன்ன நிகழ்வு)

நண்பரின் புண்ணியத்தில் அதிகாலையிலேயே உச்சி சூரியனின் உக்கிரத்துடன் புலரும் சென்னையின் இளங்காலை வெயிலைத் தவிர்த்தேன். நன்றி கோபி, நல்ல உதவி, இதுபோன்ற அற்புதங்கள் என்றோ ஒருமுறையே நிகழ்வதுண்டு. அவற்றின் நினைவுகள் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவை.

---------------------------------------------------------------வெங்கட் சாமிநாதன் தன்னை ஒரு அசாத்திய திறமைகள் கொண்ட சிந்தனையாளராகக் காட்டிக் கொள்வதில்லை. "பொதுபுத்திக்கு அப்பாற்பட்ட எதையும் நான் சொல்லிவிடவில்லை. நான் எழுத்தாளன்கூட இல்லை. என் கட்டுரை "எழுத்து" இதழில் வெளிவந்திருப்பதைக் கேள்விப்பட்டதும் என் நண்பர் ஒருவர், "முதலில் சாமிநாதனை ஒழுங்கா தமிழில் எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ளச் சொல்லு. அப்புறம் அவன் எழுதப் போகட்டும்" என்று சொல்லியிருக்கிறார். அதற்கப்புறம் ஐம்பது ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன். இப்போதுகூட அன்னா கண்ணனைக் கேளுங்கள்.  நான் எழுதுவதில் எவ்வளவு பிழைகள் இருக்கின்றன என்பதை அவர் சொல்வார். வெறுமே ஐம்பது வருஷமா பொதுபுத்திக்குப் புலப்படக்கூடியதைச் சொன்னதுக்காக இப்படி விழா எடுத்துப் பாராட்டுவார்களா?" என்ற கேள்வியை முன்வைக்கிற வெங்கட் சாமிநாதன்  தன் புகழுக்கான அத்தனை பெருமையும் தமிழ்ச் சூழலையே சேரும் என்கிறார்.

""கட்டுமரத் துடுப்பைப் போல ஆடுதடி இடுப்பு" என்று லட்சக்கணக்கில் செலவு செய்து படமெடுக்கிறார்கள். இதிலுள்ள அபத்தம் பொதுபுத்திக்குத் தெரியாததா? எல்லாரும் இதை மௌனமாக ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.  எல்லாருக்கும் தெரிந்த இதன் அபத்தத்தை, அழிவை யாரும் அதிகம் பேசுவதில்லை.  ஆனால் நான் பெரிதாக சொல்கிறேன்.  மற்றவர்களுக்கு ஏதேதோ சார்புகள் இருக்கின்றன. எனக்கு அந்த மாதிரியெல்லாம் எதுவும் இல்லை. அதனால் நான் சொல்லும் சாமானிய, பொதுபுத்திக்குத் தெரிந்த விஷயங்கள், துணிச்சலாக முன்வைக்கப்பட்ட சிந்தனைகளாக தமிழ்ச் சூழலில் தெரிகிறது," என்கிறார் வெசா. 

"இங்கு நான் மூன்று கைகளுடன் பிறந்த அதிசயக் குழந்தை போல் இருக்கிறேன்," என்று நகைச்சுவையாக அவர் குறிப்பிட்டாலும் அதில் உள்ள உண்மையைதான் நேற்றைய விழாவில் பேசிய அனைவரும் வெவ்வேறு திசைகளிலிருந்து சுட்டிக் காட்டினார்கள் என்று எனக்கு தோன்றியது- சிலர் மறைமுகமாக சொன்னார்கள், சிலர் வெளிப்படையாக சொன்னார்கள், கடந்த எண்பது ஆண்டு கால திராவிட இயக்க சிந்தனையின் தாக்கத்தின் விளைவுகள் குறித்து நேற்று பேசிய அனைவருக்கும் கோபமும் வருத்தமும் இருந்தது.  தமிழ் மரபின் வேர்களைப் பற்றிய எந்த கவலையும் இல்லாமல் வெகுசன ரசனையின் வெற்றி,  பரப்பியல் சார்ந்த சிந்தனைகளின் மயக்கம்- இவை தந்த பெருமிதத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழர்கள் தலைமுறை தலைமுறையாக கைமாற்றிப் பாதுகாத்த செல்வங்கள் அத்தனையும் மக்களால் அலட்சியபடுத்தப்பட்டு குப்பையோடு குப்பையாய் மட்கிப் போவதில் நேற்றுப் பேசிய அனைவருக்கும் துயரும் தாபமும் இருந்தன. இதற்கு எதிராக இயங்கி, தமிழ் மரபின் வேர்களைப் பாதுகாத்து, அதன் முக்கியத்துவத்தை பண்பாட்டின் மையத்துக்குக் கொண்டு வர முயற்சி செய்தவர்களில் முக்கியமானவராக இவர்கள் வெங்கட் சாமிநாதனைப் பார்க்கிறார்கள். 

அதிகம் யோசிக்காமல் சுயசார்பின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒற்றைப் பார்வையின் மேலாதிக்கத்தின் காரணமாக நம் பண்பாடு தன் பன்முகத்தன்மையை இழந்து தன் தொன்மைக்கு துரோகம்  செய்கிறதே என்ற வருத்தம் விழாவில் பேசிய அனைவரின் உரையிலும் வெளிப்பட்டது. நாஞ்சில் நாடன் மட்டும்தான் வழக்கம் போலவே தன் இயல்புப்படி இதை வெளிப்படையாக, ஆணித்தரமாகச் சொன்னார், "எனக்குப் பிடிக்காத வார்த்தை, இந்த 'பார்ப்பான்' என்பது. அதை சொல்லி விட்டால், எதிர்த்து எதுவும் பேச முடியாது என்று ஆகிவிட்டது.  இதைச் சொல்லும் என்னைப் பார்ப்பன அடிவருடி என்பார்கள். ஏற்கனவே சொல்லிவிட்டார்கள்," என்றார் நாஞ்சில் நாடன் எந்தத் தயக்கமும் இல்லாமல் உரக்கவே. தன் வழக்கப்படி அவர் ஆவேசமாக தமிழ்ச் சூழலை சாடிக் கொண்டிருக்கும்போது சீட்டு அனுப்பி தடுத்து  விட்டார்கள்.  அவருக்கு இருக்கிற கோபத்துக்கு ஊர் ஊராய்ப் போய் நாள் கணக்கில் கோபப்படுவார் நாஞ்சில் என்று தோன்றுகிறது.

நாஞ்சிலைத் தவிர்த்துப் பார்த்தால் நேற்று பேசியவர்களில் அனுபவப்பட்ட சிலரைத் தவிர மற்றவர்களுக்குப் பேசத் தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  அவரவர் தமக்கிருந்த ஏதோ ஒரு காரணத்தால் தமிழில் தொடர்ந்து நாலு வாக்கியம் பேசவே சிரமப்பட்டார்கள். "இந்தப் புத்தகம் போடுவதற்கான எண்ணம் எங்களுக்கு ஸ்காட்ச் குடித்துக் கொண்டிருக்கும்போது வந்தது." என்ற பின்நவீனத்துவ முக்கியத்துவம் வாய்ந்த தகவலுடன் இந்த விழா துவங்கியது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

யார் யார் என்ன பேசினார்கள் என்பது குறித்த தகவல்களை நான் பதிவு செய்யப்போவதில்லை. அந்த அளவுக்கு எனக்கு நினைவுத் திறனும் கிடையாது. ஒவ்வொருத்தரும் தன் துறை, அல்லது தன் களம் சார்ந்த பார்வையில் வெங்கட் சாமிநாதனை அணுகினார்கள் என்று சொல்லலாம்.  நாஞ்சில் நாடன் பெரும்பாலும் இலக்கியம் மற்றும் அது சார்ந்த சமூக சூழல்,  வெளி ரங்கராஜன் நாடகம் மற்றும் நுண்கலை விமரிசனத்தில் வெங்கட் சாமிநாதனின் பங்களிப்பு- குறிப்பாக அவரால் நவீன தமிழ் நாடகத் துறையில் ஏற்பட்ட படைப்பூக்கம் பற்றி பேசினார். ஜெயமோகன் வெங்கட் சாமிநாதனின் விமரிசனப் பார்வை குறித்தும் அது எதிர்கொள்ளப்பட வேண்டிய விதம் குறித்தும் பேசினார் (இது பற்றி நண்பர்கள் விரும்பினால் தனி குறிப்பு பிற்சேர்க்கையாக இப்பதிவில் இணைக்கப்படும்). செங்கதிர் மிகுந்த தடுமாற்றத்துடன் பேசினார், அவர் என்ன சொல்ல வந்தாரோ அதை சரியாக சொல்லவில்லை என்றுதான் தோன்றுகிறது. நாட்டார் கதை ஒன்றைச் சொல்லி தனித்துவம் குறித்து ஆழ்ந்த ஒரு கருத்தை அவர் முன் வைத்தார் , ஆனால் அவருக்கு அதை அழகு செய்து சொல்லத் தெரியாததால், இவ்வளவுதானா என்று எனக்குத்  தோன்றியது. பொதுவாக ஆழமான உண்மைகள் ஆரவார அலங்காரங்கள் இல்லாமல் வந்தால் சாதாரணமாகத்தான் இருக்கும்- வெங்கட் சாமிநாதன் கூறும் பொதுபுத்திக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் மிக அரிதாகவே புலப்படுகின்றன, பேரரசனின் புத்தாடைகளைப் போல.

இவர்கள் தவிர கவிஞர் திலகபாமாவும் அரவிந்தன் நீலகண்டனும் பேசினார்கள். கவிஞர் திலகபாமா எழுத்தாளர்களே விமரிசகர்களாக இருப்பதில் உள்ள ஒரு அபாயத்தைச் சுட்டிக் காட்டினார்- அவர்கள் தங்கள் எழுத்தைப் போன்றதாக இல்லாத படைப்புகளை தோல்வியடைந்தனவாக ஒதுக்கி விட நேர்கிறது, என்றும், தங்களைப் போன்று எழுதுபவர்களை ஒரு இன்செக்யூரிட்டி காரணமாக நசித்துவிட நேர்கிறது என்றும் சொன்னார். இது எந்த அளவுக்கு சரியான கருத்து என்று தெரியவில்லை. இருந்தாலும் படைப்பூக்கத்தில் செயல்படுகிறவர்களுக்குத் தங்களுக்குப் படைப்பூக்கம் அளிக்காத எதுவும் படைப்பு என்ற அளவில் தோற்றுப் போனதாகவே தெரியும் என்பது ஏற்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது.  மற்றபடி நசிப்பது, நசிக்காமல் இருப்பது போன்றவை தனிமனித விருப்பு வெறுப்பு சார்ந்த விஷயங்கள்.  இந்த மனப்போக்கைக் கைகொள்பவர்கள் நம்மிடையே எங்கும் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

அரவிந்தன் நீலகண்டனின் பேச்சு விளையாட்டு போல அவருக்கு காவி சாயம் பூசும் பா ராகவன் போன்றவர்களுக்கும் அதை வினையாகவே செய்பவர்களுக்கும் அநீதி செய்வதாக இருந்தது. நான் நினைத்த மாதிரி இல்லாமல்,  நீல கலர் முழுக்கை சட்டை போட்டு வந்திருந்தார்- அவர் அரங்கில் அமரத் தேர்ந்தெடுத்த இருக்கைகள் பெரியாரின் உருவப்படத்தை ஒட்டியிருந்தன.  பெரியாரின் உருவப்படத்தின் கீழ் சிஷ்யப் பிள்ளைக்குரிய அடக்கத்துடன் அரவிந்தன் நீலகண்டன் யாரோ ஒருவரிடம் உரையாடிக் கொண்டிருந்த அரிய காட்சியை காவிப் படைக்கு பயந்து நான் புகைப்படமெடுக்கத் துணியவில்லை. அவரும் தன் பேச்சில், மரபுகளைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இயங்குபவர்கள் அடிப்படைவாத அடையாளங்களில் சிக்கிக் கொள்ளும் அபாயம் இருக்கிறது, இதைத் தவிர்த்து, மரபை மீட்டு முன்னெடுத்துச் செல்வது எப்படி என்பதை நாம் யோசிக்கும்போது, அங்கு வெங்கட் சாமிநாதன் முக்கியமானவராக இருக்கிறார் என்று பேசியது அரவிந்தன் நீலகண்டனின் பிம்பத்துக்கு ஏமாற்றமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

நான் பதிவின் துவக்கத்தில் சொன்ன மாதிரி, கடன் வாங்கிய காசில்தான் விழாவுக்கே போயிருந்தேன்.  போகும்போதே என்ன ஆனாலும் புத்தகத்தை வாங்கிவிடக் கூடாது என்று முடிவு செய்துகொண்டுதான் போயிருந்தேன்- என் நிலைப்பாட்டுக்குரிய கடப்பாடுகள் நியாயமானவை என்று நான் இப்போதும் நினைக்கிறேன். இதுவரை பேசியவர்கள் இலக்கியம், இசை, ஓவியம், நடனம், நாடகம், நாட்டாரியல் மற்றும் காண்பாரியம் குறித்து வெங்கட் சாமிநாதன் தன் கருத்துகளை விருப்பு வெறுப்பின்றி நேர்மையாக முன்வைத்தார் என்று பேசியிருந்தார்கள்.  அவரது பங்களிப்பு எவ்வளவு முக்கியமானது என்றும் சொல்லியிருந்தார்கள்.  ஆனால் வெங்கட் சாமிநாதன் எவ்வளவு முக்கியமானவராக இருந்தாலும் புத்தகத்தை வாங்கக் கூடாது என்ற என் முடிவை மாற்றிக் கொள்ளப் போதுமானதாக யார் பேசியதும் இருந்திருக்கவில்லை- இவர்களின் உரை அறிவு சார்ந்த ஒன்றாக மட்டும் இருந்திருந்த காரணத்தால்.

வெங்கட் சாமிநாதன் கால காலத்துக்கும் மதிக்கப்பட வேண்டிய மனிதராக இருந்துவிட்டுப் போகட்டும், அவரது எழுத்து நம் பண்பாட்டின் வெவ்வேறு நரம்புகளைத் தாக்கித் தூண்டி எழுச்சியுறச் செய்திருக்கட்டும். ஆனால் அதனால் எனக்கென்ன வந்தது? கைக்காசு போட்டு ஒரு புத்தகத்தை வாங்கப் போதுமான காரணங்களா அவை? நான் என் காசை செலவு செய்தாலும் செய்யாவிட்டாலும் எதுவும் மாறப் போவதில்லை. எனவே ஒரு மாதிரி விண்டோ ஷாப்பிங் செய்து கொண்டிருந்தபோதுதான் தன் முடிவுரையைப் பேச அகிலன் வந்தார்.

இந்தப் புத்தகம் பதிப்பாகக் காரணமாக இருந்தவர்களில் இவரும் சனாதனன் என்பவரும் இலங்கைத் தமிழர்கள். அண்மையில் இலங்கையில் நடந்த யுத்தத்தில் இங்குள்ள தமிழர்கள் அக்கறை காட்டவில்லை என்ற ஏமாற்றத்தின் காரணமாக சனாதனன் தமிழகம் வருவதில்லை என்றிருக்கிறாராம். அகிலன் ஒரு மிக எளிமையான விஷயத்தைச் சொன்னார். யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் பண்பாடு குறித்து பட்டப்படிப்பு படிக்க முடியும் என்ற நிலை உண்டு- அகிலன் அங்கு படித்த காலத்தில் இலக்கியம் நீங்கலாக, தமிழ் நாடகம், நடனம், இசை, நாட்டாரியல் என்று எந்த நுண்கலையைத் தொட்டாலும் அதில் வெங்கட் சாமிநாதன் நீங்கலாக வேறு எவரும் பொருட்படத்தக்க வகையில் எந்த ஆய்வு நூலையும் எழுதியிருக்கவில்லை என்றார் அவர். படித்தால் அவர் எழுதியைதான் படிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது என்று அகிலன் சொன்னதும், எனக்கு ஏறத்தாழ தமிழர்கள் அனைவரும் ஒரு நீண்ட தூக்கத்தில் ஆழ்ந்திருப்பதாக தோன்றியது. வெங்கட் சாமிநாதன் தனியொருவராக அதன் மரபுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வர முயன்றிருக்கிறார். தமிழ் மரபின் தொன்மையை தமிழ் அறிவுச் சூழலின் மையத்துக்குத் தன் வாதங்கள் மற்றும் விவாதங்கள் வழியாக கொண்டு வர ஐம்பதாண்டுகளாக பாடுபட்டிருக்கிறார் வெங்கட் சாமிநாதன். அவர் குறித்த வாதங்கள் விவாதங்களைத் தொகுத்து அவற்றின் வழியாக வெங்கட் சாமிநாதனை அறிவதே பொருத்தமாக இருக்கும் என்று நாங்கள் இந்தப் புத்தகத்தை வெளியிடுவதாக முடிவு செய்தோம் என்றார் அவர்.

உண்மையாகவே சொல்கிறேன், அவரது பேச்சு என்னுள் ஒரு மனவெழுச்சியைத் தூண்டுவதாக இருந்தது- பாக்கெட்டில் ஒரு பகடை உருண்டது. முன்னூறு ரூபாய் காலி. ஒரு நிமிடம்தான் நினைத்துப் பார்த்தேன்-  அகிலனையும், இங்கே வருவதில்லை என்று முடிவு செய்திருக்கும் சனாதனையும் வெங்கட் சாமிநாதனைக் குறித்து ஒரு புத்தகம் போடத் தூண்டியது எது? மொழி. மொழி அவர்களுக்கு தவிர்க்க முடியாத வாழ்வாகவும் வீழ்ச்சியாகவும் இருக்கிறது. மொழியும் அதன் வரலாற்றைத் தன்னுள் அடக்கித் திரண்டிருக்கும் மரபும். இதைக் காக்க வெங்கட் சாமிநாதன் நேர்மையுடன் இயங்கியிருக்கிறார். அதை பெருமைப்படுத்தி இவர்கள் பணத்தையும் உழைப்பையும் அர்ப்பணித்து ஒரு புத்தகம் போடுகிறார்கள், அதன்முன் என் காசு பிச்சைக் காசு, இல்லையா?

மொழியும், அதன் பண்பாடும் மரபும் நம் யாருக்கும் தனியுடைமை அல்ல. நம் சார்புகள் எவையாய் இருந்தால் என்ன? நாம் எங்கிருந்தால் என்ன, என்ன சாதியாய், என்ன சமயமாய் இருந்தாலென்ன? நம் மொழியே வேறாக இருந்தால்தான் என்ன?- இப்புத்தகம் வெளிவர உழைத்த திலிப் குமார் ஒரு குஜராத்தி என்கிறார்கள் (பெண்ணைப் பெற்ற அப்பா போல் அவர் அரங்கில் இங்குமங்கும் நடந்து எல்லாரையும் கவனித்துக் கொண்டது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது).

இதுதான் நாம்.  இதை நேர்மையுடன் சுட்டிக்காட்டியதால்தான் வெங்கட் சாமிநாதன் மீது இன்றும் கவனம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

இறுதியில் பேசும்போது வெங்கட் சாமிநாதன் சொன்னார், வீட்டில் அமர்ந்து பேசுவது போன்ற நெருக்கம் அவர் பேச்சில் இருந்தது. "நியாயமாகப் பார்த்தால் நான் எழுத்தாளன் அல்ல. என் எழுத்து இவ்வளவு கவனம் பெற்றிருக்கக் கூடாது. என் முதல் தொகுப்பு எங்கோ ஒரு சிற்றூரில் இருந்த விவசாயத் துறை சார்ந்த மூவரால் பதிப்பிக்கப்பட்டது. இப்போது இது இங்கே டெல்லியில் ஒருவர், வெளிநாட்டில் ஒருவர், சென்னையில் ஒருவர் என்று வெவ்வேறு நபர்களின் தனிப்பட்ட முயற்சியால் தொகுக்கப்பட்டு இங்கு இந்த விழா நடக்கிறது. ஒரு அகாதெமி அல்லது பல்கலைக் கழகம் போன்ற அமைப்பு செய்ய வேண்டிய வேலை இது.  ஆனால் எனக்கு இப்படி நடக்கிறது. இந்த மாதிரி கவனம் பெறுவது என்பது மிக அதிசயமான ஒன்று - மூன்று கைகளுடன் ஒரு குழந்தை பிறப்பது எவ்வளவு அதிசயமான ஒன்றோ அதைப் போன்றதுதான் நான் இந்த தமிழ் சூழலில் கவனிக்கப்படுவதும்," என்றார் அவர். தன் பொதுபுத்தி பற்றி அவர் சொன்னதை ஏற்கனவே சொல்லி விட்டேன்.

தனி மனிதர்கள் எதற்காக இப்படி வெங்கட் சாமிநாதனை கவனிக்கிறார்கள்? அவரிடம் அப்படி என்ன இருக்கிறது? அது அவரது பார்வைதான் என்று நினைக்கிறேன்.  நேர்மையாய் வெளிப்படும் அவரது தனிக்குரல்.  "இந்த ஐம்பது ஆண்டுகளில் நான் எழுதியதில் ஏதாவது பயனிருக்கிறது என்று நினைக்கிறேனா? நான் எதையாவது உங்களுக்கு விட்டுச் செல்கிறேன் என்று நினைக்கிறேனா? நான் எழுதியதில் எதற்காவது வால்யூ இருக்கிறது என்று நினைக்கிறேனா என்று கேட்டால் எதுவும் இல்லை என்றுதான் சொல்வேன்," என்று சொல்லி விட்டு நிறுத்தினார் வெங்கட் சாமிநாதன்.

"ஆனாலும் ஒன்று இருக்கிறது  என்று சொல்வேன். ஒரு சிறு வால்யூ. அதை நான் உங்களுக்கு விட்டுச் செல்கிறேன் என்று நினைக்கிறேன். நேர்மையாக, நீங்கள் நினைப்பதை சொல்லுங்கள். உங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. ஒருவன் மட்டும் நேர்மையாக இருந்தால், அவனை ஏதாவது செய்யலாம்.  ஆனால் நாம் ஒவ்வொருவரும் அவரவர் அளவில் நேர்மையாக இருந்தால் யாரும் எதுவும் செய்ய முடியாது. நேர்மையாக இருங்கள்," என்றார் அவர்.  இந்த சத்தியம்தான் அவர் தனியொரு மனிதனாக இயங்கியபோதும் அவரைக் காப்பாற்றி வெவ்வேறு மனிதர்களின் முயற்சியின் மூலமாக அவரை நம் கவனத்தில் தொடர்ந்து வைத்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

உண்மையில் வெங்கட் சாமிநாதன் மூன்று கைகளுடன் பிறந்த குழந்தைதான். இந்த தமிழ் சூழலில்,  அமைப்பின் ஆதரவைப் பெறாமல் தனி மனிதர்களின் முயற்சியால் அவரது தவிர்க்க முடியாத கேள்விகள் தொடர்ந்து கவனத்தைப் பெறுகின்றன. அதனால் அவரும் ஒரு பேராளுமையாக நிலை பெறுகிறார். இந்த நிகழ்வுக்கு தமிழகத்தின் சீர்கேட்ட சூழலை அவர் காரணமாக சொன்னாலும் உண்மை அதுவல்ல. 

வெங்கட் சாமிநாதனின் முதல் புத்தகத்தை தம் முயற்சியில் பதிப்பித்த முதல் மூவர். இப்போது இந்தப் புத்தகத்தைப் பதிப்பித்திருக்கும் மூவர். ஆமாம், இந்தக் குழந்தை மூன்று கைகளுடன் பிறந்த குழந்தை. ஆனால் இதுவல்ல அதிசயம் - அது ஐம்பது ஆண்டுகளாக ஒற்றை நாக்கில் பேசி வருகிறது, அதுதான் அதிசயம்.
.
.
.

4 comments:

Rathnavel said...

நல்ல பதிவு திரு கிரி.
திரு வெங்கட் சாமிநாதனின் புத்தகம் வாங்கினீர்களா? எப்படி இருக்கிறது?
நன்றி.

natbas said...

பிழைகளைத் திருத்தி, அழகாக வடிவமைத்துப் பதிப்பித்தமைக்கு நன்றி.

புத்தகம் வாங்கினேன். அட்டை நன்றாக இருக்கிறது. காகிதமும் தரமாக இருக்கிறது. ஐநூறு பக்கங்கள். 11 புள்ளி எழுத்தில் அச்சிட்டிருக்கிறார்கள். விலை முன்னூறு ரூபாய். கொஞ்சம் அதிகம்தான், ஆனால் இது ஐம்பதாண்டு கால தம்ளிழ பண்பாட்டு வெளியை வெவ்வேறு கோணங்களில் பதிவு செய்திருக்கிறது.

"என் நினைவு சரியாக இருக்குமானால் வெங்கட் சாமிநாதன் வீட்டில் சாரு நிவேதிதாவுடன் ஒரு அறையை ஞான.ராஜசேகரன் பகிர்ந்து கொண்டார்," என்று இங்கு நாஞ்சில் நாடன் எழுதியிருக்கிறார். இது போன்ற அரிய தகவல்கள் நிறைந்த இந்தப் புத்தகத்தை சந்தியா பதிப்பகத்தினர் அச்சிட்டிருக்கின்றனர்.

Shanmuganathan said...

அன்புள்ள நட்பாஸ் அவர்களுக்கு,

கட்டாயமாக பதிவுசெய்யபடவேண்டிய பதிவு, உங்களை எழுத்து நடையும் மிகவும் நன்றாக இருந்தது. பதிவிற்கு மிகவும் நன்றி.

அன்புடன்,
சண்முகநாதன்

natbas said...

அன்புள்ள சண்முகநாதன்,

மெய்யன்புடன் கூடிய தங்கள் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நீங்களும் அவ்வப்போது எழுதுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

அன்புடன்,

நட்பாஸ்.

Related Posts Plugin for WordPress, Blogger...