Jun 15, 2010

FIFA 2010 பார்வைகள்

வினோஸ் கார்னர்
உலகக்கோப்பை கால்பந்து விமரிசனங்கள்
சிறப்புப் பதிவர் ௦ - வினோத் கோவிந்தன்


நான் ஒரு அதிதீவிர இங்க்லீஷ் பிரிமியர் லீக் ரசிகன். பெரும்பாலான மேட்ச்களை அங்கு பார்த்துவிட்டு நான் வேண்டிக் கொண்டதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். என் ஆதர்ச ஆட்டக்காரர்கள் யாரும் எந்த காயம் காரணமாகவும் உலகக் கோப்பையை தவறவிட்டுவிடக் கூடாது என்பதுதான் அது. இறுதியாக இந்த நான்கு வருடக் காத்திருப்பிற்குப் பின் அந்த ஜூன் பதினொன்றாம் தேதி வந்தே விட்டது. தென் ஆப்பிரிக்காவில் உதய நேரத்தில் அன்று கால்பந்தைப்போல் சூரியன் காட்சியளித்தானாம்.

ஒரு சின்ன அறிமுகம் தரவேண்டுமென்றால்.... இங்கே முப்பத்தி இரண்டு அணிகள் FIFA அங்கீகாரம் பெற்று உள்ளே நுழைந்துள்ளன. எட்டு குரூப்புகள், ஒவ்வொரு குரூப்பிலும் நான்கு அணிகள். முப்பத்தி இரண்டில் ஒன்றாய்த் தானுமிருக்க உலக அணிகள் பலவும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாய்த் தகுதிச் சுற்றுகள் விளையாடின. அர்ஜென்டீனா அணி பிரயத்தனப் பட்டு உலகக் கோப்பைக்குள் நுழைந்தது எனக்கு மெத்த மகிழ்ச்சி.

பிரேசில் அணி ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளது ஒரு தனி ரெகார்ட். இத்தாலி, ஜெர்மனி, அர்ஜென்டினா அணிகள் முறையே 4, 3 மற்றும் 2 முறைகள் கோப்பையைக் கைப்பற்றியுள்ளன. பிரான்ஸ், உருகுவே, இங்கிலாந்து அணிகள் தலா ஒவ்வொருமுறை வென்று தம் கணக்கைத் துவக்கின.

பிரேசில் மட்டுமே இதுவரை நடந்துள்ள அனைத்து உலகக்கோப்பைப் போட்டிகளிலும் பங்குபெற்ற தகுதி பெற்ற ஒரே அணி. அவர்கள் இந்த முறை கோப்பை வெல்ல வாய்ப்பு உள்ளதா? பார்ப்போம்!
சரி, இதுவரை நடந்த போட்டிகள் பற்றி கொஞ்சம் அலசலாம்.

மூன்று நாட்கள் முழுதாக முடிந்துள்ளன. ஒரு சில முதல் வரிசை அணிகளின் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்துள்ளன. உள்ளதில் சிறந்ததாய் ஜெர்மனி - ஆஸ்திரேலிய அணியின் ஆட்டத்தை சொல்லலாம். ஆஸ்திரேலியாவை உதை உதையென உதைத்து ஆரோக்கியமாக 4-0 என வென்றுள்ளது ஜெர்மனி.

இதர அணிகள் இதுவரை நல்ல ஆட்டத்தைக் கொடுத்திருந்தாலும் ஒரு பலமான திடமான ஆக்ரோஷ ஆட்டம் இன்னும் நம் கண்ணில் படவில்லை.

ராபர்ட் கிரீன் செய்த ஒரு சில்லித் தவறால் அமெரிக்க அணி இங்கிலாந்தை டிரா செய்தது. இங்கிலாந்தின்  கோல்கீ புண்ணியத்தில் அமெரிக்க டெம்ப்சி தன் கணக்கில் ஒரு கோலைச் சேர்த்துக் கொண்டதுதான் இந்த உலகக்கோப்பையின் ஆரம்பக் காமெடி.

அர்ஜெண்டினாவின் மெஸ்சி எப்போதும் எல்லோருக்கும் ஸ்பெஷல்தான். நைஜீரியாவுக்கு எதிராக அவர் கொடுத்த ஒவ்வொரு அடியும் எக்ஸ்ட்ரா ஆர்டினரி எனலாம். என்றாலும் அவரை மென்று விழுங்கும் வண்ணம் அவருக்கு எனிமா தந்தார் நைஜீரிய கோல்கீ எனியேமா (Enyeama). மேட்ச் முடியும்வரை எனிமா தன் கட்டுப்பாட்டில் மெஸ்சியை வைத்துக் கொண்டார்.

கால்பந்தில் தலைசிறந்த எதிரிகளான உருகுவே பிரான்ஸ் அணிகளின் ஆட்டம் எதிர்பார்த்தபடி டிராவில் முடிந்தது.

ரொனால்டோ, காகா, வான் பெர்ஸி மற்றும் இன்னபிற முன்னணி ஆட்டக்காரர்களின் ஆட்டங்களைக் காண ஆடுகளங்கள் இன்னும் காத்திருக்கின்றன.

விரைவில் சந்திப்போம்.....

நட்புடன்,
வினோத்
.
.
.
.
Related Posts Plugin for WordPress, Blogger...