Jun 22, 2010

ராவணன் - சில கேள்விகள்

என் ராவணன் விமரிசனப் பதிவைப் படித்துவிட்டு, கிராண்ட் ஸ்லாம் என்ற பெயரில் ஒருவர் கடிதம் எழுதியிருக்கிறார். 
மணிரத்தின ரசிகருக்கு,
உங்கள் பிடித்த பத்து பட்டியலில் மணிரத்னம் இருக்கும்போதே நினைத்தேன், நீங்கள் ராவணன் படத்திற்கு ஜல்லியடித்து ஒரு விமரிசனம் எழுதுவீர்கள் என்று. என் நம்பிக்கையைப் பொய்யாக்காமல் எழுதியிருக்கிறீர்கள், நன்றி. 

என்னிடம் ராவணன் குறித்த பல கேள்விகள் உள்ளன, அவற்றில் சில இங்கே. இதில் ஒன்றிரண்டிற்காவது உங்களால் பதில் தர முடிகிறதா பார்க்கிறேன். 

- சீதைக்கு ராவணன் மீது காதல் வந்ததா இல்லையா என்பதை உங்கள் குருநாதர் தெளிவாகக் கூறவில்லையே, ஏன்? பயமா? (கடைசிக் காட்சியில் சீதை "பக் பக் பக்" என்னும்போது நமக்கு "பக் பக் பக்" என்கிறது) 

- படம் முழுக்க மழையினூடே எடுக்கும் அவசியம் என்ன? படம் பார்த்த பலருக்கு ஜலதோஷமாமே? 

- கார்த்திக் ஆஞ்சநேயராக இருக்கட்டும், அதற்கென அவர் வரும் காட்சியெல்லாம் குதித்துக் குதித்து வெறுப்பேற்றுவது எதையும் சிம்போலிக் ஆகக் காட்டுவதாகத் தெரியவில்லை. எரிச்சலே படுத்துகிறது. 

- தன் மனைவி வீராவிடம் இருக்கும்போது எந்த தைரியத்தில் வீராவின் தம்பியை தேவ்  கொல்கிறான்? 

- ஹேமந்தை வீரா கொல்லாதது ஏன்? அவர் லக்ஷ்மணன் என்பதலா? (வரலாற்றை மாற்ற உங்கள் குருவுக்கு மனமில்லையா? - லக்ஷ்மனைனை அம்மணப் படுத்தியதைக் காட்டிலும் கொன்றிருக்கலாம்)

 படத்தில் நான் காணும் சில க்ளீஷேக்கள்: 

- ஆதிவாசி காலனியை மழைக்கு நடுவே ரெய்டு செய்து அடித்து உதைக்கிறது போலிஸ், திண்ணையில் ஒரு அம்மணக் குழந்தை அழுகிறது.
- போலீஸ்காரன் மனைவி சொல்லி வைத்தாற்போல் ஒரு நடனமணி.
- கிளைமாக்சில் ஒற்றைக்காலில் குதிக்கும் ராவணனுக்குக் கை கொடுக்க வருகிறார் சீதை, நம்மவர் ராவணனாக இருந்தாலும் அவர் தமிழ் ராமணன் (!!!) அல்லவா, கையைப் பிடிக்காமல் அந்தண்டை குதிக்கிறார். கொடுமைடா ராமா!
- மணிரத்ன க்ளீஷேக்களைக் குறித்து சொல்லவே வேண்டாம்.
- மெல்லிசான குரலில் யாருக்கும் புரியாமல் அல்லது "ஜெயமுண்டு பயமில்லை" போன்ற பாரதி பாடல்களை உரக்கப் பாடும் கதாநாயகி, மேலும் மழைப் பாடல்(கள்).

இப்படிக்கு,
கிராண்ட் ஸ்லாம்
.
.
திரு / திருமதி / குமரி கிராண்ட் ஸ்லாம் அவர்களுக்கு,

உங்களுக்கு முதலில் என் சலாம், என்னை வாசித்தமைக்கு. அடுத்து இன்னும் ஒரு சலாம், இப்படி அதிரடியாக என்னை நம்பி முழ நீளத்திற்கு ஒரு மடல் வரைந்தமைக்கு. 

இந்த மாதிரி கேள்விகளுக்கு விடையளிக்க நான் கதை விவாதக்குழுவில் பங்கு பெற்றவனில்லை. நான் ரசித்தவைகளை மட்டுமே பதிவிட்டிருக்கிறேன். படத்தில் குறைகள் உண்டு எனவும் சொல்லியிருக்கிறேன். அதைப் படிக்காமல், எங்கேயோ கேட்கவேண்டிய கேள்விகளை நீங்கள் என்னை பார்த்து கேட்பதில் என்ன நியாயம். இதில் சில கேள்விகளுக்கு என்னால் விடையளிக்க இயலும். ஆனால் நீங்கள் இன்னமும் கேள்விகளை வைத்திருக்கிறேன் என்று சொல்லி பயமுறுத்துவதால், என் பதில்களுக்குப் பலனோ பயனோ ஏதும் இருக்காது என்று உறுதியாக நம்பி பதிலளிப்பதைத் தவிர்க்கிறேன்.

நன்றி,
கிரி

Related Posts Plugin for WordPress, Blogger...