Jun 5, 2010

கர்மா - மேலும்....

நட்பாஸ் அவர்களின் "கர்மபலன்" பதிவு பலன் தரவில்லை என சிலப்பலர் பின்னூட்டமிட்டிருந்தனர். காரம் குறைவாய் இருந்ததாகக் குறைப்பட்டுக்  கொண்டவர்களுக்காக இந்தப் பதிவு. 


கர்மா பற்றி, தெளிவாக ஏதாவது எழுதினால் அதில் குழப்பம் மட்டும்தான் மிஞ்சும் என்பது என் தாழ்மையான கருத்து. எளிமையாக கர்மா பற்றி சொல்ல வேண்டுமென்றால்..... என் மேனேஜர் அடிக்கடி சொல்லுவார், "What you give is typically what you get" என்று.

பத்து நாட்கள் முன்னால், Frozen Thoughts பத்திரிகையில் கர்மா பற்றி படித்தேன். அப்போதுதான் நட்பாஸ் அவர்களிடம் இதுபற்றி ஒரு இடுகை கேட்கவேண்டும் எனத் தோன்றியது.

நான் படித்தது இதுதான்:

ஒரு பசுவை ஒருவன் வெட்டிக்கொல்ல துரத்துகிறான். பசு உயிர்ப் பயத்தில் தப்பித்து ஓடி ஒளிகிறது. துரத்தியவன் அங்கே ஒரு சாது இருப்பதைக் காண்கிறான். அவர் மௌனத் தவத்தில் இருக்கிறார்.  அவரிடம் பசுவைப் பார்த்தீர்களா எனக் கேட்கிறான் துரத்தி வந்தவன். தியான நிலையிலிருந்து மீள விரும்பாது அவனை அங்கிருந்து அனுப்பும் அவசரத்தில் பசு ஒளிந்துள்ள இடத்தை இரு கைகளாலும் சுட்டிக் காட்டுகிறார் சாது. துரத்தி வந்தவன் பசுவைப் பிடித்துக் கொண்டு சென்று வெட்டிக் கொல்கிறான்.

வேறொரு காட்சி:

பக்த சிரோன்மணி ஒருவர் பாண்டுரங்கனை தரிசிக்க நெடுந்தொலைவு நடந்தபடி பிரயாணம் செய்கிறார். வழியில் இரவில் ஒரு ஊரின் வழியே செல்கையில் ஓர் மணமான பெண் இவரைப் பார்க்கிறாள். பக்தர் மீது மோகம் கொண்டு தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு அவரை வினவுகிறாள் அவள். தன் பயணம் குறித்துக் கூறும் அவர், அவள் செய்வது தவறு என அவளுக்குச் சுட்டிக்காட்டி அவள் திருமணமானவள் என்பதையும் அவளுக்கு நினைவூட்டுகிறார். அவள் உடனே வீட்டினுள் சென்று தூங்கிக் கொண்டிருக்கும் அவள் கணவன் தலையை வெட்டிக் கொன்று வெட்டிய தலையுடன் வெளியே வருகிறாள். இப்போது அவருக்கு எந்தத் தடையும் இல்லையே எனக் கேட்கிறாள். பக்தர் மிரண்டு ஓடுகிறார். அப்பெண் கூக்குரலிட்டு ஊரைக் கூட்டுகிறாள்.  பக்தர் தன்னிடம் தவறாய் நடந்து கொள்ள எத்தனித்து, தடுக்க வந்த தன கணவனைக் கொன்றதாகக்  கூறுகிறாள். மன்னரிடம் விசாரணைக்குச் செல்கிறது வழக்கு. பக்தனைக் கொல்லும் மனமின்றி, தவறிழைத்த அவன் கரங்களிரண்டையும் வெட்டிவிடச் சொல்கிறான் மன்னன். பக்தன் கைகள் வெட்டப் படுகின்றன.

பாண்டுரங்கனிடம் கதறி அழுகிறான் பக்தன். உன்னை தரிசிக்க வந்ததைத் தவிர பாவமொன்றும் செய்யவில்லை என ரங்கனைக் கண்டு கோபக் கேள்வி கேட்கிறான். பாண்டுரங்கன் பதிலளிக்கிறான், "பசு ஒளிந்திருந்த இடத்தை இரு கைகளாலும் சுட்டிக் காட்டிய சாது நீ. அதன் பலனாய் உன் கைகளிரண்டையும் இழந்தாய். தன்னை துரத்தி வெட்டியயவனை கணவனாய்க் கொண்ட பசுதான் அந்தப் பெண். அவளை அங்கு கொன்றவனை அவள் இங்கு கொன்றாள். அவரவர் கர்மா அவரவரைத் தொடர்கிறது என முடிகிறது அந்தக் கட்டுரை.

இப்போது நான் நட்பாஸ் அவர்களை எழுதக் கேட்டு அவர் உங்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டது கூட அவர் என் "காற்றில் வரும் கீதத்திற்கு" எழுதிய பின்னூட்டத்தின் கர்மபலன்தான் என்பது என் கருத்து. நீங்கள் இங்கு படித்துக் கொண்டிருப்பதும், அடுத்து வரும் பிறவிகளில் உங்கள் மொக்கை எழுத்துக்களை நான் படிக்கவிருப்பதும் நன்னமது கர்மப்பலன்கள்.


Related Posts Plugin for WordPress, Blogger...