Mar 8, 2012

அன்னை



மார்ச் 8, 2012
உலக பெண்கள் தினம்

மயிலின் அகவல் போல்தான் கொடூரமாக இருக்கும் அந்தப் பாட்டியின் குரல். ஐந்தடி உயரத்தில் ஒல்லியான தேகம். எப்போதும் கடுகடுவென ஏதோ கோபம் தாங்கிய முகம். இதுதான் அந்தப் பாட்டி. மந்தைவெளி நாலாவது சந்தில் லேன்ட்ஸ்கேப் வகையில் நீள்செவ்வகமாய் வீடு. ஒற்றை ஒற்றையாய் அருகருகே இரண்டு தீப்பெட்டி அறைகள். இரண்டு அறைகளுக்கும் இணைப்பு இல்லாது வெளிப்புறத்தில் வாசல். வீட்டிற்குப் பின்புறம் குளியல் மற்றும் கழிப்பறைகள், முன் பக்கமாக எதற்கும் உதவாத சில செடி, மரங்கள் இவை எல்லாம் சேர்ந்துதான் அந்தப் பாட்டியின் அறுநூறு சதுர அடியில் அமைந்த அந்த அரண்மனை. பக்கத்தில் அதேபோன்ற செட்டப்பில் அமைந்த இன்னொரு வீட்டில் இவருடன் எந்த ஒட்டும் உறவும் இல்லாமல் இருந்த அவருடைய மகன், மருமகள் பேத்திகளுடன் இருக்க, இந்த வீட்டில் தன் மகள், மருமகனும், முருகன் பெயர் தாங்கிய மூன்று பேரன்களும் (செந்தில், சரவணன், கார்த்திக் என்று நினைவு) என பாட்டி இருந்தார்.

அந்தப் பாட்டியை அந்த மந்தைவெளி நாலாவது சந்தினில் யாருக்கும் பிடிக்காது. அவர் காட்டும் ரௌத்ரத்திற்காய் அந்த ஒட்டுமொத்த மந்தைவெளியிலேயே கூட அவர் மிகப் பிரபலம்தான். இது மயிலாப்பூர் மந்தைவெளி அல்ல; வடசென்னையின் மாதவரத்தில் ஹைஸ்கூலுக்கு எதிர்வாடையில் வரிசையாக ஒன்று இரண்டு என ஐந்தாறு சந்துகள் கொண்ட மந்தைவெளி ஏரியா. வடசென்னையின் கீழ்நடுத்தர வர்க்க (lower  middle  class ) மக்களின் கூட்டத்தை தரிசிக்க நீங்கள் இங்கே ஒருமுறை சென்று வரலாம்.

மாதவர மந்தைவெளியில் குடிபுக உங்களுக்கு குறிப்பிட்ட தகுதிகள் இருக்கவேணும். ஆட்டோ ஓட்டும் அண்ணன்கள், தம்பு செட்டித் தெருவில் லுங்கி கம்பெனிகளில் வேலை செய்பவர்கள்,
கல்பனா லேம்ப் கம்பெனியில் ஷிப்ட் முறையில் வேலை பார்ப்பவர்கள், சிம்சன் கம்பெனிக்காரர்கள், தபால்பெட்டி ஸ்ரீனிவாசா லெதர் கம்பெனி டேனரியில் வேலை பார்ப்பவர்கள், பின்னி மில்லில் வேலை இழந்தவர்கள், 48A, 38F என்று மாதவரத்தில் ஓடும் ஏதேனும் ஒரு பஸ் கண்டக்டர் டிரைவர்கள், மாதவரம் அப்போது சாராய சாம்ராஜ்யத்தில் மூழ்கியிருந்த நேரத்தில் அங்கேயே காய்ச்சி விற்ற குடும்பங்கள் என கைக்கும் வாய்க்கும் போதியும் போதாமலும் சம்பாத்தியத்தில் உழன்று கொண்டிருந்த குடும்பங்கள் ஏதேனும் ஒன்றைச் சேர்ந்தவராக இருக்கவேணும் நீங்கள் என்பதுவே அந்தத் தகுதி.

சரி பாட்டி கதைக்கு வரலாம். பாட்டிக்கு வாயைத் திறந்தால் வண்டை வண்டையாக வார்த்தைகள் வந்து விழும். பாஸ் என்கிற பாஸ்கரனில் சந்தானம் சொல்லும் “கய்வீ கய்வீ ஊத்தும்” மூன்றாந்தர கெட்ட வசவுகளை எல்லாம் பாட்டி வாயால் சர்வசாதாரணமாகக் கேட்கலாம். பெரும்பாலும் அந்தப் பக்கத்து வீட்டில் வசித்த சிதம்பரத்தின் அம்மா பற்றினவை ஏதும் அந்த வசவுகளில் இருக்கும் அல்லது இந்தப்பக்கம் வசித்த மருமகள் புராணம் இருக்கும். இரண்டும் இல்லையென்றால் யாரேனும் விபரம் தெரியாமல் வம்புக்கு வந்து பாட்டியின் வாயைப் பிடுங்கி அர்ச்சனை வாங்கிச் செல்பவர்கள் என கெட்ட வார்த்தையின் ஒட்டுமொத்தக் கூடாரமாக இருக்கும் அந்தப் பகுதியே.

எங்கள் வீட்டில் அம்மாவும், படிக்கும் வயதில் இருந்த அக்காவும் அண்ணனும்  வேலைக்குப் போய்க்கொண்டு என்னை படிக்க வைத்துக் கொண்டிருந்தார்கள் அப்போது. அம்மாவுக்கும் அக்காவுக்கும் கார்மெண்ட் எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை. அண்ணனுக்கு பாரீஸ் கோடவுன் தெருவில் துணிக்கடையில் வேலை. எல்லோருடைய சம்பளத்தையும் சேர்த்தாலும் கூட அது ஆயிரத்தை நெருங்காது. அசிஸ்டண்ட் மேனேஜர் உத்தியோகம், அனகாபுத்தூரில் வீடு என்பது எல்லாம் ஏதோ இப்போதுதான். ரேஷன் கடையில் அரிசி வாங்குவதற்கு யார் வீட்டிலாவது ரேஷன் கார்டையும் அந்த அரிசி வாங்க வேறு யாரிடமாவது காசையும் எதிர்நோக்கிக் காத்திருந்த காலம் அது. இரண்டையும் ஒரே வீட்டில் கேட்பது சரியாகாது அல்லவா?

வாழ்க்கையில் சந்திக்கக்கூடாத சில சுனாமித் தாக்குதல்களை சந்தித்து நானும் மீண்டும் எழுந்து நிற்பேன், என் பிள்ளைகளும் பெரிய நிலைக்கு ஆளாவார்கள் என்ற நம்பிக்கையை மனசில் வைத்துக்கொண்டு எப்போதும் ஒரு இருகிய முகத்துடன் வேலைக்குப் போய்வந்த வண்ணம் இருப்பார் என் அம்மா. அந்தப் பெருநம்பிக்கை இருந்த அதே மனதில்தான் அன்றாட ஜீவனத்திற்கே இழுத்துக்கோ புடிச்சிக்கோ என்றிருந்த நிலைமையின் கஷ்ட சிந்தனைகளும் தேங்கியிருந்தன. அந்தத் தேக்கங்களில் வழிசல்களும் அந்த இருகிய முகத்தினில் அப்பட்டமாய்த் தெறிக்கும்.

ஒருநாள் வேலையிலிருந்து திரும்பும் வழியில் அந்தப் பாட்டி அம்மாவை வழி மறித்திருக்கிறார்,

”உன்னை நான் ரொம்ப நாளா பாக்கறேன். நீயும் உன் புள்ளீங்க ரெண்டும் ஏதோ போறீங்க வர்றீங்க. சின்னவன் இஸ்கூல்ல படிக்கறான் போலிருக்கு. உனுக்கு ஏதோ பெரிய கஷ்டம் மட்டும் இருக்குது. அது இன்னானு சொல்லு என்னாண்ட”, என்பதுதான் அவர் அன்று அம்மாவிடம் கேட்ட கேள்விகளின் சாராம்சம்.

திடீரென்று பரிச்சயமில்லாத ஒரு கிழவியிடம் என்னத்தை சொல்வது? அம்மா பெரிதாய் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. எனினும் அந்தப் பாட்டியும் விடுவதாய் இல்லை. அடுத்தடுத்த நாள்களில் அதேபோல் அம்மாவை வழியில் நிறுத்திப் பேசிப்பேசி என்ன கஷ்டம் என்பதை கேட்டு அறிந்து.....

“வயசுப் பொண்ணை வெச்சுட்ருக்க, சாப்பாட்டுக்கே கஷ்டோன்ற, இந்தா ரேஷன் கார்டு, இந்தா பைசா, உன் பையனாண்ட குட்த்து அரிசி வாங்கியாற சொல்லு. உன்னால எப்போ முடியுதோ அப்போ துட்டு திருப்பிக்குடு”

நம் கஷ்டத்தை வாய் திறந்து சொன்னாலும் கேட்டுக் கொள்ளக் காதுகள் அற்ற சூழலில் இந்த உலகம் இருக்கும்போது, தானே முன்வந்து உதவிய அந்தப் பாட்டியொன்றும் மல்ட்டி மில்லியனர் அல்ல. அவர் மருமகன் மாவு அரைவை மில்லில் வேலை செய்து மாலையில் சம்பாதித்ததைக் கொண்டு வந்து தந்தால் அதில் அன்றிரவும் மறுநாளும் பொங்கித் தின்று வாழ்ந்து வந்த ஒரு அன்னாடங்காய்ச்சிதான். 

ஜெயமோகன் எழுதிய சோற்றுக் கணக்கு படித்தபோது அதில் வந்த கெத்தேல் சாகிப் கதாபாத்திரத்தின் குணாதிசயங்களில் அந்தப் பாட்டியைத்தான் பார்த்தேன் நான். மாதந்தவறாமல் முதல் பத்து நாள்களுக்குள் என்னை அழைப்பார். 

“டேய் கிரி! இன்னாடா சின்னப் புள்ளீங்களோட வெள்ளாண்டுனுருக்க? வா, போயி ரேசன்ல அரிசி வாங்கியா”, பை, கார்டு, பணம் மூன்றும் என் கைபுகும். கிட்டத்தட்ட அடித்து உதைத்துத்தான் அரிசியை எங்கள் வீட்டிற்கு வாங்க வைத்து அனுப்பி வைப்பார்.

நாங்கள் எல்லாம் ஒரு நல்ல நிலைக்கு வரும்வரை அந்தப் பாட்டியின் தயவில்தான் எங்கள் வீட்டில் உலை கொதித்தது என்றால் அது மிகையில்லை. இந்த சர்வதேச மகளிர் தினத்தினில் என் வயிற்றுப் பசி துடைக்க என்றோ ஒருநாள் உதவிய அந்தப் பாட்டியை நினைத்துக் கொள்கிறேன். 

இப்போது அந்தப் பாட்டி உயிருடன் இல்லை. அவர் பெயர் என்னவாக இருக்கும் என்று இப்போது நான் யோசித்துக் கொள்கிறேன். அந்தப் பாட்டியிடமும் அவர் பெயரை என்றுமே நாங்கள் கேட்டதில்லை. 

அப்படி ஏதும் அவருக்குப் பெயர் என்று ஒன்று இருந்திருந்தால் அது அன்னை தெரசா என்று இருந்திருக்கலாம் என நான் நினைத்துக் கொள்கிறேன். இல்லைடா பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்த அன்னை’டா அவங்க என்பார் அம்மா.

5 comments:

வெங்கட் நாகராஜ் said...

அருமையான பகிர்வு....

பார்க்க கரடு முரடா இருந்து பேசினாலும், மனதுக்குள் ஈரம் இருக்கத்தான் செய்கிறது.....

Rathnavel Natarajan said...

அருமை. மிக மிக அருமை.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.

Anonymous said...

girrrrrrrrrrr ithellaam oru polapu.. va.pa twitnu link kuduthutu.. ipdi yemathurathu

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான பதிவு ! நன்றி நண்பரே !

virutcham said...

மனதைத் தொட்ட பதிவு. வாழ்த்துக்கள். இது உங்க அம்மாவுக்கு.

Related Posts Plugin for WordPress, Blogger...