Feb 1, 2014

வொய் ராஜா is God

மணி பத்தே முக்காலைக் கடந்து பதினொன்றை நெருங்கிக் கொண்டிருந்த நேற்றைய என் அதிகாலைப் பொழுது. மணி பதினொன்றைத் தொட நம் வீட்டு வாண்டு அகில் தன் play school உள்ளே இருக்க வேண்டும். இத்தனை சீக்கிரம் பள்ளியைத் திறக்கும் அநியாயம் எங்கும் நடக்குமா? நம்மூர் பம்மலில் நடக்கிறதே.

பத்து முப்பதுக்குத் தொடங்கி அகில் வீட்டின் எழுநூற்று சொச்ச சதுர அடியையும் எழுபது முறை சுற்றிச் சுற்றி ஓடியாட அவர் பின்னே சுற்றிச்சுற்றி ’இதை நான் அதை நீ’ என்று கால் சட்டை, மேல் சட்டை, இந்தக் கால் சாக்ஸ், அந்தக் கால் சாக்ஸ், ஷூ, மற்றும் ஒரு ஷூ, ஐடெண்டிடி கார்டு என நானும் மனைவியாரும் ஒவ்வொன்றாக அவருக்கு அணிவித்துக் கொண்டிருந்தோம்.

அடுத்தது பையை எடுத்து முதுகில் மாட்ட வேண்டும்.

“அப்பா, ராஜராஜ சோழன் பாட்டு போடேன்”, லாப்டாப்பை நோக்கி அகில் கை நீண்டது. அகிலின் லேட்ட்ட்ட்டஸ்ட் ஃபேவரிட் இந்தப் பாடல் என்பது என் சமூகம் அறிந்தது (இதுவரை அதனை அறியாத சமூகம் இந்தப் பதிவின் வாலைப் பிடித்துப் பார்க்கவும்).

நேரம் சரியாக பத்து மணி ஐம்பது நிமிடங்கள். இரண்டு நிமிடத்தில் காரைக் கிளப்பினால் மூன்று நிமிடத்தில் பள்ளியில் இருக்கலாம்.

”கண்ணா, ஸ்கூலுக்கு இப்பவே லேட்டாயிடுச்சிடா. ராஜராஜ சோழன் கார்ல இருக்கு ப்ளே பண்றேன்”

“இல்ல இல்ல! ஆப்பீஸ்ல ராஜராஜ சோழன் போடு”, மீண்டும் லாப்டாப் நோக்கி கை நீள்கிறது. (அகில் பாஷையில் “ஆப்பீஸ் = லாப்டாப்” )

இதென்னடா வம்பாப் போச்சு. சரி ஆனது ஆச்சு, ப்ளே பண்ணுவோம் என லாப்டாப்பைத் திறந்து பாடலைத் தேடிப் பிடித்து ஓட விடுகிறேன். அகில் கண்களில் ஆயிரம் வாட்ஸ் பவர். இந்தப் பாடல் அவ்வளவு பிடிக்கும் நம்மவருக்கு.

பாடல் ஓட ஓட நம்மவர் அறியாமலேயே அவர்தம் முதுகில் பள்ளிப் பையை மாட்டியாச்சு. காருக்கு கீழே இறங்கும் வரை அதை அவர் முதுகுதான் சுமக்க வேண்டும் என்பது அவர் எழுதாத கட்டளை.

....செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி..... என்று முதல் சரணம் நிறைக்கிறார் யேசுதாஸ்.

“கண்ணா! இந்த பாட்டு நம்ம கார்ல இருக்கே. கார்ல கேட்டுக்கிட்டே ஸ்கூல் போலாமா?”

“கார்ழ்ல இழுக்கா?”

“இருக்கே....”, பொய்! காரில் இருந்த பென் ட்ரைவை நண்பன் இரவல் வாங்கிப் போயிருந்தான்.

”அப்போ ஸ்கூல் போலாம்”, கீழே இறங்குகிறோம்.

காரைக் கிளப்பியதும். மறக்காமல், “அப்பா, ராஜராஜ சோழன்... ம்ம்ம்ம்ம்ம் போடு”

இல்லாத ராஜராஜனை எங்கிருந்து பிடித்து வர? சரி, எஃப்.எம் ஏதும் வைப்போம். நம்மவருக்குப் பிடித்த பாடல் ஒன்று கூடவா இல்லாமல் போகும். மூடு மாறுகிறதா பார்ப்போம்.

சேனல் மாற்றி மாற்றிப் பார்த்தாலும் நம்மவருக்குத் தெரிந்த பாடல் ஒன்றும் அகப்படவில்லை.

“ப்பா.... ராஜராஜ சோழன்...ம்ம்ம்ம்ம்”

“போடறேன் கண்ணா.... தோ போடறேன்”

இருக்கும் ஒண்ணேகால் டஜன் சேனல் ஒன்றிலும் எந்தப் பாட்டும் தேறவில்லை நம்மவருக்கு. கை ஓடி நிறுத்திய இடத்தில் Big FM RJ யாரோ ஒரு பெண்மணியிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

“சரி, இந்த மூணு பாட்டும் உங்களுக்கு ஏன் பிடிக்கும் சொல்லுங்க?”

“மூணுமே இளையராஜா பாட்டுங்க. வேறென்ன காரணம் வேணும்”, எதிர்முனையில் RJ’விடம் ஃபோனில் பேசும் அம்மணி சொல்கிறார்.

“ஓக்கேய்ய்ய்ய்.... உங்களுக்காக இளையராஜாவோட இந்த மூணு பாட்டும் back to back.... மனசத் தொட்ட மெலடீஸ் only on Big FM 92.7 உங்க மிருதுளாவோட....”

ஆஹ்ஹா! மூணு ராஜா பாட்டா? இன்னும் இரண்டு நிமிஷத்தில் ஸ்கூல் வந்துவிடும். அகிலுக்காக முதல் பாடல் ராஜராஜ சோழனாக இருக்கக் கூடாதா?

“ஆண்டவா! இந்தப் பாட்டு ராஜராஜ சோழனா இருக்கட்டும்”, வேண்டிக் கொள்கிறேன்.

ச்சே! இதென்ன கிறுக்குத்தனம். நமக்கு ஒரு பாட்டு பிடிக்குதுன்னு நெனைச்சிக்கிட்டா எல்லாம் அந்தப் பாட்டு ரேடியோவுல வந்துடுமா? என்று என் கிறுக்குத் தனத்தை எண்ணி நானே வியக்கிறேன்.

இருந்தாலும்.... ”இது என்ன பாட்டு என்ன பாட்டு என்ன பாட்டு.....!” என்று வரப்போகும் பாட்டை எதிர்நோக்குகிறது மனசு.

நாதஸ்வர ஓசையுடன் ஆரம்பிக்கிறது அந்தப் பாட்டு..... ச்ச! ராஜராஜ சோழன் கிடார் beat'டோட இல்ல தொடங்கும்.

இது “தலையைக் குனியும் தாமரையே” - ஒரு ஓடம் நதியாகிறது படப் பாட்டு ஆச்சே! சரி போ கேப்போம். என்று ஏமாற்றத்துடன் அகில் பக்கம் திரும்புகிறேன்.

அகில் பரிதாபமாக என்னைப் பார்த்து, “ப்பா....ராஜராஜ சோழன் ம்ம்ம்ம்ம்”, விட்டால் அழுதுவிடுவான் போல.

“லேதுரா கண்ணா”, என்று உதடு பிதுக்குகிறேன். இருக்குன்னு சொன்னியேப்பா என்று கேட்காமல் பரிதாப முகம் கொண்டு கேட்கிறான். என்ன சொல்ல எனப் புரியாமல் காரை செலுத்துகிறேன்.

பாடலின் ப்ரீலூட் இசை நிறைந்து எஸ்பிபி, “தலையைக் குனியும் தாமரையே” என்று தொடங்கும் இடம் வருகிறது. sudden brake..... காருக்கு அல்ல. prelude'ன் நிறைவிலேயே பாடல் நிற்கிறது.

”ஜ்ஜிங் ஜ்ஜிங் ஜ்ஜிங் ஜ்ஜிஜிங்....” - கிடார் இசை அதிர்கிறது.

அகில் என்னைப் பார்த்து வாய்நிறைய சிரிக்கிறான்.

நான் புரியாமல் விழிக்கிறேன்.

“ப்பா.... ராஜராஜ சோழன்”. என் மூளைக்கு உறைக்குமுன் அவன் மூளைக்குள் நுழைந்து விட்டிருந்தது பாட்டு.இதென்னடா மெடிகல் மிராக்கிள் என்று யோசிக்கிறேன்.

நம்பினால் நம்புங்கள்--------“தலையைக் குனியும்” பாடல் ஆரம்பிக்கும் முன்னமே அதை pause செய்து விட்டு ராஜராஜ சோழன் பாட்டை இசைக்க ஆரம்பிக்கிறது  Big FM.

”அக்க்க்கீல்ல்ல்ல்ல்ல்...... என்ன பாட்டு இது.... உற்சாகமாகக் கத்துகிறேன் நான்”

வெட்கப் புன்னகையுடன் அகில் சொல்கிறான்....”ராஜராஜ சோழன்”
பிகு: ராஜராஜ சோழன் நிறைந்ததும் மறவாமல் “தலையைக் குனியும் தாமரையே” prelude இல்லாமல் நேரடியாகத் தொடங்கி இசைத்தது.

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்...

Natarajan Venkatasubramanian said...

அதெல்லாஞ்சரி சார். தலைப்புக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?

mere coincidence? :-)

Giri Ramasubramanian said...

ok, let me change the title as 'why God is Raja' :))))

Related Posts Plugin for WordPress, Blogger...