Dec 22, 2011

கட்டுவிரியனின் காதலைக் கலைத்தோம்

படம்: நன்றி -  தமிழோவியம்


இங்கே நான் இந்தப் பதிவை எழுதும் காரணம் ஏதோ கதை சொல்வதற்காக அல்ல. நம் பெருமதிப்பிற்குரிய தீயணைப்புத் துறையினரின் பொறுப்பற்றத்தனத்தை பதிவு செய்யவே.

சென்ற சனிக்கிழமை மாலை சுமார் ஏழு மணியளவில் எங்கிருந்தோ வந்த இரண்டு பாம்புகள் எங்கள் வீட்டு வாசலில் மோகத்தில் ஆழ்ந்திருக்க எங்கள் ஏரியாவே பத்து நிமிட நேரத்தில் அல்லோலகல்லோலப்பட்டது.

சில வயோதிக அன்பர்கள் கையில் கம்பு கழிகளுடனும் பிரசன்னம் ஆனார்கள். ஓய் பெரியவர்களா காதல்வயத்தில் இருப்பவர்களை ஏன் பிரிக்கிறீர்கள். அவற்றைப் பிடித்து எங்கேனும் பாதுகாப்பான இடத்தில் விட்டுவிடும் வழியைப் பார்ப்போமே என்று சொன்னோம். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு யோசனை சொல்ல 108’ஐ சுழற்றுவோம் என்று முடிவானது.

“108, உங்களுக்கு எப்படி உதவலாம்?”

“எங்க வீட்டு வாசல்ல ரெண்டு பாம்பு வந்திருக்குங்க”

“நாங்க அதுக்கெல்லாம் ஹெல்ப் பண்ண மாட்டோம்ங்க”

“யாரைக் கூப்பிடணும்னு சொன்னா போதும் மேடம்”

“ஃபயர் சர்வீஸ்தான் சொல்லணும். கொஞ்சம் லைன்ல இருங்க”

“சரிங்க”

“இந்த நம்பர் நோட் பண்ணிக்கங்க! 22200335 இது கிண்டி ஃபாரஸ்ட் நம்பர். அவங்களுக்கு சொல்லுங்க”

“ஹலோ கிண்டி பாம்புப் பண்ணையா”

......

......

“சாரிங்க, இப்போ இங்க ஆளுங்க இல்லை. எல்லாரும் வெளிய போயிருக்காங்க”

"அடுத்து, ஃபயர் சர்வீஸ் 101 சுத்துங்க", பக்கத்து வீட்டு பெண்மணி  101 சுழற்றினார்.

“ஃபயர் சர்வீஸ், சொல்லுங்க”

“சார், கார்த்திகேயபுரம், மடிப்பாக்கத்தில இருந்து பேசறேன். எங்க வீட்டு வாசல்ல ரெண்டு பாம்பு வந்திருக்குங்க”

”சொல்லுங்கம்மா, நாங்க என்ன செய்யணும்?”

“அதை புடிக்க ஆள் அனுப்பணும் சார்”

“இல்லைங்க! வீட்டுக்கு உள்ளாற வந்தா சொல்லுங்க. அப்பதான் நாங்க வருவோம்”

“சார், என்ன இப்பிடி சொல்றீங்க”

“அட சீமெண்ணெய் ஊத்திக் கொளுத்துங்க”

“சார், நாங்க அதைப் பிடிக்க ஆள் கேக்கறோம்”

“அதெல்லாம் எதுக்குங்க. அங்க ஆம்பளைங்க யாரும் இல்லியா? நாலு பேரு சேர்த்துக்கிட்டு அடிச்சிடுங்க”

“மொதல்ல நீங்க ஃபோனை வைங்க சார்”

நெடுங்செழியர்கள் இருவரும் இன்னமும் மோனத் தவத்தில் இருக்க என்ன செய்ய எனப் புரியவில்லை. அடிக்க வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருந்தாலும் அவர்கள் இருவரின் லீலைகள் முடிந்து பிரிய நேர்கையில் ஆளுக்கு ஒரு பக்கமாய் ஒரு வீட்டைத் தேர்ந்தெடுத்து உள்ளே புகுந்துவிட்டால்? பா.கண்டால் ப.நடுங்கும் என்பார்கள். நாங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?

பூ விற்கும் அம்மணி ஒருத்தர், “அது கட்டுவிரியன் பாம்பு. ரொம்ப வெஷமானுது, தட்டுனா நாலு அடி வைக்க மாட்டோம்”, என மேலும் பீதி கிளப்பிவிட்டுச் சென்றார்.

கடைசியாக என் ட்விட்டர் நண்பர்களிடம், “என்ன செய்ய”, எனக் கேட்க நண்பர் மோகன் ப்ளூக்ராஸை அழைக்கச் சொன்னார். <044 2235 4959> என்ற எண்ணை இணையத்தில் தேடிப்பிடித்து அழைத்தோம்.

அழைத்த அரை மணிநேரத்தில் வந்து நின்றார்கள் ப்ளூக்ராஸ் இயக்கத்தினர். ஆர்மி ஆபீசர் தோற்றத்தில் இருந்த அறுபது வயது மதிக்கத்தக்க ஜெண்டில்மேன் ஒருத்தர் களமிறங்கி இரண்டு பாம்புகளையும் பிடித்து சிறு கோணியில் எடுத்துச் சென்றார். கிண்டி காட்டுப் பகுதிகளில் அவை விடப்படும் என்று தெரிவித்தார். எங்கள் பகுதி மக்களிடம் வசூல் செய்து எங்களால் இயன்ற ஒரு தொகையை  ப்ளூக்ராஸுக்கு டொனேஷன் தந்து அனுப்பினோம்.

நீச்சல் கற்றுக் கொள்வது எத்தனை அவசியமோ அத்தனை அவசியம் நிறைந்தது பாம்பு பிடிப்பதும் என்று நினைத்துக் கொண்டேன். 


3 comments:

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
உங்களது படத்தில் இருக்கும் பெண்மணி சென்னையில் தான் படித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது பதிவின் இணைப்பை மாலை அனுப்புகிறேன். இந்த பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
மனப்பூர்வ வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை!
பகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"

J.P Josephine Baba said...

அருமையான சுவாரசியமான பதிவு!

Related Posts Plugin for WordPress, Blogger...