Jul 14, 2012

பழைய சோறுஜான் டேவிட்டை தமிழகம் இன்னமும் மறந்திருக்காது என நம்புகிறேன். கிட்டத்தட்ட ஒரு வருடம் முன் ஜான் டேவிட் சரணடைந்து மீண்டும் சிறை சென்ற போது நான்  எழுதிய பதிவு ஒன்று, அப்போது ஒரு வாரப் பத்திரிக்கைக்கு அனுப்பியது. இன்று வரை அந்த பத்திரிகையில் வராததால், இனியும் வராது என்ற நம்பிக்கையில் இங்கே பப்ளிஷுகிறேன் :))


ஜான் டேவிட்! பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தையே அலறடித்த பெயர். 

மருத்துவக் கல்லூரி மாணவனான ஜான் டேவிட் சக மாணவன் நாவரசுவைக் கண்டம் துண்டமாக வெட்டிக் கொன்றது, கடலூர் செஷன்ஸ் கோர்ட் ஜான் டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது, பின்னர் சென்னை உயர்நீதிமன்றம் அந்தத் தண்டனையை ரத்து செய்தது அனைத்தையும் வரலாறு சொல்லும். 

இப்போதைய பரபரப்பு: சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் மீண்டும் ஜான் டேவிட்டை இரட்டை ஆயுளில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தை ஓரிரு நாட்கள் பரபரப்புச் சூழல் தொற்றிக் கொண்டது. ஜான் டேவிட் தலைமறைவு, ஆஸ்திரேலியாவில் பாஸ்டராக இருக்கிறார் அப்படி இப்படியென ஊடகங்களில் செய்திகள் வந்தன. லேட்டஸ்டாக சென்னை வேளச்சேரியில் பீ.பி.ஓ. ஒன்றில் இத்தனை நாட்கள் பணிபுரிந்து கொண்டிருந்த ஜான் டேவிட் கடலூரில் சரணடைந்துள்ளார்.

இங்கே ஆச்சர்யம் தரும் விஷயம் ஒரு சர்வதேச பீ.பி.ஓ. ஒன்றில் ஜான் டேவிட் கடந்த ஐந்து வருடங்களாக ஜான் மாரிமுத்து என்ற பெயரில் இயங்கி வந்ததே. டேவிட் மாரிமுத்து என்ற தந்தையின் பெயரில் மாரிமுத்துவை மட்டும் பின் பெயராக்கிக் கொண்டு தன் கெட்டப்பை சற்றே மாற்றிக் கொண்டு செயல்பட்டிருக்கிறார் (கன்னத்தில் மச்சம் ஒட்டிக்கொண்டிருந்தாரோ?). பீ.பி.ஓ. என்பதால் ஆங்கிலப் புலமை மாத்திரம் போதும். அந்தத் தகுதி ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு தன் கல்விச் சான்றிதழ்கள் எவற்றையும் தான் பணி புரிந்த நிறுவனத்தில் கொடுக்காமல் ஜான் டேவிட் இத்தனை நாட்கள் அங்கே வேலை செய்து வந்ததாக சில செய்தித்தாள்கள் சொல்கின்றன. ஆனால் அது அப்படியே உண்மையாக இருக்க சாத்தியம் இல்லை.

ஒரு சர்வதேச நிறுவனம் இப்படிப் பொறுப்பில்லாமல் குற்றப் பின்னணி உள்ள ஒருவருக்கு எப்படி வேலை தந்தது? இப்படிச் செய்வது அவர்களின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் விஷயம் ஆகாதா? பீ.பி.ஓ'க்களில் எந்தக் கல்வித் தகுதி, முன் அனுபவம் கொண்டவர் என்றாலும் அல்லது இல்லாதவர் என்றாலும்; சுருங்கக் சொல்லின்  யார் வேண்டுமானாலும் உள்ளே நுழையலாம் என்ற கருத்திற்கு இதுதான் அர்த்தமா என்று சிலர் வரிசையாக கேள்விகள் எழுப்புகிறார்கள்.

இது பற்றியெல்லாம் நாம் பேசும் முன் நாம் புரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம் ஒன்று இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் ஜான் டேவிட் வழக்கு நிலுவையில் இருந்ததே தவிர,அங்கே தீர்ப்பு வழங்கும் வரை சட்டத்தின் பார்வையில் ஜான் டேவிட் உயர்நீதிமன்றத்தில் குற்றமற்றவர் என்று சான்றிதழ் வழங்கப்பட்ட ஒருவர். எனவே அவருக்கு எந்த ஒரு நிறுவனமும் தானே முன் வந்து வேலை கொடுப்பது  கூட சட்டப்படி சரியே.

சரி, இப்போது எப்படி ஜான் டேவிட் போலித் தகவல்கள் மூலம் வேலையில் நுழைந்திருக்கக் கூடும் எனப் பார்க்கலாம். பொதுவாக இதுபோன்ற MNC கம்பெனிகளில் சான்றிதழ்களைத் தராமல் வேலையில் அமர்தல் சாத்தியம் இல்லை. இங்கெல்லாம் உள்ளே நுழைதலில் நிறைய கெடுபிடிகள் இருக்கும். சாப்ட்வேர் ஆகட்டும், பீ.பி.ஓ'க்கள் ஆகட்டும்; உள்ளே நுழைகையில் ஒவ்வொரு ஊழியரின் பின்புலத்தை சரிபார்க்க என துணை நிறுவனங்களை அமர்த்திக் கொண்டிருப்பார்கள். ஒரு நபர் வேலையில் அமரும்போது ஒப்படைக்கும் கல்வித்தகுதி மற்றும் முன் அனுபவ  விபரங்களை சரிபார்ப்பதே அந்தத் துணை நிறுவனங்களின் வேலை. ஒரு தனிநபரின் விபரங்கள் எப்படி சரி பார்க்கப்படுகிறது என்பது அந்தந்த நிறுவனத்தின் திறமை.  கல்வித்தகுதி அந்தந்த சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்திடம் நேரில் சென்றோ அல்லது கடிதம் மூலமாகவோ பெறப்படுகிறது. வேலை முன்அனுபவ சரிபார்ப்புகளும் நேரில் அல்லது தொலைபேசி மூலம் செய்யப்படுகிறது.

இந்தவிதச் சரிபார்த்தல்களின் போது வேலையில் சேர்ந்த ஒருவர் தவறான தகவல் கொடுத்தார் எனத் தெரியவரும் பட்சத்தில், இந்த சர்வதேச நிறுவனங்கள் எப்படிப் பட்டவர்க்கும் தாட்சண்யம் காட்டுவது இல்லை. தவறான தகவல் எனத் தெரிந்தால் உடனடியாக "டெர்மினேஷன்" ஆர்டர்தான். இதிலிருந்து எப்படிப்பட்ட கொம்பனாக இருந்தாலும் தப்பிக்க முடியாது.

இவை இப்படியிருக்க, தகுதி குறித்த எந்த ஆவணத்தையும் தராமல் வெறுமனே ஆங்கிலம் பேசிக்காட்டிவிட்டு ஜான் டேவிட் அங்கே நுழைந்தார் எனச் சொல்வது தவறு. இங்கே மாற்றுச் சாத்தியம் என்னவென்றால், ஜான் டேவிட் போலியான தகவல்களை உருவாக்கித் தந்துவிட்டு அவற்றை எப்பாடுபட்டாவது சரிபார்த்தல்களின் போது உண்மையைப் போல் தோன்றச் செய்திருக்கலாம்.

ஆக, ஜான் டேவிட் வேலை பார்த்த நிறுவனத்திகு பின்னணி சரி பார்த்தல்களில் ஈடுபட்ட நிறுவனம் இப்போது கையைப் பிசையத் துவங்கியிருக்கும். ஏனென்றால், சரிபார்ப்புகளில் எங்கோ ஏதோ ஓட்டை இருந்தது உறுதியாகிறது. ஜான் டேவிட் சிக்கிவிட்டார், பிரச்னையில்லை. இன்னமும் எத்தனை குற்றப் பின்னணியில் இருப்பவர்கள் இப்படி இந்தப் பின்னணியில் இயங்கி வருகிறார்களோ என்ற கேள்வி இப்போது எழுகிறது. மேற்கொண்டு நடவடிக்கைகள் என்ன இது போன்ற தவறுகள் எப்படித் திருத்திக் கொள்ளப்படும் என்பதை இந்த நிறுவனங்கள் இவ்வேளையில் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...