Jul 16, 2012

தாஜ்மஹாலும் என் தாத்தா அமர்ந்த நாற்காலியும்வரலாறு காணாத ஒரு வெயில்காலம் முடிவடைந்து கார்காலம் தொடங்கும் முகமாய் நகரத்தில் அறிகுறிகள் தெரிய, காய்ந்து கருவாடாய்க் கிடந்த தருமமிகு சென்னையில் நேற்று கொஞ்சமே கொஞ்சம் குளிரை உணர முடிந்தது. ஏனோ திடீரென சென்ற ஆண்டு ஜூலை-ஆகஸ்டு மாதங்களில் குர்கான் பயணத்தின் போது தாஜ்மஹால் சென்ற நினைவு வந்தது.

ஆபீஸில் குர்கான் செல்கிறேன் என்ற பேச்சு ஓடிக் கொண்டிருந்த சமயம். வெங்கட் கீர்த்தியின் டெஸ்கைக் கடந்தபோது,  “ஜி, டெல்லி போறீங்களாமே? அவசியம் தாஜ்மஹால் போய்ட்டு வாங்க ஜி”, என்றான். 


வடக்கத்தியர்கள் தெற்குப் பக்கம் வந்தால் பாலாஜி பக்வானைப் பார்க்காமல் போவதில்லை. தங்கள் பயணத் திட்டத்தில் இரு தினங்கள் திருமலை வேங்கடவனுக்கு ஒதுக்குகிறார்கள். அலுவல் விஷயமாக வந்து இறங்கியதும் தத்தம் அலுவல் தொடங்க ட்ராஃப்ட் ப்ளான் போடுமுன் பாலாஜியை தரிசிக்க ட்ராவல் ப்ளான் போடுவார்கள். ஊருக்குத் திரும்பும்போது மொட்டையடித்த தலையுடன் சென்றாக வேண்டும், கூடவே கையில் ஒரு டஜன் லட்டுகள்.

அதுபோல தெற்கத்தியர்கள் டில்லிப் பக்கம் சென்றால் தாஜ்மஹால் போகாமல் அந்தப் பயணம் நிறைவதில்லை. டில்லி போனேன் என்றாலே, “தாஜ்மஹால் பாத்தியா?”, என்பது பத்தில் எட்டு பேர் கேட்கும் கேள்வி. என்ன நாம் திரும்பி வருகையில் லட்டுக்கும் மொட்டைக்கும் பதிலாக வெள்ளைப் பளிங்கில்  (Marble) செய்த பொருட்கள் நம் பயணப்பையில் தஞ்சமடையும். நம் பணப்பைக்கு மொட்டை அடிக்கப்படும். 

“என்ன எளவுய்யா இருக்கு தாஜ்மஹால்’ல?”, என்று தொடங்கி, “நான் எதுக்கய்யா அங்க போகணும்?”, என்று வெ.கீர்த்தி வாயடைத்துப் போகுமளவுக்குக் கேள்விகளை அடுக்கி அவனுக்கு நான் தந்த சொற்பொழிவாற்றலை தன் வாழ்நாளில் மறக்கமாட்டான்.

தாஜ்மஹால் பற்றி எனக்கு எப்போதும் நல்ல அபிப்ராயம் இருந்ததில்லை. ஆஃப்டர் ஆல் அது ஒரு லூசுப்பயல் கட்டிய கல்லறை என்ற இளக்காரம் எப்போதும் மனதில் உண்டு. எனவே என் இரண்டு வார குர்கான் பயணத்தில் தாஜ்மஹால் பயணத் திட்டம் ஏதும் இல்லை. 

குர்கான் சென்று முதல் ஒருவார வேலைகள் முடிய, அந்த  வாரயிறுதி எட்டிப் பார்த்தது. எங்களை அங்கு வரவழைத்திருந்த வெள்ளைக்கார துரையம்மா நாளை சனிக்கிழமை தாஜ்மஹால்  செல்வோம் காலை ஆறரைக்குத் தயாராய் இருக்கவும் என்று ஆணையிட்டார். இல்லை வேணாம் என்ற என் கூக்குரல்கள் அவர் காதில் விழவில்லை. 

”ஆன் அவர் வே பேக் ஐ வில் டேக் யூ டு மதுரா ஆல்ஸோ. லார்ட் க்ரிஷ்னாஸ் பர்த் ப்ளேஸ்”, என்று தூண்டில் போட்டார்.

“நாம் மதுரா மாத்திரம் போகலாமே. தாஜ் வேண்டாமே”

“டோண்ட் யூ நோ தி வேல்யூ ஆஃப் தாஜ்?”

“யா, ஐ நோ”

“தென் யூ மஸ்ட் விஸிட் மேன்”

இப்படிப் பேசுபவரை என்ன சொல்லி மடக்க?


பிறகு என்னென்னத்தையோ செய்து துரையம்மாவையே வாரயிறுதியில் அலுவலகத்தில் உட்கார வைக்கும் சதித்திட்டங்கள் சிலவற்றைச் செயல்படுத்தி  எப்படியோ அந்த திட்டம் கேன்சல் ஆகிப்போக, "ஹப்பாடா” என்று பெருமூச்சு விட்டேன்.

எனினும் விதி வலியது என்பது ஊருக்குப் புறப்படும் நாளுக்கு முன் ஊர்ஜிதம் ஆனது. ஞாயிறன்று மதியம் சென்னைக்கு ஃப்ளைட். வெள்ளி இரவு அங்கு மக்களிடம் பிரியாவிடை பெற்றுக் கொண்டு சனிக்கிழமையை எப்படி செலவு செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது,  “டுமாரோ மார்னிங், சிக்ஸ் தர்ட்டி, தாஜ்மஹால். நோ எக்ஸ்க்யூஸ்”, என்று துரையம்மா ஆணை வந்தது. இந்த முறை ஆணையை முறியடிக்க நாங்கள் ஏதும் சதித்திட்டம் தீட்ட வாய்ப்பு அமையவேயில்லை. 

”வெல், எனக்கு லேசா தொண்டை காந்துது. வயிறு வேற அப்செட்டா இருக்கு”, என்றேன்.

“ஐ வில் ப்ரிங் எ டாக்டர் ஃபார் திஸ் விசிட்”, என பதில் வந்தது.

மேலும் இரண்டு மூன்று காரண அடுக்குகள் இந்தப்பக்கமும், அவற்றை முறியடிக்கும் பேட்ரியாட் ஏவுகணைகள் அந்தப்பக்கம் என விவாதம் நீள.....

சரி, போய்த் தொலைப்போம் என்று முடிவுக்கு வந்தேன்.

டில்லியிலிருந்து தாஜ்மஹால் அமைந்துள்ள ஆக்ரா சுமார் இருநூறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. சுமார் நான்கு மணிநேரப் பயணம். வாரயிறுதி என்றால் ஆக்ரா வழக்கத்திற்கு அதிகமாகக் களைகட்டும். அப்போது ஆக்ரா எல்லையிலிருந்து தாஜ்மஹாலை போக்குவரத்து நெரிசல் தாண்டி அடைய கூடுதலாக இரண்டு மணிநேரங்கள் தேவைப்படும்.  

நல்லதோர் மழையுடன் தொடங்கியது நாள். குர்கானிலிருந்து காலை ஆறு மணிக்கு முன்னதாகவே புறப்பட்டோம். நான், என் அலுவலகத் தோழர் பூவேந்தன், என் மேலாளர் அம்மணி மற்றும் துரையம்மா. வழிநெடூக மழை மெல்லத் தூறி, வேகமாய் அடித்து, வண்டியையே அசைத்து என விதவிதமாய் வித்தைகள் காட்டியது. எனினும் சாதுர்ய சாரதி துணையில் பயணத்திற்கு ஓர் தடையும் இல்லை. பதினோரு மணி சுமாருக்கு தாஜ்மஹால் இருந்த பகுதியை அடைந்தோம். 

ஊருக்குள் நுழையும்போதே தூரத்தில் தாஜ் தெரியும் என்று நினைத்திருந்தேன். அங்கே சென்ற பின்னர்தான் தெரிந்தது தாஜுக்கு எதிரே என்றால் எதிரே சென்று நின்றாலே ஒழிய தாஜ் தரிசனம் தருவதில்லை.


ஒரு கிலோமீட்டர் முன்னதாக எங்கள் சாரதி தாஜ்மஹாலுக்கு வழிகாட்ட “ரவி” என்ற கைட் ஒருத்தரை முன்னிருக்கையில் ஏற்றிக் கொண்டார். எங்கள் பயணத்திட்டத்தில் கைட் யாருக்கும் இடம் இல்லாததால் என்ன ஏது எனப் புரியாமல் துரையம்மாவும் மேலாளர் அம்மணியும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டு கிசுகிசு ஆங்கிலத்தில் சாரதியைத் திட்டிக் கொண்டிருந்தார்கள்.

தாஜ்மஹால் பலத்த பாதுகாப்பு அடுக்குகளுக்குள் இருக்கிறது. பாதுகாப்பு என்றால் பலவகைப் பாதுகாப்புகள். தாக்குதல்களிலிருந்து காப்பதற்கு போலீஸ் பாதுகாப்பு பல்வகை வளையங்களில் செயல்படுகிறது. செக்கிங் என்றால் செக்கிங் அப்படி ஒரு செக்கிங். மேலும் தாஜ்மஹால் மாசுபடுவதைத் தவிர்க்கும் / தடுக்கும் வண்ணம் சுமார் ஒரு கி.மீ தொலைவுக்கு முன்னதாகவே நாம் செல்லும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. அதற்கு மேல் நடக்கவேண்டியதுதான். நடக்க இயலாதவர்க்கு சில பேட்டரி கார்கள் உள்ளன.

தன் தொழிலுக்கே உரித்தான ஒட்டுமொத்த எந்தூஸியாஸத்துடன் இருந்தான் ரவி. எனக்கு ஒரு ஐந்தாறு வயதுகள் சிறியவனாக இருப்பான். உடைந்த ஆங்கிலத்தில், ஆனால் வெகு சரளமாகப் பேசிக் கொண்டேயிருந்தான். அதில் நிறைய நிறைய தகவல்கள் சிதறி விழுகின்றன. எதை நம்பலாம் எதை நம்பக்கூடாது என்னும் உரிமையை நம்மிடமே விட்டுவிடுகிறான் என்பதால் ப்ரச்னையில்லை. 

குடை விற்பவர்களின் துரத்தல்களைப் புறக்கணித்தபடி மழையில் திளைத்து நனைந்தவாரே நடந்தோம். அரை கி.மீ. முன்னதாக நுழைவுக் கட்டண வசூல். இந்தியர்களுக்கு இருபது ரூபாய், வெளிநாட்டவர்க்கு எழுநூற்று ஐம்பது ரூபாய் (பதினைந்து டாலர் என்று நினைவு). 

இப்போது உள்ளே நுழையும்முன் /நுழைந்தபின் செய்யத்தக்கன, செய்யக்கூடாதன பற்றி வகுப்பு எடுத்தவாறு வந்தான் ”கைட்” ரவி.


அடுத்தடுத்த கட்ட பாதுகாப்பு சோதனைகள். உச்சந்தலை முடிமுதல் உள்ளங்கால் நகம் வரை அனைத்தையும் தொட்டுத் தடவி (ஆம் தொட்டுத் தடவி) சோதிக்கிறார்கள் :).

கடைசி சோதனை வாசலில் உடலை ஆட்டி அசைத்து ”இதா இங்க பாத்துக்கோ, அதா அங்க பாத்துக்கோ” என்று சோதனைக்கு உட்பட்டுவிட்டு உள் நுழைந்தோம்.

“வி ஹேவ் எண்டர்ட் தி மெயின் எண்ட்ரன்ஸ் சார், மேடம்! நவ் வி ஆர் கோயிங் டு ஸீ தி வேர்ல்ட் ஃபேமஸ் தாஜ்”, என்றான் ரவி2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய பயண அனுபவம்...
அடுத்த பதிவை படிக்க ஆவல்...

பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

Nataraj (ரசனைக்காரன்) said...

நல்ல பிகினிங்..தொடருங்கள் :)

Related Posts Plugin for WordPress, Blogger...