Sep 19, 2012

அத்திரிபாட்சா கொழுக்கட்டை கதை




விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்.. அத்திரிபாட்சா கொழுக்கட்டை கதை..

ஒரு ஊரிலே ஒருத்தன் இருந்தானாம். அவன் மாமியார் வூட்டுக்கு விருந்துக்கு போனானாம். அங்கே அவன் மாமியார் வித விதமா சமைச்சு வெச்சிருந்தாளாம். அதிலே கொழுக்கட்டை இருந்திச்சாம். நம்மாளு லைஃப்லே அது வரைக்கும் கொழுக்கட்டை சாப்பிட்டதே இல்லையாம். ‘ஆஹா.. ஓஹோ.. பிரமாதம்’ அப்படீன்னு சொல்லிட்டு கொழுக்கட்டையை ரவுண்டு கட்டினானாம்.

“மாமி.. இது பேரு என்ன சொன்னீங்க?”

”கொழுக்கட்டை”

“ஓ சரி.. முதல் காரியமா வூட்டுக்கு போயி பொண்டாட்டிக்கிட்டே சொல்லி கொழுக்கட்டை செய்யச் சொல்லணும்” அப்படீன்னு சொல்லிட்டு அது பேரு மறந்திடக் கூடாதுன்னு, “கொழுக்கட்டை.. கொழுக்கட்டை... கொழுக்கட்டை” அப்படீன்னு சொல்லிக்கிட்டே ஊருக்கு போயிட்டிருந்தானாம்.

போற வழியிலே ஒரு பெரிய கால்வாய். கர்நாடகாக்காரன் அணை உடைஞ்சு போயி நாசமாயிடுமோன்னு பயந்து போய் திறந்து விட்டுருந்த தண்ணி பின்னிப் பெடலெடுத்து ஓடிட்டிருந்துச்சாம். நம்மாளுக்கு முன்னாடி போனவன் கொஞ்சம் பின்வாங்கி, வேகமா ஓடி வந்து “அ...த்...தி...ரி...பா...ட்...சா” அப்படீன்னு சொல்லி தொபுக்கடீர்ன்னு அந்தப் பக்கம் குதிச்சு நடந்து போனானாம்.

“ஓஹோ.. இப்படி ஒரு வழி இருக்கோ?”ன்னு யோசிச்ச நம்மாளு.. “கொழுக்கட்டை... கொழுக்கட்டை” அப்படீன்னு சொல்லிட்டிருந்ததை விட்டுட்டு... “அ...த்...தி...ரி..பா..ட்..சா”அப்படீன்னு சொல்லிக்கிட்டே தாவினானாம். அந்தப் பக்கம் போய் குதிச்ச அப்புறம் ‘கொழுக்கட்டை’ன்றது மறந்திடுச்சாம். “அத்திரிபாட்சா.. அத்திரிபாட்சா..” அப்படீன்னு சொல்லிக்கிட்டே வீட்டுக்கு போனான்.

பொண்டாட்டியைக் கூப்பிட்டு, “ஏய்.. உங்கம்மா அத்திரிபாட்சா செஞ்சு கொடுத்தாங்க. ரொம்ப சூப்பர். அதே மாதிரி நீயும் அத்திரிபாட்சா செஞ்சு கொடு” அப்படீன்னானாம்.

“என்னாது... அத்திரிபாட்சாவா.. என்ன கண்ராவிய்யா அது?” அப்படீன்னு பொண்டாட்டி கேட்டாளாம்.

“அடிப்போடி..அத்திரிபாட்சா செய்யத் தெரியாமா நீயெல்லாம் எதுக்குடி ஒரு பொண்டாட்டி?”ன்னு கேட்டுட்டு கண்,மண் தெரியாம பொண்டாட்டியை பின்னிப் பெடலெடுத்துட்டானாம் (அட... கதை தானே.. அப்படியே இருந்திருக்கும்ன்னு நம்புங்க சார்!)

பொண்டாட்டிக்காரிக்கு அங்கங்கே காயம் பட்டு வீங்கியிருந்திச்சாம்.

பொண்டாட்டியோட அம்மா தன்னோட பொண்ணைப் பார்க்க வந்தவங்க இதைப் பாத்துட்டு, “அடப்பாவி.. என்னோட பொண்ணை இப்படி போட்டு அடிச்சிருக்கியே.. உடம்பு முழுக்க கொழுக்கட்டையாட்டம் வீங்கியிருக்கேய்யா”ன்னு மாப்பிள்ளைக்கிட்டே கேட்டாராம்.

“ஆங்...அதே தான்.. அதே தான்.. கொழுக்கட்டை.. கொழுக்கட்டை.. அதைத்தான் கேட்டேன்” அப்படீன்னானாம்.

அத்திரிபாட்சா கொழுக்கட்டை கதை இது தான்.. போய் புள்ளக்குட்டிங்ககிட்ட இந்தக் கதையை சொல்லுங்கப்பா!

நன்றி: கதைசொல்லி ரமேசுகுமார், பேசுபுக்கு

1 comment:

Easy (EZ) Editorial Calendar said...

அருமையா கதை சொல்லி இருகிங்க....பகிர்வுக்கு நன்றி....

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Related Posts Plugin for WordPress, Blogger...