Mar 5, 2013

அப்பா! இது அடுக்காது சாமி!மேலே காணும் புகைப்படத்தைப்  பாருங்கள்.

இருண்டு கிடக்கும் இந்தப் படம் சென்னை பல்லாவரத்தையும் துரைப்பாக்கத்தையும் இணைக்கும் முக்கியச் சாலையில் இரவு நேரத்தில் எடுக்கப்பட்டது. தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மற்றும் இப்பகுதிகளைச் சுற்றியுள்ள இன்னபிற பகுதிவாழ் மக்கள் கீழ்கட்டளை, வேளச்சேரி, பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், சோழங்கநல்லூர், திருவான்மியூர், ஈசிஆர், மற்றும் சென்னையின் கிழக்குக் கோடியின் பிற பகுதிகளை அடைய இந்தச் சாலையைத்தான் பயன்படுத்துகிறார்கள். 

இடது புறம் தெரியும் ஒற்றைவிளக்கு மடிப்பாக்கத்திற்கு உள்ளே செல்லும் ஒற்றைச் சாலைமுனையில் அமைந்தது. அது ஹைவேஸ் விளக்கு அல்ல. தூரத்தில் தெரியும் ஒளிப்பொட்டுகள் எதிரில் வரும் வாகனங்கள்.

இந்தச் சாலை அமைக்கப்பட்டு வருடங்கள் ஐந்து ஆன பின்னரும் கூட பத்து கிலோமீட்டர் நீள சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்குக் கூட விளக்கு வசதியில்லை.

சென்னையின் ஐ.டி.எக்ஸ்ப்ரஸ் ஹைவே என்றழைக்கப்படும் ராஜிவ்காந்தி சாலைக்குப் பயணப்படும் பல்லாவரம், மடிப்பாக்கம், வேளச்சேரி வாழ் பொதுசனங்கள் பயன்படுத்தும் சாலைக்கே இந்தக் கதி. எனக்குத் தெரிந்த இருண்ட பிரதேசத்தை, நான் தினமும் பிரயாணம் செய்து அல்லலுறும் பகுதி என்பதால் இந்தப் படத்தை இங்கே தருகிறேன்.

இதனைக் காட்டிலும் ஒளியின் தேவைமிக்க சாலைகள், தெருக்கள், வீதிகள் நம் சிறுநகரங்களிலும், சின்னஞ்சிறு கிராமங்களிலும் ஆயிரம் இருக்கக்கூடும்.

ஓகே, இப்போது கீழே காணும் இந்தப் படத்தைப் பாருங்கள்.


ஜெகஜ்ஜோதியாக ஒளிரும் இந்தப் படம் சென்னை பம்மல் பகுதியில் இருக்கும் சங்கர் நகர் சாலையின் தோற்றம்.

நல்ல அகலமாக இருந்த இந்தச் சாலையானது திடீரென்று இடையே டிவைடர் போடப்பட்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டு இரண்டு குறுகல்கள் ஆக்கப்பட்டது. இத்தனைக்கும் இது பஸ்களும் லாரிகளும் அதகளப்படுத்தும் பிரமாத பிரதான சாலையொன்றுமில்லை. சங்கர் நகருக்கு நாளொன்றுக்கு சேர்த்துப் பார்த்தால் பத்து பஸ்கள் இப்படியும் அப்படியும் போகின்றன. மற்றபடி பொதுஜன நடமாட்டம் மட்டுந்தான் இந்தச் சாலையில்.

இந்தச் சாலையின் இடதுபுறம் முன்னமே சக்திவாய்ந்த விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருக்க, சாலையின் நடுவே இரண்டுபுறமும் தொங்கும் அதிவீரிய வெள்ளை விளக்குகள் மேலும் சேர்க்கப்பட்டுள்ளதையும் படத்தினில் பாரீர்.

சாலையின் இடதுபுறம் ஒரு விளக்கு, நடுவே இரண்டு விளக்குகள். இந்தியா நிஜமாகவே ஒளிர்கிறதா என்ற சந்தேகம் எனக்கு வந்துவிட்டது. இங்கே வீணடிக்கப்படும் மின்சாரத்தை மிச்சம் பிடித்தால்.... மிச்சத்தை நீங்களே நிரப்பிக் கொள்ளுங்கள்.

பல்லாவரத்தையும் பம்மலையும் இணைக்கும் குன்றத்தூர் சாலையே இன்னமும் டிவைடர் அமைக்கப்படாமல், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் கேளாது, பாராது இருக்கும் நிலையில் திடீரென்று இந்த உள்ளூர்ச் சாலைக்கு ஏன் இந்த கவனிப்பு?

சக அலுவலக cab-mate அன்பர் ஒருத்தர், இந்தச் சாலையில் வசிப்பவர் சொன்னது.

“அது ஒண்ணும் இல்லை சார். இந்த ரோடோட அந்த எண்ட்ல “மீனாட்சி பாலிடெக்னிக்” தாண்டினப்புறம் ஒரு பெர்ர்ர்ர்ர்ர்ர்ரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய ஃப்ளாட் டெவலப் ஆகிட்டு இருக்கு. நூத்துக்கணக்குல வீடுங்க வருது. அவைங்க இங்க கவனிச்சு அங்க கவனிச்சு, கைக்காசையும் கொஞ்சம் செலவழிச்சு இந்த ரோடை டெவலப் பண்ணியிருக்காங்க. கட்டுறதெல்லாம் இப்பிடி எதான வெளிச்சம் போட்டுக் காட்டினாத்தானே விக்கும். அட பத்துரூவா வளையல் விக்கவே லைட் அடிக்கற ஒலகம் சார் இது. நூத்தி சொச்ச வீடு விக்கறவரு இந்த லைட்டு கூட அடிக்காட்டி எப்டி? ”

அப்பா சாமி! இதெல்லாம் ரொம்ப ஓவரு டோய் என்று நினைத்துக் கொண்டேன்!

ஒருபக்கம் ஐடி எக்ஸ்ப்ரஸ் ஹைவே வாழ் மக்களுக்கே கண்ணில் வெண்ணெய் வைத்துவிட்டு இப்படி ஃப்ளாட் ப்ரமோட்டர்களுக்கு ரோடும், விளக்கும் போட்டுத்தரும் இந்த ஜனநாயகம் இன்னமும் கூட மின்சாரமே பார்க்காமல் இருக்கும் நம் இந்தியக் கிராமங்களுக்கு என்னத்தை கிழித்துவிடப் போகிறது?

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

என்னத்தச் சொல்ல...?

இங்கு இன்றைக்கு 10 to 12 மணிநேரம் மின்வெட்டு...

Giri Ramasubramanian said...

தனபாலன் சார்,

என்னத்த சொல்ல :(

Related Posts Plugin for WordPress, Blogger...