Nov 18, 2011

விலை உயர்வை என்ன பண்ணுவோம்?
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, ஆதரவு, எதிர்ப்பு, அது, இது என்று எதற்குமே இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. நாமும் நம் கருத்தை இரண்டு பக்கங்களிலும் சுருங்க எழுதுவோமே என்று இந்தப் பதிவு. 

உங்களுக்கு எது தேவையோ எடுத்துக் கொள்ளவும். விவாத மேடைகளில் இந்தக் கருத்தைத் தாங்கள் உபயோகிக்கத் தேவையிருந்தால் மறக்காமல் பத்திக்கு ஐநூறு ரூபாய் மணியார்டர் செய்துவிடவும். 

விலை உயர்வை ஆதரிப்போருக்கு!

இது நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு. மின்சாரம், போக்குவரத்து, பால்வளம் ஆகிய துறைகள் நசுங்கிச் சின்னாபின்னம் ஆகுமுன் அம்மா அவர்கள் விவேகமாகச் செயற்பட்டு தன் பிள்ளைகளான நம்மையும் இந்தத் துறைகளைக் காக்கும் சிறுசுமைகளைத் தாங்கச் செய்துள்ளார்கள்.

முந்தைய அரசு வோட்டு வங்கியின்பால் பார்வை கொண்டு விலையை ஏற்றாமலேயே வைத்திருந்ததே இப்படிப்பட்ட இக்கட்டில் அதிமுக அரசு மக்களைத் தள்ளும் நிர்பந்தத்திற்குக் காரணம். காலத்தே அவர்கள் போதிய இடைவெளியில் விலை உயர்த்தாமல் செயற்பட்டது தவறு.

மத்திய அரசின் பாராமுகம் மற்றொருபக்கம் நிதிநெருக்கடிக்கு வழி வகுக்கிறது. மே.வங்கம் போன்ற மாநிலங்களுக்கு இருபதினாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கிய மத்திய அரசு தேர்தலில் கண்ட தோல்வியை மனதினில் கொண்டு தமிழகத்தின் பக்கம் பாராமல் இருப்பதையும் இந்நேரத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

மேலும், மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டால் நம் மாநிலத்தில் இந்த மூன்று பொருள்களுமே இப்போதும்கூட விலை குறைவே என்பதனையும் நாம் மறந்திடல் கூடாது.

விலை உயர்வை எதிர்ப்போருக்கு!

ஏற்கெனவே பெட்ரோல் விலை உயர்வு கழுத்தை நெரிக்கிறது. அதன் எதிரொலியாக அத்தியாவசியப் பொருட்கள், காய்கறிகள் விலை விண்ணைத் தாண்டி நிற்கும் வேளையில் இந்த பேருந்துக் கட்டண, மின்சார, பால் விலை உயர்வுகள் மக்களை எந்த விதத்தில் பாதிக்கும் என்பதனை அதிமுக அரசு சற்றும் நினைத்துப் பார்க்கவில்லை என்பது தெளிவாகிறது.

வரலாறு காணாத மழை இப்போதுதான் மாநிலத்தின் பெரும்பாலான மக்களைத் துயரில் தள்ளித் தத்தளிக்கச் செய்து கொண்டிருக்கும் நிலையில் , அவர்கள் கரையேற உதவாமல் நீருக்குள் அவர்களை முங்கடிக்கும் முயற்சியாகவே இந்த விலை உயர்வை நாம் காண்கிறோம்.

மின்சாரமே பாதி நேரங்களில் இல்லாத நிலையில் இந்த மின் கட்டண உயர்வு தேவையா என்பதையும் ஆளும் அரசு நினைத்துப் பார்க்கவேண்டும்.


நீ இன்னாபா சொல்ற என்பவர்க்கு...

1) வெளியூருக்கு ரயில்’லயும், உள்ளூரில் பைக்கையும் நம்புபவன் நான். பஸ் எல்லாம் லேதண்டி.

2) பச்சை பாக்கெட் பாலுலருந்து நீல பாக்கெட் பாலுக்கு மாறிடலாம்னு இருக்கேன்.

3) புதுவருஷ டிஸ்கவுண்ட் ஸேல்’ல கடனட்டை தேய்ச்சி ஏஸி வாங்கலாம்னு இருந்தேன். இப்போ ஏஸி இல்லாமலேயே அந்த கரண்ட் சார்ஜ் வர்ற வாய்ப்பு இருப்பதால அந்தத் திட்டத்தை கைவிட்டாச்சு.

ஆக, நான் புத்திசாலி. நீங்க?

படம் நன்றி: யாரோ ஒரு இணைய கனவான்

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...