Dec 5, 2011

யு.எஸ். விசாவும் பின்னே ஞானும் - 2


B1 விசா விண்ணப்பிக்க இருப்பவர்கள் இந்தப் பதிவை படிப்பது நல்லது. படிக்காமல் இருப்பது ரொம்பவே நல்லது.

எதிர்வரும் காலத்தில் வேலை நிமித்தமாக அமெரிக்கா செல்ல B1 விசா தேவைப்பட்டாலும் படலாம் என்னும் நிலை அலுவலகத்தில் இருப்பதால், அலுவலக செலவில் B1 விசா ஒன்றை வாங்கி வைத்திருக்கிறேன். குறைந்தது இனி பத்து வருட காலங்களுக்கு இந்த B1 விசாவுக்கான இண்டர்வியூ கவலையில்லை.

கிட்டத்தட்ட கடந்த ஒரு மாதமாகவே இந்த பேப்பர் எங்கே, அந்த பேப்பர் எங்கே, அவர் அப்ரூவல் வேணும், இந்த இன்ஃபர்மேஷன் சேர்க்கணும் என்று ஒரு டஜன் விண்ணப்பங்கள், இரண்டு டஜன் அட்டாச்மெண்ட்டுகள், இதுக்கு வெயிட்டிங், அதுக்கு வெயிட்டிங் என காத்திருப்பு டென்ஷன்கள், இப்படி பேசணும், அப்படி பேசக்கூடாது என்ற அனுபவஸ்தர்களின் அறிவுரைகள்.ஆஆஹ்ஹ்ஹ்!

கடைசியில் இண்டர்வியூ என்னவோ வெறும் ஐம்பதே விநாடிகள்தான் நடந்தது. அதற்குத்தான் இத்தனை டென்ஷனும்.

யு.எஸ். விசாவைப் பொறுத்தவரை இவருக்கு அப்ரூவ் ஆகும் இவருக்கு ஆகாது என சொல்வதற்கில்லை. உங்களுக்கு நேரம் நன்றாயிருந்தால் ‘அப்ரூவ்’, இல்லையென்றால் ‘ரிஜக்ட்’ என்றவகையில்தான் இருக்கிறது.

என் கதையில், நான் ஒரு புராஜக்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு விசாவிற்கு அப்ளை செய்யுமாறு என் அலுவலகத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டேன். பின்னர் அதே புராஜக்டில் நான் சேரமுடியாத நிலை ஏற்பட, இருந்தாலும் பரவாயில்லை ”அப்ளை பண்ணியது பண்ணியாச்சு விசா இண்டர்வியூ போய் வந்துவிடு, நாளபின்ன தேவைப்பட்டா உபயோகிச்சிக்கோ” என்று அலுவலகத்தில் கூறவே ஏதோ ஓசியில் கிடைத்த ஜாக்பாட் போலத்தான் இண்டர்வியூவிற்குப் போனேன்.

விசா கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் எனக்குக் குறுகிய கால நஷ்டம் ஏதும் இல்லை. எனவே, ரொம்ப ஒன்றும் டென்ஷன் இல்லாமல் கிடைத்தால் கிடைக்கட்டும் இல்லையென்றாலும் கவலையில்லை என்ற நிலையில்தான் அந்தத் திங்கள்கிழமைக் காலைப் பொழுதில் அண்ணாமேம்பாலம் அருகே உள்ள அமெரிக்கத் தூதரக வாசலின் அந்த பிரஸித்தி பெற்ற வரிசையில் சென்று கலந்துகொண்டேன்.

நாம் டென்ஷனில்லாமல் அல்லது இருந்த டென்ஷனை வெளிக்காட்டாமல் இருந்தாலும், உடன் நிற்பவர்களைப் பார்த்தால் நமக்கும் டென்ஷன் தொற்றிக் கொள்ளும் போலத் தோன்றியது. Life is crazy என்று அந்த வரிசையில் நின்றபோது தெளிவாய்ப் புரிந்தது. ”அய்யா அமெரிக்க எஜமானரே தயவு செஞ்சு எனக்கு விசா அப்ரூவ் பண்ணிடு என் வாழ்க்கையே இந்த இண்டர்வியூலதான் இருக்கு. நீ அப்ரூவ் பண்ணிட்டா மவுண்ட்ரோடுலருந்து அவ்வை ஷன்முகம் ரோடு வழியா சுத்திக்கிட்டு கதீட்ரல் ரோடு பக்கமா வந்து ஒரு அங்கப்ரதிட்சணம் பண்ணிமுடிக்கறேன் என்பது போல கெஞ்சல் தொனிக்கும் முகத்தோடு பல முகங்கள் தென்பட்டன.  ”பாரத தேசமே! என்னை வுட்டுடு, நான் போயிடறேன்”, என்ற குரல்களும் எனக்குக் கேட்டாற்போல் இருந்தது.

அலுவலகத்தில் தந்த நான்கே நான்கு காகிதங்களையும் என் பாஸ்போர்ட்டையும் கையில் வைத்திருந்தவன், அங்கே நின்றவர்கள் பெட்டி பெட்டியாக வைத்திருந்த பேப்பர்கள், சர்டிஃபிகேட்டுகளைக் கண்டு நாம் ஏதும் கொண்டு வராமல் விட்டுவிட்டோமா என்று டென்ஷன் ஏற்றிக் கொண்டேன். பிறகுதான் அவை ஸ்டூடண்ட் விசா, ஹெச்1, எல்1 வகையறாக்களுக்கானவை எனப் புரிந்தது.

விண்ணப்பிக்கும் 100 பேரில் 57 பேருக்குத்தான் இப்போது யு.எஸ். B1 விசா கிடைக்கிறதாம். மீதம் 43% ரிஜக்‌ஷன் கேஸ்கள் என்று வரிசையில் நின்ற பெண் ஒருத்தி சொல்லி உடன் நின்றவர்களின் டென்ஷனை மேலும் ஏற்றிக் கொண்டிருந்தாள்.

தோளில் மயங்கித் தொங்கிக் கொண்டிருந்த கைக்குழந்தையை உதறி உதறித் தோளில் ஏற்றிவிட்டுக் கொண்டு ஒரு பெண்மணி அந்த சில்லென்ற காலையில் வரிசையின் கடைக்கோடிக்கு அனுப்பப்பட்டாள். ஏதோ ஒரு அகர்வால் ஒருத்தன் பெங்களூருவிலிருந்து நேற்று நள்ளிரவு தாமத விமானத்தில் வந்து த்ராபை ஹோட்டல் ரூமின் தூக்கமின்மையில் தவித்து ஆறரைக்கு எழுந்து “அம்மா ஊர்வலம்” (!!!) ஒன்றைக் கடந்து வதைப்பட்டு உதைப்பட்டு தூதரகம் வந்த கதையை நான் கேட்கமாட்டேன் என்று அடம் பிடித்தாலும் வலுக்கட்டாயமாக எனக்கு சொல்லிக் கொண்டிருந்தான்.

அங்கேயும் நம்மாட்களுக்கு வரிசையில் நிற்கும் பயிற்சியை தூதரக செக்யூரிட்டிகள் புன்னகைமாறா முகக்கடுப்போடு செய்து கொண்டிருந்தார்கள். நம்மூரில் பிரம்பால் அடித்தாலும் வரிசையில் நிற்கும் கலையை கற்றுக்கொள்ள அடம் பிடிப்பவர்கள் அமெரிக்கா சென்றால் எப்படி இருப்பார்கள் என்பதைப் பார்க்கவேனும் எனக்கு அமெரிக்கா செல்லும் கனவு இருக்கிறது.

செக்யூரிடி செக், பேப்பர் வெரிஃபிகேஷன், கைரேகை எடுக்கும் படலம் என ஒவ்வொன்றாய் முடித்து இண்டர்வியூ ஹாலுக்குப் போனேன். ஒரு வெள்ளைக்கார அம்மணிதான் கவுண்டரில் இருந்தார்: “குட் மார்னிங் சார்! ஹவ் ஆர் யூ டூயிங்!” என ஆரம்பித்தவர் மேற்கொண்டு கேட்ட கேள்விகள்...

நீங்கள் எதற்காக அமெரிக்கா போகிறீர்கள்?
இங்கே வேலை செய்யும் நிறுவனத்தில் எத்தனை வருடம் வேலை பார்க்கிறீர்கள்?
என்ன வேலை செய்கிறீர்கள்?
உங்கள் சம்பளம் என்ன?
எத்தனை நாள் அமெரிக்காவில் தங்க உத்தேசித்துள்ளீர்கள்?
உங்கள் க்ளையண்ட் யார்?
அவருடைய பிசினஸ் என்ன?
நான் உங்கள் விசாவை அப்ரூவ் செய்கிறேன் 

அவ்வளவேதான். இங்கே ஒவ்வொரு கேள்விக்குப் பின்னாலும் நிறைய அர்த்தங்கள் உண்டு. எல்லா கேள்விகளுக்கும் உள்ளே பொதிந்திருக்கும் ஒரு மறைமுகக் கேள்வி “அமெரிக்கா போகும் நீ அங்கேயே செட்டில் ஆகிவிடுவாயா? திரும்புவாயா?”, என்பதுதான்.  திரும்பிவிடும் எனத் தெரியும் கேஸ்களுக்கு அனுமதி உண்டு. தங்கும் முகமாய் ஒரு சின்ன சந்தேகம் வந்தாலும் ரிஜக்ட்தான்.

மேலும், அங்கிருக்கும் வேலையை இங்கே கொண்டுவரச் செல்பவர்களுக்கு (அவுட்சோர்ஸிங்) விசா அனுமதி இல்லை. இருக்கும் வேலையில் சின்ன மாற்றங்கள் உள்ளன அதற்கான மீட்டிங்’கில் கலந்துகொள்ளப் போகிறேன் என சொல்லியே பெரும்பாலும் விசா அனுமதிகள் பெறப்படுகின்றன.

இங்கே பணிபுரியும் நிறுவனத்தில் நீங்கள் எத்தனை வருடம் வேலை செய்கிறீர்கள் என்பதுவும் ’அப்ரூவலுக்கு’ ஒரு காரணியாக அமையும். அதிக வருடங்கள் வேலை செய்பவர் என்றார் ‘திரும்பி வந்துவிடுவார்’ என்று அர்த்தம். சம்பளத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி கிடைக்கிறது. அமெரிக்கா போய் இவரால் செலவு பண்ண முடியுமா என்பதையும் யோசிக்கிறார்கள்.

முடிந்தவரை அவர்கள் கேட்ட கேள்விக்கு மட்டும் சுருக்கமாக பதில் தருவது நல்லது. உப தகவல்கள், கூடுதல் தகவல்கள் தருவது அவசியம் இல்லை. அவ்வாறு செய்தல் உங்களுக்கு மேலும் எதிர்க்கேள்விகளைத் தருவித்து உங்களுக்கே வில்லனாக அமையும் வாய்ப்பு உண்டு.


கடைசியாக....

B1 இண்டர்வியூ செல்பவர்களுக்கு கடைசியாக அதிமுக்கியமான ஒரு மிகப் பெரிய அட்வைஸ்...... “இதுபோன்ற அட்வைஸ்கள் தரும் நபர்கள், பதிவுகள் பக்கம் போகாமல் இருத்தல் மிகவும் அவசியம்”

ஹிஹிஹி!






2 comments:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான பதிவு.
நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"

Related Posts Plugin for WordPress, Blogger...