Dec 6, 2011

போராளி - விமர்சனம்



நேற்று காலை அனகாபுத்தூர் வரை சென்றுவிட்டு அலுவலகம் வருவதற்கு புழல் - இரும்புலியூர் பைபாஸ் சாலையில் ஏறினேன். கிட்டத்தட்ட பத்து கிலோ மீட்டர்கள் கடந்தால்தான் தாம்பரம் வருகிறது. அனகாபுத்தூரில் நான் ஏறிய இடம் போலவே இந்த பைபாஸ் சாலையில் பைக் / ஸ்கூட்டர்களில் ஏறுவதற்கு என மக்களாக பக்கவாட்டுச் சுவற்றை அகற்றி ஏற்படுத்தி வைத்திருக்கும் வழிகள் ஒன்றிரண்டு மட்டும் வருகின்றன. மற்றபடி, இடையே ஏறவோ இறங்கவோ வழியில்லை. பெட்ரோல் தீர்ந்தால்கூட பத்து கிலோமீட்டர் தொலைவுக்கு வண்டியைத் தள்ளிக் கொண்டுதான் போகவேண்டும்.

வாகனங்கள் மட்டுமே பயணிக்கும் இந்தச் சாலையில் பொதுவாக நடந்து செல்லும் மனிதர்களை நீங்கள் காணவே முடியாது. ஆனால் நேற்று கிட்டத்தட்ட ஒரு ஏழெட்டு கிலோமீட்டர்கள் கடந்த நிலையில் அழுக்கு உடையில் சிக்குப் பிடித்த தலைமுடிகளுடன் ஏதேதோ குப்பைகள் அடங்கிய ஒரு பையை தோளில் மாட்டிக் கொண்டு மெலிந்த தேகத்தில் ஒரு மனிதர் நடந்து போய்க் கொண்டிருந்தார். இவர் எங்கிருந்து வருகிறார், எவ்வளவு தொலைவு நடந்திருப்பார், இவர் குறிக்கோள்தான் என்னவாக இருக்கும், இவரைச் சேர்ந்தவர்களுக்கு ஏன் இவர் பேரில் அக்கரையில்லை என்றெல்லாம் ஒரு ஃப்ளாஷ் போல சிந்தித்துவிட்டு இரண்டே விநாடிகளில் அவரைக் கடந்து போய்விட்டேன். நான்காவது விநாடி அந்த மனிதரை என் நினைவடுக்குகளில் இருந்து அகற்றி விட்டு சிந்தித்துச் செல்ல எனக்கு வேறு விஷயங்கள் இருந்திருக்கக் கூடும் நேற்று.

நேற்று மாலை நான் பார்த்த ‘போராளி’ படத்தின் இரண்டாம் பாதியில் இரண்டு ஃப்ளாஷ் பேக் கதைகள். அவற்றில் நரேஷின் கதை சொல்லும் பகுதியில் இப்படிப்பட்ட மன அழுத்த நோயாளி ஒருத்தனின் கதையோடு சேர்த்து இந்த நோயின் பின்னணி குறித்து அழுத்தமாகப் பேசுகிறது படம். 

ஒரு அதி புத்திசாலி மாணவனான சிறுவயது ஹீரோ, அவன் வளர்வதைத் தடை செய்ய அவனை மனநலம் பிழன்றவன் எனும் பட்டம் கட்டும் சித்தி, அவள் காமத்துப்பாலில் முயங்கியிருக்கும் அப்பா, அவன் வளர்வது, தன் பெயரில் இருக்கும் சொத்துக்காக அவன் விரும்பியவள் வேட்டையாடப்படுவது, இவன் மேற்கொள்ளும் பழிவாங்கல்கள், தானே விரும்பி மனநலமுகாமில் தஞ்சமடைவது, அங்கே சந்திக்கும் நரேஷ், அந்த முகாமிலிருந்து ஒரு கட்டத்தில் சென்னைக்குத் தப்பி வருவது, அங்கே அவன் சந்திக்கும் கதாபாத்திரங்கள், உருவாக்கிக் கொள்ளும் வாழ்க்கை, மீண்டும் பழையவர்களின் தலையீடு, கிளைமாக்ஸ் சண்டைகள், சுபம்.

இதுதான் கதை என்றாலும் படத்தின் மையம் நரேஷின் மன அழுத்தம் பற்றிப் பேசும் அந்த முகத்தில் அறையும் பகுதிதான். ’ஷுகர் இருக்குன்னு பெருமையா சொல்லிக்கறோம், கால் ஒடைஞ்சா மூணுமாசம் பெட் ரெஸ்ட் எடுத்துக்கறோம், ஆனா இதுபோல மனசு சம்பந்தப்பட்ட வியாதிகளை மட்டும் எதுக்கு தள்ளி வெச்சுப் பாக்கறோம்”, என்னும் கேள்விதான் படத்தின் சிம்பிள் மெஸேஜ். அதை டெவலப் செய்து நல்ல படமாகத் தந்திருப்பது சமுத்திரக்கனி - சசிக்குமார் கூட்டணியின் வெற்றி ரகசியம்.

படத்தின் பெரிய ப்ளஸ் முன் கதையின் நட்சத்திரப் பட்டாளம். சென்னையின் பேச்சிலர் + ஃபேமிலி காம்பினேஷனில் ஒண்டுக்குடித்தனஅதகளங்களை அப்பட்ட அழகாகக் காட்டியிருப்பது படத்தின் முதற்பாதியின் பேரழகு. அதிலும் “ஐ டின் மீன் இட் ஷாந்தி”, என்று மூச்சுக்கு முன்னூறு ஷாந்தி சொல்லும் படவா கோபியும் அவர் மனைவியாக வரும் சண்டைக்கோழி சாண்ட்ரா ஜோஸின் மூக்குநுனிக் கோபங்களும் செம காமெடி. 

நரேஷ் ரொம்பநாள் கழித்து தமிழுக்கு வருகிறார் என நினைக்கிறேன் (குறும்பு படத்திற்குப் பிறகு?). மனிதர் ஆல்-ரவுண்ட் பர்ஃபாமன்ஸ் தந்து அசத்தியிருக்கிறார். அந்த பாத்திரத்திற்கு நரேஷ்தான் சரிப்பட்டு வருவார் என்று நம்பினவர்கள் யாராயிருந்தாலும் அவர்களுக்கு ந்ம் பாராட்டுகள்.

ஸ்வாதி, நிவேதா இருவரும் கதையின் சென்னை வெர்ஷனில் கதை வளர்க்க உதவுகிறார்கள். பத்தே நிமிடம் ஃப்ளாஷ்பேக்கில் மாரி பாத்திரத்தில் வரும் வசுந்தராவின் அநாயச நடிப்பு அவருக்கு நிச்சயம் நல்லபேரை வாங்கித்தரும்.

படத்தின் சின்ன மைனஸ் அந்தப் பின் கதையில் வரும் நட்சத்திரப் பட்டாளம். என்ன ஏது, யார் எவர் எனப் புரியாமல் போகிறது அங்கங்கே.

படத்தின் இசை ஒரு டிபிக்கல் சசி-சமுத்திரக்கனி கூட்டணிக்கானது. ஸ்பெஷலாக சொல்ல ஏதும் இல்லை என்றாலும் படத்தின் வேகத்தைத் தடை செய்யாமல் படத்தினூடே பயணம் செய்யும் வகையில் பாடல்கள் அமைந்திருப்பது நல்லது.

படம் விட்டு வெளியே நடக்கும்போது “ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல படம் பார்த்த திருப்திடா”, என்று ஒரு குரல் கேட்டது.

3 comments:

Rathnavel Natarajan said...

அருமையான விமர்சனம்.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

இன்னும் பார்க்கவில்லை நண்பரே! உங்களின் விமர்சனத்தை பார்த்தவுடன் படத்தைப் பார்க்க வேண்டும் போல் உள்ளது. பகிர்விற்கு நன்றி நண்பரே!
என் தளத்தில்:
"இரண்டாம் பகுதி - அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?"

Giri Ramasubramanian said...

@ ரத்னவேல் சார்

மிக்க நன்றி!

@ திண்டுக்கல் தனபாலன்

நன்றி தலைவரே!

Related Posts Plugin for WordPress, Blogger...