Jul 22, 2012

தி டார்க் நைட் ரைசஸ்

இங்க்லீஸ் படம், இன்செப்ஷன்/டார்க்நைட் போன்ற நல்ல படங்களை எடுத்த கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளிவரும் படம், சூப்பர்ஹீரோ பேட்மேன் படம் இது எனும் தகவல்கள் இந்தப்படம் பற்றி அனைவரும் அறிந்த விஷயம்.


நோலனுக்கு நம்மூரிலும் இருக்கும் இண்டெலெக்சுவல் ரசிகர்படையில் என்னையும் இணைத்துக் கொள்ள டார்க்நைட் (முந்தைய பார்ட்) படத்தை டிவியில் சிலப்பல முறைகளும், இன்ஸெப்ஷனை சங்கம் தியேட்டரிலும் (வசன மொழிபெயர்ப்பு உதவி: மோகன்) முன்னமே பார்த்து வைத்திருக்கிறேன். அந்த ரசிகர் படையின் நிரந்தர உறுப்பினர் ஆகும் ஒரு எண்ணத்தில் இன்று ”தி டார்க் நைட் ரைசஸ்” படத்தை தேவிபாலா திரையரங்கில் பார்த்துவரப் போயிருந்தேன்.

ரெண்டுவார காலமாகவே படம் வெளிவரும் தேதி அறிவிப்பு, நாளிதழ் விளம்பரங்கள், தியேட்டர் அறிவிப்புகள், இணைய தளங்களில்  மக்களின் எதிர்பார்ப்பு கலந்த பரபரப்பு ஸ்டேட்டஸ் மெசேஜ்கள், ட்விட்டரில் ஏக எதிர்பார்ப்பு என்று Dark Knight ஜுரம் கொஞ்சம் அதிகமாகவே ஓடிக் கொண்டிருந்தது.

ட்விட்டரில் #TDKR என்னும் HashTag தொடர்ந்து ட்ரெண்டில் இருந்து வருகிறது.

கடந்த புதனன்று அதிகாலை இந்தப் படத்திற்கான டிக்கெட்டுகளின் ஆன்லைன் விற்பனை துவங்கிய க்ஷணத்திலேயே பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்த்தன. அதிகாலை வேலை முடிந்து நான் வீடு வந்து சேர்ந்தபோது சத்யம், எஸ்கேப் அரங்குகளில் அடுத்த புதன் வரை டிக்கெட் இல்லை என்ற நிலை. ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூவாய் தேவிபாலாவில் டிக்கெட் இருக்க அலுவலக நண்பர்கள் ஹரி மற்றும் நாகராஜனோடு படம் பார்க்க மூன்று டிக்கெட்டுகள் புக் செய்தேன்.

இருவருக்கும் ஃபோன் செய்து டிக்கெட் வாங்கிய சேதி சொல்ல, இருவரில் நாகராஜனுக்குதான் ரொம்பவும் எக்ஸைட்மெண்ட். “எ....ன்...ன....து....? நோ....ல....ன்....  ப....ட...த்...து...க்....கு   ச....ண்....டே   டி....க்....கெ....ட்  கி....டை...ச்....சி....ரு....ச்....சா?”

“உனக்கு ஏன்யா குரல் நடுங்குது?

“ரொம்ப சந்தோஷமா இருக்குய்யா. அயாம் வெரி ஹேப்பி”

“ரெண்டும் ஒண்ணுதான்யா”, என்றேன்.

மறுநாள் காலை நாகராஜனிடமிருந்து ஃபோன்கால். இப்பவும் குரலில் அதே நடுக்கம்.

“ஓய், எமோஷனை கட் மாடுய்யா”

”இந்த நடுக்கம் அது இல்லை ஓய். எனக்கு திடீர் ஜுரம். மலேரியாவா இருக்கலாம்னு டாக்டர் சொல்றார். வீட்ல சினிமான்னு வாய் திறந்தா ஒரே மண்டகப்படி. நான் சினிமாவுக்கு வரலை. அந்த டிக்கெட்டை யாருக்குனா குடுத்துடுங்க”

”என்னக் கொடுமை சார்”, என்று நினைத்துக் கொண்டேன்.

வெள்ளி பிறக்குமுன்னே உலகெங்குமிருந்து படம் பற்றிய விமர்சனங்கள் வரத்துவங்கின. ”சூப்பர் ஹீரோ மூவி சூப்பர்” என்றே பெரும்பாலும் விமர்சனங்கள் இருந்தன. நோலனின் படம் என்றால் சோடை போகக் கூடியதா என்ன?

நாகராஜன் வராததால் அந்த மூன்றாவது டிக்கெட்டிற்கு எதிரே யார் பேரைப் போடுவது என்று வினோத், விஷால், மோகன், நந்தா என்று அலுவலகத்தில் ஒரு சுற்று எல்லோரிடமும் கேட்க ஒவ்வொருத்தரும் வரமாட்டேன் என்பதை ஒவ்வொரு விதத்தில் சொன்னார்கள்.

விஷாலுக்குப் பெண்கள் துணையின்றி படம் போகப் பிடிக்காது. அதிலும் சூப்பர் ஹீரோ படங்கள் ஆகவே ஆகாது. “ரொமான்ஸ் மூவின்னா சொல்லுங்க சார், வர்றேன்”, என்பவனிடம் நாம் என்ன பேச?

மோகன் சனிக்கிழமை இரவு காட்சி போகப் போவதாகச் சொன்னான்.

நந்தாவிற்குப் படம் போகும் வழக்கமே இல்லை. நான் கடைசியா தியேட்டர் போய் பாத்தது ”படையப்பா” படம் சார் என்று சிரிக்கிறார் மனிதர்.


வினோத், மணந்தால் மஹாதேவி கதையாக படம் பார்த்தால் சத்யம் தியேட்டர்தான் போவேன் என்று பிடிவாதம். யோவ்! அம்பத்தூர் ராக்கில படம் பாக்கற கிராக்கிதானே என்று கேட்டால், இது கிற்ஸ் நோலன் படம்யா என்று பதில் வருகிறது. தேவி’ன்னாலும் பரவால்லை, தேவிபாலா? நோ நோ’வாம்.


வெள்ளி மாலை சுடச்சுட படம் பார்த்துவிட்டு வந்த நம்ம ஓலைக்கணக்கர் நட்டு’விடம், ‘படம் எப்டி மேன் இருக்கு”, என்று சாட்டில் கேட்டேன். “அப்ஸல்யூட் ப்ரில்லியண்ட், க்ரேட்லி க்ராக்கிங் த்ரில்லர்” என்று இருபத்தியெட்டு ஆங்கில வார்த்தைகளில் அவர் பங்கிற்கு அவரும் சொன்னார்.


கடைசியில் படம் போக அந்த மூன்றாம் நபர் கிடைக்காமல் போக, நம்ம ஓலைக் கணக்கரிடமே, “யோவ், வர்றியா?” என்று கேட்டு ஒப்புக்கொள்ள வைத்தாயிற்று.


D'day ஞாயிறு பிறந்தது. இன்றைக்கு சமையல் என் முறை. படம் போகிறேன் என்று எந்தக் காரணமும் சொல்லித் தப்பிக்க முடியவில்லை. எலுமிச்சை சாதமும், தயிர்சாதமும் செய்து, அரிசி அப்பளம் பொறித்து அவசர அவசரமாகக் அள்ளிக் கொட்டிக் கொண்டு ஒன்றரை மணிக்குப் புறப்பட்டு இரண்டு மணிக்கு பல்லாவரம் வந்து சேர்ந்த ஹரியுடன் சேர்ந்து கொண்டேன். மூன்றரை மணிக்கு அண்ணா சாலையில் இருந்தாக வேண்டும்.


கடவுள் புண்ணியத்தில் போக்குவரத்து நெரிசல் ஏதுமின்றி மூன்று மணிக்கு முன்னதாகவே எல்.ஐ.சி. நிறுத்தத்தில் இறங்கினோம். இறங்கிய இடத்தில் ஹிக்கின்போதம்ஸ். ஹரிக்கு உள்ளே போக வேண்டும் எனத் தோன்ற, உள்ளே போய் ரென் அண்ட் மார்ட்டின் ஆங்கில இலக்கணப் புத்தகத்தைப் பொறுக்கிக் கொண்டார்.  வெளியே வந்தால் இரண்டு நிமிட நடையில் தியேட்டர்.


வாசலில் நட்டு காத்திருக்க ஹரி,நடராஜ சகிதம் தேவிபாலாவில் மதியம் சரியான நேரத்திற்கு ஆஜராகி இருட்டில் சீட் தேடிச் சென்று அமர்ந்தேன். வினோத் தேவிபாலா வேண்டாம் என்று சொன்னதன் அர்த்தம் அமர்ந்ததும் புரிந்தது.


முன்னஞ்சீட்டு நபரின் தலை படத்தை மறைக்கிறது. நெருக்கடியான சீட்டுகள். தளத்திற்கு சமமான உயரத்தில் திரை. யார் நடைபாதையில் நடந்து சென்றாலும் அந்தக் காலத் திரையரங்குகளை நினைவுறுத்தும் வகையில் நடப்பவர்களின் நிழல் திரையில்.

படம் பார்க்கையில் இடையில் ஆர்டர் செய்த ஸ்னாக்ஸ் வந்தன. பட்டர் பாப்கார்ன் ஓஹோ சுவையில் இருந்தது.



ட்ட்ட்ட்டேய்ய்ய்ய்ய்ய் ஐநூத்தி சொச்ச வார்த்தை எழுதி முடிச்சிட்டியே, படம் பத்தி எப்போ எழுதுவ’ன்னு யாராவது கேக்கறீங்களா?

அப்படி கேக்கறவங்க மட்டும் கொஞ்சம் பக்கத்துல வாங்க...

“பளார் பளார் பளார் பளார் பளார் பளார் பளார் பளார் ”


போங்கய்யா................

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

எல்லாரும் படத்தைப்பற்றி விமர்சனம் செய்வார்கள்...
நீங்கள் படத்திற்கு சென்ற விதத்தை உங்கள் பாணியில் சுவை பட சொல்லி உள்ளீர்கள்...
'படம் எப்படி ?' என்று கேட்டு நான் அடி வாங்க தயாரா இல்லை. ஹா. ஹா. நன்றி...
என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?

Related Posts Plugin for WordPress, Blogger...