Feb 10, 2013

விஸ்வரூபம்

விஸ்வரூபம் படம் தமிழகத்தில் வெளிவந்து நான்கு நாள்கள் நிறைந்து விட்டபடியால் நான் எழுதும் விமர்சனம் அரதப்பழசான விஷயத்தை அலசும் காரியம் என்பதை அறிவேன்.

ஆளாளுக்கு படத்தைச் சிலாகித்து, பாராட்டி, சீராட்டி, ஆஹாகரித்து எல்லாம் செய்து முடித்து விட்டிருக்கிறார்கள். சில மேதாவி சுகுமாரர்கள் வழக்கம்போல் படம் நல்லால்லை என்றும் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். படத்தை எங்கே குறை சொல்லலாம் என்று மைக்ரோஸ்கோப் கொண்டு செல்லும் மஹாதேவ சுகுமாரர்களும் உண்டு. அவர்கள் திருத்தியெழுதப் போகும் விஸ்வரூபக் கதையை நினைத்தால்தான் பகீர் என்கிறது. 

விஸ்வரூபத்தின் கதையொன்றும் புதிதேயில்லை. ப்ராஜக்ட் ஒன்’னில் ஆப்கனில் தீவிரவாதிகளின் கூடாரத்திற்குள் அவர்களுள் ஒருவனாகப் புகும் இந்திய ஏஜண்ட் கமல், அங்கிருந்து அவர்களின் அமெரிக்க மாஸ்-மர்டர் திட்டம் அறிந்து ப்ராஜக்ட் டூ’வில் அமெரிக்காவில் அம்மாஞ்சி நடன மாஸ்டர் அவதாரமெடுக்கிறார். பின்வரும் காட்சிகளில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் தரத்தகு..... அவர் மனைவிக்கே அவருடைய மறுபுறம் தெரியாது என்பதான வழமையான விஷயங்கள் உண்டு. ஆப்கன் தீவிரவாதத் தலைவனும் அமெரிக்காவில் வந்து சேர டிஷ்யூம் டிஷ்யூம்... டமால் டுமீல்.... விஸ்வரூபம் 2 தொடரும் என்று படம் நிறைகிறது.

படத்தின் விஷயம் கதையில் இல்லை. மேக்கிங் ஆஃப் தி மூவி’தான் ஒட்டு மொத்தப் படமுமே.  தமிழ்த் திரையுலகின் தன்னிகரற்ற இண்டெலெக்ட் தான்தான் என்பதை ஆணித்தரமாக கமல் நிரூபித்திருக்கிறார். நேற்று படம் பார்த்துவிட்டு வந்தவன் இன்னமும் பிரமிப்பு நீங்காமல் இருக்கிறேன். மேக்கிங் ஆஃப் விஸ்வரூபம் பற்றி விமர்சனத்திலெல்லாம் குறிப்பிடுதல் சரிவருமா எனத் தெரியவில்லை. தனிப் பதிவே எழுதலாம். ஆனால் அதற்கு இந்தப் படத்தை இன்னமும் பலமுறைகள் பார்க்கவேண்டிய தேவை இருக்கும்.

இத்தனை பிரம்மாண்டத்தை தொண்ணூற்றைந்து கோடி பட்ஜெட்டில் எடுத்த கமல் ஒரு நல்ல காஸ்ட் மாஸ்டர்தான். கார்பரேட் குருக்கள் பாடம் கற்கலாம்.

படத்தைப் பார்த்த பலர் எக்ஸலண்ட், வொண்டர்ஃபுல், மார்வெலஸ், மஸ்ட் வாட்ச் என்றெல்லாம் புளகாங்கிதப்பட்ட போது கொஞ்சம் பயமாகவே இருந்தது. இத்தனை எதிர்பார்ப்போடு படம் பார்க்கப் போனால் சிலநேரங்களில் அநியாயத்திற்கு ஏமாற்றம் தேறும். ஆனால் விஸ்வரூபம் நம்மை ஏமாற்றவில்லை. அவசியம் தரமானதொரு தியேட்டரில் பார்க்கவேண்டிய படம் விஸ்வரூபம்.

படத்தின் பின்னணி இசை படத்திற்கு ஒரு பெரிய ப்ளஸ். படத்திற்குத் தக்கவாறு பின்னணி இசைத்து ஃபீல் கூட்டியிருக்கிறார்கள் ச-ஈ-லா. பாடல்களில் அந்த முதல் நடனப்பள்ளிப் பாடல் தவிர்த்து எவையும் தனிப்பாடலாக படத்தில் இல்லை என்பது பெரிய ஆறுதல். அதனால் படம் எங்கேயும் ஜெர்க் அடிக்காமல் அதன் வேகத்தில் செல்கிறது.

வசனங்களில் படம் நெடூக க்ரேஸித்தனமான நுணுக்கமான காமெடிகள் உண்டு.

உம்:
ஏய்.... ம்ம்ம்ம் எல்லா விஷயத்தையும் ஒண்ணு விடாம கக்கு
அய்யய்யே! அதெல்லாம் வேணாங்க, நானே க்ளீனா எல்லாத்தையும் சொல்லிடறேன்.

அப்புறம்..... அப்புறம் ஒளிப்பதிவு, எடிட்டிங், லொகேஷன், நடிகர்கள் என சொல்லிக் கொண்டே போகலாம். நீங்கள் தியேட்டரில் போய் படம் பாருங்கள்.

2 comments:

ஸ்கூல் பையன் said...

படத்தில் வரும் ஆப்கன் காட்சிகளை கொஞ்சமேனும் குறைத்திருக்கலாம்... சில இடங்களில் ரொம்ப நீளமோ என்று எண்ண வைக்கிறது....

அமுதா கிருஷ்ணா said...

நாளைக்கு மாயாஜால் போறேனே..

Related Posts Plugin for WordPress, Blogger...