Feb 15, 2013

அரசியல்ல இதெல்லாம்....

தண்டையார்பேட்டை ரோடு நுழையுமிடத்தில் மூலக்கடை மாசமொருமுறை அல்லோலகல்லோலப்படும். ஏதேனும் கட்சிக்காரக் கூட்டம் ஒன்று அங்கே நடக்கும். பொதுசனங்கள் சனநாயகத்தை நொந்துகொண்டு மாற்றுப் பாதையில் செல்லவேணும்.

கழகங்களுக்குத்தான் மூலக்கடை. தோழர்கள் தபால்பெட்டி பஸ் ஸ்டாப் தாண்ட மாட்டார்கள். ஒருத்தர் மைக் பிடிக்க நாலு பேர் வினைல் நாற்காலியில் அமர்ந்திருந்தால் ரோட்டில் நடப்போரும், பஸ் ஸ்டாப் கடக்கும் பஸ்சிலிருந்து அந்த க்‌ஷணம் எட்டிப் பார்ப்போரும்தான் தோழர்தம் பேச்சைக் கேட்பவர்கள்.



மூலக்கடையில் ஆளுங்கட்சிக்காரரோ அல்லது எதிர்க்கட்சியோ,  அம்மையோ அப்பனோ யார் எந்த நாற்காலியில் இருக்கிறார் எனப் பார்த்து இதமாகவோ அல்லது வரட்-வரட் என்றோ சொறிந்து விடும் கூட்டமாய் இருக்கும் அது.

தோழர்களுக்குத் தெரியாதவொரு உத்தி கழகங்களுக்குத் தெரியும். பேச்சு எட்டுமணிக்குத் தொடங்கும் என்றால் ஆறரை மணிக்கு ரெகார்ட் டேன்ஸ் போட்டுவிடுவது. ”கட்டிப்புடி கட்டிப்புடிட்ட” ரக ரெகார்ட் டேன்ஸுக்கு ஒதுங்கும் நூற்று சொச்சத்தில் ஐம்பதாவது இறுதிவரை தேறுமில்லையா?

மூலக்கடையில் அன்று ஷேர்ஆட்டோ பிடிக்க கொடுங்கையூர் ரோடைப் பார்த்து நடந்து போய்க் கொண்டிருந்தபோது அந்த அம்மணியின் ஆக்ரோஷக் குரல் கேட்டது.

“ஏ விருந்தாளிக்குப் பிறந்தவனே!”, எதிர்க்கட்சித் தலைவரின் வாரிசை விளிக்கிறார். 

”?????வளையில் தேங்காய்ப் பொறுக்கிக் கொண்டிருந்த ஏ... ???????யே! உனக்கு எங்கிருந்து வந்தது இத்தனை சொத்து?”

இத்தனை அநாகரிகமாகவா பேசுவர்?

“விருந்தாளிக்குப் பிறந்தவனே! விருந்தாளிக்குப் பிறந்தவனே! ”, என்று மூச்சுக்கு மூன்று முறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்.

என்னவொரு சுவாரசியம்! இன்னும் எவ்வளவு தூரம் போகிறார் பார்க்கலாம் அங்கேயே நின்றுவிட்டேன்.

“இந்த எதிர்க்கட்சித் தலைவர் இருக்காரே அவர் ஒரு நெடுமுடிக் கிள்ளிப் பரம்பரையைச் சேர்ந்தவர் தெரியுமா உங்களுக்கெல்லாம்?”

எதிரிலிருந்த மக்கள் நிசப்தத்தில் உறைந்தனர். என்னாடா சொல்லுது இந்தம்மா?

”நெடுமுடிக் கிள்ளீ’ன்னா புரியுதில்ல?”

நிசப்தம்

“நெடு’ன்னா என்ன?”

நிசப்தம்

“நெடு’ன்னா என்னா?”

நிசப்தம்

“நெடு’ன்னா பெரிய’ன்னு அர்த்தம்”

“கிள்ளி’ன்னா?”

நிசப்தம்

“கிள்ளி’ன்னா புடுங்கி’ன்னு அர்த்தம்”

கூட்டத்திற்கு ஏதோ புரிந்து சிரிப்பலை தொடங்கியது.

“முடி’ன்னா என்னான்னு நான் உங்களுக்கு சொல்லத் தேவையில்ல”

ஆரவாரக் கூச்சல்.

பேச்சு நாகரிகத்தை இப்படிப் பேசிப்பேசி வளர்த்து விட்டவர்களுக்கு எழுத்து நாகரிகத்தை இன்று அதன்பாணியில் கோடி காட்டியிருக்கிறது பாரம்பரியப் பத்திரிக்கை ஒன்று.

சனநாயகம்! வாள்க! 

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...