Jan 30, 2010

மகாத்மாவும் மாவீரமும்

மகாத்மா குறித்து நான் புதியதாய் எழுத ஏதுமில்லை.  இந்திய வரலாற்றில் போதுமான அளவிற்கும் அதிகமாய் ஆராதிக்கப் பட்டவரும், அர்ச்சிக்கப் பட்டவரும் அவராகத்தான் இருக்க இயலும். ஜெயமோகன் அவர்கள் காந்தி குறித்த சிந்தனைகளாக எழுதியவற்றில் இக்கட்டுரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. (வெறுப்புடன் உரையாடுதல்)



காந்தியவழிமுறைகளை நிராகரிப்பவர்கள் கடந்த உலகவரலாற்றில் எத்தனை ஆயுதபோராட்டங்கள் வெற்றிபெற்றன என்று சொல்ல வேண்டும். கொஞ்சம் வரலாற்றுப்பிரக்ஞையுடன் திரும்பிப்பார்ப்பவர்கள் சென்ற நூறு வருடங்களில் உலகத்தில் எந்தெந்த நாடுகளில் எல்லாம் ஆயுதப்போராட்டம் நிகழ்ந்ததோ அங்குள்ள மக்களுக்கு அழிவையன்றி வேறெதையுமே- ஆம்,  எதையுமே–  அவை அளிக்கவில்லை என்பதையே காண்பார்கள்.  




அவற்றின் அழிவுத்தன்மைக்குக் காரணங்கள் என்ன என்று நோக்கினோமென்றால் அவையெல்லாமே காந்தியவழிமுறைகளின் சிறப்பியல்பாக நாம் சுட்டும் விஷயங்கள் இல்லாமைதான் என்பதையே காண்கிறோம்.....

எத்தனை உண்மையான வரிகள்?




காந்திய வழியை முழுதும் பின்பற்றி அதில் வெற்றியும் கண்டதை இவர் நெல்சன் மண்டேலாவிடம் மட்டுமே காண்கிறார். உண்மைதானே? 

"இந்திய சுதந்திரப்போராட்ட வீரர்கள்" என்பதில் 'வீரர்கள்" என்ற வார்த்தை எனக்கு முன்பெல்லாம் சற்றே குழப்பம் அளித்த வார்த்தை. அமைதி வழியில் போராடியவர்களை வீரர்களாக எதற்கு அடையாளம் காண்கிறோம் என எனக்கு இப்போதுதான் விளங்குகிறது.




இன்றைய காலகட்டத்தில், ஒன்பது மாத நிறை கர்ப்பிணித் தங்கை வீட்டில் இருக்கையில், ஏதோ ஒரு உணர்ச்சியின் உந்துதலில் தீக்குளித்தவர்கள் "மாவீரர்களாக" அடையாளம் காட்டப்படுகையில் எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது. இவர்கள், வரலாற்றில் இதே அடைமொழியுடன் வழங்கப்படுவார்கள் என எண்ணும்போது, வருத்தம்தான் மிஞ்சுகிறது. ஊரெல்லாம் சுவரொட்டி விளம்பரம் செய்யும் அந்த மாவீரனின் பக்தர்கள் நெஞ்சில் அதே வீரம் இருக்கிறதா என சோதிக்க வேண்டும்.

ஹே ராம்....!!! இந்தப் போலி அரசியல்வாதிகளிடமிருந்தும் அவர்களின் இது போன்ற பொழுதுபோக்கு விளையாட்டு மற்றும் குட்டிக்கரண வேடிக்கைக் காட்சிகளில் இருந்தும் அறியாமையின் பிடியில் இருப்பவர்களை என்று காப்பாய்?


No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...