Oct 21, 2010

பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்கும்...

பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் நான் சின்னதாக ஏதும் சொல்லுமுன்,  ஒரு ப்ளாஷ்பேக்.


ஒரு கொலை.... ஒரு தற்கொலை....!! இரண்டுமே நிகழ்ந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. 


அவன் திருச்சியைச் சேர்ந்தவன். அவள் சென்னைப் பெண். இருவரும் படித்தது தஞ்சை அருகில் இருந்த ஒரு அறிவியல், கலை, பொறியியல் என எல்லாவற்றிலும் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஒரு கல்லூரியில். இருவரும் அந்தக் கல்லூரியின் காதல் பறவைகளாக வலம் வந்தவர்கள். 
பத்திரிக்கைகளில் படித்தவைகள் நிஜமானால் இருவரும் படித்த வேளையிலேயே பருவச் சலனத்தின் அத்தனை கதவுகளையும் திறந்து மிச்சம் மீதமின்றி அத்தனை தவறுகளையும் செய்திருக்கிறார்கள். (அவர்கள் செய்த காரியங்களை சரி / தவறு எனச் சொல்ல நான் யார் என்கிறீர்களா? ஸாரி, என்னிடம் பதிலில்லை)

ஒரு குறிப்பிட்ட சூழலில் குறிப்பிட்ட சில காரணங்களால் அவள் அவனை விட்டு விலகிச் செல்ல... மற்றொரு சக மாணவனுடன் நட்பு பாராட்ட....

வன்மம், பகை, கோபம், இது, அது என அவன் கனலில் உழன்று அவளை தன் வீட்டிற்கு யாருமில்லாத நேரத்தில் வரவழைத்து, ஒரு வேகத்தில் அவளைக் கொலையும் செய்து தன் வீட்டிலேயே கட்டிலின் அடியில் அவள் இறந்த உடலை மறைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறி...



....வீட்டில் மகனைக் காணோம் என்று யோசித்துக் கொண்டிருந்த பெற்றோருக்கு மகனிடமிருந்தே தொலைபேசியில் அழைப்பு வந்தது. தம் வீட்டுக் கட்டிலடியில் தான் செய்த கொலையின் சாட்சி இருப்பதாகவும், மேலும் தான் தற்போது தற்கொலை செய்து கொள்ள விரைந்து சென்று கொண்டிருப்பதாகவும் அவன் சொல்ல....

....சென்னை செல்லும் ரயிலில் அவன் ஏறி உளுந்தூர்பேட்டை அருகே ரயிலில் இருந்து குதித்துத் தற்கொலையும் செய்து கொள்ள....

இப்படிப்பட்ட அவனையும் அப்படிப்பட்ட அவளையும் பெற்றெடுக்க அவனவளின் பெற்றோர்கள் "என்ன தவம் செய்தனரோ...".

ஓகே, கதை முடிந்தது. இங்கே நான் ஏதும் பாடம் எடுக்க அவசியம் இல்லை எனினும் நான் சொல்ல விழைவது....

அந்த அவனோ அந்த அவளோ எங்கோ திரைக்குப் பின்னால் அல்லது கதைப்புத்தகத்தின் உள்ளோ இருக்கும் பாத்திரங்கள் இல்லை என்பதே இங்கே நாம் புரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயம்.

அந்த அவன் உங்கள் சகோதரனாகவோ, உங்கள் பிள்ளையாகவோ இல்லை உங்கள் நண்பனாகவோ அல்லது நீங்களாகவோ கூட இருந்துவிட வாய்ப்பு உண்டு.

அதே போல்தான் அவளும்.... உங்களில் ஒருவராக அல்லது நீங்களாக இருக்க....


கல்லூரிக் காலங்களில் சலனங்களும் நாய்க்குட்டிக் காதல்களும் சகஜகஜம். அது வேணாம், இதை செய்யாதே என முட்டாள்தனமாக நான் ஏதும் சொல்லவில்லை. ஆனால், உங்கள் சலன சஞ்சலங்களை இத்தனை தூரம் அழைத்துச் சென்றுவிடாமல் பார்த்துக் கொள்வது எப்படி என மட்டும் யோசியுங்கள்.

"அது சரி அது என்ன ரெண்டு வருஷம் கழிச்சி இதை எழுதற?" என்று கேட்பவர்களுக்கு....

அந்த இருவரில் ஒருவரின் நெருங்கிய நட்பு ஒன்றை கடந்த வாரம் சந்திக்க நேர்ந்தது. நடந்த சம்பவங்களின் விலகாத அதிர்ச்சியும் சோகமும் அவர் கண்களில் இன்னமும் மிச்சம் இருந்தது.
.

.
.

2 comments:

natbas said...

என்னத்த சொல்ல!

virutcham said...

அதையே தான் சொல்ல வேண்டியிருக்கு. என்னத்தை சொல்ல.

Related Posts Plugin for WordPress, Blogger...